Thursday, June 30, 2016

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 2 - எங்கே ஞானம் ?

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 2 - எங்கே ஞானம் ?

ஞானம் என்பது புத்தகங்களிலோ , படித்த பண்டிதர்களின் சொற் பொழிவுகளிலோ இல்லை. அங்கிருந்து கல்வி வரலாம். செய்திகள் வரலாம். புதுப் புது சிந்தனைகள் வரலாம். 

அறிவு அல்லது ஞானம் என்பது உள்ளிருந்து வர வேண்டும். 

இயற்கையோடு ஒன்றும் போது , இயற்கையை உன்னிப்பாக கவனிக்கும் போது ஞானம் பிறக்கிறது. 

இதை மிக எளிதாக விளக்குகிறது கீதை. 

நாம் எங்கிருந்து வந்தோம், என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், நம்மை எது தூண்டுகிறது, எதனால் நாம் காரியங்களை செய்கிறோம், ஏன் துன்பம் வருகிறது, இந்தத் துன்பங்கள் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும், மறு பிறப்பு உண்டா ? அது எப்படி நிகழ்கிறது ? நானே மீண்டும் பிறப்பேனா ? பிறவி உண்டு என்றால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது ?

இப்படி வாழ்வின் மிக மிக முக்கியமான கேள்விகளுக்கு கீதை பதில் தருகிறது.  ஜீவாத்மா, பரமாத்மா, என்றெல்லாம் போட்டு குழப்பாமல், மிக மிக எளிமையாக, நேரடியாக பதில் தருகிறது. 


நாம் எல்லோரும் எவ்வளவோ மரங்களை பார்த்து இருக்கிறோம். மரம் பார்க்காத மனிதர் உண்டா ?

மரத்தில் இருந்து இத்தனை கேள்விகளுக்கும் விடை காணலாம் என்கிறது கீதை. 


எப்படி ?

நாம் யார் ?

ஒரு மரத்தில் எத்தனையோ கிளைகளும் இலைகளும் இருக்கின்றன. அவை மரத்தின் ஒரு பகுதி.  ஒரு இலை "நான் யார்" என்று கேட்டால் , "நீ கிளையின் ஒரு பகுதி என்று சொல்லலாம்".

கிளை என்றால் என்ன என்று கேட்டால்,

கிளை என்பது மரத்தின் ஒரு பகுதி என்று சொல்லலாம்.

மரம் என்றால் என்ன என்று கேட்டால், 

மரம் என்பது விதையில் இருந்து முளைத்து வருவது என்று என்று சொல்லலாம்.

இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்றாக நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

இதில் புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், ஒரு மரத்தில் எத்தனையோ இலைகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரு விதையில் இருந்து வந்தது என்று புரிகிறது அல்லவா ?

அது போல, நாம் எத்தனை பேர் இருந்தாலும், நாம் வந்தது ஏதோ ஒன்றில் இருந்து என்று உணர முடிகின்றது அல்லவா ? 


ஒரு இலை பழுத்து இருக்கும், ஒரு இலை தளிராக இருக்கும், ஒரு இலை உயரே இருக்கும், ஒரு இலை கீழே இருக்கும், ஊர் இலை பசுமையாக இருக்கும் , ஒரு இலை கொஞ்சம் கருத்து இருக்கும் ...இப்படி ஆயிரம் வேறு பாடுகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரு மரத்தின் அங்கம் தானே...?


நாம் காரியங்களைச் (கர்மா) செய்கிறோம் ? எது நம்மைத் தூண்டுகிறது ? எதனால் நாம் இயக்கப் படுகிறோம் ?

அதற்கும் மரம் பதில் தருகிறது....



(மேலும் வாசிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/15-2.html

)







Wednesday, June 29, 2016

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 1 - எங்கே ஞானம் ?

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 1 - எங்கே ஞானம் ?


ஞானம் எங்கே கிடைக்கும் ?

புத்தகங்களை படித்து ஞானம் பெற முடியுமா ? முடியும் என்றால் கீதை , வேதங்கள், பைபிள், குரான், போன்று எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. அதைப் படித்தவர்கள் எல்லோரும் ஞானம் பெற்று விட்டார்களா என்றால் இல்லை.

சரி, புத்தகங்கள் வேண்டாம், அறிந்த ஞானிகளை சேர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டால் ஞானம் வருமா ? வியாசர் தொடங்கி எத்தனையோ ரிஷிகளும், முனிவர்களும், பெரியவர்களும் எவ்வளவோ சொல்லி இருக்கிறார்கள். அதை நேரில் கேட்ட அனைவரும் ஞானம் அடைந்து விட்டார்களா என்றால் இல்லை.

