Friday, April 14, 2017

கீதை - 3.17 - வேலையில் இன்பமும் திருப்தியும்

கீதை - 3.17 - வேலையில் இன்பமும் திருப்தியும் 


यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः।
आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते॥१७॥

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:|
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே ||3-17||

ய = எவன்

து = ஆனால்

ஆத்ம ரதி = தன்னில் இன்புற்று இருக்கிறானோ

எவ = நிச்சயமாக

ஸ்யாத் = இருக்கும்

ஆத்மத்ருப்த = ஆத்ம திருப்தி உள்ளவனாய்

ச = மேலும்

மாநவ: = அவன்

ஆத்மநி = தன்னில்

எவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸந்துஷ்ட = பூர்ண திருப்தியுடன்

தஸ்ய = அவனுடைய

கார்யம்= காரியங்களில்

ந = இல்லை

வித்யதே= இருப்பது

 ||3-17||

எவன் ஒருவன் தன்னிலே இன்புற்று, தன்னிலே திருப்தி அடைந்தவனாய் இருக்கிறானோ, அவனுக்கு காரியம் என்பது இல்லை. 

நாம் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது கர்ம யோகம்.

நாம் கர்மங்களை, வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல வந்த கீதை, கர்மத்தின் உயர்வை சொல்ல வந்த கீதை, எப்படி பலனை எதிர்பார்க்காமல் கர்மம் செய்ய வேண்டும் என்று சொல்ல வந்த கீதை இந்த ஸ்லோகத்தில் ஒரேயடியாக கர்மமே இல்லை என்று சொல்கிறது.

யாருக்கு கர்மம் இல்லை ? யார் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக இருக்கலாம் ?

எவன் ஒருவன் தனது மகிழ்ச்சிக்காக வேலை செய்கிறானோ, அவனுக்கு வேலை என்பதே இல்லை. எவன் தன்னுடைய வேலையில் திருப்தி கொள்வானோ அவனுக்கு வேலை என்பதே இல்லை.

அது எப்படி சரியாக இருக்கும் ?

ஏனோ தானோ என்று வேலையை  செய்து விட்டு, இது தான் எனக்கு பிடித்து இருக்கிறது, இதில் தான் எனக்கு மகிழ்ச்சி என்று ஒருவன் சொல்லிக் கொண்டு திரிந்தால் , அது சரியாகுமா ?

நாம் எப்படி வேலை செய்தாலும், நமக்கு மேலே ஒரு மேலதிகாரி இருப்பான், வீட்டு வேலை  என்றால் அந்த வேலையின் பலனை அனுபவிக்கும் மற்றவர்கள் இருப்பார்கள். நன்றாக செய்யவில்லை என்றால் அவர்கள் முகம் சுளிப்பார்களே. அவர்களுக்காக நாம் ஒழுங்காக செய்ய வேண்டாமா ?

நாம் மற்றவர்களுக்காகவே வேலை செய்து பழகி விட்டோம்.

பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக படிக்கிறோம். அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக திருமணம் செய்து கொள்கிறோம். பிள்ளைகள். அலுவலகத்தில், பொது இடத்தில் என்று எல்லா இடத்திலும் மற்றவர்களுக்காகவே நாம் தொழில் செய்கிறோம்.

அப்படியே செய்தாலும், அவர்களை திருப்தி செய்யவே நாம் வேலை செய்கிறோம். நமக்கு அதில் ஒரு ஈடுபாடோ, மகிழ்ச்சியோ இல்லை. வேலை செய்யாவிட்டால் சம்பளம் வராது. எனவே ஒழுங்காக வேலை செய்வோம் என்று  இருக்கிறோம்.

கீதை அதை மாற்றுகிறது.


எந்த வேலை செய்தாலும், அதில் முழு ஈடுபாடோடு செய்ய வேண்டும்.

இரண்டாவது, அந்த வேலை செய்வதில் நமக்கு மகிழ்ச்சி வேண்டும். செய்யும் போது இன்பமாக இருக்க வேண்டும். ஏதோ கடனே என்று செய்யக் கூடாது.

மூன்றாவது, செய்து முடித்த பின் நன்றாகச் செய்தோம் என்ற திருப்தி வர வேண்டும். அந்த திருப்தி வரும்வரை அந்த வேலையை செய்ய வேண்டும். மற்றவர்கள்  எதை வேண்டுமானாலும் நினைத்து விட்டுப் போகட்டும்.

நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறதா ?

செய்யும் வேலையை திருப்தியாக செய்கிறீர்களா ?

அப்படி செய்தால், அந்த வேலை ஒரு பளுவாகத் தெரியாது உங்களுக்கு.

