Wednesday, August 29, 2018

பகவத் கீதை - 2.14 - பொறுத்துக் கொள்

பகவத் கீதை - 2.14 - பொறுத்துக் கொள் 


मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत॥१४॥

மாத்ராஸ்பர்ஸா²ஸ்து கௌந்தேய ஸீ²தோஷ்ணஸுக²து³:க²தா³:|
ஆக³மாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பா⁴ரத ||2-14||



மாத்ரா = பொருள்கள், இயற்கை

ஸ்பர்ஸா = உணர்ச்சி

து = அது

கௌந்தேய = குந்தி புத்திரனே

ஸீ²த  = குளிர்ச்சி

உஷ்ண = சூடு

ஸுக = சுகம்

து³:க²தா³: = துக்கம்


ஆக³ம் = வரும்

அபாயிநோ = போகும்

அநித்யாஸ் = நிரந்தரம் இல்லாதது

தாம் = அவை

ஸ்திதிக்ஷஸ்வ = பொறுத்துக் கொள்ள வேண்டும்

பா⁴ரத  = பாரத குல தோன்றலே



குந்தியின் மகனே, பாரத குலத் தோன்றலே, குளிரும், வெப்பமும், இன்பமும், துன்பமும் ஆகிய இந்த இயற்கையின் தீண்டல்கள் நிரந்தரமானவை அல்ல. இவற்றை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும். 


இன்பம் வந்தால் அந்த இன்பம் அப்படியே வாழ் நாள் எல்லாம் தொடர வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். துக்கம் வந்தால், இந்த துக்கம் சீக்கிரம் முடியாத என்று வருந்துகிறோம். ஒரு வேளை இந்த துக்கத்தில் இருந்து நாம் விடுபடவே முடியாதோ, இது இப்படியே இருந்து விடுமோ என்று பயப்படுகிறோம். 

இன்பம் மட்டும் வேண்டும்; துன்பம் வேண்டவே வேண்டாம் என்று நினைக்கிறோம். 

எப்படி ஒரு வருடத்தில் குளிர் காலமும், வெயில் காலமும் வந்து வந்து போகிறதோ, அதே போல இன்பமும் துன்பமும் வந்து வந்து போவது இயற்கை.  

வாழ்க்கைப் பயணம் இன்பம் , துன்பம் என்ற இரண்டின் வழியாகத்தான் போகும். இது தவிர்க்க முடியாதது. 

கீதை என்ன சொல்ல வருகிறது என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும். 

குளிர் காலம் வரும். நாம் என்ன செய்தாலும், எவ்வளவு வருந்தினாலும், எவ்வளவு அது வரக் கூடாது என்று ஆசைப் பட்டாலும், பிரார்த்தனை பண்ணினாலும் அது பாட்டுக்கு வரும். வந்தே தீரும். சரி, வந்து விட்டதே என்று சோர்ந்து உட்கார்ந்து விட்டால், அது போகுமா என்றால் போகாது. எவ்வளவு நாள் இருக்க வேண்டுமோ  அவ்வளவு நாள் இருந்து விட்டுத் தான் போகும். 

ஐயோ, குளிர் காலம் வந்து விட்டதே என்று வருந்துவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?  அதே போல, அடடா இந்த கோடை காலம் போட்டு இப்படி வறுத்து எடுக்கிறதே  என்று வருந்துவதில் ஏதாவது பலன் உண்டா? இல்லை அல்லவா? அதே போல துன்பம் வந்த காலத்தில் வருந்துவதில் ஒரு பயனும் விளையாது. 

அது இயற்கை. அது அப்படித்தான் இருக்கும். நாம் அதை ஒன்றும் செய்ய முடியாது. 

அது மட்டும் அல்ல, ஒரு காலத்தில் இன்பம் தந்த ஒன்று பிற்காலத்தில் அதுவே நமக்கு துன்பம் தரலாம். 


இன்பம் வேண்டும் என்றுதான் திருமணம் செய்து கொள்கிறோம். முதலில் இன்பமாகத்தான் இருக்கிறது. அந்த இன்பம் அப்படியே இருக்கிறதா ? அதுவே துன்பமாக மாறிப் போவது இல்லையா ?


மனைவியோடு ஸ்விட்சர்லாந்து, நைனிட்டால் என்று குளிர் பிரதேசத்தில் தேனிலவு போன போது சுகம் தந்த குளிர் வயதான காலத்தில் மூட்டு வலியை அதிகப் படுத்துகிறது. 

சுவை தந்த ஐஸ் கிரீம் , சர்க்கரை நோய் வந்த வயதான காலத்தில் உயிருக்கே உலை வைத்து விடும். 

எதுவும் நிரந்தரம்  இல்லை இங்கே.

இன்பத்தின் கருவில் துன்பம் இருக்கிறது. துன்பத்தின் கருவில் இன்பம் இருக்கிறது. 

இன்பம் வரும் போது நினைக்க வேண்டும் - இது நிரந்தரம் அல்ல. இது போய் விடும் என்று. 

துன்பம் வரும் போது நினைக்க வேண்டும் - இதுவும் நிரந்தரம் அல்ல. இதுவும் போய் விடும் என்று. 

எல்லாமே இப்படி நிரந்தரம் இல்லாமல் போய் கொண்டே இருந்தால், இவற்றை அறிவதன் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது ? 

எல்லாமே அநித்தியம் என்று சாமியார் மாதிரி இருக்கவா சொல்கிறது கீதை? 

இல்லை. 

பின் கீதை நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது ? 

வாருங்கள், கீதையின் விரல் பற்றி நடப்போம். அது கூட்டிச் செல்லும் வழியில் சென்று   அது உணர்த்துவதை அறிவோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/214.html

Saturday, August 25, 2018

பகவத் கீதை - 2.13 - உடலும் , உடலை செலுத்துபவனும்

பகவத் கீதை - 2.13 - உடலும் , உடலை செலுத்துபவனும் 




देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥

தே³ஹிநோऽஸ்மிந்யதா² தே³ஹே கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா² தே³ஹாந்தரப்ராப்திர்தீ⁴ரஸ்தத்ர ந முஹ்யதி ||2-13||


தேஹிநா = உடலை உடையவன்

அஸ்மிந் = இந்த


யதா = அப்படியே

தேஹே  = உடல்

கௌமாரம் = குழந்தைப் பருவம்

யௌவநம் = இளமைப் பருவம்

ஜரா = முதுமை பருவம்

ததா = எப்படியோ

தேஹாந்தரப்ராப்திர் = உடலை அடைவைத்தைப் போல

தீ⁴ரஸ் = அறிவுள்ளவன்

தத்ர = அது போல

ந = இல்லை

முஹ்யதி = குழப்பம


உடலுக்கு எப்படி குழந்தைப் பருவம், இளமைப் பருவம், மூப்பு என்று தோன்றுகிறதோ அது போல உடலை உடையவனுக்கும். தீரன் இவற்றைப் பற்றி கலங்க மாட்டான். 

உரை

பயத்தில் பெரிய பயம், மரண பயம். மரணம் பற்றி பயப்படாதவர்கள் யார்? தன் மரணம், தனக்கு நெருங்கிய உறவினர் மரணம் இரண்டுமே துக்கம் தான்.

எத்தனை வருடத்தில் ஒருவர் இறந்தாலும், அந்த மரணம் எப்படியோ சிலருக்கு துக்கத்தை உண்டாக்கத்தான் செய்கிறது.

என்னதான் சமாதானம் சொன்னாலும், அறிவு ஏற்க மறுக்கிறது. அது எப்படி துக்கம் இல்லாமல் போகும் என்ற கேள்வி முன்னே வந்து நிற்கிறது.

கீதை என்ன சொல்கிறது?



நாம் குழந்தையாக இருந்தோம். பின் இளமைப் பருவத்தை அடைந்தோம்.  பின் முதுமை பருவத்தை அடைகிறோம். இல்லையா. அதில் சந்தேகம் இல்லையே.


நாம் ஒரே சமயத்தில் குழந்தையாகவும், இளைய வயது உடையவராகவும் இருந்து இருக்கிறோமா ?

ஒரே சமயத்தில் இளைய வயது உடையவராகவும், வயதானவராகவும் இருந்து இருக்கிறோமா ?

இல்லை அல்லவா ?

குழந்தை என்பது மறைந்து, இளமை பிறக்கிறது. இளமை மறைந்து மூப்பு தோன்றுகிறது.

அதாவது, குழந்தையின் மரணத்தில் இளமை, இளமையின் மரணத்தில் முதுமை ஜனனம்.

ஒன்று மறைந்தால் தான், இன்னொன்று தோன்றும்.

விதை அழிந்தால் தான் விருட்சம் தோன்றும்.

விதையும் வேண்டும், விருட்சமும் வேண்டும் என்றால் முடியுமா ?

கூட்டுப் புழு மறைந்தால் தான் பட்டுப் பூச்சி தோன்றும்.

குழந்தை, இளமை,முதுமை என்று நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம்.

நமது ஒரு வயது படத்தைப் பார்த்தால் நமக்கே நம்மை அடையாளம் தெரியாது.

அந்த குழந்தை யாரோ மாதிரி இருக்கும்.

90 வயது தாத்தா, தனது 18 வயது படத்தைப் பார்த்தால் "இது நானா " என்று கேட்பார்.

குழந்தை மறைந்து விட்டது.

இளமைப் பருவம் மறைந்து விட்டது.

ஆனால், இந்த உடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் தான் குழந்தை, நான் தான் இளைஞன், நான் தான் முதியவன்.

இந்த உடல் மாறி விட்டது. ஆனால், நான் மாறவில்லை. இந்த அனைத்து நிலைகளிலும் இருப்பவன் "நான்".

யார் இந்த நான் ?

மாறும் இந்த நிலைகளுக்கு நடுவில், மாறாமல் இருக்கும் அந்த நான் யார் ?

அந்த நான் என்பது இந்த உடல் இல்லை என்று தெரிகிறது. ஏன் என்றால் இந்த உடல் மாறுகிறது. நான் மாறாமல் இருக்கிறது.

மாறாத அந்த நான் யார் ? குழந்தை, இளமை, மூப்பு வரை வந்த அந்த நான் இதோடு நின்று விடுமா ? அல்லது இன்னும் தொடருமா ?

"உடல் எப்படி மாறி மாறி வருகிறதோ, அது போல அந்த உடலை கொண்ட அதுவும் தொடர்ந்து மாறி மாறி வரும் "

என்கிறது கீதை.

கீதை , உடல், உடலைக் கொண்டது என்ற இரண்டு வார்த்தைகளை கையாள்கிறது.

தேஹே , தேஹினா ...உடல், உடலைக் கொண்டது. ஆத்மா என்று நேரடியாகச் சொல்லவில்லை.

உடல் வேறு, உடலை செலுத்தும் அது வேறு என்று அடையாளம் காட்டுகிறது கீதை.

இந்த வேறுபாட்டை அறிந்தவன் மரணத்தை கண்டு கலங்க மாட்டான் என்கிறது கீதை.

இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கீதை என்ற நீண்ட பயணத்தில் முதல் அடி இந்த வேறுபாட்டை அறிந்து கொள்வது.

அடுத்தது, இதை விட மிக மிக ஆழமான கருத்தை கூற இருக்கிறது.

இதை முதலில் மனத்தில் நிறுத்துங்கள்.

நான் என்பது இந்த உடல் அல்ல என்பதை உணருங்கள்.

நான் என்பது இந்த உடல் அல்ல என்றால், மற்றவர்களும் அவர்களின் உடல் அல்ல என்று புரிகிறது அல்லவா ?