வாசித்தும் அறிய முடியாது.

கேட்டும் பெற முடியாது என்றால் பின் எப்படித்தான் ஞானத்தைப் பெறுவது ? எங்கிருந்து பெறுவது ?

இப்படித்தான் ஞானத்தைத் தேடி கெளதம சித்தார்த்தன் அலைந்தான். பெரிய அரசைத் துறந்து, கட்டிய மனைவியைத் துறந்து, பிள்ளையைப் பிரிந்து காடு மேடெல்லாம் அலைந்தான்.

எத்தனையோ படித்தான்.

எவ்வளவோ பேரை சந்தித்தான். அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டான்.

ஞானம் வந்த பாடில்லை.

களைத்துப் போன சித்தார்த்தன், ஒரு பௌர்ணமி அன்று, ஆற்றில் குளித்து விட்டு கரை ஏறி வந்தான். ஊன் உறக்கம் இல்லாமல் உடல் எல்லாம் மெலிந்து தளர்ந்து போய்விட்டான்.

கரையில் ஏறி, ஒரு போதி மரத்தின் கீழ் அமர்ந்தான்.


சலசலக்கும் நீரோடை எதிரில்.

நிர்மலமான வானம்.

குளிர் கிரணங்களை வீசும் பௌர்ணமி நிலா.

அந்த மரத்தில் இருந்து ஒரு இலை கீழ் நோக்கி விழுந்தது.

அது காற்றில் மெல்ல அங்கும் இங்கும் ஆடி , மெல்ல சென்று தண்ணீரில் விழுந்தது.  வீழ்ந்த அந்த இலை ஆற்றின் போக்கில் மிதந்து சென்றது.

அதை பார்த்துக் கொண்டிருந்த சித்தார்தனுக்கு ஞானம் பிறந்தது.

சித்தார்த்தன், புத்தன் ஆனான்.

எத்தனையோ புத்தகங்கள் தராத ஞானத்தை

எவ்வளவு பண்டிதர்கள் தராத ஞானத்தை அந்த மரத்தின் ஒரு இலை தந்தது.

மரங்களும், இலைகளும், நீரோடைகளும் இன்றும்  இருந்து கொண்டுதான் இருக்கின்றன .

புத்தர்களைத் தான் காணவில்லை.

புத்தர்கள் புத்தகங்களுக்கும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

ஞானம் அதில்  இல்லை.

அதை மூடி வைத்து விட்டு வாருங்கள்.

ஞானம் எங்கே என்று கீதை சொல்கிறது, . அங்கே சென்று தேடுவோம்.

(மேலும் படிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/15-1.html

)











Sunday, June 19, 2016

கீதை - 15.20 - பாவம் அற்ற வாழ்க்கை

கீதை - 15.20 - பாவம் அற்ற வாழ்க்கை 


इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ ।
एतद्‌बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥१५- २०॥

இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமித முக்தம் மயாநக |
ஏதத் புத் த்  வா புத் தி மாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்  ச பாரத || 15- 20||


இதி = இதுவே

குஹ்யதமம் = இரகசிய ஞானம். மறை பொருள்

ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்

இதம் = இது

யுக்தம்மு =  சொல்லப்பட்டது

மயா = என்னால்

அநக = பாவம் இல்லாதவனே


ஏதத் = இதுவே

புத்த்வா = அறிந்தவன்

புத்திமான்  = அறிவுள்ளவன்

ஸியாத் = அவனால்

க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத்தக்கது செய்வோன்

ச = மேலும்

பாரத =  பாரத குலத்தவனே

குற்றம் அற்றவனே, இவாறாக இரகசியமான  இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரத குலத்தவனே ,  இதை  உணர்ந்தவன்  புத்திமானாவான். அவனே செய்யத் தகுந்ததை செய்வான். 

இந்த அத்த்யாயத்தின் கடைசி ஸ்லோகம்.

புருஷோத்தமன் என்பதை அறிந்து கொண்டவன் என்ன செய்வான் ? இதை அறிந்து கொள்வதால் என்ன பயன் ? இதை ஏன் வேலை மெனக்கெட்டு  அறிந்து கொள்ள வேண்டும் ?

இரண்டு நன்மைகளை சொல்கிறது கீதை. சொல்லப் போனால் இரண்டும் ஒன்றுதான்.

அது என்ன இரண்டு நன்மைகள் ? பலன்கள் ?

ஒன்று, குற்றம் அல்லது பாவம் மறையும். பாவம் என்பது என்ன ? செய்யக் கூடாததை செய்து விட்டு அதன் விளைவுகளால் துன்பப்படுவது. தவறான ஒன்றை செய்து விட்டு அதன் விளைவுகளால் வருந்துவது.

