Thursday, June 29, 2017

கீதை - 16.14 - நானே பலவான், சுகவான்

கீதை - 16.14 - நானே பலவான், சுகவான் 


असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ।
ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी ॥१६- १४॥

அஸௌ மயா ஹத: ஸத்ருர்ஹநிஷ்யே சாபராநபி |
ஈஸ்வரோஹமஹம் போகீ ஸித்தோ ஹம் பலவாந் ஸு கீ || 16- 14||

அஸௌ = அந்த

மயா = என்னால்

 ஹத: = அழிக்கப்பட்டது

ஸத்ரு = எதிரிகளை

ஹநிஷ்யே = நான் கொல்வேன்

ச = மேலும்

அபரன்  = மற்றவர்களையும்

அபி  = மேலும்

ஈஸ்வர = ஈஸ்வரன், தலைவன்

அஹம் = நான்

அஹம்  = நான்

போகி = அனுபவிக்கப் பிறந்தவன்

சித்தா = சித்தன்

அஹம்  = நான்

பலவான் = பலம் உள்ளவன்

ஸுகி = சுகங்களை அனுபவிப்பவன்


என் எதிரிகளை வெல்லுவேன். நானே ஈஸ்வரன். நானே பலவான். நான் சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவன். நான் சித்தன் என்று அவர்கள் சொல்கிறார்கள். 


தீயவர்கள், அசுர குணம் கொண்டவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா என்று வியாசர் தொடர்கிறார்.

அவர்கள் வாழ் நாள் முழுவதும் யாரிடமாவது சண்டை இட்டு வெற்றி கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

யாரோ என்றால் ஏதோ எதிரிகள் என்று நினைத்து விட வேண்டாம்.

சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாதத்தில் வெல்ல வேண்டும். அதனால் உறவில் விரிசல் வந்தால் கூட பரவாயில்லை. யார் காயப் பட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு வாதத்தில் வெற்றி கொள்ள வேண்டும்.

நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலை செய்பவர்கள், பிள்ளைகள் , கணவன், மனைவி என்று யாரிடமாவது ஏதாவது வாதம் இருக்கும். ஏதாவது வாதத்தில் தோற்றுவிட்டால் ஏதோ இழந்த மாதிரி உணர்வார்கள். தோல்வி என்பது சகிக்க முடியாது அவர்களால்.

எப்போதும் யாரையாவது வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது சதா சர்வ காலமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இது ஒரு அசுர குணம்.


தானே எல்லாம் என்று நினைப்பார்கள்.

எல்லா சுகமும் தனக்கே வேண்டும் என்று சுயநலம் கொண்டு அலைவார்கள். மற்றவர்களுக்குத் தந்து, அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைக் கண்டு தாங்கள் மகிழ மாட்டார்கள். தான், தன் சுகம் என்று இருப்பார்கள்.

அது மட்டும் அல்ல, தனக்கு எல்லாம் தெரியும் என்று ஆணவம் கொண்டு இருப்பார்கள். நான் சித்தன்  என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும். எனக்குத் தெரியாதா, நான் பார்க்காததா என்று இறுமாப்புடன் அலைவார்கள்.

சுயநலம் - ஆணவம் - எந்நேரமும் சண்டை பிடிக்கும் குணம்....இவை எல்லாம் நம்மிடமும் கூட இருக்கலாம்.

இருந்தால் , என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும் வேண்டுமோ ?

Tuesday, June 27, 2017

பகவத் கீதை - 16.13 - பெற்றதும், பெறப் போவதும்

பகவத் கீதை - 16.13 - பெற்றதும், பெறப் போவதும் 



इदमद्य मया लब्धमिमं प्राप्स्ये मनोरथम् ।
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ॥१६- १३॥

இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம் |
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம் || 16- 13||


இதம் = இந்த

அ த்ய = இன்று

மயா = என்னால்

லப்தம் = அடையப் பெற்றது

இதம் = இன்று

ப்ராப்ஸ்யே = அடைவேன்

மநோரதம்  = மனோ ரதம் - கற்பனையில்

இதம்இ = இன்று

அஸ்தி = அது

இதம் = இன்று

அபி = மேலும்

மே = என்னால்

பவிஷ்யதி = அடையப்படும்

புனர்பு தனம்  = பெரிய செல்வம்

இவற்றை எல்லாம்  அடைந்து விட்டேன். இன்னும் பலவற்றை அடைய எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவற்றையும் அடைவேன்.

