Monday, April 29, 2013

12. கீதை - உண்மை எப்படி தரப்படுகிறது


கீதை - உண்மை எப்படி தரப்படுகிறது 



முதல் அத்தியாயத்தை தாண்டி அடுத்த அத்தியாயங்களை பார்க்கும் முன், முதல் அத்யாயத்தில் சில விஷயங்களை உன்னிப்பாக கவனிப்போம்.

முதலில், கீதை சொல்லப் பட்ட விதம். கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்னான். அதை சஞ்சயன் தன் ஞானகண்ணால் கண்டு கண் இல்லாத திருதராஷ்டிரனுக்கு சொன்னான்.

ஏன் இவ்வளவு சிக்கலான ஒரு முறை பாரதத்தில் கடை பிடிக்கப் பட்டது ?

வேறு எத்தனையோ வழிகளில் கண்ணன் கீதையை சொல்லி இருக்கலாம். பாண்டவர்கள் பதினான்கு வருடங்கள் கானகத்தில் இருந்த போது, எல்லோருக்கும் நிறுத்தி நிதானமாய் சொல்லி இருக்கலாம்.

உண்மை எப்போதுமே ஒருவருக்குத்தான் கிடைக்கிறது.

கூட்டங்களுக்கு அது வழங்கப் படுவது இல்லை.

அதீத தேடலும், முயற்சியும் உள்ள தனி நபர்களுக்கு உண்மை வெளிபடுகிறது.

ஒரு சங்கரர், ஒரு இராமானுஜர், ஒரு பரமஹசர்,ஒரு ஏசு கிறிஸ்து என்று எப்போதுமே அது தனி நபர்களுக்குத்தான் கிடைக்கிறது.

அப்படி கிடைத்த உண்மையை உலகுக்கு சொல்ல ஒரு தூதர், ஆசிரியர், குரு தேவைப் படுகிறது. எல்லோராலும் அந்த ஞானத்தை நேரே பெற முடிவதில்லை.

அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்னதை, உலகுக்கு எடுத்துச் சொல்ல ஒரு சஞ்சயன் வேண்டி இருந்தது.

அர்ஜுனனே நேரே எல்லோருக்கும் சொல்லி இருக்கலாம். அவனிடம் உண்மையான தேடல் இருந்தது, தவிப்பு இருந்தது ஆனால் அந்த பிரசாதத்தை பெற்று மற்றவர்களிடம் தரும் பக்குவம் இல்லை. நடுவில் ஒரு சஞ்சயன் வேண்டி இருந்தது.

Sunday, April 28, 2013

11. கீதை - 1.40 to 1.47 - வர்ணாசிரமம் - தர்ம சங்கடம்


கீதை - 1.40 to 1.47 - வர்ணாசிரமம் - தர்ம சங்கடம் 


இந்த எட்டு சுலோகங்களுடன் கீதையின் முதல் அத்தியாயம் முற்று பெறுகிறது.

சண்டை இடுவதால் என்ன பலன், உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று அதன் பின் வரும் அரசால் என்ன இன்பம், நான் சந்யாசியாக போகிறேன், என்று புலம்பிய பின், அடுத்த கட்டத்திற்கு போகிறான்.

மிக அதிகமான சர்ச்சைக்கு உள்ளான பகுதி இது.

வர்ணாசிரம தர்மம், ஜாதி அடிப்படையிலான ஒரு சமுதாயத்திற்கு கீதை அடிகோலுகிறது என்று விமர்சகர்கள் இந்த பகுதியை கடுமையாக தாக்கினார்கள்.

அர்ஜுனன் அப்படி என்ன சொன்னான் ?

யுத்தத்தால் ஆண்கள் மடிகிறார்கள். இதனால் குடும்பம் சிதைகிறது. குடும்பம் சிதைவதால், குலம் நாசம் அடைகிறது.

குலம் நாசம் அடைவதால், என்றும் உள்ள குல தர்மங்கள் சிதைகின்றன.

குல தர்மம் சிதைவதால், குலத்தினுள் அதர்மம் எழத் தலைபடுகிறது

குலத்தினுள் அதர்மம் எழுவதால், குலப் பெண்கள் நெறி பிறழ்வார்கள்.