பின் தாய், தந்தை, உறவு, பகை, நட்பு, கருணை , பாசம், கோபம், பொறாமை என்பதெல்லாம் யாருக்கு யார் மேல் வருகிறது ?

இதை அறிவது தான் கீதையை அறிவது.

கண்ணன் சிலைக்கு மாலை போடுவது, ஊதுவத்தி கொளுத்துவது, விரதம் இருப்பது, பட்சணம் செய்வது சாப்பிடுவது அல்ல கீதையின் நோக்கம்.

தன்னைத் தான் அறிவது தான்  கீதையின் நோக்கம்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/213.html

Tuesday, August 21, 2018

பகவத் கீதை - 2.12 - இல்லாமல் இருந்ததும் இருக்கப் போவதும்

பகவத் கீதை - 2.12 - இல்லாமல் இருந்ததும் இருக்கப் போவதும் 



नत्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्॥१२॥

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி⁴பா:|
ந சைவ ந ப⁴விஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ||2-12||


ந = இல்லை

து = நீ

எவ = நிச்சயமாக

அஹம் = நான்

ஜாது = எப்போதும்

நா  = இல்லை

அஸம் = இருத்தல்

ந = இல்லை

த்வம் = நீ

ந = இல்லை

இமே = இவர்கள்

ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்

ந = இல்லை

எவ = நிச்சயமாக

ந = இல்லை

ப⁴விஷ்யாம: = இருப்போம்

ஸர்வே = அனைவரும்

வயம் = நாம்

அத = இதில் இருந்து, இங்கிருந்து

பரம் = எதிர் காலத்தில்


இதற்கு முன் நான் இல்லாமல் இருந்தது இல்லை. நீயும் மற்ற அரசர்களும் அப்படியே. இனியும் எதிர்காலத்தில் நாம் இல்லாமல் இருக்கப் போவதும் இல்லை. 


மிக மிக ஆழமான, அர்த்த செறிவு கொண்ட ஸ்லோகம். இதற்கு எத்தனையோ பேர் எவ்வளவோ விதமாக வியாக்கியானம் எழுதி விட்டார்கள்.

ஸ்லோகத்தின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

நான் கொஞ்சம் வேறு விதமாக யோசித்துப் பார்க்கிறேன்.

நாம் கொஞ்ச காலத்துக்கு முன் பிறந்தோம். இன்னும் கொஞ்ச காலத்தில் இறப்போம். இல்லாமல் போவோம். அவ்வளவுதானே வாழ்க்கை.

இல்லை என்கிறது கீதை.

நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கிறீர்கள். இறந்த பின்னும் இருக்கிறீர்கள் என்கிறது கீதை.

நீங்கள்  ,மட்டும் அல்ல எல்லோருமே அப்படித்தான் என்கிறது கீதை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம்.

நாம் தோன்றினோம் என்றால் இதில் இருந்து தோன்றினோம்? ஏதோ ஒன்றில் இருந்துதானே  தோன்றி இருக்க முடியும்? சூன்யத்தில் இருந்து தோன்ற முடியாதே ?

நாம் மறைக்கிறோம் என்றால், ஏதோ ஒன்றினுள் நாம் மறைந்து போகிறோம் என்றுதானே அர்த்தம். ஒன்றும் இல்லாமல் காணாமல் போக முடியாதே ?

எங்கிருந்து வந்தோம் ? எங்கே போகிறோம்.

இது இரண்டும் நமக்குத் தெரிய வேண்டும்.

விதை இருக்கிறது. விதையில் இருந்து செடி வருகிறது. செடியில் இருந்து மரம் வளர்கிறது. மரம் பூத்து, காய்த்து, கனி தந்து, அதில் இருந்து இன்னொரு விதை வருகிறது.

இந்த புதிய விதைக்கு பழைய விதை ஆதாரம். அந்த பழைய விதையில் இருந்து புதிய விதை வந்தது.

இந்த புதிய விதை விழுந்து, மறைந்து இன்னொரு செடி மரம் பூ காய் கனி விதை என்று மீண்டும் ஒரு சூழல் வரும்.

எந்த ஒரு விதையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு எத்தனையோ முந்தைய வடிவங்கள் இருக்கிறது. அதற்கு எத்தனையோ பிந்தைய வடிவங்களும் இருக்கப் போகின்றன.

சரி, இன்னொரு உதாரணம் பார்ப்போம்.


கடலில் அலை எழுகிறது. புதியதாய் ஒரு அலை தெரிகிறது. அது உயர்ந்து எழுந்து, பின் விழுந்து மறைகிறது. மறைந்த அந்த அலையில் இருந்து இன்னொரு புதிய அலை உருவாகிறது.

எந்த ஒரு அலைக்கும் கணக்கில் அடங்கா எத்தனையோ பழைய அலைகள் உள்ளன. அதில் இருந்து எத்தனையோ புதிய அலைகள் பிறக்க இருக்கின்றன.

நாம் ஒரு அலையை மட்டும் பிடித்துக் கொண்டு, அடடா, இது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று மகிழ்கிறோம். ஐயோ, அந்த அலை உடைந்து விட்டதே , அழிந்து விட்டதே என்று அழுகிறோம்.

இது புத்திசாலிகள் செய்யும் செயலா ?

ஒருவன் கடற் கரையில் நின்று கொண்டு, ஐயோ, நான் என்ன செய்வேன். எனக்கு துக்கம் தாளவில்லையே. எத்தனயோ அலைகள் இறந்து போய் விட்டனவே என்று  அழுது கொண்டிருந்தால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?

சரி, உயிர் இல்லாத அலையும், உயிர் உள்ள மனிதர்களும் ஒன்றா என்று கேட்டால், ஒன்று இல்லைதான்.

ஆனால், மனிதன் தோன்றுவதும், வளர்வதும், அழிவதும் ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டே இருப்பது தானே. அலை போல் எழுவதும் விழுவதும் சகஜம் தானே. இதில் பிறந்த உடன் சிரிப்பதும், இறந்தவுடன் அழுவதும் என்ன சிறப்பு சேர்க்கும்?

காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. தோன்றுவதும், வளர்வதும், அழிவதும்  மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்.

இதை நிறுத்த நினைப்பது அறிவீனம்.

நிறுத்தவும் முடியாது. கூடாது.

நாம் இன்று இருக்கிறோம் என்றால், எத்தனையோ யுகங்களாக  நாம்  பிறந்து  வளர்ந்து அழிந்து கொண்டிருக்கிறோம். இது புதிய வாழ்க்கை அல்ல. மீண்டும் மீண்டும் மாறி மாறி  நிகழ்ந்து கொண்டே இருப்பதன் ஒரு சிறு நிகழ்வுதான் இந்த வாழ்க்கை.

இதை ஒரு தொடராக பார்க்க வேண்டுமே தவிர ஒரு தனித்த நிகழ்வாக பார்க்கக் கூடாது.

நான் முன் ஜென்மம், மறு ஜென்மம் என்று கூறவில்லை.

எந்த ஒரு விதையும் அதற்கு முந்திய விதையின் மறு பிறவியோ அல்லது இனி வரும் விதையின் முற் பிறவியோ அல்ல.

அது தோன்றியது , மறைகிறது. மீண்டும் தோன்றும். மறையும்.

அவ்வளவுதான்.

சிந்தித்துப் பாருங்கள் - இந்த உடல், இவ்வளவு எடை, எலும்பு, தோல், தசை எல்லாம் எப்படி வந்தது ? உணவில் இருந்து, காற்றில் இருந்து, சூரிய ஒளியில் இருந்து. நாம் ஒரு வேதியல் கலவை. இந்த கலவை மாறிக் கொண்டே இருக்கிறது. இறப்பும் ஒரு கலவை தான். வாழ்வு எப்படி ஒரு கலவையோ அது போல.

யோசியுங்கள்.

இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை.

இது ஒரு வித சிந்தனை. அவ்வளவுதான்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/212.html







Sunday, August 19, 2018

பகவத் கீதை - 2.11 - யாருக்காகவும் வருந்தத் தேவை இல்லை

பகவத் கீதை - 2.11 - யாருக்காகவும் வருந்தத் தேவை இல்லை 



श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे।
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः॥११॥

ஸ்ரீப⁴க³வாநுவாச அஸோ²ச்யாநந்வஸோ²சஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதா³ம்ஸ்²ச பா⁴ஷஸே|
க³தாஸூநக³தாஸூம்ஸ்²ச நாநுஸோ²சந்தி பண்டி³தா: ||2-11||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்

அஸோ²ச்யந் = வருந்தாதே

அநந்வஸோ²சஸ் = வருந்துபவனே

த்வம் = நீ

ப்ரஜ்ஞா = ப்ர + ஞானம் = உயர்ந்த ஞானம்

வாதா³ம் = வாதம், சொற்கள்

ச = மேலும்

பா⁴ஷஸே| = நீ சொல்கிறாய்


கதாஸூந் = மூச்சு விடுபவர்கள் போய் விட்டார்கள் (இறந்தவர்கள்)

ந = இல்லை

கதாஸூம்ஸ் = மூச்சு விடுபவர்கள்

ச = மேலும்

நா = இல்லை

அநுஸோ²சந்தி = வருத்தம்

பண்டி³தா:  = ஞானிகளுக்கு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: யாருக்காக வருத்தப் பட வேண்டாமோ அவர்களுக்காக நீ வருந்துகிறாய். இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் ஞானிகள் வருந்த மாட்டார்கள். 


பதின்மூன்று வருடங்கள் பாண்டவர்கள் காட்டில் இருந்தார்கள். கண்ணன் அவர்களுக்கு அப்போது கீதையை சொல்லி இருக்கலாம். ஒரு அவசரமும் இல்லாமல், நிறுத்தி நிதானமாக சொல்லி இருக்கலாம். அர்ஜுனனுக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் சொல்லி இருக்கலாம். அங்கெல்லாம் சொல்லவில்லை. போர் முனையில், சங்குகள் முழங்கிய பின், சண்டை தொடங்கும் இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?


உயர்ந்த உண்மைகளை அறிந்து கொள்ள ஒரு மன நிலை வேண்டும். ஒரு தாகம் வேண்டும்.  ஒரு தவிப்பு வேண்டும். ஏதோ காட்டில் பொழுது போகவில்லை. "நீ கீதை சொல்லு, நாங்க கேட்கிறோம்" என்று கேட்டால், அதில் ஒரு பலனும் இருக்காது.



இரண்டாவது, மனிதன் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறான்.  எல்லாம்  தெரிந்தவனுக்கு எதைச் சொல்வது? எப்படி சொல்வது? கோப்பை காலியானால் அல்லவா அதில் மேலும் எதையாவது ஊற்ற முடியும்.



அர்ஜுனன், "எனக்கு ஒன்றும் தெரியாது. உன் சரண். நான் உன் சீடன். எனக்கு கட்டளை இடு" என்ற நிலை வந்தபின் தான் அவனுக்கு கீதை தரப் பட்டது. அந்த பக்குவம் வர வேண்டும்.


கண்ணன் கீதை சொன்னபோது , அந்த போர்க்களத்தில் பலர் இருந்திருப்பார்கள். அவர்களுக்கும், கண்ணன் சொன்னது கேட்டிருக்கும். இருந்தும் பயன் இல்லை. கற்பூரம் சுமந்த கழுதையாக அவர்கள் இருந்திருப்பார்கள்.



நாம் அப்படி இருக்கக் கூடாது. அர்ஜுனனாக இருந்து, அந்த தாகத்தோடு, அந்தத் தவிப்போடு, அந்த சரணாகதி மனதோடு  கீதையை உணர வேண்டும்.


சரி, இந்த சுலோகத்துக்கு வருவோம்.


