Sunday, June 30, 2019

பகவத் கீதை - 2.46 - குளமும் வெள்ளமும்

பகவத் கீதை - 2.46 - குளமும் வெள்ளமும் 



यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके।
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः॥४६॥

யாவாநர்த² உத³பாநே ஸர்வத: ஸம்ப்லுதோத³கே|
தாவாந்ஸர்வேஷு வேதே³ஷு ப்³ராஹ்மணஸ்ய விஜாநத: ||2-46||

யாவாந் = அதுவரை, அந்த அளவு

அர்த = பயன், உபயோகம், தேவை

 உத³பாநே = குளம், குட்டை, ஏரி

ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்

ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது


தாவாந் = அந்த அளவு

ஸர்வேஷு  = அனைத்து

வேதே³ஷு = வேதங்களில்

ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு

விஜாநத: = அறிந்தவனுக்கு (வி ஞான த் )

எங்கும் நீர் நிறைந்து வெள்ளமாக இருக்கும் போது, ஒரு குளத்திலோ, ஏரியிலோ உள்ள நீர் எவ்வாறோ அது போல தன்னை அறிந்த பிராமணனுக்கு வேதம். 

அருமையான உதாரணம், ஆழ்ந்த கருத்து.

நமக்கு தண்ணீர் வேண்டும் போது, கிணற்றிலோ, குளத்திலோ, ஏரியிலோ இருந்து நாம் நீரை பெற்றுக் கொள்கிறோம். நம் வீட்டுக்கு பெரும் பாலும் அது வந்து விடுகிறது. எனவே நாம் அது எங்கிருந்து வருகிறது என்று பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை.

ஆனால், ஊரே வெள்ளக் காடாக ஆகிவிட்டால், அந்த குளம், ஏரி , குட்டை, கிணறு என்பதெல்லாம் அர்த்தம் இல்லாமல் போய் விடும் அல்லவா? எல்லாம் நீர் தானே. இதில் குளம், கிணறு என்ற பாகுபாடு எங்கே வந்தது?

அது போல,

நமக்கு குறிப்பிட்ட தேவை இருக்கும் போது வேதத்தை நாடுகிறோம். அதில் சொல்லியபடி செய்து நமக்கு வேண்டியதை அடைய முயற்சி செய்கிறோம்.

பணமோ, பதவியோ, சொர்கமோ, கைலாயமோ, வைகுண்டமோ ஏதோ ஒன்றை  அடைய வேண்டும் என்றால்,  அது பற்றி வேதம் என்ன சொல்லி இருக்கிறது என்று  அறிந்து அதன் படி நடக்க முயற்சி செய்வோம் .

சந்தியாவந்தனம் செய், யாகம் செய், கோவிலுக்குப் போ, தானம் செய்,  பூஜை செய்,  இந்த மந்திரங்களை இத்தனை முறை சொல்,  இன்னின்ன வழி முறைகளை  கடைபிடி என்று வேதம் சொல்லும் வழி முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

எது வரை என்றால் , ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும் வரை , அதற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொண்டேதான் இருக்க வேண்டும்.

எப்போது அந்த தேவை நிற்கிறதோ, எப்போது ஒருவன் தன்னைத் தான் அறிகிறானோ, அப்போது வேதங்களின் துணை தேவை இல்லை. எங்கும் நீர் நிறைந்து கிடக்கும் போது , கிணற்றில் போய் யார் நீர் அள்ள முயல்வார்கள்?

உண்மையை கண்டு கொண்டவனுக்கு வேதம் தேவை இல்லை.

என்னடா இது, கீதை வேதத்தை குறைத்து மதிப்பிடுகிறதா? வேதம் தேவை இல்லை என்றெல்லாம் பேசுகிறதே, அதுவும் ஞானம் பெற்ற ப்ராமணனுக்கு வேதம் தேவை இல்லை என்றால் பின் யாருக்கு அது தேவைப் படும்? ஞானம் இல்லாத பிராமணனுக்கும் மற்றவர்களுக்குமா? சரியாகப் படவில்லையே...

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கீதை எழுதப்பட்ட காலத்துக்கு நாம் போக வேண்டும். அப்போது என்ன நடந்தது என்று தெரிந்தால் தான், இந்த ஸ்லோகத்தின் முழு அர்த்தம் விளங்கும்.