குடும்பத்தின் ஆணி வேறான பெண்கள் நெறி தவறினால், வர்ண குழப்பம் உண்டாகிறது.

அப்படி வர்ண குழப்பத்தை ஏற்படுத்த்வோர்க்கும், அப்படி பட்ட குழம்பிய வர்ணத்தை சேர்ந்தவர்களுக்கும் நரகமே கிடைக்கும்.

வர்ண குழப்பம் ஏற்பட்டால், பிதுர்க்கள் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பிண்டமும் நீரும் இன்றி தவிப்பார்கள்

இதனால், தொன்று தொட்டு வரும் ஜாதி தர்மங்களும், குல தர்மங்களும் அழிந்து போகும்.

தர்மம் அழிந்த குலத்தில் உள்ள மனிதர்களுக்கு என்றென்றம் நரகமே கிடைக்கும்

நான் எவ்வளவு பெரிய தவறை செய்ய முற்படுகிறேன்

இதற்க்கு பதில், நிராயுத பாணியாக இருக்கும் என்னை அவர்கள் கொன்று விட்டால் கூட பரவாயில்லை

இப்படி சொல்லி விட்டு, வில்லையும் அம்புகளையும் போட்டு விட்டு, தேர் தட்டில் சோர்ந்து அமர்ந்து விட்டான்.

கீதை இதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறதா ? வியாசர் அர்ஜுனன் மூலம் இதைத்தான் சொல்ல வருகிறாரா ? இதற்க்கு கண்ணன் என்ன சொல்கிறான்.

இதை எல்லாம் கண்ணன் ஏற்றுக் கொண்டாலும் பிரச்னை, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பிரச்னை.

ஏற்றுக் கொண்டால், ஜாதியின் அடிப்படையில் கொண்ட ஒரு சமுதாயத்தை கண்ணன் ஏற்றுக் கொண்டதாக ஆகும்.

ஏற்றுக் கொள்ளாவிட்டால், குல தர்மம், ஜாதி விட்டு ஜாதி விட்டு திருமணம் செய்வது போன்றவற்றை கண்ணன் ஏற்றுக் கொள்வதாக ஆகும்.

இதற்கு என்னதான் தீர்வு ?

Saturday, April 27, 2013

10. கீதையின் சிறப்பு அம்சங்கள்


கீதையின் சிறப்பு அம்சங்கள் 


மத்த புராண இதிகாசங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது கீதை பல விதங்களில் வேறு பட்டு நிற்கிறது.

பொதுவாகவே இந்து மதத்தின் அனைத்து தத்துவார்த்த விளக்கங்களும் ஏதோ ஒரு கானகத்தில், ஒரு குரு அவருடைய சீடர்களுக்கு சொன்ன மாதிரி தான் இருக்கும். அனைத்து உபநிஷதங்களும் அப்படி சொல்லப்பட்டதுதான் (ஒன்றே ஒன்றை தவிர). உபநிஷத் என்றால் அருகில் அமர்வது என்று பொருள்.
இல்லை என்றால் ஒரு முனிவரோ, ரிஷியோ தங்களுக்குள் பிறந்த ஞானத்தை எழுதி வைத்து விடுவது உண்டு.

கீதை அப்படி அல்ல. போர்க் களத்தில், மிக  மிக ஒரு இக்கட்டான இடத்தில் கூறப் பட்ட ஒன்று.

கீதை யாருக்குச் சொல்லப் பட்டது ? வாழ்ந்து முடித்த வயதானவர்களுக்கு, போகும் வழிக்கு புண்ணியம் தேட சொல்லப் பட்டது அல்ல. குரு குலத்தில் கல்வி பயிலும் இளம் மாணவர்களுக்கு சொல்லப் பட்டது அல்ல.

வாழ்வின் நடுவில் நிற்கும், வாழ வேண்டிய, வாழ்க்கையோடு போராட வேண்டிய ஒரு பொறுப்புள்ள மனிதனுக்குச் சொல்லப் பட்டது.

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திரு வாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று ஒரு வாசகம் உண்டு.

மற்ற புராண இதிகாசங்களைப் போல் இல்லாமல் இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை.

