Monday, January 30, 2017

கீதை - 16.9 - பார்வையும் விளைவுகளும்

கீதை - 16.9 - பார்வையும் விளைவுகளும் 


एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः ।
प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः ॥१६- ९॥

ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோல்பபுத்தய: |
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோஹிதா: || 16- 9||


ஏதாம் = இவர்கள்

த்ருஷ்டிம் = இந்த நோக்கத்தால், பார்வையால்

அவஷ்டப்ய = அவ + ஸ்தாபிபிய =   நிலை நிறுத்த (அந்த கொள்கைகளை)

நஷ்டாத்மாநா = தங்களை தாங்களே அழித்துக் கொண்டு

அல்ப புத்தய: = அற்ப புத்தியுடன்

ப்ரபவந்தி  = உருவாகி இருக்கிறார்கள்

உக்ரகர்மாண: = உக்ர + கர்மான  = கொடிய செயல்களுடன்

 க்ஷயாய = அழிவை நோக்கி

 ஜகத் = உலகை

அ ஹிதா: = ஹிதம் என்றால் நன்மை. எ ஹிதம் என்றால் நன்மை இல்லாத. அதாவது தீமை.

அந்த எண்ணம் கொண்டவர்கள், தங்களை தாங்களே அழித்துக் கொள்வது மட்டும் அன்றி உலகையும் தங்களது தீவிர செயல்களால் தீமை நோக்கி இட்டுச் செல்வார்கள். 

அந்த எண்ணம் கொண்டவர்கள் என்றால் எந்த எண்ணம் ?

முந்திய ஸ்லோகத்தில் பார்த்தோம்

- உலகம் என்பது ஒரு விபத்து. அது எந்த விதிக்கும் கட்டுப் படாதது.
- உலகை யாரும் தோற்றி வைக்க வில்லை, அதை யாரும் பரி பாலனம் செய்வது இல்லை.

- உலகம் ஆசையால் சுழல்கிறது. ஆசையால் உந்தப் பட்டு காரியங்கள் நிகழ்கின்றன.

- அதற்கு மேல் ஒன்றும் இல்லை

என்ற இந்த எண்ணங்களைக் கொண்டவர்கள் என்ன செய்கிறாரகள் என்றால் ...

முதலில் தங்களை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.

இரண்டாவது, அற்ப புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள்

மூன்றாவது, தீவிரமாக செயல் படுகிறார்கள்

நான்காவது, இந்த உலகையும் அழிவு பாதையில் இழுத்துச் செல்கிறார்கள்.

அதாவது, இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அற்ப புத்தி உள்ளவர்கள். அவர்கள்  தங்களையும் இந்த உலகையும் அழிவு பாதையில் இழுத்துச் செல்வார்கள் என்பது போலத் தோன்றும் இந்த சுலோகம்.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

இந்த உலகில் எதுவம் விதிப்படி நடப்பது இல்லை என்று நினைப்பவன் என்ன செய்வான் ?

முதலாவது, ஏதாவது விதி இருக்கிறதா என்று தேட மாட்டான். அது தான் முதலிலேயே  முடிவு செய்து விட்டானே ஒரு விதியும் , கோட்பாடும், இல்லை என்று.  அறிவியல் என்பது நிகழ்வுகளுக்கு பின்னே உள்ள காரணங்களை அறிவது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று சிந்திப்பவன் அதற்கான காரணத்தை கண்டு பிடிக்க முயல்வான். ஏன் நோய் வருகிறது என்று சிந்திப்பவன் மருத்துவம்  என்ற இயலை கண்டு பிடித்து தான் வாழ்வதோடு மற்றவர்களையும் வாழ  வைப்பான். நோய் வருகிறது என்றால் அதற்கு ஒரு காரணமும் இல்லை  என்று நினைப்பவன், தான் நோயில் அழிவது மட்டும் அல்ல, உலகத்தையும் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்வான்.  மருந்து மட்டும் அல்ல , இன்பம், துன்பம், பசி, போர், போன்ற அனைத்துக்கும் காரணங்களை ஆராய்பவன்   அவற்றில் இருந்து விடு பட வழி காண்பான். மற்றவர்களையும் அந்த  துன்பத்தில் இருந்து விடுபட உதவி செய்வான்.

இரண்டாவது, இந்த உலகில் ஒரு விதியும் கிடையாது, என்று நினைப்பவன் ஒரு  விதிக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டான். அப்படிப்பட்டவன் சீக்கிரம் அழிவான்  என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டும் அல்ல, மற்றவர்களின் அழிவுக்கும் துணை போவான்.