வேலை செய்வது போலவே இருக்காது. அது ஒரு வேலையே இல்லை மாதிரி இருக்கும்.

மகிழ்ச்சி தராத வேலையை செய்யாதீர்கள். எந்த வேலையை செய்தாலும் அது உங்களுக்கு  முழு திருப்தி தரும் வரை அதை விடாதீர்கள்.

முழு திருப்தி எப்போது வரும் ? எந்த தொழிலிலும் அதன் உச்சம் தொடும் போது வரும்.

அப்படி முனைந்து, மகிழ்ச்சியாக திருப்தி வரும் வரை வேலை செய்து பழகினால்  அது உங்களை மாற்றும். நீங்கள் மாறுவீர்கள். உங்களை அது ஒரு உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் செல்லும்.






Friday, April 7, 2017

கீதை - 3.16 - சுழலும் கர்மா சக்கரம்

கீதை - 3.16 - சுழலும் கர்மா சக்கரம் 


एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति॥१६॥

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:|
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி ||3-16||

ஏவம் = எனவே

ப்ரவர்திதம் சக்ரம்= ஒரு சுழற்சியில் இருக்கும்

நா = இல்லை

அனுவர்தயதி = நடக்கச் செய்தல்

இஹ = இங்கு

ய: = எவன்

அகாயு = பாவம் நிறைந்த

இந்ரிந்த்ரியாராமோ = இந்திரிய சுகங்களில்

மோகம் = ஆசை கொண்டு

பார்த = பார்த்தனே

ஸ = அவன்

ஜீவதி = வாழ்கிறான்

 ||3-16||

இந்த சுழற்சியை பின்பற்றி வாழாதவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான். புலன் இன்பங்களில் சிக்கி அலைபவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான். 

அது என்ன சுழற்சி ?

நாம் பலவித கர்மங்களை செய்கிறோம். நாம் செய்யும் வினைகளில் இருந்து நமக்குப் போக மற்றவர்களுக்கும் பலன் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும்படி  செயலாற்ற வேண்டும்.  நாம் செய்யும் வினையின் பலன் மற்றவர்களுக்குப் போக வேண்டும் என்றால் அவர்களும் ஏதோ ஒரு காரியம் செய்திருக்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் , நாம் செய்த வினையின் பலனை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இப்படி ஒவ்வொருவரும் தனக்கென்று செயலாற்றாமல் இருந்தால் அந்த செயலின் பலன் நிறைய பேருக்கு கிடைக்கும். அப்படி கிடைத்தவர்கள் , ஏதோ வினை செய்வார்கள். அது மீண்டும் பலபேரை சென்றடையும். அப்படி ஒன்றில் இருந்து ஒன்றாக செல்லும் போது அதில் ஒரு கிளை மீண்டும் உங்களிடமே வந்து சேரும். 

அதை விடுத்து , நீங்கள் செய்த கர்மத்தின் பலன் உங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் , இந்த சுழற்சி நின்று போகும். அது ஒரு பாவகரமான செயல் என்கிறது கீதை. 

எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்து செயலாற்றினால், செயலும் பலனும் மாறி மாறி எல்லோருக்கும் கிடைக்கும். 

மாறாக எனக்கு எனக்கு என்று ஒவ்வொருவரும் நினைத்து செயலாற்றினால், அந்த சுழற்சி நின்று போகும். அதுவே பெரிய பாவமாகும். 

தனிமனிதனின் செயலை ஒழுங்கு படுத்தினால் சமுதாயம் சரியாகி விடும். சமுதாயம் சரியானால் நாடு சரியாகும். நாடு சரியானால் உலகம் அனைத்தும் சரியாகும். 


இந்த சுழற்சியின் தன்மை அறியாமல் புலன் இன்பங்களில் மூழ்கி கிடப்பவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான் என்கிறது கீதை. 

அதாவது, எல்லாம் தனக்கே என்றும் , தன்னுடைய இன்பமே பெரிது என்று நினைத்து வாழ்பவன் இந்த கர்மா - பலன் - மற்றவர்களுக்கு கிடைக்கும் நன்மை - அதன் மூலம் தனக்கும் கிடைக்கும் நன்மை என்ற சுழற்சியை புரிந்து கொள்வதில்லை. தன் இன்பமே முக்கியம் என்று இருக்கிறான். அப்படிப்பட்டவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான். 

பாவமற்ற வாழ்வை வாழ வேண்டுமானால் கர்மாவின் பலன் தனக்கு மட்டுமே என்ற சுயநலம் விடுத்து எல்லோரும் இன்புற்றிருக்க வினை செய்ய வேண்டும். 


















