Monday, March 31, 2014

கீதை - 9.17 - அன்பு, கருணை, அறிவு இவை நான் - பாகம் 2

கீதை - 9.17 - அன்பு, கருணை, அறிவு இவை நான் - பாகம் 2

पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोंकार ऋक्साम यजुरेव च ॥९- १७॥

பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: |
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச || 9- 17||

பிதா = தந்தை
அஹம் = நான்
அஸ்ய = இந்த
ஜக³தோ = உலகின்
மாதா = தாய்
தா⁴தா = தாங்குபவன்
பிதாமஹ:  = பாட்டன்
வேத்³யம் = அறியபடுவன
பவித்ர = தூய்மை படுத்துவது
ஒம்கார = ஓம் காரம்
ருக் = ரிக்
ஸாம = சாம
யஜுர் = யஜுர்
எவ = நிச்சயமாக
ச = மேலும்


இந்த உலகத்தின் தாய் நான், தந்தை நான்,  எல்லாவற்றையும் தாங்குபவன் நான், இதன் முன்னோன் நான் ; இதில் உள்ள அறியப்படும் பொருள்கள் எல்லாம் நான்,  இவற்றை தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்;ஸாம; யஜுர் வேதங்கள்


நான் தாய், தந்தை, பாட்டன், எல்லாவற்றையும் தாங்குபவன் :  இந்த உலகம் எல்லாம்  ஒன்றானாது, பெயர்களும், வடிவங்களும் மாறுமே தவிர அடிப்படையில்  இந்த உலகம் ஒன்று தான் என்று முன்பு பார்த்தோம்.

ஒன்று தான் என்றால் அந்த ஒன்று எது என்ற கேள்வி வரும். அந்த ஒன்று ஒரு பொருளா ? ஆளா ? அறிவா ? சக்தியா ? எது அந்த ஒன்று என்ற கேள்விக்கு விடை  தந்தாக  வேண்டும்.

இங்கே சொல்கிறான். 


அந்த ஒன்றின் குணங்கள் என்ன ? 

அன்பு முதல் குணம்,  அனைத்தையும் கடந்து நிற்பது அன்புதான்.  

தாய், தந்தை, அவர்களின் தாய் தந்தை, அதாவது பாட்டன் என்று எல்லோரும் நான்  என்பதன் அர்த்தம் அளவு கடந்த அன்பு நான் என்பது. ஒரு குழந்தையின் மேல்  தாயும் தந்தையும் விட வேறு யார் அதிகம் அன்பு செலுத்தி விட முடியும் ? 

அன்புதான் அனைத்தையும் தாண்டி நிற்பது. 

தாய் , தந்தை, பாட்டன் / முன்னோன் என வழி வழியாக வரும் அன்பு எனும் ஆறு. 

 அனைத்தையும் தாங்குபவன்: ஒரு தாய், தந்தை தங்கள் குழந்தையிடம் அன்பு காட்டலாம்.  அது ஒரு விதத்தில் சுயநலம். இன்னொரு பிள்ளையின் மேல் அன்பு காட்டுவார்களா ?   எல்லோர் மேலும் அன்பு செலுத்த மனதில்  கருணை வேண்டும். எனவே, நான் அனைத்தையும் தாங்குபவன் என்றான். எல்லோரையும் காக்கும்  குணம் - கருணை.

இந்த அன்பும் கருணையும் எதையும் தூய்மை  படுத்தும்.பாவங்களை    மன்னிக்கும். துன்பங்களைத் துடைக்கும். எனவே, தூய்மை படுத்துபவன்  என்ற மூன்றாவது  குணத்தை சொன்னான். 

வெறும் அன்பு மட்டும் இருந்தால் போதுமா ? 

அன்போடு அறிவும் சேர வேண்டும். 

எனவே , அடுத்த குணமாக நானே நான்கு மறைகளும் என்றான். மறைகளில்  கண்ட  உண்மை மூன்றாவது குணம்.

அன்பு - கருணை - அறிவு. 

இந்த மூன்றும் எங்கிருந்து உதிக்கிறது ? இவை நமக்குள் இருந்து தோன்றுகின்றன. எங்கிருந்து இவை  தோன்றுகிறதோ அதுவே நான்.

எங்கிருந்து தோன்றுகிறது என்று சிந்திப்போம்.


கீதை - 9.17 - தாய், தந்தை, பாட்டன், வேதங்கள் எல்லாம் நான் - பாகம் 1

கீதை - 9.17 - தாய், தந்தை, பாட்டன், வேதங்கள் எல்லாம் நான் - பாகம் 1

पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोंकार ऋक्साम यजुरेव च ॥९- १७॥

பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: |
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச || 9- 17||

பிதா = தந்தை
அஹம் = நான்
அஸ்ய = இந்த
ஜக³தோ = உலகின்
மாதா = தாய்
தா⁴தா = தாங்குபவன்
பிதாமஹ:  = பாட்டன் 
வேத்³யம் = அறியபடுவன
பவித்ர = தூய்மை படுத்துவது 
ஒம்கார = ஓம் காரம்
ருக் = ரிக்
ஸாம = சாம
யஜுர் = யஜுர்
எவ = நிச்சயமாக
ச = மேலும்


இந்த உலகத்தின் தாய் நான், தந்தை நான்,  எல்லாவற்றையும் தாங்குபவன் நான், இதன் முன்னோன் நான் ; இதில் உள்ள அறியப்படும் பொருள்கள் எல்லாம் நான்,  இவற்றை தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்;ஸாம; யஜுர் வேதங்கள்



Saturday, March 29, 2014

கீதை - 9.16 - நானே நான்

கீதை - 9.16 - நானே நான் 


अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥९- १६॥

அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதா⁴ஹமஹமௌஷத⁴ம் |
மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்³நிரஹம் ஹுதம் || 9- 16||


அஹம் க்ரது = நான் ஹோமம்
அ ஹம் யஜ்ஞ: = நான் யாகம்
அஹம் ஸ்வதா = நான் ஸ்வதா என்ற மந்திரம்
அஹம் ஔஷதம் = நான் மருந்து
அஹம் மந்த்ர = நான் மந்திரம்
அஹம் = நான்
அஹம் = நான்
எவ = நிச்சயமாக
ஆஜ்யம் = நெய்
அஹம் = நான்
அக்னி = நெருப்பு
அஹம் = நான்
ஹுதம் = அவி


நான் ஹோமம். நான் யாகம். நான் ஸ்வதா என்ற மந்திரம். நான் மருந்து. நான் நெய்; நான் தீ; நான் அவி.நான் நானே.


எல்லாம் ஒன்றுதான்.

பெயரும் வடிவங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

இந்த செய்தியை கீதை பல இடங்களில் பல விதமாக சொல்லிக்  காண்பிக்கிறது.

எல்லாம் ஒன்றுதான் என்பதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது. எப்படி  எதிர்  எதிர் துருவங்கள் ஒன்றாக இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவது இயற்கை.

அதை தெளிவாக சொல்லாமல் விட்டு விட்டால் நாம் அந்த சந்தேகத்துடன் எப்போதும்  இருப்போம்.

 வகுப்பில் ஆசிரியர் ஒரு கணித விதியை சொல்லித்  தருவார்.பிதாகரஸ் விதி என்று  வைத்துக் கொள்வோம். விதியை சொல்லியாகி விட்டது. அது அனைத்து  வடிவ செங்கோண முக்கோணத்திற்கும் பொருந்துமா என்ற சந்தேகம்  வரும் அல்லவா ?

அந்த சந்தேகத்தை போக்க சில பல செங்கோண முக்கோணங்களை வரைந்து அதன் அளவுகள்  அந்த விதிப்படி இருக்கிறதா என்று சோதித்து அறிவது போல...

இங்கே கிருஷ்ணன் அனைத்தும் ஒன்றே என்ற விதியை ஒவ்வொன்றாக சொல்லிக் காண்பிக்கிறான்.

நானே யாகம். நானே யோமம். நானே மந்திரம். நானே மருந்து. நானே நெய். நானே ஆவி.....என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போனான்.

இப்படி சொல்லிக் கொண்டு போனால் என்று இந்த அட்டவணை முடிவது ?

நானே நான் - என்று எல்லாம் நானே என்று சொல்லி முடிக்கிறான்.

இந்த சிக்கல் அபிராமி பட்டருக்கும் வந்தது....

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


தனம் தரும், கல்வி தரும் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தார். இப்படி சொல்லிக் கொண்டு போனால் இது என்று முடிவது....

எனவே "நல்லன எல்லாம் தரும்" என்று சொல்லி  முடிக்கிறார்.

அது போல. அது நான், இது நான் என்று சொல்லிக் கொண்டு வந்த கண்ணன், கடைசியில் நான் நானே என்று சொல்லி முடிக்கிறான். 

இந்த ஸ்லோகத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்கலாம். 

இராமாயணத்தில் , விஸ்வாமித்திரன் யாகம் செய்ய இராம இலக்குவனர்களை காவல் வைத்தான். 

என்ன பைத்தியகாரத்தனம்.

யாருக்காக யாகம் செய்கிறானோ அவர்களை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே போய் யாகம் செய்கிறான். 

காலமும் கணக்கும்  நீத்த காரணன் வெளியே நிற்கிறான். 

அது அறியாமையின் உச்சம். 

அது போல 

யாகமும், அதில் உள்ள ஹோம நெருப்பும்,  அதில் விடும் நெய்யும் நானே என்கிறான் கண்ணன். பின் எதற்கு ஹோமமும், யாகமும் ?

நேரே அவனையே அடைந்து விடலாமே ?

இந்த  பூஜைகளும்,மற்ற சடங்குகளும் ஏன் ?

சிந்திப்போம். 