கண்ணன் சொல்கிறான், "யாருக்காக வருந்தத் தேவை இல்லையோ, அவர்களுக்காக நீ வருந்துகிறாய். ஞானிகள் இறந்தவர்களுக்காகவும், இருப்பவர்களுக்காகவும்  வருந்துவது இல்லை " என்று.


நமக்கு மிக வேண்டியவர்கள், நம்மோடு அன்பாக இருந்தவர்கள், உறவாக இருந்தவர்கள், நெருக்கமாக இருந்தவர்கள் இறந்து போனால் நாம் வருந்துகிறோம். அழுகிறோம். அவர்கள் போய் விட்ட சோகத்தில் தவிக்கிறோம்.


நாம் எதற்காக வருந்துகிறோம்?


இறந்து போனவர்களுக்காகவா ? அவர்கள் தான் இறந்த போய் விட்டார்களே? அவர்களுக்கு ஒரு வலியும் இல்லை. துன்பமும் இல்லை. அவர்களுக்காக நாம் எப்படி வருந்த முடியும்?


சரி, அவர்களுக்காக இல்லை, அவர்கள் நம்மிடம் இல்லையே என்று வருந்துகிறோம். சரி தானே ? அவர்கள் இருந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நினைத்து வருந்துகிறோம்.




அப்படி என்றால், வருத்தம் அவர்கள் பொருட்டு அல்ல. நமக்கு கிடைக்காத ஒரு இன்பத்தைப் பற்றி. அது ஒரு சுயநலமான விஷயம். எனக்கு ஒன்று கிடைக்கவில்லை.அதற்காக நான் வருந்துகிறேன். இது மற்றவர்கள் சார்ந்த விஷயம் இல்லை. என் இழப்பு, என் வருத்தம்.


ஒருவர் இருக்கும் போது வருந்தத் தேவை இல்லை.


அவர்கள் இறந்த பின் அவர்களுக்காக வருந்துவதில் அர்த்தம் இல்லை.


பின், நம் வருத்தத்துக்கு காரணம், நம் சொந்த இழப்பு.


நாம் இறந்தவர்களுக்காகவும், இருப்பவர்களுக்காகவும் வருந்துவது இல்லை. நமக்காக வருந்துகிறோம். நம் சந்தோஷ இழப்புக்காக வருந்துகிறோம்.


வாழ்க்கையை சற்றே தள்ளி நின்று பார்த்தால் இது புரியும்.


சில புதிய உறவுகள் வந்தன. சில பழைய உறவுகள் சென்றன. இது நடந்து கொண்டே தானே இருக்கிறது.  இதற்காக மனம் உடைந்து உட்கார வேண்டுமா ?


அது மட்டும் அல்ல.


நாம் மற்றவர்களை எப்படி பார்க்கிறோம்?


உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் பல படிமானங்கள் உண்டு.


தூரத்தில் ஒரு உருவத்தைப் பார்க்கிறேன்.


அது பெண் என்று தெரிகிறது. அது கண் என்ற புலன் சொல்லும் படிமம்.


சற்று அருகில் வரும்போது , அட இது என் தாய் என்று தெரிகிறது. அது மனம் என்பது சொல்லும் படிமம். தாய் என்றால், அவள் அன்பு, அவள் அரவணைப்பு எல்லாம் கூடவே வருகிறது. எனக்கு தாயாக இருப்பவள் இன்னொருவருக்கு தாரமாக இருக்கலாம், இன்னொருவருக்கு மகளாக இருக்கலாம். உறவு என்ற படிமம் மனம் சார்ந்தது.


பெண் என்றால் என்ன, தாய் என்றால் என்ன...சில பல செல்களின் தொகுப்பு.  நரம்பு, எலும்பு, சதை, இதயம், மூளை என்ற பலவற்றின் தொகுப்பு என்பது அறிவு தரும் படிமம்.


யாரோ ஒரு பெண் இறந்து போனால் துக்கம் இல்லை. தாய் இறந்து போனால் துக்கம்.


ஏன் ?  மனம் தாய் பற்றிய பழைய சிந்தனைகளை கொண்டு வருகிறது. அந்த பழைய உறவின் தொடர்ச்சி எதிர்காலத்தில் இருக்காதே என்று வருந்துகிறது.


துக்கம் என்பது இப்போது இல்லை.  இறந்த காலத்தில் நடந்தது எதிர் காலத்தில் இருக்காதே என்ற எண்ணம் தான் துக்கம். வருத்தம். இல்லையா ?


இது சரியா ?


இறந்த காலம் சென்று விட்டது. எதிர் காலம் வரவே இல்லை. இரண்டுமே இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றைப் பற்றி கவலைப் படலாமா ?


கண்ணன் இன்னும் ஆழமாகப் போகிறான்.


முதல் ஸ்லோகத்திலேயே மடை திறந்தார் போல கொட்டுகிறது, அறிவின் பிரவாகம்.


ஆழ்ந்து சிந்தியுங்கள். கீதையை உள்ளுக்குள் இறங்க விடுங்கள். வாதம் பண்ணி வெளியே நிறுத்தாதீர்கள்.



முழுவதும் படித்த பின், வாதம் பண்ணலாம். அப்போதும்  உங்கள் வாதம் உயிரோடு இருந்தால்.



http://bhagavatgita.blogspot.com/2018/08/211.html

Saturday, August 18, 2018

பகவத் கீதை - 2.10 - புன்னகை பூத்த கண்ணன்

பகவத் கீதை - 2.10 - புன்னகை பூத்த கண்ணன் 



तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः॥१०॥

தமுவாச ஹ்ருஷீகேஸ²: ப்ரஹஸந்நிவ பா⁴ரத|
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே விஷீத³ந்தமித³ம் வச: ||2-10||


தம் = அவனிடம் (அர்ஜுனனிடம்)

உவாச = கூறினான் (கண்ணன்)

ஹ்ருஷீகேஸ²: = ஹிரிஷிகேச

ப்ரஹஸந் = புன்னகை பூத்து

இவ = இவ்வாறு

பா⁴ரத| = பாரத குல தோன்றலே

ஸேநயோ = சேனைகளின்

உப⁴யோர் - இரண்டு

மத்⁴யே = மத்தியில்

விஷீத³ந்தம் = துக்கத்துடன் இருக்கும்

இதம் = இவ்வாறு

வச: = பேசினான்


அப்போது, இரண்டு படைகளுக்கு நடுவில் வருத்தத்துடன் இருந்த அர்ஜூஜனைப் பார்த்து, புன்னகையோடு கண்ணன் இவ்வாறு பேச ஆரம்பித்தான் 

என்ன நிகழ்கிறது இங்கே ?

தனி மனிதன் (அர்ஜுனன்) தான் என்ற அகம்பாவம் அனைத்தையும் விட்டு விட்டு, தான் ஒரு பெரிய ஆள் இல்லை, இந்த உலகில் தான் ஒரு துளி என்று உணர்ந்து, சரண் அடையும் போது , அவனுக்கு உண்மை தரப் படுகிறது 

அர்ஜுனன் தான் பெரிய ஒரு வில்லாளி. ஆற்றல் மிகுந்தவன், அறிவு நிறைந்தவன், பலப் பல வரங்களைப் பெற்றவன் என்று ஆணவத்தோடு இருந்தான். 

அந்த ஆணவம் தான் , உண்மையை அறிய பெரிய தடைக் கல். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தால் பின் புதிதாக எதையும் தெரிந்து கொள்ள முடியாது. எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தால், எல்லாமே தெரிந்து கொள்ள முடியும். 

இந்த உடல் தான், தேர். 

இந்த தேரை கொண்டு செல்லும் குதிரைகள், நம் புலன்கள் 

நம் சாமர்த்தியம், அறிவு, செல்வாக்கு என்பதெல்லாம், அர்ஜுனனின் காண்டீவம், அம்பு .

கடைசியில், அனைத்தையும் விடுத்து, முழுவதுமாக சரண் அடைந்து, நீயே சொல் என்று கண்ணனிடம் சரண் அடைந்து விட்டான். 

புலன்களால் செலுத்தப்படும் இந்த உடலினுள் இருக்கும் "நான்" என்ற அகம்பாவம், தன்னை மறந்து சரண் அடையும் போது கீதை என்ற மிகப் பெரிய உண்மையின் தரிசனம் கிடைக்கிறது. 


நானும்தான், கீதை படிக்கிறேன். அதில் அப்படி என்னதான் இருக்கிறது. கண்ணன் சொல்வது சரியா ? அதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேட்க ஆரம்பித்தால் , நீங்கள் இன்னும் உங்கள் "நான்" என்ற அகம்பாவத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

கொஞ்ச நேரம் , "நான் பெரியவன். எனக்கு எல்லாம் தெரியும்.  கீதையாவது ஒண்ணாவது,  எனக்குத் தெரியாத ஒன்றா " என்ற உங்கள் எண்ணத்தை சற்றே தள்ளி வைத்து விட்டு , அர்ஜுனன் மாதிரி, உன்னிடம் சரண் என்று தன்  காண்டீவத்தை தரையில் வைத்து விட்டு அமைதியாக அமர்ந்ததைப் போல அமருங்கள். 

உங்களுக்கும் கீதையின் தரிசனம் கிடைக்கும். 

இல்லை, வாதம் தான்  பண்ணுவேன் என்றால், காத்திருக்க வேண்டியது தான். 

அர்ஜுனன் சரண் அடைந்தான் - கீதை கிடைத்தது. 

"நான்" என்ற திரை விலகும் வரை, உண்மையின் தரிசனம் கிடைக்காது. 

திரை விலகினால், கண் முன்னே உண்மை வெளிப்படும். 

உங்கள் இஷ்டம். நான் என்ற எண்ணம் குறுக்கிடாமல் வாசித்தால், கீதை உங்களுக்கும் கிடைக்கும். இல்லை என்றால், ஏதோ ஒன்றை படித்தோம், பொழுது போனது, "வாசிக்க நல்லாத்தான் இருக்கு...நடை முறைக்கு சரி வருமானு தெரியலை" என்ற குழப்பம் மட்டுமே மிஞ்சும். 


என்ன, முடிவு செய்து விட்டீர்களா ? கீதை வேண்டுமா அல்லது பொழுது போக வேண்டுமா என்று....






Friday, August 17, 2018

பகவத் கீதை - 2.9 - அமைதியாக அமர்ந்தான்

பகவத் கீதை - 2.9 - அமைதியாக அமர்ந்தான் 


सञ्जय उवाच
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तपः।
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह॥९॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் கு³டா³கேஸ²: பரந்தப:|
ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³முக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ ||2-9||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்

ஏவம் = இவ்வாறு

உக்த்வா = (அர்ஜுனன்) சொன்ன பின்

ஹ்ருஷீகேஸ²ம் = ரிஷிகேசன் என்ற கண்ணன்

கு³டா³கேஸ²: = தூக்கத்தை வென்ற

பரந்தப:| = எதிரிகளை அழிக்கும்

ந = இல்லை

யோத்ஸ்ய = சண்டை இடுதல்

இதி = இந்த

கோ³விந்த = கோவிந்தா

உக்த்வா = கூறிய பின்

தூஷ்ணீம் = அமைதியாக

ப³பூ⁴வ = அமர்ந்தான்

ஹ = உறுதியாக

சஞ்ஜயன் சொல்லுகிறான்:  பகைவர்களை எரிக்கும் ஆற்றல் பெட்ரா அர்ஜுனன், கண்ணனைப் பார்த்து "நான் இனி போர் புரிய மாட்டேன் " என்று சொல்லி விட்டு , அமைதியாக அமர்ந்து விட்டான் 

எவ்வளவோ கேள்விகள் கேட்டான் அர்ஜுனன். உறவினர்களை கொல்லலாமா ? கொன்ற பின் வரும்  இன்பம் ஒரு இன்பமா ? இதற்கு பதில் நாம் இறந்தால் அதுவே நல்லது அல்லவா ? என்றெல்லாம் கேட்டான்.

