Monday, March 28, 2016

கீதை - 14.23 - குணங்களால் சலனம் அடையாமல் இருக்க

கீதை - 14.23 - குணங்களால் சலனம் அடையாமல்  இருக்க


उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।
गुणा वर्तन्त इत्येव योऽवतिष्ठति नेङ्गते ॥१४- २३॥

உதா³ஸீநவதா³ஸீநோ கு³ணைர்யோ ந விசால்யதே |
கு³ணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்ட²தி நேங்க³தே || 14- 23||

உதாஸீநவத் =  உதாசீனம் செய்பவனைப் போல

அஸீநோ = அமர்ந்து இருப்பான்

குணை = குணங்களால்

யோ = எவன் ஒருவன்

ந = இல்லை

விசால்யதே = அலைகழிக்கப் படுவதில்லை, சலிப்படைவதில்லை

குணா =குணங்கள்

வர்தந்த = நிகழும்

இதி = இப்படித்  தான்

யேவ = நிச்சயமாக

யோ = அவன்

அவ திஷ்டதி  = ஸ்த = நிலையாக. அவ திஷ்டதி = ஸ்திரமாக இருப்பான்

இங்கதே = சலனம் அடையாமல்

குணங்கள் இப்படித்தான் வரும் போகும் என்று அறிந்து, அவற்றை புறக்கணிப்பவன் போல இருப்பான்; அசைவற்று இருப்பான்; குணங்களால் அலைகழிக்கப் பட மாட்டான். 

குணங்களால் அலைகழிக்கப் படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

நான்கு விஷயங்கள் சொல்கிறார் வியாசர்.

முதலாவது, குணங்களின் தன்மைகளை அறிந்து கொள்வது.

இது சற்று ஆழமாக சிந்திக்க வேண்டிய  .ஒன்று.

குணங்களின் தன்மை என்றால் என்ன ? அவற்றை எப்படி அறிந்து கொள்வது ?

எந்த குணங்கள் எப்போது தலை தூக்குகிறது என்று அறிய வேண்டும். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, பொதுவாக இந்த குணங்கள் சில விதிகளுக்கு உட்பட்டு வருகின்றன  போகின்றன. இவற்றை மிக மிக நுண்மையாக கவனித்து  நம் பெரியவர்கள் சிலவற்றை நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.

அவை,

1. குணங்களும் நேரங்களும் - ஒவ்வொரு குணமும் ஒவ்வொரு நேரத்தில் தலை தூக்கும். உதாரணமாக சாத்வீகம் அதி காலையில் உச்சம் பெரும். சூரிய உதயத்திற்கு முன். ஒரு நான்கு அல்லது நாலரை மணி வாக்கில் சாத்வீகம் உச்சியில் நிற்கும். அந்த நேரத்தில் எழுந்து படிப்பது, பூஜை செய்வது போன்ற நல்ல காரியங்கள்  செய்து பாருங்கள். படிப்பது அப்படியே மனதில் ஏறும்.

"காலை எழுந்தவுடன் படிப்பு" என்று பாரதி சொன்னது சும்மா பாட்டுக்காக சொன்னது இல்லை.

 பகல் ஏற ஏற ரஜோ குணம் தலை தூக்கும்.  ,ஆக்கம், செயல் என்று ஓட வைக்கும்.

"மாலை முழுவதும் விளையாட்டு" என்றான் பாரதி.

இரவில் தமோ குணம் தலை தூக்கும். சோம்பல், அசதி, மயக்கம், செயலின்மை என்ற தமோ குணங்கள் வெளிப்படும்.

2. குணங்களும் மற்ற கால அளவைகளும் - எப்படி ஒரு நாளில் குணங்கள் மாறி மாறி வருகின்றதோ அது போல ஒரு வாரத்திலும், மாதத்திலும், வருடத்திலும் குணங்கள் மாறி மாறி வரும். எது எப்போது என்று மற்றொரு ப்ளாகில் பார்ப்போம்.

3. குணங்களும் உணவுகளும் - சில வகை உணவுகள் சில குணங்களை தூண்டி விடுகின்றன. நீங்கள் உங்களை கவனித்துப் பார்த்தால் தெரியும்....எந்த குணம் தூக்கலாக இருக்கிறது என்று கவனியுங்கள். அதற்கு முன்னால் எந்த உணவை உட்கொண்டீர்கள் என்று பாருங்கள். ஒவ்வொரு உணவும் ஒரு குணத்தை உருவாக்கும்.

4. குணங்களும் மூச்சும் : நம் மூச்சு எப்படி இருக்கிறதோ அதன் படி குணங்கள் மாறும்.

“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,

மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;

என்றான் பாரதி. மூச்சின் சுழற்சியில் முக்குணங்களும் மாறும்.

இப்படி குணங்கள் எவ்வெவ்வற்றால் பாதிக்கப் படுகிறது என்று அதன் தன்மையை அறிய வேண்டும்.

இரண்டாவது, குணங்களால் சலிப்படையக் கூடாது. குணங்கள் வரும் போகும். அவற்றால் கோபமோ சலிப்போ அடையக் கூடாது. அது   அப்படித்தான் இருக்கும்.  தினமும் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைவது போல. நீங்கள்  அதைப் பற்றி சலித்து என்ன ஆகப் போகிறது.

மூன்றாவது, மிக முக்கியமானது, உதாசீனம் செய்பவர்களைப் போல இருப்பான்.  வியாசர் குணங்களை உதாசீனம் செய்யச் சொல்லவில்லை. உதாசீனம் செய்தவர்கள்  எப்படி இருப்பார்களோ அப்படி இருப்பான்.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?

எடுத்த உடனேயே உதாசீனப் படுத்து என்றால் "அதெல்லாம் முடியாது, இது கேக்க நல்லா இருக்கு ஆனால் நடை முறைக்கு சாத்தியம் ஆகாது " என்று நாம் ஒதுக்கி விடுவோம். எனவே, அதற்கு பயிற்சி தருகிறார் வியாசர். உதாசீனம்  செய்பவர்களைப் போல இரு. நாளடைவில் உன்னாலும் முடியும். அதில் உள்ள  நன்மைகளைக் கண்டு நீயே உதாசீனம் செய்யத் தொடங்கி விடுவாய் என்பது மறைமுக கருத்து.


நான்காவது, அசைவற்று இருப்பான். அசைவற்று இருப்பான் என்றால் ஏதோ சிலை மாதிரி இருப்பான் என்று அல்ல அர்த்தம். நல்லதும் வரும், தீமையும் வரும். நல்லது வந்தால் தலை கால் புரியாமல் ஆடுவதும் இல்லை, தீமை வந்தால்  குடியே முழுகிப் போனது போல உடைந்து போவதும் இல்லை. இவை எல்லாம் குணங்களின் விளையாட்டு என்று அறிந்து சலனம் இன்றி இருப்பான்.

இதில் ஒரு படி மேலே போய் சிந்தித்தால், இன்பமும் துன்பமும் வரும்போது சலனம் இன்றி இருப்பான் என்பது போய் சலனம் இன்றி இருப்பதால் இன்பமும்  துன்பமும் வருவது இல்லை என்பதும் புரியும்.

வாளித்  தண்ணீரில் சூரியனின் பிம்பம் தெரிகிறது. நீர் சலனம் அடைந்தால் பிம்பமும்  சலனம் அடையும். பிம்பம் சலனம் அடையக் காரணம் சூரியன் அல்ல, வாலி நீரில் எற்பட்ட சலனம். சலனம் நின்றால் பிம்பம் அலைவது இல்லை.

இந்த உலகம் அமைதியாகத் தான் இருக்கிறது.

குணங்களால் உந்தப்பட்ட அறிவும் மனமும்  சலனம் அடைந்து அதனால் இன்பமும் துன்பமும்  அடைகின்றன. சலனம் நிற்கும் போது இன்பமும் துன்பமும் மறையும்.

"அசையாமல் இருப்பான்"

ப்ளாகை மூடி விட்டு மனதுக்குள் அசை போட்டுப் பாருங்கள்.

குணங்களின் தன்மையை அறிவது, அவைகளின் சுழற்சியை அறிவது, உதாசீனம்  செய்பவர்களைப் போல இருப்பது, சலனம் இல்லாமல் இருப்பது....

உங்களை நீங்களே ஆராயத் தொடங்கினால் இவை புரியத் தொடங்கும்.

புரிய புரிய குணங்களின் சங்கிலியில் இருந்து விடுபடுவீர்கள்.

அந்த நாள் சீக்கிரம் வர வாழ்த்துக்கள்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1423.html )

Saturday, March 26, 2016

கீதை - 14.22 - குணங்களின் மேல் விருப்பும் வெறுப்பும்

கீதை - 14.22 - குணங்களின் மேல் விருப்பும் வெறுப்பும் 


श्रीभगवानुवाच
प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
न द्वेष्टि संप्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥१४- २२॥

ஸ்ரீபகவாநுவாச
ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ |
ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி || 14- 22||

ஸ்ரீபகவாந் உவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ப்ரகாஸம் = ஒளி
ச = மேலும்
ப்ரவ்ருத்திம் = தொழில்
ச = மேலும்
மோஹமேவ = மயக்கம்
ச = மேலும்
பாண்டவ = பாண்டவனே
ந = இல்லை
த்வேஷ்டி = துவேஷம் கொள்வது இல்லை. பகை கொள்வது இல்லை. வெறுப்பது இல்லை
ஸம்ப்ரவ்ருத்தாநி = தோன்றும் போது
ந = இல்லை
நிவ்ருத்தாநி = நீங்கிய போது
காங்க்ஷதி = விரும்புவதும் இல்லை

ஸ்ரீ பகவான் சொல்கிறான், ஒளி ,தொழில், மயக்கம் இவை தோன்றும் போது அவற்றை வெறுப்பதும் இல்லை மேலும் அவை விலகிப் போகும் போது அவற்றை விரும்புவதும் இல்லை. 

முந்தைய ஸ்லோகத்தில் அர்ஜுனன், இந்த குணங்களின் பிடியில் இருந்து எப்படி  தப்புவது ? தப்பியவர்கள் யாராவது இருக்கிறார்களா ? அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று.

கண்ணன் சொல்லத் தொடங்குகிறான்.

இந்த குணங்களை கடந்தவர்கள் ஒளி , தொழில், மயக்கம் இந்த மூன்றும் தோன்றும்போது வெறுக்க மாட்டார்கள், விலகும் போது விரும்ப மாட்டார்கள்.

அது என்ன ஒளி , தொழில் , மயக்கம் ?

ஒளி என்றால் சாத்வீகம்
தொழில் என்றால் ரஜோ குணம்
மயக்கம் என்றால் தமோ குணம்.

அதாவது இந்த மூன்று குணங்களும் தோன்றும் போது வெறுப்பு அடைய மாட்டார்கள். இந்த குணங்கள் மறையும் போது அவற்றிற்காக ஆசைப் பட மாட்டார்கள்.

நாம் ஏன் இந்த குணங்களை தாண்டிப் போக முடியவில்லை என்றால், சாத்வீக குணத்தின் மேல் ஆசை. ரஜோ குணம் தேவை தான் வாழ்க்கைக்கு என்ற ஒரு எண்ணம். அதனால் அது இருந்து விட்டு போகட்டும். இந்த தமோ குணம் வேண்டவே வேண்டாம் என்று அதன் மேல் வெறுப்பு.

எப்படி சாத்வீக குணத்தை அதிகரிப்பது, எப்படி தமோ குணத்தை குறைப்பது என்று நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அது ஒரு தவறான போக்கு.

மூன்று குணங்கள் மேலும் பற்றும் இருக்கக் கூடாது, வெறுப்பும் இருக்கக் கூடாது.

சாத்வீகம் தலை எடுக்கிறதா ? கவனியுங்கள். அது உங்களில் எப்படி வேலை செய்கிறது என்று.   ஆஹா இது நல்லா இருக்கே, இதுவே இருந்தால் தேவலை போல இருக்கே  என்று அதன் மேல் ஆசைப் படாதீர்கள்.

சக்கரம் சுழலும். சாத்வீகம் போய் மற்ற ஏதோ ஒன்று தலைப்படும். அடடா சாத்வீகம் போய் விட்டதே என்று வருந்தாதீர்கள். அது வேண்டும் என்று ஆசைப் படாதீர்கள். எந்த குணம் தலைப் படுகிறதோ,  அப்போதும் ஒரு சாட்சியைப் போல கவனியுங்கள்.

திரையில் காட்சிகள் ஓடுவது போல ஒன்று மாறி மற்றொன்று வந்து கொண்டே இருக்கும். எதனோடும் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள்.

இந்த மூன்று குணங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்று வேண்டும் என்றால் மத்த இரண்டும் கூடவே வரும்.

இது வேண்டும், ஆனால் அது வேண்டாம் என்றால்  முடியாது.

உங்களுக்கு எதுக்கு இந்த குணங்கள் எல்லாம். நீங்கள் இதை எல்லாம் விட மிக மிக  பெரியவர்கள். சிறு பிள்ளைகள் கூழான் கற்கள், பயணச் சீட்டு போன்ற குப்பைகளை பொக்கிஷம் போல சேர்த்து வைத்திருப்பார்கள். நாளாக நாளாக பெரியவர்கள் ஆகும் போது அவை எல்லாம் குப்பைகள் என்று அவர்களே உணர்ந்து அவற்றை தூக்கிப் போட்டு விடுவார்கள்.

அது போல, இதுவரை சேர்த்து வைத்த குப்பைகளை தூர வீசுங்கள். எந்த குணம் எப்போது வந்தால் என்ன. வந்து விட்டுப் போகட்டும். வந்த வழியே அவை போகும்.

வரும்போது வருந்தாதீர்கள், போகும் போது விரும்பாதீர்கள்.

இது முதல் படி.

கீதை உங்களை கை பிடித்து அழைத்துச் செல்லும். தைரியமாக முதல் படியில் காலை வையுங்கள். மேலே போய் விடலாம்.

போகலாமா ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1422.html )

Friday, March 25, 2016

கீதை - 14.21 - அர்ஜுனனின் கேள்வி

கீதை - 14.21 - அர்ஜுனனின் கேள்வி 


अर्जुन उवाच
कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥१४- २१॥


அர்ஜுந உவாச
கைர்லிங்கை³ஸ்த்ரீந்கு³ணாநேதாநதீதோ ப⁴வதி ப்ரபோ⁴ |
கிமாசார: கத²ம் சைதாம்ஸ்த்ரீந்கு³ணாநதிவர்ததே


அர்ஜுந உவாச = அர்ஜுனன் கேட்கிறான்

கை = எந்த

லிங்கை = அடையாளங்களோடு இருப்பான் ?

த்ரீந் = மூன்ற

கு³ணா = குணங்களை

ஏதன் = இந்த

அதீதோ = கடந்தவன்

பவதி =அவன்

ப்ரபோ= பிரபுவே


கிம் = எப்படி, எதனால், எங்கு

ஆசார = நியதிப்படி , ஒழுக்கத்தில்

கதம் = எப்படி ?

சா = மேலும்

ஏதம் =  இந்த

த்ரீந் = மூன்று

கு³ணா = குணங்களை

அதி வர்ததே = கடந்து போகிறான்

அர்ஜுனன் சொல்லுகிறான், பிரபுவே !  இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் எப்படி இருப்பான் ? அவன் இவற்றை எப்படி கடக்கிறான்

சரி, இந்த மூன்று குணங்களைக் கடந்தால் அமிர்த நிலையை அடையலாம், என் தன்மையை  அடையலாம் அப்படின்னு சொல்ற, இதுவரைக்கும் அப்படி யாராவது  அடைந்து இருக்கிறார்களா ? ஆம் என்றால், எப்படி அடைந்தார்கள்  என்று எனக்குச் சொல் என்று அர்ஜுனன் கேட்கிறான்.

இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு ? நடை முறையில் சாத்தியமா ? என்பது  அர்ஜுனனின் கேள்வி.

அது மட்டும் அல்ல, அர்ஜுனன் இதை அறிவியல் பூர்வமாக அணுகுகிறான்.

யாராவது அடைந்து இருக்கிறார்களா ?

அப்படி அடைந்தவர்கள் எப்படி இருப்பார்கள் ? அவர்களின் அடையாளம் என்ன ?

எப்படி அதை அடைந்தார்கள் ?

அதாவது, இந்த மூன்று குணங்களையும் தாண்டி மேலே போக வழி இருக்கிறதா ?

இந்த கேள்விகளை அர்ஜுனன் மூலமாக கேட்பதன் மூலம் வியாசர் சில விஷயங்களை நமக்குச் சொல்கிறார்.

முதலாவது,  இது முடியக் கூடிய காரியம் தான். யாரோ அடைந்திருக்கிறார்கள் என்றால்  நம்மாலும் முடியும் தானே.

இரண்டாவது, இதை அடைய ஒரு வழி இருக்கிறது.  அந்த வழியில் போனால் அடையலாம்.

மூன்றாவது,  முயற்சி வேண்டும் அதை அடைய. ஏதோ ஒரு குலத்தில் பிறந்து விட்டால்  அது தானே வந்து விடாது.

நான்காவது, அப்படி அடைந்தவர்கள் மற்றார்களில் இருந்து தனித்து தெரிவார்கள். கண்டவுடன்அடையாளம் கண்டு கொள்ள முடியும். அது மட்டும் அல்ல, அப்படி அவர்களை அடையாளம் கண்டு கொண்டால் அவர்களைப் போலவே  நாமும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் தோன்றும்.

இதெல்லாம் முடியற காரியம் இல்லை,  நடை முறைக்கு ஒத்து வராது என்று நாம்  ஆரம்பிபதற்கு முன்பே அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார் வியாசர்.