கீதை - 9.15 - ஞான வேள்வி

கீதை - 9.15 - ஞான வேள்வி 


ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते ।
एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥९- १५॥

ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே |
ஏகத்வேந ப்ருத²க்த்வேந ப³ஹுதா⁴ விஸ்²வதோமுக²ம் || 9- 15||

ஜ்ஞாநயஜ்ஞேந = அறிவை வளர்த்து

சா = மேலும்

அபி = நிச்சயமாக

அந்யே = மற்றவர்கள்

யஜந்தோ =  வேள்வியில்

மாம் = என்னை

உபாஸதே = உபாசிக்கிறார்கள்
|
ஏகத்வேந = ஒன்றாக

ப்ருத²க்த்வேந  = இரண்டாக

ப³ஹுதா⁴ = பலவிதமாக

விஸ்²வதோமுக²ம் = உலகம் தழுவிய ஒன்றாக


மற்றவர்கள் ஞான வேள்வியால் என்னை ஒன்றாகவும், இரண்டாகவும், பலவிதமாகவும், உலகம் அனைத்தும் தழுவிய ஒன்றாகவும் என்னை வழிபடுகிறார்கள்

இதில் மற்றர்வர்கள் யார் ?

பக்தியில் ஈடுபடாதவர்கள் மற்றவர்கள்....

முந்தைய ஸ்லோகத்தில் பக்தி எப்படி வளர்கிறது, பரிணமிக்கிறது என்று பார்த்தோம்.  பக்தி என்ற மலர் எப்படி  மலர்கிறது என்று பார்த்தோம்.

இந்த ஸ்லோகத்தில் அறிவு, ஞானம் எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.

பக்தி  சமயம் சார்ந்தது. பக்தி செய்வதற்கென்று கடவுள் வேண்டும், வழி படும் முறை வேண்டும் ஆனால் ஞானம் அப்படி அல்ல. அது சமய வேறுபாடுகளை கடந்தது.  இந்த மதம், இந்த கடவுள் , இந்த வழிபாட்டு முறை என்று கிடையாது.

இது ஞானத்தின் முதல் படி.

ஞானம் எப்படி பரிணமிக்கிறது ?

ஞானம் முதலில் தான் வேறு, மற்றவர்கள் வேறு என்று அறிகிறது. உலகில் உள்ள ஒவ்வொன்றும்  தனித் தனி என்று நினைக்கிறது.

வடிவங்களும், பெயர்களும் வேறு வேறு என்று நினைக்கிறது.

அடுத்த கட்டம்.

உலகை இரண்டு கூறாகப் பார்க்கிறது. பார்க்கும் தான், பார்க்கப்படும் வெளி உலகம்  என்று இரண்டு கூறாகப் பார்க்கிறது.

பார்ப்பவன், பார்க்கப் படுபவை என்ற இரண்டு கூறுகள்.

Observer and the Observed.

அடுத்த கட்டம்

உலகம் தழுவிய ஒன்றாக - Universal Oneness

அனைத்தும் ஒன்றே என்ற எண்ணம் வருகிறது.

தான் வேறு , உலகம் வேறு என்று தோன்றினாலும் இவை அனைத்தும் ஒன்றே  என்று அறிகிறது.

ஒன்றாகி,பலவாகி, உலகம் எங்கும் நிரம்பி நின்றதை அபிராமி பட்டர் இப்படி குறிப்பிடுகிறார்

“ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றால் இலையில் துயின்றெம்பெம்மானும் என் ஐயனுமே.”

ஒன்றாய்  அரும்பி,பலவாய் விரிந்து , இவ் உலகம் எங்குமாய் நின்றாள்

இப்படி உலகை , அதில் உள்ள உயிர்களை , பொருட்களை ஒன்றாக காண்பது அறிவினால் முடியும்.

அதுவே ஞான வேள்வி.

அந்த ஞான வழியில் செல்வதும் வழிபாடு தான்.







Thursday, March 27, 2014

கீதை - 9.14 - பக்தி என்றால் என்ன - பாகம் 2

கீதை - 9.14 - பக்தி என்றால் என்ன  - பாகம் 2

கீதை - 9.14 - பக்தியும் அதன் வளர்ச்சியும் - பாகம் 2


सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥९- १४॥

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்²ச த்³ருட⁴வ்ரதா: |
நமஸ்யந்தஸ்²ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே || 9- 14||

ஸததம்  = எப்போதும்
கீர்தயந்தோ  = கீர்த்தனைகளை பாடிக் கொண்டு
மாம் = என்னை
யதந்தஸ் = பெரு முயற்சியுடன்
ச = மேலும்
த்³ருட⁴வ்ரதா:  = திட சித்தத்துடன்
நமஸ்யந்தஸ் = வணங்கி
ச = மேலும்
மாம் = என்னை
ப⁴க்த்யா = பக்தர்கள்
நித்யயுக்தா = எப்போதும்
உபாஸதே = வழி படுகிறார்கள்

கீர்த்தனைகளை பாடிக் கொண்டு, எப்போதும், பெரு முயற்சியுடன் , திட சித்தத்துடன், என்னை வணங்கி, என்னை வழி படுகிறார்கள். 

இது பக்தி யோகம்.

பக்தி பற்றி கிருஷ்ணன் சொல்கிறான்.

எது பக்தி, பக்தி எப்படி  படுகிறது, என்று இந்த ஸ்லோகத்தில் ஆழமாக விவரிக்கிறான்.

மேலும் சிந்திப்போம்...

---பாகம் 2 ------------------

பக்தியின் பரிணாம வளர்ச்சியை பற்றி  சொல்கிறது இந்த சுலோகம்.

"கீர்த்தனைகள் பாடிக் கொண்டு " : பக்தியின் தொடக்கம் கீர்த்தனை, பஜனை , பூஜை, புனஸ்காரம் என்று ஆர்பாட்டமாக  இருக்கும்.மணி அடிப்பது, மேளம் அடிப்பது, பாட்டு பாடுவது இவை எல்லாம் அதன் முதல்  படி.ஆரவாரம் இருக்கும்.  பெரும்பாலனவர்கள்  இது தான் பக்தி என்று நினைத்து அதோடு நின்று விடுகிறார்கள். "நான் ஒரு நாளைக்கு மூன்று முறை பூஜை செய்கிறேன், வெள்ளி சனி  என்றால் தவறாமல் கோவிலுக்குப் போய் விடுவேன், ஒரு பஜனை, கதா கலாட்சேபம்  விடுவது கிடையாது ...." என்று பெரிய பட்டியல் வைத்து இருப்பார்கள். அது முடிவு அல்ல....அதையும் தாண்டி போக  வேண்டும்.

"எப்போதும்": பக்தி என்பது ஏதோ காலையில்  ,கொஞ்ச நேரம், மாலையில் கொஞ்ச நேரம்,  மற்ற படி நாளு கிழமைகளில் பொங்கல் வைப்பது, சுண்டல் வைப்பது, விரதம் இருப்பது  என்று ஒரு வேலை மாதிரி இருக்கக் கூடாது. பக்தி என்பது எப்போதும்  மனதில் இருக்க வேண்டும். அது எப்படி இருக்கும் ?

 "பெரு முயற்சியுடன் , திட சித்ததுடன்" : பக்தி செய்வது என்பது சாதாரண  விஷயம்  இல்லை. பாட்டு பாடுவதும், நைவேத்தியம் செய்வதும் பக்தி அல்ல. அதற்கு பெரு முயற்சி வேண்டும். திட சித்தம் வேண்டும்.

அடுத்து வரும் இரண்டு விஷயங்கள் மிக மிக முக்கியமானவை

என்னை வணங்கி, என்னை வழி படுகிறார்கள் :  அது என்ன வணங்கி பின் வழிபடுதல் ?

வணங்குதல் என்று சொல்லும் போது , வணங்கப் படும் பொருள் நம்மை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதை நாம் வணங்குவோம். அதன் மேல் மதிப்பும் மரியாதையும் வேண்டும்.

வழி படுதல் என்றால் அதன் வழியில் செல்லுதல்.  வழியைப் பின் பற்றுதல், வழியைத்  தொடர்தல், வழியில் செல்லுதல் என்று பொருள்.

ஒரு வணங்கத்தக்க வழியைக் கண்டு பெரு முயற்சியுடனும், திட மனத்துடனும், அதன்  வழியில் செல்லுதல் என்பது இந்த ஸ்லோகத்தின் அறிவுரை.

நீங்கள் எதை உயர்வாகக் கொள்கிறீர்களோ, எதை புனிதமாகக் கொள்கிறீர்களோ அதன் வழியில்  செல்லுதல் எப்போது செல்வது என்பது பக்தி, வழிபாடு.

அது மனிதர்களாக  இருக்கலாம்,. கொள்கைகளாக இருக்கலாம், நீங்கள் நம்பும் தெய்வங்களாக இருக்கலாம் .... அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

எதன் வழியில் செல்கிறீர்களோ, அது உங்கள் பக்தி , அது உங்கள் வழிபாடு.

உடனே, சில பேர்  கேட்கலாம்,நான் திருட்டு வழியில் செல்கிறேன், கொலை கொள்ளை  என்ற அதர்ம வழியில் செல்கிறேன்...அதுவும் பக்தி, வழிபாடா என்று.

 அவர்களுக்கு ஒரு கேள்வி ...

நீங்கள் அதை எல்லோரிடமும் சொல்வீர்களா (கீர்த்தனம் ?). நாம் திருடிச் சேர்த்தது இந்த சொத்து  என்று எல்லோரிடமும் சொல்ல முடியுமா ?

திருடன் கூட அவன் செயலை நியாயப் படுத்துவானே தவிர அது உயர்ந்த செயல் என்று  அதை வணங்க மாட்டான். தன் பிள்ளை அந்தத் துறையில் வர வேண்டும் என்று  விரும்ப மாட்டான்.

எனவே அவற்றை விட்டு விடுவோம்.

பக்தி என்பது உயர்ந்த, சிறந்த, புனிதமான (வணங்கத்தக்க) வழியை தேர்ந்தெடுத்து, திட மனதுடன், விடா முயற்சியுடன், எப்போதும் அந்த வழியில் செல்வது.

