Thursday, July 31, 2014

கீதை - 11.3 - உன் ஈஸ்வர ரூபத்தை காண விரும்புகிறேன்

கீதை - 11.3 - உன் ஈஸ்வர ரூபத்தை காண விரும்புகிறேன் 



एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर ।
द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥११- ३॥

ஏவமேதத்³யதா²த்த² த்வமாத்மாநம் பரமேஸ்²வர |
த்³ரஷ்டுமிச்சா²மி தே ரூபமைஸ்²வரம் புருஷோத்தம || 11- 3||

எவம் = அப்படியே 

தத் = இருக்கட்டும், உள்ளது

யதா = அது

அத்த = கூறியது

த்வம் = நீ

ஆத்மாநம் = தன்னைப் பற்றி (Self )

பரமேஸ்²வர = பரமேஸ்வர

த்ரஷ்டும் = காணும்படி

இச்சா²மி = இச்சை கொண்டு இருக்கிறேன்

 தே  = உன்னுடைய

ரூபம் = வடிவை

ஐஸ்வரம் = ஐஸ்வர்யமான, திவ்யமான, மங்களமான

புருஷோத்தம = புருஷ + உத்தமா = மனிதர்களில் உயர்ந்தவனே


உன்னைப் பற்றி நீ சொன்னபடியே உள்ள அந்த திவ்ய ரூபத்தை நான் காண விரும்புகிறேன்.

ஏவம் எதத் = அப்படியே ஆகட்டும்.

புருஷோத்தமா - நீ சொன்ன மாதிரியே ஆகட்டும். எல்லாம் உன்னில் இருந்து வந்தது  என்கிறாய். எல்லாம் உன்னில் அடங்கும் என்கிறாய். இந்த உலகை உன்  சக்தியின் ஒரு பகுதியால் நிர்வகிக்கிறேன் என்கிறாய்.

நான் அதை காண விரும்புகிறேன்.

தியரி புரிகிறது. இருந்தாலும் சோதனைச் சாலையில் சென்று அதை ஒரு முறை  செய்து பார்த்து உறுதி செய்து  கொள்வது போல...

இது வரை கண்ணன் சொன்னது புரிந்தது இருந்தும் இது எல்லாம் சரிதானா, இல்லை கண்ணன்  தன்னை போர் புரியச் செய்ய செய்யும் தந்திரங்களா என்று தெரியவில்லை  அர்ஜுனனுக்கு.

நீ சொன்ன மாதிரி உன்னை காட்டு  என்கிறான்.

கண்ணன் சற்று முகம் சலித்திருப்பான்...என்னடா இவன் இத்தனை சொன்ன பிறகும்  நம்மை நம்ப மாட்டேன் என்கிறானே என்று.

கண்ணனின் அந்த சலிப்பை கண்டவுடன் அர்ஜுனன் கொஞ்சம் சுதாரித்துக் கொள்கிறான்....

அடுத்து அவன் தன் வசனத்தை மாற்றுகிறான்....

அது ....

Wednesday, July 30, 2014

கீதை - 11.2 - உயிர்களின் தோற்றமும் முடிவும்

 கீதை - 11.2 - உயிர்களின் தோற்றமும் முடிவும் 


भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया ।
त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् ॥११- २॥

ப⁴வாப்யயௌ ஹி பூ⁴தாநாம் ஸ்²ருதௌ விஸ்தரஸோ² மயா |
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் || 11- 2||

ப⁴வாப்யயௌ = தோற்றமும் மறைவும். தோற்றம் என்று சொல்வதை விட இருத்தல் என்று  சொல்லலாம்.பு என்றால் இருத்தல். பாவ என்றால் existence .

ஹி = உறுதியாக

பூதாநாம் = உயிர்களின்

ஸ்ருதௌ = கேட்கப்பட்டது. ஸ்ருதி கேட்டல், கவனித்தல்

விஸ்தரஸோ = விரிவாக

 மயா  = என்னால்

த்வத்த:= உன்னிடம் இருந்து

கமலபத்ராக்ஷ = தாமரை போன்ற கண்களை உள்ளவனே

மாஹாத்ம்யம் =  பெருமை, மகிமை 

அபி =  இருந்தும் 

 சா = மேலும் 

அவ்யயம் = மாறாத

உயிர்களின் இருக்கும் நிலையம், அவை மறையும் தன்மை பற்றியும் விரிவாகக் கேட்டேன் .  தாமரையிதழ் போன்ற விழிகளை உடையவனே 
உன் முடிவற்ற பெருமையைக் கேட்டேன் .

உயிர்கள் எவ்வாறு தோன்றுகின்றன, எப்படி மறைகின்றன என்று  இதுவரை சொல்லப் பட்டது.

அதாவது, கர்ம யோகம், ஞான யோகம், விபூதி யோகம், விஷாத யோகம் என்ற இவை எல்லாம் சொல்லுவது ஒன்றைத்தான் - உயிர்களின் தோற்றமும் மறைவும்.

தோற்றம் என்று கூறுவதை விட உயிர்களின் இருப்பு என்பது சரியாக இருக்கும். உயிர்கள் எவ்வாறு  வாழ்கின்றன அல்லது வாழ வேண்டும் என்று இதுவரை  கூறப் பட்டது.

மீண்டும் மீண்டும் அர்ஜுனன் சொல்வது எல்லாம் ஒன்றுதான் "கேட்டேன்" என்ற  ஒன்றைத்தான்.

"பார்க்கவில்லை". என் கண்ணால் நான் அவற்றை பார்க்க வில்லை. ஏதோ நீ சொன்னாய்  கேட்டுக் கொண்டேன். அது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது. நீ பொய் சொல்ல மாட்டாய் என்பதால் நம்புகிறேன் ஆனால் அது என் அனுபவம்  இல்லை என்று சொல்கிறான்.

கண்ணனே சொன்ன பிறகும், அர்ஜுனனக்கு நம்பிக்கை  வரவில்லை.

ஆனால், நம் அர்ஜுனர்களுக்கோ, கண்ணன் என்ன கண்டவர்கள் சொல்வதில் எல்லாம் நம்பிக்கை.

 அர்ஜுனனின் சந்தேகம் தீர வில்லை. அவன் கேள்வி கேட்க்கிறான். சந்தேகம் போகவில்லை  என்கிறான்.அவன் தேடல் தொடர்கிறது.

அந்த தேடலினால் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் கிடைத்தது.

"கண்ணா, உன்னை நம்புகிறேன். நீ சொல்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று  " அர்ஜுனன் சொல்லி இருந்தால் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் கிடைத்திருக்காது.

அவன் நம்பவில்லை. கேள்வி கேட்டுக்  கொண்டிருந்தான். எனக்கு காண்பி. நான் பார்த்தால் தான்  நம்புவேன் என்று அடம் பிடித்தான்.

விஸ்வரூப தரிசனம் உங்களுக்கும் வேண்டுமா ? அர்ஜுனன்  காட்டிய வழியில்  செல்லுங்கள். அது கீதை காட்டிய வழி.

உங்கள் சொந்த அனுபவம் வரும் வரை எதையும் நம்பாதீர்கள்.

உங்களின் விடாத தேடல், சந்தேகம், விஸ்வரூப தரிசனத்தை உங்களுக்குத் தரும்.