வாருங்கள், எப்படித்தான் இந்த குணங்களை தாண்டி மேலே போவது என்று பார்ப்போம்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1421.html )

Thursday, March 24, 2016

கீதை - 14.20 - இறவா நிலை அடைய

கீதை - 14.20 - இறவா நிலை அடைய 


गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥१४- २०॥

கு³ணாநேதாநதீத்ய த்ரீந்தே³ஹீ தே³ஹஸமுத்பவாந் |
ஜந்மம்ருத்யுஜராது³:கை²ர்விமுக்தோऽம்ருதமஸ்நுதே || 14- 20||


கு³ணா = குணங்களை

எதத் = அவைகளை

அதீத்ய = தாண்டி

த்ரீந் = மூன்று

தேஹீ  = தேகத்தை உடையவன்

தேஹ ஸமுத் பவாந் = உடலில் இருந்து பிறக்கும்

ஜந்ம = பிறப்பு

ம்ருத்யு  = இறப்பு

ஜராது =  மூப்பு

துகை²ர் = துக்கம், துன்பம்

விமுக்தோ = விடுதலை அடைகிறான்

அம்ருதம் = அமிர்தம், இறவா நிலையை

அஸ்நுதே = அடைகிறான்


இந்த மூன்று குணங்களில் இருந்து விடுபட்டோன்  உடலில் இருந்து பிறக்கும் பிறப்பு, இறப்பு, மூப்பு , வருத்தம் என்பனவற்றில் இருந்து விடுபட்டு இறவா நிலையை அடைவான். 


கீதையை படிக்கும் நிறைய பேர் , எப்படி சாத்வீக குணத்தை அதிகரிப்பது, எப்படி தமோ மற்றும் ரஜோ குணத்தை குறைப்பது என்று சிந்திக்கத் தொடங்கி விடுவது உண்டு.

"என் கிட்ட கொஞ்ச தமோ , ரஜோ குணம் இருக்கு. எப்படியாவது அதில் இருந்து  விடுபடனும்..சாத்வீகம் மட்டும் இருக்கணும். அதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் "

தவறு.

சாத்வீகத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஒரு குணம் மட்டும் தனித்து இருக்க முடியாது. மனிதன் இந்த மூன்றின் கலவைதான். ஒன்று மட்டும் தனித்து  வராது. சாத்வீகம் வேண்டும் என்றால் அது கூடவே மற்ற இரண்டு குணங்களும் வரும்.

சாத்வீகத்தில் மிக உயர்ந்து நின்ற ரிஷிகள், முனிவர்கள் ஒரு கண நேரத்தில் காம வயப்பட்டு இருக்கிறார்கள். ஒரு நொடியில் நிதானம் இழந்து கோபம் கொண்டு சபித்து இருக்கிறார்கள். கோபமும் காமமும் எங்கிருந்து வந்தது ? சாத்வீகத்தில் இருந்தா ? இல்லை.

தமோ ரஜோ குணம் கூடவே வரும்.

மூன்று குணங்களில் இருந்தும் விடுதலை பெற வேண்டும்.

தங்கத்தால் செய்து இருந்தாலும் , விலங்கு, விலங்குதானே.

இந்த மூன்று குணங்களில் இருந்தும் விடு பட்டவன் , பிறப்பு, இறப்பு, மூப்பு, துக்கம் என்ற  இந்த சுழலில் இருந்து விடுபட்டு, இறவாப் பெரு நிலை அடைவான் என்கிறார் வியாசர்.

எப்படி ?

குப்பை மேட்டின் மேல் அமர்ந்து கொண்டு துர்நாற்றம் வீசுகிறதே என்ன செய்யலாம் என்று  சிந்தித்துக் கொண்டு இருக்கக் கூடாது. துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், குப்பை மேட்டை விட்டு விலகிப் போக வேண்டும்.

குணங்களின் பிடியில் இருக்கும் வரை அவை நம்மை அலைகழிக்கும். அதைச் செய், இதைச் செய்யாதே, அங்கே போ, இங்கே வா என்று நம்மை போட்டி புரட்டி எடுக்கும்.

இவற்றில் இருந்து விடுபட வேண்டும்.

சண்டிக் குதிரையின் மேல் சவாரி செய்வது போலத்தான் இந்த குணங்களை கொண்டு நடப்பது.

குணங்களைத் தாண்டி மேலே போக வேண்டும்.

எப்படி போவது என்று பின்னால் சொல்கிறார்.

மனதில் கொள்ள வேண்டியது என்ன என்றால், மூன்று குணங்களில் இருந்தும் விடுபடவேண்டும்.

சாத்வீகம் அறிவு வேண்டும் அலைகிறது.

ரஜோ குணம் செல்வம் வேண்டும் என்று அலைகிறது.

அலைச்சல் என்னமோ ஒன்று தான். எதற்கு என்பதில் தான் வேறுபாடு.

ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பார் திருமூலர்.

பொண்ணுக்கு, பொன்னுக்கு , மண்ணுக்கு ஆசைபடுவதற்கும்,
இறைவனை அடைய வேண்டும், பரம பதம் அடைய வேண்டும், சொர்க்கம் போக வேண்டும் என்று ஆசைப் படுவதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

எல்லாம் ஆசை தான்.

எனவேதான் கீதை சொல்கிறது, மூன்று குணங்களையும் கடந்து போக வேண்டும் என்று.

சொல்வதோடு நிற்கவில்லை. எப்படி என்றும் சொல்லித் தருகிறது.

கேட்போமா ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1420.html )

கீதை - 14.19 - குணங்களைக் கடந்து

கீதை - 14.19 - குணங்களைக் கடந்து 


नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥१४- १९॥

நாந்யம் கு³ணேப்ய: கர்தாரம் யதா³ த்ரஷ்டாநுபஸ்யதி |
கு³ணேப்யஸ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோதிக³ச்ச²தி || 14- 19||


ந = இல்லை

அந்யம்= வேறு

குணேப்ய: = குணங்களைத் தவிர

கர்தாரம் = கர்த்தா, செய்பவன்

யதா = எப்போது

த்ரஷ்டா = பார்ப்பவன்

அநுபஸ்யதி = காண்கிறானோ

குணேப்யஸ் = குணங்களைத் தவிர

ச = மேலும்

பரம் = உயர்ந்த

வேத்தி = அறிகிறான்

மத்பாவம் = என்னைப் பற்றி அல்லது என் தன்மையைப் பற்றி

சஹ = அவன்

அதி கச்சதி = அவன் அடைகிறான்


குணங்களைத் தவிர வேறு ஒரு கர்த்தா இல்லை. இதை அறிந்தவன், குணங்களுக்கு மேலே உள்ள பொருளை அறிந்து கொண்டால் , என் தன்மையை அறிவான். 


இந்த உலகம் எதனால் இயங்குகிறது ? 

நாம் தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை பல காரியங்களைச் செய்கிறோம். 

எது நம்மை செலுத்துகிறது ?

குணங்கள்.

சாத்வீகம், ரஜோ மற்றும் தமோ குணங்கள் நம்மை செயல்படத் தூண்டுகிறது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஏதோ நாம் தான் எல்லா காரியங்களையும் செய்வதாக. 

இல்லை.

ஆழ்ந்து பார்த்தால் புரியும் ...நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் இந்த மூன்று  குணங்களில் ஏதோ ஒன்று காரணமாக இருக்கும். அலுவலகம் போவதாக இருக்கட்டும், படிப்பதாக இருக்கட்டும், தூங்குவதாக இருக்கட்டும்....அனைத்து காரியங்களுக்கும் இந்த மூன்று குணங்களே காரணம்.

எப்போதாவது நேரம் கிடக்கும் போது ஆராய்ந்து பாருங்கள். அந்த ஒரு நாளில் என்னென்ன காரியம் செய்தோம், அதற்கு எந்த குணம் காரணம் என்று. உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

சரி , அப்படி என்றால் நமக்கு இவற்றிலிருந்து விடுதலையே கிடையாதா ? இந்த  குணங்கள் நம்மை போட்டு அங்கும் இங்கும் அலைகழித்துக் கொண்டு இருக்கும்...அவை இழுக்கும் பக்கம் எல்லாம் ஓடுவதுதான் நம் வேலையா ? 

இந்த குணங்களில் இருந்து விடுபட முடியாதா ?

முடியும் என்கிறது கீதை. 

இந்த குணங்களுக்கு மேலே ஒன்று இருக்கிறது. அதை அறிந்து கொண்டால் இந்த குணங்களில் இருந்து விடுபடலாம் ?

அதை எப்படி அறிவது ?

அதையும் இந்த ஸ்லோகத்தில் சொல்கிறது கீதை. 

த்ரஷ்டாநுபஸ்யதி

பார்ப்பவன், காண்கிறானோ.....அப்போது என் தன்மையை அடைகிறான்.

அது என்ன பார்ப்பவன் , காண்கிறானோ ? 

பார்ப்பது எல்லாம் காண்பது ஆகாது. 

"நான்" என்பது இந்த குணங்களால் செயல்படுத்தப் படும் ஒரு கருவி அல்ல என்று காண வேண்டும். 

ஒரு பேருந்தில் , கரடு முரடான ஒரு சாலையில் பயணம் செய்கிறீர்கள். வண்டி தூக்கி தூக்கி போடுகிறது. ஒரு நிமிடம் கூட உங்களை நிம்மதியாக இருக்க விடுவது இல்லை. வலது புறம் சரிகிறது. இடது புறம் சரிகிறது. சடாரென்று நிற்கிறது, வேகத்தடையில் தூக்கிப் போடுகிறது. என்னடா இது, இந்த துன்பத்தில் இருந்து ஒரு விடுதலை இல்லையா என்று நினைப்பீர்கள்.

ஒரு நிறுத்தத்தில் வண்டி நிற்கிறது. வண்டியில் இருந்து நீங்கள் கீழே இறங்கி விடுகிறீர்கள். இனி வண்டி எப்படி போனாலும் உங்களுக்குத் துன்பம் இல்லை. 

நீங்கள் வண்டியோடு சேர்ந்து போகும்போதுதான் இந்தத் துன்பம் எல்லாம். நீங்கள் வேறு வண்டி வேறு என்று ஆகி விட்டால், இந்தத் துன்பம் இல்லை. 

அது போல, இந்த குணங்களால் அலைகழிக்கப்படும் உடலும், அதன் அனுபவங்களும் நீங்கள் என்று நினைத்தால் துன்பம் தான். நான் இவற்றை  எல்லாம்      கடந்தவன் என்று நீங்கள் உணரும் போது , அதைக் "காணும்"போது இந்த குணங்களின் பிடியில் இருந்து விடுபட்டு இறைத் தன்மையை அடைவீர்கள்.

  பச்சை நிற கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தால் பார்ப்பது எல்லாமே பச்சையாகத்தான் தெரியும். அது போல, இந்த குணங்கள் நம்மை இந்த உலகை சரியாக "காண" விடுவது இல்லை.

பெண்ணின் மேல் மோகம் வந்தால், அவளைக் "காணும்" காட்சி வேறு மாதிரியாக இருக்கிறது. பொருள்கள் மேல் ஆசை வரும்போது சுற்றி இருப்பவன் எல்லாம் எதிரியாகத் தெரிகிறான்.

பெட்டியில் ஒரு கோடி ரூபாய் எடுத்துக் கொண்டு போனால், எதிரில் வருபவன் எல்லாம் கள்ளனாகத் தெரிகிறான்.

ஒரு முறை துரியோதனன் துரோணரிடம் சென்று குறை பட்டுக் கொண்டான் "நாங்கள் இருவரும் குருகுலத்தின் பிரதிநிதிகள்தான். இருந்தும், நீங்கள் பாண்டவர்களுக்கு மட்டும் நன்றாகச் சொல்லித் தருகிறீர்கள்...கௌரவர்களான எங்களுக்கு சரியாகவே சொல்லித் தருவது இல்லை, ஏன் " என்று.

துரோணர் சிரித்துக் கொண்டே சொன்னார், "இந்த கேள்விக்கு நாளை விடை தருகிறேன். அதற்குள் நீ ஊருக்குள் போய்  ஊர் மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து வா" என்று அனுப்பினார்.

மறு நாள் துரியோதன் வந்தான்.

துரோணர் கேட்டார் "துரியோதனா, மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் ?" என்று.

துரியோதனன் சொன்னான் "குருவே, ஊர் பூராவும் அயோக்கிய பயல்கள். ஒருத்தனையும் நம்ப முடியாது "  என்று.

சரி, நீ அந்த தூணுக்குப் பின்னால் மறைந்து கொள், இப்போது தர்மன் இங்கே வருவான். அவன் என்ன சொல்கிறான் என்று  மறைந்து இருந்து கேள் என்றார்.

சிறிது நேரத்தில் தர்மன் வந்தான்.


என்னப்பா தர்மா, மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார்.

"சுவாமி, மக்கள் எல்லோரும் மிக நல்லவர்கள். எல்லோரும் யோக்கியமாக இருக்கிறார்கள். ஒரு அயோகியனைக் கூட  காணவில்லை " என்றான்.

துரோணர் சொன்னார் "பார்த்தாயா துரியோதனா ...உன் கண்ணுக்கு எல்லோரும் அயோகியர்களாகத் தெரிகிறார்கள்....தர்மன் கண்ணுக்கு எல்லோரும் நல்லவர்களாத் தெரிகிறார்கள். ...எல்லாம் பார்வையில் இருக்கிறது. நான் என்ன செய்ய " என்றார்.

தர்மன் - சாத்வீகம்.

துரியோதன் - ரஜோ குணம்.

குணங்கள் பார்வையை மாற்றிப் போடுகின்றன.

 சரி, குணங்கள் நம் பார்வையை மாற்றுகின்றன. குணங்களால்  கட்டுண்டு துன்பம் படுகிறோம்.

இந்த குணங்களில் இருந்து எப்படி விடுபடுவது ?

மேலும் சிந்திப்போம்.

அது வரை, உங்களை, உங்களைச் சுற்றியுள்ள உலகை, உங்கள் இன்ப துன்பங்களை எப்படி உங்கள் குணங்கள் பாதிக்கின்றன என்று ஆழ்ந்து சிந்தியுங்கள்.

ஏன் ஒருவரை பிடிக்கிறது ? ஏன் ஒருவரை பிடிக்கவில்லை ? ஏன் சிலவற்றை நினைத்தால் பயமாக இருக்கிறது ? இந்த குணங்கள் எனக்கு எப்படி வந்தது ? எந்த சமயத்தில் எந்த குணம் தலை தூக்கி நிற்கிறது என்று உங்களுக்குள்ளேயே ஒரு ஆராய்ச்சி செய்யுங்கள்.

குணம் என்ற காற்றினில் அலைகழிக்கபடும் துரும்பு அல்ல நீங்கள். எதற்கும் அசையாத மலை நீங்கள் என்று தெரிய வரும்.

கீதை உங்களுக்குத் துணை புரியும்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1419.html )

Tuesday, March 22, 2016

கீதை - 14.18 - முன்னேற

கீதை - 14.18 - முன்னேற 


ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।
जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः ॥१४- १८॥

ஊர்த்வம் க³ச்ச²ந்தி ஸத்த்வஸ்தா² மத்யே திஷ்ட²ந்தி ராஜஸா: |
ஜகந்யகு³ணவ்ருத்திஸ்தா² அதோ க³ச்ச²ந்தி தாமஸா: || 14- 18||

ஊர்த்வம் = மேல் நோக்கி

க³ச்ச²ந்தி = செல்வார்கள்

ஸத்த்வஸ்தா = சாத்வீக குணம் கொண்டோர்

மத்யே = நடுவில்

திஷ்ட²ந்தி = இருப்பார்கள்

ராஜஸா: = ராஜச குணம் உடையோர்

|
ஜகந்ய கு³ண வ்ருத்தி ஸ்தா = கீழான குணத்தை கொண்டோர்

அதோ = கீழ்நோக்கி

க³ச்ச²ந்தி  = செல்வர்கள்

தாமஸா: = தமோ குணம் உடையவர்கள்

சாத்வீக குணம் உடையவர்கள் மேல் நோக்கிப் போகிறார்கள். 
ரஜோ குணம் உடையவர்கள் இடையில் நிற்கிறார்கள். 
தமோ குணம் உடையவர்கள் கீழ் நோக்கிப் போகிறார்கள். 


நமக்கு எந்த குணம் அதிகமாக இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது ?

யாரைக் கேட்டாலும் தயங்காமல் எனக்கு சாத்வீக குணம் தான் அதிகம் என்று தயங்காமல் சொல்வார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் தமோ குணம் இருக்கு, அதை விட்டு விட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். மத்தபடி எனக்கு எப்போதும் சாத்வீகம்தான் என்று எல்லோரும் கூறுவார்கள்.

அது தானே உள்ளதிற்குள் நல்ல குணமாக இருக்கிறது.

இதைத் தெரிந்து வியாசர் சொல்கிறார்..."நீ நினைத்தால் போதாது...அதற்கு என்று சில நியதிகள் இருக்கு. ஒவ்வொரு குணமும் மிகுந்து இருக்கும் போது என்ன  நிகழும் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதன் படி நடந்தால் அந்தந்த குணங்கள் உனக்கு  உயர்ந்து இருக்கிறது என்று கண்டு கொள் " என்று பட்டியல் தருகிறார்.

சாத்வீக குணம் இருந்தால், நீங்கள் மேல் நோக்கிப் செல்வீர்கள்.

மேல் நோக்கி என்றால் படிக் கட்டில் ஏறியோ அல்லது lift ல் செல்வதோ அல்ல.

நாளுக்கு நாள் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வீர்கள்.

நேற்றையை விட இன்று நீங்கள் உயர்ந்து நிற்பீர்கள்.

எதில் ? பணத்திலோ அல்லது சொத்து சேகரிப்பதிலோ அல்ல.