Wednesday, April 5, 2017

கீதை - 3.15 - காரியங்களின் தன்மை

கீதை - 3.15 - காரியங்களின் தன்மை 


कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्॥१५॥

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்|
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் ||3-15||

கர்ம = செயல்கள்

ப்ரஹ்மோத்பவம் = பிரம்மத்தில் இருந்து வருவது

வித்தி = என்று உணர்

ப்ரஹ்மம் = ப்ரம்மம்

அக்ஷர = அழியாத (க்ஷர என்றால் அழியக் கூடிய)  =

ஸமுத்பவம்| = வெளிப்படுகிறது

தஸ்மாத் = எனவே

ஸர்வகதம் = எங்கும் நிறைந்த

ப்ரஹ்ம = பிரமம்

நித்யம் = நிரந்தரமாக இருக்கும்

யஜ்ஞே = யாகத்தில்

ப்ரதிஷ்டிதம் = நிலைத்து நிற்கிறது

||3-15||

கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் இருக்கிறோம். இது கர்ம யோக அத்யாயம். 

நாம் செய்யும் வினைகளை பற்றி பேசுகிறது இந்த அத்யாயம். இதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். 

அனைத்து செயலும் பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது. பிரம்மம் அழிவற்றதில் (அமிர்தத்தில்) இருந்து தோன்றுகிறது.   எனவே, எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் யாகத்தில் நிலை கொண்டிருக்கிறது என்று உணர். 

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் புனிதத் தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும்.

செயல்கள் பிரமத்தில் இருந்து தோன்றுகிறது என்று சொன்னால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவ்வளவு உயர்ந்தது. பிரம்மத்திர்க்கு இணையானது. இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், ஒவ்வொரு செயலின் விளைவுகளும் மிக நீண்ட காலத்திற்கு இருக்கப் போவது. சாஸ்வதமானது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலினாலும், இந்த உலகத்தின் போக்கை நிரந்தரமாக மாற்றி விடுகிறீர்கள். செயல்கள் தொடர் விளைவினை கொண்டவை ஒன்றிலிருந்து ஒன்றாக அவை நீண்டு கொண்டே போகும். எப்படி பிரமத்தில் இருந்து எல்லாம் தோன்றியதோ, அது போல உங்கள் செயல்கள் இனி வரப் போகும் எத்தனையோ விளைவுகளுக்கு வித்திடும்.

இது, அடுத்த வரியில் இன்னும் தெளிவாகும்.

பிரமம் அமிர்தத்தில் இருந்து தோன்றுவது.

அமிர்தம் இறவா நிலை தருவது. அதில் இருந்து வரும் பிரமமும் இறவா நிலை கொண்டது. அதில் இருந்து வரும் உங்கள் செயல்களும் இறவா நிலை கொண்டவை.

ஒரு காரியம் செய்யுமுன் அந்த காரியத்தின் நீண்ட கால விளைவு (long term effect ) என்ன என்று ஆய்ந்து செய்யுங்கள்.

ஏதோ, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாதீர்கள்.

நிறுத்தி, நிதானமாக, தீர ஆராய்ந்து சிறப்பாக செய்யுங்கள்.

நான் செய்யும் இந்த காரியம் யுக யுகத்திற்கும் தொடரும் என்ற நினைவோடு செய்யுங்கள்.

எத்தனையோ தலைமுறை இதனால் பாதிக்கப் படப் போகிறது என்று எண்ணி செய்யுங்கள்.

செயல்களுக்கு ஒரு புனிதத் தன்மை, ஒரு நீண்ட கால நோக்கு இவை இரண்டும்  இருக்க வேண்டும்.

இது முதலில் தீய செயல்களை விலக்கும் .

நான் செய்யும் இந்த திருட்டுத் தொழில் மிகப் புனிதமானது என்று யாராவது நினைக்க முடியுமா ?

இப்படி எந்த தவறான தொழிலும் புனிதத் தன்மை பெற முடியாது.

இரண்டாவது, ஒரு நல்ல காரியம் செய்யும் போது அது நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்ற  நினைவோடு செய்ய வேண்டும்.

எங்கும் நிறைந்த இந்த பிரமம் சுயநலமற்ற கடமைகளை செய்வதில் அடங்கி இருக்கிறது.

யாரவது, மக்களின் பொது நலத்திற்க்காக நான் இந்த வங்கியை கொள்ளை அடிக்கிறேன் என்றோ, பொது நலத்திற்க்காக நான் கற்பழிக்கிறேன் என்றோ சொல்ல முடியுமா.

சுயலமற்ற அந்த செயல்களில் பிரமம் நிறைந்து இருக்கிறது.