யோசியுங்கள்....எது உங்கள் வழி என்று...உங்கள் பக்தி என்று, உங்கள் வழி பாடு என்று....

அந்த சிந்தனை உங்களை வழி நடத்தும்.

Tuesday, March 25, 2014

கீதை - 9.14 - பக்தியும் அதன் வளர்ச்சியும் - பாகம் 1

கீதை - 9.14 - பக்தியும் அதன் வளர்ச்சியும் - பாகம் 1 


सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥९- १४॥

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்²ச த்³ருட⁴வ்ரதா: |
நமஸ்யந்தஸ்²ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே || 9- 14||

ஸததம்  = எப்போதும்
கீர்தயந்தோ  = கீர்த்தனைகளை பாடிக் கொண்டு
மாம் = என்னை
யதந்தஸ் = பெரு முயற்சியுடன்
ச = மேலும்
த்³ருட⁴வ்ரதா:  = திட சித்தத்துடன்
நமஸ்யந்தஸ் = வணங்கி
ச = மேலும்
மாம் = என்னை
ப⁴க்த்யா = பக்தர்கள்
நித்யயுக்தா = எப்போதும்
உபாஸதே = வழி படுகிறார்கள்

கீர்த்தனைகளை பாடிக் கொண்டு, எப்போதும், பெரு முயற்சியுடன் , திட சித்தத்துடன், என்னை வணங்கி, என்னை வழி படுகிறார்கள். 

இது பக்தி யோகம்.

பக்தி பற்றி கிருஷ்ணன் சொல்கிறான்.

எது பக்தி, பக்தி எப்படி  படுகிறது, என்று இந்த ஸ்லோகத்தில் ஆழமாக விவரிக்கிறான்.

மேலும் சிந்திப்போம்...



Monday, March 24, 2014

கீதை - 9.13 - மகாத்மாக்களின் இயல்பு

கீதை - 9.13 - மகாத்மாக்களின் இயல்பு 


महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥९- १३॥

மஹாத்மாநஸ்து மாம் பார்த² தை³வீம் ப்ரக்ருதிமாஸ்²ரிதா: |
ப⁴ஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம் || 9- 13||

மஹாத்மாந = மகாத்மாக்கள்
து = ஆனால்
மாம் = என்னிடம்
பார்த = பார்த்தா
தை³வீம் = தெய்வீக
ப்ரக்ருதிம் = இயற்கை 
அஸ்²ரிதா:  = புகல் அடைந்து
ப⁴ஜந்த்தி = சேவை செய்து
அநந்யமநஸோ = மனதில் இருந்து விலகாமல்
ஜ்ஞாத்வா  = அறிந்து
பூ⁴தா = தோற்றம்
அதிம் = ஆதியில்
அவ்யயம் = தீராத


மகாத்மாக்கள் தெய்வீக இயல்பை கொண்டு , பூதங்களின் தோற்றமாகிய என்னை , மனம் வேறு எதிலும் செல்லாமல் வழி படுகிறார்கள் 

முந்தைய ஸ்லோகத்தில்  ஆசை, செயல் மற்றும் சிந்தனை எப்படி மனிதனை அசுரனாக  மாற்றுகிறது என்று பார்த்தோம்.

சரி, அசுரர்கள் அப்படி செய்வார்கள் என்றால், மகாத்மாக்கள் என்ன செய்வார்கள்  ?

மகாத்மாக்கள்,முதலில் அசுரத் தன்மையை விட்டு தெய்வீக தன்மையை அடைகிறார்கள்.

அது மட்டும் அல்ல, தெய்வீகத் தன்மையை இயற்கையாக அடைகிறார்கள். செயற்கையாகவோ, கட்டாயமாகவோ அல்ல....இயல்பாக தெய்வீகத் தன்மையை அடைகிறார்கள்.

அது என்ன தெய்வீக தன்மை ? அது எப்படி இருக்கும் ?

முதலில் அவர்கள் சேவையில் ஈடு பட்டு இருப்பார்கள். சேவை என்பது என்ன ? பலனை எதிர் பார்க்காமல் செய்யும் வேலை சேவை.  அவர்கள் சேவை செய்வார்கள்.

இரண்டாவது, மனதை வேறு எதிலும் செலுத்தாமல் இருப்பார்கள். மனம் ஒருமுகப் பட்டு  இருக்கும். சலனம் அடையாது. காற்றில் அசையாத தீபம் போல.

மூன்றாவது, உயிர்களின் தோற்றமான என்னை வழி படுவார்கள்.  அப்படி என்றால் என்ன ?

உயிர்களின் தோற்றத்தை வழி படுத்தல் என்றால் எல்லா உயிர்களையும் வழிபடுதல் என்று அர்த்தம்.

தோற்றத்தை வழி பட்டால் அதில் இருந்து தோன்றிய அனைத்தையும் வழிபடுவதாகத்  தானே  அர்த்தம்.

குடும்பத் தலைவருக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பினால் அது அந்த வீட்டில்  உள்ள அனைவருக்கும் அனுப்பியதாகத்தானே அர்த்தம்.

உயிர்களின் தோற்றமும், உயிர்களும் இரண்டு வேறு வேறு அல்ல.

தங்கமும், தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம் , சங்கிலி, வளையல் இவை எல்லாம்  வேறு அல்ல. வடிவங்கள் மாறுகின்றன. அடிப்படை ஒன்றுதான்.

என்ன சொல்ல வருகிறார்.....

மகாத்மாக்கள் எல்லா உயிர்களையும் வணங்குவார்கள். உயிர்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்று பாகு பாடு பார்க்க மாட்டார்கள்.

எல்லா உயிர்களும் ஒன்று தான், அவர்களுக்கு.

சேவை - சலனம் அடையாத மனம் - எல்லா உயிர்களையும் வணங்குவது.....இவை மகாத்மாக்களின்  இயல்பு.

Sunday, March 23, 2014

கீதை - 9.12 - ஆசை, செயல், சிந்தனை

கீதை - 9.12 - ஆசை, செயல், சிந்தனை 


मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥९- १२॥

மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || 9- 12||

மோகா⁴ஸா² = ஆசைகளில் மயங்கி
மோக⁴கர்மாணோ = கர்ம வினைகளில் மயங்கி
மோக⁴ஜ்ஞாநா = அறிவில் மயங்கி
விசேதஸ: | = குழம்பி
ராக்ஷஸீம் = இராட்சதர்களைப் போல
அஸுரீம் = அசுரர்களைப் போல
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ப்ரக்ருதிம் = இயற்கையில்
மோஹிநீம் = மயக்கம்  மற்றும் குழப்பம்
 ஸ்²ரிதா:  = அடைக்கலம் கொள்கிறார்கள்

ஆசைகள், கர்ம வினைகள், அறிவு இவற்றில் மயங்கி, இராட்சத மற்றும் அசுரர்களைப் போல இயற்கையில்  இருக்கிறார்கள்.

தவறான ஆசைகள், அந்த தவறான ஆசைகளை அடைய தவறான வழிகள், அந்த வழிகளைப் பின் பற்ற தவறான அறிவு....இந்த மூன்றும் சேரும் போது மனிதன் தன்  உயர் நிலையை விட்டு இராட்சதர்கள் அல்லது அசுர நிலைக்குப் போகிறார்கள்.


மூன்று விஷயங்களை பார்க்க வேண்டும்.

ஆசை - கர்மம் - அறிவு.


முதலில், மனதில் ஆசை விளைகிறது.

ஆசை வந்த பின், அது காரியம் செய்யத்  தூண்டுகிறது.

காரியங்களை செய்யும் போது அறிவின் துணை தேவைப் படுகிறது.

இப்படி நம் அறிவும், செயலும் ஆசைகளால் உந்தப் படுகின்றன.

ஆசை தவறான வழியில் போனால், அறிவும் செயலும் அந்த வழியிலேயே போகும்.

அப்படி போகும் போது மனிதன் அசுரனாகிறான்.

எனக்கு வேண்டியதை நான் எப்படியும் அடைவேன் என்று முனைகிறான்.

ஆசை எழும் போது அது சரியா தவறா என்று அறிய வேண்டும்.

 நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், சிந்தனையும் எதை நோக்கி என்று அறிய வேண்டும்.

எதை அடைய நாம் எத்தனிக்கிறோம் ? நம் சிந்தனை சதா சர்வகாலமும் எதை நினைத்துக்  கொண்டிருக்கிறது ? என்று நாம் அறிய வேண்டும்.

ஆசையின் பின்னால் போகும் அறிவும் சிந்தனையும் ஒரு முரட்டுத் தனத்தை உருவாக்கும்.

இங்கே ஆசை என்று சொல்லுவது வீணான ஆசை, தேவையற்ற ஆசை என்பதைக்  குறிக்கும்.

எது தேவையானது, எது தேவையற்றது என்று எப்படி அறிந்து கொள்வது ?

ஆசைகள் உங்களை எங்கே வழி நடத்துகிறது என்று பாருங்கள். அதில் இருந்து  தெரியும் அது எந்த மாதிரி ஆசை என்று.

ஆசைகளை மாற்றுங்கள்.

 செயலும் சிந்தனையும் மாறும்.

உங்கள் செயலும் சிந்தனையும் நல் வழியில் இருக்க வேண்டும் என்றால் உங்கள்  ஆசைகள்  நல்லவைகளாக இருக்க வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள். ....

உங்கள் ஆசைகள் எவை என்று ....

உங்கள் செயலும், உங்கள் சிந்தனையும் புரியும்.

இந்த மூன்றும் தெளிவாகும் போது , நீங்கள் யார் என்று அறியத் தொடங்குவீர்கள்.