இப்படி பலப் பல சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டது கீதை.

Friday, April 26, 2013

9. கீதை - 1.27 to 1.39 - இழப்பதும் பெறுவதும்


கீதை - 1.27 to 1.39 - இழப்பதும் பெறுவதும்


அடுத்து வரும் 13  சுலோகங்களில் அர்ஜுனனின் பயம், குழப்பம், சந்தேகம் எல்லாம் வெளிப்படுகிறது.

எதிர் அணியில் மட்டும் அல்ல தன அணியில் உள்ளவர்களையும் அவன் பார்க்கிறான். மாமா, மைத்துனர், பாட்டனார், குரு, உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோரையும் பார்க்கிறான்.

என் மேனி நடுங்குகிறது, என் மயிர் கால்கள் குத்திட்டு நிற்கின்றன
என் காண்டீபம் என் கையையை விட்டு நழுவி போகின்றது.  என் மேனி முழுதும் எரிகின்றது.

நான் கெட்ட சகுனங்களை பார்க்கிறேன். என் உறவினர்களை யுத்தத்தில் கொல்வதால் நான் ஒரு பயனையும் காண்கிலேன்.

எனக்கு வெற்றியும் வேண்டாம், இராஜியமும் வேண்டாம், அது தரும் சுகங்களும் வேண்டாம். இத்தனை போரையும் கொன்று விட்டு வரும் அரசால் என்ன சுகம்.

என் பாட்டனாரையும், குருவையும் மற்ற உறவினர்களையும் கொன்று அதன் மூலம் இந்த இராஜ்ஜியம் மட்டும் அல்ல, மூன்று உலகங்களும் கிடைத்தாலும் எனக்கு வேண்டாம்.

இவர்களை கொல்வதால் நமக்கு பாவம் தான் வந்து சேரும்.
இவர்களை கொன்ற பின் நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்
அவர்கள்தான் அறிவில்லாமல் சண்டை இட வந்து இருக்கிறார்கள் என்றால் அதே முட்டாள்தனத்தை நாமும் ஏன் செய்ய வேண்டும்

அர்ஜுனன் பலனை மட்டும் எதிர்பார்த்து யுத்தத்திற்கு வந்து விட்டான். அதன் விளைவுகளை அவன் எடை போடவில்லை. எதை அடையப் போகிறோம் என்பதிலேயே கவனமாய் இருந்தான். எதை இழக்கப் போகிறோம் என்பதை அவன் அறியவில்லை.

ஒன்றை அடைய ஏதோ ஒன்றை இழக்க வேண்டியிருக்கும் என்ற முதல் பாடம் இங்கு கிடைக்கிறது.

அடுத்த முறை எதையாவது நீங்கள் அடைய முயன்று கொண்டிருந்தால், எதை இழக்கப் போகிறீர்கள் என்றும் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

"அர்ஜுனா, நீ சொல்வதும் சரிதான். எதற்கு இவ்வளவு உயிர் சேதம். அவர்களே ஆளட்டும். நீ சொன்னது போல் நீ சந்நியாசியகப்  போய் விடு. இந்த யுத்தமே வேண்டாம்" என்று கிருஷ்ணன் சொல்லி இருக்கலாம்.

சொல்லவில்லை. அதற்க்கு மாறாக வேறு சிலவற்றை சொல்கிறான்.

அது.....

8. அர்ஜுனனின் குழப்பம் - யுத்தம் வேண்டாம், சன்யாசியாகப் போய் விடுகிறேன்


அர்ஜுனனின் குழப்பம் - யுத்தம் வேண்டாம், சன்யாசியாகப்  போய்  விடுகிறேன் 


நாம் சில சமயம் ஆசை பட்டு ஒரு விஷயத்தை தொடங்கி விடுவோம். வீடு வாங்குவது, கல்யாணம் பண்ணிக் கொள்வது, குழந்தைகளை பெற்றுக் கொள்வது, இப்படி பல விஷயங்களை நாம் அதில் உள்ள முழு சிக்கலையும், பிரச்சனைகளையும் அறியாமல் தொடங்கி விடுகிறோம்.