பெரிய பங்களாவில் இருப்பவன் , குடிசை வீட்டுக்கு ஆசைப் படுவானா ? ஆடி கார் வைத்து இருப்பவன் , சைக்கிளுக்கு ஆசைப்படுவானா ? பட்டம் படித்து முடித்தவன், ஆறாம் வகுப்பு தேற வேண்டும் என்று நினைப்பானா ?

மாட்டான் அல்லவா ?

 ஆனால் ஒரு காலத்தில் சிறிய வீட்டுக்கும், சைக்கிளுக்கும் , ஆறாம் வகுப்புக்கும் ஆசை பட்டவன் தானே ? ஆசை பட்டதை அடைந்தாகி விட்டதே. பின் என்ன ?

ஒவ்வொரு ஆசையும், அவை நிறைவேறிய பின், அதை விட பெரிய ஆசையை கொண்டு வந்து சேர்த்து விட்டுப் போகின்றன.

ஒரு ஆசை முடிந்தவுடன், மனிதன் நிறுத்துவது இல்ல. அதை விட பெரிய ஆசை வருகிறது. அதை நிறைவேற்ற மேலும் முயற்சி செய்கிறான்.

மனிதன் புரிந்து கொள்வதே இல்லை. ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அர்த்தமே இல்லை என்பதை.

ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பயப்பட வேண்டும். ஏன்  என்றால், இப்போது இருக்கும் ஆசை நிறைவேறி விட்டால், அடுத்து என்ன பெரிய ஆசை வருமோ ? அது என்ன என்ன சிக்கல்களை கொண்டு வருமோ, என்று மனிதன் நினைத்து பயப்பட வேண்டும்.

 மாறாக,மனிதன் ஒவ்வொரு ஆசை நிறைவேறிய பின்னும், "ஆகா, நான் இதை சாதித்து விட்டேன், இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கற்பனை பண்ணி வைத்திருக்கிறேன். அதையும் அடைவேன் " என்று விளக்கி தேடும் விட்டில்களைப் போல ஆசைகளின் பின்னால் சென்று உழல்கிறான்.

அப்படி என்றால் ஆசையே இல்லாமல் இருக்க வேண்டுமா ? எதார்க்குமே ஆசைப்படக் கூடாதா ? அப்படி ஒரு வாழ்க்கையில் என்ன சுகம் , சுவாரசியம் இருக்கும் ? என்ற கேள்வி எழுவது நியாயம் தான்.

அதற்கும் விடை காண வேண்டும்.

கீதை அதற்கும் விடை தருகிறது.









கீதை - 16.12 - தவறான வழியில் பணம் சேர்ப்பார்கள்

கீதை - 16.12 -  தவறான வழியில் பணம் சேர்ப்பார்கள் 


आशापाशशतैर्बद्धाः कामक्रोधपरायणाः ।
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ॥१६- १२॥


ஆஸா பாஸ ஸதைர்ப³த்தா: காமக்ரோத பராயணா: |
ஈஹந்தே காமபோகார்த மந்யாயேநார்த ஸஞ்சயாந் || 16- 12||


ஆஸா பாஸ = ஆசா பாசங்களில்

சதா = சதம் என்றால் நூறு. பல வழிகளில்

பத்தா: = கட்டுண்டு

காம க்ரோத = காமத்திலும் கோபத்திலும்

ப்ரயணா: = வழிகளில் செல்வார்கள்

ஈஹந்தே = அடைய

காமபோகார்த = ஆசைகளை அனுபவிக்க

அநன்யேன  = அல்லாத வழிகளில்

அர்த = ஸ்ஸ செல்வத்தை

சஞ்சயாந்  = குவிப்பார்கள்

ஆசா பாடங்களில் பல நூறு வழிகளில் கட்டுண்டு; அவைகளை அனுபவிப்பதற்காக தவறான வழிகளில் செல்வத்தை சேர்ப்பார்கள். 

ஆசை தெரிகிறது. அது என்ன பாசம் ?

பாசம் என்பது பாசக் கயிறு. காட்டும் கயிறு. ஆசை, நம்மை ஆசைப் படும் பொருளோடு சேர்த்து கட்டிப் போட்டு விடுகிறது.


அது பொருளானாலும் சரி, மற்ற உருவானாலும் சரி, அல்லது நாய் குட்டியானாலும் சரி , ஆசை நம்மை பிணைக்கிறது. எனவே தான் அதை ஆசா பாசம் என்று குறிப்பிடுகிரார்கள்.

 ஒரு கயிறால் கட்டினாலே  .துன்பமாக இருக்கும். நூற்றுக் கணக்கான கயிறுகளால் கட்டப் பட்டால் , எப்படி இருக்கும் ?