உங்கள் நம்பிக்கை அல்ல - உங்களின் நம்பிக்கை இன்மை - உங்களுக்கு உண்மையின் தரிசனத்தை தரும்.



Monday, July 28, 2014

கீதை - 11.1 - மயக்கம் தீர்ந்தது

கீதை - 11.1 - மயக்கம் தீர்ந்தது 



अर्जुन उवाच
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ॥११- १॥

மத³நுக்³ரஹாய பரமம் கு³ஹ்யமத்⁴யாத்மஸம்ஜ்ஞிதம் |
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விக³தோ மம || 11- 1||



அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

மத் அநுக்ரஹாய = என் மீது அருள் கொண்டு

பரமம் கு³ஹ்ய = பரம இரகசியமான

அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம் = ஆத்ம ஞானம் என்ற

யத் = எந்த

த்வய = உன்னால் 

உக்டம் = சொல்லப் பட்டதோ

வசஸ் = வசனகளால்

தேந = அதனால்

மோஹோ = மயக்கம்

அயம் = அந்த

விகத = அகன்று விட்டது

மம = எனக்கு

அர்ஜுனன் சொல்லுகிறான்:  என் மீது அருள் கொண்டு, ஆத்ம ஞானம் என்ற பரம இரகசியத்தை நீ எனக்கு கூறியதன் மூலம் என் மயக்கம் தெளிந்தது.


மயக்கம் அல்லது குழப்பம் தெளிந்தது என்றால் அறிவு அல்லது ஞானம் பிறந்து விட்டது என்று அல்ல அர்த்தம். குழப்பம் தீர்ந்தது. அவ்வளவுதான். அதுவே அறிவு அல்ல.

அறிவு பெறுவதில் மூன்று படிகள் உண்டு.

ஐயம் திரிபற கற்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

முதலில் ஐயம் , பின் திரிபு பின் அறிவு தெளிவு பெறும் .

அது என்ன ஐயம் , திரிபு ?

ஐயம் என்றால் இதுவோ அதுவோ என்ற சந்தேகம். பாம்போ கயிறோ என்ற ஐயம். சரியா தவறா என்ற குழப்பம். இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சந்தேகம்.

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக நினைத்துக் கொள்வது. அது உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.

பாம்பை கயிறாகவும், கயிரை பாம்பாகவும் மாற்றி அறிந்து கொள்வது திரிபு.

கண்ணன் இது வரை சொன்னதை வைத்து தனது ஐயம் தீர்ந்து விட்டது என்கிறான். இருந்தாலும் தான் உண்மை எது என்று தெரியவில்லை.

பாம்பு இல்லை என்று தெரிந்து போனது. ஆனால் கயிறா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை.

விஸ்வரூப தரிசனம் தொடரும்....





Sunday, July 27, 2014

கீதை - பதினோராவது அத்யாயம் - ஒரு முன்னோட்டம்

கீதை - பதினோராவது அத்யாயம் - ஒரு முன்னோட்டம் 


முந்தைய அத்யாயத்தில் கண்ணன் தன் பெருமைகளை, மகிமைகளை வெகு நீளமாக எடுத்துச் சொன்னான்.

அர்ஜுனனுக்கு நம்பிக்கை வர வேண்டுமே.

நீ சொல்வது எல்லாம் சரிதான்...நீ என்ன பொய்யா சொல்லப் போகிறாய்...இருந்தாலும் இதை நான் எப்படி நம்புவது...நான் பார்த்தால் அன்றி என்னால் நம்ப முடியாது என்று நாசுக்காக சொல்கிறான்.

 இந்த குழப்பம் யாருக்குத்தான் இல்லை ?

கடவுளை மிக ஆழமாக நம்புபவர்கள் கூட சில சமயம் சந்தேகம் கொள்வார்கள்....ஒரு வேளை நாம் நம்பியது எல்லாம் தவறோ என்றோ சந்தேகம் சில சமயம்  எழலாம்.

கண்ணன் எதிரில் நிற்கிறான். அவனே சொல்கிறான். இருந்தும் அர்ஜுனனால் நம்ப முடியவில்லை.

நான் என் கண்ணால் பார்த்தால் அன்றி நம்ப மாட்டேன் என்று நேரடியாகவே சொல்லி விடுகிறான்.

கண்ணுக்குப் புரிந்து விட்டது. நாம் எவ்வளவு சொன்னாலும் இவன் நம்பப் போவது இல்லை. இவனுக்கு உண்மையை  காட்டி விட வேண்டியதுதான் , அப்போதுதான் இவன் நம்புவான் என்று கண்ணன் தன் உண்மையான சொரூபத்தை  காண்பிக்கிறான்.

சாதாரண கண் கொண்டு பார்க்க முடியாது. எனவே ஞானக் கண்ணைத் தந்து தன்னுடைய விஸ்வரூபத்தை பார்க்க வைக்கிறான்.

அந்த விஸ்வ ரூப தரிசனம்தான் இந்த அத்யாயம்.

 நாளை முதல் விஸ்வ ரூப தரிசனம் காண்போம்.




Friday, July 25, 2014

கீதை - அத்யாயம் 10 - ஒரு தொகுப்பு

கீதை - அத்யாயம் 10 - ஒரு தொகுப்பு 


யாரும் என் பெருமையை உணர மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மூலம் நானே.

நான் பிறப்பு இல்லாதவன். தொடக்கம் இல்லாதவன்.  இந்த உணர்ந்தவன் எல்லா மயக்கங்களும் நீங்கப் பெறுவான்.


  1. மதியையும், 
  2. ஞானத்தையும் , 
  3. மயக்கமின்மையும், 
  4. பொறுத்தலையும் , 
  5. வாய்மையும், 
  6. அடக்கத்தையும் 
  7. அமைதியும், 
  8. இன்பத்தையும் 
  9. துன்பத்தையும் 
  10. உண்மையும், 
  11. இன்மையும், 
  12. அச்சத்தையும் 
  13. அஞ்சாமையும், 
  14. துன்புறுத்தாமையும், 
  15. நடுமையும், 
  16. மகிழ்ச்சியையும் 
  17. ஈகையும், 
  18. தவமும், 
  19. இகழும், 
  20. புகழும்,

இவற்றை எல்லாம் உயிர்கள் என்னிடம் இருந்து  பெறுகின்றன.


மகரிஷிகள் ஏழு பேரும் நான்கு மனுக்களும் மனத்தால் என் இயல்பைப் பெற்றார்கள் .  அவர்களுடைய மரபினரே இந்த மக்கள் எல்லாம்.

இதை அறிந்தவன் யோகத்தில் இருப்பான்.