போகப் போக அதில் உள்ள சிக்கல்கள், பிரச்சனைகள் நம்மை வாட்டத் தொடங்குகின்றன.

ஏண்டா இதில் காலை விட்டோம் என்று தவிக்கிறோம். எல்லாத்தையும் விட்டு விட்டு எங்காவது கண் காணாத இடத்துக்கு ஓடிப் போய் விடலாமா என்று தோன்றும். சன்யாசியாகப் போய் விடலாமா என்று தோன்றும்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்போம்.  அந்த தவிப்புதான் அர்ஜுனனுக்கு.

அர்ஜுனன் மிகப் பெரிய வீரன். பெரிய பலசாலி. வில் வித்தையில் அவனை மிஞ்ச ஆள் இல்லை...யுத்தம் என்று வந்து விட்டால் எல்லோரையும் வென்று இராஜியத்தை அடைந்து விடலாம் என்று நினைத்து இருந்தான்.

யுத்தம் தொடங்கப் போகிறது. கௌரவர்களின் சேனையையை பார்க்கிறான். அவனுக்கு சோர்வு உண்டாகிறது.

எப்படி நாம் இந்தப் படையை வெல்லப் போகிறோம் என்று சந்தேகம் வருகிறது. பயம் வருகிறது. வில் கையை விட்டு நழுவுகிறது. நா வரள்கிறது. ஆரம்பித்து விட்டோம், எப்படி முடிப்பது என்ற ஆயாசம் அவனை ஆட் கொள்கிறது.

அதை பயம் என்று அவன் சொல்லவில்லை. பூசி மெழுகுகிரான்.

புலம்ப ஆரம்பிக்கிறான். யுத்தமே வேண்டாம், சன்யாசியாகப் போய் விடுகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று கூறுகிறான்.

முன்பே கூறிய மாதிரி, நம் வாழ்க்கை களம் தான் குருஷேத்ரம். நாம் தான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மன நிலையில் இதுவரை எத்தனை முறை இருந்து இருக்கிறீர்கள் ?

அர்ஜுனன் என்னவெல்லாம் சொல்கிறான் தெரியுமா ?



Thursday, April 25, 2013

7. விஷாத யோகம்


விஷாத யோகம்


கீதையின் முதல் அத்தியாயம் விஷாத யோகம் என்று அழைக்கப் படுகிறது.

யோகம் என்றால் என்ன ?

யோகம் என்றால் ஒரு நெறிமுறை பட்ட வழியின் மூலம் குறிக்கோளை அடைவது (a disciplined way to achieving a goal).

ஒரு கட்டுப்பாட்டுடன், ஒரு ஒழுங்கு முறையான வழியில் எந்த ஒரு குறிக்கோளை அடைவதும் யோகம் எனப்படும்.

அது கர்ம யோகமாக இருக்கலாம், பக்தி யோகமாக இருக்கலாம், ஞான யோகமாக இருக்கலாம்....எல்லாம் யோகம் தான். (யோகா).

விஷாத என்றால் துன்பம், குழப்பம், சந்தேகம். "ஹத"  என்பது ஒரு மங்கலச் சொல். ஓம் என்பது மாதிரி. கீதை போன்ற ஒரு உயரிய நூல் துன்பம், குழப்பம் என்ற அமங்கலத்தொடு ஆரம்பிக்காமல் இருக்க விஷாத என்று ஒரு மங்கள சொல்லை சேர்த்து சொன்னார்கள்.

சந்தேகம், குழப்பம், துன்பம் இவை எல்லாம் எப்படி ஒரு யோகமாகும் ?

உண்மை, ஞானம் என்ற குறிக்கோளை அடைய சந்தேகம் ஒரு மார்க்கம். கேள்வி கேட்டு கேள்வி கேட்டு தான் தெளிவு பிறக்க வேண்டும்.

அர்ஜுனன் குழம்புகிறான். சந்தேகப் படுகிறான். உண்மையான சந்தேகம், பொய்யான நம்பிக்கையை விட உயர்ந்தது.