அறிவில், ஞானத்தில், பொறுமை போன்ற உயர்ந்த குணங்களில் நீங்கள் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே சென்றால் உங்களுக்குள் சாத்வீகம் ஓங்கி நிற்கிறது என்று அர்த்தம்.

சிந்தித்துப் பாருங்கள் , கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் எப்படியெல்லாம் உயர்ந்து இருகிறீர்கள் என்று.

ஒரு பட்டியல் போடுங்கள்.

ரொம்ப ஒண்ணும் உயரவில்லை என்றால், ரஜோ குணம் கூடி நிற்கிறது என்று பொருள்.

முன்பு இருந்ததை விட இப்போது மோசமான நிலை என்றால், தமோ குணம் கூடி நிற்கிறது என்று பொருள்.

இது ஒரு புறம் நிற்கட்டும்.

இன்றிலிருந்து நீங்கள் உங்களை எப்படி உயர்த்திக் கொள்ளப் போகிறீர்கள் என்று  சிந்தியுங்கள்.

என்னென்ன தீய குணங்கள் இருக்கின்றது உங்களுக்குள் என்று உங்களுக்குத்தான் தெரியும்.

கோபம், பொறாமை, பேராசை, போன்ற கெட்ட குணங்கள் இருந்தால் அவற்றை  எப்படி மாற்றுவது என்று சிந்தியுங்கள்.

அதே போல , பரோபோகாரம், அன்பு, கருணை போன்ற நல்ல குணங்கள் இருந்தால் அவற்றை  எப்படி மேலும் விருத்தி செய்வது என்று சிந்தியுங்கள்.

அப்படி உயர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

ஆம். மிக மிக உயர்ந்த ஒருவர் இருக்கிறார். உங்களுக்கு மிக மிக பரிச்சியமானவர். அவர் யார் , அவர் எப்படி உயர்ந்தார் என்று நாளை பார்க்கலாம்.

ஒவ்வொருநாளும் உங்களை உயர்த்திக் கொண்டே போங்கள் .

சாத்வீகம் உச்சம் அடையும். சாத்வீகத்தின் உச்சத்தில் ஞானத்தின் தெளிவு பிறக்கும்.

இன்றே ஆரம்பியுங்கள்.

நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1418.html )

Monday, March 21, 2016

கீதை - 14.17 - குணமும் பலனும்

கீதை - 14.17 - குணமும் பலனும் 


सत्त्वात्संजायते ज्ञानं रजसो लोभ एव च ।
प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ॥१४- १७॥

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச |
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோ ஜ்ஞாநமேவ ச || 14- 17||


ஸத்த்வாத் = சத்வ குணம்

ஸஞ்ஜாயதே = உடன் பிறக்கிறது

ஜ்ஞாநம் = ஞானம்

ரஜஸோ = ரஜோ குணம்

லோப = பேராசை

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ப்ரமாத = மயக்கமும்

மோஹௌ =  குழப்பமும்

தமஸோ = தமோ குணத்தின்

பவதோ = ஒன்றாகிறது

அஜ்ஞாநம் = அறிவீனம்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

சத்வ குணத்தில் இருந்து ஞானம் பிறக்கிறது; 
ரஜோ குணத்தில் இருந்து பேராசை பிறக்கிறது 
தமோ குணத்தில் இருந்து  தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் பிறக்கின்றன. 


இந்த ஸ்லோகத்தைப் படிக்கும் போது ஏதோ ஒவ்வொரு குணத்தில் இருந்து ஒவ்வொன்று பிறக்கிறது என்று தோன்றும்.

சாத்வீக குணத்தில் இருந்து ஞானம், ரஜோ குணத்தில் இருந்து பேராசை, தமோ குணத்தில் இருந்து தவறுகள், குழப்பம், அறிவீனம் இவை தோன்றுவதாகத் நமக்கு புரிகிறது.

இல்லை.

சாத்வீக குணம் வந்த பின் , ஞானம் பிறக்குமா ? அப்படி என்றால் எவ்வளவு நாள் ஆகும் ? எவ்வளவு சாத்வீக குணத்திற்கு எவ்வளவு ஞானம் என்று ஏதாவது  அளவு இருக்கிறதா ?

குணங்களும் அவற்றின் பலன்களும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப் பிணைந்தவை. ஒன்று வந்தபின் அடுத்தது வரும் என்று அல்ல. குணங்களும் அவற்றின் பலன்களும்  ஒன்றாக பிறக்கின்றன.

ஸஞ்ஜாயதே என்ற சொல்லுக்கு சம் + ஜனம் என்று பிரித்து உடன் பிறக்கிறது என்று பொருள் கொள்ள வேண்டும்.

சாத்வீகம் தோன்றும் போது ஞானமும் தோன்றுகிறது.

சாத்வீகம் உச்சம் பெற பெற ஞானமும் உச்சமும் பெறும்.

அதே போலத்தான் ரஜோ மற்றும் தமோ குணங்களும் அவற்றின் பலன்களும்.


ஞானம் அதிகரிக்க வேண்டுமா ? சாத்வீகத்தை அதிகரித்துக் கொண்டே போங்கள் .

நிறைய துன்பம் வேண்டுமா ? ரஜோ குணத்தை கூட்டிக் கொண்டே போங்கள் .

மயக்கமும், குழப்பமும், அறிவீனமும் வேண்டுமா, தமோ குணத்தைக் கூட்டுங்கள்.

முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம் சாத்வீகம் எப்படி அதிகரிக்கிறது என்று. நல்ல காரியங்களைச்  செய்ய செய்ய சாத்வீகம் அதிகரிக்கும்.

சாத்வீகம் பிறப்பினால் வருவது அல்ல. செயலினால் வருவது. சில குடும்ப சூழ்நிலைகள்   நல்ல காரியங்களை செய்ய ஏதுவாக அமையலாம். அப்போது, இந்த குலத்தில் பிறந்ததனால் நமக்கு சாத்வீகம் வந்து விட்டது என்று தோன்றும். உண்மை அது அல்ல. அங்கு பிறந்ததனால், நல்ல காரியங்களை எளிதாக செய்ய முடிந்ததனால் சாத்வீகம் உச்சம் பெற்றது.

மேலும், என் மனம் அமைதியாக இருக்கிறது. நான் யாருக்கும் ஒரு தீங்கும் செய்வது இல்லை. எனக்கு பேராசை கிடையாது.  மந்திரங்கள், பூஜை புனஸ்காரங்கள் எல்லாம்  ஒழுங்காகச் செய்கிறேன்...எனக்கு சாத்வீகம் கூடிவிட்டது என்று நினைக்கக் கூடாது.

இவை எல்லாம் சாத்வீக குணத்தின் அடையாளங்கள் அல்ல. தானம் செய்வது, பூஜை செய்வது, ஆச்சாரமாக இருப்பது, பக்தி செய்வது, போட்டி பொறாமை இல்லாமல் இருப்பது, பேராசை இல்லாமல் இருப்பது  இதெல்லாம் சாத்வீகமாகாது.

சாத்வீகத்திற்கு ஒரே பலன் தான் உண்டு - ஞானம்.  ஞானம் அதிகரித்தால் சாத்வீகம்  அதிகரிக்கிறது என்று அர்த்தம். அஞ்ஞானம் அதிகரித்தால் தமோ குணம் அதிகரிக்கிறது என்று பொருள். ரொம்ப துன்பப் படுகிறீர்களா ? ரஜோ குணம் உச்சம் அடைகிறது என்று பொருள்.

சாத்வீகம் என்றால் சாந்த குணம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஞானம் தான் சாத்வீகத்தின் வெளிப்பாடு.



அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு 
ஞானத் தமிழ் புரிந்த நான்  


ஞானம் சுடர் விட்டு பிராகாசிக்க வேண்டும். அதுதான் சாத்வீகம்.


 உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் பெற்றார் திருஞானசம்பந்தர்.

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
 பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
 உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் 
 தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் 


அறிந்தேன் எவரும் அறியா மறையை என்று அதிசயிப்பார் அபிராமி பட்டர்.

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!


மெய் ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே, அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே என்பார் மணிவாசகர்.

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானத் தன்னை யகல்விக்கும் நல்லறிவே


நல்லதே செய்யுங்கள். சாத்வீகம் வளரும். ஞானம் பெருகும். பெருகட்டும்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1417.html )

Sunday, March 20, 2016

கீதை - 14.16 - குணங்கள் எங்கிருந்து வருகின்றன ?

கீதை - 14.16 - குணங்கள் எங்கிருந்து வருகின்றன?


कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।
रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥१४- १६॥

கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் ப²லம் |
ரஜஸஸ்து ப²லம் து³:க²மஜ்ஞாநம் தமஸ: ப²லம் || 14- 16||

கர்மண: = செயல்களின்

ஸுக்ருதஸ்ய = சுக்கிரதசை = சு + க்ர + தஸ்ய = 'சு' என்றால் உயர்ந்த, சிறந்த. க்ர  என்றால் காரியம். உயர்ந்த நல்ல (செயல்களின்)

ஆஹு: = சொல்லப் படுகிறது

ஸாத்த்விகம் = சாத்வீக குணம்.

நிர்மலம் = தூய்மையான

பலம் = பலன்


ரஜஸஸ் து = ரஜோ குணத்தின்

பலம்  = பலன்

து:கம் = துக்கம்

அஜ்ஞாநம் = அறிவீனம்

தமஸ: = தமோ குணத்தின்

ப²லம் = பலன்

சத்வ குணமுடைய  நிர்மலத் தன்மையே நல்ல செய்கையின் பலன் என்பர்.  ரஜோ குணத்தின் பலன்  துன்பம். தமோ குணத்தின் பலன்  அறிவின்மை.

எல்லோருக்கும் சாத்வீக குணம் மிகுந்து இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எப்படி சாத்வீக குணத்தை அதிகப் படுத்துவது ?

படிப்பதன் மூலம், தியானத்தின் மூலம், சாத்வீக குணத்தை அதிகப் படுத்த  முடியுமா ?

நல்ல காரியங்களின் விளைவு சாத்வீக குணம்.

நீங்கள் சாத்வீக குணம் உங்களுக்குள் நிறைந்து இருக்க வேண்டும் என்று விரும்பினால், உயர்ந்த , நல்ல காரியங்களை செய்து கொண்டிருங்கள்.ஒவ்வொருமுறை நல்ல காரியம் செய்து முடிக்கும்போதும் சாத்வீகம் தலை தூக்கும்.  எப்போதுமே நல்ல காரியங்களையே செய்து கொண்டிருந்தால் தானே சாத்வீகம் ஓங்கி நிறுக்கும்.

நான் எல்லா கெட்ட காரியங்களையும் செய்வேன், எனக்குள் சாத்வீகம் ஓங்கி நிற்க வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.

முதலில் காரியம், பின் குணம். நாளடைவில் குணம் படிந்து விடும். பின் குணத்தில் இருந்து காரியம் பிறக்கும்.

எது நல்ல காரியம், எது கெட்ட காரியம் ?

இங்குதான் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை வருகிறது. குழந்தைகள்  சிறியவர்களாக இருக்கும் பொழுது அவர்களுக்கு நல்லது கெட்டதை சொல்லித் தந்து அவர்களை நல்ல செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அப்படி அவர்கள் செய்து வந்தால், நாளடைவில் அவர்களுக்குள் சாத்வீகம் உயர்ந்து நிற்கும்.

வயதான பின், நல்லவர்களின், உயர்ந்தவர்களின் தொடர்பை நாட வேண்டும். அது நம்மை நல் வழிப் படுத்தும். நல்ல வழியில் சென்று நல்ல காரியங்களைச் செய்து வந்தால் சாத்வீகம் உச்சம் பெரும்.

நல்ல காரியங்களை விடுத்து அல்லாத காரியங்களை செய்தால் ரஜோ குணம் தலை எடுக்கும். அது துன்பத்தில் தள்ளிவிடும்.

நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல , சோம்பேறியாய் இருந்தால், தமோ குணம் தலைப் படும். அது அறிவீனத்தில் கொண்டு சேர்க்கும்.

எனவே, செயல்கள் (அல்லது செயலின்மை) குணங்களை நிர்ணயிக்கிறது.

நல்லதே நினையுங்கள். நல்லதே செய்யுங்கள். உங்களுக்குள்ளும் சாத்வீகம் நிறையும்.

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1416.html

Saturday, March 19, 2016

கீதை - 14.15 - தமோ குணத்தில் இருந்து விடுபட

கீதை - 14.15 - தமோ குணத்தில் இருந்து விடுபட 


रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥१४- १५॥

ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கி ஷு ஜாயதே |
ததா ப்ரலீநஸ்தமஸி மூட யோநி ஷு ஜாயதே || 14- 15||


ரஜஸி = ரஜோ குணம் மிகுந்துள்ள ஒருவன்

ப்ரலயம் = முடிவில்

கத்வா = செல்வான்

கர்ம ஸங்கி ஷு = கர்மத்தில் பற்று உள்ளவர்களுடன்

 ஜாயதே = பிறப்பான், சேருவான்

ததா = அதே போல்

ப்ரலீநஸ் = முடிவில்

தமஸி = தமோ குணம் மிகுந்துள்ளவன்

மூட = அறிவற்றவர்களுடன்

யோநி ஷு ஜாயதே = தோன்றுவான், சேருவான்

ரஜோ குணம் மிகுந்துள்ள ஒருவன், முடிவில் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே,  தமோ குணம் மிகுந்துள்ள முடிவில்  மூடர்களிடையே  தோன்றுகிறான்.

முந்தைய ஸ்லோகத்தில் சாத்வீக குணம் உள்ளவர்கள் பரிசுத்தமான ஞானிகள் உள்ள  இடத்தில் சேர்வார்கள் என்று பார்த்தோம்.

அடுத்து, இந்த ஸ்லோகத்தில், ரஜோ மற்றும் தமோ குணம் உள்ளவர்கள் எங்கு செல்வார்கள்  என்று வியாசர் கூறுகிறார்.

ரஜோ குணம் உள்ளவர்கள், கர்மத்தில் பற்று உள்ளவர்களிடம் சென்று சேர்வார்கள்.

தமோ குணம் உள்ளவர்கள், அறிவற்ற மூடர்களிடம் சென்று சேர்வார்கள்.

இந்த ப்ளாகை படிக்கும் என் நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்டது "ரொம்ப சரி...எனக்கு தமோ குணத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறது. அதில் இருந்து விடுபட விரும்புகிறேன் ...அதற்கு கீதை ஏதாவது வழி சொல்கிறதா "

ஆம் வழி சொல்கிறது. முதல் வழி இந்த ஸ்லோகத்தில். மேலும் பல வழிகளை பின்னால் சொல்கிறது.

தமோ குணத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது ?

தமோ குணம் மூடர்களிடம் சென்று சேர்க்கும் என்றால், மூடர்களிடம் இருந்து விலகினால்  தமோ குணத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

தமோ குணம் உள்ளவர்கள் , தமோ குணம் உள்ளவர்களையே சென்று அடைகிறார்கள்.

சென்று அடைகிறார்கள் என்றால் ஏதோ கொள்ளை கும்பலில் சேர்ந்து தீய வழிகளில் ஈடுபடுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல.

அறிவில் சிறந்தவர்களிடம் சேராமல், மூடர்களிடம் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பது, அவர்களோடு முகநூல் (facebook) , மின்னஞ்சல் (emial) போன்றவற்றில் chat செய்வது, தொலைபேசியில் பேசுவது, அப்படிப்பட்ட குணம் உள்ளவர்களுடன் உணவருந்தச் செல்வது போன்ற சேர்கை.

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்

என்றார் வள்ளுவர். பயன் இல்லாத சொற்களை பேசுபவர்களை விட்டு விலக வேண்டும். பயனுள்ள சொற்களை பேசுபவர்களோடு சேர வேண்டும்.

உயர்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும்.

வார, மாத புத்தகங்களை விட வேண்டும். கொலை, கொள்ளை நாவல்களை விட வேண்டும். அர்த்தமற்ற தொலைக்காட்சி நாடகங்களை விட வேண்டும். அதே போல் சினிமா.

நாளும் நாளும் நாம் விழித்து இருக்கும் நேரங்களில் இது போன்று மூடத்தனமான காரியங்களை நம்மை அறியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம். இவற்றை விட்டு விலக வேண்டும்.

அதன் முதல் படி, இந்தத் தொடர்புகளை குறைக்க வேண்டும்.

ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்களின் சராசரி நாள் எப்படி போகிறது என்று ? யாரோடு போகிறது என்று.

- தொலைக் காட்சி
- அறிவில் குறைந்த நண்பர்களோடு தொடர்பு
- அறிவைக் கூட்டாத வாசிப்பு

படிப் படியாக குறையுங்கள்.

பொழுது தான் போக வேண்டாமா ? தொலைக் காட்சி ஒண்ணு தானே இருக்கிறது என்று நினைத்தால், தொலைக் காட்சியில் நல்ல விஷயங்களைப் பாருங்கள். உடற் பயிற்சி செய்வது, நல்ல உணவுகள் தயாரிப்பது போன்ற நல்ல விஷயங்களை பாருங்கள்.

குப்பைகளை உள்ளே தள்ளிவிட்டு , அறிவும் மனமும் குப்பையாக கிடக்கிறதே என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. நீங்கள் உள்ளே போடுவதுதான் அங்கே இருக்கும். 


சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் உங்கள் நண்பர்களில்  எத்தனை பேர் அறிவில், ஞானத்தில் உயர்ந்தவர்கள் என்று. உயர்ந்தவர்களின்  தொடர்பை நாடுங்கள். அது உங்களை தமோ குணத்தில் இருந்து விடுபட உதவும்.

பட்டியல் இடுங்கள். எதை குறைக்க வேண்டும், எதை கூட்ட வேண்டும் என்று.

