Wednesday, July 5, 2017

பகவத் கீதை - 16.15 - யான், எனது என்ற ஆணவம்

பகவத் கீதை - 16.15 - யான், எனது என்ற ஆணவம் 


आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥१६- १५॥

ஆட்யோபிஜநவாநஸ்மி கோந்யோஸ்தி ஸத்ருஸோ மயா |
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: || 16- 15||

ஆட்யோ = செல்வந்தன்

அபிஜநவான் = அபி ஜனவான் = உயர் குடியில் பிறந்தவன்


அஸ்மி = நான்

க(ஹ் ) = எவன்

அந்யா = மற்றவர்கள்

சதிர்ஷ = ஒப்பிட்டு

மய  = எனக்கு

யக்சேய  = நான் யாகம் செய்கிறேன் 

தஸ்யாமி = நான் கொடுக்கிறேன் , தானம் செய்கிறேன்

மோடிசேய = நான் இன்பங்களை அனுபவிக்கிறேன்

அஜ்ஞாந  = அறிவீனத்தால்

விமோஹிதா:  = அழுந்துகிறார்கள் || 16- 15||


நான் செல்வம் உடையவன். உயர் குடியில் பிறந்தவன். மற்றவர்களை காட்டிலும் உயர்ந்தவன். நான் யாகம் செய்கிறேன். தானம் செய்கிறேன். நான் இன்பங்களை அனுபவிக்க பிறந்தவன் என்று அறிவீனத்தில் கிடந்து அழுந்துகிறார்கள். 

அரக்க அல்லது கெட்ட குணம் உள்ளவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டு வருகிறான் கண்ணன். 

ஆணவம் பெரிய அரக்க குணம். 

ஆணவம் எங்கிருந்து வருகிறது ?

செல்வம் - குடிப் பிறப்பு - மற்றவர்களை விட அதிகம் அதிகாரம், செல்வாக்கு இருப்பது - பூஜை / புனஸ்காரம் செய்வது - மற்றவர்களுக்கு தானம் செய்வது இவற்றில் இருந்து ஆணவம் பிறக்கிறது. 

இந்த ஆணவம் அரக்க குணம். 

இவை வேண்டாம் என்று சொல்லவில்லை கீதை. செல்வம் அவசியம். இறை தொண்டு அவசியம். தான தர்மம் செய்வது அவசியம். 

ஆனால், அதையே காரணமாகக் கொண்டு, ஆணவம் அடையக் கூடாது. 

நான் மூன்று வேளை குளிக்கிறேன், பூஜை செய்கிறேன், கோவிலுக்குப் போகிறேன், தீர்த்த யாத்திரை போகிறேன் என்று பெருமை கொள்ளும் ஆட்களும் இருக்கிறார்கள். 

பக்தி , தன்னைத் தான் அறிய ஒரு வழி. அவ்வளவு தான். அதில் ஆணவம் வந்தால் பின் அந்த  பக்தியில் என்ன பயன். 

நம் புராணங்களில் வரும் அரக்கர்களை பார்த்தால் தெரியும். 

பெரிய பக்திமானாக இருப்பார்கள். கடுமையான தவம் செய்து, இறைவனையே நேரில் கொண்டு வருவார்கள். அளவற்ற வரங்களைப் பெறுவார்கள். அவற்றைக் கொண்டு , தன்னை யாரும் வெல்ல முடியாது என்று இல்லாத அட்டகாசம் எல்லாம் செய்து அழிந்து போவார்கள். 

உங்கள் பக்தி ஆணவத்தில் கொண்டு போய் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

தானம் கொடுப்பதில் கூட தற்பெருமை கொள்ளுவார்கள் அரக்க குணம் கொண்டவர்கள். 

கதிர் வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும் நொய்யில் பிளவேனும் பகிர்மின்கள் என்பர் அருணகிரிநாதர்.


வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

தானம் கொடுக்கும் போது ,  முருகனை வாழ்த்தி , தானம் கொடுங்கள் என்பார் அருணகிரிநாதர். 

ஏன் முருகனை வாழ்த்த வேண்டும் ?

தானம் கொடுக்கும் அளவுக்கு நமக்கு செல்வத்தை தந்ததற்காக.

தானம் கொடுக்கும் மனதை தந்ததற்காக.

சிலருக்கு பணம் இருக்கும். கொடுக்க மனம் இருக்காது. 

இவை எல்லாம் என்னால் ஆகிறது என்று நினைக்காமல் செய்ய வேண்டும்.

நல்ல காரியத்தின் மூலம் கெடுதலை ஏன் தேடிக் கொள்ள வேண்டும் ?