இப்படி ஒவ்வொரு செயலையும் நாம் அணுகும்போது சில   நிகழ்வுகள் ஏற்படும்:

1. எல்லா செயலும் புனிதமானது என்றால், அதை செய்பவர்களும் நல்லவர்கள் என்ற  எண்ணம் வரும்.

2. நல்ல காரியங்களுக்கு துணை போகும் எண்ணம் வரும்.

3. முடியாவிட்டால் அதை கெடுக்கும் எண்ணம் வராது

4 நல்ல காரியங்களை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். படித்தால்  முதல் மாணவனாக வர வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.

5. செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணம் ஏற்படும்.

6. தொழிலில் ஏற்ற தாழ்வு பாராட்ட தோன்றாது

7. தொழிலின் மகத்துவம் விளங்கும் (diginity of labour )



 நீங்கள் ஒரு மரத்தை நடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது வளர்ந்து, பல விதைகளைத் தரும். அதில் இருந்து இன்னும் பல மரங்கள் வரும்.

நீங்கள் ஒரு மரத்தை வெட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து எத்தனையோ மரங்கள் வந்திருக்கலாம். அனைத்தையும் நீங்கள் நிறுத்தி விட்டீர்கள்.

மரம் மட்டும் அல்ல.

நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்கிறீர்கள். வீடு கட்டுகிறீர்கள். இப்படி எத்தனையோ காரியங்களை செய்கிறீர்கள். அனைத்தும் நீண்ட கால தாக்கம் கொண்டவை.

எந்த கர்மாவும் அதோடு போய் விடுவது இல்லை. எந்த கர்மாவுக்கும் ஒரு நீண்ட தொடர்ச்சி உண்டு.

எவ்வளவு உயர்ந்த விசயங்கள் இந்த இரண்டு வரியில் இருக்கிறது. காலம் காலமாய்  வழி காட்டும் வாசகங்கள்.


Tuesday, April 4, 2017

கீதை - 3.14 - மழை போல் கர்மாவைச் செய்

கீதை - 3.14 - மழை போல் கர்மாவைச் செய் 



अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसंभवः।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः॥१४॥

அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:|
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ: ||3-14||

அந்நாத் = உணவு

பவந்தி = இருக்கிறது

பூதாநி = உயிர்களுக்கு

பர்ஜந் = மழையின் மூலம்

அதந்நஸம்பவ: = உணவு சம்பவிக்கிறது; உருவாகிறது

யஜ்ஞாத் = வேள்வியினால்

பவதி = இருக்கிறது

பர்ஜந்யோ = மழையின்ய மூலம்

யாங்கய = வேள்வியின் மூலம்

கர்மஸமுத்பவ: = கர்மத்தை செய்வதால் உண்டாகிறது

உணவால் உயிர்கள் வாழ்கின்றன. உணவு மழையின் மூலம் வருகிறது. மழை வேள்வியின் மூலம் வருகிறது. 

உணவால் உயிர்கள் வாழ்கின்றன - சரி, புரிகிறது

உணவு மழையின் மூலம் வருகிறது - சரி , புரிகிறது.

மழை, வேள்வியின் மூலம் வருகிறது = இல்லை. இது புரியவில்லை.

வேள்விக்கு மழைக்கும் என்ன சம்பந்தம் ? வேள்வி செய்தால் மழை வருமா ?


உனவு, உயிர், மழை, வேள்வி என்பது எல்லாம் ஒரு உருவகம்.

மழையின் குணம் என்ன ?

பிரதி பலன் பாராமல் பெய்வது.  இவ்வளவு பெய்தால் , எவ்வளவு கிடைக்கும் என்று மழை எதிர் பார்ப்பதில்லை. பெய்வது அதன் குணம். அது இயற்கையாக  இருக்கிறது.

அது மட்டும் அல்ல, மழை வேண்டியவன் வேண்டாதவன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், பணக்காரன் ஏழை , படித்தவன் முட்டாள் என்று பாகு பாடு பார்ப்பது இல்லை. எல்லோருக்கும் ஒன்றாய் பெய்கிறது.

தன்னலமில்லாமல் எல்லோருக்கும் வேண்டி செய்யும் எந்த கர்மமும், வேலையும் மழை போன்றதுதான்.

உணவு என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று.

அப்படிப்பட்ட சேவையால் வாழ்க்கைக்கு வேண்டியது கிடைக்கிறது.

அதன் மூலம் உயிர்கள் வாழ்கின்றன.

அந்த தன்னலமற்ற உழைப்பு இல்லாவிட்டால்  உற்பத்தி இல்லை. உற்பத்தி இல்லாவிட்டால் உயிர்கள் வாழ முடியாது.