"அற்ப அறிவு"

விதி, ஒரு கட்டுப்பாடு, ஒரு கோட்பாடு என்று ஒன்று இல்லை என்று நினைப்பவன் மேற்கொண்டு சிந்திப்பதை நிறுத்தி விடுகிறான். அவனது அறிவு வளர  வழி இல்லை. எல்லாமே ஒரு காரணமும் காரியமும் இல்லாமல் நடக்கிறது என்று நினைக்கிறான். ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று நினைத்தால் அல்லவா அது என்ன என்று காண முயல்வான். ஒன்றும் இல்லை என்று நினைப்பவனின்  அறிவு வளர ஒரு வழியும் இல்லை.

"தீவிர செயல்பாடுகளோடு "

இந்த உலகம் தோன்றியதும், செயல்படுவதும் ஒரு விபத்து (accident ) என்று நினைப்பவன் , வாழ்க்கை, அதன் போக்கு, அதன் தொடர்ச்சி என்றெல்லாம் நினைக்க மாட்டான். இருக்கிற கொஞ்ச காலத்துக்குள் அனைத்தையும் வாழ்ந்து தீர்த்துவிடுவோம் என்று நினைப்பான். அவசரம் அவசரமாக செயல் படுவான்.  எல்லாவற்றையும் அனுபவித்து தீர்த்துவிட வேண்டும் என்று நினைப்பான். செயலில் ஒரு தீவிரம் இருக்கும். அவனுடைய அனுபவிப்பிற்கு தடையாக இருப்பவற்றை எப்படியாவது விலக்கிவிட துடிப்பான. ஒரு வேகமும் பதட்டமும் இருக்கும் அவனது செயல்களில்.

"உலகையும் அழிவுப் பாதையில் இழுத்துச் செல்வான் "


எதிலும் பரந்த மனப்பான்மை கிடையாது. தீர்க்க சிந்தனை கிடையாது. விதி, சட்டம், கோட்பாடு என்று எதுவும் கிடையாது. எதிலும் ஒரு அவசரம், வேகம்.

அப்படிப்பட்டவன் தான் அழிவுப் பாதையில் செல்வது மட்டும் அல்ல, மற்றவர்களையும் குழப்பி உலகையும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்வான்.

எதையும் ஆராயுங்கள். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. கர்த்தா இல்லாமல்  காரியம் இல்லை. நிதானமாக யோசியுங்கள்.

அப்படி யோசிக்காமல் இருப்பவன் எப்படி செயல்படுவான் தெரியுமா ?

அடுத்த ஸ்லோகத்தில் பார்ப்போம்.






Sunday, January 29, 2017

கீதை - 16.8 - இந்த உலகைப் பற்றி அவர்களின் எண்ணம்

கீதை - 16.8 - இந்த உலகைப் பற்றி அவர்களின் எண்ணம் 


असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् ।
अपरस्परसंभूतं किमन्यत्कामहैतुकम् ॥१६- ८॥



அஸத்யமப்ரதிஷ்ட²ம் தே ஜக³தா³ஹுரநீஸ்²வரம் |
அபரஸ்பரஸம்பூ⁴தம் கிமந்யத்காமஹைதுகம் || 16- 8||

சீர் பிரித்தபின்

அசத்தியம் அப்ரதிஷ்டம் தெ ஜகத் ஆஹு அ(ந் ஈஸ்வரம் 
அ பரஸ்பர ஸம்பூதம் கிம் அந்யத் காம ஹைதுகம் 

பொருள்

அசத்தியம் = சத்யம் அல்லாதது

அப்ரதிஷ்டம் = பிரதிஷ்டம் என்றால் அடிப்படை, நிலை, கொண்டது என்று அர்த்தம். அப்ரதிஷ்டம் என்றால் நிலை இல்லாதது

தெ = அவர்கள்

ஜகத் =இந்த உலகம்

ஆஹு = சொல்கிறார்கள்

அ(ந் ஈஸ்வரம் = படைப்பவன் இல்லாதது

அ பரஸ்பர = பரஸ்பரம் என்றால் ஒன்றோடு ஒன்று. அ பரஸ்பரம் என்றால் ஒன்றோடு ஒன்று அல்லாத

ஸம்பூதம் = அனைத்து உலகும்

 கிம் = எப்படி

அந்யத் = அவர்கள் , அந்நியர்கள்

காம = காமத்தினால்,

ஹேது கம் = உருவான காரணம்.

இந்த உலகமும் உயிர்களும் எப்படி உருவாயின ? இவை எதனால் எப்படி மேற்கொண்டு செல்லுகின்றன ?

இரண்டு விதமான கருத்துகள் இருக்கின்றன.

