Saturday, April 12, 2014

கீதை 9.25 - நினைப்பது நிறைவேறும்

கீதை 9.25 - நினைப்பது நிறைவேறும் 


यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥९- २५॥

யாந்தி தே³வவ்ரதா தே³வாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா: |
பூ⁴தாநி யாந்தி பூ⁴தேஜ்யா யாந்தி மத்³யாஜிநோऽபி மாம் || 9- 25||

யாந்தி = அடைகிறார்கள்

தேவ வவ்ரதா = தேவதைகளை வணங்குபவர்கள்

தே³வாந் = அந்த தேவதைகளை

பித்ரூந் = பித்ருக்களை

யாந்தி = அடைகிறார்கள்

பித்ருவ்ரதா: = பித்ருக்களை வணங்குபவர்கள்

பூ⁴தாநி = பூதங்களை

யாந்தி = அடைகிறார்கள்

பூ⁴தேஜ்யா = பூதங்களை வணங்குபவர்கள்

யாந்தி = அடைகிறார்கள்

மத் = என்னை

யாஜிநோ = வணங்குபவர்கள்

அபி = ஆனால் 

மாம்  = என்னை

தேவதைகளை நோக்கி விரதம் இருப்பவர்கள், தேவதைகளை அடைகிறார்கள்
பித்ருக்களை நோக்கி விரதம் இருப்பவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள் 
பூதங்களை நோக்கி விரதம் இருப்பவர்கள்  பூதங்களை அடைகிறார்கள் 
என்னைத் நோக்கி விரதம் இருப்பவர்கள்  என்னை அடைகிறார்கள் 


விரதம் என்றால் விடா முயற்சி, தவம், நோன்பு என்று கூறலாம்.

தவம் என்றால் என்ன என்று சொல்ல வந்த வள்ளுவர் தவம் என்பது தன் துன்பங்களை பொறுத்தல், பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் இருத்தல் என்றார்.

தன் உயிருக்கு துன்பம் வராமல் தடுத்தல் என்று சொல்ல வில்லை. துன்பத்தை பொறுத்தல் என்றார்.

ஏன் ?

துன்பம் எப்போது வரும் ? முயற்சி செய்தால் துன்பம் வரும். உடல் உழைக்க வேண்டும், அசதியும் சோர்வும் வரும். சோம்பிக் கிடந்தால் துன்பம் வராது. அது தவம் இல்லை. உழைப்பு தவம். செயல் தவம்.


தேவதைகளை நோக்கி விரதம் இருப்பவர்கள் என்றால் இன்பங்களை வேண்டி முயற்சி செய்பவர்கள் அவற்றை அடைவார்கள். ஒவ்வொரு தேவதையும் ஏதோ ஒரு நல்லது செய்வதற்கு தானே இருக்கிறது. அவற்றை நோக்கி விரதம் இருப்பவர்கள் அந்த நன்மையை பெறுவார்கள்.

சிலருக்கு பொருகள் மேல் ஆசை. வீடு, மனை, நகை, பணம், சொத்து என்று பலவித ஆசைகள். இவற்றை அடைய முயற்சி செய்பவர்கள் அதை அடைவார்கள்.

பித்ருக்களை என்று சொல்லும் போது பழமை, சாஸ்திரம், சம்பிரதாயம் இவற்றை கடை பிடிக்க முயற்சி செய்வோர் அதை அடைவார்கள்.

என்னை நோக்கி தவம் செய்பவர்கள் என்னை அடைவார்கள்.

சுருக்கமாக சொல்வது என்றால் எது வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்கிறார்களோ அவற்றை அடைவார்கள்.

சரி, அதனால் என்ன ?

நாம் வாழ்வில் முன்னேறாமல் இருக்கக் காரணம் என்ன ?

உழைப்பதற்கு பெரும்பாலோனோர் தயார்தான். உழைக்கவும் செய்கிறார்கள்.

ஆனாலும் பெரிய வெற்றிகளை பெறுவது இல்லை.

ஏன் ?

நம்மால் இவ்வளவுதான் முடியும் என்று நினைக்கிறார்கள்.

நம்பிக்கை இல்லை.

மாதம் ஐந்து ஆயிரம் சம்பாதிப்பவன் மிஞ்சி மிஞ்சி போனால் பத்து ஆயிரம் பற்றி சிந்திப்பான், ஒரு இலட்சம் சம்பளம் என்று சிந்திக்க மாட்டான்.

கீதை சொல்கிறது, நீங்கள் எதை அடைய நினைக்கிறீர்களோ அதை நீங்கள் அடைய முடியும்.

இன்பம், செல்வம், ஞானம் ஏன் இறை நிலையைக் கூட அடைய முடியும்.

இருக்கின்ற வாழ் நாளோ கொஞ்ச நாள்தான்.

இந்த நாளில் எது வேண்டி தவம் செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

எது கேட்டாலும் கிடைக்கும் என்றால் ஏன் சின்னவற்றை கேட்க்க வேண்டும்.

பெரிதாக கேட்போமே.

பெரிதாக சிந்திப்போமே.

என்னை அடைவார்கள் என்று கண்ணன் சொல்லுவது ஏதோ அவர் கிட்ட போய் நிற்பது அல்ல.

என் நிலையை அடைவார்கள்.

அது என்ன நிலை - தன்னைத் தான் அறிந்த  நிலை, பற்றற்ற நிலை, அன்பும், கருணையும், நிறைந்த நிலை . அந்த நிலையை அடைய முடியும்.

இதை சற்று மாத்தி யோசிப்போம் ?

நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் ?

இதைத்தான் நீங்கள் விரும்பி தவம் செய்தீர்கள். எனவே அதை  அடைந்தீர்கள்.

எதை நோக்கி விரதம் செய்தாலும் அது கிடைக்கும் என்றால், எது கிடைத்ததோ அது விரதத்தின் பலன்.

நீங்கள் புத்திசாலியாக, ஆரோக்கியமானவராக, குண்டாக, ஒல்லியாக, முட்டாளாக, நல்லவராக, கெட்டவராக எப்படி இருந்தாலும் அது பிறவியில் வருவது இல்லை. நீங்கள் விரதம் இருந்து, தவம் செய்து பெற்றது.

வேறு யாரையும் குறை சொல்லாதீர்கள்.

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் ஆக்கிக் கொள்ளலாம்.

அடிப்படையான புலன் இன்பங்கள், பொருள்கள், ஞானம், இறை நிலை என்று எது வேண்டுமோ அதைப் பெறலாம்.

பிறவி அல்ல.

முன் ஜன்மம் அல்ல.

உங்கள் செயல். தவம். விரதம் காரணம்.

சில பேர் விரதம் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த விரதம், இந்த விரதம், அந்த நோன்பு, இந்த நோன்பு என்று.

சாப்பிடாமல் இருந்தால் வேண்டியது கிடைக்குமா ?

விரதம் என்றால் என்ன ?

அடுத்த ஸ்லோகத்தில் சிந்திப்போம்.







2 comments:

  1. விரதம் என்றால் என்ன ? இதை பற்றி விவரிக்கவும்

    ReplyDelete
  2. விரதம் என்றால் என்ன ? இதை பற்றி விவரிக்கவும்

    ReplyDelete