Tuesday, June 7, 2016

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 3

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 3


सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |

வேதை³ஸ் ச ஸர்வைரஹமேவ வேத் யோ
வேதா ந்தக்ருத் வேத விதே வ சாஹம்

ஸர்வஸ்ய = அனைத்திலும்

ச = மேலும்

அஹம் = நான்

ஹ்ருதி = இதயமாக

ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்

மத்த: = என்னில் இருந்து

ஸ்ம்ருதிர் = வேதங்கள்

ஜ்ஞாநம் = ஞானம்

அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது

ச = மேலும்

வேதை³ஸ் = வேதங்களும்

ச = மேலும்

ஸர்வை = அனைத்திலும்

அஹம் = நான்

ஏவ = நிச்சயமாக

வேத்யோ  = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள


வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்

வேத விதே  = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அஹம்  = நான்



அனைவரின் இதயத்திலும் (உள்ளேயும்) நான் இருக்கிறேன்.

நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன.

வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தை அறிபவன்  நான்.

தனக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உண்டென்று பெரும்பாலான மனிதர்கள் நம்புகிறார்கள். அந்த சக்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேதங்களையும், வேறு பல புத்தகங்களையும் நாடுகிறார்கள். 

புத்தகங்களைப் படித்து அந்த சக்தியை அறிந்து கொள்ள முடியுமா ? வேறு யாராவது சொல்லக்  கேட்டு அதை அறிந்து கொள்ள முடியுமா ?

சரி, அறிந்து கொள்ள முடியும் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்.

நாம் படிக்கும் ஒரு புத்தகத்தில், நாம் இது வரை நம்பி வந்த சில விஷயங்களுக்கு எதிராக எழுதி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம் ? நாம் இதுவரை சரி என்று ஏற்றுகொண்டதை தவறு என்று ஒத்த்டுக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்வோமா ? அல்லது, அந்த புத்தகத்தில் உள்ளது தவறு என்று அதை ஒதுக்கி விடுவோமா ?

உதாரணமாக, அத்வைத தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் துவைத தத்துவ நூலைப் படித்தால் என்ன ஆகும் ? "ஓ துவைதம் சிறந்தது போல இருக்கிறது. இத்தனை நாள் மடையனாக இருந்து விட்டேன்...நாளை முதல் துவைதத்தை பின் பற்றப் போகிறேன் " என்று தன்னை தானே மாற்றிக் கொள்வாரா அல்லது "அதெல்லாம் சரி இல்லை, அத்வைதம் தான் சிறந்தது " என்று தான் கொண்ட   பழைய நம்பிக்கையையே தொடர்வாரா ?

பின்னதர்கான சாத்திய கூறுகளே அதிகம்.

எந்த புத்தகத்தைப் படித்தாலும், யார் சொன்னதை கேட்டாலும், கடைசியில் நமக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் நாம் கொள்வோம்.

இதைத்தான் கீதை சொல்கிறது....


வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும். கடைசியில், நான் எது சரி என்று நினைக்கிறேனோ அதையே வேதமும் சொல்வதாக நான் நினைப்பேன். 



வேதத்தை உருவாகியவன் நான்.

உண்மை எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். கடைசியில், அதை பிறருக்கு எடுத்துச் சொல்லும் போது நான் என்ன நினைக்கிறேனோ, என் மனதில்  என்ன எழுகிறதோ, எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் சொல்லுவேன்.  

அதைத்தான கீதை சொல்கிறது....

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தையோ, வேறு எந்த உண்மையையோ எழுதுபவனே தீர்மானிக்கிறான். எழுதுபவனைத் தவிர்த்து ஒரு சாஸ்வதமான உண்மை கிடையாது. யார் யாருக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி எழுதுகிறார்கள். 

ஏசுவுக்கு தோன்றியதை அவர் சொன்னார். நபிகளுக்கு தோன்றியதை அவர் சொன்னார்.  புத்தருக்கு தோன்றியதை அவர் சொன்னார்.

எல்லாம் உண்மைதான். ஆனாலும் எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனைப் பொறுத்து அது மாறுகிறது. 

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், உண்மை என்பது தனி மனிதன்  சம்பந்தப்பட்டது மாத்திரமே. ஒருவரின் உண்மையை இன்னொருவர் கேட்டு பெற்றுக் கொள்ள முடியாது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அது உங்களின்  உண்மையாக இருக்காது. கடன் வாங்கிய ஞானமாகத்தான் இருக்கும். பக்தியோ, இறை அனுபவமோ, உண்மையோ எதுவானாலும் அது உங்களின் தனிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லுவது அவர்களின் அனுபவம். அது உங்களுக்கு பயன் தராது. 

நீங்களே தேடுங்கள். 


வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தை அறிபவன்  நான்.


வேதத்தை உருவாக்கியவனும், அதில் சொல்லப் பட்டதும், அதை அறிபவனும் எல்லாமே நீங்கள் தான். 

யாரோ எழுதியதை, சொன்னதை வைத்துக் கொண்டு இதுதான் என் வேதம் என்று   கொண்டாடாதீர்கள். 

உங்கள் வேதத்தை நீங்களே எழுதுங்கள். அது உங்கள் அனுபவமாக இருக்கட்டும். 

இரவல் ஞானம் பயன் படாது. 

உங்கள் பயணத்தை நீங்கள் தொடங்குங்கள்.

அது, இது வரை யாரும் செல்லாத வழியாக இருக்கும். 

உங்கள் உண்மை உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. 

சீக்கிரம் சென்று அதைக் காண என் வாழ்த்துக்கள்.

(மேலும் படிக்க 

http://bhagavatgita.blogspot.in/2016/06/1515-3.html

)



No comments:

Post a Comment