கண்ணன் பதில் சொல்லவே இல்லை. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

குழப்பத்தில் உள்ளவர்களை முழுவதும் பேச விட வேண்டும். நடுவில் புகுந்து பதில்  சொல்ல ஆரம்பித்தால் அவர்கள் முதலில் இருந்து ஆரம்பித்து விடுவார்கள். அல்லது, நான் அப்படி சொல்லவில்லை என்று முன்னால் சொன்னதுக்கு வேறு விளக்கம் தர ஆரம்பித்து விடுவார்கள். முடிவில்லாமல் போய் கொண்டே இருக்கும்.

அவர்கள் தங்கள் மனதை மொத்தமாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

அர்ஜுனன் என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டான்.

சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான்.

முடிவில், இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அமைதியாக அமர்ந்து விட்டான்.

அது மட்டும் அல்ல, முந்தைய ஸ்லோகத்தில் "நான் உன்னை சரண் அடைகிறேன். என்னை உன் சீடனாக ஏற்றுக் கொள் . நான் என்ன செய்ய வேண்டும்  என்று எனக்கு கட்டளை இடு " என்று சொன்ன அர்ஜுனன், இனிமேல்  தன்னால் ஆவது ஒன்றும் இல்லை என்று அறிந்து தன்னை முழுவதுமாக  கண்ணனிடம் ஒப்படைத்து விடுகிறான்.

"நன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே " என்று மணிவாசகர் சொன்னது போல் , இனி கண்ணன் சொல்வதை கேட்பது என்று முடிவுக்கு வந்து விட்டான்.


சரணாகதியின் மிக முக்கிய அங்கம்....யாரையாவது முழுமையாக நம்ப வேண்டும். நம்பிய பின் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும்.

மாணிக்க வாசகர் சொல்வர் , "இறைவா, நான் உன் பொருள். நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். வைத்துக் கொள் . இல்லை என்றால் விற்று விடு. இல்லை என்றால் அடமானம் வை. என்ன வேண்டுமானாலும் செய்" என்று விட்டு விட்டார். 

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

அர்ஜுனன் புலம்பல் முடிந்தது, ஒரு வழியாக.

கண்ணன் பேச ஆரம்பிக்கப் போகிறான்.

கீதையின் சாரம் தொடங்கப் போகிறது.

கேட்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/29.html

Thursday, August 16, 2018

பகவத் கீதை - 2.8 - நீங்காத துயர்

பகவத் கீதை - 2.8 - நீங்காத துயர் 



न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्।
अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्॥८॥

ந ஹி ப்ரபஸ்²யாமி மமாபநுத்³யாத்³யச்சோ²கமுச்சோ²ஷணமிந்த்³ரியாணாம்|
அவாப்ய பூ⁴மாவஸபத்நம்ருத்³த⁴ம் ராஜ்யம் ஸுராணாமபி சாதி⁴பத்யம் ||2-8||

ந = இல்லை

ஹி = அதனால்

ப்ரபஸ்²யாமி = நான் காண்கிறேன்

மமா = என்

அபநுத்³யாத்³ = விட்டு விலகி

யட் = அது

சோ²கம் = சோகம்

உச்சோஷணம் = தீர்ந்து போதல்

இந்த்³ரியாணாம்|= புலன்களை

அவாப்ய = அடைந்த பின்

பூமா = பூலோகம்

அஸபத்நம் = பொறாமை படும் படி, உயர்ந்த

ருத்³த⁴ம் = சிறக்கும்

ராஜ்யம் = இராஜ்யம்

ஸுராணாம் = தேவர்கள்

அபி = மேலும்

சா = மேலு

அதி⁴பத்யம் = ஆண்டாலும்


இந்த  பூமியில் சிறந்த செல்வங்களை பெற்றாலும், விண்ணரசே கிடைத்தாலும், புலன்களை வருத்தும் இந்த துன்பம் நம்மை விட்டு விலகவே விலகாது 


இந்த உலகமே கிடைத்தாலும், சொர்கமே கிடைத்தாலும், இவர்களை எல்லாம் கொன்று வரும் சுகம் ஒரு சுகமே இல்லை. அவர்களை கொன்ற அந்த வருத்தம் ஒரு போதும் நம்மை விட்டு விலகாது என்று வருந்துகிறான் அர்ஜுனன். 


வெற்றி பெற்றால், அரசாட்சி கிடைக்கும். செல்வ செழிப்புடன் இருக்கலாம். ஒரு வேளை தோற்றுவிட்டால், வீர சொர்கம் கிடைக்கும். எப்படியும் இன்பம் கிடைக்கும். அது நல்லதுதான். ஆனால், கூடவே, இந்த குற்ற உணர்வும் இருக்குமே. அதை என்ன செய்வது என்பது தான் அர்ஜுனனின் கேள்வி. 

குற்ற உணர்வு இல்லாமல் இன்பம் அனுபவிக்க முடியுமா என்பது அவன் கேள்வி. 

ஒவ்வொரு இன்பத்துக்குப் பின்னும் ஏதோ ஒரு துன்பம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. துன்பமே இல்லாத இன்பம் என்று ஒன்று இல்லவே இல்லை. 

இன்பம் தலை என்றால், துன்பம் வால் . தலையை பிடித்து தூக்கினால் , வாலும் கூடவே  வரும். 

ஐயோ, எனக்கு இவ்வளவு துன்பம் வந்து விட்டதே, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் என்று புலம்பும் போது சிந்திக்க வேண்டும்.  யாருக்காவது தீங்கு  செய்தால் தான் நமக்கு துன்பம் வரும் என்று இல்லை. ஏதோ இன்பத்தை நாடி இருப்போம். அதன் பக்க விளைவு துன்பம். 

இன்பம் அதிகமாகும் போது துன்பமும் அதிகம் ஆகிறது. 

அதிக பட்ச இன்பமான சொர்கம் வேண்டும் என்றால், அதிக பட்ச துன்பமான அனைத்தையும் விட வேண்டும். 

இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்றால் நடக்காது. 

ஒவ்வொரு இன்பத்துக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையை தரத் தயார் என்றால் , அந்த இன்பத்தை நோக்கி ஓடலாம். 

அது ஒரு புறம் இருக்கட்டும். 

அர்ஜுனனின் புலம்பல்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வாருங்கள். எது அவனின் துன்பம், ஏன் அவன் கவலைப் படுகிறான், எது அவனை சோர்வடையச் செய்கிறது என்று கவனியுங்கள். 

உறவினர்களை கொல்வதா ?

ஆசிரியரை கொல்வதா ?


அதெல்லாம் இல்லை. அதெல்லாம் வெளியே தெரிவது. 

அடிப்படையில் அவன் துன்பத்துக்கு காரணம் இவை அல்ல. இன்னும் சொல்லப் போனால், உலகில் உள்ள அனைத்து துன்பங்களுக்கும் அதுவே காரணம். 

கண்ணன் அதைத்தான் விளக்கப் போகிறான். 

பொறுமையாக படியுங்கள். 


பிடித்திருந்தால், கடை பிடியுங்கள். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது "இதெல்லாம் நடை முறைக்கு சாத்தியமாகாது " என்ற நமது உயரிய கொள்கை....

http://bhagavatgita.blogspot.com/2018/08/28.html




Tuesday, August 14, 2018

பகவத் கீதை - 2.7 - உன்னை சரணடைந்தேன்

பகவத் கீதை - 2.7 - உன்னை சரணடைந்தேன் 



कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः।
यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्॥७॥

கார்பண்யதோ³ஷோபஹதஸ்வபா⁴வ: ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்மஸம்மூட⁴சேதா:|
யச்ச்²ரேய: ஸ்யாந்நிஸ்²சிதம் ப்³ரூஹி தந்மே ஸி²ஷ்யஸ்தேऽஹம் ஸா²தி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம் ||2-7||


கார்பண்ய = கோழைத்தனமாக

தோஷோ பஹத = தோஷம், குற்றம், குழப்பம்

ஸ்வபா⁴வ: = குணத்துடன்

ப்ருச்சா²மி = நான் கேட்கிறேன்

த்வாம்  = நீ

த⁴ர்ம = தர்மம், அறம்

ஸம்மூட = அறியாமல்

சேதா:|  = அறிவு

யச் = அது, அந்த

ச்²ரேய: = உயர்ந்த, சிறந்த

ஸ்யாந் = இருக்கும்

நிஸ்²சிதம் = நிச்சயமாக, உறுதியாக

ப்³ரூஹி = சொல்

தந் = இந்த

மே = என்னிடம்

ஸி²ஷ்யஸ் = சீடனான

தே = உன்

அஹம் = நான்

ஸா²தி⁴ = கட்டளை

மாம் = எனக்கு

த்வாம் = நீ

ப்ரபந்நம் = சரண் அடைகிறேன்


குழம்பிய அறிவுடன், எது தர்மம், எது அதர்மம் என்று அறியாமல் மயங்கி நிற்கிறேன். நான் உன்னை கேட்கிறேன், எது சரி என்று நீ எனக்கு உறுதியாகச் சொல். நான் உன் சீடன். எனக்கு கட்டளை இது. உன்னை சரணடைந்தேன். 


அவ்வளவுதான். 

கீதையின் மிக மிக முக்கியமான சுலோகம் இது. 

என்னால் எல்லாம் முடியும் என்று தோள் தட்டி நின்ற அர்ஜுனன், குழம்பி, மயங்கி நிற்கிறான்.  என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கிறான். 

கடைசியில், அவன் வழியை கண்டு பிடித்து விட்டான். 

கண்ணனிடம் சரண் அடைந்து விடுகிறான். "எனக்கு ஒன்றும் தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. என்னை உன் சீடனாக ஏற்றுக் கொள். எனக்கு கட்டளை இது.  நீ என்ன சொல்கிறாயோ, நான் அதை கேட்கிறேன். நான் உன் சரண்" என்கிறான். 

இந்த ஸ்லோகத்தை நாம் விரிவாக ஆராய்வோம். 

முதலில், தன் அறியாமையை அர்ஜுனன் அறிந்து கொள்கிறான். தாத்தாவை கொல்ல மாட்டேன், ஆசிரியரை கொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது, "எது சரி, எது தவறு என்று தெரியவில்லை என்கிறான்". அறியாமை, குழப்பம் வருவது பெரிய விஷயம் இல்லை. அது வந்த போது , இது நமக்குத் தெரியாது என்று அறியும் அறிவு இருக்கிறதே, அது தான் பெரிய விஷயம். தெரியாத ஒன்றை, எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி செய்து மேலும் சிக்கலில் மாட்டாமல் இருப்பது புத்திசாலித்தனம் அல்லவா ?

இரண்டாவது, "உன்னை சரண் அடைந்தேன்" என்கிறான். அறிவு தடுமாறும் போது, பெரியவர்களை சரண் அடைவது தான் சரியான வழி. அறிவில், ஆற்றலில்,  திறமையில், உயர்ந்த அர்ஜுனனுக்கே குழப்பம்  வருகிறது என்றால் நாம் எம்மாத்திரம். 