உணவு உற்பத்தி மட்டும் அல்ல. எந்த உற்பத்திக்கும் இது பொருந்தும். 

தொழிற்சாலைகள், கதவடைப்பு (strike ) போன்றவை இல்லாத காலத்தில் எழுதப் பட்டது கீதை. 

தொழிலாளிகளும், முதலாளிகளும் சுயநலத்திற்காக போராடி தொழிற்சாலைகளை மூடும் போது (சம்பள உயர்வு, ஊக்கத் தொகை என்று பெரிய பட்டியல் போட்டுக் கொண்டு) உற்பத்தி நிற்கிறது. உற்பத்தி நின்று போனால், உயிர்கள் துன்பப்படும். 

மழை என்பது விளை பொருட்களை உருவாக்கும் ஒரு சூழ்நிலை. அந்த சூழ்நிலை  வேள்வியால் - சுயநலமற்ற சேவையால் உருவாகிறது. 

இதை படிக்கும் போது கீதை ஏதோ தொழிளார்களுக்கு எதிரான, ஒரு முதலாளித்துவ  நோக்கம் கொண்ட நூல் போல தோன்றலாம். 

சுயநலமற்ற என்று கூறிய கீதை அதை எல்லோருக்கும் பொதுவாக கூறியது. முதலாளிக்கும், தொழிலாளிக்கும் பொதுவாக கூறியது.

அவர்களுக்கு மட்டும் அல்ல, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொவொரு நபருக்கும் ....

பெற்றோர் , ஆசிரியர், மருத்துவர், பிள்ளைகள், அரசன், வீரர்கள் என்று எல்லோருக்கும் பொதுவாக  கூறியது. 

சுயநலம் இன்று கல்வியை, மருத்துவத்தை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது ?

பிள்ளைகள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுகிறார்கள். 

சகோதரர்கள் நீதி மன்ற படி ஏறுகிறார்கள். 

கணவன் மனைவி விவாகரத்து கோருகிறார்கள்.

தொழிலாளிகள் வேலை செய்ய மறுக்கிறார்கள். 

முதலாளிகள் கூலி தர மறுக்கிறார்கள். 

அரசாங்க ஊழியர்கள் வேலை செய்ய இலஞ்சம் கேட்கிறார்கள்.

திருட்டு, கொள்ளை, இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், கற்பழிப்பு என்ற அத்தனை சமுதாய நோய்களுக்கும் காரணம் - சுயநலம். 

எல்லாம் சுயநலம். 

சமுதாய சீரழிவுக்கு காரணம் - சுயநலம். 

 இதை வேரோடு அறுக்க முயல்கிறது கீதை. 

யோசித்துப் பாருங்கள், இதை விட ஒரு சிறந்த வழி இருக்குமா என்று ?

ஆண்டாண்டு காலத்திருக்கும் பலன் தரும் முறை இது. 

எத்தனை ஆயிரம் சட்டங்கள் போட்டாலும் தீராத பிரச்சனைகளை ஒரே ஒரு ஸ்லோகத்தில்  தீர்கிறது கீதை. 

மழை போன்ற தன்னலமற்ற சேவையால், உணவு போல உயிர்களுக்கு வேண்டிய அனைத்தும்  கிடைக்கும். அதன் மூலம் உயிர்கள் வாழும். 

எப்படி சுயநலம் இல்லாமல் வேலை செய்ய முடியும் ?

மீண்டும் இந்த ஸ்லோகத்தை பார்ப்போம். 

மழை பொழிகிறது. அது பிரதி பலன் எதுவும் எதிர்பார்ப்பது இல்லை. இருந்தாலும், பெய்த மழை ஆவியாகி மீண்டும் மேகத்திற்கே வந்து சேர்கிறது.  அது எதிர் பார்க்காவிட்டாலும் அதற்கு கிடைக்கிறது. 

அது போல,  பலனை எதிர் பார்க்காவிட்டாலும்,  சுயநலமற்ற சேவைக்கு பலன்  எப்படியோ வந்து சேரும். அதைப் பற்றி நீ கவலைப் படாதே என்கிறது கீதை. 