நானே தொடக்கம், என்னிடம் இருந்தே எல்லாம் தோன்றின என்று உணர்ந்தவன் என்னை அன்புடன் தொழுவான். அவன் மகிழ்ச்சியும் இன்பமும்  அடைவான். அவனுக்கு நான் புத்தி யோகம் அளிப்பேன். இதனால் அவன் என்னை அடைவான். அவர்களின் அஞ்ஞான இருளை நான் விலக்குவேன்



  1. உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். 
  2. அவ்வுயிர்களின் முதலும், முடிவும், இடையும் நானே 
  3. விஷ்ணு; 
  4. ஞாயிறு; 
  5. காற்றுகளில் மரீசி; 
  6. நக்ஷத்திரங்களில் சந்திரன்.
  7. வேதங்களில் சாமவேதம்; 
  8. தேவரில் இந்திரன்; 
  9. புலன்களில் மனம் ; 
  10. உயிர்களிடத்தே உணர்வு .
  11. ருத்திரர்களில் சங்கரன்; 
  12. இயக்கர் அரக்கருள் குபேரன். 
  13. வசுக்களில்  தீ;
  14.  மலைகளில் மேரு.
  15. புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி  
  16. படைத்தலைவரில் கந்தன். 
  17. நீர் நிலைகளில்  கடல்.
  18. மகரிஷிகளில்  பிருகு; 
  19. வாக்குகளில் ‘ஓம்’ 
  20. யக்ஞங்களில் ஜபயக்ஞம்; 
  21. ஸ்தாவரங்களில் இமாலயம்.
  22. மரங்களனைத்திலும் அரசமரம். 
  23. தேவரிஷிகளில்  நாரதன்; 
  24. கந்தர்வருள்ளே சித்ரரதன்; 
  25. சித்தர்களில் கபில முனி.
  26. குதிரைகளிடையே உச்சை சிரவம் . 
  27. யானைகளில் என்னை ஐராவதம் , 
  28. மனிதரில் அரசன்
  29. ஆயுதங்களில் வஜ்ரம்; 
  30. பசுக்களில் காமதேனு; 
  31. பிறப்பிப்போரில்  மன்மதன்; 
  32. பாம்புகளில் வாசுகி.
  33. நாகர்களினிடை  அநந்தன்; 
  34. நீர் வாழ்வோரில் வருணன்; 
  35. பிதிர்க்களில்  அரியமான்; 
  36. தம்மைக் கட்டினவர்களில்  யமன்.
  37. அசுரரில் பிரகலாதன் ;
  38.  இயங்குனவற்றில் காலம் ; 
  39. விலங்குகளில் சிங்கம்; 
  40. பறவைகளில் கருடன்.
  41. தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று ; 
  42. படைதரித்தோரில்  ராமன்; 
  43. மீன்களில் சுறா; 
  44. ஆறுகளில் கங்கை.
  45. படைப்புகளின் ஆதியும் அந்தமும் . 
  46. வித்தைகளில் அத்யாத்ம வித்தை; 
  47. பேசுவோரிடையே  பேச்சு.
  48. எழுத்துகளில் அகரம்; 
  49. புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; 
  50. அழிவற்ற காலம்; 
  51. அனைத்தையும்   சுமப்போன் .
  52. எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் . 
  53. எதிர்காலப் பொருள்களின் பிறப்பு . 
  54. பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை
  55. சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்; 
  56. சந்தஸ்களில் காயத்ரி; 
  57. மாதங்களில்  மார்கழி; 
  58. பருவங்களில் இளவேனில்.
  59. வஞ்சகரின் சூது . 
  60. ஒளியுடையோரின் ஒளி . 
  61. நான் வெற்றி; நான் நிச்சயம். 
  62. உண்மையுடையோரின் உண்மை .
  63. விருஷ்ணி குலத்தாரில்  வாசுதேவன்; 
  64. பாண்டவர்களில் தனஞ்ஜயன்; 
  65. முனிகளில் வியாசன்; 
  66. கவிகளில் சுக்கிர கவி.
  67. ஆள்வோரிடத்தே கோல் ; 
  68. வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி . 
  69. ரகசியங்களில் நான் மௌனம்! 
  70. ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.
  71. எல்லா உயிர்களிலும் விதை . 
  72. சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை.

என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.

எவை எவை பெருமை, உண்மை, அழகு, வலிமை உள்ளதோ  -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது

அன்றி, இதைப் பற்றி தெரிந்து கொள்வதால் உனக்குப் பயன் யாது? எனது மகிமையின் ஒரு பகுதியால் இந்த உலகை நிலை நிறுத்தியுள்ளேன்.



இப்படி ஒரு நீண்ட பட்டியலையும் கொடுத்து பின் இதைஎல்லாம் அறிந்து உனக்கு என்ன  ஆகப் போகிறது என்று கேள்வியும் கேட்கிறான் கண்ணன்.

இந்த பட்டியலின் மூலம் கண்ணன் என்ன சொல்ல வருகிறான் ?

இந்த பட்டியலின் அடி நாதமாக விளங்குவது என்ன ?

ஒவ்வொன்றிலும் எது  சிறந்ததோ,உயர்ந்ததோ அது நான்  என்கிறான்.

இன்னும் சொல்லப் போனால், அதை மிகத் தெளிவாக கடைசியில் சொல்கிறான்

"எவை எவை பெருமை, உண்மை, அழகு, வலிமை உள்ளதோ  -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது"

இதில் இருந்து நாம் பல விஷயங்களை புரிந்து கொள்ளலாம்:

1. ஒவ்வொரு உயிருக்குளும் அது சிறந்ததாக மாறும் சக்தி இருக்கிறது. அந்த சக்தி தான்  இறை சக்தி. நம்மை உயர்த்தும் சக்தி.

2. அந்த சக்திதான் potential சக்தி. அந்த சக்தியை வெளிக் கொணர்வதன் மூலம் நாம் இறைத் தன்மையை அடைகிறோம்.

3. எது நமது அடிப்படை  சக்தியோ,அதை முழுமையாக அடையும்வரை நாம் மனிதனும்  அல்லாமல் இறைவனும் அல்லாமல் அல்லாடிக் கொண்டு  இருப்போம்.

4. ஒவ்வொரு உயிரும் இறைத் தன்மையை அடைய முடியும் என்பதால் அனைத்து உயிரும் சமம் தான். உயர்ந்தது தாழ்ந்தது என்று ஒன்றும் இல்லை.

5. நாம் நம் துறை எதுவாக இருந்தாலும், அதில் சிறந்தவர்களாக ஆகும் போது நாம்  இறைத் தன்மையை அடைகிறோம்.

மீண்டும் ஒரு முறை படித்துப் பார்ப்போம்.


Wednesday, July 23, 2014

கீதை - 10.42 - இந்த உலகம் என் சக்தியால் இயங்குகிறது

கீதை - 10.42 - இந்த உலகம் என் சக்தியால் இயங்குகிறது 



अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन ।
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् ॥१०- ४२॥

அத²வா ப³ஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந |
விஷ்டப்⁴யாஹமித³ம் க்ருத்ஸ்நமேகாம்ஸே²ந ஸ்தி²தோ ஜக³த் || 10- 42||

அத = மேலும் 

வா  = அது, அதைப் பற்றி,

ப³ஹுன = பலப் பல 

ஏதேந = அதன் மூலம்

கிம் = எதற்கு ?