இதை எப்படி  மாற்றுவது ? பாவமும் தவறும் செய்யாமல் இருப்பது எப்படி ?

அதைத்தான் இரண்டாவது பலன் என்று சொல்கிறது கீதை..."இதை அறிந்தவன்  செய்யத் தக்கதை செய்வான் "

எது செய்யக் கூடியதோ , அதை மட்டும் தான் செய்ய வேண்டும். செய்யக் கூடாததை செய்யக் கூடாது.

செய்ய முடியும் என்பதற்காக எல்லாவற்றையும் செய்து விடக் கூடாது. கொலை செய்ய முடியும் என்பதற்காக செய்து விடக் கூடாது.

எது செய்யத் தகுந்ததோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.

இந்த அத்தயாத்தில் சொல்லப் பட்டதை அறிந்தவன், எது செய்யக் கூடியது , எது செய்யக் கூடாதது என்று அறிவான் என்கிறது கீதை.

பாவம் இல்லாத, குற்றம் ஏதும் இல்லாத வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது கீதை.

மீண்டும் ஒரு முறை இந்த அத்தியாயத்தை படித்துப் பாருங்கள்.

அந்த வழி உங்களுக்குத் புலப்படலாம்.


புலப்படும் என்ற நம்பிக்கையோடு...

(மேலும் படிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/1520.html

)







Saturday, June 18, 2016

கீதை - 15.19 - அனைத்திலும் அவனே

கீதை - 15.19 - அனைத்திலும் அவனே 



यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ॥१५- १९॥

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் |
ஸ ஸர்வவித்  பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத || 15- 19||

யோ = எவன் ஒருவன்

மாம் = என்னை

ஏவம்மே = அப்படியாக

அஸம்மூடோ = குழப்பம் இன்றி, தடுமாற்றம் இன்றி

ஜாநாதி = அறிகிறானோ

புருஷோத்தமம் = புருஷோத்தமன் என்று

ஸ = மேலும்

ஸர்வவித் = அனைத்தும் அறிந்தவன்

பஜதி = வணங்குகிறான்

மாம் = என்னை

ஸர்வ = அனைத்து

பாவேந =நிலைகளிலும்

பாரத = பாரத வம்சத்தில் பிறந்தவனே

குழப்பமும் தடுமாற்றமும் இன்றி , எவன் நானே புருஷோத்தமன் என்று அறிகிறானோ, அவனே அனைத்தும் அறிந்தவன். அவன் என்னை அனைத்து வடிவிலும், நிலையிலும் வணங்குகிறான்.


மிக முக்கியமான, ஆழ்ந்த பொருள் நிறைந்த ஸ்லோகம்.

"குழப்பமும் தடுமாற்றமும் இன்றி"


இறைவன் என்றால் யார் அல்லது என்ன ? இறைவன் ஆணா , பெண்ணா, பொருளா ஒன்றும் தெரியாது. ஆளாளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்லிக்  கொண்டு இருக்கிறார்கள். சிலர் இல்லை என்கிறார்கள்,  சிலர் உண்டு என்கிறார்கள், சிலர் சந்தேகமாக இருக்கிறது  என்கிறார்கள். உண்டு என்று சொல்பவர்களுக்குள் ஆயிரம்  கருத்து வேறுபாடு. ஆளுக்கு ஒரு கடவுள்  இருக்கிறார். இதில் இந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சை வேறு.

குழப்பமும் தடுமாற்றமும் ஏன் வருகிறது ?

நம்மை நாம் ஏதோ ஒன்றோடு இணைத்துக் கொள்வதால், சேர்த்துக் கொள்வதால், ஒன்று படுத்திக் கொள்வதால் இவை வருகின்றன.

என் மதம், என்  சமயம்,என் கோட்பாடுகள், என் கடவுள், என் சித்தாந்தம் என்று சிலவற்றோடு நாம் நம்மை அடையாள படுத்திக் கொள்கிறோம். அதனால, மற்றவைகளில் இருந்து வேறு பட்டுக் போகிறோம்.

வேற்று மதம், வேற்றுக் கடவுள், வேற்றுக் கொள்கைகள், வேற்று சமயம் என்று நம்மை பிரித்து வைக்கிறோம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட உண்மைகள் இருக்கும் போது எது உண்மையான உண்மை என்பதில் ஒரு தடுமாற்றம் வருகிறது.

ஒரு வேளை மற்றது சரியாக இருக்குமோ ? நம் கொள்கைகள் தவறாக இருக்குமோ என்ற தடுமாற்றம் வருகிறது.

இந்த தடுமாற்றத்தில் இருந்து விடுபட இரண்டு வழிகள் இருக்கிறது.