சரி அப்படி என்னதான் நிகழ்ந்தது, கீதை ஏன் இப்படி சொல்கிறது...

சிந்திப்போம்.


https://bhagavatgita.blogspot.com/2019/06/246.html


Friday, June 28, 2019

பகவத் கீதை - 2.45 - ஆத்மாவில் நிலை கொள்ள

பகவத் கீதை - 2.45 - ஆத்மாவில் நிலை கொள்ள 



त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान्॥४५॥

த்ரைகு³ண்யவிஷயா வேதா³ நிஸ்த்ரைகு³ண்யோ ப⁴வார்ஜுந|
நிர்த்³வந்த்³வோ நித்யஸத்த்வஸ்தோ² நிர்யோக³க்ஷேம ஆத்மவாந் ||2-45||


த்ரை = மூன்று

குண்ய = குணங்களின்

விஷயா = விசேஷ தன்மை பற்றி

வேதா = வேதங்கள்

நிஸ் = விலகி, தாண்டி,  ஒட்டாமல்

த்ரை = மூன்று

குண்யோ = குணங்களில் இருந்து

ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா

நிர் = இல்லாமல்

த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை

நித்ய = எப்போதும்

ஸத்த்வ = சத்வ

ஸ்தோ  = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்

நிர் = இல்லமால்

யோக = ஆடம்பரங்களில்

க்ஷேம = சுகங்களில்

ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி


அர்ஜுனா, வேதங்கள் மூன்று குணங்களை பற்றி பேசுகின்றன. நீ அவற்றைக் கடந்து,  இருமைகள்  இல்லாமல், சத்வ குணத்தில் நிலை பெற்று, உலக இன்பங்களில் பற்றுக் கொள்ளாமல், ஆத்மாவோடு  ஒன்றி இருப்பாய். 

யப்பா....பெரிய லிஸ்ட்டா இருக்கே.

பெரிய பட்டியல் மட்டும் அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் முன்னுக்கு பின் முரணாகவும் இருக்கிற மாதிரி தெரியுதே.

கண்ணன் என்னதான் சொல்ல வர்றான்னு பாக்கலாம்.

மூன்று குணங்கள் - இது பற்றி அநேகமாக எல்லோருக்கும் தெரியும். சத்வ குணம், இராஜஸ குணம், தாமச குணம். மனிதர்கள் எல்லோரும் இந்த மூன்று குணங்களின்  கலவைதான். இந்த குணங்களில் சில தருணங்களில் சிலவை மேலோங்கி இருக்கும். அதற்காக மற்றவை இல்லாமல் போகாது. மற்றவை கொஞ்சம் ஒதுங்கி நிற்கும். அவ்வளவு தான்.

"முக்குணங்களை கடந்து" ...இந்த மூன்று குணங்களையும் கடந்து செல்லும்படி சொல்லுகிறான். இந்த குணக் கலவையில் கிடந்து உழலாதே என்கிறான்.

பேருங் குணமும்
பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத்
தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை

ஆண்டானைக் கொண்டன்றே. 

என்பார் மணிவாசகர். இந்த முக்குணங்களையும் தாண்டி, இந்த பிறவி என்ற பந்தத்தில் இருந்து என்னை காப்பாற்றிய சிவனை கொண்டாடுவேன் என்கிறார்.

சரி மூன்று குணங்களையும் கடந்தாச்சு என்றே வைத்துக் கொள்வோம். அப்புறம்   என்ன செய்ய வேண்டும் ?

"இருமைகளை கடந்து"  அது என்ன இருமை?

இன்பம், துன்பம்
சுகம், துக்கம்,
பாவம், புண்ணியம்,
நல்லது கெட்டது

இறைவன் என்பவன் இந்த இரண்டுக்கும் நடுவில் நிற்பவன். படித்தவன், படிக்காதவன், வல்லவன், இளைத்தவன், நல்லவன், பொல்லாதவன் என்ற பாகுபாடெல்லாம் இறைவனுக்குக் கிடையாது.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.  

நடு நிலை என்பது இறைக் குணம். இந்த இருமைகளை கடந்தால், நீங்களும் இறை தன்மை அடையலாம்.

அத்வைதம் என்றால் என்ன ?

அதற்கு நேரடியாக அர்த்தம் சொல்ல முடியாது.

துவைதம் என்றால் இரண்டு.