Monday, April 3, 2017

கீதை - 3.13 - யாகத்தின் பலனை பகிர்ந்து உண்ணுங்கள்

கீதை - 3.13 - யாகத்தின் பலனை பகிர்ந்து உண்ணுங்கள் 


यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्॥१३॥

யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:|
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ||3-13|

|
யஜ்ஞஸிஷ்டாஸிந: = யாகத்தின் மீதியை

ஸந்தோ முச்யந்தே = உண்மையான, சந்யாசிகள்

ஸர்வகில்பிஷை:= அனைத்து பாவங்களிலும் இருந்து
|
புஞ்ஜதே = உண்கிறார்கள்

தே = அவர்கள்

து = அப்புறம்

அகஹம் = பாவம், துன்பம்

பாபா = பாவம் செய்பவர்கள்

யே = அவர்கள்

பசந்த்தி = அவர்கள் சமைக்கிறார்கள் 

அத்மகாரணாத் = தங்களுக்காக

||3-13|

யாகத்தின் அல்லது வேள்வியின் மிச்சத்தை உண்போர் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுதலை பெறுகிறார்கள். தனக்கென்று மாத்திரம் உணவு சமைத்து உண்பவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.

இது என்ன புது கதையாக இருக்கிறது. தினமும் எல்லோருக்கும் நாம் சமையல் செய்து போட வேண்டுமா ? நடக்கிற காரியமா இது ? என்று நாம் நினைப்போம். 

கீதையின் நோக்கம் அதுவல்ல.

யாகம் அல்லது வேள்வி என்பது நாம் அன்றாடம் செய்யும் கடமை. 

அதை தனக்கு என்று மட்டும் செய்யக் கூடாது. 


இயற்கையில் இருந்து பெற்றாலும் சரி, நாம் வாழும் சமுதாயத்தில் இருந்து பெற்றாலும் சரி, எடுத்ததை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும்.

எவ்வளவோ சமயங்களில் நமக்கு ஒரு வெறுப்பும் சலிப்பும் வரும் - என்ன உழைத்து என்ன பயன் - அலுவகலத்தில் ஒரு பதவி உயர்வு கிடையாது,
ஒரு பாராட்டு கிடையாது.....

அலுவலகத்தில் தான் அப்படி என்றால் வீட்டிலும் அதற்க்கு மேலே....

யாருக்கும் ஒரு நன்றி இல்லை...நான் ஏதோ இயந்திரம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்...நல்லா இருக்குனு ஒரு வார்த்தை பாராட்டு
 கிடையாது, பாவம் ரொம்ப கஷ்ட பட்டியானு ஒரு கரிசலான விசாரணை கிடையாது....ச்சே என்ன வாழ்கை இது ...என்று ஒரு சலிப்பு வரலாம்.....


கர்ம யோகம் என்ன சொல்கிறது. உனக்காக மட்டும் உழைக்காதே. உன்னையும் தாண்டி யோசி. இந்த சமுதாயம் உயர வேண்டும், அதில் வாழும்
 மக்கள் உயர வேண்டும் என்று நினைத்து பாடுபடு. குடும்பம், உறவு, நட்பு, இந்த சமுதாயம், நாடு என்று யோசி.

எனக்கு எவ்வளவு பலன் கிடைக்கிறதோ, அவ்வளவு தான் நான் வேலை செய்வேன் என்று ஒவ்வொருவரும்  ஆரம்பித்தால், நாளடைவில் இந்த
சமுதாயம் நின்றுபோகும்


எனக்கு கிடைக்கும் பலனை விட நான் அதிகமாகவே உழைக்கிறேன், அதிகமாகவே  இந்த சமுதாயத்திற்கு தருகிறேன் என்று ஒவ்வொருவரும்
நினைத்து வாழும்  போது  ஒரு மிக மிக இனிமையான நிலை உருவாகும்.

தனக்காக உழைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை கீதை. தனக்காக மட்டும் உழைக்காதே  என்கிறது.

வேள்வியின்  என்று  சொல்லுவது  அதைத்தான்.

வேள்வி என்பது சுயநலமற்று செய்யும் ஒரு செயல்.

சுயநலம் அற்று வேலை செய்த பின், அந்த உழைப்பின் ஒரு பகுதியை, வேண்டுமானால் பெரும் பகுதியை என்று வைத்துக் கொள்ளுங்கள், நீ
எடுத்துக் கொள்.

அதுகூட முதலில் நீ எடுத்துக் கொள் என்று சொல்லவில்லை...மிச்சத்தை நீ எடுத்துக் கொள் என்கிறது.

முழுக்க முழுக்க ஒரு சுயநலமற்ற ஒரு சமுதாயத்தை கீதை சிந்திக்கிறது.

கீதையை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம்.

கடமையை செய்து, அதன் பலன் மற்றவர்களுக்கு போன பின், மீதி உள்ளதை நீ எடுத்துக் கொள் என்கிறது கீதை.