கீதை என்ற உயரிய ஞான நூல் அர்ஜுனனின் சந்தேகத்தால், அவனின் குழப்பத்தால் நமக்கு கிடைத்தது. ஒரு வேளை அவனுக்கு இந்த குழப்பமும், சந்தேகமும் வரமால் இருந்திருந்தால் நமக்கு கீதை என்ற பொக்கிஷம் கிடைத்து இருக்காது. சந்தேகமும், குழப்பமும் தர்மனுக்கோ, பீமனுக்கோ, நகுல சகாதேவர்களுக்கோ வரவில்லை. அர்ஜுனனும் அப்படி இருந்திருக்கலாம். அவன் அப்படி இல்லாதது நாம் செய்த புண்ணியம்.

விஷாத யோகம் நமக்கு அடித்த யோகம்.

அவனுக்கு என்ன குழப்பம், என்ன சந்தேகம், என்ன துன்பம் ?  பார்ப்போம்.

6. அர்ஜுனன் மன மாற்றம்


அர்ஜுனன் மன மாற்றம்


இரண்டு பக்கமும் சங்க நாதம் முழங்கியது. முரசு அதிர்ந்தது. வானமும் பூமியும் அந்த ஒலியில் அதிர்ந்தன.

அப்போது அர்ஜுனன் "கிருஷ்ணா, என் தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்து. என்னோடு சண்டையிட வந்திருப்பவர்கள் யார் என்று நான் பார்க்க வேண்டும்.

துரியோதனனுக்காக சண்டையிட வந்திருப்பவர்கள் யார் என்று நான் அறிய வேண்டும்."

அதை கேட்ட கிருஷ்ணன் தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் செலுத்தினான்.

இந்த இடத்தில் நாமும் சற்று நிறுத்தி யோசிப்போம்.

சண்டை தொடங்குவது என்பது சர்வ நிச்சயமாகி விட்டது. யுத்தத்தை இனி தவிர்க்க முடியாது. அது நடந்தே தீரும்.

அர்ஜுனன் சண்டைக்கு தயாராகி விட்டான்.

மிக மிக தைரியாமாக, இரண்டு படைகளுக்கும் நடுவில் என் தேரை செலுத்து என்கிறான். எல்லோரையும் நோட்டம் விடுகிறான். அவனிடம் பயம் இல்லை. யுத்தத்துக்கு தயாராக இருக்கிறான். அது ஒரு முக்கியமான விஷயம்.

தேரை செலுத்திக்கொண்டே கிருஷ்ணன் சொல்கிறான் " அர்ஜுனா, குரு வம்சத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இங்கு இருக்கிறார்கள்".

முதல் அத்தியாத்தில் கிருஷ்ணன் சொன்ன ஒரே ஒரு வாக்கியம் இது மட்டும் தான்.

அர்ஜுனன் பார்க்கிறான். மாமன், மைத்துனர்கள், வித்தை சொல்லிக் கொடுத்த குரு, பாட்டனார் பீஷ்மர், என்று அனைவரையும் பார்க்கிறான்.

அவன் மனம் மாறுகிறது......

Wednesday, April 24, 2013

5. கீதை - பாரதப் போர் துவக்கம்


கீதை - பாரதப் போர் துவக்கம் 


அடுத்த எட்டு சுலோகங்களில் போர் ஆரம்பிப்பதை பற்றி சொல்கிறது கீதை.

துரியோதனன் துரோனாசாரியரிடம் பாண்டவர்களின் படைகளை பற்றியும் தங்களின் படை பலத்தையும் சொல்லிய பின், தன் படைத் தலைவர்களை பார்த்து "நீங்கள் எப்போதும் பீஷ்மரை பாதுகாக்க வேண்டும் " என்று சொன்னான்.

இதை கேட்டுக் கொண்டிருந்த பீஷ்மர், ஒரு சிங்க கர்ஜனை செய்து தன்னுடைய சங்கை ஊதினார்.

அந்த சங்க நாதம் தான் பாரதப் போரின் தொடக்கம்.

பாரதப் போரை தொடங்கியது கௌரவர்கள். பாண்டவர்கள் போரை ஆரம்பிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து கௌரவ சேனையில் உள்ளவர்களும் பாண்டவ சேனையில் உள்ளவர்களும் தங்கள் தங்கள் சங்கை ஊதினார்கள். முரசை அடித்து ஒலி உண்டாக்கினார்கள்.