ஜ்ஞாதேந = அறிவு, அறிவது

த்வா = நீ

அ ர்ஜுந  = அர்ஜுனா

விஷ்டப்ய = தாங்குதல், அறிந்த பின்

அஹம் = நான்

இதம் = இதை

க்ருத்ஸ்நம் = முழுவதும்

ஏகாம்ஸே²ந = ஒரு பகுதியில் , ஒரு கூறில்

ஸ்தி²தோ = நிறுத்தி, சூழ்ந்து

ஜக³த் = உலகை

அர்ஜுனா, இந்த உலகம் அத்தனையும் என் சக்தியின் ஒரு கூறில் நான் நிலை நிறுத்தி இருக்கிறேன். என்னைப் பற்றிய அறிவு மிக விரிந்து பட்டது. இதை அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய் 

கடவுள்  யார், அவர் இருக்கிறாரா, இல்லையா, அவர் குணங்கள் என்ன, அவர் மகிமை என்ன, அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன என்று ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. 

இதை எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகிறோம் ? அவரைத் தெரிந்து கொண்டு அவரிடம் பேசி நமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளலாம் என்றா ? அவரை காக்கா பிடித்து நம்மை தண்டிக்காமல் பார்த்துக் கொள்வதற்கா ? இல்லை  எல்லாவற்றிக்கும் நன்றி சொல்வதற்க்கா ? 

ஏன் இந்த ஆராய்ச்சி ? ஏன் மனிதன் கடவுளைத் தேடிக் கொண்டே இருக்கிறான் ? 

கண்டு பிடித்து என்ன செய்யப் போகிறான் ?

கற்பனவும் இனி அமையும் என்றார் மணிவாசகர். வேண்டாம், இந்த ஆராய்ச்சியே  வேண்டாம், இந்த அறிவும் வேண்டாம், இந்த படித்தவர்களும் வேண்டாம் என்றார் அவர்.

சும்மா இரு சொல் என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்றார் அருணகிரி.தேடுதலை நிறுத்து. சும்மா இரு என்றார் முருகன் அவரிடம். 


ஒரு அத்யாயம் முழுவதும் நீட்டி முழக்கி தன் பெருமையை சொல்லிவிட்டு கடைசியில்  இதை எல்லாம் அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய் என்ற கேள்வியோடு முடிக்கிறார்.

மேலும் சிந்திப்போம்...



Tuesday, July 22, 2014

கீதை - 10.41 - பெருமை, அழகு, உண்மை, வலிமை

கீதை - 10.41 - பெருமை, அழகு, உண்மை, வலிமை 


यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा ।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसंभवम् ॥१०- ४१॥

யத்³யத்³விபூ⁴திமத்ஸத்த்வம் ஸ்ரீமதூ³ர்ஜிதமேவ வா |
தத்ததே³வாவக³ச்ச² த்வம் மம தேஜோம்ऽஸ²ஸம்ப⁴வம் || 10- 41||

யத்³யத்³விபூ⁴திமத் = எது எது பெருமை உடையதோ

ஸத்த்வம் = சாத்தியமானதோ

ஸ்ரீமத் = அழகு, கம்பீரம் உடையதோ

உர்ஜிதம் ஏவ வ = வலிமை உடையதோ

தத் தத் ஏவ = அவைகளின்

வக³ச்ச = அறிந்து கொள்

த்வம் = உன் 

மம = என்

தேஜோம்ऽஸ = ஒளியின், பெருமையின், மகிமையின்

²ஸம்ப⁴வம் = சம்பவிக்கிறது

எவை எல்லாம் பெருமை, உண்மை, அழகு, வலிமை உடையதோ அவை எல்லாம் என் மகிமையின் அம்சத்தில் இருந்து பிறந்தது என்று நீ அறிந்து கொள் 


இதுவரை 54 உதாரணங்கள் தந்தான் கண்ணன். கருடன், வியாசன், மேரு மலை, மௌனம் ,  அர்ஜுனன்,கந்தன், சுறா என்று ஏதேதோ தான் யார் என்பதற்கு  உதாரணங்கள் தந்தான். 

அந்த பட்டியல் முடிவு இல்லாதது. சொல்லிக் கொண்டே போகலாம். 

அதை மொத்தமாக சொல்வது என்றால் எதெது பெருமை, உண்மை, அழகு, வலிமை  உள்ளதோ அவை என் அம்சத்தில் பிறந்தது என்று அறிந்து கொள் என்று   முடிக்கிறான். 

இந்த அத்யாயத்தை படிப்பவர்கள் , என்ன இதில் ஒன்றுமே இல்லையே, ஏதோ நான் அது, நான் இது என்று கண்ணன் தன் பெருமையைக் சொல்லிக் கொண்டுப் போகிறான். இதில் எனக்கு என்ன பிரயோஜனம். கண்ணன்தான் அவதாரம் என்று தெரியுமே. அவன் வலிமையானவன் என்று  தெரியும்.எதற்கு ஒரு முழு  அத்யாயம் இதற்கு என்று ? 

இந்த அத்யாம் மூலம் வியாசர் என்ன சொல்ல வருகிறார் ? 

அடுத்த கடைசி ஸ்லோகத்தையும் பார்த்து விட்டு இந்த இந்த பட்டியலின் நோக்கம் என்ன்னவாக இருக்கும்  என்று  சிந்திப்போம்.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இந்த பட்டியலின் அடி நாதம் என்ன என்று சிந்திப்போம்.




Sunday, July 20, 2014

கீதை - 10.40 - முடிவில்லா மகிமை

கீதை - 10.40 - முடிவில்லா மகிமை 


नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप ।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥१०- ४०॥

நாந்தோऽஸ்தி மம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் பரந்தப |
ஏஷ தூத்³தே³ஸ²த: ப்ரோக்தோ விபூ⁴தேர்விஸ்தரோ மயா || 10- 40||



ந அந்தோ அஸ்தி = முடிவு  இல்லை 

மம் = என்

திவ்யாநாம் = ஒளி பொருந்திய, தெய்வீகத் தன்மை உள்ள

விபூதீநாம் = பெருமைகளை

பரந்தப  = எதிரிகளை வெல்பவனே

ஏஷ = இந்த 

தூ = மேலும் , அந்த

உத்தே³ஸ²த: = தோராயமாக. ஒரு குறிப்பிட்ட அளவில்

ப்ரோக்தோ = கூறினேன்

விபூ⁴தேர் = பெருமைகளை, வலிமையை

விஸ்தரோ  = விஸ்தாரமாக, விரிவாக

மயா = என்னால்

பார்த்தா, என் பெருமைகளுக்கு, வலிமைகளுக்கு முடிவே இல்லை.
விஸ்தாரமான என் பெருமைகைளில் சிலவற்றை மாத்திரமே உனக்கு நான் சொன்னேன்.

தெரிந்த ஒன்றைச் சொல்லித்தான் தெரியாத ஒன்றை விளங்க வைக்க முடியும்.

தன்னுடைய பெருமைகளை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்த கண்ணன்,  இதுவரை  சொல்லியது எல்லாம் சில உதாரணங்கள்  தான்.என் பெருமைக்கு முடிவே இல்லை என்கிறான் கண்ணன்.

தங்கத்தை வைத்து மோதிரம்  செய்யலாம்,வளையல் செய்யலாம் , சங்கிலி செய்யலாம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எவ்வளவுதான் சொன்னாலும்  தங்கத்தின் பெருமையை முழுமையாக சொல்லி முடியாது. அது  போல...54 உதாரணங்களை சொன்னான் கண்ணன்.


முடிவில், என் மகிமைகளுக்கு முடிவே இல்லை என்று சொல்லி முடிக்கிறான்.