ஒன்று அனைத்தையும் அறிந்து கொண்டு அதன் மூலம் பிரிவினைகளை தாண்டிப் போவது.

இன்னொன்று வேறு எதையும் அறிந்து கொள்ள அல்லது புரிந்து கொள்ள மறுப்பது.

நான் கொண்ட கொள்கையே சரி என்று சாதிப்பது.

வேறு யார் சொல்வதையும் கேட்பது கிடையாது. வேறு புத்தகங்களை படிப்பது கிடையாது. கிணற்று தவளையாக இருந்து விடுவது.

உண்மை கடல் போலக் கிடக்க , தான் வாழும் கிணறுதான் உலகில் மிகப் பெரிய கடல் என்று அறியும் தவளை போல் இருப்பது.

கீதை முதலாவது வழியைச் சொல்கிறது.

குழப்பமும் தடுமாற்றமும் இன்றி எவன் தன்னைத் தானே அறிகிறானோ, அவனே அனைத்தும் அறிந்தவன்.

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பவன் கூட ஒரு குழப்பமும் இன்றி இருக்கிறான். அதனால் அவன் அனைத்தும் அறிந்தவன் என்று கொள்ள முடியுமா ?

 குழப்பம் இல்லாதவன் யார், அனைத்தும் அறிந்தவன் யார் என்று சொல்கிறது கீதை.


அவன் என்னை அனைத்து வடிவிலும், நிலையிலும் வணங்குகிறான்.

எவன் ஒருவன் இறைவனை அனைத்து வடிவிலும் நிலையிலும் கண்டு வணங்குகிறானோ அவனே   குழப்பம் இல்லாதவன்.

இந்த வடிவம்
இந்த பெயர்
இந்த இடம்
இந்த குணம்

என்று இல்லாமல், எல்லா வடிவிலும், எல்லா நிலையிலும் இறைவனைக்  காண்பவனே அனைத்தும் அறிந்தவன். அவனே குழப்பம் இல்லாதவன்.


கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும்.
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்

என்பான் பாரதி.

அனைத்திலும் இறைவன். குப்பையிலும் மலத்திலும் கூட இறைவன் தான்.

கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம்

வேற்றுமைகளை குறையுங்கள். எனது மதம், எனது கடவுள் என்ற பற்றை விடுங்கள். பிரபஞ்ச சக்தியை ஒரு பாட்டிலுக்குள் அடைக்காதீர்கள். எங்கும் நிறைந்த சக்தியை உணருங்கள்.

நல்லதிலும், தீயதிலும் கூட அதே சக்திதான்.

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவாய்.


என்றான் பாரதி. உங்களுக்கு தீமை செய்ய வரும் புலியும் பராசக்திதான். வேறுபாடுகள் அற்ற நிலையை அடைய முயற்சி செய்யுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக உங்களை இணைப்புகளை , தொடர்புகளை, பற்றுகளை விட்டு வெளியே வாருங்கள். 

அந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு கூறாக , அதன் ஒரு பகுதியாக நீங்கள் உணர்வீர்கள்.

வாழ்த்துக்கள் 

(மேலும் வாசிக்க 

http://bhagavatgita.blogspot.in/2016/06/1519.html
)










Tuesday, June 14, 2016

கீதை - 15.18 - புருஷோத்தமன் என்பது யார் ?

கீதை - 15.18 - புருஷோத்தமன் என்பது யார் ?



यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।
अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ॥१५- १८॥

யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராத³பி சோத்தம: |
அதோऽஸ்மி லோகே வேதே³ ச ப்ரதி²த: புருஷோத்தம: || 15- 18||

யஸ்மாத் = அதனால்

க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய

அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்

அஹம் = நான்

அக்ஷராத = அழியாத

அபி = இப்போது

ச =மேலும்

உத்தம:= சிறந்த , உயர்ந்த

அதோ = அதிலிருந்து

அஸ்மி = நான்

லோகே = உலகில்

வேதே = வேதங்களில்

ச = மேலும்

ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட

புருஷோத்தம: = புருஷோத்தமன்



நான் மாற்றத்தையும், மாறாதவற்றையும் கடந்து நிற்பதால், இந்த உலகில், வேதங்களில் நான் புருஷோத்தமன் என்று கூறப் படுகிறேன். 

இது முந்தைய ஸ்லோகத்தின் தொடர்ச்சி. 


நான் என்பது மற்றவற்றைக் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது என்று பார்த்தோம். 

பிள்ளையை வைத்து தகப்பன் என்று சொல்கிறோம். 

பிள்ளை இல்லை என்றால் தகப்பன் என்பது இல்லை. 

