கீதை - 9.18 - நானே சாட்சி - பாகம் 1
गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥९- १८॥
க³திர்ப⁴ர்தா ப்ரபு⁴: ஸாக்ஷீ நிவாஸ: ஸ²ரணம் ஸுஹ்ருத் |
ப்ரப⁴வ: ப்ரலய: ஸ்தா²நம் நிதா⁴நம் பீ³ஜமவ்யயம் || 9- 18||
க³தி = வழி
ப⁴ர்தா = காப்பவன்
ப்ரபு⁴ = தலைவன்
ஸாக்ஷீ = சாட்சி
நிவாஸ: = உறைவிடம்
ஸ²ரணம் = சரணம் அடையும் இடம்
ஸுஹ்ருத் = நெருங்கிய நண்பன்
ப்ரப⁴வ: = தொடக்கமும்
ப்ரலய: = அழிவும்
ஸ்தா²நம் = நிலையான இடம்
நிதா⁴நம் = நிதானம்
பீ³ஜம் = விதை
அவ்யயம் = அழியாத
இவ்வுலகத்தின் வழி, தலைவன், சாட்சி, உறைவிடம் , சரண் அடையும் இடம், நண்பன், தொடக்கம், அழிவு, இதன் நிலையான இடம், நிதானம் , இதன் அழியாத விதை.
பெரிய பட்டியலைத் தருகிறான் கண்ணன்.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கதி, வழி, குறிக்கோள்: கதி அல்லது வழி எப்போது தேவைப்படும் ? எது வரை தேவைப்படும் ?
ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை அடைய ஒரு வழி வேண்டும். அந்த வழியாக சென்று நாம் அடைய நினைத்ததை அடையலாம். நாம் அடைய நினைக்கும் குறிக்கோளை அடைய துணையாக இருப்பது வழி.
கண்ணன் தான் வழி என்றால், அந்த வழி கொண்டு சேர்க்கும் இடம் யார் ? வழியை விட அது கொண்டு சேர்க்கும் இடம் உயர்ந்தது அல்லவா ?
அடுத்து கண்ணன் சொல்கிறான் - "நானே காப்பவன் அல்லது தலைவன் அல்லது தாங்குபவன் (பர்தா)".
இந்த உலகம் பல்வேறு பொருள்களாலும், மனிதர்களாலும் ஆனது. ஒவ்வொன்றும் ஒரு வடிவம்,ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர். இத்தனை பெயர்களையும், வடிவங்களையும், தனித் தனியாக அடையாளம் கண்டு, அவற்றோடு உறவாடி அவற்றை தாங்கிப் பிடிப்பது என்னுள் இருக்கும் நான் என்ற அந்த ஒன்று (Self ).
"தலைவன்": ஐந்து புலன்கள், புலன்கள் கொண்டு வரும் உணர்வுகள், உணர்வுகளை பகுத்து அறியும் மூளை, மூளை சொல்வதை கேட்கும் புலன்கள் என்று இவை அனைத்தையும் ஆளும் என் அறிவே இவற்றின் தலைவன். இவை அனைத்தையும் ஆளும் அறிவு இவை எல்லாவற்றிற்கும் தலைவன். அதை அறிவு என்று சொல்லலாம், ஞானம், தன்னுணர்வு, Self எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.எது இவற்றை ஆளுகிறதோ அது தலைவன்.
"புகலிடம்" - உண்மை ஒன்றுதான். அதன் பல் வேறு வடிவங்கள் தான் இந்த உலகம். எத்தனை ஆயிரம் அலைகள், கடல் ஒன்று தான். எத்தனை ஆபரணங்கள், தங்கம் ஒன்று தான். இத்தனை வடிவங்களும், பெயர்களும் கடைசியில் ஏதோ ஒன்றின் பல்வேறு வடிவங்கள். அதுவே இவை அனைத்தின் புகலிடம். ஒன்றாகக் காண்பதுவே காட்சி என்றாள் ஔவை.
"சரண் அடையும் இடம்"
No comments:
Post a Comment