நடைமுறையில்

- முதலில் கடமையை சரி வர செய்வது இல்லை.
- அப்படியே செய்தாலும், சுயநலம் இன்றி செய்வது இல்லை
- சுயநலத்தோடு செய்தாலும், செய்ததற்கு மேல் பலன் எதிர்பார்க்கிறோம்

அதை விடுத்து

நாம் செய்யும் வேலை உலக நன்மைக்காக என்று நினைக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க  செயலாற்ற வேண்டும். அப்படி செய்யும் வேளையில்  கொஞ்சம் நமக்கும் பலன் கிடைத்தால் அதை நாம் அனுபவித்துக் கொள்ளலாம் என்கிறது கீதை.

என்ன ஒரு உயர்ந்த நோக்கம்.

ஆழ்ந்து சிந்தியுங்கள். 

Sunday, April 2, 2017

கீதை - 3.12 - எடுப்பதும் கொடுப்பதும்

கீதை - 3.12 - எடுப்பதும் கொடுப்பதும் 


इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः।
तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः॥१२॥

இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபா விதா:|
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ: ||3-12||

இஷ்டாந் = வணங்கத்தக்க

போகாந் = போகங்களை

ஹி = அதனால்

வோ = உங்களுக்கு

தேவா = தேவர்கள்

தாஸ்யந்தே = தருவார்கள்

யஜ்ஞபாவிதா  = யாகத்தில்

தைஹ் =  அவர்களால்

தத்தா = தரப்பட்டவை

அப்ரதாயை = தராமல்

ப்யோ = அவர்களுக்கு

யோ = எவன்

புங்க்தே = அனுபவிக்கிறானோ

ஸ்தேந = திருடன்

ஏவ = நிச்சயமாக

ஸ:  = அவன்

||3-12||


யாகத்தில் (வேள்வியில்) அர்ப்பணிக்கப்பட்ட தேவர்கள் உங்களுக்கு நீங்கள் விரும்பிய போகங்களைத் தருவார்கள். அவர்களுக்கு படைக்காமல் அந்த போகங்களை அனுபவிப்பவன் திருடனுக்கு சமமாவான். 

யாகம் , தேவர்கள், படைத்தல், அர்பணித்தல் என்ற வார்த்தைகள் கொஞ்சம் அலுப்பைத் தரும்.

எங்கு போய் யாகம் செய்வது, எந்த தேவருக்கு அர்ப்பணம் செய்வது. அப்படி அர்ப்பணம் செய்யாமல் அனுபவித்தால் நாம் திருடர்கள் ஆவோம் என்று வேறு கீதை சொல்கிறது.

இவை நடைமுறை சாத்தியங்களா ?

இந்த "தேவா" என்பதை நாம் சற்று பொதுப்படையாக பார்ப்போம். தேவர்கள் நமக்கு வேண்டியதைத் தருகிறார்கள். யார் நமக்கு வேண்டியதைத் தருகிறார்கள் என்று சுற்று முற்றும் பார்த்தால் , கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த தேவனையும் காணோம்.

ஆனால், நமக்கு அனைத்தும் தருவது, நம்மை சுற்றி உள்ள இயற்கை.

மழை தருகிறது. பயிர்கள் விளைகின்றன, சூரிய ஒளியால் உலகம் இயங்குகின்றது. காற்று நாம் சுவாசிக்க உதவுகிறது. இப்படி நீர், காற்று, நிலம் என்று இயற்கை நாம் வாழ வழி செய்கிறது.

அந்த இயற்கை தான் தெய்வம். நம் முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக கொண்டாடினார்கள். வருண பகவான், அக்கினி பகவான், வாயு பகவான் என்று.

அந்த தேவர்களுக்கு யாகத்தில் அர்ப்பணம் செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு வேண்டிய போகங்களைத் தருவார். அப்படி அர்ப்பணம் செய்யாமல் உண்பவன் திருடன் என்ற இந்த ஸ்லோகத்தில் தேவர்கள் என்று என்ற இடத்தில் இயற்கை என்று வைத்துப் பாருங்கள்.

கச்சிதமாக பொருந்தும்.

இதை பல கோணங்களில் நாம் அணுகலாம்.

முதலாவது....இன்று நாம் சுற்று சூழல் பற்றியும், உலகம் வெப்பமாவதை பற்றியும் விவாதிக்கிறோம். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது, மரங்கள் அழிக்கப் படுவதால் மழை குறைகிறது, வெப்பம் அதிகமாகிறது, பெட்ரோல் போன்ற எரி பொருள்கள் குறைந்து கொண்டே வருகிறது என்று பலவிதமான விவாதங்கள் நிகழ்கின்றன.

இத்தனைக்கும் அடிப்படை காரணம் என்ன ? நாம் இயற்க்கை வளங்களை சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். மரம் வெட்டும் போது புது மரம் நடுவது இல்லை. நிலத்தடி நீரை எடுக்கும் போது , அதை திருப்பி செலுத்தவேண்டும் என்று நினைப்பது இல்லை. காடுகளை அழித்து நாடாக்கும் போது, புதியதாய் காடுகளை உருவாக்குவது இல்லை.