மனைவி இல்லை என்றால், கணவன் என்பது இல்லை.

உடன் பிறப்பு இல்லை என்றால், சகோதரன் என்பது இல்லை.

இப்படி வெளி உலகைக் கொண்டு நான் யார் என்று தீர்மானிக்கிறேன்.

வெளி உலகம் தவிர்த்து , நான் யார் ?

எனக்கு வெளியே உள்ள ஒவ்வொன்றின் மூலமும் நான் நிர்ணயிக்கப்படுகிறேன் என்று தெரிகிறது. 

வெளி உலக உறவைத் தவிர்த்து, நான் யாரோ அதுவே உத்தம புருஷன்.

நான் தகப்பன் இல்லை, தாய் இல்லை, சகோதரன் இல்லை, ஊழியன் இல்லை, இந்து இல்லை, இந்தியன் இல்லை...பின் நான் யார் ?

இந்த வேதாந்த கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். 

அதை அறிவதால் நமக்கு என்ன பயன் ? அதை அறிந்து என்ன செய்யப் போகிறோம் ?

நான் வேலைக்குப் போகிறேன். போகிற இடத்தில் சில நாள் பாராட்டும் கிடைக்கும், சில நாள் வசவும் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் போது மகிழ்கிறேன். வசவு கிடைக்கும் போது நான் கவலைப் படுகிறேன்.

இந்த இன்ப துன்பத்திற்கு காரணம் நான் ஒரு ஊழியன், வேலை ஆள் என்று நினைத்துக் கொள்வதால். நான் என்பது வேலை ஆள் இல்லை என்று அறியும் போது , இந்த மான அவமானங்கள் எனக்கு இல்லை என்றும் புரியும். 

தகப்பனாக, தாயாக, சகோதரன் , சகோதரியாக நமக்கு நாமே பல   பொறுப்புகளை  ஏற்றுக் கொள்கிறோம். அவற்றினால் துன்பப் படுகிறோம். 

அதற்காக பொறுப்பில்லாமல் இருக்கச் சொல்லவில்லை கீதை. ...பொறுப்புகளும், கடமைகளும் "எனக்கு " இல்லை. நான் என்பது இவற்றை எல்லாம் கடந்தவன் என்ற ஞானம் பிறக்க வேண்டும். 

பிறக்கும். 

(மேலும் படிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/1518.html

)








Sunday, June 12, 2016

கீதை - 15.17 - பரமாத்மா யார் ?

கீதை - 15.17 - பரமாத்மா யார் ?


उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः ।
यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः ॥१५- १७॥

உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத: |
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: || 15- 17||

உத்தம: = உயர்ந்த, சிறந்த

புருஷஸ் = புருஷன்

து = மேலும், ஆனால்

அந்ய: = வேறான, மற்ற

பரமாத்மா = பரமாத்மா

இதி = இதுவே

உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
 |
யோ = அவன்

லோக = உலகங்களில்

த்ரய = மூன்று

அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்

பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ

அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத

ஈஸ்வர: = ஈஸ்வரன்

இவற்றில் இருந்து வேறு பட்டவன் உத்தம புருஷன். மூன்று உலகங்களிலும் அவனே நிரந்தரமானவன், உயர்ந்தவன், பரமாத்மா.


ஒண்ணும் புரியல இல்ல. தலையும் புரியல, காலும் புரியல.

கொஞ்சம் கீழே இறங்கி வந்து யோசிப்போம். 

உங்களை, நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள் ?

இன்னாருடைய பிள்ளை/பொண்ணு, இன்னாருக்கு கணவன்/மனைவி. இந்த பிள்ளைகளுக்கு தகப்பன்/தாய். இன்னாருக்கு சகோதரன்/சகோதரி. இந்த நிறுவனத்தில் , இந்த பொறுப்பில் இருக்கிறேன், அல்லது இந்த வீட்டை பராமரிக்கிறேன் என்று சொல்லுவீர்கள் அல்லவா.

இவை அனைத்திலும், உங்களை வேறொன்றின் மூலமாகத்தான் நீங்கள்  அடையாளம் காட்ட வேண்டி இருக்கிறது. 

பிள்ளைகளை வைத்து தாய் அல்லது தகப்பன் என்று சொல்லுகிறீர்கள்.

அந்த பிள்ளைகள் வருவதற்கு முன்னால் நீங்கள் யாராக இருந்தீர்கள் ? 

தாய் அல்லது தந்தை இல்லாத நீங்களும் இருந்தீர்கள் தானே ?

உங்கள் சகோதரனோ, சகோதரியோ வருவதற்கு முன் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் ?

வேலையில் சேர்வதற்கு முன் நீங்கள் , யாராக இருந்தீர்கள் ?