முடியும் தானே ?

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1415.html

Friday, March 18, 2016

கீதை - 14.14 - சத்வ குணம் ஓங்க என்ன செய்ய வேண்டும்

கீதை - 14.14 - சத்வ குணம் ஓங்க என்ன செய்ய வேண்டும் 

यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।
तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥१४- १४॥

யதா³ ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத் |
ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே || 14- 14||


யதா= எப்போது

ஸத்த்வே = சத்வ குணம்

ப்ரவ்ருத்தே = மிகுந்து இருக்கும் போது

து = அப்போது

ப்ரலயம் = முடிவு,

யாதி = சென்று சேர்கிறான்

தேஹப்ருத் = உடலை உடையவன்

ததா = அப்போது

உத்தம விதாம் = உயர்ந்தவற்றை அறிந்தவர்கள், ஞானிகள்

லோகா = உலகை

அமலாந் = எ+ மலம் = குற்றம் இல்லாத, தூய்மையான

ப்ரதிபத்யதே = அடைவார்கள்


சத்வ குணம் உயர்ந்து நிற்கும்போது, முடிவு வந்தால், அவன் குற்றமற்ற உத்தம ஞானிகள் வாழும் உலகை அடைகிறான். 

இதைப் படிக்கும் போது ஏதோ, வாழ் நாள் எல்லாம் சத்துவ குணம் மிகுந்து வாழ்ந்தால், இறந்த பின், ஞானிகள் வாழும் சொர்கத்தை அடைவோம் என்பது போல ஒரு தொனிக்கும்..

அப்படி என்றால், இந்தப் பிறவியில் , சத்துவ குணத்திற்கு ஒரு பலனும் கிடையாதா ? இறந்த பின் ஏதோ ஒரு உலகுக்குப் போகவா இந்தப் பாடு ?

அல்ல.

கீதை, அதைக் கடைப் பிடித்தால் இந்த வாழ்விலேயே அதன் பலன்களைக் காணலாம் என்று சொல்கிறது.

அப்படி என்றால், இந்த சுலோகத்திற்கு என்ன அர்த்தம் ?

நாம் சாத்வீக குணத்தில் எப்போதும் உயர்ந்து நின்றால்,  நாம் வாழ்வில் ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்துக்குப் போகும் போது, நம்மை அறியாமலேயே நாம் நல்லவர்களோடு சேர்ந்து கொள்வோம்.

எப்படி என்று பார்ப்போம்.

ஒரு ஆண் , குழந்தயாக இருக்கிறான், பின் பள்ளி செல்லும் மாணவனாக மாறுகிறான், பின் கல்லூரி செல்லும் வாலிபனாகிறான், பின் வேலைக்குப் போகிறான், காதலன், கணவன், தகப்பன், தாத்தா என்று வாழ்வில் பல கட்டங்களைக் கடக்கிறான்.

பெண்ணும் அப்படியே.

சாத்வீகம் உச்சம் பெற்று இருந்தால், தானாகவே நல்லவர்களின் கூட்டத்தை நோக்கி நகர்வோம்.

நல்ல மாணவர்களின் சேர்கை. நல்ல பள்ளிக் கூடம், நல்ல மார்க், நல்ல கல்லூரி, நல்ல நிறுவனத்தில் வேலை, நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் என்று வாழ்க்கை நல்லவைகளை நோக்கியே நகரும்.

உங்கள் வாழ்க்கையை சற்று பின்னோக்கிப் பாருங்கள்.

சாத்வீகம் உச்சம் பெரும் நேரங்களில், நீங்கள் நல்ல உயர்ந்தவர்களின் பேச்சை கேட்கப் போய் இருப்பீர்கள், நல்ல புத்தகங்களை  வாசிக்கத் தொடங்கி இருப்பீர்கள்.

சாத்வீகம் உச்சம் பெறும்போது மனம் உயர்ந்தவைகளை நோக்கி நகரும்.

சாத்வீகம் , உங்களை நல்லவர்கள்பால் சேர்த்து , மேலும் பல நன்மைகளை கொண்டு தரும்.

இதையே சற்று வேறு கோணத்தில் சிந்தித்தால், நல்லவர்களோடு சேரும்போது சாத்வீகம் தூண்டப் படும்.

இதைத்தான் நம் இலக்கியங்கள் படித்துப் படித்து சொன்னன. அடியார்களோடு சேர்ந்து இருப்பது மிக மிக உயர்ந்தது என்று.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று


என்பார் அவ்வையார்.

சாத்வீக குணம் மேலும் மேலும் ஓங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

குற்றமற்ற தூயவர்களோடு சேர வேண்டும். அவர்களோடு பழக வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

தேடுங்கள் , அப்படிப்பட்ட நல்லவர்களை.

அந்தத் தேடலே, சாத்வீகத்தின் தொடக்கம்தான்.

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1414.html )

Thursday, March 17, 2016

கீதை - 14.13 - தமோ குணத்தின் வெளிப்பாடு

கீதை - 14.13 - தமோ குணத்தின் வெளிப்பாடு 


अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥१४- १३॥

அப்ரகாஸோ ப்ரவ்ருத்திஸ் ச ப்ரமாதோ  மோஹ ஏவ ச |
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந || 14- 13||


அப்ரகாஸ = அ + பிரகாஸ. = பிரகாசம் இல்லாமல்; வெளிச்சம் இல்லாமல்

அப்ரவ்ருத்தி = அ + ப்ரவர்த்தி = முயற்சி இன்றி.

ச = மேலும்

ப்ரமாதோ = உன்மந்தம் அடைந்து

மோஹ = மயக்கம்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

தமஸ் = தமோ குணத்தின்

யேதாநி = அதுவே

ஜாயந்தே = உருவாகிறது

விவ்ருத்தே = பெருகி

குருநந்தந = குருகுலத்தவனே


தமோ குணம் ஓங்கி இருக்கும்போது ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் என்பவை  பிறக்கும்.


வாழ்வில் ஏன் நாம் முன்னேன்றம் அடையாமல் இருக்கிறோம் என்றால் தமோ குணம்தான் காரணம்.

முதலாவது, ஒளியின்மை. ஒளியின்மை என்றால் தெளிவு இல்லாமல் இருப்பது. இதுவா , அதுவா என்று தெரியாமல் குழம்புவது. தவறு எது சரி எது என்று தெரியாமல்  இருப்பது.

ஒரு முடிவு எடுக்க முடியாமல் திகைத்து குழம்பிப் போய் இருப்பது.

அந்த வீட்டை வாங்கலாமா வேண்டாமா ? இந்த வேலையை விட்டு விட்டு இதை விட பெரிய வேலைக்கு போவோமா ? அயல் நாட்டில் வேலை , அங்கே போகலாமா ? இந்த course  படிக்கலாமா அல்லது அந்த course படிக்கலாமா ?வேலையை விட்டு விட்டு தொழில் தொடங்கலாமா ? இப்படி எத்தனையோ முடிவுகளுக்கு நடுவில் முடிவு எடுக்க முடியாமல் பேசாமல் இருந்து விடுவது தமோ குணத்தின் இயல்பு.  அறிவு கூர்மையாக இல்லாமல் மந்த புத்தியாக இருப்பது.

இரண்டாவது, முயற்சி இன்மை. எதையும் தள்ளிப் போடுவது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நாளை செய்யலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் குணம். உண்பதும் உறங்குவதும் தான் வேலையாக இருக்கும்.

முதலில் முடிவு எடுப்பது இல்லை. ஒரு வேளை முடிவு எடுத்துவிட்டாலும், அதை செயல் படுத்துவது இல்லை.

எதிலும் ஆர்வம் இன்றி இருப்பது.

மூன்றாவது, இப்படி முடிவு எடுக்காமல், வேலை செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் என்ன ஆகும் ? ஒரு நாள் அவசர அவசரமாக முடிவு எடுக்க வேண்டி வரும். அப்போது , அவசரத்தில் தவறுதலாக போய் முடியும்.

ஒரு மாணவன், இதைப் படிப்பதா, அதைப் படிப்பதா என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறான் என்று வைத்துக் கொள்வோம். பின் ஏதோ ஒன்றை படிக்க முடிவு செய்கிறான். ஆனால், படிப்பது இல்லை. பரீட்சை வந்தே விடுகிறது.  அவன் எப்படி எழுதுவான் ? ஏதோ எழுதிவிட்டு வருவான்....தப்பும் தவறுமாக.

எனவே, முடிவு எடுக்காமல் இருப்பது, எடுத்த பின் செயல் படுத்தாமல் இருப்பது என்ற இந்த இரண்டும் தவறான விளைவுகளையே தோற்றுவிக்கும் .

இது தமோ குணத்தின் மூன்றாவது வெளிப்பது. தவறு செய்வது.

நான்காவது, மயக்கம். மயக்கம் என்றால் தவறாக புரிந்து கொள்வது. தன்னைப் பற்றி, தன்னை சுற்றி உள்ள உலகை பற்றி ஒரு தெளிவற்ற, நாளும் மாறும் ஒரு  எண்ணத்தைக் கொண்டு இருப்பது. நான் யார், என் திறமை என்ன , என் வலிமை என்ன என்று அறியாமல் மயங்கிக் கிடப்பது.

யாரும், ஒரே குணத்தின் பிடியில் எப்போதும் இருப்பது இல்லை. சில சமயம் சில குணங்கள் தலை தூக்கி நிற்கும்.

எனவே, எதையும் மாற்ற முடியும். யாரையும் மாற்ற முடியும்.

 நீங்களோ,உங்களைச் சார்ந்தவர்களோ (கணவன், மனைவி, பிள்ளைகள் ) தமோ குணத்தின் பிடியில் இருந்தால் அதில் இருந்து எப்படி வெளி வருவது , ஒவ்வொரு குணமும் எதில் கொண்டு சேர்க்கும் என்று பின் வரும் சுலோகங்களில் சிந்திக்க இருக்கிறோம்.


(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1413.html )

Wednesday, March 16, 2016

கீதை - 14.12 - பதற்றம், ரஜோ குணம்

கீதை - 14.12 - பதற்றம், ரஜோ குணம் 


लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥१४- १२॥

லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஸ²ம: ஸ்ப்ருஹா |
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப || 14- 12||


லோப: = பேராசை

ப்ர வ்ருத்தி = சிறந்தவற்றை பெருக்குவது.

ஆரம்ப: = தொடங்குவது

கர்மணாம் = வேலை செய்வது

அஸ²ம: = சம நிலை குலைவது (சமம், அசமம்)

ஸ்ப்ருஹா  = பொறாமை, ஏக்கம்

ரஜஸ் = ரஜோ குணத்தின்

யேதாநி = இவையே

ஜாயந்தே = பிறக்கின்றன (ஜன் = பிறப்பது)

விவ்ருத்தே = பெருகும்போது, அதிகமாகும் போது

பரதர்ஷப  =பாரதக் காளையே


பேராசை, முயற்சி, தொழிலை தொடங்குவது,  அமைதியின்மை, பொறாமை அல்லது ஏக்கம்  இவை ரஜோ குணம் வலிமை பெற்று இருக்கும் போது தோன்றுகிறது. 

எப்போதாவது தூக்கம் வராமல் கஷ்டப் பட்டு  இருகிறீர்களா ? பதற்றமாய் இருந்து இருக்கிறீர்களா ? மனதில் அமைதி இல்லமால் தவித்து இருகிறீர்களா ?

அப்படி என்றால், ரஜோ குணம் மிகுந்து நிற்கிறது என்று பொருள்.

ரஜோ குணம் எப்படி தொடங்கி எப்படி பெரிதாகுகிறது என்று இந்த சுலோகம் விளக்குகிறது.

முதல் படி, பேராசை. தனக்கு உரிமை இல்லாததன் மேல் தோன்றும் ஆசை. தன்  அளவுக்கு மீறிய ஆசை. காண்பதெல்லாம் வேண்டும் என்ற ஆசை. எதைப் பார்த்தாலும்  அதை தனக்கு உரியதாக கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம். புது கார், பெரிய வீடு, நல்ல டிவி, புது fashsion நகை, என்று எதைப் பார்த்தாலும் அது நமக்கு இருந்தால் நல்லா இருக்குமே என்ற எண்ணம் ரஜோ குணத்தின் விதை.

 அடுத்த கட்டம், முயற்சி. அதை அடைய முயற்சிப்பது. அளவுக்கு அதிகமான ஆசை  இருந்தால், அளவுக்கு அதிகமான முயற்சியும் தேவைப்படும். அல்லது ஏதாவது  குறுக்கு வழியை தேட வேண்டி இருக்கும்.

அடுத்து, முனைப்பு. புதியதாய் ஏதாவது தொடங்குவது. இருக்கின்ற வேலையும்  தொழிலும் போதாது. இதுக்கும் மேலே வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து  புதியதாய் ஏதாவது தொடங்குவது.

இதனால் என்ன ஆகும் ?

அமைதி இன்மை, பதற்றம் உண்டாகும். மன அமைதி போகும்.

இவை ரஜோ குணத்தால் விளைவது.

ஆசைகள் மனதில் எழும் போது   கவனமாய் இருங்கள். ஒவ்வொரு ஆசையும், மேலும்  அதிகமான வேலைப் பளுவை கொண்டு வரும். புதிதாக எதையாவது செய்யச் சொல்லும்.   இருக்கின்ற வேலையை விடு, புது தொழில் தொடங்கு என்று  கழுத்தைப் பிடித்துத் தள்ளும்.

அப்படி நீங்கள் புதியதாய் ஒன்றை தொடங்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள்   ரஜோ  குனாத்தால் உந்தப் பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கவனாமாக இருங்கள்.

அமைதி இன்மையும், பதற்றமும், ஏக்கமும் ரொம்பத் தொலைவில் இல்லை.

அழையா விருந்தாளியாக அவைஉங்கள் விலாசம் தேடி வந்து கொண்டே இருக்கின்றன.

சரி, ஆசைப் படாமலேயே இருக்க முடியுமா ? வாழ்வில் முன்னேற்றம் என்று ஒன்று வேண்டாமா ?  புதியதாய் ஏதாவது முயன்றால் தானே வாழ்கை முன்னேறும், சமுதாயம் முன்னேறும். முயற்சியே இல்லாமல் இருந்தால் எப்படி ?

முயற்சி தேவைதான், புதியதாய் ஏதாவது செய்யத்தான் வேண்டும் ஆனால் அது பேராசையினால் தூண்டப் பட்டு செய்வதாக இருக்கக் கூடாது. பொறாமையால் விளையக் கூடாது.

சிந்தித்துப் பாருங்கள் உங்களின் எத்தனை முயற்சிகள் பொறாமையால், பேராசையால் விளைந்தவை என்று.

அடுத்தது தமோ குணம் பற்றி பார்ப்போம்.

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1412.html )

கீதை - 14.11 - வாசலில் வெளிச்சம்

கீதை - 14.11 -  வாசலில் வெளிச்சம்


सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥१४- ११॥


ஸர்வத் வாரேஷு தேஹே ஸ்மிந்ப்ரகாஸ  உபஜாயதே |
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத் விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத || 14- 11||

ஸர்வ = அனைத்து

த்வாரேஷு = வழிகளிலும்

தேஹே = தேகமுடைய

அஸ்மிந் = இதில்

ப்ரகாஸ = பிரகாசம்

உபஜாயதே = வெளிப் படுமானால்

ஜ்ஞாநம் = அறிவு , ஞானம்

யதா = அப்போது

ததா = அதனால்

வித்யாத் = அறிவு

விவ்ருத்தம் = மேலதிகமாகி

ஸத்த்வம்  = சத்வ குணம்

இதி = எனவே

யுத = நிச்சயமாக


உடம்பில் அனைத்து வாயில்களிலும் ஞானத்தின்  ஒளி உருவாகுமாயின்  அப்போது சத்வ குணம் மேலோங்கி இருக்கிறது என்று அறிந்து கொள்.

மனிதனை ஆறறிவு கொண்டவன் என்கிறோம். அது என்ன ஆறு அறிவு ? எது முதல் அறிவு ? எது இரண்டாம் அறிவு ?

இதற்கு விடை காண வேண்டும் என்றால் அறிவு எப்படி வருகிறது என்று சிந்திக்க வேண்டும்.

நமது புலன்கள் நமக்கு அறிவை கொண்டுவந்து தருகின்றன.

இது கருப்பு, இது உயரம், அது சுடும், இது குளிர்ச்சி, இது இனிமையான இசை, இது இனிப்பு பதார்த்தம் என்று நம்மை சுற்றியுள்ள உலகில் உள்ள அறிவை நமக்கு நம் புலன்கள் கொண்டு வந்து தருகின்றன.

ஆசிரியர் சொல்லக் கேட்டு அறிந்து கொள்கிறோம். கேட்பதற்கு செவி துணை செய்கிறது. அது ஒரு புலன்.

சிலவற்றை பார்த்து தெரிந்து கொள்கிறோம். பார்பதற்கு கண் உதவுகிறது. அது ஒரு புலன்.

இப்படியாக நாம் நமது ஐந்து புலன்கள் வழியாக அறிவைப் பெறுகிறோம்.

ஒரு புலன் வேலை செய்யாவிட்டால், அதன் மூலம் வரும் அறிவு நமக்கு இருக்காது.

உதாரணமாக, கண் பார்வை இல்லாத ஒருவர், நிறம் என்றால் என்ன, எது என்ன நிறம் என்ற அறிவைப் பெறவே முடியாது.

எனவே, ஐந்து புலன்கள் மூலம் அறியும் அறிவு ஐந்தறிவு.

அப்படியென்றால் ஆறாவது அறிவு எங்கிருந்து வந்தது ?

இந்த ஐந்தும் இல்லாமல், நாம் மனதால் நினைத்தும் , கற்பனை செய்தும் சில அறிவைப் பெறுகிறோம்.