இந்த உதாரணங்களில் இருந்து நமக்குத் தெரிவது என்ன ?



Friday, July 18, 2014

கீதை - 10.39 - அனைத்தின் விதை நான்

  கீதை - 10.39 - அனைத்தின் விதை நான் 


यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन ।
न तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम् ॥१०- ३९॥

யச்சாபி ஸர்வபூ⁴தாநாம் பீ³ஜம் தத³ஹமர்ஜுந |
ந தத³ஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூ⁴தம் சராசரம் || 10- 39||

யச் = அவைகள்
ச அபி= மேலும்
ஸர்வபூ⁴தாநாம் = அனைத்து உயிர்களும்
பீ³ஜம் = விதை, மூலம்
தத = அது
அஹம் = நான்
அர்ஜுந = அர்ஜுனா
ந = இல்லை
தத்  = அது
அஸ்தி = விளங்குகின்றது
விநா = இல்லாமல்
யத் = அவைகள்
ஸ்யாத் = இருக்கும் 
மயா = என்னால்
பூ⁴தம் = உலகில்
சராசரம் = அசைபவையும், அசையாமல் இருப்பவையும்

அனைத்து உயிர்களிலும் விதை  நான். சராசரங்களில் எனையன்றி வேறு எதுவும் இல்லை. 

இந்த இரண்டு வரியின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

அனைத்து உயிர்களிலும் விதை  நான்.

இந்த உயிர்கள் எல்லாம் இறையின் வெளிப்பாடு என்றால் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது ?  நல்லவனும்,கெட்டவனும், அறிஞனும், மூடனும், எல்லாம் ஒன்றின் வெளிப்பாடு என்று எப்படி கொள்வது?

ஒன்றில் இருந்து மற்றது தோன்றியது என்றால், தோன்றியதற்கும், தோற்றுவித்ததற்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா ?

நம்மை சுற்றிப் பார்த்தால் அப்படி ஒரு தொடர்பு இருபதாகத் தெரியவில்லை.

நல்லதும் கெட்டதும் விரவிக் கிடக்கிறது.  இரண்டும் ஒன்றில் இருந்து வந்தது என்று அறிவு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவன் நம்மை தோற்றுவித்தானா ? அவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன ? அவன் நம்மை தோற்றுவித்தவன் என்றால் தோற்றுவித்த பின் அவன் என்ன ஆனான் ? நாம் இறந்த பிறகு நமக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு என்ன ?

இந்த கேள்விகள் அனைத்துக்கும் இந்த இரண்டு வரியில் விடை தருகிறார் வியாசர்.

அனைத்து உயிர்களுக்கும் விதை நான்.

விதையில் இருந்து மரம் வருகிறது. மரம் வந்த பின் விதை என்னவாகிறது ? விதைதான் மரமாக மாறியது.  மரத்தில் இருந்து மீண்டும் விதை வரும். ஒரு விதையில் இருந்து ஒரு மரம் வரும். ஒரு மரத்தில் இருந்து பல விதைகள் வரும். பல விதைகளில் இருந்து பல மரங்கள் வரும்.

ஒரு மாந்தோப்பில் எத்தனையோ மரங்களைப் பார்க்கிறோம். இவை அனைத்தும் ஒரு விதையில் இருந்து வந்தது என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க  முடியும். வந்தும் இருக்கலாம்.

இப்படி எத்தனையோ உயிர்களைப் பார்க்கும் போது அவை அனைத்தும் ஒன்றில் இருந்து வந்தது என்று நினைப்பது கடினமா ?

சரி, விதையில் இருந்து மரம் வரும்.

மரம் விதையில் இருந்து மட்டும்தான் வருமா , வேறு ஏதாவதில் இருந்தும் மரம் வருமா ?

"இந்த உலகில் என்னை அன்றி வேறு எதுவும் இல்லை "

அவனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

  


Tuesday, July 15, 2014

கீதை - 10.38 - நான் யார் ? - பாகம் 1

கீதை - 10.38 - நான் யார் ? - பாகம் 1



दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् ।
मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ॥१०- ३८॥

த³ண்டோ³ த³மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம் |
மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் || 10- 38||

த³ண்டோ³ த³மயதாமஸ்மி = ஆள்பவரிடம் நான் செங்கோல் (தண்டம்)

நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம்  = வெற்றியை விரும்புவோர் இடத்தில் நீதி நான்

மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் = மௌனம் நான் இரகசியங்களில் 

ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் = ஞானம் உள்ளவர்களில் ஞானம் நான்


அரசு செலுத்துவோரில் செங்கோல் நான். வெற்றியை விரும்புவோரில் நீதி நான். இரகசியங்களில் மௌனம் நான். ஞானம் உள்ளவர்களில் ஞானம் நான். 

இந்த உலகில் ஒவ்வொரு பொருளுக்கும், உயிருக்கும் பின்னால் ஏதோ ஒரு  தனித் தன்மை இருக்கிறது. அந்தத் தனித்தன்மை இருப்பதால் தான் அது அதுவாக இருக்கிறது. கடினமாக இருப்பதால் இரும்பு இரும்பாக இருக்கிறது. அதுவே  மென்மையாக இருந்தால் அதை இரும்பு என்று சொல்ல மாட்டோம்.

அது போல, ஒவ்வொரு உயிருக்கு பின்னாலும் ஏதோ சிறப்பு, தனித் தன்மை இருக்கிறது. பாடும் திறமை, ஆடும் திறமை, திருடும் தன்மை, கொலை செய்யும் தன்மை , கணக்குப் போடும் திறமை என்று ஏதோ ஒன்று இருக்கிறது.

 இவை அனைத்தும்  ஒரு சக்தியின் வெளிப்பாடு. அந்த சக்தி நான் என்கிறான்   கண்ணன்.

அதையே சற்று நீட்டித்து யோசித்தால் "நான்" என்று சொல்லக் கூடியது எது ? எது நான் ?  இந்த உடலா ? உயிரா ? என் ஞாபகங்களா ? எது எனது தனித் தன்மையோ  அந்த தனித் தன்மையின் தொகுதி நான். அது உடலின் வடிவாக இருக்கலாம், படிப்பாக இருக்காலாம், திறமையாக இருக்கலாம்...இவை  அனைத்தின்  தொகுதிதான் தான் நான்.

ஆள்வோரில் செங்கோல் நான்.

 அரசன், அவனுடைய உருவம்,  குரல், தோரணை, பிறப்பு எல்லாம் அவனை  அரசனாக்க   முடியாது. செங்கோல் என்பது அரசின்  சின்னம். அரசர்கள் மாறலாம்.  ஆட்சி செலுத்தும் செங்கோல் ஒன்று தான். செங்கோல் தான் அரசனுக்கு அதிகாரத்தைத்  தருகிறது.

இன்று அரச முறைகள்  இல்லை. ஜனநாயகம் வந்து  விட்டது. செங்கோல் என்பதிற்கு பதில்  பதவி என்று  சொல்லலாம். ஆட்சி செய்வோரில் பதவி நான்.  பதவி இல்லாவிட்டால் ஆட்சி செய்ய முடியாது. அது போல, நான் என்பது என்  தனிக் குணங்களின்  தொகுப்பு. அவை  இல்லாவிட்டால் நான் இல்லை.

