Tuesday, May 28, 2013

34. ஆத்ம ஞானமும் கர்ம யோகமும்

34. ஆத்ம ஞானமும் கர்ம யோகமும்  


Other  is the hell  என்றார் பிரஞ்சு ஞானியான Jean  Paul Satre .

மற்றது தான் நரகம் என்றால் என்ன ? நாம் எப்போதும் இருப்பதை கொண்டு திருப்தி அடைவது கிடையாது. இருப்பதை விட்டு விட்டு இல்லாத ஒன்றிற்க்காக (Other) ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் சொத்து வேண்டும், இன்னும் படிப்பு வேண்டும், இன்னும் அழகு வேண்டும், மெலிய வேண்டும், நிறைய பேர் மதிக்க வேண்டும்...நம்மை நாம் அங்கீகரிப்பது இல்லை. நம்மை நாமே மறுதலித்து போராடிக் கொண்டு இருக்கிறோம். இந்த வாழ்க்கையை நமக்கும் நரகமாக, மற்றவர்களுக்கும் நரகமாக மாற்றி கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பது ஒரே இறை சக்திதான் என்ற அறிவு பிறக்கும் போது, ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவும் எண்ணம் மறைகிறது.

ஆத்ம ஞானம் பிறந்தால் செயல் நிறைவு பெறுகிறது. செயலற்ற இடம் பிறக்கிறது.

இதை கொஞ்சம் மாற்றிப் போட்டால் ஆத்ம ஞானம் பிறக்காவிட்டால், செயல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

ஞானம் பிறக்காவிட்டால் கர்மம் தொடரும். கர்ம வினைகள் தொடரும்.

அர்ஜுனனும் சரி, துரியோதனனும் சரி அந்த ஞானத்தை அடையாதவர்கள். அவர்கள் செயலில் இருந்து விலக முடியாது.

ஆத்ம ஞானம் இல்லாத ஒருவன் செயலை துறந்தால் அது ஒன்று கோழைத்தனமாக இருக்கும் அல்லது சோம்பேறித்தனமாக இருக்கும்.

ஞானம் அடைவது வரை கர்மம் தொடரும் என்றால், அந்த கர்மத்தை எப்படி செய்வது. எது தவறு, எது சரி என்று எப்படி அறிந்து கொள்வது ?

யுத்தம் சரியா ? தவறா ? கொல்வது சரியா ? தவறா ?

வினை தவிர்க்க முடியாது என்று ஆனா பின், சரியான வினையை எப்படி தேர்ந்தெடுப்பது ?

ஆத்ம ஞானம் அவ்வளவு எளிதாக கிடைக்கும் என்று தெரியவில்லை. அதுவரை என்ன செய்வது ?

அதற்க்கும் கீதை வழி வகுக்கிறது . எதை செய்வது, எப்படி செய்வது என்பதற்கு கர்ம யோகத்தில் விடை தருகிறது கீதை.

ஞானம் யோகத்தை தொடர்ந்து வருவது கர்ம யோகம்.

கர்ம யோகத்திற்கு போவதற்கு முன்னால், இன்னும் கொஞ்ச ஸ்லோகங்கள் பாக்கி இருக்கிறது. அதையும் பார்த்து விட்டு கர்ம யோகத்திற்கு போவோம்.

Thursday, May 23, 2013

33. ஆத்ம ஞானம் - சம நிலை

33. ஆத்ம ஞானம் - சம நிலை



அனைத்திலும் நிறைந்திருப்பது ஆத்மாதான் என்ற ஞானம் பிறக்கும் போது என்ன ஆகிறது ? 

எல்லாமே புனிதம் அடைகின்றன. உன்னுள் இருப்பதும், என்னுள் இருப்பதும் ஒன்று தான் என்ற எண்ணம் வந்து விட்டால், நீ என்னை விட உயர்ந்தவனும் இல்லை, என்னை விட தாழ்ந்தவனும் இல்லை. 

நீ எனக்கு எதிரியும் இல்லை, நீ எனக்கு நண்பனும் இல்லை. 

உயர்ந்தவன், தாழ்ந்தவன், 
பணக்காரன், ஏழை,
படித்தவன், படிக்காதவன்
கறுப்பன், சிவப்பன்
அரசன், ஆண்டி 
குரு, சீடன்

என்ற அனைத்துவித பேதங்களும் மறைந்து போகும். எல்லாம் சரி நிகர் சமானம் என்ற சமநோக்கு ஏற்படும். 

நீ என்னில் இருந்து வேறு பட்டவன் என்ற எண்ணம் வரும் போது. அன்போ பகையோ வருகிறது. 
நீ என்னில் இருந்து வேறு பட்டவன் அல்ல என்ற ஞானம் வரும் போது, பகைமை அழிகிறது.

எனக்கு நான் பகைவனா ? எனக்கு நான் நண்பனா ?

நான் நானாக  இருக்கிறேன். எனக்கு நான் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. 

எல்லாம் ஆத்மா தான் என்ற எண்ணம் வரும்போது அனைத்து செயல்களும் நின்று போகும். 

போற்றுவதும் இல்லை, தூற்றுவதும் இல்லை. 

மேடு பள்ளம் இருந்தால், தண்ணீர் மேட்டில் இருந்து பள்ளத்திற்கு ஓடும். 

தரை சமப் பட்டால் நீர் ஓட்டம் நின்று போகும். 

ஆத்ம ஞானம் ஏற்படும் போது, கர்ம வினை நின்று போகும். 

பாவமும் இல்லை. புண்ணியமும் இல்லை. 

நிற்காமல் சுழலும் வினை என்ற சக்கரம் முதன் முதாலாக நிற்கும். 

ஆணும், பெண்ணும், உயர்வும் தாழ்வும், நட்பும் பகையும், விண்ணும் மண்ணும்  இல்லாமல் இருக்க முடியுமா ? இவை எல்லாம் இருக்கிறதே ?  எல்லாம் வேறு வேறாக இருக்கிறதே ? எப்படி இவை எல்லாம் ஒன்றாக முடியும் ? 

தன்னை பிறர் ஏவாமல் உண்பதுவே ஊண்
ஒன்றாக காண்பதுவே காட்சி
புலன் ஐந்தும் வென்றான் வீரமே வீரம்
என்றானும் சாவாமல் கற்பதுவே கல்வி 

பேதம் இல்லமால் எல்லாம் ஒன்றாக காண்பதுவே காட்சி. 

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

இந்த விண்ணும், மண்ணும், அதில் உள்ள இத்தனை விதமான பொருள்களும் உயிர்களும் எல்லாம் அவனே...அப்படி ஒரு காட்சி காண முடியும் என்றால் அது கண்ணுக்கு அமுதம் போன்றது 

சரி, எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பது ஆத்மா என்றே வைத்துக் கொள்வோம்....அப்படி என்றால் ஏன் அர்ஜுனன் துரியோதனை கொல்ல வேண்டும் ? கொல்பவனும், கொல்லப் படுபவனும் ஒன்று என்றால் ஏன் கொல்ல வேண்டும் ?

நல்ல கேள்வி. இதற்க்கு விடை கண்டாக வேண்டும்

32. ஆத்ம ஞானம் - செயல் அடங்க


32. ஆத்ம ஞானம் - செயல் அடங்க 


அர்ஜுனா, எவன் ஒருவன் ஆத்மா அழிவற்றது , பிறப்பு அற்றது என்று அறிந்து கொண்டானோ, அவன் எப்படி ஆத்மாவை அழிக்க நினைப்பான் ? ஒரு அழிவற்ற ஆத்மா, இன்னொரு ஆத்மாவை எப்படி அழிக்க முடியும் ?

கொல்வது கொல்லப்படுவது என்று இரண்டு மட்டும் அல்ல...எல்லாமே ஆத்மாதான் என்று அறிந்து கொண்டால் வேறு எதுவுமே செய்ய முடியாது.