Saturday, March 22, 2014

கீதை - 9.11 - நானே அனைத்திற்கும் உயர் நிலைத் தலைவன்

கீதை - 9.11 - நானே அனைத்திற்கும் உயர் நிலைத் தலைவன் 


अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् ।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ॥९- ११॥

அவஜாநந்தி மாம் மூடா⁴ மாநுஷீம் தநுமாஸ்²ரிதம் |
பரம் பா⁴வமஜாநந்தோ மம பூ⁴தமஹேஸ்²வரம் || 9- 11||

அவஜாநந்தி = அறியாமல்
மாம்  = என்னை
மூடா⁴ = மூடர்கள்
மாநுஷீம்= மனித வடிவில் உள்ள
தநும் = வடிவம் 
ஆஸ்²ரிதம் = நினைத்து
பரம் = மேலான
பா⁴வ = இயற்கை
அஜாநந்தோ = அறியாமல்
மம = என்
பூ⁴தமஹேஸ்²வரம் = அனைத்தின் தலைவன்

மனித சரீரத்தில் இருப்பதால் மூடர்கள் என்னை உதாசீனம் செய்கிறார்கள். அனைத்து உயிர்களுக்கும் நானே உயர் நிலையில் உள்ள தலைவன் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள் 



நாம் என்பது இந்த சரீரம் மட்டும் தானா ?  உடல் தான் நாம் என்றால் உடல் தான் மற்றவர்களும் உடல் மட்டும் தான்.

சரி, நான் என்பது உடல் மட்டும் தான் என்று வைத்துக் கொள்வோம்....எந்த உடல் நான் ?

சிறு வயதில் ஒரு அடி உயரம் இருந்த உடலா, பின் வளர்ந்து இளைஞனாக இருந்த உடலா, பின் வயதான பின் , முடி நரைத்து, பல் விழுந்த வயோதிக உடலா ?

எது நான் ?

எது நீங்கள் ?

உடலைத் தாண்டி "நான்" "நீங்கள்" என்பதில் ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா ?

நம் வாழ்க்கை உடல் சார்ந்ததாகவே அமைந்து இருக்கிறது.

எதிரில் இருக்கும் தாத்தா, குரு, உறவினர்கள் இவர்களை எப்படி கொல்வேன் என்று தயங்குகிறான்  அர்ஜுனன்.

இந்த விருப்பு, வெறுப்பு, பாசம், நேசம், அன்பு, கோபம் எல்லாம் உடல் சார்ததாகவே  இருக்கிறது.

நம் கடமையை செய்யத் தடையாக இருப்பது நாம் உடலோடு நின்று போவதால்.

"மனித சரீரத்தில் இருக்கும் என்னை மூடர்கள் உதாசீனம் செய்கிறார்கள்"

இப்படியும் யோசிக்கலாம்....

"மனித சரீரத்தில் இருக்கும் என்னை மூடர்கள் போற்றுகிறார்கள் அல்லது வணங்குகிறார்கள் "

மனித சரீரம் என்பது முடிவான ஒன்று அல்ல. அதையும் தாண்டி ஏதோ இருக்கிறது.

"அனைத்து உயிர்களுக்கும் நானே உயர் நிலையில் உள்ள தலைவன் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்"

இத முந்தைய ஸ்லோகத்தில் விரிவாக பார்த்தோம்.

பொருள்கள் (நகர்வன, நகராமல் இருப்பன) உருவாவதும், இயங்குவதும் இயற்கை மற்றும்  என் மேற்பார்வையில் என்று பார்த்தோம்.

ஒரு மகள் பிறக்கிறாள் என்றால் கூடவே தாயும் பிறக்கிறாள். மகள் இல்லாமல் தாய்  ஏது ? எப்படி ஒரு தாய் மகளை உருவாக்கினாளோ அதே போல் ஒரு மகளும் தாயை    உருவாகக் காரணமாய் இருக்கிறாள். 

இந்த உலகம் உருவாக இரண்டு காரணங்கள் வேண்டும்.

ஒன்று இயற்கை. 

மற்றொன்று தனி மனித அனுபவம். 

இந்த இரண்டும் சேர்ந்த கலவை தான் உலகம். 

இதில் ஒன்று இல்லாவிட்டாலும் இந்த உலகம் இல்லை. 

இதில், இயற்கை மட்டும் தான் (மனித சரீரம்) உலகம் என்று மூடர்கள் நினைக்கிறார்கள். 

பொருள்களைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. 

பொருள் முதல் வாதம் என்று சொல்லுவார்கள். 

Dialectical Materialism ...பொருள்தான் எல்லாம், பொருள்களைத் தாண்டி ஒன்றும் இல்லை  என்று மூடர்கள் கூறுவார்கள் என்கிறார்.

ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், இன்றைய நவீன அறிவியல் பார்பவரைப்  பொறுத்து உலகம் மாறுகிறது என்கிறது. 

Relativity என்பதன் அர்த்தம் அதுதான்.  உண்மை என்று எதுவும் தனியாக இல்லை. 

பார்ப்பவரை பொறுத்து உலகம் மாறுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

வியாசர் quantum physics ஐ கண்டு பிடித்தார் என்று சொல்லவில்லை. 

Subjective Objectivism பற்றிய சிந்தனைகள் இருந்திருக்கிறது. 

சிந்திப்போம் 




Friday, March 21, 2014

கீதை - 9.10 - இயற்கை மற்றும் அனுபவம்

கீதை - 9.10 - இயற்கை மற்றும் அனுபவம் 


मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥९- १०॥

மயாத்⁴யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் |
ஹேதுநாநேந கௌந்தேய ஜக³த்³விபரிவர்ததே || 9- 10||

மயா= என்
அ த்⁴யக்ஷேண = மேற்பார்வையில் 
ப்ரக்ருதி:  = இயற்கையில்
ஸூயதே = வெளிப் படுகிறது
ஸ = இரண்டும்
சராசரம் = நகர்வதும், நகராததும் 
ஹேதுநா = காரணத்தால்
அநேந = இந்த
 கௌந்தேய  = குந்தி புத்திரனே
ஜக³த்³ = உலகம்
விபரிவர்ததே = வேலை செய்கிறது


என் மேற்பார்வையில் அசைவனவும் அசையாததும் இயற்கையில் உண்டாகிறது. இதனால் இந்த உலகம் இயங்குகிறது. 

நிதானமாக ஆராய வேண்டிய சுலோகம்.

உலகம் அனைத்தையும் ஒன்றாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்லுவது ? அசைவன, மற்றும் அசையாதன என்று கூறும் போது உலகம் அனைத்தும் அதில் வந்து விடுகிறது.

இந்த அசையும் மற்றும் அசையாத பொருள்கள் என்ன ஆகின்றன ?

இவை இரண்டு காரியங்களை செய்கின்றன.

ஒன்று , இவை உருவாகின்றன.

இரண்டாவது, அவை இயங்குகின்றன.

இப்படி அசைவன மற்றும் அசையாதவை ,  உருவாகி,இயங்கக் காரணம்  என்ன?

ஒன்று இயற்கை, இன்னொன்று என் மேற்பார்வை.

ஒன்று பொருள்களின் இயற்கை, இன்னொன்று நாம் அதை அறிந்து கொள்ளும் விதம் இவை இரண்டும் சேர்ந்து இந்த உலகை உருவாகவும் இயங்கவும் காரணமாக இருக்கின்றன.

Subjective and Objective இவை இரண்டும் கலந்ததுதான் உலகம்.

பொருள்களும், பொருள்களோடு சேர்ந்த நம் அனுபவமும் சேர்ந்ததுதான் உலகம்.

நம் அனுபவம் இல்லாமல் பொருள்களும் உயிர்களும் முழுமை பெறுவது இல்லை.

சற்று குழப்பமாக இருக்கலாம்.

சில  உதாரணம் மூலம் பார்ப்போம்.....

ஒரு இருக்கிறாள்....

அவளை ஒருவர்  மகள்  .என்கிறார்

மற்றொருவர் மனைவி என்கிறார்

மற்றொருவர் தாய் என்கிறார்

இன்னும் ஒருவர் பாட்டி என்கிறார்.....

அவள் யார் ?

பெண் என்பது அவள் இயற்கை.

மகள், மனைவி, தாய், பாட்டி என்பது எல்லாம் பார்பவர்களின் அனுபவம்.

இப்படி இந்த உலகம் இயற்கை மற்றும் தனி மனித அனுபவக் கலவையால் உருவாகிறது.

சரி, அப்படியே இருக்கட்டும்....அதனால் என்ன ?

நமக்கு விருப்பும், வெறுப்பும் ஏன் வருகிறது ?

ஏன் என்றால், மற்ற உயிர்களும், பொருள்களும் நமக்கு வெளியே நாம் இன்றி தனியாக இருப்பதாய் நினைக்கிறோம். அதனால் அவற்றின் மேல் நமக்கு விருப்பும், வெறுப்பும் வருகிறது.

வெளியில் உள்ள அனைத்தும் நம்மால் உருவானவை என்று அறிய வேண்டும்.

அப்படி அறியும் போது அவை உருவாகவும், இயங்கவும் நாமும் ஒரு காரணம் என்று உணரத் தலைப் படுவோம்.

இந்த உலகம் படைக்கப் பட்டு இயங்க நீங்களும் ஒரு காரணம்.

நீங்கள் இன்றி இந்த உலகம் இல்லை.

இந்த உலகை படைத்தவர் நீங்கள்.

இந்த உலகின் எஜமானர் நீங்கள். இங்கு உள்ளவகைளுக்கு நீங்கள் அடிமையாகலாமா ?

எதற்கு பயப்படுகிறீர்கள் ?

ஏன் இந்த ஏக்கம் ?

இவை அனைத்தும் உங்களுடையது.

அமைதியாக ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.

வேற்றுமைகள் மறையும். ஆசைகளும், ஏக்கங்களும் கரையும்.

அமைதியும் ஆனந்தமும் பெருகும்.
