அ + துவைதம் = அத்வைதம். இரண்டு இல்லாதது என்று அர்த்தம்.

தமிழில் இரண்டற கலப்பது என்று பொருள். இரண்டு இல்லாமல் கலந்து விடுவது.

ஏன், அதை ஒன்று என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே? அது என்ன இரண்டு இல்லாதது?

இந்த இருமைகள் நம் கண்ணுக்குத் தெரியும்.

இதைத் தாண்டி காண்பதுவே காட்சி.

"ஒன்றாக காண்பதுவே காட்சி" என்றாள் ஒளவைப் பாட்டி.

சரி, முக்குணங்களை கடந்து, இருமைகளை தாண்டி வந்தாகி விட்டது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

"சத்வ குணத்தில் நிலை பெற்று "

என்னடா இது வம்பா போச்சு. இப்பத்தான் முக்குணங்களை கடக்க வேண்டும் என்று சொன்னான்.  இப்ப என்னடா என்றால் அந்த முக்குணங்களில் ஒன்றான  சத்வ குணத்தில் நிலை பெற்று என்கிறான்.

இது முன்னுக்கு  பின் முரணாக இல்லையா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படி முரண் இல்லை?

முக்குணங்களின் சேர்க்கையில், எப்போதும் ஒரு குணம் தலை தூக்கி நிற்கும். மற்ற இரண்டு குணங்களும் கொஞ்சம் மங்கி இருக்கும்.

அந்த நிலையில், சத்வ குணத்தில் இருந்தால் கூட, அதில் கொஞ்சம் ராஜஸ, தாமச குணத்தின் சாயல், கலவை இருக்கும்.

மூன்றையும் கடந்த பின், தூய்மையான சத்வ குணத்தில் நிலை பெற்று இருக்க வேண்டும்  என்கிறான்.  அந்த நிலையில், மற்ற இரண்டு குணங்களின் கலவையோ , சாயலோ இருக்காது.

மிக உன்னத குணம்.

அந்த நிலையில் உலக பற்றுகள் விடுபட்டு, அனைத்தும் ஆத்மாவில் நிலை பெற்று இருக்கும்  என்கிறான் கண்ணன்.

நம் மீதுள்ள அதீத அன்பினால், இவற்றை எல்லாம் எழுதி வைத்துவிட்டுப் போய்  இருக்கிறார்கள்.

இவற்றின் பால் மனதை திருப்புவதோ அல்லது "...not practical..." என்று தூசி தட்டிவிட்டு போவதோ  நம் விருப்பம்.


https://bhagavatgita.blogspot.com/2019/06/245.html


Thursday, June 27, 2019

பகவத் கீதை - 2.44 - நிச்சயம் அற்ற புத்தி

பகவத் கீதை - 2.44 - நிச்சயம் அற்ற புத்தி 


भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते॥४४॥

போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||

போ⁴கை = போகம், ஆடம்பரம்

ஐஸ்²வர்ய = ஐஸ்வர்யம் என்றால் அதிகாரம், ஆட்சி. ஈசன் = தலைவன். ஈஸ்வர = தலைமை பீடம். ஐஸ்வர்யம் = அதிகாரம், தலைமை பொறுப்பு, ஆட்சி.

ப்ரஸக்தாநாம் = ஆட்பட்டு, உந்தப்பட்டு , ஆசைப்பட்டு

தயா = அதனால்

அபஹ்ருத  = அபகரிக்கப்பட்டு, களவாடி, தொலைந்து போய்

சேதஸாம் = மனம், இதயம், புத்தி

வ்யவஸாயாத்மிகா = உறுதிப்பாட்டில் இருந்து, நிலைத்த தன்மையில் இருந்து

பு³த்³தி⁴ = புத்தி

ஸமாதௌ⁴  = நிலை நின்ற, உறுதியுடன் நின்ற, சம நிலைப் பட்ட

ந  = இல்லை

விதீ⁴யதே  = விதிக்கப்பட்டு இருக்கிறது


அதிகாரம், செல்வம் என்று இவற்றில் எப்போது மனம் போகத் தொடங்கியதோ, அப்போதில் இருந்து மனம் ஒரு நிலையில் நில்லாமல், சஞ்சலப்பட்டுக் கொண்டே , அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

பணம், பொருள், செல்வம், பதவி, அதிகாரம் என்று ஆசைப் படுவதில் என்ன தவறு  என்று கேட்பவர்களுக்கு வியாசர் பதில் தருகிறார்.