ஆத்மா ஞானம் அடையும்போது செயல் என்பது நின்று விடும்.    ஒரு செயலும் இல்லாமல் இருக்க முடியுமா ?

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்    தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்        தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே.

என்பார் அருணகிரிநாதர். செயல் மாண்டு அடங்கிய பின், புத்தி உருகி பெருகி, புவனம் எல்லாம் நிறைந்து ஆனந்தம் கரை புரண்டு ஓடியதாகச் சொல்கிறார்.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலாம் என்று பத்ரகிரியார் புலம்புகிறார்.

கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக் கலந்தாண்டலுமே
அயல்மாண்ட டருவினைச் சுற்றமும்மாண் டவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகம்மாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. என்பார் மணிவாசகர்.

ஆத்மா ஞானம் வரும் போது, செயல் அடங்கும். கொல்வது, கொல்லப்படுவது மட்டும் அல்ல, எல்லா செயல்களும் அடங்கும்.

சரி, ஆத்மா ஞானம் என்றால் என்ன ? அதை அடைந்தால் எப்படி செயல் அடங்கும் ?

31 - பொருள்களின் ஆறு நிலைகள்

31 - பொருள்களின் ஆறு நிலைகள் 



ஆத்மா உண்டாவதும் இல்லை. ஆத்மா அழிவதும் இல்லை. அது உலகம் தோன்றிய காலத்தில் தோன்றவில்லை. உலகம் அழியும் போது அது அழிவதும் இல்லை. ஆத்மா பிறக்காதது, இறக்காதது, மாறாதது. மிகப் பழமையானது. இந்த உடல் அழிந்தாலும், ஆத்மா அழிவது இல்லை.

உலகில் உள்ள அனைத்து பொருள்களும் ஆறுவிதமான நிலைகளை அடைகின்றன. அவை

உண்டாவது
இருப்பது
வளர்வது
மாறுவது
தேய்வது
அழிவது

நாம் காணும் அனைத்தும் இந்த ஆறு வித நிலைகளுக்கு உட்பட்டவை.

தோன்றுவது என்றால் ஏதோ ஒன்றில் இருந்து தான் தோன்ற வேண்டும். அந்த ஏதோ ஒன்று ஆத்மாவிற்கு முந்தைய ஒன்றாக இருக்கும். ஆத்மா தோன்றுவதே இல்லை. எனவே அதற்க்கு முன்னால் என்று ஒன்று கிடையாது. தோன்றும் எதுவும் அழிய வேண்டும். ஆத்மா தோன்றாததால் அதற்க்கு அழிவு என்று ஒன்று கிடையாது.

அது என்றும் எப்போதும் நிரந்தரமாய் இருக்கிறது.

நான் என்பது இந்த உடல் அல்ல என்ற எண்ணம் ஏற்படும் போது, எதிரில் உள்ளவனும் உடல் அல்ல என்ற எண்ணம் ஏற்படும்.

எல்லாவற்றிற்குள்ளும் இருப்பது ஆத்மாதான் என்ற எண்ணம் உணரப்பட்டால் கொல்வதும், கொல்லப்படுவதும் வேறு அர்த்தம் கொள்ளும்.

இன்னும் கொஞ்சம் ஸ்லோகங்களை பார்த்து விட்டு இது பற்றி மேலும் சிந்திப்போம்,

30 - ஆத்மா கொல்வதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை


30 - ஆத்மா கொல்வதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை 


ஆத்மா கொல்வதும் இல்லை. கொல்லப் படுவதும் இல்லை. எவன் ஒருவன் ஆத்மா கொல்கிறது அல்லது கொல்லப் படுகிறது என்று கூறுகிறானோ, அவன் ஆத்மாவை பற்றி எதுவும் அறியாதவன் ஆவான்.

கிட்டத்தட்ட Law of conservation of Aathmaa என்று சொல்லிவிடலாம்

கொல்வது ஆத்மா இல்லை. கொல்லபடுவதும் ஆத்மா இல்லை. ஒரு உடல் இன்னொரு உடலை கொல்கிறது அல்லது கொல்லப் படுகிறது. கொல்வதும் கொல்லப் படுவதும் உடல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

ஆத்மா அழிவது இல்லை. சரி.          அது புதியதாய் பிறக்குமா ? புது ஆத்மா உருவாகுமா ?

 அடுத்த சில சுலோங்கங்களையும் பார்த்து விட்டு நாம் இதை பற்றி மேலும் சிந்திப்போம்.

29 - நான் என்பது என் உடலா ? ஆத்மாவா ?


29 -  நான் என்பது என் உடலா ? ஆத்மாவா ?



நாம் காணும் இந்த உடல்கள் அனைத்துமே கண்ணால் காண முடியாததும், அழிவற்றதும் அறிய இயலாததும் ஆன ஆத்மாவிற்கு உரிமையானது. இந்த உடல்கள் அவற்றின் கர்ம பலன் முடிந்தவுடன் அவை அழிந்துவிடும். அதனால் இவற்றை கண்டு நீ கவலைப் படாமல் யுத்தம் செய்வாயாக.

இந்த சுலோகம் சற்று கடினமானது மற்றும் சர்ச்சைக்கு இடமளிப்பது.

ஆத்மா அறிய இயலாதது என்பது இந்த சுலோகத்தின் முக்கியமான பகுதி. அறிய முடியாத ஒன்றை பற்றி நாம் ஏன் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டும். என்ன செய்தாலும் அதை அறிய முடியாது என்றால், பின் ஏன் மெனக்கட வேண்டும்.

ஆத்மாவை அறிந்து கொள்ளுதல் என்றால் என்ன ? யார் அறிந்து கொள்கிறார்கள் இங்கே ? இந்த உடலா ? இந்த உடலா ஆத்மாவை அறிந்து கொள்ளும் ? அல்லது ஆத்மாவே தன்னை தானே அறிந்து கொள்ளுதலா ? ஆத்மாவிற்கு தான் யார் என்று தெரியாதா ?

ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா ?

முதலில் அடிப்படையான ஒரு கேள்வி. நான் யார் ? நான் என்பது உடலா அல்லது ஆத்மாவா ? நான் என்பது வெறும் உடல் தான் என்றால் ஆத்மாவை பற்றிய சிந்தனையே வராது.

நான் என்பது இந்த உடல் அல்ல என்ற அறிவு (ஞானம் ) பிறக்கும் போது தான், ஆத்மாவை அறிந்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது. நான் உடல் அல்ல என்றால் பின் நான் யார் என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும். நான் என்பது உடல் அல்ல என்று சொல்லும் போது அப்படி சொல்லும் "நான்" யார் ?

இந்த உடல் அழியும் தன்மை உள்ளது என்பதை நாம் கண் கூடாகக் காண்கிறோம். நான் இந்த உடல் இல்லை என்றால், நான் என்பது வேறு என்ன என்ற கேள்வி எழுகிறது. உடல் அல்லாத "நான்" என்பதும் இந்த உடல் போலவே அழியக் கூடியதா ?  அதுவும் அழியக் கூடியது என்றால் அழியக் கூடிய அந்த "நான்" என்பதற்கும், இந்த உடலுக்கும் என்ன வேறு பாடு ? உடல் அழிந்த பின் சிறிது காலம் கழித்து அந்த "நான் " அழியுமா ? அல்லது உடல் அழிவதற்கு முன்னே அது அட்ழிந்து விடுமா ? அல்லது உடலோடேயே சேர்ந்து அழியுமா ? எப்படி பார்த்தாலும் அழியும் இந்த உடலுக்குள் இன்னொரு அழியும் பொருள் தேவை இல்லதாதாகவே படுகிறது. அப்படி என்றால் உடலுக்குள் இருக்கும் அந்த நான் அழியாத ஒன்றாய் இருக்க வேண்டும்.