Thursday, March 20, 2014

கீதை - 9.9 - விருப்பு வெறுப்பு இன்றி காரியம் செய்யுங்கள்

கீதை - 9.9 - விருப்பு வெறுப்பு இன்றி காரியம் செய்யுங்கள் 


न च मां तानि कर्माणि निबध्नन्ति धनंजय ।
उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ॥९- ९॥

ந ச மாம் தாநி கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய |
உதா³ஸீநவதா³ஸீநமஸக்தம் தேஷு கர்மஸு || 9- 9||


ந = இல்லை
ச = மேலும்
மாம் = என்னை
தாநி = அவை எல்லாம்
கர்மாணி = கர்மங்கள்
நி பத்நந்தி = கட்டுப் படுத்துவது இல்லை
த⁴நஞ்ஜய = தனஞ்சய
உதா³ஸீநவத் = பற்றற்று இருப்பதன் மூலம் (உதாசீனப் படுத்துவதன் மூலம்)
அஸீநம் = அமைந்திருக்கிறது 
அஸக்தம் =  கவரப் படாமல் , பற்று இல்லாமால்
தேஷு = அந்த
கர்மஸு = கர்மங்களின்


என்னை வினைகள் கட்டுப் படுத்துவது இல்லை ஏன் என்றால் நான் அவைகளின் மேல் பற்றற்று நடு நிலையோடு இருக்கிறேன். 

வினைகள் எப்போது நம்மை கட்டுப் படுத்துகின்றன ?

நாம் அவற்றின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளும்போது அவை நம்மை கட்டுப்படுத்துகின்றன.

நமக்கு வேண்டும் என்றால் விருப்பு  ஏற்படுகிறது.

வேண்டாம் பிடிக்காது என்றால் வெறுப்பு வருகிறது.

வினைகள் நம்மை ஒன்றும் செய்வது இல்லை. அவற்றின் மேல் உள்ள விருப்பும் வெறுப்பும்  நம்மை பாதிக்கின்றன.

எப்படி ?

எப்போது ஒரு காரியத்தின் மேல் விருப்பு வருகிறது ? அதன் மூலம் நமக்கு ஏதோ ஒரு பலன் கிடைக்கும் என்றால்  அதன் மேல் விருப்பு வருகிறது.

பலன் மேல் நாட்டம் போகும் போது , பலன் அதிகம் கிடைக்க வேண்டுமே என்ற  ஆசை வருகிறது, கிடைக்காதோ என்ற பயம் வருகிறது, மற்றவன் எடுத்துக் கொள்வானோ  என்று பொறாமை வருகிறது....

வெறுப்பு எப்போது வருகிறது ?

அந்த செயலினால் நமக்கு துன்பம் வரும்  என்றால்,ஆபத்து வரும் என்றால், மற்றவர்களுக்கு (நமக்கு வேண்டாதவர்களுக்கு)  பலன் கிடைக்கும் என்றால் வெறுப்பு வருகிறது.

இப்படி விருப்பும், வெறுப்பும் வரும் போது செயலில் நாட்டம்  போகிறது. செயல் செய்வதில்  முனைப்பு போகிறது.

இலாப நட்ட கணக்குகள்  நம்மை அலைக்கழிக்கின்றன. சோர்ந்து போகிறோம்.

விருப்பு வெறுப்பு ஏன் வருகிறது என்றால் , செயலைத் தாண்டி  அது தரும் பலன்கள் மேல் மனம் செல்லும்போது விருப்பு வெறுப்பு வருகிறது.

வேலை முக்கியம் இல்லை - சம்பளம்  முக்கியம்.

சம்பளம் முக்கியம் என்று ஆன பின், அது  எவ்வளவு, எப்போது சம்பள உயர்வு வரும், எப்போது ஊக்கத் தொகை வரும், இந்த மேனேஜர் என்ன செய்யப் போகிறானோ என்று ஆயிரம் கவலைகள் வரும். வேலையில் கவனம் சிதறிப் போகும்.

செயலின் மேல் நாட்டமோ வெறுப்போ இருந்தால், அந்த செயல்கள் நம்மை கட்டுப்   படுத்தும்.அவைகளுக்கு நாம் அடிமைகளாவோம்.

பயமின்றி, ஏக்கம் இன்றி, ஆசை இன்றி, அலைச்சல் இன்றி மிக மிக சுகமாக,   ஒரு  பந்தமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் , விருப்பு வெறுப்பு இன்றி .காரியம் செய்யுங்கள்.

 "என்னை கட்டுப் படுத்தாது " என்று கண்ணன் சொன்னால் , அது உங்களுக்கும்  பொருந்தும்.

பற்றற்று காரியம்  செய்து பாருங்கள்...காற்றில் மிதக்கும் இறகு போல மனம் லேசாகிப் போகும்.  


Wednesday, March 19, 2014

கீதை - 9.8 - சலனமும் பிம்பமும்

கீதை - 9.8 - சலனமும் பிம்பமும் 


प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः ।
भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ॥९- ८॥

ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்⁴ய விஸ்ருஜாமி புந: புந: |
பூ⁴தக்³ராமமிமம் க்ருத்ஸ்நமவஸ²ம் ப்ரக்ருதேர்வஸா²த் || 9- 8||

ப்ரக்ருதிம்= இயற்கையில்
ஸ்வாம் = என்னில் இருந்து
அவஷ்டப்⁴ய = ஏற்றுக் கொண்டு , உறுதி கொண்டு
விஸ்ருஜாமி = நான் படைக்கிறேன்
புந: புந: |  = மீண்டும் மீண்டும்
பூ⁴தக்³ராமம் = உயிர் தொகுதிகளை
இமம் = இவை
க்ருத்ஸ்ம் = மொத்தமாக
அமவஸ²ம் = தன்னிச்சியாக
ப்ரக்ருதே = இயற்கை சக்தியின்
வஸா²த் = வசத்தால் , கட்டுப் பாட்டால்


என் சக்தியில் நிலை கொண்டு, இந்த உயிர் தொகுதிகள் முழுவதையும், தன்னிச்சையாக, இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன். 


சற்று குழப்பமான ஒரு சுலோகம்.

இங்கே யார் படைக்கிறார்கள் ? கண்ணனா ? இயற்கையா ?

தன்னிச்சியாக, இயற்கையின் சக்தியின்பால் பட்டு என்றும் வருகிறது.

நான் படைக்கிறேன் என்றும் வருகிறது.

எது சரி ?

இரண்டும் சரிதான்.

எப்படி ?

இதற்கு விளக்கம் பாரதியார் தருகிறார்.

குள்ளச் சாமி என்ற கவிதையில்.


பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “அறிந்தேன் என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

இந்தப் பாட்டிற்கும், கீதை ச்லோகதிற்கும் என்ன சம்பந்தம் ?

சூரியன் இருக்கிறான்.

அதன் பிம்பம் தெளிந்த கிணற்று நீரில் விழுகிறது.

குழம்பிய சாக்கடை நீரிலும் விழுகிறது.

சூரியன் என்ற மிகப் பெரிய சக்தியை நீரில் காண  முடியாது.முடியாது. கண் கூசும். சுட்டெரிக்கும்.

அதன் தன்மையை நீரில் தெரியும் அதன் பிம்பத்தில் பார்க்கலாம்.

அது போல இங்குள்ள அனைத்தும் ஏதோ ஒரு சக்தியின் வெளிப்பாடு.

பிம்பம் தெரிவது நீரின் இயற்கையால் .

அந்த பிம்பம் தெரியக் காரணமாய் இருப்பது சூரியன்.

நீங்களும்,  நானும்,  இவரும் , அவரும் எல்லோரும் ஏதோ ஒன்றின் வெளிப்பாடு. அதை நாம் பிரதி பலித்துக் கொண்டு இருக்கிறோம்.

சூரியன்  ஒன்றுதான். பிம்பங்கள் வெவ்வேறாகத் தெரியும் - நீர் நிலையின் தன்மையினால்.

ரமண மகரிஷி போன்றோரில் இருந்து வெளிப்படும் ஆற்றலும் , உங்களுக்குள் இருந்து வெளிப்படும் ஆற்றலும் ஒன்றேதான்.

ஒன்று தெளிந்த , அமைதியான நீர் நிலை.

இன்னொன்று கலங்கிய , குழம்பிய , சலனம் உள்ள நீர் நிலை.

சூரியனைக் கேட்டால் அது என்ன சொல்லும் ? அந்த பிம்பங்களுக்குக் காரணம் நான்தான். என் ஆற்றலால, ஒளியால் அவை தோன்றுகின்றன என்று சொல்லும்.

பின் ஏன் வேறு பட்டிருகிறது என்று கேட்டால் , அது நீர் நிலையின் இயற்கையை பொறுத்து அமையும் என்று சொல்லும்.

மீண்டும் மீண்டும் என்னை வெளிப் படுத்துகிறேன் என்று கிருஷ்ணன் கூறுவதன் அர்த்தம் என்ன என்றால் ...நீர்ப் பரப்பில், சலனம் வருகிறது. பிம்பம் கலைந்து போகிறது.

சலனம் குறைந்து தெளிவு வருகிறது....பிம்பம் சரியாக வெளிப் படுகிறது...மீண்டும் சலனம்......

அந்த மாபெரும் சக்தி உங்களில் இருந்து வெளிப்பட வேண்டும் என்றால், முதலில்  சலனம் குறைய வேண்டும், கொந்தளிப்பு குறைய வேண்டும், அமைதி  வந்து சேர வேண்டும்....

உங்களை தயார் பண்ணுங்கள்.  மனதை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். ஸ்தித ப்ரஞ்ஞனாய், சலனம் அற்று இருங்கள்.

அளவற்ற சக்தி உங்கள் மூலமும் வெளிப்படும்.