யுத்தத்திற்கு இரண்டு பக்கமும் தயார்

அடுத்து என்ன ?

Tuesday, April 23, 2013

கீதை - 1.02 - துரியோதனன் படையை பார்வை இடுதல்

கீதை - 1.02 - துரியோதனன் படையை பார்வை இடுதல் 

सञ्जय उवाच
दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा।
आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् ॥२॥
ஸஞ்ஜய உவாச
த்³ருஷ்ட்வா து பாண்ட³வாநீகம் வ்யூடம் து³ர்யோதநஸ்ததா³|
ஆசார்யமுபஸங்க³ம்ய ராஜா வசநமப்³ரவீத் ||1-2||


ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்

ததா³ = அப்போது

துர்யோதந = துர்யோதனன்;

வ்யூடம் = வியூகித்து நின்ற

பாண்ட³வாநீகம் = பாண்டவர் படையை;

த்³ருஷ்ட்வா = பார்த்துவிட்டு 

ஆசார்யம் உபஸங்க³ம்ய = ஆச்சாரியனான துரோணரிடம் சென்று

வசனம் = வசனம்

அப்ரவீத் = சொல்லத் தொடங்கினான்;


சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதனன் வியூகத்தில் நின்ற பாண்டவர்கள் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரியரிடம் சென்று சொல்லத் தொடங்கினான்.

துன்பத்தின் முதல் படி, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது. 

அவனுக்கு அவ்வளவு இருக்கிறதே, எனக்கு இல்லையே என்று வருந்துவது.

என்னிடம் ஒரு விலை உயர்ந்த கார் இருக்கிறது. அதைப் பார்த்து பார்த்து நான் பெருமை கொள்கிறேன். என்ன ஒரு அருமையான வண்டி என்று நண்பர்களிடம் காட்டி பெருமிதம் கொள்கிறேன். சிறிது நாளில், பக்கத்து வீட்டுக்காரன், என்னுடைய வண்டியை விட உயர்ந்த வண்டியை வாங்கிவிட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்றிலிருந்து என் வண்டி எனக்கு ஒரு பாரம் தான். "இந்த சனியனை கட்டிக் கொண்டு யார் மாரடிப்பார்கள் " என்று சலித்துக் கொள்வேன். அதே வண்டிதான். அதே நான்தான். இருந்தும் பக்கத்து வீட்டுக்காரன் வண்டி என்னுடையதை விட சிறந்தது என்றால், என் வண்டியின் மதிப்பு குறைந்து போகிறது. அதில் இருந்து பெற்ற இன்பம் போய் , அதுவே துன்பமாகி விடுகிறது.
பொறாமை, அழுக்காறு என்று சொல்வர்கள்.
அழுக்காறு என்று ஒரு பாவி என்பார் வள்ளுவர். 
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்,

தீயுழி உய்த்துவிடும்.


நம்மிடம் செல்வம் இருக்கும். ஆனால், அது மற்றவர்களின் செல்வத்தை விட குறைவானது என்று நினைத்து விட்டால், நம் செல்வம் ஒன்றும் இல்லாதது போலத் தோன்றும். "திருச் செற்று" என்பார். செல்வத்தை அழித்து, "தீயுழி உய்த்து விடும்".

என் மனைவி அழகுதான். அடுத்தவன் மனைவி , என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் வந்து விட்டால் "எனக்குன்னு வந்து வாய்ச்சிதே" என்று சலிப்பும் வெறுப்பும் வரும்.

இனிவரும் ஸ்லோகங்களில், யுத்த களத்தில் நடப்பதை நேரடியாக வியாசர் சொல்ல இருக்கிறார்.

கேட்போம்.

http://bhagavatgita.blogspot.in/2013/04/102-to-111.html

Monday, April 22, 2013

3. கீதை - தர்மம் என்றால் என்ன ?


கீதை - தர்மம் என்றால் என்ன ?


தர்ம க்ஷேத்ர குரு ஷேத்ரே என்று கீதை ஆரம்பிக்கிறது.     