இப்படி நூற்றுக்கணக்கான கயிறுகளால் கட்டப் பட்டு வாழும் வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதில் , நாம் சுதந்திரமாக இருப்பதாக வேறு எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

பண ஆசை, செல்வாக்கு, புகழ், கவலைகளில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற ஆசை, பிள்ளைகள் மெடல் வாங்க வேண்டும் என்ற ஆசை, அவர்களுக்கு வேலை, நல்ல திருமணம்,  ஆயுள், ஆரோக்கியம் , மதிப்பு, மரியாதை , என்று எத்தனை ஆயிரம் ஆசைகள். ஒவ்வொரு ஆசையும் நம்மை ஒவ்வொரு விதத்தில் கட்டிப் போடுகிறது.

ஆசை ஒரு பக்கம் கட்டிப் போடுகிறது என்றால், அந்த ஆசைகள் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற பயம் மறுபுறம் கட்டிப் போடுகிறது.

ஆசையும் , பயமும் இப்படி இருக்க, வேறு யாராவது நாம் ஆசைப் படுவதை கொண்டு போய் விட்டால்  , அவர்கள் மேல் கோபம் வருகிறது.


இப்படி, ஆசை, பயம், கோபம் என்ற மூன்றும் நம்மை கட்டுகின்றன . ஒவ்வொரு ஆசைக்கும் பல பயங்கள், ஒவ்வொரு பயத்துக்கும் பல கோபங்கள்.

யோசித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது என்று.

மிகப் பெரிய சிக்கல் , முடிச்சுகள் நிறைந்து இருக்கிறது.

இந்த மஹா சிக்கலுக்கு நடுவில் , அவ்வப்போது நிறைவேறும் ஆசைகளில் மகிழ்ந்து , அவற்றை மேலும் அடைய பல் வேறு தவறான வழிகளில் பணம் சேர்ப்பார்கள் கெட்டவர்கள்.

கெட்டவர்களின் குண நலன்களை பற்றி சொல்லவந்த வியாசர் கூறுகிறார்


அவர்கள் ஆசை, பயம், கோபம் என்ற கயிறுகளால் கட்டுண்டு, தவறான வழியில் பணம் சேர்த்து வாழ்வார்கள் என்று.

நாம் தவறான வழியில் பணம் சேர்க்காமல் இருக்கலாம்.

ஆனால் எவ்வளவு ஆசைகள், பயங்கள், கோபங்கள் ?

சிந்தித்துப் பார்ப்போம்.

மெல்ல மெல்ல இந்த சிக்கல்களில் இருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும்.


ஆசைகள் குறைய குறைய , பயம் குறையும். கோபம் குறையும். வாழ்க்கை லேசாகும்.

பயமற்ற வாழ்க்கை வாழலாம். யார்மேலும், எதன் மேலும் கோபம் இல்லாமல் எல்லோரிடமும் இதமாக பழகி வாழலாம்.

எவ்வளவு குறைகிறதோ, அவ்வளவு நல்லது.

முயற்சி செய்வோம்.

Sunday, June 25, 2017

கீதை - 16.11 - உண்மையே இவ்வளவுதான்

கீதை - 16.11 - உண்மையே இவ்வளவுதான் 



चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः ।
कामोपभोगपरमा एतावदिति निश्चिताः ॥१६- ११॥

சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்ரிதா: |
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஸ்சிதா: || 16- 11||

சிந்தாமபரிமேயாம் = சித்தம் + அபரிமேயம் =  அளவற்ற சிந்தனைகள்

ச  = மேலும்

ப்ரலயாந்தம் = பிரளய + அந்தம் = பிரளய காலம் வரை 

உபாஸ்ரிதா: |= அடைக்கலம் கொண்டு

காமோபபோக பரமா = ஆசைகளில் திளைப்பது மட்டுமே பிரதானம் என்று

ஏதாவதிதி = இதுவே முடிவென்று

நிஸ்சிதா = நிச்சயித்துக் கொண்டு

பிரளய காலம் வரை, ஆசைகளில் மூழ்கி அவற்றை அனுபவித்தே வாழ்க்கை, அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நிச்சயமாக அவர்கள் (அசுர குணம் கொண்டவர்கள்) நம்பி, அதன்படி செயல் படுகிறார்கள். 

வாழ்க்கை என்பது என்ன ?

ஆசைப் படுவதும், அவற்றை அனுபவிப்பதும் மட்டும் தானா ? அதற்கு மேல் ஏதாவது ஒன்று இருக்கிறதா ?