நான் என்பது ஆத்மா என்ற எண்ணம் எழும் போது, ஆத்மா என்றால் என்ன என்று அறியத் தொடங்குகிறோம். அந்த எண்ணம் வரும் வரை, ஆத்மாவை பற்றி நாம் அறிய இயலாது.

அர்ஜுனனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. அவன் இந்த உடல் தான் எல்லாம் என்று நினைக்கிறான். "நான்" எப்படி என் உறவினர்களை கொல்லுவேன் என்பது தான் அவன் வாதம், அவன் தயக்கம். நான் என்பது அர்ஜுனனாகிய இந்த உடல் அல்ல, பீஷ்மர் என்ற அந்த உடல் அல்ல என்ற எண்ணம் அவனிடம் இல்லை.

எனவே கிருஷ்ணன் கூறுகிறான், இந்த உடல் அழியும். அதனதன் கர்ம பலன் முடிந்தவுடன், இந்த உடல் அழிந்து விடும். இந்த உடல் ஆத்மாவிற்கு உரியது. எனவே நீ கவலைப் படாமல் யுத்தம் செய் என்கிறான்.

கிருஷ்ணன் யுத்தம் செய்யச் சொன்னானா ? கிருஷ்ணன் வன்முறையையை ஆதரிக்கிரானா ? கிருஷ்ணனின் வழி முறையையை பின் பற்றினால், எல்லோரும் கொலை செய்யலாம்...கேட்டால் எப்படியும் இந்த உடல் அழியதானே போகிறது, அதன் கர்ம பலன் முடிந்து விட்டது எனவே அதை அழிப்பதில் தவறில்லை என்று வாதம் செய்யலாம். அநீதியையை எதிர்த்து போராடுவது அனைவரின் கடமை என்று எல்லோரும் துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு நாங்கள் கீதை காட்டிய வழியில் போகிறோம் என்று ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது ?

28 - ஆத்மா அழிவற்றது


28 - ஆத்மா அழிவற்றது 


இந்த உலகில் உள்ள அனைத்தும் ஆத்மாவால் நிறைந்து உள்ளது. ஆத்மா அழிவற்றது. அதை யாராலும் அழிக்க முடியாது.

இன்னும் ஒரு படி மேலே போய், எது அழிக்க முடியாததோ, அது ஆத்மா எனப்படும்.  ஆத்மா அனைத்திற்குள்ளும், அனைத்திற்க்கு வெளியேயும் இருக்கிறது.

அது எப்படி முடியும் ?

ஆகாயம் பானைக்கு உள்ளேயும், வெளியேயும் இருப்பதைப் போல ஆத்மா எங்கும் நிறைந்து இருக்கிறது.

இன்னொரு சிந்தனை - அழிவு என்றால் என்ன ?

இருந்து பின் இல்லாமல் போவது.   ஒன்றாய் இருந்து பின் மற்றொன்றாக மாறுவது தேய்ந்து போவது

ஆத்மா இந்த மாற்றங்களுக்கு உட்பட்டது அல்ல.

உலகில் உள்ள அனைத்தும் ஆறு நிலைகளை அடைகின்றன. ஆத்மா இந்த நிலைகளை அடைவது இல்லை.

அந்த ஆறு நிலைகளாவன....

Saturday, May 18, 2013

27. கீதை - உண்மையின் முதல் விதி


27. கீதை - உண்மையின் முதல் விதி 



நாம் ஒன்றை ஆராய்ச்சி செய்தால் நமக்கு இரண்டு விதமான அறிவு, உண்மை கிடைக்கும்.

முதலாவது, எது சரியானது என்ற அறிவு.   இரண்டாவது, எது சரியில்லாதது என்ற அறிவு.

சரி எது, தவறு எது என்று விளங்கும் உண்மை எது , பொய் எது என்று விளங்கும்.

சத், அசத் என்று அதை கீதை கூறுகிறது.

அரை இருட்டில் சற்று தூரத்தில் கிடப்பது பாம்பா, கயிறா என்று தெரியவில்லை.

சற்று நெருங்கி சென்று ஆராய்கிறோம். பாம்பு அல்ல, கயிறு தான் என்று தெரிகிறது. பாம்பு பொய், கயிறு நிஜம்.

எது சத்தியமானது என்று எப்படி அறிந்து கொள்வது ?

சத்யமான ஒன்றிற்கு ஏதாவது குணாதிசயம் இருக்கிறதா ? இப்படி இப்படி இருந்தால் அது உண்மையானது, சத்தியமானது என்று அறிந்து கொள்ளும்படி ஏதாவது கோட்பாடு இருக்கிறதா என்றால் - இருக்கிறது என்கிறது கீதை. அது மட்டும் அல்ல, ஒரு பெரிய பட்டியலே தருகிறது....

ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

முதலாவதாக...எது மற்றொன்றை சார்ந்து இருக்கிறதோ, அது நிரந்தரமானது, உண்மையானது அல்ல. இரண்டு பொருள்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தால் அவை இரண்டுமே நிரந்தரமானவை அல்ல.

எப்படி ?

கிருஷ்ணன் சொல்கிறான்.

நாம் உணரும் இன்பமும் துன்பமும் இரண்டு காரணங்களால் நிகழ்கின்றன.

ஒன்று புறக் காரணம் - சூடு, குளிர், உணவு, சுடு சொல் போன்ற புறக் காரணங்கள். இரண்டாவது, நம் மனம் என்ற அகக் காரணம்.
ஒரு உணவை ஒருவன் "ஐயோ காரம்" என்கிறான். அதே உணவை மற்றொருவன் " என்ன இது உப்பு உறைப்பு இல்லாமல் இருக்கிறது " என்கிறான். உணவு ஒன்று தான். சுவை மாறுபடுகிறது.

எது உண்மை ? காரமா ? காரம் இல்லாத தன்மையா ?

புலன்களும், புலன்களால் நுகரப்படும் இன்ப துன்பங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. எனவே இரண்டும் உண்மையானவை அல்ல.

அனைத்து  உறவுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை தானே ?

அர்ஜுனனின் தயக்கம் எல்லாம் உறவுகளை எப்படி கொல்வது என்பதில்தான் அடங்கி இருக்கிறது. அதை விளக்க வந்த கிருஷ்ணன், அதை மட்டும் விளக்க வில்லை, அதையும் தாண்டி உறவுகள் மட்டும் பொய் அல்ல வேறு எது எல்லாம் பொய் என்று சொல்கிறான். கீதை காலத்தை தாண்டி நிற்பதற்கு

அதுவும் ஒரு காரணம்.

எது ஒன்று, எதையும் சாராமல் தனித்து நிற்கிறதோ அதுவே உண்மையானது, நிரந்தரமானது. 

இது முதல் விதி.

26 - கீதை - கீதை இந்த கால கட்டத்திற்கு பொருந்துமா ?


26 - கீதை - கீதை இந்த கால கட்டத்திற்கு பொருந்துமா ?


எனக்கு தெரிந்த ஒரு மருத்துவர் இருந்தார். மிகச் சிறந்த மருத்துவர். இருபது வருடங்களுக்கு முன்னால் வயிற்று வலி என்று அவரிடம் போனேன். நல்ல மருந்து தந்தார். குணமாகி விட்டது.

இருபது வருடம் கழித்து மீண்டும் எனக்கு வயிற்று வலி. அன்று தந்த மாதிரையையை சாப்பிடலாமா ? மருத்துவர் சிறந்தவர் தான். மருந்தும் சிறந்த மருந்து தான். இருந்தாலும் இருபது முப்பது வருடங்களுக்கு முன் தந்த மருந்தை (புதிதாக அதை கடையில் வாங்கினாலும்) உண்பது சரியா அல்லது ஒரு மருத்துவரிடம் நம் உடலை காண்பித்து இப்ப வந்த வயிற்று வலிக்கு என்ன காரணம் என்று கண்டு அதற்க்கு தகுந்த மாத்திரை சாப்பிடுவது சரியா ?