Tuesday, March 18, 2014

கீதை - 9.7 - வாழ்வின் நோக்கம் முன்னேற்றம்

கீதை - 9.7 - வாழ்வின் நோக்கம் முன்னேற்றம் 


सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥९- ७॥

ஸர்வபூ⁴தாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் |
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ³ விஸ்ருஜாம்யஹம் || 9- 7||

ஸர்வபூ⁴தாநி =     அனைத்து உயிர்களும்

கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரக்ருதிம்  = இயற்கையில்
யாந்தி  =  பிறக்கின்றன
மாமிகாம் = என்
கல்பக்ஷயே = கல்ப காலத்தின்  முடிவில் 
புந = மீண்டும் 
தாநி = அவை எல்லாம்
கல்பாதௌ³= கல்ப காலத்தின் தொடகத்தில்
விஸ்ருஜாம் = படைக்கிறேன்
அஹம் = நான்



குந்தி மகனே, கல்ப காலத்தின் தொடக்கத்தில் நான் எல்லா உயிர்களும் இயற்கையில் தோன்றுகின்றன. அந்த காலத்தின் முடிவில் அவை என் நிலையை  அடைகின்றன.

ப்ரக்ரிதிம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள்.  -  ,இயற்கை, சக்தி, இயல்பு, பழக்கம்.

உயிர்கள் இயற்கையில் பிறக்கின்றன.

உரை எழுதிய பல பெரியவர்கள் கல்ப காலத்தின் தொடகத்தில் நான் உயிர்களைப் படைக்கிறேன், இறுதியில் அவை என்னை வந்து அடைகின்றன என்று பொருள்  சொல்லி இருக்கிறார்கள்.

சற்று வேறு கோணத்தில் பார்த்தால்,

காலத்தின் தொடகத்தில் உயிர்கள் இயற்கையில் தோன்றுகின்றன. காலத்தின் முடிவில் அவன் என் நிலையை அடைகின்றன

என்றும் பொருள் சொல்லலாம்.

"என் நிலை"யை அடைகின்றன என்றால் என்ன ? என்னை அடைகின்றன என்று சொல்லவில்லை. என் நிலை என்றால் என்ன ? எது கிருஷ்ணனின் நிலை ?  தன்னைத் தான் அறிந்த ஒரு யோகியின் நிலை.

உயிர்களின் நோக்கம் அந்த இறை நிலையை அடைவது.

அதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஒரு கல்ப காலம் என்பது ஒரு குறியீடு.

பிறப்பது இயற்கை. பிறந்த பின் அவை தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். முன்னேறி முன்னேறி ஒரு இறை நிலையை அடைய வேண்டும்.

வாழ்வின் நோக்கம் முன்னேறிச் செல்வது.

நீங்கள் முன்னேருகிரீர்களா ? நேற்றையை விட இன்று நீங்கள் சிறந்தவர்களா ?

இன்றைய தினம் உங்களை நாளை ஒரு சிறந்த மனிதனாகச் செய்யுமா ?

நீங்கள் என்ன செய்து கொண்டு இருகிறீர்கள் ?

முன்னேற்றப் பாதையில் இருக்கிறீர்களா ?

வாழ்கை என்ற உந்து சக்தி நமக்கு நாளும் பாடம் நடத்துகிறது. அது மட்டும் அல்ல, தேர்வும் வைக்கிறது. தேர்வில் மதிப்பெண்ணும் தருகிறது.

தேர்வில் தேறாவிட்டால் என்ன ஆகும் ?

அதை அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறான்  கண்ணன்.



கீதை - 9.6 - காற்றும் ஆகாயமும்

கீதை - 9.6 - காற்றும் ஆகாயமும் 


यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥९- ६॥

யதா²காஸ²ஸ்தி²தோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ³ மஹாந் | 
ததா² ஸர்வாணி பூ⁴தாநி மத்ஸ்தா²நீத்யுபதா⁴ரய || 9- 6||

யதா² = இது போல்
அகாஸ²ஸ்தி²தோ = ஆகாயத்தில் இருப்பது போல்
நித்யம் = எப்போதும்

வாயு: = காற்று
ஸர்வத்ரகோ = எங்கும் வீசுவது போல 
மஹாந் = உயர்ந்த
ததா² = அது போல
ஸர்வாணி பூ⁴தாநி = அனைத்து உயிர்களிலும்
மத்ஸ்தா²நீ = என்னுள் இருக்கின்றன
இதி = இதை
யுபதா⁴ரய = அறிந்து கொள்ள முயல்

எங்கும் வீசும் காற்று எப்படி வானில் நிலைத்து இருக்கிறதோ, அது போல பொருள்கள் என்னில் நிலைத்து இருக்கின்றன.

"என்னில் அவை இருக்கின்றன, அவற்றில் நான் இல்லை " என்று முந்தைய ஸ்லோகத்தில்  பார்த்தோம்.

அது எப்படி என்ற குழப்பம் நமக்கு ஏற்படுவது இயல்பு.

 இந்த ஸ்லோகத்தில் அது     விளக்கப்படுகிறது.

காற்று எங்கும் அலைந்து கொண்டிருக்கிறது.  காற்றைத் தாண்டி ஆகாயம் இருக்கிறது.

ஆகாயதிற்குள் காற்று இருக்கிறது. காற்றில் ஆகாயம் இல்லை. ஆகாயம் மிகவும் பறந்து பட்டது. எல்லை இல்லாதது. தோற்றமும் முடிவும் இல்லாதது.

காற்று அதன் ஒரு பகுதி. காற்று இல்லாத இடமும் உண்டு. ஆகாயம் இல்லாத இடம் இல்லை.


ஆகாயதிற்குள் காற்று அடங்கி இருக்கிறது.

ஒன்றைப் பார்க்கும் போது நமக்கு இரண்டு விதமான எண்ணங்கள் வரும்.

முதலாவது, நாம் காணும்  அந்தப் பொருள் எவ்வவற்றின் தொகுதி  ?

இரண்டாவது, நாம் காணும் அந்தப் பொருள் எதன் பகுதி ?

 காற்று அசையும் போது வானம் அசைவது இல்லை. காற்று என்ன தான் செய்தாலும் வானம் அப்படியே அசையாமல் இருக்கிறது.

ஆகாயதிற்குள் காற்று இருக்கிறது.

ஆனால் காற்று ஆகாயத்தை கட்டுப் படுத்துவது இல்லை.

காற்றின் குணம்  வேறு.ஆகாயத்தின் குணம் வேறு.

அவை என்னில் இருக்கின்றன. நான் அவற்றில் இல்லை.

காற்று இன்று இருக்கும். நாளை இல்லாமல் போகும். ஆகாயம் என்றும் ஒரே மாதிரி இருக்கும்.

பொருள்கள் குணங்களால் ஆனவை.

குணங்கள் மனதால், அறிவால் அறியப்  படுகின்றன.

அறிவையும் மனதையும் கட்டுப் படுத்துபவன் நான்.

 ,எனவே, பொருள்கள் என்னில் நிலை பெற்று இருக்கின்றன.











Monday, March 17, 2014

கீதை 9.5 - நான் விளையாட்டாக படைக்கிறேன்

கீதை 9.5 - நான் விளையாட்டாக படைக்கிறேன் 


न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥९- ५॥

ந ச மத்ஸ்தா²நி பூ⁴தாநி பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் | 
பூ⁴தப்⁴ருந்ந ச பூ⁴தஸ்தோ² மமாத்மா பூ⁴தபா⁴வந: || 9- 5||

ந = இல்லை
ச = மேலும்
மத்ஸ்தா²நி = என்னில்
பூ⁴தாநி = அனைத்தும்
பஸ்²ய மே = பார்
யோக³மைஸ்²வரம்  = ஈஸ்வரத் தன்மையுடைய யோக
பூ⁴தப்⁴ருந் = பூதங்களை தாங்குபவன் 
ந = இல்லை
ச = மேலும்
பூ⁴தஸ்தோ = உயிர்களில் நிலை  பெற்று
மமா = நான் 
ஆத்மா = ஆத்மா
 பூ⁴தபா⁴வந:  =  பூதங்களின் இயற்கையை உருவாக்குபவன்

படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் என்னில் நிலைத்து இருப்பது இல்லை. என்னுடைய லீலையில், எல்லா உயிர்களையும் நான் வெளிப் படுத்துகிறேன். என்னுள் அவை இருக்கின்றன. அவைகளில் நான் இல்லை.


வடிவங்களும் பெயர்களும் இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா ?

பொருள்களின் (உயிர்களின்) பெயரும், வடிவங்களும்  மாறிக் கொண்டே இருக்கின்றன.

வடிவங்களையும், பெயரையும் தாண்டி அவற்றிற்கு பின்னால் இருப்பது  ஒன்று தான்.

வெவ்வேறு விதமான அலைகளைத் தாண்டி கடல் என்ற ஒன்று சாஸ்வதமாக இருக்கிறது.

மேஜை,நாற்காலி, சன்னல் என்ற வடிவங்களைத் தாண்டி மரம் சாஸ்வதமாக இருக்கிறது.

மோதிரம், வளையல் என்ற இவற்றைத் தாண்டி தங்கம் என்ற ஒன்று நிரந்தரமாக இருக்கிறது.

அப்படி பார்க்கும் போது இந்த உலகம் ஏதோ ஒன்றினால் ஆக்கப் பட்டு இருக்கிறது. அது எல்லாவற்றிலும் இருக்கிறது. அதில் இவை எல்லாம் இல்லை.

இது வரை சரிதானே ?

பொருள்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சேர்வதும், பிரிவதும், பின் சேர்வதும் என்று தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன.

ஏன் இப்படி மாறுகின்றன ? ஒரே மாதிரி இருக்க வேண்டியது தானே ?

இந்த உலகம் எப்படி தோன்றியது என்று அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி  பதில்  தரும். சரியா தவறா என்பது வேறு விஷயம். ஏதோ ஒரு பதில் இருக்கிறது.

ஆனால் ? ஏன் இந்த உலகம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் கிடையாது.

இறைவன் உலகைப் படைத்தான் என்று சமயம் சாதிக்கும்.

ஏன் படைத்தான் என்ற கேள்விக்கு விடை கிடையாது.

அது ஒரு விளையாட்டு, லீலை அவ்வளவுதான்.

எந்த ஒரு விளையாட்டைப் பார்த்தாலும் நமக்கு வேடிக்கையாக இருக்கும்.