அதாவது, வெளி ஒன்றின் தொடர்பு இல்லாமால் உங்களை நீங்கள் யார் என்று சொல்ல முடியுமா ?

இந்தியன் என்றால் இந்தியாவில் பிறந்தவன் என்று பொருள். இந்தியா என்ற நாட்டை வைத்து  உங்களை நீங்கள் அடையாளம் காண்கிறீர்கள்.

இந்து/முஸ்லிம்/கிறிஸ்துவன் என்றால் ஒரு மதத்தைக் கொண்டு உங்களை  யார் என்று சொல்கிறீர்கள்.

இவை எதுவும் இல்லை என்றால், நீங்கள் யார் ?

ஒரு நிமிடம் வாசிப்பதை நிறுத்தி விட்டு யோசித்துப் பாருங்கள். 

வெளி உலகம் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றைக் கொண்டு நீங்கள் உங்களை யார் என்று தீர்மானித்தால், நீங்களும் மாறிக் கொண்டேதான் இருப்பீர்கள். 

வெளி உலகைத் தவிர்த்து, நீங்கள் யார் என்று சிந்தித்துப் பாருங்கள். 

க்ஷர மற்றும் அக்ஷர என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறியதின் அர்த்தம் விளங்கும். மாறுவது, மாறாதது. 

உலகம் மாறும். உலகை வைத்து நீங்கள் உங்களை அடையாளம் கண்டால், அதுவும் மாறும். 

இதில் மாறாதது எது ?

அதுவே உத்தம புருஷன் அல்லது பரமாத்மா.

பெயர்களை விட்டு விடுவோம். பரமாத்மா என்றால் உடனே ஜீவாத்மா யார் என்ற கேள்வி வரும். அப்புறம், இரண்டு ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கேள்வி வரும். முடிவில்லா தர்க்கம் தொடங்கும்.

எனவே பெயரை விட்டு விடுவோம்.

இந்த வெளி உலகைத் தவிர்த்த நான் யார் ?

தாயும் இல்லை, தகப்பனும் இல்லை, சகோதர சகோதரியும் இல்லை, ஊரில்லை, வேலை இல்லை , மொழி இல்லை...இந்த கூறுகளைத் தவிர்த்து, நான் யார் ?

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

பிள்ளை அப்பா என்கிறான், அப்பா மகனே என்கிறார், மனைவி "என்னங்க" என்கிறாள்,  தாத்தா , பேரா என்று அழைக்கிறார், பேரன் என்னை தாத்தா என்று அழைக்கிறான், தங்கை என்னை அண்ணா என்று அழைக்கிறாள்...

நான் யார் ?

எல்லாமும் நான் தான்.  ஆயிரம் திருநாமம்.

இவர்கள் யாரும் இல்லாவிட்டாலும் நான் இருப்பேன். 


சிந்திக்க வேண்டிய விஷயம் தானே ?

சரி, சிந்தியுங்கள்.

(மேலும் படிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/1517.html

)




Saturday, June 11, 2016

கீதை - 15.6 - மாறுவதும், மாறாததும்

கீதை - 15.6 - மாறுவதும், மாறாததும் 


द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च ।
क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ॥१५- १६॥

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் சாக்ஷர ஏவ ச |
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ²ऽக்ஷர உச்யதே || 15- 16||


த்வ = இரண்டு

இமௌ = அவைகள்

புருஷௌ = புர்ஷர்கள்

லோகே = உலகில்

க்ஷரஸ் = அழியக் கூடியது

ச = மேலும்

அக்ஷர = அழியாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

க்ஷர: = அழியக் கூடியது

ஸர்வாணி = அனைத்தும்

பூதாநி = உயிர்களிலும்

கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்

அக்ஷர = அழிவற்றது

உச்யதே = சொல்லப் படுகிறது


உலகம் அழியக் கூடியது மற்றும் அழிவில்லாதது என்ற இரண்டு புருஷர்களால் ஆனது. அழியக்கூடியவற்றில் இருந்து விடுதலை பெற்றவனே  அழிவற்றவன் என்று சொல்லப்  படுகிறான்.



நம்முடைய பழைய புகைப்படத்தை பார்த்தால், "அட, அது நானா " என்று தோன்றும்.  இடைப்பட்ட காலத்தில் நிறைய மாறி இருப்போம். முடி நரைத்து இருக்கும். தோல் கொஞ்சம் மாறி இருக்கும். எடை கூடி இருக்கலாம். உயரம் கூடி இருக்கலாம். இப்போது இருக்கும்  உருவத்திற்கும் அந்த புகைப் படத்தில் இருக்கும்  உருவத்திற்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. இருந்தாலும் இரண்டிலும்  இருப்பது ஒரே ஆள் தான். அது உங்களுக்குத் தெரியும். உடல் மாறி விட்டது, அறிவும், நினைவுகளும் மாறி விட்டன. இருந்தும் புகைப் படத்தில் உள்ள நானும், இப்போது இருக்கும் நானும் ஒன்றுதான்.