அரசன் என்பவன் தான் என்ற உடல் என்று நினைக்கக் கூடாது  அரசு என்பது ஒரு ஆள்  அல்ல. அது ஆட்சி செய்யும்  முறை. நீதி நெறி வழுவாமல் கோலோச்சும் முறை.

உங்கள் தனித் தன்மைகளை மாற்றும் போது நீங்கள் மாறுகிறீர்கள்.

கீதையை முழுவதும் படித்து உணர்ந்த பின் நீங்கள் புது ஆள்.

உங்கள் அனுபவங்களால், படிப்பால், நீங்கள் நாளும் மாறிக் கொண்டே இருக்கிறீர்கள்.  ஒரு நாளில் இருந்து மற்றொரு நாளுக்கு இடையில் உள்ள  மாற்றம்  மிக மிகக் குறைவாக இருபதால் அது உங்களுக்குத் தெரிவதில்லை. ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில் நிகழும் மாற்றங்கள் உங்களுக்குப்  புரிய  வரலாம்.

உங்கள் உணவு பழக்கத்தை ஒரு வருடத்திற்கு மாற்றிப் பாருங்கள், மாற்றம் தெரியும்.

நீங்கள் மாறிப் போவீர்கள்.

 என்ன அர்த்தம் ...?

நீங்கள் எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம். நான் இப்படித்தான் என்று எதுவும் இல்லை.  நீங்கள் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் நல்லவர்களாக மாற முடியும்.

உங்கள் தனித் தன்மைகளை பட்டியல்  போடுங்கள்.

நல்லவற்றை வைத்துக்  கொள்ளுங்கள்.

அல்லாதவற்றை என்ன செய்வது என்று முடிவு  பண்ணுங்கள்.

பட்டியலில் இல்லாததில் எதைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு பண்ணுங்கள்.

உங்களை நீங்கள் மாற்றலாம்.




Sunday, July 13, 2014

கீதை - 10.37 - ,முனிகளில் நான் வியாசன்

கீதை - 10.37 - ,முனிகளில் நான் வியாசன் 


वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनंजयः ।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥१०- ३७॥

வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: || 10- 37||


வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி = விருஷினி குலத்தில் நான் வாசுதேவன்

பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய:  = பாண்டவர்களில் நான் தனஜ்ஜயன்

முநீநாமப்யஹம் வ்யாஸ: = முனிவர்களில் நான் வியாசன்

 கவீநாமுஸ²நா கவி: = கவிகளில் நான் உஷாணன்



விருஷ்ணி குலத்தில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் நான்  தனஞ்ஜயன்; முனிவர்களில் நான்  வியாசன்; கவிகளில் நான் உஷாணன்.


யாதவர்களின் முதன்மையானன்வன் யது. யதுவின் மகன் விருஷினி. அவனின் வழித்  தோன்றல்கள் விர்ஷுனி குலம் என்று அழைக்கப் பட்டார்கள். அந்த குலத்தில் தோன்றியவன் வாசுதேவன்.

தனஞ்சயன் என்றால் தனத்தை ஜெயித்தவன் என்று பொருள். பாண்டவர்களில் நான் தனஞ்சயன்.

முனிவர்களில் நான் வியாசன்.

கவிகளில் நான் உஷாணன்.


Saturday, July 12, 2014

கீதை - 10.36 - சூது, ஒளி , உண்மை, வெற்றி, நிச்சயம்

 கீதை - 10.36 - சூது, ஒளி , உண்மை, வெற்றி, நிச்சயம்




द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् ॥१०- ३६॥

த்³யூதம் ச²லயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |
ஜயோऽஸ்மி வ்யவஸாயோऽஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் || 10- 36||


த்³யூதம் ச²லயதாமஸ்மி = வஞ்சகரில் சூது நான்

தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |= ஒளி உடையோரின் ஒளி நான்

ஜயோऽஸ்மி = வெற்றி நான்

வ்யவஸாயோऽஸ்மி = உறுதி நான்

ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் = உண்மை உடையோரின் உண்மையாக நான் இருக்கிறேன்


வஞ்சகரில்  சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். வெற்றி நான். உறுதி நான்.  உண்மை உள்ளவர்களில் உண்மை நான்.

சிறந்தவைகளை  மட்டும் அல்ல, கீழான ஒன்றையும் தன் வடிவம் என்கிறான் கண்ணன்.

சிறந்தவைகளை மட்டும்  சொல்லிக் கொண்டே போனால் , சமுதாயத்தில் கீழாக  உள்ளவர்கள் இந்த கீதைக்கும் நமக்கும்  சம்பந்தம் இல்லை என்று போய் விடுவார்கள். அவர்களையும் சேர்த்து கடைந்தேற்ற வேண்டும்.

வஞ்சகர்களில் சூது நான்.

எல்லாம் அவன் என்றானபின் சூது மட்டும் எப்படி அவன் இல்லாததாக இருக்க  முடியும்.

நம்மிடையே வாழ்ந்த ஞானப் புலவன் பாரதி.

கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.


குப்பையும் மலமும் கடவுள் என்றான். உலகில் எந்த மதம் சொல்லும் இதை ? ஜீரணிக்க  முடியாத உண்மை.

எல்லாம் கடவுள் தான் என்றால் குப்பையும், மலமும், சூதும் கடவுள்தான்.

ஒளி உடையோரின் ஒளி நான்.

விளக்கில் இருந்து ஒளி வருகிறது. ஆனால் ஒளிக்கும் விளக்குக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.  விளக்கு பல வடிவங்களில்  இருக்கும். எண்ணெய் , திரி , விளக்கு என்பவை பலவாக இருந்தாலும் ஒளி ஒன்றாகத்தான் இருக்கிறது.

உயிர்கள் பலவாக இருந்தாலும், அவற்றின் வெளிபாடு ஒன்றுதான்.

நல்லதும் கெட்டதும் , உயர்ந்ததும், தாழ்த்தும் எல்லாம் ஒன்றே.

இந்த ஸ்லோகங்கள் வாசித்து விட்டு போவதற்கு அல்ல. ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.


Thursday, July 10, 2014

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 2

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 2


बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

ப்³ருஹத்ஸாம ததா = சாமங்களில் நான் பிருகத்சாமம்
ஸாம்நாம் கா³யத்ரீ  ச²ந்த³ ஸா அஹம் = சந்தங்களில் நான் காயத்ரீ
 மாஸாநாம் மார்க³ஸீ ர்ஷோ அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் குஸுமாகர = பருவங்களில் நான் மலரும் இளவேனில்


சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ ; சந்தங்களில்  நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் நான் இளவேனில்.

மாதங்களில் நான் மார்கழி.....

மனிதனின் குணம் மாறிக் கொண்டே இருக்கும் என்று பார்த்தோம்.

கால நிலைகள் மனிதனின் குணத்தை பெரிதும் பாதிக்கின்றன.

காலையில் இருக்கும் மன நிலை, மதியம் இருப்பது இல்லை.

மதியம் இருக்கும் மன நிலை மாலை இருப்பது இல்லை.

இப்படி கால நிலைகள் மனித மனத்தை பாதிக்கின்றன.