அது போகட்டும்

என் நண்பர் ஒருவர் தலை வலி என்று ஒரு மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உண்டு குணமடைந்தார். எனக்கு தலைவலி வந்தால், அதே மருந்தை நானும் உண்ணலாமா அல்லது நான் ஒரு மருத்துவரிடம் போய்  என் உடலை காண்பித்து என் தலை வலிக்கு மருந்து கொள்வது சரியா ?

நண்பரின் மருந்து நமக்கு சரிப்படாது

நமக்கே இருபது முப்பது வருடங்களுக்கு முன் கொடுத்த மருந்து இப்போது சரிப்படாது

பின் எப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்கு, அந்த போர் களத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கிருஷ்ணன் என்ற மருத்துவன் தந்த மருந்து இன்று போர்க்களத்தில் இல்லாத நமக்கு சரிப்படும் ?

உறவினர்களையும், ஆசிரியரையும் நாம் கொல்வதற்கு நின்றால் ஒரு வேளை நமக்கும் கீதை பயன்படலாம்...நாம் என்ன யுத்தம் செய்யவா நிற்கிறோம்...எதற்கு அனாவசியமாய் கீதையையை படிக்க வேண்டும்....

25 - கீதை - எது பொய் ?


25 - கீதை - எது பொய் ?


அர்ஜுனா, இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாதாகாது. உண்மையான ஞானிகள் இதன் உண்மையை அறிவார்கள்.

ரொம்ப ஆழமான வாக்கியம்.

எது உண்மையோ அது முதலிலும், நடுவிலும், இறுதியிலும் இருக்கும். இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

எது முதலில் இல்லையோ, அது உண்மையாகாது.
எது நடுவில் இல்லையோ, அது உண்மையாகாது.
எது இறுதியில் இல்லாமல் போகுமோ, அது உண்மையாகாது.

இந்த உடல் முதலில் இல்லாமல் இருந்தது, பின் வந்தது, இறுதியில் இல்லாமல் போய் விடும் எனவே இது உண்மையானது அல்ல.

உண்மை என்பது எல்லா காலத்திலும் நிரந்தரமாய் இருப்பது . தோன்றி மறைவது உண்மையான ஒன்றாய் இருக்க முடியாது.

தோன்றி மறைவன உண்மைகள் அல்ல.

இளமை, சுகம், துக்கம், செல்வம், உறவு இவை  எல்லாம் வரும், போகும். இவை நிரந்தரமானவை அல்ல.

நிஜம் இல்லாத ஒன்றுக்கு ஏன் கவலைப் பட வேண்டும் ?

சரி. அப்படி என்றால், எது தான் நிரந்தரம், எது தான் நிஜம், எது தான் சாஸ்வதம் என்ற கேள்வி எழும் அல்லவா ?

அந்த கேள்விக்கும் கிருஷ்ணன் பதில் தருகிறான்....

24 - கீதை கொலையை ஞாபபடுத்துகிறதா ?


24 - கீதை கொலையை ஞாபபடுத்துகிறதா ?


இனிவரும் ஸ்லோகங்கள் சற்று சிக்கலானவை.

அர்ஜுனா, நானோ, நீயோ, இந்த மன்னர்களோ இதற்கு முன்னால் எப்போதும் இல்லாமல் இருந்தது இல்லை, இனிமேலும் இல்லாமல் இருக்கப் போவதும் இல்லை.

இதை எப்படி புரிந்து கொள்வது ?

சில உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

நாம், ஒரு நாற்பது வயது ஆளைப் பார்க்கும் போது அவர் முப்பது வயது, இருபது வயது, பத்து வயது என்று இருந்து இப்ப நாற்பது வயது ஆளாய் ஆகி இருக்கிறார். அவர் திடீரென்று நாற்பது வயது ஆளாய் தோன்றி விடவில்லை. தோற்றம் மாறி இருக்கிறது. ஆள் அதே தான். அவர் ஒன்றும் இல்லாமல் இருந்து திடீரென்று வந்து விடவில்லை.

அதே போல் நாம் இதுவரை இல்லாமல் இருந்து, ஒரு சூன்யத்தில் இருந்து முளைத்து விடவில்லை. ஏதோ ஒன்றின் தொடர்ச்சியாக நாம் இருந்து கொண்டு இருக்கிறோம்.

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் கூட நாம் பல வேதி பொருள்களின் தொகுப்பு. கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் பாஸ்பரஸ், கொஞ்சம் இரும்பு , கொஞ்சம் கார்பன்  இவற்றின் தொகுப்பு தான் நாம். நாம் இறந்த பின் அந்த தனிமங்கள் பழையபடி அதனதன் நிலைமைக்கு திரும்பி போய் விடுகின்றன. அதில் ஒன்றும் சந்தேகம் கிடையாது.

நாம் என்றும் இருந்தோம். என்றும் இருப்போம். தோற்றம் மாறலாம். அணுக்களின் தொகுதி மாறலாம்.

நம் உடம்பில் உள்ள சில அணுக்கள் அர்ஜுனனின் உடம்பில் இருந்த அணுக்களாகக் கூட இருக்கலாம். சில அணுக்கள் தேய்ந்து (decay ) மற்றொரு அணுவாக மாறி விடுவது உண்டு. உதாரணமாக கார்பன் 12 அணு 5000 வருடத்தில் நைட்ரஜென் 12 அணுவாக மாறிவிடும். ஆனால் சில அணுக்கள் தேய்வதே இல்லை.

எனவே பிறப்பு, வளர்தல், இறத்தல் எல்லாமே இந்த அணுக்களை சேர்ப்பதும் பிரிப்பதும்தான்.

அப்படி என்றால், கொல்வது பாவம் இல்லையா ? யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாமா ? அர்ஜுனனுக்கு ஒரு நீதி நமக்கு ஒரு நீதியா ?

கீதை கொலையை ஞாயப் படுத்துகிறதா ? உயிர் கொலை பாவம் இல்லையா ?

மேலும் பார்ப்போம்....

23 - கீதை - யாருக்காக கவலைப் படவேண்டும் ?


23 - கீதை - யாருக்காக கவலைப் படவேண்டும் ?



கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறான்.

அர்ஜுனா, நீ முதலில் குழந்தையாய் இருந்தாய், பின் பாலகனாய், இளைஞனாய் ஆனாய். இன்னும் கொஞ்ச நாளில் வயதான கிழவனாய் ஆவாய். உன் தோற்றம் மாறிக் கொண்டே இருக்கிறது அல்லவா. ஆனாலும் அர்ஜுனன் என்ற நீ அப்படியே இருக்கிறாய்.

எப்படி இந்த உடல் மாறிக் கொண்டே இருக்கிறதோ அது போல் உடலினின் உள் இருக்கும் ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்கு மாறி கொண்டு இருக்கிறது.

அர்ஜுனா, நீ துயர் படத் தகாதர் பொருட்டு துயர் படுகிறாய். அதே சமயம் ஞானப் பேச்சும் பேசுகிறாய் என்றான் கண்ணன்.

அது என்ன துயர் படத் தகாதார் ?

முதல் அத்யாயத்தில் அர்ஜுனன் சொன்னான், போரினால் குலம் அழியும், குலம் அழிந்தால் பித்ருக்கள் நீர் கடன் கிடைக்காமல் அவதி உருவார்கள் என்று. அப்படி என்றால் அர்ஜுனனுக்கு ஆத்மா என்பது பற்றி தெரிந்து இருக்கிறது. முன்னோர்கள் உடல் அழிந்த பின் ஆத்மாவாக இருப்பார்கள் என்று ஞானப் பேச்சு பேசுகிறான்.