மூன்றாவது, "என்னை உன் சீடனாக ஏற்றுக் கொள் " என்கிறான். நம்மால் சரண் அடைய முடியாது. நம்மை விட மற்றவர்களுக்கு பெரிதாக என்ன தெரிந்து  விடப் போகிறது என்று நினைப்போம். யார் என்ன சொன்னாலும், ஒரு சந்தேகக் கன்னோடேயே பார்ப்போம். நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததை யாராவது சொன்னால் "அதெல்லாம் நடை முறைக்கு சாத்தியம் இல்லை " என்று ஒதுக்கி விடுவோம். சீடன் என்பவன் ஆசிரியர் சொல்வதை கேட்பவன். 

நான்காவது, "நீ எனக்கு கட்டளை இடு" என்கிறான். எனக்குத் தெரியாது. நீ என்ன சொன்னாலும்  கேட்கிறேன் என்கிறான் அர்ஜுனன். 

இது என்ன ஒண்ணும் சரி இல்லையே ? சின்ன பிள்ளை மாதிரி, "எனக்கு ஒண்ணும் தெரியாது, நீ சொல்லு " என்று கேப்டது சரிதானா ? என்ற குழப்பம் நமக்கு வரலாம். 

நாம் ஒரு உண்மையை  எவ்வாறு அறிந்து கொள்கிறோம் ?

எதையும் பார்த்து, அறிந்து, சோதித்து, பல முறை சோதனை செய்த பிறகு அது சரியாக வந்தால் , அது உண்மை என்று ஏற்றுக் கொள்கிறோம். 

அது  தான் அறிவியல் முறை. தர்க முறை. 

நமது பழைய தர்க்க முறை இவற்றை தாண்டி மேலே போகிறது. 

உண்மையை அறிந்து கொள்ள மூன்று விதமான பிரமாணங்களை சொல்கிறார்கள். (பதினாறுக்கும் மேலே உள்ளது. முக்கியமானது மூன்று). 

காட்சி பிரமாணம் 
அனுமான பிரமாணம் 
ஆகம பிரமாணம் 

என்பவை அவை. 

காட்சி பிரமாணம் என்றால், நம் புலன்களால் உணர்ந்து அறிவது. தொட்டு, முகர்ந்து, பார்த்து, ருசித்து, அளந்து அறிவது. அது தான் நவீன அறிவியல் முறை. 

அதற்கு மேலே உள்ளது அனுமான பிரமாணம். காணாத ஒன்றை, புலன்களால் அறியாத ஒன்றை அறிவது. அது எப்படி ?

தூரத்தில் உள்ள மலையில் புகை வருகிறது.  புகை வந்தால், அங்கே நெருப்பு இருக்கும்  என்று அனுமானிக்கிறோம். நெருப்பை கண்ணால் பார்க்கவில்லை, அதன் சூட்டை உடல் அறியவில்லை. எங்கோ புகை வருகிறது. அதை வைத்து நெருப்பு இருக்கும் என்று அறிகிறோம்.  இது அனுமான பிரமாணம். 

மூன்றாவதாக உள்ளது ஆகம பிரமாணம். அதாவது, பெரியவர்கள் சொல்வதை அப்படியே கேட்பது. அவர்கள் எழுதி வைத்து விட்டு போன்றவற்றை கடை பிடிப்பது. அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். உண்மையைத் தான்  சொல்வார்கள் என்று நம்புவது. 

இராமன் முதலில் வசிட்டரிடம் படித்தான். அனைத்து சாத்திரங்களையும் படித்து அறிந்து விட்டான். ஒரு நாள் அவன் விசுவாமித்திரருடன் காட்டில் சென்று கொண்டு இருக்கிறான். அப்போது தாடகை என்ற அரக்கி வருகிறாள்.  விசுவாமித்ரன் அவளை கொல் என்கிறான். 

இராமன் மறுக்கிறான். பெண்ணைக் கொல்லக் கூடாது என்பது அவன் படித்த சாத்திரம். 

விசுவாமித்த்ரன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். 

கடைசியில் இராமன் , விசுவாமித்த்ரன் சொல் கேட்டு தாடகையை கொன்று விடுகிறான். 

இராமானுக்குப் புரிகிறது. புத்தக அறிவின் எல்லை மிகச் சுருங்கியது. அறம் என்பது படித்த புத்தகங்களோடு நிற்பது அல்ல. ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் சொல்வதுதான் அறம் என்று முடிவு செய்கிறான். 

இராமன் சொல்கிறான், "நீ (விஸ்வாமித்ரர்) அறம் அல்லாதவற்றை சொன்னால் கூட அதை  வேதம் என்று கொண்டு செய்து முடிப்பேன் என்கிறான் "


 ஐயன் அங்கு அது கேட்டு,
    ‘அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க
    என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம்
    எனக் கொடு
செய்கை அன்றோ அறஞ்
    செயும் ஆறு? ‘என்றான்.

பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதே அறத்தின் வழி (அறம் செய்யும் ஆறு) என்கிறான். 

இராமாயணத்தின் முக்கிய புள்ளி அது. 

இராமாயணம் என்றால் இராமன் + அயனம். அயனம் என்றால் பாதை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று சொல்வது போல. இராமன் காட்டிய பாதை எது ?

சகோதரத்துவம் என்று சொல்லுவார்கள். வாலியை கொன்று சுக்ரீவனுக்கு அரசு தந்தான், இராவணனை கொன்று வீடணனுக்கு அரசு தந்தான் ...இதுவா சகோதரத்துவம்? 

அல்ல. 

இராமன் காட்டிய பாதை பெரியவர்களை மதிப்பது . அவர்கள் சொல்வதை ஏற்று நடப்பது. 

இராமாயணம் முழுக்க இதைக் காணலாம். அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம். அதைப் புரிந்து கொண்டால் வாலி வதம் குற்றம் அற்றது என்று புரியும். 

அறம் என்றால் என்ன என்று சொல்ல வந்த பரிமேல் அழகர் இரண்டே வரியில்  அழகாக சொல்லிவிட்டுப் போய்  விட்டார்.

வேதம் முதலிய நூல்களில் சொன்னவற்றை கடை பிடிப்பது. அவை விலக்கச் சொன்னவற்றை  விலக்குவது . அதுதான் அறம். 

இதை விட எளிமையாகச் சொல்ல முடியாது. 

மீண்டும் கீதைக்கு வருவோம். தான் படித்த சாத்திரங்கள் கை கொடுக்கவில்லை என்று அறிந்த பின், அர்ஜுனன் கண்ணனை சரண் அடைகிறான். 

பெரியாரை துணை கோடல் என்று ஒரு அத்தியாயமே எழுதி இருக்கிறார் வள்ளுவர். படித்துப்  பாருங்கள்.

வாழ்வில் சிக்கல் வரும். குழப்பம் வரும். மயக்கம் வரும். எது சரி, எது தவறு என்று  தெரியாமல் தள்ளாடுவோம். அப்போது , ஞாபகம் வைத்துக்  கொள்ளுங்கள். பெரியவர்களை சரண் அடைந்து அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். 

இப்போது, பெரியவர்களுக்கு எங்கே போவது. கண்ணன் போன்ற ஒரு ஆள் கிடைக்குமா ? நிச்சயம் கிடைக்காது. 

நீங்கள் மதிக்கும் பெரியவர், படித்தவர், ஒழுக்கம் நிறைந்தவர், உங்கள் நலனில் அக்கறை உள்ளவர் என்று ஒருவர் இருந்தால், அவர் சொல்வதைக் கேளுங்கள். 

இல்லை என்றால், பெரியவர்களை எழுதி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள். அவற்றை படித்து தெளிவு பெறுங்கள். அவற்றைப் படித்து அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். 

சரி. அர்ஜுனன் சொன்னான், "எனக்கு கட்டளை இடு " என்று. 

கண்ணன் "சரி. போ போர் செய்" என்று கட்டளை இட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால், கீதை இந்த ஸ்லோகத்தோடு முடிந்து இருக்கும். 

கண்ணன் அப்படி கட்டளை எதுவும் இட்ட மாதிரி தெரியவில்லை. 

பின் என்னதான் சொன்னான் ?

அதையும் தான் பார்ப்போமே....

http://bhagavatgita.blogspot.com/2018/08/27.html









Monday, August 13, 2018

பகவத் கீதை - 2.6 - யாரை யார் வென்றால் நலம்?

பகவத் கீதை - 2.6 - யாரை யார் வென்றால் நலம்?




न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः।
यानेव हत्वा न जिजीविषामस्तेऽवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः॥६॥

ந சைதத்³வித்³ம: கதரந்நோ க³ரீயோ யத்³வா ஜயேம யதி³ வா நோ ஜயேயு:|
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேऽவஸ்தி²தா: ப்ரமுகே² தா⁴ர்தராஷ்ட்ரா: ||2-6||

ந = இல்லை

ச  = மேலும்

எதத் = இந்த

வித்³ம: = நாம் அறிந்த

கதரந் = இரண்டில்

நோ = நமக்கு

க³ரீயோ = சிறந்தது

யத்³வா = அல்லது

ஜயேம = வெற்றி

யதி³ வா = அல்லது

நோ = நம்

ஜயேயு:| = வெற்றியா

யா = அவர்கள்

எவ = நிச்சயமாக

ஹத்வா = கொன்ற பின்

ந = இல்லை

ஜிஜீவிஷாமஸ் = வாழ விருப்பம்

தே = அவர்கள்

அவஸ்தி²தா: = அணி வகுத்து நிற்கும்

ப்ரமுகே²= எதிர்த்து நிற்கும்

தா⁴ர்தராஷ்ட்ரா: = திருதராஷ்ட்ர கூட்டத்தார்

நாம் அவர்களை கொல்லுவது . அவர்கள் நம்மை கொல்லுவது . இதில் எது சிறந்தது என்று எனக்கு விளங்கவில்லை. யாரை கொன்ற பின் நாம் உயிர் வாழ விரும்ப மாட்டோமோ, அந்த திருதராஷ்ட்ர கூட்டத்தார் நம் முன்னால் போருக்கு அணி வகுத்து நிற்கிறார்கள். 


எது சரி. எது தவறு என்று அர்ஜுனனுக்குப் புரியவில்லை. குழம்புகிறான். "நாம் வெல்வது சரியா. அல்லது அவர்கள் வெல்வது சரியா" என்று தெரியாமல் தவிக்கிறான்.

காரணம் என்ன ?

அறத்தின் சூட்சுமம் புரியாததால் வந்த குழப்பம். அறம் வெல்ல வேண்டும். ஆனால், எது அறம் என்று தெரியவில்லை. அவர்கள் வெல்வது அறமா அல்லது நாம் வெல்வது அறமா என்று தெரியவில்லை.

தான், அறத்தின் வழி நிற்கிறேனா இல்லையா என்று அவனுக்குத் தெரியவில்லை.


இது அர்ஜுனனின் குழப்பம் மட்டும் அல்ல. நம் அனைவரின் குழப்பமும் கூட. எது அறம் என்று அவ்வளவு எளிதாக கூறி விட முடியாது.

எது சரி என்று எப்படி அறிந்து கொள்வது ? சட்டப் படி நடப்பது சரியா? எல்லாவற்றிற்கும் சட்டம் இருக்கிறதா ? சட்டம் எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறதா ? சட்டத்தில் ஓட்டைகள் இல்லையா ?

நாம் எப்படி வாழ்வது என்றே நமக்குத் தெரியவில்லை. பின் எப்படி பிள்ளைகளை சரியாக வளர்ப்பது ? அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லித் தருவது ?

அறிவியலின் முன்னேற்றம் சந்தேகத்தை மேலும் மேலும் வளர்த்து விடுகிறது. எதிலும் சந்தேகம். எதிலும் ஒரு உறுதியற்ற தன்மை என்று வந்து விட்டது.