இந்த ஆசைகள் மனதில் வந்து விட்டால், மனம் சதா சர்வ காலமும் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்.   கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகம் வரும்,  கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் வரும்,  வேறு யாராவது  நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், வந்தாலும், எவ்வளவு வரும் என்ற ஆசை வரும்.

இப்படியே போனால், மனம் நொந்து நைந்து போகும்.

மனம், சம நிலையை இழக்கும். குழப்பத்திலும், பயத்திலும் கிடந்து அல்லாடும்.

நிம்மதி போகும்.அமைதி கிடையாது.

கண்ணை விற்று சித்திரம் வாங்கினால் சிரியரோ?


இந்த பணத்துக்காகவும், பதவிக்காகவும் மன அமைதியை அழித்து, நிம்மதியில்லாமல்  தவிக்க வேண்டுமா ?


ஒரு வேளை உணவு என்றாலும், நிம்மதியாக சாப்பிட வேண்டும்.

கோடி கோடியாக சம்பாதித்து வைத்து விட்டு, படுக்கையில் படுத்தால் தூக்கம் வராவிட்டால் என்ன பலன் ?

இரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், உடல் பருமன், மூட்டு வலி,  மூச்சு திணறல், ஆஸ்துமா, நிம்மதி இல்லாத வாழ்க்கை என்று இருப்பதில் அர்த்தம் இருக்கிறதா?

மனம் அமைதி பெற கீதை வழி காட்டுகிறது.

கீதை காட்டும் வழிதான் என்ன ?

https://bhagavatgita.blogspot.com/2019/06/244.html

Tuesday, June 25, 2019

பகவத் கீதை - 2.43 - கிரியைகளும் பலன்களும்

பகவத் கீதை - 2.43 - கிரியைகளும் பலன்களும் 


கோவிலுக்குப் போனால், கோவிலின் வெளியில் சில பிச்சைக் காரர்கள் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்கள். "அம்மா, தாயே, ஐயா சாமி தர்மம் பண்ணுங்கள் " என்று பிச்சை கேட்பார்கள்.

"இந்த பிச்சைகாரங்க தொல்லை தாங்க முடியல...நிம்மதியா இருக்கலாம்னு கோவிலுக்கு வந்தால், இங்க இவங்க தொல்லை " என்றது முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போவார்கள்.

உள்ளே போய் , "கடவுளே, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, என் பிள்ளைக்கு நல்ல காலேஜ் ல இடம் கிடைக்கணும், பொண்ணுக்கு நல்ல இடத்தில வரன் அமையனும், இந்த வருஷமாவது பதவி உயர்வு கிடைக்கணும்..." என்று இறைவனிடம் பிச்சை எடுப்பார்கள்.

சீ சீ...நான் எல்லாம் அப்படி கிடையாது. கடவுள் கிட்ட அது வேணும் இது வேணும் என்று கேட்க மாட்டேன். இந்தப் பிறவி போதும், உன்னிடம் வந்து சேர வேண்டும், வைகுந்தமோ,  கைலாயமோ உன் திருவடிக் கீழ் இருக்க வேண்டும் என்று தான் வேண்டுவேன் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

அது வேறு வகைப் பிச்சை.

பசிக்கு சோறு போடு என்றாலும் பிச்சைதான், சொகுசுக்கு bmw கார் வேண்டும் என்று கேட்டாலும் பிச்சைதான், வைகுண்டம், கைலாயம் கேட்டாலும் பிச்சைதான்.

எல்லாமே ஆசைதான். அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்பது.

திருமூலர் சொல்லுவார்,

ஆசை அறுமின், ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்று.

இறைவா நீ தான் வேண்டும் என்று கேட்டாலும், அதுவும் ஒரு ஆசை தான்.

சரி, ஆசையே இல்லாமல் இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும், அது ஒரு   வாழ்க்கையா? மண் புழு போன்ற ஒரு வாழ்க்கை தேவையா ?

வாழ்க்கை என்றால், ஆசை இருக்கும், சில நிறைவேறும், சில நிறைவேறாது.  அதற்காக  ஆசையே படாதே என்றால் என்ன அர்த்தம்.