தர்மம் என்றால் என்ன ?    மிக மிக அடர்த்தியான ஒரு சொல்

தர்மம் என்றால் வைதீக கோட்பாடுகள் என்று ஒரு அர்த்தம் சொல்லப் படுகிறது. வேதம், உபநிடதம், சுருதி போன்றவற்றில் சொல்லப் பட்டது தர்மம் என்று குறிக்கலாம்

தர்மம் என்றால் நீதி, நியாயம், சரியான வழி என்றும்  ஒரு அர்த்தம் சொல்லப் படுகிறது

சமஸ்க்ரித மூல மொழியில் தர்மம் என்றால் எது தாங்கிப் பிடிக்கிறதோ, எது ஆதாரமாய் இருக்கிறதோ, எது துணையாக இருக்கிறதோ அது தர்மம் என்று சமஸ்கிரிதம் கூறுகிறது

எது இயற்கையோ, எது இயல்போ அது தர்மம். அப்படி என்றால் இயல்பு இல்லாதது அதர்மம். இயற்கைக்கு முரணானது அதர்மம்

இன்னும் ஒரு படி மேலே போவோம்.   எது இயற்கையோ, எது இயல்போ அது தர்மம்

எது இல்லாமல் ஒன்று இருக்க முடியாதோ, அது தான் அதன் இயற்க்கை, அதன் இயல்பு. எனவே, எது இல்லாமல் ஒன்றால் இருக்க முடியாதோ, அது அதன் தர்மம்

மென்மை மலரின் இயற்கை. மென்மை இல்லாவிட்டால், மலர் இல்லை. எங்காவது கடினமான மலர் இருக்கிறதா ?

எவ்வளவு ஆழமான விஷயம்...எவ்வளவு யோசித்திருந்தால் கீதை போன்ற ஒன்றை எழுதியிருக்க முடியும்...

கீதை - 1.01 - நம்மவர்களும் பாண்டுவின் பிள்ளைகளும்

கீதை - 1.01 -  நம்மவர்களும் பாண்டுவின் பிள்ளைகளும் 


धृतराष्ट्र उवाच

धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ॥१॥

த்⁴ருதராஷ்ட்ர உவாச 

த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:| 
மாமகா​: பாண்ட³வாஸ்²சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ||1-1||

த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்; 

த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = தர்ம க்ஷேத்ரமான குருஷேத்ரத்தில்  
ஸமவேதா: = ஒன்றாகக் கூடி 
யுயுத்ஸவ: = யுத்தம்போ செய்ய வந்திருக்கும் 
மாமகா: = நம்மவர்களும்; 
பாண்ட³வா: = பாண்டவரும்; 
கிம் அகுர்வத = என்ன செய்கிறார்கள் 


திருதராஷ்டிரன் கேட்கிறான் :  சஞ்ஜயா, தர்ம க்ஷேத்ரமான குருக்ஷேத்ரத்தில்  போர் செய்ய வந்திருக்கும் நம்மவர்களும் பாண்டவர்களும் என்ன செய்கிறார்கள் 

பகவத் கீதையில், ஒரே ஒரு இடத்தில் திருதராஷ்டிரன் பேசுகிறான்

"தர்ம ஷேத்ரமான குரு ஷேத்ரத்தில் நம்மவர்களும், பாண்டுவின் பிள்ளைகளும் என்ன செய்கிறார்கள் " என்று சஞ்சயனிடம் கேட்கிறான்.

இந்த ஒரு சுலோகத்திற்கு ஒரு புத்தகமே எழுதும் அளவிற்கு உரை எழுதி இருக்கிறார்கள்.

முதலில், குருஷேத்ரம் என்பது ஒரு உருவகம். நாம் வாழும் இந்த வாழ்க்கை தான் குருஷேத்ரம். நல்லதும் , கெட்டதும் நிறைந்த இந்த வாழ்க்கை தான் குருஷேத்ரம்

நல்லதும் கெட்டதும் போராடிக்கொண்டே இருக்கிறது

தர்மம் நிலைக்கும் என்பது உண்மை. எனவே தர்ம ஷேத்ரமான குருஷேத்ரம் என்று கீதை ஆரம்பிக்கிறது