ஒரு நிலையில் இருந்து காலம் மற்றொன்றுக்கு மாறும் அந்த நேரங்களில் மனம்  குழப்பம் அடைகிறது. அந்த குழப்பத்தை வழிபாட்டின் மூலம் சமம் செய்ய முடியும்  என்று நம் முன்னோர்கள் கண்டார்கள்.

அதாவது இரவு முடிந்து பகல் தோன்றும் அந்த அதிகாலை, பகல் முடிந்து இரவு தோன்றும்  அந்த அந்தி மாலை ...இவை மனதில் குழப்பம் ஏற்படுத்தும் நேரங்கள்.

அந்த நேரத்தில் வழிபாடு செய்து மனதை சம நிலை படுத்த முடியும் என்று உணர்ந்து  சொன்னார்கள்.

இரண்டு காலங்கள் சந்திக்கும் இடம் - சந்தியா காலம்.

அந்த நேரத்தில் செய்யும் வழிபாடு, வந்தனம் - சந்தியா வந்தனம்.

அந்த சந்தி நேரங்களில் மனதை ஒருமுகப் படுத்தி, வழிபாடு செய்வது சந்தியா வந்தனம்.

அது போல....

சூரியன் நில நடுக் கோட்டுக்கு மேலே இருக்கும் காலம் உத்தராயணம். கீழே இருக்கும் காலம் தக்ஷினாயனம் என்று அழைக்கப் படும்.

உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பிப்பது தை மாதத்தில் இருந்து.

அதாவது மார்கழி மாதம் என்பது தக்ஷினாயனம் கழிந்து உத்தராயணம் ஆரம்பிப்பது.

அந்த மாதத்தில் மிகுந்த வழிபாடு செய்வார்கள்...திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை என்பதெல்லாம் மார்கழி மாதத்தில் செய்யப்படும் பாராயணங்கள்.

எனவே, மார்கழி மாதம் புண்ணிய மாதம் என்று அழைக்கப் படுகிறது.

மாதங்களில் நான் மார்கழி.



Tuesday, July 8, 2014

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 1

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 1


बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

ப்³ருஹத்ஸாம ததா = சாமங்களில் நான் பிருகத்சாமம் 
ஸாம்நாம் கா³யத்ரீ  ச²ந்த³ ஸா அஹம் = சந்தங்களில் நான் காயத்ரீ
 மாஸாநாம் மார்க³ஸீ ர்ஷோ அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் குஸுமாகர = பருவங்களில் நான் மலரும் இளவேனில்


சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ ; சந்தங்களில்  நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் நான் இளவேனில்.

மாதங்களில் நான் மார்கழி.....

மனித மனம் மாறிக் கொண்டே இருக்கிறது. சிலசமயம் நல்லது நினைக்கிறது, சில சமயம் அல்லதையும் நினைக்கிறது. கோபம், காமம், அன்பு, அருள், வெறுப்பு...என்று மாறி மாறி சுழன்று கொண்டே இருக்கிறது.

மனத்தின்  நிலைகளை பொதுவாக மூன்று வகையாக பிரித்தார்கள் நம் முன்னோர்கள்.

ரஜோ குணம்
தமோ குணம்
சாத்வீக  குணம்

மனிதனின் அனைத்து மன நிலைகளும் இந்த மூன்று பிரிவில் அடங்கி விடுகிறது. அனைத்து இராகங்களும் ஏழு ஸ்வரங்களில் அடங்கி விடுவது போல.

அது என்ன மூன்று தானா ? மூன்றுக்கு மேல் கிடையாதா ? என்று கேள்வி எழலாம். மிக மிக உன்னிப்பாக கவனித்து மூன்று என்று சொல்லி இருக்கிறார்கள். கேள்வி மூன்றா நான்கா அல்லது அதற்கும் மேலேயா என்பதல்ல. மனித குணம் மாறிக் கொண்டே இருக்கிறது.  மூன்றோ, முப்பதோ அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

மனித குணம் மாறும் இயல்புடையது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த மாற்றங்கள் எதனால் நிகழ்கிறது ?

பல காரணங்கள்.

நாம் உண்ணும் உணவு ஒரு முக்கிய காரணம். மது போன்ற போதை ஊட்டும் பொருள்களை  உண்டால் ஒரு குணம் வருகிறது.  அது போல ஒவ்வொரு உணவும் ஒரு  குணத்தை தூண்டும். நீங்கள் உங்கள் உள் உணர்வை கூர்மை  படுத்தி  வைத்துக் கொண்டால் உங்கள் மன நிலை, உங்கள் குணம் எப்படி மாறுகிறது என்று  நீங்கள் அறிய முடியும்.

நான் ரஜோ குணத்தில் இருக்கிறேன், நான் தமோ குணத்தில் இருக்கிறேன் என்று  நீங்கள் அறிய முடியும்.

உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள்.

ஒரு காப்பி குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் மனம் மாறுவதை நீங்கள் உணர முடியும்.

சோர்வு நிலை மாறி, உற்சாகம் பிறக்கும்.

உணவைப் போல, கால நிலைகளும் மனிதனின் குணத்தை பாதிக்கின்றன.

அதிகாலையில் சாத்வீகம் உயர்ந்து நிற்கும். காலையில் படிப்பது தெளிவாக மனதில் நிற்கும். மாலையில் ராஜச குணம் உயர்ந்து  நிற்கும். நாள் முழுவதும் உன்னிப்பாக கவனித்து வந்தால் உங்கள் குணம்  மாறுவதை நீங்கள் உணர முடியும்.

அதனால் தான் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து தந்திருக்கிறார்கள்.

சரி, இதற்கும் "மாதங்களில் நான் மார்கழி" என்பதற்கும் என்ன சம்பந்தம்.....

தொடரும்




Sunday, July 6, 2014

கீதை - 10.34 - பிறப்பு, மரணம் நான்

கீதை - 10.34 - பிறப்பு, மரணம் நான் 


मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम् ।
कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिः क्षमा ॥१०- ३४॥

ம்ருத்யு: ஸர்வஹரஸ்²சாஹமுத்³ப⁴வஸ்²ச ப⁴விஷ்யதாம் |
கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா⁴ த்⁴ருதி: க்ஷமா || 10- 34||

ம்ருத்யு: = மரணம்
ஸர்வஹரஸ்²சாஹ = அனைத்தையும் அழிக்கும்
முத்³ப⁴வஸ்²ச ப⁴விஷ்யதாம் |  = எதிர்க்காலத்தில் பிறக்கும் பிறப்பு நான்
கீர்தி: = புகழ்
ஸ்ரீர்வாக்ச = உயர்ந்த பேச்சு 
நாரீணாம் = பெண் குணங்களில்
ஸ்ம்ருதி = நினைவு
மேதா⁴ த் = மேதமை
ருதி: = ஸ்திதி 
க்ஷமா = மன்னித்தல் , பொறுமை



மரணமும் , பிறப்பும் நான்.
பெண் குணங்களில் புகழ், உயர்ந்த வாக்கு, ஞாபக சக்தி, மேதமை, உறுதி,பொறுமை .இவை அனைத்தும் நான்.

முதலில் மரணத்தில் இருந்து ஆரம்பிக்கிறார் வியாசர்.