ஒருவன் பந்தைப் போடுவான், ஒருவன் அடிப்பான், ஒருவன் பிடிப்பான், மற்றவன் ஓடுவான்...எதற்கு இது எல்லாம் என்று கேட்டால் ....அது தான் விளையாட்டு.

அதற்கு ஒரு காரணமும் கிடையாது.

இந்த உலகும், இதில் உள்ள பொருள்களின் தோற்றமும், மறைவும் ஒரு காரணமும் இன்றி நடக்கின்றன.


பொருள்கள் வெளிப்படுகின்றன.  அது ஒரு லீலை.

சரி, அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன ?

இருக்கிறதே....

என் லீலையில் , மிகச் சரியாக சொல்வது என்றால், "ஈஸ்வர தன்மையுள்ள யோகத்தினால்" நான் பொருள்களை வெளிப் படுத்துகிறேன்.

இதன் உள் அர்த்தம் - பொருள்களும், சம்பவங்களும் காரணம் இன்றி நிகழ்கின்றன.

கிருஷ்ணன், பொருள்களை இன்ன காரணத்திற்காக நான் வெளிப் படுத்துகிறேன்  என்று சொல்ல வில்லை. அவனுடைய ஏதோ ஒரு தன்மையால் வெளிப் படுத்துகிறான். அவ்வளவுதான்.

விதி என்றும், காரணம் என்றும் ஒன்றைத் தேடித் திரியத் தேவை இல்லை.

எல்லாம் விளையாட்டாக நடக்கிறது.

"அலகிலா விளையாட்டு உடையாரவர் ,தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே "


கீதை - 9.4 - என்னில் அவைகளும், அவற்றில் நானும்

கீதை - 9.4 - என்னில்   அவைகளும், அவற்றில் நானும் 


मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना ।
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥९- ४॥

மயா ததமித³ம் ஸர்வம் ஜக³த³வ்யக்தமூர்திநா | 
மத்ஸ்தா²நி ஸர்வபூ⁴தாநி ந சாஹம் தேஷ்வவஸ்தி²த: || 9- 4||

மயா = என்னால்
ததம் = சூழப்பட்டு இருக்கிறது, நிறைந்து இருக்கிறது
இதம் = இந்த
ஸர்வம் = அனைத்து
ஜகத் = உலகம் 
அவ்யக்த மூர்திநா = வெளிப்படாதா வடிவில்  
மத்ஸ்தா²நி = என்னில்
ஸர்வபூ⁴தாநி = அனைத்து உயிர்களும் 
 ந  = இல்லை
சா = மேலும்
ஹம் = நான்
தேஷ் = அவைகளில்
வவஸ்தி²த: = நிலை பெற்று

வெளிப்படாத வகையில் நான் இந்த உலகை சூழ்ந்து இருக்கிறேன். அனைத்திலும் நான் இருக்கிறேன். என்னில் அவைகள் இல்லை.


மேஜை, நாற்காலி, கதவு, ஜன்னல் என்று எத்தனையோ மரச் சாமான்கள் மரத்தில் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பயன் பாடு இருக்கிறது.

எல்லாம் வேறு வேறு மாதிரி இருந்தாலும், இவை அனைத்தும் மரத்தில் இருந்து வெளிப் பட்டவை என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

அத்தனை மரச் சாமான்களும் மரத்தில் இருந்து வெளிப் படுகின்றன. வெளிப் படுவதற்கு  முன்னால் அவை வெளிப் படாமல் இருக்கின்றன.

வெளிப்பட்ட பின் வடிவங்களும் பெயர்களும் மாறிப் போகின்றன.

வெளிப் படுவதற்கு முன்னால் அவை யாவும் மரம் என்றே அறியப் படுகிறது.

அது போல,

எத்தனையோ உயிர்கள், உயிர் அற்றவை என்று இருக்கின்றன. அவற்றின் பெயரும், வடிவும் வேறு பட்டு இருந்தாலும், அவை அவ்வாறு வெளிப்படுமுன் ஏதோ ஒன்றில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது அல்லவா ?


அது அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

அடுத்து, "என்னில் அவை இருக்கின்றன, அவைகளில் நான் இல்லை"

அது எப்படி ?

இரவில், தூரத்தில் , கொடியில் ஒரு வெள்ளை துணி காற்றில் ஆடுகிறது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது பேய் மாதிரி தெரிகிறது. சற்று கிட்ட போய் பார்த்தால், துணி என்று தெரிகிறது.

பேய் துணியில் இருந்தது.

துணி பேயில் இல்லை.

நாம் பார்க்கும் பலவித வடிவங்கள், பெயர்கள் எல்லாம் அந்த பேய் போல. உண்மை தெரியும் போது , அவை மறைந்து விடுகின்றன. துணி மட்டும் தெரியும்.

எவ்வளவு ஆழகழகான பெண்கள், எத்தனை உணவு வகைகள், இடங்கள், இசை, துணி மணிகள், சாமான்கள் ....அத்தனையும் உண்மையான அறிவு ஏற்படும்போது  எல்லாம் ஒன்றுதான் என்று மறைந்து போகும்.

பொய் தோற்றங்கள் மறையும்.உண்மை வெளிப்படும்.

பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி என்பார் மணிவாசகர்.

சிக்கல் என்ன என்றால் நமக்கு எது பொய் எது மெய் என்று தெரியாது.

துணி அல்ல அதன் நிழல் ஆடும் பேய் தான் நிஜம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நிழல்களுக்கு பின்னால் உள்ள நிஜத்தை அறிய வேண்டும்.







Sunday, March 16, 2014

கீதை - 9.3 - பாகம் 2 - தர்மத்தின் வழியில்

கீதை - 9.3 - பாகம் 2 - தர்மத்தின் வழியில் 


अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥९- ३॥

அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா த⁴ர்மஸ்யாஸ்ய பரந்தப |
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி || 9- 3||


அ - ஸ்ரத்த - தாநா: =  சிரத்தை இல்லாத 
புருஷா = மனிதர்கள்
தர்மஸ்யாஸ்ய = தர்மத்தின் பால்
பரந்தப  = எதிரிகளை அழிப்பவனே
அப்ராப்ய = அடையாமல்
மாம் = என்னை
நிவர்தந்தே =  மீண்டு வருகிறார்கள்
ம்ருத்யு = இறந்து
ஸம்ஸார = சம்சார
வர்த்மநி = பாதையில் , வழியில்

தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள், என்னை அடையாமல் , மீண்டும் மீண்டும் இறந்து இந்த சம்சாரத்தில் கிடந்து உழல்கிறார்கள்.

மிக ஆழமான சுலோகம். பகுதி பகுதியாக பிரித்து சிந்திப்போம்.

"தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்": தர்மம் என்றால் என்ன ? எளிமையான விளக்கம் தர்மம் என்றால் இயற்கை, இயல்பு. நாம் நம் இயற்கையை மறந்து போகிறோம். நாம் யார் என்று நாம் அறியாமல் இருக்கிறோம். நான் யார், என் தகுதி என்ன, என் திறமைகள் என்ன, எது எனக்கு இயல்பாக வரும் என்று அறியாமல் கிடந்து துன்பப் படுகிறோம்.

ஒரு குழந்தைக்கு கணிதம் சரியாக வராமல் இருக்கலாம். அது அதன் இயற்கை.  நாம், விடுவது இல்லை. அது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றே  தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். அதனால் அந்த குழந்தையும் துன்பப் படும், பெற்றோரும் துன்பப் படுவார்கள்.

பிள்ளைகளை விடுங்கள். நாம் என்ன செய்கிறோம் ? நாம் செய்யும் எல்லா காரியமும்  நம் விருப்பம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைந்ததா ? இல்லையே. ஏதோ செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் வேறு எதையோ செய்ய வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறது.

இயற்கை அல்லாதது தர்மம் அல்லாதது. அது அதர்மம். உங்கள் இயற்கைக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால் அது அதர்மம்.

சரி, இந்த இயற்கையை எப்படி அறிந்து கொள்வது ?

நான் பாடகனா ? மருத்துவனா ? படம் வரைவதில் வல்லவனா ? நிதித்துறையா ? பொறியியல் துறையா ?

ஆயிரக்கணக்கில் துறைகள் இருக்கின்றன. நான், என் இயற்கையை எப்படி கண்டு பிடிப்பது  ? பின் அதில் எப்படி செல்வது ?

கீதை அதற்கும் வழி காட்டுகிறது.

மேலும் சிந்திப்போம்.


------------------------------------------------------------------------------------------------------------

தர்மம் என்றால் இயற்கை, இயல்பு என்று பார்த்தோம். எது இயற்கை, எது இயல்பு என்று எப்படி அறிவது.

திருடுவது, கொலை செய்வது, எனக்கு இயற்கை என்றால் அதை நான் செய்யலாமா ? அதைத்தான் கீதை சொல்கிறதா ?

அப்ராப்ய மாம்: என்னை அடையாமல்

என்னை அடையாமல் என்றால் கிருஷ்ணனை சென்று அடைவது என்று அர்த்தம் கொள்வதை விட, எனக்குள் இருக்கும் என்னை அடையாமல் என்று கொள்ளலாம்.

நான் யார் என்று அறியும் போது , என் இயற்கை , என் இயல்பு எது என்றும் அறிய  முடியும். ஒரு வேளை அப்படி தன்னை அறியும் முயற்சியில் ஒருவன் தான் ஒரு   திருடன் , பொய்யன் என்று அறிவான் என்றால், அது தான்  அவன் தர்மம்.  அவன் அந்த வழியில் சென்று தான் முன்னேற முடியும்.


தன் இயற்கை இல்லாத ஒன்றை செய்பவன் அதர்ம வழியில் போகிறான். அப்படி போபவன் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவான்.

அப்படி என்றால் என்ன ?

அவனால் மேலும் மேலும் முன்னேற முடியாது.