உதாரணமாக, ஒரு மலை மேல் புகை வருகிறது என்றால் அங்கே நெருப்பு இருக்கும் என்று   அறிகிறோம். எப்படி ? நெருப்பை பார்க்கவில்லை, நெருப்பின் சூடு நம்மைத் தொடவில்லை. அதனால் கருகிய மணமும் நம் நாசியைத் தொடவில்லை. இருந்தும், அங்கே நெருப்பு இருக்கும் என்று அறிகிறோம்.

அது மனத்தால் அறிவது.

ஐந்த புலன்கள் + ஒரு மனம் சேர்த்தால் நமக்கு ஆறறிவு உள்ளவர்கள் என்று பெயர் வந்தது.

கண் இல்லாத ஒருவர் , காது கேளாத ஒருவர் ஐந்தறிவு உள்ளவர்தான்.

விலங்குகளுக்கு மனதால் சிந்தித்து அறியும் அறிவு இல்லை, அதனால் அவை ஐந்தறிவு உள்ளவை என்று கூறுகிறோம்.

மனம் அசைவதால் மனிதன் என்று பெயர்.

நன்றாக கூர்ந்து கவனித்தால் தெரியும், குழந்தைகளை அது , இது என்று தான் சொல்வோம். அதுக்கு பசிக்குது போல, அதுதான் அது அழுகுது என்கிறோம்.

ஏன் ?

அவனுக்கு பசிக்கிறது என்றோ, அவளுக்கு பசிக்கிறது என்றோ சொல்வதில்லை. ஏன் ? அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று தெரியாமல் இல்லை. தெரியும். இருந்து அதை அது இது என்று ஒரு விலங்கை குறிப்பது போலவே கூறுவோம்.

ஏன் என்றால், குழந்தைக்கு இன்னும் மனம் வேலை செய்யத் தொடங்கவில்லை.

அதே போல இறந்த மனிதனை , இன்னும் பாடிய எடுக்கலையா என்றுதான் கேட்ப்பார்கள். இன்னும் அவரை எடுக்கலையா என்று கேட்பது இல்லை. மனம் நின்றால் மனிதன் என்பது இல்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

கீதை என்ன சொல்கிறது - அறிவு வரும் வாயில்கள் எல்லாம் ஞானத்தால் ஒளி பெற்றால் , அங்கே சாத்வீகம் உயர்ந்து நிற்கிறது என்று பொருள்.

ஒளி பெற்றால் என்றால், ஏதோ யாரோ டார்ச் அடிக்கிறார்கள் என்று இல்லை.

வெளியில் இருந்து அறிவு உள்ளே வரும்போது, உடலின் உள் நுழையும் அந்த இடம், ஞானத்தால் விளங்கப் பெற வேண்டும்.

உலகை அறிவு பூர்வமாக பார்க்க வேண்டும். உணர்ச்சி பூர்வமாக பார்க்கக் கூடாது.

எது சரி, எது தவறு என்று அறிவு சொல்ல வேண்டும்.

ஏதோ ஒரு கோலா பானம் குடிக்கிறோம் என்றால், நாக்கு சொல்கிறது நன்றாக இருக்கிறது என்று. இது சரிதானா , இது நல்லதுதானா என்று அறிந்து கொண்டால் அதை குடிக்க மாட்டோம். சுவை என்ற உணர்வு , நாக்கு என்ற வாசல் வழியாக உள்ளே செல்லும் போது நல்லது கெட்டது உணரும் ஞானத்தின் ஒளி நமக்கு வழி காட்ட வேண்டும்.


உள்ளே அனுப்பும் எந்த அனுபவத்தையும், உணர்ச்சியையும் அறிவின் மூலம் ஒளியேற்றி, ஆராய்ந்து அனுப்ப வேண்டும்.

அது மட்டும் அல்ல, நாம் தெரியாமல் கெட்டுப் போன ஒரு உணவை உண்டுவிட்டால், நம் உடல் வாந்தி, வயிற்று இளைச்சல் என்று அந்த கெட்ட உணவை வெளியேற்றி விடும்.

ஆனால், தவறான ஒன்றை நம் மூளைக்குள் போட்டுவிட்டால், அதை வெளியே அனுப்ப முடியாது. ஒரு முறை உள்ள சென்று விட்டால், அது நிரந்தரமாய் நிற்கும். எனவே, எதை உள்ளே அனுப்புகிறோம் என்று அறிந்து தெளிந்தே அனுப்ப வேண்டும்.

அதைத்தான் கீதை சொல்கிறது...உடலின் அனைத்து வாயில்களிலும் ஞானத்தின் ஒளி ஊட்டப்பட்டால்....என்று.

அப்படி அறிவு பூர்வமாக சிந்தித்து, உலகை நாம் அறியும் போது சாத்வீக குணம்  உயர்ந்து நிற்கிறது என்று பொருள்.


உணர்வால் உந்தித் தள்ளப் படும்போது அறிவின் துணை கொண்டு அதை வெல்ல வேண்டும்.

சீதை என்ற அழகிய  பெண்ணை அடைய விரும்பினான் இராவணன். அது சரியல்ல என்ற ஞானம் வேலை செய்திருந்தால் அழிந்திருக்க மாட்டான்.

சாத்வீகம் மேலோங்கி நின்றால்,  அனுபவங்களும்,உணர்சிகளும் அறிவினால் விளக்கம்  செய்யப்  படும்.

 ரஜோ,தமோ குணங்களைப் பற்றி   அடுத்து வரும் சுலோகங்களில் சிந்திப்போம்.

(For other slogas , http://bhagavatgita.blogspot.com/2016/03/1411.html )

Tuesday, March 15, 2016

கீதை - 14.10 - முக்குண கலப்பு

கீதை - 14.10 - முக்குண கலப்பு 


रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥१४- १०॥

ரஜஸ்தமஸ்சாபி பூய ஸத்த்வம் பவதி பாரத |
ரஜ: ஸத்த்வம் தமஸ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா² || 14- 10||



ரஜஸ் = ரஜோ குணம்

தமஸ் = தமோ குணம்

சா = மேலும்

அபிபூய = மேற்செல்கிறது

ஸத்த்வம் = சத்வ குணம்

பவதி = ஆகிறது

பாரத = பாரத குலத் தோன்றலே

|
ரஜ:= ரஜோ குணம்

ஸத்த்வம் = சத்வ குணத்தையும்

தமஸ் = தமோ குணத்தையும்

ச = மேலும்

எவ = ஆகிறது

தம: = தமோ குணம்

ஸத்த்வம் = சத்வ குணம்

ரஜஸ் = ரஜோ குணம்

ததா = மேலும்




பாரதா, சில சமயங்களில் சத்வ குணம், ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி தான் மேலெழுகிறது. அதே போல் சில சமயம், ரஜோ குணம் சத்வ மற்று தமோ குணத்தை அடக்கி மேலெழுகிறது. அதே போல், சில சமயம், தமோ குணம் சத்வ மற்றும் ரஜோ குணத்தை அடக்கி மேலெழுகிறது.

எந்த ஒன்று மனிதனும் நல்லவனா அல்லது கெட்டவனா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று திகைப்போம்.

நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா என்று கேட்டால் ?

பெரும்பாலும், நல்லவர் என்றே பதில் சொல்லுவோம்.

உண்மையில் நீங்கள் நல்லவரா ?

உங்களை, உங்களுக்கு முழுவதும் தெரியுமா ?

இதற்கு விடை தெரியாது என்பதுதான்.

ஏன் என்றால், நல்லவனும், கெட்டவனும் எல்லோருக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறான். எப்போது யார் வெளி வருவார் என்று யாருக்கும் தெரியாது.

நல்லவனுக்குள் கெட்டவனும், கெட்டவனுக்குள் நல்லவனும் மறைந்து கிடைக்கிறார்கள்.

கைகேயி நல்லவளா ? கெட்டவளா ?

நல்லவளாகத்தான் இருந்தாள். கூனி சொல் கேட்டு கெட்டவளாக ஆனாள் .

இது எப்படி நிகழ்கிறது ?

கீதை சொல்கிறது ....நமக்குள் சத்துவ, ரஜோ மற்றும் தமோ குணங்கள் நிறைந்து கிடக்கிறது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு குணம் வெளிப்பட்டு நிற்கிறது.

ஒரு குணம் வெளிப்பட்டு நிற்கும் போது மற்ற இரண்டு குணங்களும் அடங்கிப் போய் விடுகின்றன.

மறைந்து போவது இல்லை, அடங்கிப் போய் விடுகின்றன.

அடங்கிப் போன ஒன்று , மற்றொரு சமயத்தில் உத்வேகம் கொண்டு எழும். நீருக்குள் அமுக்கி பிடித்து வைத்திருந்த பந்து கையை எடுத்தவுடன் துள்ளி எழுவது போல.

குணங்கள் ஒன்றை ஒன்று அழுத்தி மற்றவை வெளிப்படுகின்றன என்பது செய்தி.

இதில் இருந்து நாம் பெரும் பாடம் என்ன ?

முதலாவது, நல்லவன் என்றும் கெட்டவன் என்றும் யாரும் இல்லை. குணங்கள் மிகுந்தும், குறைந்தும் வெளிப்படுவதால் நல்லவனாகவும் கெட்டவனாகவும் தெரிகிறோம். யாரையும், முழுமையாக நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ கூறி விட முடியாது.

இரண்டாவது, அவனா இப்படி செய்தான் ? இருக்காதே, அவன் ரொம்ப நல்லவன் ஆயிற்றே , என்று யார் மேலும் சந்தேகப் பட வேண்டாம். நீங்கள் மிக மிக  நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருப்பவன், உங்களால் நினைத்துக் கூட பார்க்க  முடியாத ஒரு கெட்ட காரியத்தை செய்யல்லாம். எல்லாம் குணங்களின் லீலை.

மூன்றாவது, குணங்கள் ஒவ்வொன்றும் மிஞ்சி நிற்க போட்டி போடுகின்றன. நல்லவனாய் இருப்பவனுக்குள் இருக்கும் கெட்ட குணம் நேரம் பார்த்து இருக்கும் வெளிப்பட. யாரையும் முழுவதும் நம்புவது முடியாத காரியம்.

நான்காவது, இந்த குணங்களின் அலைகள் நம் பிரயத்தனத்தில் இல்லை. இருந்தால் எப்போதும் சாத்வீக குணத்திலேயே இருந்து விடுவோமே. எந்த குணம் எப்போது மிஞ்சி நிற்கும் என்று நமக்குத் தெரியாததால், எப்போது நாம் நல்லவனாக  இருப்போம், அல்லது வேறு விதமாக இருப்போம் என்பது நம் கையில் இல்லை.

ஐந்தாவது, மிக முக்கியமான ஒன்று....குணங்கள் மேல் எழுவதும், அடங்கிப் போவதும் நம் கையில் இல்லை என்பதால் எப்போது எது நிகழும் என்று நமக்குத் தெரியாது. எனவே, குணங்களைத் தாண்டி நாம் சென்று விடவேண்டும். குணங்களின் பிடியில் இருந்து நாம் விடுபட வேண்டும். சாத்வீகம் நல்ல குணம் தானே என்று இருந்தால், மற்றொரு சமயத்தில் சாத்வீகத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு, தமோ குணம் மேலெழுந்து நிற்கலாம். எனவே, குணங்களின் பிடியில் இருந்து விடுதலை அடைய வேண்டும்.


மனவியலின் ஆழமான கருத்துகளை இரண்டு வரியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு சொல்லி இருக்கிறது கீதை.

எப்படி குணங்களின் ஆதிக்கத்தை அறிந்து கொள்வது ? எப்படி குணங்களின் பிடியில் இருந்து விடுபடுவது ?

உங்களைப் போலவே நானும் ஆவலாய் இருக்கிறேன் அறிந்து கொள்ள.

வாருங்கள் , மேலும் பயணிப்போம்.

(For other slogas from Gita...http://bhagavatgita.blogspot.in/2016/03/1410.html )



















Monday, March 14, 2016

கீதை - 14.9 - குணமெனும் சங்கிலி

கீதை - 14.9 - குணமெனும் சங்கிலி 


सत्त्वं सुखे संजयति रजः कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तमः प्रमादे संजयत्युत ॥१४- ९॥

ஸத்த்வம் ஸுகே² ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பா⁴ரத |
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே³ ஸஞ்ஜயத்யுத || 14- 9||


ஸத்த்வம் = சத்வ குணம்

ஸுகே = சுகத்தில்

ஸஞ்ஜயதி = பிணிக்கிறது

ரஜ: = ரஜோ குணம்

கர்மணி = செயல்களில்

பா⁴ரத = பாரதக் குலத் தோன்றலே

ஜ்ஞாநம் = ஞானம்

அமாவ்ருத்ய = சூழ்கிறது

 து = ஆனால்

 தம: = தமோ குணம்

 ப்ரமாதே = குழப்பத்தில்

 ஸஞ்ஜயத் யுத = பிணைக்கிறது


சத்வம் குணம் இன்பத்தின் மூலம் நம்மை பிணைக்கிறது.  பாரதா, ரஜோகுணம் செய்கையின் மூலம் நம்மை பிணைக்கிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து  மயக்கத்தில் பிணிக்கிறது.


சத்வ குணம் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தருவதன் மூலம் நம்மைக் கட்டுப் படுத்துகிறது.

ரஜோ குணம் நம்மை செயலில் மூழ்க வைத்து கட்டிப் போடுகிறது.

தமோ குணம் அறிவை மயங்க வைத்து, உள்ளுர்ணர்வு சொல்ல்வதைக் கேட்டகாமல் குழப்பத்தில் நம்மை கட்டிப் போடுகிறது.

தங்கச் சங்கிலியாக இருந்தாலும் , சங்கிலி, சங்கிலிதானே.

முன்பே சொன்னதுதான். மீண்டும் ஒரு முறை வலியுறுத்துவதன் நோக்கம், குணங்கள் பிணைக்கின்றன என்பதை நினைவூட்டத்தான்.

இந்த குணங்கள் எப்படி செயல்படுகின்றன, இவற்றைத் தாண்டி எப்படி போவது  என்பது பற்றி பின்னே வரும் சுலோகங்களில் காணலாம்.

(For other slogas: http://bhagavatgita.blogspot.in/2016/03/149.html )




Saturday, March 12, 2016

கீதை - 14.8 - தமோ குணம்

கீதை - 14.8 - தமோ குணம் 


तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत ॥१४- ८॥

தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்³தி⁴ மோஹநம் ஸர்வதே³ஹிநாம் |
ப்ரமாதா³லஸ்யநித்³ராபி⁴ஸ்தந்நிப³த்⁴நாதி பா⁴ரத || 14- 8||

தம = தமோ குணம்

து = மேலும்

அஜ்ஞாநஜம் = அறிவீனத்தில் இருந்து பிறக்கிறது

வித்தி = அறி

மோஹநம் = மயக்கம், குழப்பம்

ஸர்வ = அனைத்து

தேஹிநாம் = இணைந்துள்ள, பிணைத்துள்ள, சேர்ந்துள்ள
|
ப்ரமாதா = பித்து பிடித்து, மனக் குழப்பம் அடைந்து,

அலஸ்ய = சோம்பேறித்தனத்தில்

நித்ராபி = தூக்கத்தில்

தந் = அது

நிபத்நாதி = பிணைக்கிறது

பாரத = பாரத குலத் தோன்றலே

தமோகுணம் அறிவீனத்தில் பிறக்கிறதென்று அறிந்து கொள்.  இது அனைத்து உயிர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி, தவறு, சோம்பல் மற்றும் உறக்கத்தால் கட்டுப் படுத்துகிறது. 


கீதையை பலர் உண்மையிலேயே அதை வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும் என்றுதான் படிக்கிறார்கள்.

ஆனால், படிக்க படிக்க...அதில் உள்ளது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வருமா என்று சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இதெல்லாம் ஒரு வேதாந்ததுக்கு, வாதத்துக்கு சரியாக இருக்கும், நடைமுறை சாத்திய கூறு குறைவு என்று தள்ளி வைத்து விட்டு வேலையைப் பார்க்க போய் விடுகிறார்கள்.

இது அறியாமையினால் விளைவது.

இரண்டாவது சில பேர், நல்லாத்தான் இருக்கு, ஆனா இப்ப முடியாது. பிள்ளைகளை படிக்க வைக்கணும், அவங்க நல்ல வேலைக்குப் போகணும், அவங்களுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கணும், அப்பா அம்மாவைப் பார்க்கணும் ....இது எல்லாம் முடிந்த பின் பார்க்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு விடுகிறார்கள்.

இது சோம்பேறித்தனத்தால் விளைவது. இப்ப வேண்டாம், அப்புறம் செய்யலாம் என்று  தள்ளிப் போடும் குணம்.

இன்னும் சில பேர், செய்ய முயற்சிப்பார்கள், முழுவதும் இல்லை, அரைகுறையாக செய்வது, பின் சரியாக வரவில்லை என்று விட்டு விடுவது. இது தூக்கத்தால் வருவது.

வாழ்க்கையில் எதை எதையோ தேடி அலைகிறோம்.

குடும்பம், கணவன்/மனைவி, பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, மற்ற சுற்றம் என்று அவர்களின் வாழ்வாதாரத்திற்கு , முன்னேற்றத்திற்கு என்று அலைகிறோம்.

செல்வம், புகழ், அதிகாரம், என்று இவைகள் வந்தால் வாழ்கை இனிமையாக இருக்கும் என்று  நினைத்து அவற்றின் பின்னால் அலைகிறோம்.

அன்பு, காதல், காமம், பக்தி, நேசம் என்று பல்வேறு உணர்வுகளால் உந்தப் பட்டு அவை இழுக்கும் இழுப்புகெல்லாம் இழுபட்டு அவற்றின் பின்னால் அலைகிறோம்.