அப்படி ஆத்மா  இருப்பது உண்மையானால், அப்படி  அர்ஜுனன் நம்பினால், உடல் இறப்பதை பற்றி ஏன் கவலைப் பட வேண்டும் ? அர்ஜுனன் வாசித்து இருக்கிறான் ஆனால் அவன் ஞானம் பெறவில்லை. கல்வி வேறு ஞானம் வேறு.

 அர்ஜுனா, இறந்தார்கேனும் இருந்தார்கேனும் அறிஞர்கள் துரப் பட மாட்டார்கள் என்றான் கண்ணன் ?

ஏன் ? இறந்தவர்களை பற்றி கவலைப் பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை. இருப்பவர்கள் இறப்பது என்பது தவிர்க்க முடியாதது.  இருப்பும் இறப்பும் கடலின் அலை போல. விழுந்தாலும் எழுந்தாலும் அலை கடலைத் தவிர்த்து வேறு அல்ல.

ஐயோ, அந்த அலை போய் விட்டதே என்றோ, ஐயோ இந்த அலை போய் விடப் போகிறதே என்றோ கவலைப் படுவதில் ஒரு பலனும் இல்லை. மாறுகின்ற அலையின் அடியில் கடல் சாஸ்வதமாய் இருப்பதைப் போல மாறும் இந்த உடல்களுக்குப் பின்னே ஆத்மா சாஸ்வதமாய் இருக்கிறது....

ஆத்மாவின் குணங்களை பற்றியும், அதற்க்கும் இந்த உடலுக்கும் உள்ள தொடர்பை பற்றியும் மேலும் கண்ணன் சொல்கிறான்....

என்ன சொல்கிறான் ? பார்ப்போம்....

22 - கீதை - உங்கள் முடிவை நீங்களே எடுங்கள்


22 - கீதை - உங்கள் முடிவை நீங்களே எடுங்கள் 


நாம் சில சமயம் காரணங்களை அலசி ஆராய்ந்து பின் ஒரு முடிவுக்கு வருவோம்.

ஆனால் பலசமயம் முதலில் முடிவை எடுத்து விட்டு பின் காரணங்களை கொண்டு வருவோம்.

ஒரு வீடு வாங்குவது என்று முடிவு செய்து விட்டால் அதில் உள்ள நல்ல அம்சங்கள் மட்டும் நமக்குத் தெரியும். அதுவே வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டால் அதில் உள்ள குறைகள் மட்டும் தெரியும்.

முதலில் முடிவு பின் ஆராய்ச்சி.

அர்ஜுனன் முதலில் போர் என்று முடிவு செய்து விட்டான். படை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்து விட்டான்.

வந்த பின் குழப்பம். சண்டை இடுவது இல்லை என்று முடிவு செய்து விட்டான். அதற்க்கு ஆயிரம் காரணம் கூறுகிறான்...உறவினர்கள், குரு, பிதாமகர், குலம் அழியும், பெண்கள் முறை தவறுவார்கள், பித்ருகள் பிண்டம் பெற மாட்டார்கள் என்று காரணங்களை அடுக்குகிறான்.

இதெல்லாம் முன்னாலேயே தெரியாதா என்றால் - தெரியும்.

இதெல்லாம் கிருஷ்ணனுக்குத் தெரியாதா என்றால் - தெரியும்.

பின் எதற்கு இந்த புலம்பல் ?

அர்ஜுனனுக்கு தான் எடுத்த முடிவிற்கு ஆதாரம் வேண்டும். ஒரு வேளை கிருஷ்ணன் போர் வேண்டாம் சொல்லி விட்டால், கிருஷ்ணனே சொல்லி விட்டான் என்று கிருஷ்ணன் மேல் பழியையை போட்டு விடலாம்.

இல்லை போர் செய் என்று கிருஷ்ணன் சொல்லி விட்டால், அந்த பழி எல்லாவற்றையும் கிருஷ்ணன் மேல் போட்டு விடலாம்.

அர்ஜுனன் எந்த முடிவையும் எடுக்கத் தயாராக இல்லை.

கிருஷ்ணா நான் உன் சீடன். நீ எனக்கு கட்டளை இடு என்று சொல்லிவிட்டு தேர் தட்டில் உட்கார்ந்து விட்டான்.

கிருஷ்ணன் இதற்க்கெல்லாம் மசிகிற ஆள் இல்லை.

அர்ஜுனா, நீ சண்டை போடு என்றோ, வீட்டுக்குப் போ என்று சொல்லவில்லை. 700  சுலோகங்களில் அர்ஜுனனுக்கு உபதேசம் பண்ணுகிறான். அர்ஜுனனே முடிவு எடுக்க வேண்டும் என்று.

21 - கீதை - இறைவனுக்கு நாம் இடும் கட்டளைகள்


21 - கீதை - இறைவனுக்கு நாம் இடும் கட்டளைகள் 


அர்ஜுனன் தன் பாட்டுக்கு ஏதோ புலம்பிக் கொண்டு இருக்கிறான். அதை எல்லாம் காதிலேயே வாங்காத மாதிரி கிருஷ்ணன் ஆத்மா, அது பிறப்பது இல்லை, இறப்பது இல்லை என்று ஏதோ சொல்லிக் கொண்டு போகிறான். 

என்ன தான் நடக்கிறது இங்கே ?   கொஞ்சம் நிதானமாகப் பார்ப்போம்.

முதலில் அர்ஜுனன் கண்ணனிடம் " என் தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்து...என்னோடு போரிட வந்திருக்கும் வீரர்களை நான் பார்க்க வேண்டும் " என்றான்.

வெகு சீக்கிரத்தில், " எனக்கு எது சரி எது தவறு என்று தெரியவில்லை. நான் உன்னை சரணாகதி அடைகிறேன். நீ எனக்கு கட்டளை இடு " என்றான் அர்ஜுனன் கண்ணனிடம். 

இது நம் வாழ்விலும் நடப்பது தானே. 

முதலில் அர்ஜுனன் தான் சொல்லியபடி கண்ணன் கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

நாம் செய்வது இல்லையா? நாம் நினைக்கும் படி எல்லாம் கடவுள் நடக்க வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பது இல்லையா ?

இன்னைக்கு மழை வரக் கூடாது, இன்னைக்கு புகை வண்டி தாமதமா கிளம்ப வேண்டும் , என் பையன் நல்ல மார்க் வாங்கணும், நாம் கடவுளுக்கு எவ்வளவு உத்தரவு போடுகிறோம். சில சமயம் அவரை நமக்கு வேலை ஆளாக கூட மாற்றி விடுகிறோம்...நீ எனக்கு இதை செய்தால் நான் உனக்கு இவ்வளவு பணம் தருகிறேன், மொட்டை போடுகிறேன், நடந்து வருகிறேன் என்று எல்லாம் அவரோடு வியாபாரம் பேசுகிறோம்.

முதிர்ச்சி வர வர கேட்பதை குறைக்கிறோம். "வேண்டும் பரிசு ஒன்று உண்டெங்கில், அதுவும் உந்தன் விருப்பு அன்றே" என்று மாணிக்க வாசகர் கூறிய மாதிரி, எல்லாவற்றையும் இறைவனிடம் விட்டு விடுகிறோம். 

இன்னொரு விஷயம்...அர்ஜுனனுக்கு என்ன வேண்டும் ? போரை விட்டு போக வேண்டும் என்றால் போக வேண்டியது தானே. கிருஷ்ணா, தேரை என் அரண்மனைக்கு விடு. நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. 

