Sunday, June 30, 2019

பகவத் கீதை - 2.46 - குளமும் வெள்ளமும்

பகவத் கீதை - 2.46 - குளமும் வெள்ளமும் 



यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके।
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः॥४६॥

யாவாநர்த² உத³பாநே ஸர்வத: ஸம்ப்லுதோத³கே|
தாவாந்ஸர்வேஷு வேதே³ஷு ப்³ராஹ்மணஸ்ய விஜாநத: ||2-46||

யாவாந் = அதுவரை, அந்த அளவு

அர்த = பயன், உபயோகம், தேவை

 உத³பாநே = குளம், குட்டை, ஏரி

ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்

ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது


தாவாந் = அந்த அளவு

ஸர்வேஷு  = அனைத்து

வேதே³ஷு = வேதங்களில்

ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு

விஜாநத: = அறிந்தவனுக்கு (வி ஞான த் )

எங்கும் நீர் நிறைந்து வெள்ளமாக இருக்கும் போது, ஒரு குளத்திலோ, ஏரியிலோ உள்ள நீர் எவ்வாறோ அது போல தன்னை அறிந்த பிராமணனுக்கு வேதம். 

அருமையான உதாரணம், ஆழ்ந்த கருத்து.

நமக்கு தண்ணீர் வேண்டும் போது, கிணற்றிலோ, குளத்திலோ, ஏரியிலோ இருந்து நாம் நீரை பெற்றுக் கொள்கிறோம். நம் வீட்டுக்கு பெரும் பாலும் அது வந்து விடுகிறது. எனவே நாம் அது எங்கிருந்து வருகிறது என்று பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை.

ஆனால், ஊரே வெள்ளக் காடாக ஆகிவிட்டால், அந்த குளம், ஏரி , குட்டை, கிணறு என்பதெல்லாம் அர்த்தம் இல்லாமல் போய் விடும் அல்லவா? எல்லாம் நீர் தானே. இதில் குளம், கிணறு என்ற பாகுபாடு எங்கே வந்தது?

அது போல,

நமக்கு குறிப்பிட்ட தேவை இருக்கும் போது வேதத்தை நாடுகிறோம். அதில் சொல்லியபடி செய்து நமக்கு வேண்டியதை அடைய முயற்சி செய்கிறோம்.

பணமோ, பதவியோ, சொர்கமோ, கைலாயமோ, வைகுண்டமோ ஏதோ ஒன்றை  அடைய வேண்டும் என்றால்,  அது பற்றி வேதம் என்ன சொல்லி இருக்கிறது என்று  அறிந்து அதன் படி நடக்க முயற்சி செய்வோம் .

சந்தியாவந்தனம் செய், யாகம் செய், கோவிலுக்குப் போ, தானம் செய்,  பூஜை செய்,  இந்த மந்திரங்களை இத்தனை முறை சொல்,  இன்னின்ன வழி முறைகளை  கடைபிடி என்று வேதம் சொல்லும் வழி முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

எது வரை என்றால் , ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும் வரை , அதற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொண்டேதான் இருக்க வேண்டும்.

எப்போது அந்த தேவை நிற்கிறதோ, எப்போது ஒருவன் தன்னைத் தான் அறிகிறானோ, அப்போது வேதங்களின் துணை தேவை இல்லை. எங்கும் நீர் நிறைந்து கிடக்கும் போது , கிணற்றில் போய் யார் நீர் அள்ள முயல்வார்கள்?

உண்மையை கண்டு கொண்டவனுக்கு வேதம் தேவை இல்லை.

என்னடா இது, கீதை வேதத்தை குறைத்து மதிப்பிடுகிறதா? வேதம் தேவை இல்லை என்றெல்லாம் பேசுகிறதே, அதுவும் ஞானம் பெற்ற ப்ராமணனுக்கு வேதம் தேவை இல்லை என்றால் பின் யாருக்கு அது தேவைப் படும்? ஞானம் இல்லாத பிராமணனுக்கும் மற்றவர்களுக்குமா? சரியாகப் படவில்லையே...

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கீதை எழுதப்பட்ட காலத்துக்கு நாம் போக வேண்டும். அப்போது என்ன நடந்தது என்று தெரிந்தால் தான், இந்த ஸ்லோகத்தின் முழு அர்த்தம் விளங்கும்.

சரி அப்படி என்னதான் நிகழ்ந்தது, கீதை ஏன் இப்படி சொல்கிறது...

சிந்திப்போம்.


https://bhagavatgita.blogspot.com/2019/06/246.html


No comments:

Post a Comment