Thursday, June 27, 2019

பகவத் கீதை - 2.44 - நிச்சயம் அற்ற புத்தி

பகவத் கீதை - 2.44 - நிச்சயம் அற்ற புத்தி 


भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते॥४४॥

போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||

போ⁴கை = போகம், ஆடம்பரம்

ஐஸ்²வர்ய = ஐஸ்வர்யம் என்றால் அதிகாரம், ஆட்சி. ஈசன் = தலைவன். ஈஸ்வர = தலைமை பீடம். ஐஸ்வர்யம் = அதிகாரம், தலைமை பொறுப்பு, ஆட்சி.

ப்ரஸக்தாநாம் = ஆட்பட்டு, உந்தப்பட்டு , ஆசைப்பட்டு

தயா = அதனால்

அபஹ்ருத  = அபகரிக்கப்பட்டு, களவாடி, தொலைந்து போய்

சேதஸாம் = மனம், இதயம், புத்தி

வ்யவஸாயாத்மிகா = உறுதிப்பாட்டில் இருந்து, நிலைத்த தன்மையில் இருந்து

பு³த்³தி⁴ = புத்தி

ஸமாதௌ⁴  = நிலை நின்ற, உறுதியுடன் நின்ற, சம நிலைப் பட்ட

ந  = இல்லை

விதீ⁴யதே  = விதிக்கப்பட்டு இருக்கிறது


அதிகாரம், செல்வம் என்று இவற்றில் எப்போது மனம் போகத் தொடங்கியதோ, அப்போதில் இருந்து மனம் ஒரு நிலையில் நில்லாமல், சஞ்சலப்பட்டுக் கொண்டே , அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

பணம், பொருள், செல்வம், பதவி, அதிகாரம் என்று ஆசைப் படுவதில் என்ன தவறு  என்று கேட்பவர்களுக்கு வியாசர் பதில் தருகிறார்.

இந்த ஆசைகள் மனதில் வந்து விட்டால், மனம் சதா சர்வ காலமும் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்.   கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகம் வரும்,  கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் வரும்,  வேறு யாராவது  நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், வந்தாலும், எவ்வளவு வரும் என்ற ஆசை வரும்.

இப்படியே போனால், மனம் நொந்து நைந்து போகும்.

மனம், சம நிலையை இழக்கும். குழப்பத்திலும், பயத்திலும் கிடந்து அல்லாடும்.

நிம்மதி போகும்.அமைதி கிடையாது.

கண்ணை விற்று சித்திரம் வாங்கினால் சிரியரோ?


இந்த பணத்துக்காகவும், பதவிக்காகவும் மன அமைதியை அழித்து, நிம்மதியில்லாமல்  தவிக்க வேண்டுமா ?


ஒரு வேளை உணவு என்றாலும், நிம்மதியாக சாப்பிட வேண்டும்.

கோடி கோடியாக சம்பாதித்து வைத்து விட்டு, படுக்கையில் படுத்தால் தூக்கம் வராவிட்டால் என்ன பலன் ?

இரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், உடல் பருமன், மூட்டு வலி,  மூச்சு திணறல், ஆஸ்துமா, நிம்மதி இல்லாத வாழ்க்கை என்று இருப்பதில் அர்த்தம் இருக்கிறதா?

மனம் அமைதி பெற கீதை வழி காட்டுகிறது.

கீதை காட்டும் வழிதான் என்ன ?

https://bhagavatgita.blogspot.com/2019/06/244.html

No comments:

Post a Comment