அர்ஜுனன் அறிவின் உச்சம் தொட்டவன். எனவே, குழப்பத்தின் உச்சத்தையும் தொடுகிறான். படித்தவனுக்கு ஆயிரம் சந்தேகம் வரும். குழப்பம் வரும். படிக்காதவனுக்கு ஒரு குழப்பமும் இல்லை. தான் நினைத்ததே சரி என்று அவன் நினைப்பான்.

அறிவின் அடையாளம் குழப்பம். அறிவு விரிவடைய விரிவடைய , அறியாமையும் விரிகிறது. அறியாமை விரிய விரிய குழப்பம் விரிகிறது.

சரி இதற்கு என்னதான் வழி.

எது சரி, எது தவறு என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது ?

சரியான கேள்வி. இது ஒரு நல்ல கேள்வி.

அர்ஜுனன் வழி கண்டுபிடித்து விட்டான். அது என்ன வழி தெரியுமா ?


http://bhagavatgita.blogspot.com/2018/08/26.html

Saturday, August 11, 2018

பகவத் கீதை - 2.5 - பிச்சை எடுப்பது மேல்

பகவத் கீதை - 2.5 - பிச்சை எடுப்பது மேல் 



गुरूनहत्वा हि महानुभावाञ्छ्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके।
हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान्॥५॥

கு³ரூநஹத்வா ஹி மஹாநுபா⁴வாஞ்ச்²ரேயோ போ⁴க்தும் பை⁴க்ஷ்யமபீஹ லோகே|
ஹத்வார்த²காமாம்ஸ்து கு³ரூநிஹைவ பு⁴ஞ்ஜீய போ⁴கா³ந்ருதி⁴ரப்ரதி³க்³தா⁴ந் ||2-5||


கு³ரூந்  = குருமார்கள்

அ -ஹத்வா = கொல்லாமல்

ஹி = அதனால்

மஹாநுபா⁴வா = மிகுந்த அனுபவம் உள்ளவர்கள்

ச்²ரேயோ = சிறந்த

போ⁴க்தும் = உண்பதற்கு

பைக்ஷ்யம = பிச்சை எடுத்து

அபி = மேலும்

இஹ = இந்த

லோகே = உலகில்

ஹத்வ = கொன்ற பின்

அர்த காமாம்ஸ் = சிறந்தவற்றின் மேல் பற்றுள்ள

து = மேலும்

கு³ரூ = குருமார்கள்

இஹ = இங்கே

எவ = நிச்சயமாக

பு⁴ஞ்ஜீய = நான் அனுபவிப்பேன்

போ⁴கா = போகங்களை

ருதி⁴ர = உதிரத்தில்

ப்ரதி³க்³தா⁴ந் = நனைந்த


பெரியவர்களாகிய குரு மார்களை கொல்வதை விட நாம் பிச்சை எடுப்பது மேல்.  சிறந்தவற்றின் மேல் பற்று கொண்ட குருக்களை கொன்று வரும் போகம், இரத்தத்தில் நனைந்ததாக இருக்கும்.


இதுவும் போன ஸ்லோகத்தின் தொடர்ச்சியே. பொதுவாக, தனக்கு ஒரு சங்கடம் வரும் என்றால் மனிதன் அதை செய்வதை தவிர்க்க நினைப்பது இயல்பு.  குருமார்களை கொன்று வரும் செல்வம் நல்லதல்ல என்பது அர்ஜுனனின் எண்ணம். மேலோட்டமாக பார்த்தால் அது சரி என்று படும்.

அது ஏன் சரி இல்லை என்று பார்ப்போம்.

குருமார்களை கொன்று வரும் செல்வம் சரி இல்லை என்றால், வேறு யாரையாவது கொன்று  அதன் மூலம் வரும் செல்வம் பரவாயில்லையா ? தாத்தா, குரு என்றால் கொல்லக் கூடாது. மற்றவர்ளை கொல்லலாம் என்பது சரியா ?

கொல்வதன் மூலம் வரும் செல்வம் வேண்டாம் என்கிறான். செல்வம் வேண்டும், ஆனால் அவர்களை கொல்லாமல் அந்த செல்வம் வேண்டும்.

தன்னுடைய தாத்தா, மற்றும் குருவை கொல்லக் கூடாது. வேறு எவரின் தாத்தா மற்றும் குருவாக இருந்தால் கொல்லலாம் என்பது சரியா?


செல்வம் வராவிட்டால், கொல்வது சரியா ?

இதெல்லலம் சிறு பிள்ளைத்தனமான பேச்சு.

மனிதன் சுயநலம் மிக்கவனாக மாறும் போது , இந்த குழப்பங்கள் வந்தே தீரும்.

ஒரு பிள்ளை, தெரியாமல் பக்கத்து பையனின் சாமானை எடுத்து வந்து விட்டான். அந்தப் பையனின் தாய் , அந்தப் பையனை ஏசுகிறாள் , அடிக்கிறாள். அவனை தண்டிக்கிறாள்.

ஏன் ?

சொந்த பிள்ளையை எப்படி அடிக்க முடியும் ? அடித்தால் தாய்க்கு வலிக்காதா ? நான் பெற்ற பிள்ளையை நானே எப்படி அடிப்பது என்று அவள் நினைக்கலாம். அதில் தவறு இல்லை. அர்ஜுனன் நினைப்பதைப் போல. என் தாத்தாவை நானே எவ்வாறு கொல்வேன்.

ஆனால் , தாய் அடித்து திருத்துகிறாள்.  காரணம், அவள் அந்த ஒரு நிமிடத்தில், தான் ஒரு தாய் என்பதை மறந்து, இந்த பிள்ளை சரியாக வளர வேண்டும், சமுதாயத்தில் ஒரு திருடனாக மாறிவிடக் கூடாது, அவனை இப்போதே திருத்த   வேண்டும் என்று ஒரு நல்ல குடிமகனை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாள். வலித்தாலும் பரவாயில்லை என்று அந்தப் சிறுவனை தண்டிக்கிறாள்.

பாசம் தாண்டி, ஒரு சமூக கடமை அவளை அவ்வாறு தூண்டுகிறது.

பாசம் மட்டும்தான் முக்கியம் என்று நினைத்து  இருந்தால்    , "சரி போகட்டும், இனி இப்படி செய்யாதே " என்று சொல்லி விட்டிருக்கலாம். அது சரியான வழியாக  இருந்திருக்காது.  தாய் என்ற சுயநலம் தாண்டி, தர்மம், சமூக கடமை என்ற தளத்தில் இருந்து யோசித்ததால் அவள் பிள்ளையை கண்டிக்கிறாள் , தண்டிக்கிறாள்.

அவள் அப்படி எல்லாம் யோசித்துத் தான் செய்தாளா என்று தெரியாது. அது இயற்கையாகவே அவளிடம் இருக்கிறது.

அர்ஜுனன், அறிவின், தர்க்கத்தின் வழி செல்பவன். அவனுக்கு அது இயற்கையாக வரவில்லை. தடுமாறுகிறான். பாசம் கண்ணை மறைக்கிறது.

சுயநலத்தில் தடுமாறுகிறான்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/25.html

Friday, August 10, 2018

பகவத் கீதை - 2.4 - இவர்களை எப்படி எதிர்ப்பேன் ?

பகவத் கீதை - 2.4 - இவர்களை எப்படி எதிர்ப்பேன் ?




अर्जुन उवाच
कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन।
इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन॥४॥

அர்ஜுந உவாச
கத²ம் பீ⁴ஷ்மமஹம் ஸங்க்²யே த்³ரோணம் ச மது⁴ஸூத³ந|
இஷுபி⁴: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூத³ந ||2-4||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

கதம் = எப்படி ?

பீ⁴ஷ்மம் = பீஷ்மர்

அஹம் = நான்

ஸங்க்யே = போரில்

த்³ரோணம் = துரோணர்

ச = மேலும்

மது⁴ஸூத³ந| = மதுசூதனா

இஷுபி⁴: = அம்புகளால்

ப்ரதியோத்ஸ்யாமி = எதிர்த்து போர் புரிவேன்

பூஜார்ஹாவ = பூஜைக்குரியவர்களை

அரிஸூத³ந = அரிசுதனா

அர்ஜுனன் சொல்லுகிறான்:  பூஜைக்குரிய பீஷ்மரையும், துரோணரையும் நான் எப்படி அம்புகளால் எதிர்ப்பேன் ? 

நல்ல பசி.  பகல் எல்லாம் ஒரே வேலை. அசந்து போய் வீடு வந்து சேர்ந்திருப்போம். சூடாக சமையல் பண்ணி பரிமாறி இருக்கிறார்கள். ஆவலோடு சாப்பிட நினைப்பதுதானே முறை. அப்படித்தானே நடக்கும் ? நாம் சாப்பிட ஒரு வாய் வைக்கும் முன், நம் பிள்ளையோ,பேரப் பிள்ளையோ வந்து நம்மிடம் "ஆ ..எனக்கு " என்று கேட்டால் என்ன செய்வோம் ? "இரு எனக்கு பசிக்கிறது. சாப்பிட்டுவிட்டு உனக்குத் தருகிறேன் " என்று சொல்வோமா அல்லது "வாடா என் செல்லம், உனக்கில்லாததா " என்று அவனுக்கு முதலில் ஊட்டி விட்டு பின் நாம் உண்போமா ?


தாய்மார்களுக்கு இது எளிதாகப் புரியும். தான் பசித்து இருந்தாலும், பிள்ளையை பசிக்க விட மாட்டார்கள்.

என்ன ஆயிற்று இங்கே ?

எங்கே போயிற்று பசி ? எங்கே போயிற்று அசதி ?

தான் என்று நினைக்கும் போது இருந்த பசி, ஒரு தாய், தகப்பன், அம்மா என்று  நினைக்கும் போது மறைந்து விடுகிறது. பிள்ளை முதலில் வந்து நிற்கிறான். 

பிள்ளை சாப்பிட்டு, முகம் மலர்வதை பார்க்கும் போது நம் பசி மறந்து போகிறது. 

எதையும் தான் தான் என்று நினைத்தால் , வாழ்க்கை ஒரு மாதிரி இருக்கும். அந்த தான் என்பது மாறி, தகப்பன், தாய், என்ற நிலை வரும் போது வாழ்க்கை வேறு விதமாக இருக்கும். 

அதுவே , குடும்பத் தலைவன் என்று நினைக்கும் போது , சகோதரன், சகோதரி என்று அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற நினைப்பு வரும். நம் சுயநலம் பின்னுக்குப் போய் விடும். 

உண்டா இல்லையா ?

இங்கே அர்ஜுனன் தன்னை முன்னிலைப் படுத்தி யோசிக்கிறான். 

என் தாத்தா, என் ஆசிரியர் என்று நினைக்கிறான். 

ஒரு படி மேலே போய் , நான் என்பது வெறும் தனி மனிதன் அல்ல. நான் இந்த பாண்டவ சேனையின் தலைவன். என்று நினைத்தால், சொந்த உறவுகள் மாறும். ஒரு சேனைத் தளபதியாக நான் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திப்பான். 

அதையும் கடந்து ஒரு படி மேலே போய் , நான் சத்தியத்தை, தர்மத்தை நிலை நாட்ட வந்திருக்கிறேன். அது தான் என் வேலை. என் கடமை என்று நினைத்தால், தாத்தா மற்றும் ஆசிரியரை கொல்லும் வலி மறையும். பிள்ளைக்கு ஊட்டும் போது நம் பசி மறைவதைப் போல. 

நாம் எப்போதும் நம்மை முன்னிலைப் படுத்தி சிந்தித்தால், அர்ஜுனன் போல குழப்பமே மிஞ்சும். 