எது சரி, எது தவறு என்று தெரிவது இல்லை. ஒவ்வொரு நாளும்  ஒவ்வொன்று உந்த அவற்றால் அலைகழிக்கப் படுகிறோம்.

வேண்டியதை அடைந்த பின் , இதற்கா இத்தனை அலைந்தோம் என்று வருந்துகிறோம்.

எதை அடைய வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்று அறிவில்லாமல் செய்து கொண்டே இருக்கிறோம்.

நாம் செய்வது சரிதானா என்று கேள்வி கூட கேட்பது இல்லை. இயந்திரம் போல  செய்து கொண்டிருக்கிறோம்.

இவை எல்லாம் தமோ குணத்தின் வெளிப்பாடு.

அறிவற்ற செய்கை.
மயக்கம், குழப்பம், சோம்பல், தூக்கம், போன்றவற்றில் ஆழ்ந்து விடுவது.

எப்போதெல்லாம் நாம் அறிவின் துணையின்றி காரியம் செய்கிறோமோ, செய்யும் காரியத்தில் தெளிவின்றி செய்கிறோமோ, செய்ய வேண்டிய காரியத்தை  தள்ளிப் போடுகிறோமோ...அப்போதெல்லாம் தமோ குணத்தின் பிடியில் இருக்கிறோம் என்று அர்த்தம்.

இந்த குணங்களைப் பற்றி மேலும் பார்ப்போம்.

(For other slogas: http://bhagavatgita.blogspot.in/2016/03/148.html )

கீதை - 14.7 - ரஜோ குணம்

கீதை -  14.7 - ரஜோ குணம்


रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥१४- ७॥

ரஜோ ராகா³த்மகம் வித்³தி⁴ த்ருஷ்ணாஸங்க³ஸமுத்³ப⁴வம் |
தந்நிப³த்⁴நாதி கௌந்தேய கர்மஸங்கே³ந தே³ஹிநம் || 14- 7||

ரஜோ = ரஜோ குணம்

ராகா³த்மகம் = ஆர்வத்துடன் கூடிய விருப்பம்

வித்³தி = அறிந்து கொள்

த்ருஷ்ன = தாகம்

ஸங்க = சேர்தல் , கூடுதல்

ஸமுத்³ப⁴வம் = உருவாகிறது

தந் = அது

நிபத்நாதி = கட்டுதல், பிணைத்தல்

கௌந்தேய = குந்தியின் மகனே

கர்மஸங்கேந = செயல்களோடு சேர்வதனால்

தேஹிநம் = யார் உடலை கொண்டு இருக்கிறானோ


ரஜோகுணம் விரும்பும் இயல்பு உடையது.   ஆசையின் சேர்க்கையால் பிறப்பது. . குந்திமகனே, தொழிலின் சேர்க்கையால் நம்மை கட்டுப் படுத்துகிறது.

ரஜோ குணம் என்றால் என்ன ?

ஆர்வம், கிளர்ச்சி, ஆனந்தம், இன்பம் இவற்றை நாடுவது ரஜோ குணம்.

நாடுவது என்றால் ஏதோ கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பெரிய நட்டம் ஒன்றும் இல்லை என்பது போல இல்லை.

தண்ணீர் தாகம் கொண்டவன் எப்படி நீரை நாடுவானோ அதுபோன்ற நாட்டம் அது.

பொன், பொருள், பெண், செல்வாக்கு, புகழ் என்று எதையும் ஒரு உணர்ச்சி பூர்வமாக, மிகுந்த ஆவலுடன் தேடுவது ரஜோ குணம்.

தேடுவதில் உள்ள தாகம், கிடைத்த பின் அதை தக்கவைத்துக் கொள்வதில் உள்ள பற்று இது இரண்டும் ரஜோ குணத்தின் கூறுகள்.

ரஜோ குணம் செயலைத் தூண்டும். நம்மை ஓட வைக்கும். மேலும் மேலும் சேர்க்கச் சொல்லும். இன்பங்களை துயிக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கும்.

எல்லாம் இருந்தும், மாற்றான் மனைவியை தொட்டுப் பார்க்கத் தூண்டியது இராவணின் ரஜோ குணம்.

பரந்த சாம்ராஜ்யத்தில் , ஐந்து வீடு தரமாட்டேன் என்று ஐந்து இலட்சம் வீரர்களை  பலி கொடுத்தது துரியோதனின் ரஜோ குணம்.

வேண்டியது கிடைக்கும் வரை, ஓய்வில்லை , ஒழிச்சல் இல்லை. தேடியது கிடைத்த பின், அடுத்த ஒன்றை தேடத் தூண்டுகிறது.

வீடு வேண்டும், பங்களா வேண்டும், பெரிய கார் வேண்டும்,உலகம் எல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும், என்று ஆசைகளைத் தூண்டி, செயல்பட வைப்பது ரஜோ குணம்.

தேடலின் ஆர்வம்.
அடைந்தவற்றை பாதுகாக்கும் பொறுப்பு என்ற இந்த  இரண்டின் மூலம் அது நம்மை பிணிக்கிறது. கட்டிப் போடுகிறது.

ஒவ்வொரு ஆசையும் ஒரு சங்கிலி.

ஆசையின் மூலம் அடைந்த ஒவ்வொன்றும் ஒரு சங்கிலி.

எத்தனை சங்கிலிகள்.

பேராசை எனும் பிணியில் பிணி பட்டு என்பார் அருணகிரி.

மனைவி, மக்கள், வீடு, கார், டிவி, நிலம், நகை,....என்று எத்தனை சங்கிலிகள்.

எப்போதுதான் இவற்றிலிருந்து விடுதலை அடைவது ?

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/147.html  )



Thursday, March 10, 2016

கீதை - 14.6 - சத்வ குணம்

கீதை - 14.6 - சத்வ குணம் 

तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥१४- ६॥

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸ²கமநாமயம் |
ஸுக²ஸங்கே³ந ப³த்⁴நாதி ஜ்ஞாநஸங்கே³ந சாநக⁴ || 14- 6||

தத்ர = இவற்றுள்

ஸத்த்வம் = சத்வ குணம்

நிர்மலத்வாத் = தூய்மையானது

ப்ரகாஸ²கம் = ஒளி பொருந்தியது

அநாமயம் = ஆரோக்கியமானது


ஸுக= மகிழ்ச்சியானது

ஸங்கேந = இணைக்கக் கூடியது

 ப³த்⁴நாதி = பிணைத்தல்

ஜ்ஞாந = ஞானம்

ஸங்கேந = இணைத்தல்

சா = மேலும்

அநக =  பாவம் அற்றவனே ( அர்ஜுனா )


அவற்றுள்ளே சத்வம், தூய்மையானது (நிர்மலம்) , ஒளி பொருந்தியது, ஆரோக்கியமானது. பாவங்கள் அற்றவனே அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.


நம் முன்னோர்கள் இந்த குணங்களைப் பற்றி மிக மிக ஆழமாக ஆராய்ந்து இருக்கிறார்கள்.

ஒரு பொருள் ஒளி பொருந்தியதாய் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ? அதன் மேல்   விழும் ஒளி சிறப்பாக  , முழுவதுமாக பிரதிபலிக்கப் படுகிறது என்று அர்த்தம்.

எப்போது ஒளி நன்றாக பிரதிபலிக்கும் ? எப்போது ஒரு பொருள் அழுக்கு இல்லாமல், கறை இல்லாமல் சுத்தமாக இருக்கிறதோ அப்போது அது ஒளியை நன்றாக  பிரதிபலிக்கும்.

சத்துவ குணம், நிர்மலமானது. கறை அற்றது. எனவே அது ஒளி பொருந்தியது.

ஆரோக்கியமானது - ஆரோக்கியம் என்றால் இங்கே தீமைகள் அற்றது என்று கொள்ளவேண்டும். உலகில் உள்ள அனைத்து தீமைகளும் முதலில் மனதில் பிறக்கின்றன.  பின் செயல் வடிவம் பெறுகின்றது.  சத்துவ குணம் மிகுந்து நிற்கும் போது, மனதில் தீய எண்ணங்கள் வருவது இல்லை.


சத்துவ குணம் உயர்ந்தது தான். இருந்தும் , அது நம்மை இரண்டு வழிகளில் உலகோடு பிணைக்கிறது.

முதலாவது, ஞானத்தின் சேர்க்கையாலும்.

இரந்தாவது, மகிழ்ச்சியின் சேர்க்கையாலும்.

சத்துவ குணம் மேலிடும் போது  ஞானம் பெருகும். ஞானம் பெருகும் போது மகிழ்ச்சி  பெருகும். ஞானத்தை விட உயர்ந்த இன்பம் இருக்கிறதா என்ன ?

படிக்க படிக்க, அறிய அறிய மேலும் மேலும் இன்பம் உண்டாகும்.

அந்த இன்பம், மேலும் படிக்கத் தோன்றும். சந்தோஷமாக இருப்பதால், இதில் தவறு என்ன என்று கூடத் தோன்றும்.

வியாசர் சொல்கிறார், நல்லதே என்றாலும், இதுவும் நம்மை பிணைக்கும், கட்டிப் போடும். முன்பே பார்த்தோம், குணம் என்றால் கட்டுவது என்று பொருள் என்று.


இதை அறிந்துதான், மாணிக்க வாசகர் கற்பனவும் இனி அமையும் என்றார். படித்தது போதும் என்றார்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

ஞானம் என்பது பாதையாகவும் இருக்க வேண்டும், பலனாகவும் இருக்க எண்டும். அது பாதையாக மட்டும் இருந்து விட்டால், அதில் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். ஊரு வந்து சேராது.

கல்வி என்பது கடல் போன்றது. இன்னும் சொல்லப் போனால், கல்வியின் ஒவ்வொரு பிரிவும் ஒரு கடல் போன்றது. எனவே, மணிவாசகர்

கல்வி எனும் பல் கடல் பிழைத்தும் என்றார்

கல்வி என்ற பல கடல்களை தாண்டிப் பிழைத்து வந்தேன் என்கிறார்.

இன்னும் மற்ற குணங்களையும் பற்றி  பார்ப்போம்.

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/146.html )








Wednesday, March 9, 2016

கீதை - 14.5 - குணங்கள் நம்மை பிணிக்கின்றன

கீதை - 14.5 - குணங்கள் நம்மை பிணிக்கின்றன 


सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसंभवाः ।
निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ॥१४- ५॥

ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு³ணா: ப்ரக்ருதிஸம்ப⁴வா: |
நிப³த்⁴நந்தி மஹாபா³ஹோ தே³ஹே தே³ஹிநமவ்யயம் || 14- 5||


ஸத்த்வம் = சத்வம்

ரஜஸ் = ரஜஸ்

தம = தமஸ்

இதி = என

குணா: = குணங்கள்

ப்ரக்ருதி = பிரக்ரிதியில்


ஸம்ப⁴வா: = சம்பவிக்கின்றன

|
நிபத்⁴நந்தி = பிணைக்கின்றன

மஹாபாஹோ = பெரிய தோள்களை உடையவனே

தேஹே = உடலையும்

தேஹிநம் அவ்யயம் = உடலைக் கொண்டதையும் பிணைக்கின்றன




சத்வம், ரஜஸ், தமஸ் இந்த  மூன்று குணங்களும் குணங்கள் பிரகிருதியில் தோன்றுகின்றன. பெரிய தோள்களை உடையவனே, இவை உடலையும் உடலைக் கொண்டதையும் பிணைக்கின்றன. 

மிக மிக அற்புதமான அத்யாயம்.

இந்த சத்வம், ரஜஸ் , தமஸ் என்ற குணங்களைப் பற்றி மிக விரிவாக பின்னால் பார்க்க  இருக்கிறோம். எனவே, இப்போது அதில் மெனக்கெட வேண்டாம்.

இந்த குணம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் ?  குணம் என்ற சமஸ்க்ரித்த சொல்லுக்கு  பிணைத்தல் என்று ஒரு பொருள் உண்டு. அதற்கு சரியான தமிழோ அல்லது ஆங்கில சொல்லோ இல்லை.

குணங்கள்தான் நம்மை இந்த உலகோடு பிணைக்கின்றன.

எப்படி என்று சிந்திப்போம்.

சில விஷயங்கள் நமக்கு பிடிக்கிறது. நல்ல உணவு, இனிய சங்கீதம், நமக்கு பிடித்த புத்தகம், என்று எத்தனையோ பிடித்த விஷயங்கள் இருக்கின்றன.

ஏன் அவற்றை நமக்குப் பிடிக்கிறது ?

அவற்றின் குணங்கள்தான் காரணம்.

இனிப்பு என்ற குணம் பிடிக்கிறது, குளிர்ச்சி என்ற குணம் பிடித்து இருக்கிறது, லயமாக வரும்  சப்த்தம் பிடிக்கிறது.

இப்படி உலகில் உள்ளவைகளின் குணங்கள் சில நமக்கு பிடிக்கின்றன, சில பிடிப்பது இல்லை,  சிலவற்றில் நாம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கிறோம்.

பிடித்தவற்றை நாம் நமக்கே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். மீண்டும் மீண்டும் அதை அனுபவிக்க ஆசைப் படுகிறோம். வேறு யாராவது  நமக்கு இல்லாமல் எடுத்துக் கொண்டு போய் விடக் கூடாதே என்று கவலைப் படுகிறோம்.

இதே போல் மற்ற குணங்களும்.

இப்படியாக குணங்கள் நம்மை இந்த உலகோடு பிணைக்கின்றன.

பிடித்த குணங்களை தேடி ஓடுகிறோம், பிடிக்காத குணங்களை விட்டு ஓடுகிறோம்.

இப்படியாக குணங்கள் நம்மை அலைகழிக்கின்றன.

சற்று கூர்ந்து சிந்தியுங்கள்.

எனக்கு ஒன்றைப் பிடிக்கிறது என்று சொல்லும் போது என்ன நிகழ்கிறது.

பிடித்தல் என்ற குணம் என்னில் எழுகிறது.

அந்த பிடித்தல் என்ற உணர்வு எழ அந்தப் பொருளின் ஏதோ ஒரு குணம் காரணமாகிறது.

"எனக்குப் பிடித்திருக்கிறது" என்று கூறும்போது, பிடித்தலாகிய உணர்வை, குணத்தை என்னோடு சேர்த்துக் கொள்கிறேன். அப்போது பிடித்தல் வேறு, நான் வேறு அல்ல. எனக்குப் பிடித்து இருக்கிறது.

இப்படி வெளியில் உள்ள ஒன்றின் குணம் என்னுள் ஒன்றைத் தூண்டி விட்டு இந்த  இரண்டுக்கும் ஒரு பிணைப்பு நிகழ்கிறது.

இந்த குணங்கள் எதனால் வருகின்றன, அவற்றின் விளைவுகள் என்ன, அவற்றை எப்படி கட்டுப் படுத்துவது, கட்டுப் படுத்தியவர்கள் எப்படி இருப்பார்கள், கட்டுப் படுத்தினால் என்ன நிகழும் என்று விரிவாக பார்க்க இருக்கிறோம்.

வாருங்கள்.

(For other slogas: http://bhagavatgita.blogspot.in/2016/03/145.html )

Tuesday, March 8, 2016

கீதை - 14.4 - நானே பரம பிதா

கீதை - 14.4 - நானே பரம பிதா 


सर्वयोनिषु कौन्तेय मूर्तयः संभवन्ति याः ।
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥१४- ४॥

ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்ப⁴வந்தி யா: |
தாஸாம் ப்³ரஹ்ம மஹத்³யோநிரஹம் பீ³ஜப்ரத³: பிதா || 14- 4||

ஸர்வ = அனைத்தின்

யோநிஷு =  ஆதி, மூலம், தோற்றம்

கௌந்தேய = குந்தி புத்திரனே

மூர்தய: = வடிவங்கள் , தோற்றங்கள்

ஸம்ப⁴வந்தி = உதிகின்றன

யா: = அவை

தாஸாம்= அவைகளில்

ப்³ரஹ்ம மஹத் = உயர்ந்த பிரம்மத்தின்

யோநி = தோற்றத்தில், மூலத்தில்

அஹம் = நான்

பீஜப்ரத = விதைக்கும், தோன்றவைக்கும்

பிதா = தகப்பன்

நான் தரும்  விதை மற்றும் இந்த பெரிய பிரம்மமே அனைத்து வடிவங்களின் தோற்றத்திற்கும் காரணம்.  நானே அனைத்திற்கும் பிதா.

முந்தைய ஸ்லோகத்தில் சொன்னதை மீண்டும் இங்கே வலியுறுத்துகிறான் கண்ணன்.

பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகில் என் எண்ணங்களை ஏற்றி (நானே விதை) அதற்கு நான் உயிர் தருகிறேன்.

நான் காணும் உலகம், என்னால் உருவாக்கப் பட்டது. அதற்கு நானே காரணம்.

நிலம் இல்லாமல் விதை முளைக்க முடியாது. அது போல, என் எண்ணங்கள் மட்டும் உலகை படைக்க முடியாது. பிரக்ரிதி, க்ஷேத்ரம் என்ற வெளி உலகு வேண்டும்.

என் எண்ணங்கள் அதில் கலக்கும் போது , என் உலகம் தோன்றுகிறது.

இதில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால்:

முதலாவது, இந்த உலகம் மாயை , வெறும் கற்பனை என்று கீதை சொல்லவில்லை.

ப்³ரஹ்ம மஹத் என்ற பெரிய பிரபஞ்சம் வேண்டும். அதுவே ஆதாரம்.

அதுதான் நிலம் . அந்த நிலத்தில் நம் எண்ணங்கள் கலக்கும் போது நமக்கான உலகம்  உண்டாகிறது.