மோக்ஷம், விடுதலை...அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

என்னை (தன்னை) அறிபவன், தன்  தர்மத்தை அறிகிறான்.
தன் தர்மத்தை அறிபவன், அதன் வழியில் செல்கிறான்.
தர்மத்தின் வழியில் செல்பவன், மேலும் மேலும் உயர்கிறான்.


தன்னை அறியாமல், தன் தர்மத்தை அறியாமல் வாழ்கையை நடத்திச் செல்பவன் வாழ்வில் முன்னேறாமல் தடுமாறிக் கொண்டிருப்பான்.

வால்மீகி திருடனாக இருந்தார்
கண்ணப்பன் வேடனாக இருந்தார்
அருணகிரி பெண் பித்தராக இருந்தார்

அந்த வழி அவர்களை மிகப் பெரிய நிலைக்கு உயர்த்தியது.

அதற்காக எல்லோரும் திருடனாக வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உங்கள் தர்மத்தை செய்யுங்கள்.

மீண்டும் தொடக்கத்திற்கு போவோம்.

அர்ஜுனன் தன் தர்மத்தை செய்யத் தயங்குகிறான்.

தர்மத்தை செய் என்பது கண்ணனின் உபதேசம்.

தர்மம் உங்களை காக்கும். தர்மம், உங்களை உயர்த்தும்.






Saturday, March 15, 2014

கீதை 9.3 - தர்மத்தின் வழியில் - பாகம் 1

கீதை 9.3 - தர்மத்தின் வழியில் 


अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥९- ३॥

அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா த⁴ர்மஸ்யாஸ்ய பரந்தப |
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி || 9- 3||


அ - ஸ்ரத்த - தாநா: =  சிரத்தை இல்லாத 
புருஷா = மனிதர்கள்
தர்மஸ்யாஸ்ய = தர்மத்தின் பால்
பரந்தப  = எதிரிகளை அழிப்பவனே
அப்ராப்ய = அடையாமல்
மாம் = என்னை
நிவர்தந்தே =  மீண்டு வருகிறார்கள்
ம்ருத்யு = இறந்து
ஸம்ஸார = சம்சார
வர்த்மநி = பாதையில் , வழியில்

தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள், என்னை அடையாமல் , மீண்டும் மீண்டும் இறந்து இந்த சம்சாரத்தில் கிடந்து உழல்கிறார்கள்.

மிக ஆழமான சுலோகம். பகுதி பகுதியாக பிரித்து சிந்திப்போம்.

"தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்": தர்மம் என்றால் என்ன ? எளிமையான விளக்கம் தர்மம் என்றால் இயற்கை, இயல்பு. நாம் நம் இயற்கையை மறந்து போகிறோம். நாம் யார் என்று நாம் அறியாமல் இருக்கிறோம். நான் யார், என் தகுதி என்ன, என் திறமைகள் என்ன, எது எனக்கு இயல்பாக வரும் என்று அறியாமல் கிடந்து துன்பப் படுகிறோம்.

ஒரு குழந்தைக்கு கணிதம் சரியாக வராமல் இருக்கலாம். அது அதன் இயற்கை.  நாம், விடுவது இல்லை. அது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றே  தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். அதனால் அந்த குழந்தையும் துன்பப் படும், பெற்றோரும் துன்பப் படுவார்கள்.

பிள்ளைகளை விடுங்கள். நாம் என்ன செய்கிறோம் ? நாம் செய்யும் எல்லா காரியமும்  நம் விருப்பம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைந்ததா ? இல்லையே. ஏதோ செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் வேறு எதையோ செய்ய வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறது.

இயற்கை அல்லாதது தர்மம் அல்லாதது. அது அதர்மம். உங்கள் இயற்கைக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால் அது அதர்மம்.

சரி, இந்த இயற்கையை எப்படி அறிந்து கொள்வது ?

நான் பாடகனா ? மருத்துவனா ? படம் வரைவதில் வல்லவனா ? நிதித்துறையா ? பொறியியல் துறையா ?

ஆயிரக்கணக்கில் துறைகள் இருக்கின்றன. நான், என் இயற்கையை எப்படி கண்டு பிடிப்பது  ? பின் அதில் எப்படி செல்வது ?

கீதை அதற்கும் வழி காட்டுகிறது.

மேலும் சிந்திப்போம்.




கீதை 9.2 - இராஜ வித்தை , இராஜ இரகசியம்

கீதை 9.2  - இராஜ வித்தை , இராஜ இரகசியம் 


ராஜவித்³யா ராஜகு³ஹ்யம் பவித்ரமித³முத்தமம் | 
ப்ரத்யக்ஷாவக³மம் த⁴ர்ம்யம் ஸுஸுக²ம் கர்துமவ்யயம்

ராஜ வித்³யா = உயர்ந்த வித்தை
ராஜ கு³ஹ்யம் = உயர்ந்த இரகசியம்
பவித்ரம் = புனிதமான, தூய்மையான 
இதம் = இது 
உத்தமம் = கடந்த 
ப்ரத்யக்ஷா = நேரடியான அனுபவம் மூலம்
அவக³மம் =  அறிந்து கொள்ள முடியும்
த⁴ர்ம்யம் = தர்மம்
ஸுஸுக²ம் = மிக மிக மகிழ்ச்சியான
கர்தும் = செய்வதன் மூலம் 
அவ்யயம் = நிலைத்து நிற்கும்

இராஜ வித்யா, இராஜ குஹயம் = இராஜ வித்தை, இராஜ இரகசியம்.

அது என்ன "இராஜ". எல்லாவற்றிலும் உயர்ந்த வித்தை, உயர்ந்த இரகசியம்.

சமய மற்றும் இறை தத்துவங்கள் பொதுவாகவே கேட்க நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்துவராது. படிக்கலாம், கேட்கலாம், பேசலாம்....கடை பிடிப்பது மிக மிக கடினம்.

"தர்மம்" : இந்த உயர்ந்த வித்தை , இரகசியம் மிக மிக இயற்கையானது. தர்மம் என்றால்  இயற்கை. இயல்பு.  இயற்கைக்கு எதிரானது அதர்மம்.


 இரண்டாவது,  சமய கோட்பாடுகள், சமய நெறி முறைகள், இறை தத்துவங்கள்  அனுபவத்தில் அறிய முடியாத ஒன்று. சிந்திக்க முடியும், ஆனால்  அதை நம் அனுபவத்தில் அறிய முடியுமா ?

முடியும் என்கிறது கீதை.

அனுபவத்தில் அறிய முடியும் என்றால் செய்து பார்க்க முடியும். சரிதானா என்று  சோதித்து அறிய முடியும்.

இருந்து விட்டு போகட்டும், அது இயற்கையாகவே இருக்கட்டும், எளிமையானதாகவே இருந்து விட்டு  போகும், அதைப் பற்றி நமக்கு என்ன என்ற கேள்வி எழும்.

"இது மிக மிக மகிழ்ச்சி தரும்"  என்கிறார்.

மகிழ்ச்சி மட்டும் அல்ல, நிரந்தரமான மகிழ்ச்சி தரும் வித்தை இது.



இயற்கையானது
அனுபவத்தில் அறிந்து கொள்ள கூடியது
நிரந்தர மிகழ்ச்சி தரக் கூடியது

இதைப் பற்றி மேலும் சிந்திப்போம்.

Thursday, March 13, 2014

கீதை 9.1 - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்

Gita 9.1


ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்

श्रीभगवानुवाच
इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥९- १॥


ஸ்ரீப⁴க³வாநுவாச
இத³ம் து தே கு³ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே |
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் || 9- 1||


ஸ்ரீப⁴க³வாநுவாச  = பகவான் கூறுகிறான்

இத³ம் = இந்த
 து = ஆனால்
தே = உனக்கு
கு³ஹ்யதமம் = அதி இரகசியமான
ப்ரவக்ஷ்  = நான் சொல்கிறேன்
அநஸூயவே = அசூயை இல்லாமல்
ஜ்ஞாநம் = ஞானம்
விஜ்ஞாந = விஞ்ஞான
ஸஹிதம் = கூடவே
யத் = எது
ஜ்ஜ்ஞாத்வா = அறிவதன் மூலம்
மோக்ஷ்யஸே = மோக்ஷத்தை அடைவாய்
அஸு²பா⁴த் = துன்பத்தில் இருந்து


நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த பக்தி யோகம் ஆரம்பிக்கிறது.

கிருஷ்ணன் - மிக இரகசியமான ஒன்றை உனக்குச் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கிறான்.

இரகசியம் என்றால் உடனே நமக்கு ஒரு ஆர்வம் வரும். அது என்ன என்று அறிந்து கொள்ள  ஆர்வம் வரும். அதுவும் நமக்கு மட்டும் தான் என்றால் ஆர்வம் மேலும்    அதிகரிக்கும்.

ஒரு நல்ல presentation எப்படி இருக்க வேண்டும் என்று வியாசரிடம் இருந்து கற்றுக்  கொள்ளலாம்.

முதலில் என்ன சொல்லப் போகிறோம் என்று சொல்லி விட வேண்டும்.
அடுத்து - சொல்ல வந்ததை சொல்ல வேண்டும்.
கடைசியில் - என்ன சொன்னோம் என்று தொகுத்துச் சொல்ல வேண்டும்.

மேலும், இதை அறிவதால் நமக்கு என்ன பயன் (vlaue ) என்று சொல்லி விட வேண்டும்.

"இதை அறிவதால் துன்பத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடையலாம் "

அசூயை இல்லாமல் கேள் என்கிறார்.

"ஆமா, இது மாதிரி எத்தனை கேட்டிருப்போம் " என்று அலுத்துக் கொள்ளாமல், அதில் சந்தேகம்  கொள்ளாமல் கேள் என்கிறார்.

இது ஞானம், விஞ்ஞானம் இரண்டும் கலந்தது.

இதை அறிவதனால் என பயன் ?

துன்பங்களை கடந்து மோக்ஷம் அடையலாம்.