ஒண்ணு போர் செய்யணும், இல்லை என்றால் போர்க் களத்தை விட்டு விலகிப் போகணும். இரண்டும் இல்லாமால் இது என்ன தர்க்கம் பண்ணிக் கொண்டு?

அர்ஜுனனுக்கு என்ன தான் வேண்டும்? ஏன் கிருஷ்ணன் அவனின் கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்ல வில்லை?

சிந்திப்போம் ....

Friday, May 17, 2013

20 - கீதை - ஆத்மா - ஒரு அறிமுகம்


20 - கீதை - ஆத்மா - ஒரு அறிமுகம்

பொருள்களை பற்றி ஆராய புகுந்த அறிவியல், உலகில் உள்ள அத்தனை பொருள்களுக்கும் அடிப்படை ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று அனுமானித்து அதை தேடிக் கொண்டு இருக்கிறது.

முதலில் அது அணு  என்று நினைத்தது.

பின் அது அல்ல, அதையும் தாண்டி ப்ரோட்டான், neutron, எலெக்ட்ரான்  என்று நினைத்தது.

இன்னும் கொஞ்சம் உள்ளே போய் , போசான் , quark , என்று போய்க் கொண்டிருக்கிறது.

அனைத்து பொருள்களும் ஏதோ ஒரு சில துகள்களால் ஆனது என்று  இயற்பியல் கூறுகிறது.

அதேபோல், அத்தனை உயிரினங்களும் ஏதோ ஒரு அடிப்படை கட்டமைப்பில் இருந்து வருவதாக உயிரியியல் கண்டு தெளிந்தது.

 அதை செல் என்று சொல்கிறது இன்னும் கொஞ்சம் உள்ளே போய்  nucleus, DNA , RNA  என்ற அடிப்படை உயிர் துகள்களால் ஆனது என்று சொல்கிறது.

அத்தனை இசைக்கும் சப்த ஸ்வரங்களே அடிப்படை.

இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் அடி நாதமாய் ஏதோ ஒன்று இருக்கிறது.

இத்தனை ஜீவ  இராசிகளுக்கும் அடிப்படை ஆத்மா என்ற ஒன்று என்று கிருஷ்ணன் தன்  போதனையை தொடங்குகிறான்

பார்த்தா, நீ துயர் படத் தகாதவர்கள்  பொருட்டு துயர் படுகிறாய். பெரிய ஞானி போல் பேசுகிறாய். அறிவுள்ள எவனும் இறந்தவர்களுகக்காகவும் , இருப்பவர்களுக்காகவும்    துயரம் அடைய மாட்டான். 

நீயும், நானும் இங்குள்ள மற்ற எல்லோரும் இதுவரை இல்லாமல் இருந்து இப்போது திடீரென்று முளைத்து விடவில்லை. இனிமேலும் அவர்கள் ஒன்றுமில்லாமல் காணமல் போகப் போவதும் இல்லை.

எப்படி இந்த உடல் பிள்ளை பிராயம், இளமை, முதுமை என்று மாறிக் கொண்டே இருக்கிறதோ, அது போல ஆத்மாவும் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்கு மாறிக் கொண்டே இருக்கும். வீரன் இதை எல்லாம் நினைத்து கலங்க மாட்டான். 

குளிரும் வெப்பமும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நீ இவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும். 

இன்பமும் துன்பமும் வேறல்ல, அவை ஒன்று தான் என்று நினைப்பவனே தீரன் அவன் சாகா வரம் பெற்றவன் 

என்று கிருஷ்ணன் சொல்லிக் கொண்டு போகிறான்.

அர்ஜுனன் கேட்டது ஒன்று. கிருஷ்ணன் சொன்னது மற்றொன்று

அர்ஜுனனின் குழப்பம் உறவினர்களை எப்படி கொல்வது , அப்படி கொன்றால் குலம்  அழியும், குல தர்மங்கள் நாசமாகும் , எனக்கு நரகம் கிடைக்கும், அதில் ஒரு சந்தோஷமும் இல்லை, நான் இந்த யுத்தம் செய்ய மாட்டேன்  என்று கூறிக் கொண்டு போகிறான்.

ஆனால் கிருஷ்ணனோ ஆத்மா , அது இது என்று சொல்லிக் கொண்டு போகிறான்.

ஏதோ இருவரும் தனித்தனியே பேசிக் கொள்வது மாதிரி இருக்குல ?

அர்ஜுனன் கேட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணனின் விடை தான் என்ன ?

மேலும் பார்ப்போம் .

19 - கீதை வாழ்வின் தளங்கள்


19 - கீதை  வாழ்வின் தளங்கள் 

Physical plane -   உடற் கூறு சார்ந்த பகுப்பு - உயிர் உள்ளது, உயிர் இல்லாதாது, ஆண், பெண் என்ற பிரிவு.

Scientific plane - அறிவியல் சார்ந்த பகுப்பு - எலும்பு, தசை, செல், ப்ரோட்டான், நியுட்ரான், எலெக்ட்ரான் என்ற பகுப்பு

Emotional  plane - உணர்வு சார்ந்த பகுப்பு - தாய், தாரம், தந்தை, மகன், மனைவி, மகள், மாமா, மாமி என்ற பகுப்பு 

இவை எல்லாம் மனிதர்களை ஏதோ ஒரு வகையில் பிரித்து ஒன்றுக்கு ஒன்று எப்படி வேறு பட்டது என்று நமக்கு காண்பிக்கின்றன. 

இவற்றை தாண்டி spiritual plane  அதாவது ஆன்மீகத் தளம் ஒன்று இருக்கிறது. 

உங்களுக்குள்ளும், எனக்குள்ளும் இன்னும் உள்ள அத்தனை உயிர்களுக்கும் உள்ளே இருந்து இயக்குவது ஒரே சக்தி தான் என்று கூறும் தளம். 

உள்ளே போக போக வேறுபாடு குறைந்து கொண்டே போகிறது 

அர்ஜுனன் மீண்டும் சொன்னதையே சொல்கிறான். 

கடைசியில் தான் திருப்பி திருப்பி ஒரே விஷயத்தை சொல்வதை உணர்ந்து, " என்னுடைய கோழைத் தனத்தினால், சிறு மதியால், எது சரி, எது தவறு என்று உணராமல், குழம்பிய மனத்துடன் உன்னை கேட்கிறேன், எது நல்லது என்று நிச்சயமாக எனக்குச் சொல். நான் உன் சீடன். உன்னை சரண் அடைகிறேன். எனக்கு கட்டளை இடு" 

உங்கள் மூக்கு கண்ணாடி கீறல் விழுந்து, அழுக்கு அடைந்து மங்கிப் போய் இருந்தால், அதை அணிந்து கொண்டு நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வெளி உலகம் மங்கலாக, கீறல் விழுந்து தான் தெரியும். உற்று உற்று பார்க்க கண் வலியும் தலை வலியும் தான் வரும். கண்ணாடியை எடுத்து விட்டுப் பார்த்தால் ஒன்றும் தெரிவது இல்லை. கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தால் எல்லாம் கோணல் மானலாகத் தெரிகிறது. 

என்ன தான் செய்வது?

நல்ல பார்வை உள்ள யாரிடமாவது கேட்க்க வேண்டும். அதைத்தான் அர்ஜுனன் செய்கிறான். என் புத்திக்கு எட்டவில்லை, என் மனமும் குழம்பி கிடக்கிறது. நீயே சொல் எது சரி, எது தவறு என்று. நீ சொல்வதை நான் கட்டளையாக ஏற்றுக் கொள்கிறேன் என்கிறான். 

அப்படி சொன்னானே தவிர, செய்யவில்லை. கிருஷ்ணன் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அவனிடம் சந்தேகம் கேட்கிறான். 

அவனுடைய சரணாகதி பரி பூரணமாகவில்லை. 

