Friday, April 7, 2017

கீதை - 3.16 - சுழலும் கர்மா சக்கரம்

கீதை - 3.16 - சுழலும் கர்மா சக்கரம் 


एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति॥१६॥

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:|
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி ||3-16||

ஏவம் = எனவே

ப்ரவர்திதம் சக்ரம்= ஒரு சுழற்சியில் இருக்கும்

நா = இல்லை

அனுவர்தயதி = நடக்கச் செய்தல்

இஹ = இங்கு

ய: = எவன்

அகாயு = பாவம் நிறைந்த

இந்ரிந்த்ரியாராமோ = இந்திரிய சுகங்களில்

மோகம் = ஆசை கொண்டு

பார்த = பார்த்தனே

ஸ = அவன்

ஜீவதி = வாழ்கிறான்

 ||3-16||

இந்த சுழற்சியை பின்பற்றி வாழாதவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான். புலன் இன்பங்களில் சிக்கி அலைபவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான். 

அது என்ன சுழற்சி ?

நாம் பலவித கர்மங்களை செய்கிறோம். நாம் செய்யும் வினைகளில் இருந்து நமக்குப் போக மற்றவர்களுக்கும் பலன் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும்படி  செயலாற்ற வேண்டும்.  நாம் செய்யும் வினையின் பலன் மற்றவர்களுக்குப் போக வேண்டும் என்றால் அவர்களும் ஏதோ ஒரு காரியம் செய்திருக்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் , நாம் செய்த வினையின் பலனை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இப்படி ஒவ்வொருவரும் தனக்கென்று செயலாற்றாமல் இருந்தால் அந்த செயலின் பலன் நிறைய பேருக்கு கிடைக்கும். அப்படி கிடைத்தவர்கள் , ஏதோ வினை செய்வார்கள். அது மீண்டும் பலபேரை சென்றடையும். அப்படி ஒன்றில் இருந்து ஒன்றாக செல்லும் போது அதில் ஒரு கிளை மீண்டும் உங்களிடமே வந்து சேரும். 

அதை விடுத்து , நீங்கள் செய்த கர்மத்தின் பலன் உங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் , இந்த சுழற்சி நின்று போகும். அது ஒரு பாவகரமான செயல் என்கிறது கீதை. 

எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்து செயலாற்றினால், செயலும் பலனும் மாறி மாறி எல்லோருக்கும் கிடைக்கும். 

மாறாக எனக்கு எனக்கு என்று ஒவ்வொருவரும் நினைத்து செயலாற்றினால், அந்த சுழற்சி நின்று போகும். அதுவே பெரிய பாவமாகும். 

தனிமனிதனின் செயலை ஒழுங்கு படுத்தினால் சமுதாயம் சரியாகி விடும். சமுதாயம் சரியானால் நாடு சரியாகும். நாடு சரியானால் உலகம் அனைத்தும் சரியாகும். 


இந்த சுழற்சியின் தன்மை அறியாமல் புலன் இன்பங்களில் மூழ்கி கிடப்பவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான் என்கிறது கீதை. 

அதாவது, எல்லாம் தனக்கே என்றும் , தன்னுடைய இன்பமே பெரிது என்று நினைத்து வாழ்பவன் இந்த கர்மா - பலன் - மற்றவர்களுக்கு கிடைக்கும் நன்மை - அதன் மூலம் தனக்கும் கிடைக்கும் நன்மை என்ற சுழற்சியை புரிந்து கொள்வதில்லை. தன் இன்பமே முக்கியம் என்று இருக்கிறான். அப்படிப்பட்டவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான். 

பாவமற்ற வாழ்வை வாழ வேண்டுமானால் கர்மாவின் பலன் தனக்கு மட்டுமே என்ற சுயநலம் விடுத்து எல்லோரும் இன்புற்றிருக்க வினை செய்ய வேண்டும். 


















No comments:

Post a Comment