மாறாத அந்த ஒன்று எது ?

உடல் மாறும்.

ஞாபகங்கள் மாறும்.

உறவுகள் மற்றும்.

அறிவின் அளவு மாறும்.

நல்லது கெட்டது என்று பிரித்து அறியும் அளவு கோல்கள் மாறும்.

இத்தனை மாற்றங்களுக்கு இடையிலும், மாறாத ஒன்று இருக்கிறது அல்லவா ?

அது என்ன ?

சின்ன வயது புகைப் படத்தை வைத்துக் கொண்டு, அது தான் நான், இப்போது இருக்கும் நான் , நான் இல்லை என்று யாராவது சொல்வோமா ? மாட்டோம் அல்லவா ? அல்லது, இப்போது இருக்கும் நான் தான் நிரந்தரமான நான், இனிமேல் மாறவே மாட்டேன் என்று சொல்லுவோமா ? முடியாது அல்லவா.

மாற்றம் வரும். மாறும். ஆனால், அந்த மாற்றத்திற்கு கீழே மாறாத ஒன்று இருக்கிறது.

அதன் பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

ஆன்மா, உயிர், ஜீவாத்மா, பரமாத்மா என்று ஏதோ ஒரு பெயர்.

அந்த மாறாத ஒன்றை எப்படி அறிவது ? மாறாத ஒன்று இருக்கிற மாதிரி தெரிகிறது. ஆனால், சரியாக பிடிபடமாட்டேன் என்கிறது.


மாறும் உடல் நான் இல்லை என்றால் , பின் நான் யார் ?

எனக்குள் மாறாத ஒன்று உண்டு என்றால், அது மற்றவர்களுக்கு உள்ளேயும் இருக்கும் அல்லவா ?

எனக்குள் இருப்பதும், மற்றவர்களுக்குள் இருப்பதும் ஒன்றா அல்லது வேறு வேறானதா ?

அதை அறிய முடியுமா ? நிரந்தரமான, சாஸ்வதமான, மாற்றம் இல்லாத  அந்த ஒன்றை நாம் அறிய முடியுமா ?

முடியும் என்றால் எப்படி ?

கீதை வழி சொல்கிறது.

ஒன்றே ஒன்று தான் வேண்டும்....

மாறும் அவற்றில் இருந்து விடுதலைப் அடைந்தவன் அதை அறிய முடியும்.

மாறும் அவை நான் இல்லை என்று அறிந்தவன் அதை உணர முடியும்.

நம் சிக்கல் என்ன என்றால், மாறுகின்றவற்றை நிரந்தரமானவை என்று நினைக்கிறோம்.

இதைத்தான் வள்ளுவரும்

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

நிலை இல்லாதவற்றை , நிலையானவை என்று அறிவது அறிவில்லாதவர் செய்யும் செயல் என்கிறார் வள்ளுவர்.

மாறுகின்றவற்றின் மேல் உள்ள பற்றை விட்டால் மாறாதது எது என்று தெரியும்.

மாறுபவை - செல்வம், அழகு, அறிவு,  தோற்றம்,உறவு, நினைவுகள்,...என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை விட்டு விட்டால் என்ன இருக்கும் ?

சிந்தியுங்கள்.

புலப்படலாம்.

புலப்படும்.

(மேலும் படிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/156.html

)

Tuesday, June 7, 2016

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 3

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 3


सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |

வேதை³ஸ் ச ஸர்வைரஹமேவ வேத் யோ
வேதா ந்தக்ருத் வேத விதே வ சாஹம்

ஸர்வஸ்ய = அனைத்திலும்

ச = மேலும்

அஹம் = நான்

ஹ்ருதி = இதயமாக

ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்

மத்த: = என்னில் இருந்து

ஸ்ம்ருதிர் = வேதங்கள்

ஜ்ஞாநம் = ஞானம்

அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது

ச = மேலும்

வேதை³ஸ் = வேதங்களும்

ச = மேலும்

ஸர்வை = அனைத்திலும்

அஹம் = நான்

ஏவ = நிச்சயமாக

வேத்யோ  = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள


வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்

வேத விதே  = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அஹம்  = நான்



அனைவரின் இதயத்திலும் (உள்ளேயும்) நான் இருக்கிறேன்.

நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன.

வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தை அறிபவன்  நான்.