அப்படி அர்ஜுனன் சொன்னவுடன் அவனைப் பார்த்து புன்முறுவல் செய்து கிருஷ்ணன் சொல்ல ஆரம்பிக்கிறான்....

கீதா உபதேசம் இங்கிருந்து ஆரம்பிக்கிறது....

Friday, May 10, 2013

18. கீதை - எல்லாம் பார்வையில் இருக்கிறது


கீதை - எல்லாம் பார்வையில் இருக்கிறது 


உங்கள் கையையை வெட்ட வேண்டும் என்று யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? அதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா ? ஒருக்காலும் மாட்டீர்கள் தானே. 

சொல்லுவது ஒரு மருத்துவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் உங்கள் கையை எடுக்காவிட்டால், அதில் உள்ள தோற்று நோய் மற்ற இடங்களுக்கும் பரவி உயிருக்கு ஆபத்து என்று சொன்னால் என்ன சொல்வீர்கள் ? என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை டாக்டர் எப்படியாவது அந்த கையை எடுத்து விடுங்கள் என்று சொல்வீர்கள் தானே ?

ஏன், இந்த மாற்றம். பார்க்கும் கோணம் மாறியதால், உங்கள் மனம் மாறுகிறது. 

நம் வாழ்க்கையும், நம்மை சுற்றியுள்ள மனிதர்களும் நிகழ்வுகளும் பல தளங்களில் இயங்கி கொண்டு இருக்கின்றது. ஒரு கோணத்தில் பார்த்தால் பிரச்சனை போல் தெரியும் ஒன்று இன்னொரு தளத்தில் இருந்து பார்த்தால் பிரச்சனையாக இருக்காது. 

உடல் சார்ந்த ஒரு தளம். அங்கே ஒரு பெண் போய்க் கொண்டிருக்கிறாள் என்பது ஒரு உடல் சார்ந்த தளம். 

அந்த பெண் இதயம், நுரையீரல், செல், சைடோப்லாசம் இவற்றின் தொகுதி என்று அறிவியல், உயிரியல் சார்ந்த நிலையில் ஒரு தளம். அந்த பெண்ணுக்கும் மற்ற எந்த பெண்ணுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை எல்லோரும் நரம்பு, சதை, எலும்பு இவற்றின் தொகுதிதான். ஒரு மருத்துவர் ஒரு பெண்ணின் udalai இப்படித்தான் பார்ப்பார்.  

உணர்ச்சிகள் கொண்ட இன்னொரு தளம் - அந்த பெண் என் அம்மா. உடனே அந்த பெண்ணைப் பற்றிய பல விஷயங்கள் நம் மனதில் மாறுகிறது. அதுவே மனைவி, மகள், காதலி, என்று பல உணர்வு தளங்களில் மாறலாம். நம் உணர்ச்சிகளும், நாம் அந்த பெண்ணோடு நடந்து கொள்ளும் விதமும் அதைப் பொறுத்து  மாறும். 

ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டரில் இருக்கும் அந்த உடல் தன தாய் என்று நினைத்தால், அவருக்கு தடுமாற்றம் வரும். ஆபரேஷன் செய்ய வேண்டிய கடமையையை அவரால் சரிவர செய்ய முடியாது.  

இவற்றை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. இதையும் தாண்டி இன்னொரு தளம் இருக்கிறது. 

 அர்ஜுனனின் குழப்பம் எதிரில் இருப்பவர்களை உணர்வு தளத்தில் இருந்து மட்டும் பார்த்ததால் வந்தது. 

உடலையும், உணர்வையும் தாண்டி இன்னொரு தளம் இருக்கிறது. அதைத்தான் கிருஷ்ணன் இந்த அத்யாயத்தில் அர்ஜுனனுக்கு காண்பிக்கிறான். 

புரிந்து கொள்ள கொஞ்சம் சிக்கலான தளம். ஒரு கோணம்.

அது என்ன ?  பார்ப்போம்.

17. கீதை - 2.2 - 2.3 - இது என்ன பேடித்தனம்?


கீதை - 2.2 - 2.3 - இது என்ன பேடித்தனம்?


முதல் அத்யாயத்தில் அர்ஜுனன் சொல்வதை மிகப் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தான் கிருஷ்ணன். நடுவில் ஒரு வார்த்தை பேசவில்லை. இடை மறிக்கவில்லை. பேசட்டும், மனத்தில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் வெளியே கொண்டு வரட்டும் என்று காத்திருக்கிறான். 

அனைத்தையும் கொட்டி தீர்த்த பின், அர்ஜுனன் சோர்ந்து, நீர் மல்கும் விழிகளோடு தேரில் அமர்ந்து விடுகிறான். 

அர்ஜுனன் சொல்லியதின் சாராம்சம் என்ன - உறவினர்களை கொல்ல முடியாது. கொன்றால் பாவம். அவர்களை கொன்ற பின் நான் சதோஷமாக இருக்க மாட்டேன். அவ்வளவுதான். 

அர்ஜுனன் போருக்கு எதிரி இல்லை. எதிரில் இருப்பவர்கள் உறவினர்களாக இல்லாவிட்டால் அவர்களை கொல்லுவதில் அவனுக்கு ஒரு தடையும் இல்லை. உறவு தான் நடுவில் நிற்கிறது. 

கிருஷ்ணன் கேட்கிறான் - "இந்த உள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய் ? இது உன்னை போன்ற ஆரியனுக்குத் தகாது. இந்த சோர்வினால் உனக்கு அபகீர்த்தி விழையும். நீ சொர்கத்தை அடைய மாட்டாய். இந்த பேடித் தன்மையை விடு. மனச் சோர்வை விட்டு எழுந்து நில், பகைவர்களை சுடுவோனே "
என்று 2 மற்றும் 3 வது சுலோகங்களில் கூறுகிறான். 

வாழ்க்கையில் சவால்கள், பிரச்சனைகள் வரும் போது நாம் பொதுவாக என்ன நினைப்போம் -  முடிந்தால் எதிர்த்து நின்று போராடுவோம், இல்லையென்றால் அந்த பிரச்சனையை விட்டு ஓடி விட நினைப்போம் (Fight or Flight) . 

இப்போது அர்ஜுனன் ஓடி விட நினைக்கிறான். 

பிரச்னையை கண்டு ஓடி ஒளிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியும் சந்தோஷமும் அடைந்ததாக வரலாறே இல்லை. 

"சரி அர்ஜுனா, நீ சொலுவது சரிதான்....உன் பாட்டனையும், குருவையும், உறவினர்களையும், நண்பர்களையும் கொன்று வரும் வெற்றியில் என்ன சந்தோஷம் இருக்க முடியும், வா, நாம் வீட்டுக்குப் போகலாம் " என்று கண்ணன் சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று அவனே அர்ஜுனனுக்கு உணர்த்துகிறான். 

அப்படி நீ சோர்ந்து போய் இருந்து விட்டால் உனக்கு அபகீர்த்தி வரும் என்கிறான்.

ஒரு வேளை அர்ஜுனன், பரவாயில்லை, எனக்கு அபகீர்த்தி வந்தாலும், உறவினர்களையும், மற்றவர்களையும் கொல்லாத புண்ணியத்தால் எனக்கு சொர்க்கம் கிடைக்குமே என்று அர்ஜுனன் நினைக்கலாம். அதற்க்கும் வழி இல்லாமல், " உனக்கு சொர்கமும் கிடைக்காது" என்று சொல்கிறான். 

இது ஒரு பேடித்தனம் என்கிறான். ஏன் ?

ஆண் என்றால் தைரியம், வீரம், எல்லாம் இருக்க வேண்டும்.
பெண் என்றால் கனிவு, அன்பு, காதல், பாசம் இருக்க வேண்டும்.