"நான் சொல்வதை கேட்கவில்லை"

"எனக்கு ஒரு மரியாதை இல்லை"

"என் வருத்தம் யாருக்கும் புரியவில்லை"

"எனக்கும் ஆசா பாசங்கள் உண்டு "

என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். 

என் சுகம். என் சௌகரியம் என்று உலகம் சுயநல கும்பலாய் மாறி விடும். 

அதை விடுத்து, என் வேலை என்ன, என் கடமை என்ன என்று சிந்திக்கத் தொடங்கினால் , ஒரு புது உலகம் உதயமாகும். 

அந்த கடமை சார்ந்த உலகை கீதை காட்டுகிறது. 

சிந்தித்துப் பாருங்கள் ...உங்கள் பிள்ளைகளுக்கு, கணவன் மற்றும் மனைவிக்கு, குடும்பத்துக்கு, நாட்டுக்கு உங்கள் பங்களிப்பென்ன என்ன என்று. 

அதைத்தான் கீதை சொல்கிறது.

http://bhagavatgita.blogspot.com/2018/08/24.html

Monday, August 6, 2018

பகவத் கீதை - 2.3 - மன தளர்ச்சியை விடு

பகவத் கீதை - 2.3 - மன தளர்ச்சியை விடு 



क्लैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप॥३॥

க்லைப்³யம் மா ஸ்ம க³ம: பார்த² நைதத்த்வய்யுபபத்³யதே|
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வோத்திஷ்ட² பரந்தப ||2-3||

க்லைப்³யம் = ஆண்மையற்ற

மா ஸ்ம = இல்லாத

க³ம: = நீ சென்ற

பார்த² = பார்த்த

ந =  இல்லை

ஏதத் = இந்த

த்வய் = உன்னிடம்


யுபபத்³யதே| = பொருந்தியது ?

க்ஷுத்³ரம் = கீழான

ஹ்ருத³ய = மன

தௌ³ர்ப³ல்யம் = தளர்ச்சி

த்யக்த்வ =  கைவிட்டபின்

உத்திஷ்ட = எழுந்து நில்

பரந்தப = எதிரிகளை அழிப்பவனே


அர்ஜுனா, இப்படி ஆண்மையற்று நிற்காதே.  இது உனக்கு ஏற்றது அல்ல. 
தாழ்வான மனத் தளர்ச்சியை விட்டு எழுந்து நில்.  பகைவரை அழிப்பவனே 

மன தளர்ச்சியே நமது முன்னேற்றத்துக்கு தடைக்கல் என்று முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம். முன்னேற்றம் மட்டும் அல்ல, நாம் நமது முழு சக்தியை (potential ) அடைய தடையாய் இருப்பது இந்த மன தளர்ச்சி தான்.

கண்ணன் பல விஷயங்களை இங்கு உணர்த்துகிறான்.

முதலில், இந்த மன தளர்ச்சியானது கீழானது. அதில் பெருமை பட ஒன்றும் இல்லை. சிலர், தங்களுக்கு உள்ள குறைகளையே பெரிய நல்ல விஷயம் போல் சொல்லிக் கொண்டு திரிவார்கள். "எனக்கு அடிக்கடி depression வரும்", "எனக்கு எதை கண்டாலும் பயம், ஒரு பதட்டம் " என்று பெருமையாக சொல்லுவார்கள். இதில் பெருமை ஒன்றும் இல்லை. கொஞ்சம் பரிதாபம் வேண்டுமானால் கிடைக்கலாம். இது மிகவும் கீழான ஒன்று ஒன்று என்று தெரிந்து கொண்டு அதை கை விட வேண்டும்.

சரி, சொல்லுவது எளிது. எப்படி கை விடுவது ? பழகிப் போச்சே. "என்னால் முடியலையே " என்று சொல்லியே பழகிப் போச்சே. எப்படி அதை விட்டு விலகுவது.

கீதை வழி காட்டுகிறது.

முதலில் நீங்கள் இது வரை சாதித்தவற்றை பற்றி எண்ணிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பாருங்கள்.  எவ்வளவோ தடைகளை கடந்து வந்திருக்கிறீர்கள். எவ்வளவோ போராடி வந்து இருக்கிறீர்கள். நீங்கள் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், அது ஒன்றும் எளிதில் அடையக் கூடியது அல்ல. உங்கள் சாதனைகளை பட்டியல் போடுங்கள். தன்னம்பிக்கை வரும். இவ்வளவு செய்த என்னால், இதை செய்ய முடியாதா என்று ஒரு உத்வேகம் பிறக்கும்.

கண்ணன் சொல்கிறான் "பகைவர்களை அழிப்பவனே " என்று. அர்ஜுனா , நினைத்துப் பார், இது வரை எவ்வளவு பகைவர்களை நீ அழித்திருக்கிறாய். இது என்ன உனக்கு பிரமாதம் என்று.

அர்ஜுனனுக்கு பக்கத்தில் கண்ணன் இருந்தான். நமக்கு பக்கத்தில் யார் இருக்கிறார்கள் இப்படி சொல்ல ?

யாரும் இல்லை. ஆனால், கீதை இருக்கிறது. அதைப் படித்து அதில் இருந்து நாம்  அறிந்து கொள்ளலாம்.

மனச் சோர்வை நீக்க, சிறந்த வழி, இது வரை சாதித்தவற்றை பற்றி எண்ணிப் பார்ப்பது. எப்படி செய்தோம்,  எப்படி போராடினோம், எப்படி வென்றோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்துப் பார்க்க பார்க்க நமக்குள் ஒரு தன்னம்பிக்கை தோன்றும்.

மனச் சோர்வு வந்து விட்டால், நம் சாதனைகளை நாமே அசை போட்டுப் பார்க்க வேண்டும். அதோடு நின்று விடக் கூடாது. செயலில் இறங்க வேண்டும்.

"இப்படி ஆண்மையற்று நிற்காதே"  என்கிறான் கண்ணன்.

ஆண்மை என்பது இங்கே ஆளுமையை குறிக்கும்.  சும்மா நிற்காதே. நீ எவ்வளவோ செய்தவன். இதையும் செய்யலாம், காரியத்தில் இறங்கு என்கிறான். யோசித்துக் கொண்டே இருந்தால் , யோசித்துக் கொண்டே இருக்கலாம். காரியத்தில் இறங்கி மள  மள என்று வேலையை தொடர வேண்டும்.

எனவே மனச் சோர்வை போக்க கீதை காட்டும் வழி


- முதலில் அது (மனச் சோர்வு) ஓர் நோய் என்று அறிய வேண்டும். அதை விட்டு விலக விரும்ப வேண்டும்.

- இரண்டாவது, நமது நல்ல குணங்களை, நமது சாதனைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

- மூன்றாவது, காரியத்தில் இறங்க வேண்டும்.

சரி என்று படுகிறதா ?

http://bhagavatgita.blogspot.com/2018/08/23.html

Saturday, August 4, 2018

பகவத் கீதை - 2.2 - அக்காலத்தில் வந்த உள்ளச் சோர்வு

பகவத் கீதை - 2.2 - அக்காலத்தில் வந்த உள்ளச் சோர்வு 



कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम्।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन॥२॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
குதஸ்த்வா கஸ்²மலமித³ம் விஷமே ஸமுபஸ்தி²தம்|
அநார்யஜுஷ்டமஸ்வர்க்³யமகீர்திகரமர்ஜுந ||2-2||


ஸ்ரீப⁴க³வாநுவாச  = ஸ்ரீ பகவான் (கண்ணன்) சொல்கிறான்

குத = எங்கிருந்து

த்வா = உனக்கு

கஸ்மலம் = சோர்வு, தூய்மை அற்ற தன்மை

இதம் = இந்த

விஷமே = முக்கிய தருணத்தில்

ஸமுபஸ்தி²தம்|= வந்து சேர்ந்தது

அ - ஆர்ய - ஜுஷ்டம் = ஆரியனுக்கு ஒவ்வாத

அ - ஸ்வர்கம் = சொர்கத்தை அடையாத

அ கீர்தி = புகழ் தராத

கரம = செயல்

அர்ஜுந = அர்ஜுனா

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், இந்த முக்கிய தருணத்தில் இந்த உள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய் ? இது ஆரியர்களுக்கு ஒவ்வாத ஒன்று. சொர்கம் செல்வதை தடுக்கும்.  புகழ் வருவதை தடுக்கும். அர்ஜுனா!


இந்த வாழ்வில் உங்களுக்கு என்ன வேண்டும் ? பேர், புகழ், செல்வம், ஆரோக்கியம் இவை எல்லாம் வேண்டும். இறந்த பின், அந்த வாழ்வில் சொர்கம் வேண்டும்.

அவ்வளவுதானே. இரண்டையும் உங்களுக்கு தரலாம். நீங்கள் இதை அடைய தடையாய் இருப்பது யார் தெரியுமா ?

நீங்கள் தான்.

உங்களின் முதல் எதிரி - நீங்கள்தான்.

உங்களால் எதையும் செய்ய முடியும். சாதிக்க முடியும். ஆனால், நீங்கள் எதையும் பெரிதாக சாதித்ததாகத் தெரியவில்லை. உங்களால் முடியும் என்றால் ஏன் நீங்கள் சாதிக்கவில்லை?

கீதை விடை சொல்கிறது.

"மனச் சோர்வு"

என்னால் எப்படி முடியும் ? என்னால் முடியுமா ? நான் எப்படி இதைச் செய்வேன் ? ஒரு வேளை தவறாகாப் போய் விட்டால் ? எல்லோரும் சிரிப்பார்களே என்ன செய்வது ?

என்றெல்லாம் சிந்தித்து, மனம் சோர்வு அடைந்து நீங்கள், உங்களால் முடிந்ததை  செய்யாமல் விட்டு விடுகிறீர்கள்.

யாரோ ஒருவரால் இமய மலை ஏற முடியும் என்றால் , உங்களாலும் முடியும்.  நீங்கள் ஏறவில்லை, காரணம், உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லை.

என்னால் முடியாது என்று பயந்து, தயங்கி நின்று விடுகிறீர்கள்.

இமய மலை ஏற்றம் என்பது ஒரு உதாரணம் தான்.

எவ்வளவோ பெரிய சாதனைகளை நீங்கள் செய்ய முடியும். இன்று தொடங்கினால் கூட , நீங்கள் பெரிய சாதனைகளை செய்ய முடியும்.

இவ்வளவு வயசுக்கு அப்புறமா ? இப்ப போய் எப்படி முடியும் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.

அர்ஜுனனிடம் பலம் இருக்கிறது, ஆற்றல், தைரியம் எல்லாம் இருக்கிறது. இருந்தும்  வில்லையும், அம்பையும் தூர எறிந்து விட்டு, தேரில் அழுது கொண்டே அமர்ந்து விட்டான்.

காரணம் , கண்ணன் சொல்கிறான் - மனச் சோர்வு.

எவ்வளவு திறமை, அறிவு இருந்தாலும், மனச் சோர்வு வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அதன் எதிர்மறை, மனம் உற்சாகமாக இருந்தால், எதையும் சாதிக்கலாம்.

மனம் தான் காரணம். முடியும் என்று நினையுங்கள். முடியும்.

நான் அழகாக இல்லை, என்னிடம் அவ்வளவு அறிவு இல்லை, எனக்கு திறமை இல்லை என்றெல்லாம் நீங்களே உங்கள் "மனதில் " கற்பனை பண்ணிக் கொள்கிறீர்கள்.

உங்களை விட அழகு இல்லாதவர்கள் சினிமாவில் நடிக்கிறார்கள். உங்களை விட அறிவும் திறமையும் குறைந்தவர்கள் எவ்வளவோ பெரும் புகழும் பெற்று  விளங்குகிறார்கள்.