இரண்டாவது, என்ன மரம் வரப் போகிறது என்று மண் தீர்மானிப்பதில்லை, விதை தீர்மானிக்கிறது.  இந்த உலகை இன்பமயமாக்குவதும், துன்பமயமாகுவதும் நம் கையில் இருக்கிறது. அதை மாற்றும் பிதா நாம். பெண் என்பவள் எப்படி ஆணின் விந்தை வாங்கி குழந்தையாக்கித் தருகிறாளோ  அது போல, இந்த உலகம் நம் எண்ணங்களை வாங்கி நமக்கான உலகைத் தருகிறது.

மூன்றாவது, என்ன விதைகிறோமோ அது தான் முளைக்கும். பாகற்காய் விதையை விதைத்து விட்டு பலா மரம் வரவில்லையே என்றால் வராது. எது வேண்டுமோ  அதை விதையுங்கள். தினை விதைத்தால் தினை அறுப்பீர்கள் . வினை விதைத்தால் வினைதான் அறுக்க முடியும்.

நான்காவது, விதை விதைத்த பின் வளர்வது நம் கையில் இல்லை. நிலமும் சூழ்நிலையும் பார்த்துக் கொள்ளும். விதைப்பது எல்லாம் முளைத்து விடுவதில்லை. நல்லதே விதைத்துக் கொண்டிருப்போம். அதில் ஏதேனும் முளை விட்டால் அது நல்லதாகவே இருக்கும்.

ஐந்தாவது, ஒரு முறை விதைத்து அது விளைந்து விட்டால் அதில் இருந்து மேலும் விதைகள் வரும். அந்த விதைகள் மேலும் பல தாவரங்களைத் தரும். மேலும் மேலும்  வளர வேண்டாம் என்றால், விதைக்கமலேயே இருந்து விடுதல் நலம்.


பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!



என்பார் மணிவாசகர். வித்து மேல் விளையாமல் போக வேண்டும் என்று வேண்டுகிறார் அவர்.

அந்த விதை எங்கிருந்து வருகிறது ? அதை விதைக்காமல் இருப்பது எப்படி என்று மேலும்  சிந்திப்போம்.

(For other slogas - http://bhagavatgita.blogspot.in/2016/03/144.html )






Monday, March 7, 2016

கீதை - 14.3 - நான் இந்த உலகை உருவாக்குகிறேன்

கீதை - 14.3 - நான் இந்த உலகை உருவாக்குகிறேன் 


मम योनिर्महद्ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।
संभवः सर्वभूतानां ततो भवति भारत ॥१४- ३॥

மம யோநிர்மஹத்³ப்³ரஹ்ம தஸ்மிந்க³ர்ப⁴ம் த³தா⁴ம்யஹம் |
ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத || 14- 3||


மம = என்

யோநி = ஆரம்பம், தொடக்கம்

மஹத்= பெரிய, உயர்ந்த

ப்ரஹ்ம = பிரமம்

தஸ்மிந் = அதில்

கர்பம்  = கர்பம்

ததாமி = நான் செலுத்துகிறேன்

அஹம் = நான்

ஸம்பவ: = சம்பவிக்க, பிறக்க, தோன்ற

ஸர்வ பூதாநாம் = அனைத்தையும்

ததோ  = அதன் பிறகு

பவதி = வந்தன

பாரத = பாரத வம்சத்தவனே

பெரிய பரப்பிரம்மமே எனக்கு ஆதாரம்; அதன் கர்பத்தில் நான் என்னை செலுத்துகிறேன்.  பாரதா, அனைத்தும் அதிலேதான் பிறக்கின்றன.

இவ்வளவுதான் அந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம். இதில் இருந்து நாம் என்ன அறிய முடியும் ?

சிந்திப்போம்.


ஒரு நாள் இந்த வாழ்கை இனிமையாக இருக்கிறது. இன்னொரு நாள் அதுவே துக்கமாக இருக்கிறது.

சில சமயம் சுகமாக இருக்கும் வாழ்க்கை, சில சமயம் சுமையாகவும்  இருக்கிறது.

இது சுகமா ?சுவையா ? இன்பமா ? துன்பமா ?

ஒரு சிலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அந்த சிலை எப்படி தோன்றியது ?

சிலை தோன்றக்  கல் வேண்டும். கல் தான் ஆதாரம். கல் இல்லாமல் சிற்பம் வர முடியாது.

வெறும் கல் மட்டும் சிற்பமாக முடியுமா ? முடியாது.

சிற்பியின் கற்பனை மற்றும்  அவன் கை வண்ணம் சேரும்போது அது சிற்பமாக உருவாகிறது.

அது போல, இந்த உலகம் உண்டாக அதில் உள்ள பொருள்கள் தான் ஆதாரம். "மஹத்³ப்³ரஹ்ம" என்றால் முடிவே இல்லாத  என்று பொருள்.  முடிவே இல்லாத உலகம்,  பரந்து விரிந்த பொருட்களால் ஆனது.

"அதன் கர்ப்பத்தில் என்னைச் செலுத்தி நான் இந்த அனைத்து உயிர்களையும் உருவாக்குகிறேன்"

இந்த உலகம் நம் கற்பனையில், நாம் எவ்வாறு அதனோடு தொடர்பு கொள்கிறோமோ அதன் மூலம் அது உருவாகிறது.

எப்படி சிற்பியின் கற்பனையும், கை வண்ணமும் சேரும்போது சிற்பம் உருவாகிறதோ அப்படி, நம் எண்ணங்களும் செயல்களும் இந்த உலகை உருவாக்குகின்றன.

ஒரு கல்லுக்குள் இருந்து ஆண் வடிவ சிற்பமும் வரலாம், பெண் வடிவ சிற்பமும் வரலாம், ஒரு விலங்கின் வடிவம் கூட வரலாம். கல் ஒன்று தான், சிற்பி ஒருவன்தான் என்றாலும் அவன் கற்பனைக்கு ஏற்ப சிற்பம் மாறுபடுவதைப் போல,  உலகம் ஒன்றுதான், நீங்கள் ஒருவர் தான், உங்கள் கற்பனைக்கு, எண்ணங்களுக்கு ஏற்ப உலகம் மாறுகிறது.

அதைத்தான் கண்ணன் இங்கே சொல்கிறான்,

"அதன் கர்பத்தில் நான் என்னை செலுத்துகிறேன்.  பாரதா, அனைத்தும் அதிலேதான் பிறக்கின்றன."

நாம் நம் கற்பனைகளை, கனவுகளை, ஏக்கங்களை, எதிர்பார்புகளை இந்த உலகில் ஏற்றுகிறோம்.

அதற்கு தக்க, இந்த உலகம் நமக்கு உயிர் பெற்று எழுகிறது.

புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது....

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

நான் ஒரு பெண்ணை பார்க்கிறேன். அவள் யாரோ, நான் யாரோ.

அவள் என்னைப் பாதிக்கவில்லை, இது வரை.

எனக்கு அவளைப் பிடிக்கத் தொடங்குகிறது.

சந்தோஷப் படுகிறேன்.

அவளை காதலிக்கிறேன்.

இன்னும் சந்தோஷம்.

அவள் என் காதலை ஏற்றுக் கொள்கிறாள்...நான் இறக்கை இல்லாமல் பறக்கிறேன்.

அல்லது, அவள் என் காதலை மறுத்து விடுகிறாள்...

நான் துன்பத்தில் விழுகிறேன்.

இந்த இன்பமும் துன்பமும் என்னால் உருவாக்கப்  பட்டது.

சுகம், துக்கம், இன்பம், துன்பம், உயர்வு, தாழ்வு, என்ற அனைத்தும் என்னால் இந்த  உலகைக் கொண்டு உருவாக்கப் பட்டது.

எப்படி நான் இவற்றை உருவாக்குகிறேன் ? ஏன் நான் உருவாக்குகிறேன் ? எது என்னை உருவாக்கச் செய்கிறது ?

இவற்றை நான் உருவாக்காமல் இருந்தால் எப்படி இருக்கும் ? இவற்றை உருவாக்குவது என் கையில் இருக்கிறதா ? அல்லது நான் செலுத்தப் படுகிறேனா ?

 வாருங்கள்,சேர்ந்து சிந்திப்போம்.

For other slogas: http://bhagavatgita.blogspot.com/2016/03/143.html

Sunday, March 6, 2016

கீதை - 14.2 - பிறப்பும், இறப்பும் இல்லை

கீதை - 14.2 - பிறப்பும், இறப்பும் இல்லை 



इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥१४- २॥

இத³ம் ஜ்ஞாநமுபாஸ்²ரித்ய மம ஸாத⁴ர்ம்யமாக³தா: |
ஸர்கே³ऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யத²ந்தி ச || 14- 2||

இதம் = இந்த

ஜ்ஞாநம் = ஞானத்தை

உபாஸ்ரித்ய = உபாசித்த பின், கடை பிடித்தபின்

மம = என்

ஸாதர்ம்யம் = சஹ + தர்மியம் = என் நிலையை

ஆகதா:  = அடைவார்கள், அடைந்தவர்கள்

ஸர்கே = பிறப்பிலும்

அபி = மேலும்

ந = இல்லை

உபஜாயந்தே = பிறப்பது (உப + ஜன் + யதே)

ப்ரலயே = பிரளய காலத்தில், அழிவு காலத்தில்

ந = இல்லை

வ்யதந்தி = நடுங்குவது இல்லை, பிறழ்வது இல்லை, சமநிலை தவறுவது இல்லை.

ச =மேலும்


இந்த ஞானத்தை அடைந்து, என் நிலையை அடைந்தோர், படைப்புக் காலத்தில் பிறப்பதும் இல்லை; ஊழிக் காலத்தில் இறப்பதும் இல்லை. 

ஞானத்தில் உயர்ந்த ஞானத்தை உனக்கு விளக்குகிறேன் என்றான் கண்ணன் முந்தைய  ஸ்லோகத்தில்.

அந்த உயர்ந்த ஞானத்தைப் பெறுவதால் என்ன பயன் ? நிறைய செல்வம் கிடைக்குமா ? பதவி , அதிகாரம் இதுவெல்லாம் கிடைக்குமா ?

இல்லை, அதையும் தாண்டி, வேறு ஒன்று கிடைக்கும்.

அது,

முதலாவது, இறை நிலையை அடைவது. "என் நிலையை அடைந்து" என்று கூறுகிறான் கண்ணன். அதாவது, இந்த ஞானத்தைப் பெற்றால், கண்ணன் போன்ற நிலையை அடைய முடியும்.

இரண்டாவது, அந்த ஞானத்தைப் பெற்றவர்கள், தோன்றும் காலத்தில் தோன்றுவது இல்லை,  அழிவு காலத்தில் அழிவது இல்லை.

இது என்ன புதுச் சிக்கலாக இருக்கிறது.

தோன்றும் போது தோன்றாமல் இருப்பது, அழியும் போது அழியாமல் இருப்பது என்றால் என்ன ?


தோற்றம் அழிவு என்பதை ஏதோ குழந்தை பிறப்பது, முதியவன் இறப்பது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.


தோற்றம் என்றால் புதிதாக தோன்றுவது. அழிவது என்றால் ஏற்கனவே இருப்பது இல்லாமல் போவது.

தினம் தோறும் நாம் ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அது வேணும், இது வேணும், அதுவும் வேணும், இதுவும் வேணும் என்று நாளும் நாளும்  ஆசைகள் வளர்ந்து கொண்டே போகின்றன. பணம், செல்வம், புகழ், செல்வாக்கு, பட்டம், பதவி, அதிக்கரம், அனுபவம் என்று எல்லாவற்றிலும் மேலும் மேலும் வேண்டும் வேண்டும் என்று ஓடுகிறோம்.

அலைகிறோம்.

இந்த அலைச்சலை சற்று ஆழ்ந்து நோக்கினால் ஒன்று புரிபடும்.

எது வேண்டும் என்று அலைந்தோமோ, அது கிடைத்தவுடன் அலைச்சல் நிற்பது இல்லை.  அந்த இடத்தில் வேறு ஒன்று புதிதாக வந்து விடுகிறது.

புதிய ஒன்றிற்காக அலைகிறோம் .

பழைய ஆசைகள் முடிந்து புது ஆசைகள் பிறக்கிறது.  ஒரே சமயத்தில் பலப் பல ஆசைகள்.

வீடு வாங்க வேண்டும், கார் வேண்டும், வெளிநாட்டில் உல்லாச பயணம், பதவி உயர்வு, என்று இப்படி ஆயிரம் ஆசைகள் நம்மை போட்டு வறுத்து எடுக்கின்றன.

ஒரு ஆசை தீர்வதற்கு முன்பே பல புது ஆசைகள் பிறக்கின்றன.

ஒவ்வொரு ஆசையுடனும் நாம் நம்மை பிணைத்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு ஆசை பிறக்கும் போதும் நாம் புதிதாக உருவெடுக்கிறோம். அந்த ஆசை  நிறைவேற வேண்டி திட்டம் போடுகிறோம், வேலை செய்கிறோம், படிக்கிறோம், யார் யாரையெல்லாமோ போய் பார்க்கிறோம்..ஏன் கடவுளைக் கூட துணைக்கு அழைத்துக் கொள்கிறோம்.

ஏன் இது நிகழ்கிறது. ஏன் அமைதியாக ஓட்டம் இல்லாமல், சலனம் இல்லாமல், அலைச்சல் இல்லாமல் இருக்க முடிவதில்லை ?

எது அலைகிறது ?

எது பூரணத்துவம் (perfection ) அடையவில்லையோ, அது அலைந்து கொண்டே இருக்கிறது.

பூரணத்துவம் அடைந்து விட்டால், ஓட்டம் நின்று விடும்.

ஊர் போய்ச் சேரும் வரைத்தானே பயணம். ஊர் வந்து சேர்ந்து விட்டால் பயணம் நின்று போகும் அல்லவா ? அது போல,

பூரணத்துவத்தை அடையும் வரை, இந்த அலைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு ஆசையுடனும் நாம் நம்மை ஒன்று படுத்திக் கொண்டு, அந்த ஆசைகளோடு நாம் பிறக்கிறோம்.

அந்த ஆசைகள் நிறைவேறும் போது , அந்த ஆசை இறந்து விடுகிறது...அதோடு சேர்ந்து நாமும் , அந்த ஆசையோடு கூடிய நாமும் இறக்கிறோம்.

வாடகை வீட்டில் இருப்பவன், ஒரு படுக்கை அறை உள்ள வீடு வேண்டும் என்று ஆசைப் படுகிறான். அதற்காக உழைக்கிறான், கடன் வாங்குகிறான், கடனை அடைக்கியப் பாடு படுகிறான்....இது ஒரு புது அவதாரம்.

கடனை அடைத்து முடித்தவுடன், அந்த ஆசை முடிந்து போகிறது. அடுத்து இரண்டு படுக்கை அறை உள்ள வீடு வேண்டும் என்று ஆசைப் படுக்கிறான்.

ஒரு படுக்கை அறை உள்ள வீட்டுக்குப் ஆசைப்பட்டவன் இல்லை. மறைந்து விட்டான். இறந்து விட்டான். இரண்டு படுக்கை அறை உள்ள வீட்டுக்கு ஆசைப் படுபவன் பிறந்து இருக்கிறான்.

இபப்டி ஒவ்வொரு ஆசைகளோடும் நம்மை இணைத்துக் கொண்டு, அது வேறு நாம் வேறு அல்ல என்று நினைத்துக் கொண்டு பிறந்து பிறந்து இறக்கிறோம்.

இந்த அத்தியாயத்தில் சொலப்பட்ட ஞானம் வந்தால், இந்த (ஆசை) பிறக்கும் போது நாம் பிறப்பதும், இந்த ( ஆசை ) இறக்கும் போது நாம் இறப்பதும் நிகழாது.

ஆசைகள் ஏன் நிகழ்கின்றன ? அவை எங்கிருந்து பிறக்கின்றன ? எந்தவிதமான ஆசை, எப்போது நிகழ்கிறது...அவற்றை எப்படி நம் கட்டுக்குள் கொண்டு வருவது...அவற்றை தாண்டி எப்படி போவது என்பது பற்றி எல்லாம் இந்த அத்தியாயம் கூறப் போகிறது.

உங்களைப் போலவே நானும் ஆவலாக இருக்கிறேன், இவற்றை அறிந்து கொள்ள.

(For other slogas , please visit: http://bhagavatgita.blogspot.in/2016/03/142.html )



Saturday, March 5, 2016

கீதை - 14.1 - மீண்டும் சொல்கிறேன்

கீதை - 14.1 - மீண்டும் சொல்கிறேன் 


श्रीभगवानुवाच
परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥१४- १॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பரம் பூ⁴ய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம் |
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்³தி⁴மிதோ க³தா: || 14- 1||

ஸ்ரீபகவான் உவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்

பரம் = உயர்ந்த

பூய: = மீண்டும், மேலும், அதிகம்

ப்ரவக்ஷ்யாமி = ப்ர வாக் க்ஷியாமி = சொல்கிறேன்

ஜ்ஞாநாநாம் = ஞானங்களில்

ஜ்ஞாநம் உத்தமம் = உயர்ந்த ஞானத்தை

யஜ்ஜ்ஞாத்வா = அதை உணர்ந்த பின்

முநய: = முனிவர்கள்

ஸர்வே = அனைத்து

பராம்= உயர்ந்த

 ஸித்தி = சித்தியை

இதோ = இங்கிருந்து, இன்றிலிருந்து

கதா: = அடைந்தார்கள்




ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களுக்கு எல்லாம் மேலான பரம ஞானத்தை உனக்கு மீண்டும் சொல்கிறேன். . அதை அறிந்து முனிவர்கள் இந்த உலகில் இருந்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.