அர்ஜுனன் சண்டை இட மாட்டேன் என்று சொன்னது போர் கொடிய செயல் என்ற கருணையால் அல்ல. துரோணரும், பீஷ்மரும் இல்லாமல் இருந்திருந்தால் மற்றவர்களை கொல்ல அவன் தயார் தான். உறவு அவனை குழப்புகிறது. சண்டை இடும் வீரம் இருக்கிறது, சண்டை இட முடியாமல் மனக் குழப்பமும் இருக்கிறது. 

எனவே கிருஷ்ணன், " இது என்ன பேடித் தனம் " என்று அவனை சாடுகிறான். 

16. கீதை - நான் யார் ?


கீதை - நான் யார் ?


நாம் சிறு வயது முதலே நம் உடம்பு தான் நாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். 

இந்த உடம்போடு சேர்ந்தது எல்லாம் நம்முடையது என்று எண்ணத் தலைப் படுகிறோம். 

என் சட்டை, என் பொம்மை , என் ரிப்பன், என் சிலேட்டு, என் குச்சி, என்று ஆரம்பிக்கிறது. 

பின் என் அம்மா, என் அப்பா, என் வீடு, என் பள்ளி, என் ஆசிரியர், என் நண்பன் என்று விரிகிறது.

அடுத்து, என் சமூகம், என் ஜாதி, என் குலம், என்று எண்ணுகிறோம்.

அதையும் அடுத்து என் ஊர், என் நாடு, என் மதம் என்று நாம் நினைக்கிறோம். 

ஒவ்வொரு முறை நாம் "என்னது" என்று நினைக்கும் போது நம்மை சுற்றி ஒரு வேலி போடுகிறோம். 

என் வீடு. இந்த வேலிக்கு உள்ளே இருப்பவர்கள் என்னை சார்ந்தவர்கள். வெளியே இருப்பவர்கள் என்னை சாராதவர்கள் என்று ஒரு சுவர் எழுப்புகிறோம். 

இப்படி நம்மை சுற்றி பற்பல சுவர்களை எழுப்பிக் கொண்டு தனித்து நிற்கிறோம்.

மதம் என்ற சுவர். நாடு என்ற சுவர். வீடு என்ற சுவர். 

ஒரு முறை சுவர் எழுப்பி விட்டால் பின் சுவற்றிற்கு உள்ளே இருப்பவர்களை, இருப்பவைகளை காக்க வேண்டி இருக்கிறது, அதற்காக வெளியே உள்ளவர்களிடம்  சண்டை இட வேண்டி இருக்கிறது. 

சில சமயம் உள்ளே இருப்பவர்கள் வெளியே போய் விடுகிறார்கள், வெளியே இருப்பவர்கள் உள்ளே வந்து விடுகிறார்கள். 

" என் பையன் ஒரு வேற்று மத பெண்ணை காதலிக்கிறான் .." எங்கே அவள் உள்ளே வந்து விடுவாளோ என்று பயம், அல்லது இவன் வெளியே போய் விடுவானோ என்று பயம். 

இத்தனை பயத்திற்கும், கோபத்திற்கும், சலனத்திர்க்கும், ஆசைக்கும் காரணம் நாம் நம்மை இந்த உடலாக எண்ணுவதால் தான். இந்த உடல் வேறு, அந்த உடல் வேறு என்ற பேதம் வருவதால் இத்தனை குழப்பமும் வருகிறது. 

இந்த உடலைத் தாண்டி நான் என்பதற்கு அர்த்தம் இருக்கிறதா ? நான் என்பது இந்த உடல் மட்டும் தானா ? மாறும் இந்த உடலில் எந்த உடல் நான் ?

மனித மனத்தின் அடிப்படை சித்தாந்தை தொட்டு விளக்குகிறார் வியாசர் இந்த இரண்டாவது அத்யாயத்தில்....

புரிந்து கொள்ள முயல்வோம் ....


Saturday, May 4, 2013

15. கீதை - இரண்டாம் அத்யாயம் - முன்னுரை


கீதை - இரண்டாம் அத்யாயம் - முன்னுரை

கீதையின் இரண்டாம் அத்யாயம் 72 ஸ்லோகங்களை கொண்டது. கீதையின் மொத்த சாரமும் இந்த அத்யாயத்தில் அடங்கி இருக்கிறது.

பக்தி , ஞான, கர்ம மற்று சன்யாச யோகங்களை ஒரே மூச்சில் சொல்லி முடிக்கிறது இந்த அத்தாயம்.

இதன் விரிவாக்கம் தான் மற்ற அத்யாயங்கள்.

இந்த அத்யாயத்திர்க்கு சாங்கிய யோகம் என்று பெயர். சாங்கிய என்றால் சிந்தனையின் தத்துவம் (philosophy of thought ) என்று பொருள்.

இந்த அத்த்யாயம் சரணாகதி தத்துவத்தையும் விளக்குகிறது.

பகவத் கீதை எழுதப்பட்ட காலம், இந்து சமயத்தை பொறுத்தவரை ஒரு குழப்பமான காலம். பக்தியா, ஞானமா, கர்மமா என்று பல் வேறு குழுக்களாக பிரிந்து, ஒன்றொன்று சண்டை இட்டுகொண்டிருந்த காலம்.

இவற்றை ஒன்றிணைத்து இந்து சமயத்திற்கு ஒரு புத்துயிர்ப்பை வியாசர் கீதையின் மூலம் தருகிறார்.

இந்த மூன்று மார்க்கங்களும் ஆத்மா இறைவனை அடையும் முயற்சியின் விளைவுகள் தான் என்று அவற்றை ஒருங்கிணைக்கிறார்.

மேலும் பார்ப்போம்....

Friday, May 3, 2013

14. பகவத் கீதை - அறம் இன்பத்தின் அடிப்படை


பகவத்  கீதை - அறம்  இன்பத்தின்  அடிப்படை



போர் ஆரம்பிக்கும் முன் துரியோதனன் துரோனாசாரியரிடம் சென்று, "ஆசாரியரே, பீமனால் அணி வகுக்கப்பட்ட அவர்களின் சேனை நன்றாக இருக்கிறது. நம்முடைய சேனை மன நிறைவை தரவில்லை " என்கிறான்

கௌரவர்களின் சேனையின் அளவு பதினொரு அக்ரோணி

பாண்டவர்களின் சேனையின் அளவு ஏழு அக்ரோணி

கௌரவர்களின் பக்கம் பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற பெரிய வீரர்கள் இருக்கின்றனர்

பாண்டவர்கள் பக்கம் சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை. கிருஷ்ணன் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்து இருக்கிறான்

இருந்தாலும் துரியோதனனுக்கு தன் சேனையின் மேல் நம்பிக்கை இல்லை

நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பதல்ல நம் சந்தோஷத்திற்கு காரணம். அடுத்தவன் எவ்வளவு வைத்து இருக்கிறான் என்பதில் தான் நம் சந்தோஷம் அடங்கி இருக்கிறது

தனக்கு கிடைத்தவற்றில் சந்தோஷமோ, திருப்தியோ இல்லாதாவர்கள் வாழ் நாள் எல்லாம் எப்படி நிம்மதி இல்லாமல் அலைவார்கள் என்பதற்கு துரியோதனன் ஒரு உதாரணம்

துப்பாக்கி, பீரங்கி, படை பலம் எல்லாம் இருந்த ஆங்கிலேய அரசு இது எல்லாம் இல்லாத காந்திஜியை பார்த்து பயந்தது. அது சத்தியத்தின் பலம்.

படை பலம் எவ்வளவு இருந்தாலும், அறத்தின், தர்மத்தின் பலம் இல்லாவிட்டால் நிம்மதியும், சந்தோஷமும், நம்பிக்கையும் இருக்காது என்பது கீதையின் இன்னொரு பாடம்