உங்கள் மனச் சோர்வை விடுங்கள். முடியும், என்று எழுந்திருங்கள். நடத்திக் காட்டுவேன் என்று உற்சாகமாக நினையுங்கள்.

ஒளவை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்

"ஊக்கமது கை விடேல்"

அவ்வளவுதான்.

மனச் சோர்வை விட்டுத் தள்ளுங்கள். முடியும் முடியும் என்று ஆர்வத்துடன், உற்சாகத்துடன் புறப்படுங்கள்.

வானம் வசப்படும்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/22.html



Friday, August 3, 2018

பகவத் கீதை - 2.01 - ஞான யோகம் - ஆரம்பம்

பகவத் கீதை - 2.01 - ஞான யோகம் - ஆரம்பம் 


सञ्जय उवाच
तं तथा क्रिपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम्।
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः॥१॥


ஸஞ்ஜய உவாச
தம் ததா² க்ரிபயாவிஷ்டமஸ்²ருபூர்ணாகுலேக்ஷணம்|
விஷீத³ந்தமித³ம் வாக்யமுவாச மது⁴ஸூத³ந: ||2-1||

ஸஞ்ஜய உவாச  = சஞ்சயன் சொல்கிறான்

தம் = அவனிடம்

ததா = இவ்வாறு

க்ரிபயா = தன்னிரக்கத்துடன்

அவிஷ்டம் = நிறைந்த

அஸ்²ரு = கண்ணீர்

பூர்ணா = நிறைந்த

ஆகுல = குழம்பிய

இலேக்ஷணம் = தோற்றம்


விஷீத³ந்தம் = கவலை கொண்ட

இதம் = இந்த

வாக்கியம் = வாக்கியம்

உவாச = கூறினான்

மது⁴ஸூத³ந: = மதுசூதனன்

இவ்வாறு தன்னிரக்கம் மிஞ்சி, கண்ணில் நீர் ததும்ப, சோர்ந்து இருந்த அர்ஜுனனைப் பார்த்து , மதுசூதனன் இவ்வாறு கூறினான் 

இந்த அத்தயாயத்தின் பெயர் சாங்கிய யோகம்.

சாங்கிய என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு அர்த்தம் - கணிதம். கணிதம் அல்லது கணக்கு என்றால் ஏதோ வாய்ப்பாடு , கூட்டல் கழித்தல் கணக்கு அல்ல.

கணிதம் போல , தர்க சாஸ்திரம் போல விளக்கம் சொல்வது. அறிவை அகலப் படுத்துவது.

எனவே, இதை ஞான யோகம் என்றும் சொல்லுவார்கள்.

யோகம் என்றால் இணைப்பது. சேர்ப்பது என்று பொருள்.

நமது மனம், வாக்கு செயல்களை இணைப்பது.

நம்மை இந்த உலகோடு இணைப்பது.

நம்மை , நம் நோக்கங்களோடு இணைப்பது.

ஞான யோகம் என்றால் நம்மை அறிவோடு இணைப்பது. அறிவின் தெளிவு இல்லாமல் நாம் குழம்பிக் கிடக்கிறோம். எது சரி , எது தவறு என்று தெரியாமல் தடுமாறுகிறோம். அந்த தடுமாற்றத்தில் இருந்து நம்மை விடுவிப்பது  ஞான யோகம்.

பக்கத்து வீட்டு காரருக்கு வயிறு சரியில்லை என்று மருத்துவரைப் பார்த்தார். மருத்துவர் ஏதோ மருந்து தந்தார். நாளை எனக்கு வயிறு சரியில்லை என்றால் நானும்  அதே மருந்தை சாப்பிட முடியுமா ? என் வலிக்குக் காரணம் வேறாக இருக்கலாம் அல்லவா ?

அர்ஜுனன் ஒரு போர் வீரன். பெரிய அறிவாளி. ஆற்றல் மிகுந்தவன். செல்வங்கள் நிறைந்தவன். அவனுக்கு உள்ள குழப்பங்கள் நமக்கும் இருக்குமா ? அவனுக்கு சொன்ன விடைகள் எப்படி நமக்குப் பொருந்தும் ? கண்ணன், அர்ஜுனனுக்குச் சொன்னதை நாம் ஏன் படிக்க வேண்டும் ?


நாம் என்ன நாளைக்கு , தேரையும், வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டு  சண்டைக்கா போகப் போகிறோம் ? இல்லையே ? பின் எதற்கு நாம்  கீதையை படிக்க வேண்டும் ?

அதானே .....


http://bhagavatgita.blogspot.com/2018/08/21.html

Thursday, August 2, 2018

பகவத் கீதை - 1.47 - சோர்ந்து அமர்ந்த அர்ஜுனன்

பகவத் கீதை - 1.47 - சோர்ந்து அமர்ந்த அர்ஜுனன் 



सञ्जय उवाच
एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत्।
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः॥४७॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வார்ஜுந : ஸங்க்²யே ரதோ²பஸ்த² உபாவிஸ²த்|
விஸ்ருஜ்ய ஸஸ²ரம் சாபம் ஸோ²கஸம்விக்³நமாநஸ : ||1-47||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்

ஏவம் = இவ்வாறு

உக்த்வ = கூறிய பின்

அர்ஜுன = அர்ஜுனன்

ஸங்க்²யே = போர்க்களத்தில்

ரதோ²பஸ்த² = இரதத்தின் தட்டில்

உபாவிஸ²த்| = அமர்ந்து விட்டான்

விஸ்ருஜ்ய = தூர வைத்த பின்

ஸஸ²ரம் = அம்புகளோடு கூடிய

சாபம் = வில்லை

ஸோ²க = சோகம்

ஸம்விக்³நம் =  சஞ்சலப்பட்டு

மாநஸ :  = மனத்துடன்

சஞ்ஜயன் சொல்லுகிறான்: இவ்வாறு சொல்லி விட்டு, அர்ஜுனன் வில்லையும் அம்பையும் கீழே போட்டு விட்டு, தேரிலேயே அமர்ந்து விட்டான் 

என்னால் முடியாது என்று வில்லையும் அம்பையும் தூர எறிந்து விட்டு, தேரில் அமர்ந்து விட்டான்.

என்னால் எல்லாம் முடியும். நான் அனைத்தையும் சாதித்து விடுவேன் என்று மார்  தட்டும் ஆணவம் கொண்டோர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித  வலிமைக்கு, ஆற்றலுக்கு ஒரு எல்லை உண்டு. அது அளவு கடந்தது அல்ல.  அந்த எல்லையை புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது, ஆணவம் என்பது தன்னைச் சுற்றியே வலை பின்னுகிறது. பின்னிய வலையில் தானே மாட்டிக் கொண்டு விழிக்கிறது.

மூன்றாவது, அறிவு, ஆற்றல் என்று அலையும் எவரும், உணர்ச்சி என்ற ஒன்றின் மேல் மோதும் போது இப்படித்தான் ஆற்றல் இழந்து நிற்பார்கள். அறிவும்  ஆற்றலும் மட்டும் அல்ல வாழ்க்கை. மனித உணர்ச்சிகளும் வாழ்வின் மிக முக்கியமான பாகம். உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு அவற்றை சரியாக கையாளத் தெரிய வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான் குழப்பம் கொண்டு, செயலிழந்து நிற்க வேண்டி வரும்.

இந்த ஸ்லோகத்தோடு இந்த அத்யாயம் முடிகிறது.

மிகப் பெரிய வீரன். அறிவாளி. ஆற்றல் மிக்கவன். அழகன்.  பக்திமான். ஏராளமான வரங்களை பெற்றவன்.  இப்படி குழம்பி , செயல் இழந்து நிற்கிறான்.

அவனுக்கு , கண்ணன் என்ன சொல்லப் போகிறான் என்று உங்களை போலவே நானும் அறிந்து கொள்ள  ஆவலாக இருக்கிறேன்.

நாளை, இரண்டாவது அத்யாயம் தொடங்குகிறது.

கண்ணன் பேசத் தொடங்கப் போகிறான். ....


http://bhagavatgita.blogspot.com/2018/08/147.html

Wednesday, August 1, 2018

பகவத் கீதை - 1.46 - நான் இறந்தாலும் பெரிய நன்மையே

பகவத் கீதை - 1.46 - நான் இறந்தாலும் பெரிய நன்மையே 


यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत्॥४६॥

யதி³ மாமப்ரதீகாரமஸ²ஸ்த்ரம் ஸ²ஸ்த்ரபாணய :|
தா⁴ர்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் ப⁴வேத் ||1-46||


யதி= எனவே

மாம் = என்னை

அப்ரதீகாரம் = எதிர்த்து போர் புரியாமல் இருக்கும்

அஸ²ஸ்த்ரம் = ஆயுதம் இல்லாமல்

ஸ²ஸ்த்ரபாணய  = ஆயுதம் இருக்கும் அவர்கள்

தா⁴ர்தராஷ்ட்ரா = திருதராஷ்ட்ர

ரணே = யுத்த களத்தில்

ஹந்யுஸ் = கொன்றாலும்

தத் = அது

மே = எனக்கு

க்ஷேமதரம் = பெரிய நன்மையே

ப⁴வேத் = அது

நிராயுதபாணியாக, போரிடாமல் இருக்கும் என்னை இந்த திருதராஷ்ட்ர கூட்டத்தினர் கொன்று விட்டாலும், அது ஒரு பெரிய நன்மையே

நமக்கு ஏன் கவலை வருகிறது. துக்கம் எங்கிருந்து வருகிறது. நான் யாருக்கும் ஒரு தீங்கும் செய்ய வில்லையே. எனக்கு ஏன் இந்த துன்பம் எப்போதாவது கவலைப் பட்டு இருக்கிறீர்களா.

கவலைக்கு ஒரே காரணம், நீங்கள் உங்கள் கடமையை செய்யாமல் இருப்பதுதான்.


அர்ஜுன் கவலைப் படுகிறான். என்னால் யுத்தம் செய்ய முடியாது. அப்படி யுத்தம் செய்யாமல் இருக்கும் என்னை என் எதிரிகள் கொன்று விட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறான்.

யுத்தம் செய்வது அவன் கடமை. கடமையில் இருந்து தவற நினைத்தாலே துக்கம் வந்து சேரும்.

துக்கத்தை மாற்ற ஒரே வழி, கடமையை செய்து கொண்டே இருப்பது தான்.


சுய விருப்பு வெறுப்புகளுக்காக கடமையை செய்யாமல் இருக்க நினைக்கிறான். துக்கம் மலை போல வருகிறது. செத்து தொலைந்து விடலாமா என்று கூட நினைக்கிறான்.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், கடமையை செய்யாவிட்டால், துன்பம் வந்தே தீரும்.

கவலை வருகிறதா, வேலை செய்யுங்கள். கவலை பறந்தே விடும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.


நிறுத்தாமல் கடமையை செய்து கொண்டே இருப்பவர்கள் , விதியையும் புரட்டிப் போட்டு விடுவார்கள் என்கிறார் வள்ளுவப் பேராசான்.

கண்ணன் ஏதேதோ சொல்லப் போகிறான். அது ஒரு புறம் இருக்கட்டும்.  ஒன்றைப் புரிந்து கொள்வோம்.  கடமையை விட்டு தவறி நடக்க நினைப்பவனுக்கே, துக்கம் வந்து சேர்கிறது என்றால், கடமையை செய்யாதவனுக்கு என்ன நிகழும் என்று யோசித்துப் பார்ப்போம்.

கடமையைச் செய் - இது தான் கீதையின் அடி நாதம்.

என்ன சரிதானே?

http://bhagavatgita.blogspot.com/2018/08/146.html