நாம் எதையும் அப்படியே கேட்பது இல்லை. புதிதாக ஒரு கருத்தைக் கேட்டால், அது நமக்கு ஏற்கனவே இருக்கும் கருத்தோடு ஒத்துப் போனால், அதை ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால்,

"இதெல்லாம் கஷ்டம்"

"கேக்குறதுக்கு நல்லா இருக்கு, நடை முறையில் சாத்தியமில்லை"

"அப்படி ஒரு நிலையை அடைந்தால் நல்லது தான், ஆனால் முடியுமானு தெரியல" என்று சந்தேகத்தை எழுப்புவோம்.

"நான் மட்டும் மாறி என்ன செய்ய, எல்லாரும் மாறினால் தான் இது நடக்கும் " என்று கூறி நாம் மாறும் ஒரு சந்தர்பத்தை தள்ளிப் போட்டு விடுவோம். உலகம் மாறட்டும், அப்புறம் நான் மாறுகிறேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்வோம்.

அது மட்டும் அல்ல, புதிய கருத்துகள் மனதில் அவ்வளவு எளிதில் பதியாது.

மனித மனம் மறக்கும் இயல்பு உடையது.

எனவே, கிருஷ்ணன், "நான் மீண்டும்" சொல்கிறேன் என்று இந்த அத்யாயத்தை ஆரம்பிக்கிறான்.

சொல்வது யார் என்பதல்ல கேள்வி. கேட்பது யார் என்பது முக்கியம்.

கண்ணனே சொன்னாலும் அர்ஜுனனுக்கு மனதில் ஏறவில்லை. அவன் சந்தேகங்கள் அவனை துரத்திக் கொண்டே இருக்கின்றன.


அர்ஜுனன் இத்தனைக்கும் நல்ல மாணவன்.  கூரிய அறிவு கொண்டவன். நல்லவன், வல்லவன்.

கண்ணன் சொல்லிக் கேட்ட அர்ஜுனன் பாடு அப்படி என்றால், நாம் எல்லாம் எந்த மூலை.

நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப படிக்க வேண்டும். கேட்க வேண்டும். நாளடைவில் அது நமது இயல்பாக மாறிவிடும். அது வரை, திரும்ப திரும்ப அவற்றைக் கேட்பதை, படிப்பதை தவிர வேறு வழி இல்லை.

கீதை போன்ற புத்தகங்கள் ஒரு முறை படித்து முடித்து விட வேண்டிய புத்தகங்கள் அல்ல. திரும்ப திரும்ப படிப்பதன் மூலம் புது புது அர்த்தங்கள், ஆழ்ந்த சிந்தனகைள் அதிலிருந்து நமக்கு தோன்றிக் கொண்டே இருக்கும்.

வாழ் நாள் முழுவதும் படிக்க வேண்டிய புத்தகம் அது.

"இந்த உலகில் இருந்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்."

பல மதங்கள், பல மத சம்பந்தப் பட்ட புத்தகங்கள் பொதுவாக சொல்வது என்ன என்றால், அவை சொல்லிய வழியில் நடந்தால் சொர்க்கம் கிடைக்கும், பரம பதம் கிடக்கும், வைகுந்தம் கிடைக்கும், கைலாயம் போகலாம், அடுத்த பிறவியில்  நல்லது நடக்கும் என்று.

ஏன், இந்தப் பிறவியிலேயே நல்லது நடக்காது என்று யாரும் கேட்பது இல்லை. இங்கேயே, இந்தப் பிறவியிலேயே நடக்கும் என்றால், அந்த மதங்கள், அந்த புத்தகங்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று தெரிந்து விடும். எனவே, யாரும் சரி பார்க்க முடியாத படி, சொர்க்கம், நரகம், மறு பிறவி என்று  சொல்லி விடுகிறார்கள்.

கீதை ஒன்று தான், "இந்தப் பிறவியிலேயே உயர்ந்த கதியை அடைய முடியும்" என்று சொல்கிறது.

அது மட்டும் அல்ல, இதுவரை பல முனிவர்கள் இந்த அறிவைப் பெற்று இந்த பிறவியிலேயே  உயர்ந்த கதியை அடைந்து இருக்கிறார்கள் என்று சொல்கிறது.

ஒருவேளை அது சரி இல்லை என்றால், கீதை என்றோ மறுக்கப் பட்டிருக்கும்.

இது வரை கீதை மறுதலிக்கப் படவில்லை.

எனவே, அது சொல்லியது உண்மை என்று சரி பார்க்கப் பட்டு இருக்கிறது.

"ஞானங்களுக்கு எல்லாம் உயர்ந்த ஞானத்தை உனக்குச் சொல்கிறேன்"

வாழ் நாள் எல்லாம் எதை எதையோ படித்துக் கொண்டிருக்கிறோம். யார் யார் சொல்வதை எல்லாமோ கேட்டுக் கொண்டிருக்கிறோம். யாராவது, எந்த புத்தகமாவது நான் சொல்வது தான் அனைத்திலும் உயர்ந்தது என்று சொல்லி இருக்கிறதா ? இல்லை.

கீதை அப்படி அறுதியிட்டுச் சொல்கிறது.

அப்படி சொல்லவும் ஒரு கம்பீரம் வேண்டும். உறுதி வேண்டும்.

அந்த பலம், கீதையிடம் இருக்கிறது.

இதை உணர்ந்தால் , இந்தப் பிறவியிலேயே உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றும் உறுதி கூறுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது அதில்...

மேலும் பார்ப்போம்.

 







Friday, March 4, 2016

கீதை - பதின்மூன்றாம் அத்தியாயம் - ஒரு தொகுப்பு

கீதை - பதின்மூன்றாம் அத்தியாயம் - ஒரு தொகுப்பு 


1. இந்த உடல் க்ஷேத்ரம் என்று சொல்லப் படுகிறது. இதை அறிந்து கொள்பவன் க்ஷேத்ரன்ஞன் .

2. எது க்ஷேத்ரம் , யார் க்ஷேத்ரன்ஞன் என்று அறியும் அறிவே உண்மையான அறிவு.

3. இந்த க்ஷேத்ரம் என்பது பல்வேறு ரிஷிகளால் உணரப் பட்டு, எடுத்து பாடப் பட்டது.  இதை அறுதி இட்டுக் கூற முடியாது. யூகங்கள் நிறைந்தது.

4. இந்த உடல் மட்டும் அல்ல, அதில் உள்ள புலன்கள், அதில் எழும் ஆசைகள், பகை, துக்கம், இன்பம், துன்பம் என்று இவை அனைத்தும் சேர்ந்தது க்ஷேத்ரம்.

5. ஞானம் என்றால் என்ன ?

6. கர்வம் இன்மை, பெருமிதம் இன்மை, பிறருக்கு ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை , தன்னைக் கட்டுப் படுத்துதல், புலன் இன்பங்களில் விருப்பம் இன்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், துக்கம், தோஷம் இவற்றின் பால் சம நிலை, பற்றற்ற தன்மை, சொந்தங்களை தனது என்று கருதாமை,  விரும்பியது மற்றும் விரும்பாதது என்று எது நடந்தாலும் சம சித்தம் ,  தவறாத யோகம், பக்தி, கூட்டங்களை விடுத்து தன்மை நாடுதல், தன்னைத் தான் அறிந்து கொள்வதில் தளரா முயற்சி, தத்துவ ஞானங்களின் பொருளை அறிந்து கொள்ளுதல் ...இவையே ஞானம் எனப்படும். இவை அல்லாதவை அஞ்ஞானம்.

7. ஞேயம் என்பதை அறிந்தால் மரணமில்லாப் பெருவாழ்வு பெறலாம்.  அநாதியாகிய பரப்பிரம்மம்,  அதில் சத் ம் இல்லை, அசத்தும் இல்லை. அது உலகம் எங்கும் நிறைந்து இருக்கிறது.  அனைத்து புலன்களிலும் இருந்து அவற்றை செம்மையுற செலுத்துவது, புலன்களுக்கு அப்பாற்பட்டது, பற்று இல்லாது, அனைத்தையும் ஏற்றுக் கொள்வது, தனக்கு என்று குணம் என்று ஒன்று இல்லாதது, உடலுக்கு நிகழும் அனுபவங்களை தூய்பது அது. அனைத்து போருகளுக்கும் உள்ளேயும், வெளியேயும் இருப்பது, ; சரமும் அசரமுமாவது; நுண்மையால் அறிய முடியாதது, தூரமானது; அருகிலிருப்பது.
உயிர்களில் பிரிவுபட்டு இல்லாமல் ஆனால் பிரிந்தது போல இருப்பது. பூதங்களாய் தாங்கோது அது.  புலன்களுக்கு உணர்வைத் தருவது, அவற்றை பிறக்கச் செய்கிறது.

8. ஒளிகளுக்கெல்லாம்  அதுவே ஒளி தருவது. அனைதிற்குள்ளும்இருப்பது. அதுவே ஞானம்.

9. இதை அறிபவன், எனது தன்மையை அடைகிறான்.

10. பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் ஆதியில் இருந்தே இருக்கிறது.  வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே  பிறக்கின்றன.

11. காரியங்களைச் செய்வது பிரகிர்தி. சுக துக்கங்களை உணர்வது புருஷன்.

12, புருஷன் பிரகிருதியில் இருந்து, அதில் நிகழும்  குணங்களைத் அனுபவிக்கிறான். குணங்களினிடம் பற்றுக் கொள்வதன் மூலம், இவன் நல்லவனாகவும், தீயவனாகவும் தோன்றுகிறான்.

13. அனைத்தையும் செலுத்துவோன் ,  அனுமதி தருபவன், ஏற்றுக் கொள்பவன்,  அனுபவிப்பவன்...இந்த காரியங்களைச் செய்யும் அவனே பரம புருஷன்.

14. புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையும் அறிந்தவன் மீண்டும் மீண்டும் பிறப்பது இல்லை.

15. இந்த புருஷன், ப்ரகிர்தி, க்ஷேத்திரன், க்ஷேத்ரன்ஞன் என்பவற்றை ஞான, யோக மற்றும் கர்ம மார்கத்தில் சென்று அறியலாம். அல்லது அதில் சென்றவர்களை கேட்டும் அறிந்து கொள்ளலாம்.

16. உயிர்கள் க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரக்ஞனும்  சேர்வதால் தோன்றுகின்றன.

17. புருஷன் அனைத்து உயிர்களிலும் சமமாக இருக்கிறான்.  அதை அறிபவனே காட்சி உடையவன்.

18. எங்கும் எதிலும் ஈசனைக் காண்பவன் துன்பப் பட மாட்டான்.  அவன் பரகதி அடைவான்.

19. தொழில்கள் என் மூலம் நடக்கிறது. நான் நடத்துவது இல்லை என்று அறிபவனே காட்சி உடையவன்.

20. அனைத்தும் ஒன்றில் இருந்தே வந்தது என்று அறிபவன், பரந்த பிரமத்தை அடைவான்

21. தொடக்கம் இல்லாமையாலும், தன்கென்று ஒரு குணம் இல்லாமையாலும் பரமாத்மா  குற்றம் அற்றவன்.  இவன் உடம்பிலிருந்தாலும் செயல் அற்றவன். பற்று அற்றவன் - ஆகாயத்தைப் போல, சூரியனைப் போல.

22. இவற்றை தன் அறிவால் எவன் காண்கிறானோ, அவன் இந்த பூத பிரகிரிதிகளை விட்டு உயர்ந்த நிலையை அடைகிறான்.


Thursday, March 3, 2016

கீதை - 13.34 - ஞானத்தின் பார்வை

கீதை - 13.34 - ஞானத்தின் பார்வை


क्षेत्रक्षेत्रज्ञयोरेवमन्तरं ज्ञानचक्षुषा ।
भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते परम् ॥१३- ३४॥

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா |
பூ⁴தப்ரக்ருதிமோக்ஷம் ச யே விது³ர்யாந்தி தே பரம்

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோ = க்ஷேத்ரம் மாறும் க்ஷேத்ரன்ஞன்

எவம் = அப்படியாக

அந்தரம் = வேறுபாடுகளை

ஜ்ஞாந சக்ஷுஷா = ஞானக் கண்ணால் காண்பார்களோ

பூத ப்ரக்ருதி மோக்ஷம் = பிரக்ரிதியில் இருந்து மோக்ஷம் அடைகிறார்கள்

ச = மேலும்

யே = அவர்கள்

விது= அறிகிறார்கள்

யாந்தி = அடைகிறார்கள்

தே = அவர்கள்

பரம் = உயர் நிலையை


ஞானக் கண்ணால்,  இவ்வாறு க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்கும் உள்ள வேற்றுமையை  அறிந்தவர்கள் பூதப் பிரக்ருதியில் இருந்து விடுதலை பெற்று  உயர்ந்த நிலையை அடைகின்றனர்.


"க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்கும் உள்ள வேற்றுமையை  அறிந்தவர்கள்"

இது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த வேற்றுமை புரிவதே இல்லை. இரண்டும் ஒன்று என்றே  நாம் நினைப்பதால் தான் பல துன்பங்கள் நிகழ்கின்றன.

எப்படி ?

நீ யார் என்று என்னைக் கேட்டால் , பொதுவாக நான் என்ன சொல்லுவேன் ?

- நான் ஒரு ஆண்
- இந்தியன்
- தமிழன்
- இந்து

இப்படி சில விஷயங்களைச் சொல்லுவேன் அல்லவா ?

இந்தியா என்பது ஒரு நாடு. அதில் நான் வசிக்கிறேன்.  நான் வாழும் நாடு எனக்குள் சேர்ந்து  நான் இந்தியனாகி விடுகிறேன். க்ஷேத்ரம் என்ற இந்தியா, நான் என்ற க்ஷேத்ரன்ஞனோடு ஒன்றாகி விடுகிறது.

வேறுபாடு மறைந்து விடுகிறது.

நான் இது மதக் கொள்கைகளை கடை பிடிக்கிறேன் என்று சொல்வது வேறு, நான் இந்து என்று சொல்வது வேறு.

நாடு, மதம், மொழி, ஜாதி, குலம், என்ற இவை எல்லாம் எனக்கு வெளியே உள்ளவை. நான் அவை அல்ல. அவையும் நானும் ஒன்று அல்ல.

ஒன்றாக நினைப்பதால், வேறு மதத்தைச் சார்ந்தவனை, வேறு நாட்டுக்காரனை கண்டால் ஒரு எதிர்ப்பு உணர்வு வருகிறது.

என் நாட்டை, என் மதத்தை, என் ஜாதியை, என் குலத்தை பற்றி  யாராவது தவறாகச் சொன்னால் எனக்கு கோபம் வருகிறது. அவர்களோடு சண்டைக்குப் போகிறேன்.  கொல்லவும் துணிகிறேன்.

அவர்கள் என்னையே சொல்வதாக நினைக்கிறேன். காரணம் நான் எனக்கும் அவற்றிற்கும் உள்ள வேறுபாட்டை அறிவது இல்லை.

என்னை ஒருவன் முட்டாள் என்று சொன்னால் கோபம் வருகிறது. காரணம், நான் படித்த , பெற்ற அறிவோடு என்னை சேர்த்துக் கொள்கிறேன். நான் அறிஞன் என்று நினைக்கிறேன். அதற்கு எதிர் கருத்தை யாராவது சொன்னால், ஏற்றுக் கொள்ள என் மனம் மறுக்கிறது.

அத்தனை சங்கிலிகளையும் ஆசை ஆசையாக எடுத்து நம்மை பிணைத்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றையும் விட்டு விட்டால் சுதந்திரமாக இருக்கலாம். நான் என்பது இந்த உடல் கூட அல்ல என்றால் ஆண் பெண் வேறுபாடு, தோலின் நிறத்தை கொண்டு வரும் வேறுபாடுகளும் போய் விடும்.

நான் இவற்றை அறிபவன், இவற்றை செலுத்துபவன், இவற்றின் மூலம் அனுபவிப்பவன், ஆனால் இவை நான் இல்லை.

க்ஷேத்ரன்ஞன் , க்ஷேத்ரத்தோடு ஒன்றுவதால் தான் நான் என்ற அகந்தை பிறக்கிறது. படித்தவன், பணக்காரன், அழகானவன், உயர் குலத்தில் பிறந்தவன், வீரன், தீரன், ஆசார சீலன் என்ற எண்ணங்கள் உருவாகிறது. நாளடைவில், அதுவே நாமாகிப் போகிறோம்.

இந்த வேற்றுமையை அறியும் போது நான் வேறு, அவை வேறு என்று அறியும் போது இவை எல்லாம் இல்லாத நான் யார் என்று தெரிய வரும்.

இவை இல்லாத நானும், இவை இல்லாத நீங்களும் ஒன்றுதான் என்ற தெளிவு பிறக்கும். உங்களை என்னில் இருந்து பிரிப்பது நானும், நீங்களும் நம்மைச் சுற்றி உள்ளவைகளோடு நம்மைச் சேர்த்துக் கொள்வதால்.

அவற்றை விட்டு விலகி நின்றால், நாம் ஒன்று சேர்வோம்.

இவை வேறு நான் வேறு என்று நினைத்தால், அவற்றைச் சேர்பதன் மூலம் நான் ஒன்றும் உயரப் போவது இல்லை என்று தெரியும்.

படிப்பு, பணம் என்று சேர்த்து அறிஞன், பணக்காரன் என்ற பட்டங்கள் எல்லாம் வியர்த்தம் என்று தெரியும்.

இதை அறிபவர்கள், உயர் நிலையை அடைவார்கள் என்கிறது கீதை.

அந்த உயர்நிலையை நீங்களும் அடைவீர்கள். கீதை உங்களுக்கு  வழி காட்டும்.

வாழ்த்துக்கள்.

(To read other slogas, visit http://bhagavatgita.blogspot.in/2016/03/1334.html)