ஆசையே படாதே என்றா கீதை சொல்கிறது?

மத்ததெல்லாம் விடுங்கள். ஆணுக்கு பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும்  ஆசை இல்லை என்றால், இந்த உலகம் அழிந்து விடாதா?

இல்லை. கீதை அப்படி சொல்லவில்லை.

மதம் என்பது, ஒரு ஆன்மீகப் பயணம். அந்த பயணத்தின் நோக்கம், நம்மை நாம் அறிவது.  அறியாமை  என்ற தூக்கத்தில் இருந்து விழிப்பது. எது உண்மை என்று அறிந்து கொள்வது.

காலையில் எழுந்தோம், காப்பி குடித்தோம், குளித்தோம், வேலைக்கு போனோம் அல்லது வீட்டு வேலை செய்தோம்,  மதியம் சாப்பாடு, இரவு தூக்கம் என்று  பொழுதை கழிப்பதா வாழ்க்கை?

ஏன் வந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், வாழ்வின் குறிக்கோள் என்ன,  நமக்கு ஏன் துன்பம் வருகிறது, ஏன் மனிதர்கள் எப்போதும் வருத்தத்தில் இருக்கிறார்கள் , நான் யார் என்றெல்லாம் சிந்தித்து விடை காண்பதுதான்  மதத்தின் நோக்கம்.

அதை விட்டு விட்டு, பூஜை, யாகம் போன்ற புற வழிபாடுகள் செய்து, அதன் மூலம்  எனக்கு அது வேண்டும், இது வேண்டும் கேட்டுக் கொண்டிருப்பது அல்ல  மதத்தின் நோக்கம் என்கிறது கீதை.

இப்போது, ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

பாடல்



कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम्।
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति॥४३॥

காமாத்மாந: ஸ்வர்க³பரா ஜந்மகர்மப²லப்ரதா³ம்|
க்ரியாவிஸே²ஷப³ஹுலாம் போ⁴கை³ஸ்²வர்யக³திம் ப்ரதி ||2-43||


காமாத்மாந: = ஆசையில் அகப்பட்டவர்கள், ஆசையில் மூழ்கியவர்கள்

ஸ்வர்க³பரா  = ஸ்வர்கம் வேண்டும் என்று மிக விரும்புவார்கள்

ஜந்ம = பிறப்புக்கும்

கர்ம = செய்கின்ற தொழிலுக்கும்

ப²லப்ரதா³ம் = பலனை பிரதானமாக எதிர்பார்ப்பவர்கள்

க்ரியா = கிரியைகள். யாகம், பூஜை போன்றவை

விஸே²ஷ = சிறப்பான, விசேஷமான

ப³ஹுலாம் = பல விதமான

போ⁴கை = போகம் (வீடு, வாசல், சொத்து, சுகம் போன்றவை)

³ஸ்²வர்யக³திம் = ஸ்வர்கத்தை அடைய வேண்டும் என்று

ப்ரதி  = நோக்கத்துடன்


போகம் வேண்டும், ஸ்வர்கம் வேண்டும், என்று பலவிதமான கிரியைகளை செய்பவர்களை கீதை கண்டிக்கிறது. 

திருமணம் ஆகவில்லையா - இந்தக் கோவிலில், இந்த சாமிக்கு இந்த கிழமையில் இன்ன பூஜை செய்தால், திருமணம் ஆகும்.

வேலை வேண்டுமா, கணவன் மனைவி உறவு சீர் பட வேண்டுமா? சொத்துத் தகராறு தீர வேண்டுமா,  பதவி உயர்வு வேண்டுமா ? வியாபாரத்தில் இலாபம் வேண்டுமா, அயல் நாட்டில் வேலை வேண்டுமா ...அததுக்கு ஒரு பூஜை, ஒரு கிரியை  என்று வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்....கீதை பிறந்த காலம் தொட்டு இது நடந்து கொண்டிருக்கிறது.

ஆன்மீகம் என்பது அது அல்ல. தன்னைத்தான் அறிவதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்.

கீதை அதற்குத்தான் வழி சொல்லுகிறது.

நீங்கள், என்னென்ன வேண்டும் என்று என்னென்ன பூஜை செய்து கொண்டிருக்கிறீர்கள்?

சிந்திப்போம்.

https://bhagavatgita.blogspot.com/2019/06/243.html