சில சமயம் நல்லது எது கெட்டது எது என்று நம் மனம் மயங்கும். ஒன்றை செய்யலாமா, கூடாதா என்று குழம்புவோம். சில சமயம் போராடத் தோன்றும், சில சமயம் போராடி என்ன அடையப் போகிறோம் என்று தோன்றும்

நாம் பாசம் செலுத்தும் குடும்பம் ஒருபுறம், கடமை மறுபுறம். குடும்பத்திற்காக கடமையை விட்டுக் கொடுக்கலாமா

இப்படி பல குழப்பங்களுக்கு நடுவில் நாம் சிக்கித் தவிக்கிறோம். எப்படி முடிவு செய்வது, எது சரி, எது தவறு என்று எப்படி அறிந்து கொள்வது ?

நாம் தான் அர்ஜுனன். அவனுடைய குழப்பம் நம்முடைய குழப்பம். காலம் காலமாய் தொடர்ந்து வரும் மயக்கம்

இத்தனைக்கும் கீதை ஒரு வழி காட்டுகிறது

திருதராஷ்டிரனுக்குத் தெரியும் , கௌரவர் படை , பாண்டவர் படையை விட மிகப் பெரியது என்று. இருந்தும் அவனுக்கு வெற்றியின் மேல் சந்தேகம்.

அறம் இல்லாத இடத்தில் அமைதி இருக்காது. சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். படை பலமும், ஆயுத பலமும் வெற்றியை நிர்ணயிப்பது அல்ல.

அப்படித்தான் நினைத்து அழிந்த அரக்கர்கள் ஏராளம்.

அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.

என்பார் அபிராமி பட்டர். 

அரணம் என்றால் கோட்டை. கோட்டை கொத்தளங்கள் , படை, ஆள், அம்பு, சேனை தங்களை காத்து விடும் என்று நினைக்கும் அருள் ஒன்றும் இல்லாத அரக்கர்கள் என்பார்.

எத்தனையோ விதமான மனிதர்கள், எத்தனையோ விதமான மன நிலைகள், காலச் சக்கரம் உருண்டோடிக்கொண்டே இருக்கிறது. இத்தனை காலம் கழித்தும் கீதை நமக்கு வழி காட்டுமா ?

பார்ப்போமே ?

http://bhagavatgita.blogspot.in/2013/04/101.html

1. பகவத் கீதை - அறிமுகம்

பகவத் கீதை - அறிமுகம் 



குருஷேத்ர போர்க் களம். பாண்டவர்கள் ஒரு புறம். கௌரவர்கள் மறு புறம். கடல் போல் படைகள் இரு புறமும். நியாயம் , அநியாயம் எந்த பக்கம் என்று உறுதியாகச் சொல்ல முடியாத ஒரு கட்டம். பிடித்ததோ, பிடிக்கவில்லையோ எல்லா அரசர்களும் ஏதோ ஒரு பக்கம் சேர்ந்து விட்டார்கள் இந்த யுத்தத்தில். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்

யுத்தம் ஆரம்பிக்கும் முன்னால், கண்ணன் அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் செய்கிறான். இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மகாபாரதத்தின் மணி மகுடமாய் விளங்குவது பகவத் கீதை

இது எழுதப்பட்ட காலம் 400 BC . கிறிஸ்த்து பிறப்பதற்கு நானூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. எழுதப்பட்டது அப்போது  என்றால், நடந்தது எப்போது ?

மகாபாரதத்தில் 100000 ஸ்லோகங்கள் உள்ளன. அதில் 700 ஸ்லோகங்கள் பகவத் கீதை. 18 அத்யாயங்கள்

கிட்டத்தட்ட    2000  ஆண்டுகள் ஓடி விட்டது. கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இன்றும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறது கீதை...கலங்கரை விளக்கம் போல்

அதில் என்ன தான் இருக்கிறது ? இன்றைய கால கட்டத்திற்கு அது உதவுமா ? நமக்கு வாழ்வில் ஒரு சிக்கல் வரும்போது கீதை நமக்கு வழி காட்டுமா ? எல்லா இனத்தவர்க்கும் அதன் வழிகாட்டுதல்கள் பொருந்துமா ?

தொடர்ந்து பார்ப்போம் ....