தனக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உண்டென்று பெரும்பாலான மனிதர்கள் நம்புகிறார்கள். அந்த சக்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேதங்களையும், வேறு பல புத்தகங்களையும் நாடுகிறார்கள். 

புத்தகங்களைப் படித்து அந்த சக்தியை அறிந்து கொள்ள முடியுமா ? வேறு யாராவது சொல்லக்  கேட்டு அதை அறிந்து கொள்ள முடியுமா ?

சரி, அறிந்து கொள்ள முடியும் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்.

நாம் படிக்கும் ஒரு புத்தகத்தில், நாம் இது வரை நம்பி வந்த சில விஷயங்களுக்கு எதிராக எழுதி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம் ? நாம் இதுவரை சரி என்று ஏற்றுகொண்டதை தவறு என்று ஒத்த்டுக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்வோமா ? அல்லது, அந்த புத்தகத்தில் உள்ளது தவறு என்று அதை ஒதுக்கி விடுவோமா ?

உதாரணமாக, அத்வைத தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் துவைத தத்துவ நூலைப் படித்தால் என்ன ஆகும் ? "ஓ துவைதம் சிறந்தது போல இருக்கிறது. இத்தனை நாள் மடையனாக இருந்து விட்டேன்...நாளை முதல் துவைதத்தை பின் பற்றப் போகிறேன் " என்று தன்னை தானே மாற்றிக் கொள்வாரா அல்லது "அதெல்லாம் சரி இல்லை, அத்வைதம் தான் சிறந்தது " என்று தான் கொண்ட   பழைய நம்பிக்கையையே தொடர்வாரா ?

பின்னதர்கான சாத்திய கூறுகளே அதிகம்.

எந்த புத்தகத்தைப் படித்தாலும், யார் சொன்னதை கேட்டாலும், கடைசியில் நமக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் நாம் கொள்வோம்.

இதைத்தான் கீதை சொல்கிறது....


வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும். கடைசியில், நான் எது சரி என்று நினைக்கிறேனோ அதையே வேதமும் சொல்வதாக நான் நினைப்பேன். 



வேதத்தை உருவாகியவன் நான்.

உண்மை எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். கடைசியில், அதை பிறருக்கு எடுத்துச் சொல்லும் போது நான் என்ன நினைக்கிறேனோ, என் மனதில்  என்ன எழுகிறதோ, எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் சொல்லுவேன்.  

அதைத்தான கீதை சொல்கிறது....

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தையோ, வேறு எந்த உண்மையையோ எழுதுபவனே தீர்மானிக்கிறான். எழுதுபவனைத் தவிர்த்து ஒரு சாஸ்வதமான உண்மை கிடையாது. யார் யாருக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி எழுதுகிறார்கள். 

ஏசுவுக்கு தோன்றியதை அவர் சொன்னார். நபிகளுக்கு தோன்றியதை அவர் சொன்னார்.  புத்தருக்கு தோன்றியதை அவர் சொன்னார்.

எல்லாம் உண்மைதான். ஆனாலும் எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனைப் பொறுத்து அது மாறுகிறது. 

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், உண்மை என்பது தனி மனிதன்  சம்பந்தப்பட்டது மாத்திரமே. ஒருவரின் உண்மையை இன்னொருவர் கேட்டு பெற்றுக் கொள்ள முடியாது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அது உங்களின்  உண்மையாக இருக்காது. கடன் வாங்கிய ஞானமாகத்தான் இருக்கும். பக்தியோ, இறை அனுபவமோ, உண்மையோ எதுவானாலும் அது உங்களின் தனிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லுவது அவர்களின் அனுபவம். அது உங்களுக்கு பயன் தராது. 

நீங்களே தேடுங்கள். 


வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தை அறிபவன்  நான்.


வேதத்தை உருவாக்கியவனும், அதில் சொல்லப் பட்டதும், அதை அறிபவனும் எல்லாமே நீங்கள் தான். 

யாரோ எழுதியதை, சொன்னதை வைத்துக் கொண்டு இதுதான் என் வேதம் என்று   கொண்டாடாதீர்கள். 

உங்கள் வேதத்தை நீங்களே எழுதுங்கள். அது உங்கள் அனுபவமாக இருக்கட்டும். 

இரவல் ஞானம் பயன் படாது. 

உங்கள் பயணத்தை நீங்கள் தொடங்குங்கள்.

அது, இது வரை யாரும் செல்லாத வழியாக இருக்கும். 

உங்கள் உண்மை உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. 

சீக்கிரம் சென்று அதைக் காண என் வாழ்த்துக்கள்.

(மேலும் படிக்க 

http://bhagavatgita.blogspot.in/2016/06/1515-3.html

)