ஒன்று இந்த உலகும், அதில் உள்ள உயிர்களும் இறைவனால் படைக்கப் பட்டவை. இறைவனே அனைத்தையும் செலுத்துகிறான்.

இது ஒரு கருத்து.

இன்னொரு கருத்து , அதை இந்த ஸ்லோகத்தில் கீதை சொல்கிறது.

சிலர் நினைக்கிறார்கள், இந்த உலகம் எந்த விதிக்கும் கட்டுப் பட்டது அல்ல என்று (அசத்தியம்). சத்யம் என்றால் நிலையானது. உண்மையானது. எந்த உண்மைக்கும் கட்டுப் பட்டது அல்ல என்று நினைக்கிறார்கள்.

நாம் இன்று அறிவியலில் எவ்வளவோ முன்னேறி விட்டோம்.

 இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற அனைத்து துறைகளிலும் மிக மிக முன்னேறி விட்டோம்.

இன்று , இந்த உலகம் சில விதிகளுக்கு கட்டுப் பட்டு இயங்குகிறது என்று நமக்குத் தெரியும். கோள்களும், நட்சத்திரங்களும்,  அணுக்களும், உடலில் உள்ள செல்களும் சில விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன என்று அறிகிறோம். ஆனால் , கீதை எழுதப் பட்ட காலத்தில், இவை எல்லாம் இல்லை.

அப்போது சில பேர் இந்த உலகம் எந்த விதிக்கும் உட்பட்டது அல்ல என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் வியாசர் சொல்கிறார் "அவர்கள் அப்படி சொல்கிறார்கள்" என்று. அதாவது, வியாஸருக்குத் தெரிந்திருக்கிறது இந்த உலகம் ஏதோ ஒரு விதிக்கு உட்பட்டு இயங்குகிறது என்று.

அடுத்ததாக, அவர்கள் இந்த உலகம் ஈஸ்வரன் இல்லாதவன் என்று கூறுகிறார்கள்.

எப்படி உலகம் விதி இல்லாமல் செயல் படுகிறதோ, அது ஒரு கர்த்தா இல்லாமலும் செயல் படுகிறது என்று சொல்கிறார்கள்.

நாம், இன்று, இந்த உலகம் எந்தெந்த விதிகளில் செயல் படுகிறது என்று கண்டு பிடித்து விட்டோம்.

ஆனால், இந்த உலகம் ஈஸ்வரன் அல்லது ஒரு சக்தியால் செயல் படுகிறது என்று அறியவில்லை - இன்னும்.

விதி ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள் - விதிகளை கண்டு பிடித்து விட்டோம்.

இறைவன் இல்லை என்று சொன்னார்கள் -இறைவனை இன்னும் கண்டு பிடிக்கவில்லை. கண்டு பிடிக்காததால் இல்லை என்று  சொல்ல முடியுமா  ? ஒரு காலத்தில் அறிவியல் கோட்பாடுகள்  கூடத்தான் கண்டு பிடிக்கப் படவில்லை.

 மூன்றாவது, அவர்கள் இந்த உலகம்  ஒன்றில் இருந்து ஒன்று  வந்தது என்று ஒப்பு கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் இந்த உலகம் காமத்தினால், ஆண் பெண் சேர்க்கையால் வந்தது என்று நினைக்கிறார்கள்.

ஆண் பெண் கலவி தேவை தான். ஆனால், அந்த ஆணும் பெண்ணும் எப்படி வந்தார்கள் ? காமம் தான் இன விருத்திக்கு அடிப்படை. ஆனால், அந்த ஆணும் பெண்ணும் எப்படி வந்தார்கள் ?

ஏதிலிருந்தோ படைக்கப் பட்டிருக்க வேண்டும். எதிலிருந்தோ என்றால் அந்த ஏதோ ஒன்று எதில் இருந்து வந்தது ? இப்படி கேட்டுக் கொண்டே போனால், தொடக்கத்தின் ஆரம்பப் புள்ளிக்கு போய் விடுவோம். அந்த புள்ளி எப்படி வந்தது என்ற கேள்வியில் நிற்போம்.

அந்த முதல் உயிருக்கு, அல்லது பொருளுக்கு ஆண் பெண் என்ற இரண்டு கிடையாது . அப்படி என்றால் காமம், அன்பு, ஈர்ப்பு என்பது அந்த புள்ளியில் கிடையாது.

இப்படி ஒரு விதி இல்லாத, ஒரு ஈஸ்வரன் இல்லாத, காமத்தை அடிப்படையாக கொண்ட உலகத்தை பற்றி எண்ணுவதால் என்ன நிகழும் ?

மேலும் பார்ப்போம்.