இப்படி நமது சுற்று சூழலில் இருந்து எடுத்துக் கொண்டே இரூந்து விட்டு, திருப்பி தராவிட்டால் நாம் கள்வர்கள் ஆவோம் என்கிறது கீதை.

சரிதானே...கள்வர்கள் ஒரு வீட்டில் புகுந்து தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறார்கள். திருப்பி எதுவும் தருகிறார்களா ? இல்லையே ? அது போல் நாமும் இந்த சுற்று சூழலில் இருந்து, இயற்கையில் இருந்து வேண்டியதை எடுத்துக் கொள்கிறோம்.  திருப்பி தருவது இல்லை.

நாம் நமது வருங்கால சந்ததியினரிடம் இருந்து திருடுகிறோம். அவர்களுக்கு வேண்டிய பெட்ரோல், கரி, காட்டு வளம் இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு பதிலுக்கு ஒன்றும் தருவதில்லை. எவ்வளவு பெரிய கள்வர்கள் நாம். நம் பிள்ளைகளிடம் இருந்தும், பேரப் பிள்ளைகளிடம் இருந்தும் திருடுகிறோம்.


இரண்டாவது சிந்தனை ....

நாம், நமது சமுதாயத்தில் இருந்து சில பொருட்களை, சேவைகளை (services ) பெற்றுக் கொள்கிறோம். அந்த சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பி செய்கிறோமா ? நாம் எடுப்பதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். அப்படி பட்ட சமுதாயம் நாளும் வளரும். எல்லோரும் கொடுப்பதை விட எடுப்பது அதிகமானால்  அந்த சமுதாயம் நாளடைவில் சீரழியும்.

நாம் நம்மை சுற்றி பார்க்கலாம் . எந்த சமுதாயம் கடினமாக உழைத்து மேலும் மேலும் உற்பத்தி செய்கிறதோ, அது நன்றாக செழித்து வளர்கிறது. உழைக்காமல்  உண்ணும் நாடோ, சமுதாயமோ நிறைய நாட்களுக்கு அப்படி செய்ய முடியாது.

கர்ம யோகம் பற்றி சொல்ல வந்த கீதை இரண்டு விஷயங்களை சொல்கிறது ....

நீ வேலை செய்யும்போது, சுயலமற்று (வேள்வியில்) வேலை செய்யும் போது , நீ சார்ந்த இயற்கை (தேவர்கள்) மற்றும் சுற்று சூழலில் இருந்து  நீ பொருட்களை உபயோகப் படுத்த வேண்டி வரும். அது  தவறு இல்லை.இயற்கை உனக்கு வேண்டிய எல்லாம் தரும். ஆனால்   எடுத்ததை திருப்பி கொடு.

இரண்டாவது, உன்னால் உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொள்ள முடியாது. இந்த சமுதாயத்தில் இருந்து நீ சிலவற்றை பெற்றுக் கொள்ள வேண்டி வரும். தவறில்லை. நீ பெற்றுக் கொண்டதற்கு மேலாக திருப்பி கொடு.

எது வேள்வி - சுயநலமற்ற கர்மா வேள்வி

யார் தேவர்கள் - இந்த இயற்கை - பூமா தேவி, கங்காதேவி, காவிரித் தாய், வாயு தேவன் , அக்னி தேவன், வருண தேவன், என்று நம்மை சுற்றியுள்ள இயற்கை  ஒவ்வொன்றும் ஒரு தேவர், தேவதை தான்.

அர்ப்பணம் செய்யாமல் - நமக்கு அந்த இயற்கையில் இருந்து கிடைத்ததை கொஞ்சம் திருப்பி தராமால் எடுத்துக் கொண்டே இருத்தல்.

இது உங்களுக்கு சரி என்று படாவிட்டால்....மற்றவர்களின் உறையும் தருகிறேன் . படித்துப் பாருங்கள்


மனிதன் இயற்கை மற்றும் தான் சார்ந்து வாழும் சமுதாயம் இரண்டையும் போற்ற வேண்டும். மதிக்க வேண்டும். அவற்றில் இருந்து எடுப்பதை விட கொடுப்பது அதிகம் இருக்க வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள்.

எடுப்பது அதிகமா. கொடுப்பது அதிகமா என்று.

தனி மனிதனை ஒழுங்கு படுத்துவதன் மூலம் கீதை ஒரு சமுதாயமும், நாடும் வாழ  வழி சொல்கிறது.