பிறப்பிலும், வாழும் போதும் மக்களுக்கிடையே எத்தனையோ வேறுபாடுகள், மாற்றங்கள்  , ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் சமம்தான்  என்று கூறினால் ஏற்றுக் கொள்வது கடினம். எப்படி  எல்லோரும்  சமமாக முடியும் என்று கேள்வி வரும்.

மரணம் எல்லோரையும் சமப் படுத்து கிறது.  ஞானியும், அசடனும் ஒன்றாகிற இடம் மரணம். பணக்காரனும், ஏழையும் சமமாகிற இடம் மரணம். அனைத்தையும்  ஒரு புள்ளியில் சேர்க்கும் இடம் மரணம்.  எனவே அங்கிருந்து  ஆரம்பிக்கிறார்.

எல்லாம் ஒரு புள்ளியில் முடிகிறது. எல்லாம் மக்கி மண்ணாகிப் போகிறது. இறைவன் என்பது  அவ்வளவுதானா ? எல்லாவற்றையும் இறக்கப் பண்ணுகிறவன் அவ்வளவுதானா என்றால் இல்லை. அடுத்த வரியில் சொல்கிறார்....

எதிர்க்காலத்தில் பிறப்பும் நானே.....

பிறப்பில் வேறுபாடு தெரியும். இருப்பினும், அவை யாவும் ஒன்றாக இறந்த பின் அதில் இருந்து தோன்றிய ஒன்று  என்ற எண்ணம் வரும்போது அதில் உள்ள  வேற்றுமைகள் தெரியாது.

பாண்டங்கள் வேறு வேறு களிமண் ஒன்றுதான்.

நகைகள் வேறு வேறு தங்கம் ஒன்றுதான்

அலைகள் வேறு வேறு கடல் ஒன்றுதான்.

பெண் குணங்களில் நான் நினைவு, வாக்கு, மேதமை,  ஞாபகம், உறுதி, பொறுமை.

இவை ஏன் பெண்மை குணங்கள் ? ஏன் ஆணுக்கு இருக்கக் கூடாதா அல்லது இருக்காதா ?

இருக்கலாம்.

இவை பெண்ணில் இருக்கும்போது மேலும் அழகு பெறுகின்றன.

ஒரு பெண் புஜ பல வலிமையோடு இருந்தாள் என்று சொன்னால் அவ்வளவு சிறப்பாக   இருக்காது. வலிமையையும், வீரமும் ஆணின் குணங்களாக நாம் நினைக்கிறோம்.

ஞாபகம், மேதமை , உறுதி, பொறுமை என்ற இந்த உயர்ந்த குணங்களை பெண்களின் குணங்கள் என்று பெண்மையை மேன்மை படுத்துகிறார் வியாசர்.

கீதை பெண்ணடிமையை போதிக்கிறது என்ற வாதம் இங்கே அடிபட்டுப் போகிறது.

இந்த குணங்களில் பெண்ணில் இருக்கும்போது இவை மேலும் சிறப்புப் பெறுகின்றன. எப்படி ?

பெண் தோற்றுவிப்பவள் . பெண் பாதுகாத்து வளர்ப்பவள். இந்த குணங்கள் அவளிடம்  இருந்தால் அவை மென்மேலும் பெருகும் என்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.

இப்படி அதில் அது நான், இதில் இது நான் என்று அடுக்கிக் கொண்டே போகிறான்  கண்ணன்.

இந்த பட்டியல் முடியாது. கண்ணன் என்ன சொல்ல வருகிறான் ?

இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது.


சிந்திப்போம்.


கீதை - 10.33 - அகரம், அழிவற்ற காலம்

கீதை - 10.33 - அகரம், அழிவற்ற காலம் 


अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामासिकस्य च ।
अहमेवाक्षयः कालो धाताहं विश्वतोमुखः ॥१०- ३३॥

அக்ஷராணாமகாரோऽஸ்மி த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச |
அஹமேவாக்ஷய: காலோ தா⁴தாஹம் விஸ்²வதோமுக²: || 10- 33||


அக்ஷராணாமகாரோஸ்மி = எழுத்துக்களில் நான் அகரம்
 த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச  = எழுத்து புணர்ச்சிகளில் நான் இரட்டைப் புணர்வு
அஹமேவாக்ஷய: காலோ = அழியாத காலம் நான்
தாதாஹம் விஸ்²வதோமுக = அனைத்து திசைகளையும் பார்க்கும் விராட் ஸ்வரூபன் நான்


எழுத்துகளில் நான் அகரம்; எழுத்துப்  புணர்ப்புகளில் நான் இரட்டைப் புணர்ப்பு; அழிவற்ற காலம் நான் ; அனைத்து திசைகளையும் பார்க்கும் விராட் ஸ்வரூபன் நான் 


எழுத்துக்களில் நான் அகரம்....

அகரத்திற்கு என்ன சிறப்பு ?

அகரம் என்பது இயற்கையாகவே, வேறு ஒன்றின் துணை இன்றி தானாகவே உருவாவது அகரம்.

தொல்காப்பியர் , எழுத்து அதிகாரத்தில் சொல்கிறார்...

அவற்றுள்
அ ஆ ஆயிரண் டங்காந் தியலும்.

அவற்றுள் = அந்த உயிர் எழுத்துகளில்
அ ஆ = அ மற்றும் ஆ
ஆயிரண் டங்காந் தியலும் = அந்த இரண்டும் காற்று இயலும்

காற்றின் இயல்பாய் பிறக்கும். வாயைத் திறந்தால் தானாகவே பிறக்கும். 

மற்ற எழுத்துகள் நாக்கு, பல், மேல் அன்னம், உதடு இவற்றின் துணையால் பிறக்கும். அகரத்திற்கு அப்படி மற்ற ஒன்றின் துணை இன்றி பிறக்கும். 

அது போல, இறைவன் தானாகவே , மற்ற ஒன்றின் துணை இன்றி தோன்றியவன். 

அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு. 


எழுத்துப்  புணர்ப்புகளில் நான் இரட்டைப் புணர்ப்பு

சமஸ்க்ரிதத்தில் இரட்டை புணர்வு என்பது "துவந்துவ" என்று குறிப்பிடப் படுகிறது. இரண்டு எழுத்துக்கள் இணைந்து ஒரு புதிய எழுத்தை உருவாக்குகின்றன. பரமாத்மாவும், ஜீவாத்மாவும் கலந்து உயிரினங்கள் பிறப்பது போல,  Objective and Subjective இரண்டும் கலந்து உலக அனுபவங்கள் பிறப்பது போல. 

அழிவற்ற காலம் நான்


முந்தைய ஸ்லோகத்தில் (30) இயக்குபவற்றில் நான் காலம் என்று கூறினான்.  அங்கே காலம் இயங்கும் பொருள்களின் அடிப்படையில் கூறப்பட்டது. பிறப்பது, வாழ்வது, மரிப்பது என்ற ஒரு எல்லைக்கு உட்பட்ட காலம் கூறப் பட்டது. 

இங்கே "அழிவற்ற காலம் நான் " என்று கூறுகிறான்.

எது ஒன்றையும் சாராத காலம். அழியாத காலம். எனவே பிறக்காத காலம். 

இரவு பகல், 
கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்

என்று ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட காலம் இல்லை. அழிவற்ற காலம்.