Thursday, April 24, 2014

கீதை - 9.32 - எல்லோருக்கும் நல்வழி

கீதை - 9.32 - எல்லோருக்கும் நல்வழி 


मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥

மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||


மாம் = என்னை

ஹி = நிச்சயமாக
பார்த² = பார்த்தா
வ்யபாஸ்²ரித்ய = அடைக்கலம் அடைந்தோர்
யே = அவர்கள்
அபி = மேலும்
ஸ்யு: பாபயோநய: = பாவத்தில் பிறந்தவர்கள் (பாவிகள்)
ஸ்த்ரியோ = பெண்கள்
வைஸ்²யாஸ் = வியாபாரிகள்
த தா² = மேலும்
ஸூ²த்³ராஸ்தே = சூத்திரர்கள்
அபி = அவர்கள் கூட
யாந்தி = செல்கிறார்கள்
பராம் க³திம் = பர கதியை அடைகிறார்கள்


பாவிகள்,  மாதர்கள்,வைசியர், சூத்திரர் யாராயினும் என்னை பணிபவர்கள் பரகதி அடைவார்கள்.

பாவிகள்  சரி.

அது என்ன பெண்கள், வைசியர்,  சூத்திரர் என்று அவர்களையும் பாவிகளையும் ஒன்றாகச் சேர்ப்பது ?

கீதை  பிராமணர்களையும், க்ஷ்த்ரியர்களையும் உயர்ந்தவர்களாகக் கருதுகிறதா ? மற்றவர்கள் தாழ்ந்தவர்களா ? கீதை வர்ணாசிரம தர்மத்தை போதிக்கிறதா ?

இந்த சந்தேகங்கள் எழுவது இயற்கை.

கீதை என்ன சொல்ல வருகிறது ? சில பேரை இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்து  இருந்தது.இன்றும் ஒதுக்கி வைத்து இருக்கிறது.

பெண்களுக்கு சமயத்தில் சம உரிமை இருக்கிறதா ?

பெண்கள் சில மந்திரங்களை சொல்லக்  கூடாது, சில சமய சடங்குகளை செய்யக் கூடாது என்று இன்றும் ஏறக்குறைய அனைத்து மதங்களும் சொல்கின்றன.சில மதங்களில் பெண்கள் வழிபடும் இடங்களுக்குக் கூட செல்லக் கூடாது. அவர்கள் மதத் தலைவர்களாக முடியாது.

கீதை சொல்கிறது, என்னை வழிபட்டால் அவர்களும் பர கதி அடையலாம் என்று.  கீதை பெண்களை ஒதுக்கி வைக்கவில்லை. சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களை கீதை கை தூக்கி விடுகிறது.


 மேலும்,பெண்கள் அன்பு, பாசம், வீடு, பிள்ளைகள், குடும்பம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் வளைய  வருபவர்கள்.  முக்தி, வீடு பேறு , மோட்சம், தன்னை அறிவது போன்றவற்றிற்கு எல்லாம் அவர்களுக்கு நேரம் இருப்பது இல்லை.

அவர்கள் எப்படித்தான் கரை ஏறுவது ? கை நீட்டுகிறது கீதை.

பக்தி என்ற வழியை காட்டுகிறது கீதை. இந்தப் பாதையில் போனால் அவர்களும் பர கதி அடையலாம் என்று அன்போடு சொல்லி வைக்கிறது.

அடுத்து வைசியர்கள் - வியாபாரிகள். எதை செய்தால் என்ன இலாபாம் கிடைக்கும் என்று சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டே இருக்கும்  மனிதர்கள்.கோவிலுக்குப் போனால் கூட எவ்வளவு செலவு, என்ன இலாபம் என்று கணக்கு போடும்  மனம். வாழ்கையை வியாபாரமாகப் பார்க்கும் குணம். எல்லாவற்றையும் இலாப நட்ட கணக்குக்குள் கொண்டு வரும் புத்தி.  அவர்களும் , பக்தி கொண்டால் பர கதி அடையலாம் என்கிறது கீதை.


அடுத்து, சூத்திரர்கள்.  படிக்காதவர்கள், வேதங்கள், போன்றவற்றை அறியாதவர்கள்,உடல் உழைப்பை மட்டுமே நம்பி  வாழ்பவர்கள். கோவிலுக்கு போகக் கூடாது, உயர்ந்த நூல்களை படிக்கக் கூடாது என்று தடை விதிகப்ப் விதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் கை நீட்டுகிறது கீதை.  முந்தைய ஸ்லோகத்தில் கூறிய மாதிரி, அவர்கள் செய்யும் தொழிலையே பக்தியாக  மாற்றலாம்.அதன் மூலம் பர கதி அடையலாம்.

இதை விட எளிய வழியை எப்படி  காண்பிப்பது ?

கீதை யாரையும் ஒதுக்கித்  தள்ளவில்லை.எல்லோரையும் சேர்த்து அணைத்துக்   கொள்கிறது.  எல்லோருக்கும் நல்வழி காட்டுகிறது.



  








2 comments:

  1. it is a Holistic approach I like this sloga .....explanation is beautiful, narration wonderful ... It is not only informing through this sloga he demonstrated by helping lady Drupathi during her one of most difficult situation ( woow I'm also contributing )

    ReplyDelete
  2. and he helped second time when she is not having food to serve great Sage Vashiister
    by eating one small spinach left over in the great Akshaya Patra

    ReplyDelete