ஒவ்வொரு கால கட்டத்திலும், ஏதோ ஒன்றின் மேல் ஆசைப் படுகிறோம். அதை அடைய முயற்சி செய்கிறோம். பல சமயம் வெற்றி பெறுகிறோம். சில சமயம் வேண்டியது கிடைப்பது இல்லை.

ஒரு ஆசை நிறைவேறிய பின், அடுத்த ஆசை முளைக்கிறது.

வாழ்க்கை முழுவதுமே ஒரு ஆசையில் இருந்து இன்னொன்றுக்கு தாவுவதாகவே இருக்கிறது.

எந்நேரமும் ஏதோ ஒரு ஆசையால் உந்தப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அது தான் வாழ்க்கை என்று நினைக்கிறோம்.

இது எப்போதும் முடியவே முடியாது. பிரளய காலம் வரை , இந்த உலகம் முடியும் வரை இது இப்படித்தான் இருக்கும். ஆசைகளை அனுபவித்து முடிக்க முடியாது.

ஒன்றில் இருந்து ஒன்றாக வந்து கொண்டே இருக்கும்.

இவற்றை துரத்திக் கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா ?

சிந்திக்க வேண்டும்.

அறிவற்ற மூடர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

ஆசைப்படுவதும், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவதும், ஒரு ஆசை நிறைவேறிய பின் அடுத்த ஆசைக்கு முயற்சி செய்வதும்...இதுவே வாழ்க்கை என்று நினைக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தாண்டி , ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவர்கள் நம்புவது இல்லை.

நாம் எப்படியோ ?

Saturday, June 24, 2017

கீதை - 16.10 - அரக்க குணங்கள்

கீதை - 16.10 - அரக்க குணங்கள் 


काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः ।
मोहाद्‌गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रताः ॥१६- १०॥

காமமாஸ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா: |
மோஹாத் க்ருஹீத்வாஸத்க்ராஹாந் ப்ரவர்தந்தே ஸுசிவ்ரதா: || 16- 10||


காமம் = ஆசை

அஸ்ரித்ய = வயப்பட்டு

துஷ்பூரம் = நிறைவேறாமல்

தம்ப = ஏமாற்றி, டாம்பீகமாக

மாந = தவறான பெருமையுடன்

மதாந்விதா:=  சேர்த்துக் கொண்டு

மோஹாத் = மயக்கம் கொண்டு

க்ருஹீத்வா = அவற்றை அடைந்த பின் 

அஸத் = சத்யம் அல்லாத

கிரஹாந் = ஏற்று

ப்ரவர்தந்தே =செய்ய ஆரம்பிக்கிறார்கள்

அஸுசி வ்ரதா:  = சுத்தம் இல்லாத அந்த செயல்களை (விரதம்) || 16- 10||


நிறைவேற முடியாத ஆசைகளுடன் , படோபடமும் (டாம்பீகம்), கர்வம், மயக்கம் நிறைந்தவராய் , குழப்பத்தில் பொய்யான கொள்கைகளை கொண்டு சுத்தம் இல்லாத முடிவுகளுடன் அவர்கள் செயல் படுகிறார்கள்.

அரக்க குணம் கொண்டவர்களையும் , நல்லவர்களையும் கீதை இனம் காட்டுகிறது.

எதற்கு ? அதை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் ?

அரக்கர்கள் எப்படி இருந்தால் நமக்கு என்ன ?

அரக்கர்கள் என்றால் எதோ காட்டில் , கரிய பெரிய உருவத்துடன், கோரமான பற்களுடன் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.

நாம் தான் அரக்கர்கள். நாம் தான் தேவர்களும் கூட.

அரக்க குணமும், தெய்வீக குணமும் நமக்குள்ளே இருக்கின்றன.

இந்த குணம் மேலோங்கி நிற்கிறதோ, அதுவாக நாம் ஆகிறோம்.

அரக்க குணம் மேலோங்கி நின்றால், அரக்கனாக மாறுகிறோம்.

தெய்வ குணம் மேலோங்கி நின்றால், தெய்வமாக மாறுகிறோம்.

குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்பார் வள்ளுவர்.

குணமும், குற்றமும் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.  இரண்டும் இல்லாத ஆள் யாருமே இல்லை.


சரி, இதில் எது அரக்க குணம் (கெட்ட குணம் ) என்று எப்படி கண்டு கொள்வது ? கண்டு கொண்டால், அவற்றை குறைக்க முயலலாம்.

அதற்குத்தான் கீதை உதவி கரம் நீட்டுகிறது.

அரக்க குணம் எவை என்று பட்டியல் இடுகிறது.

நிறைவேற முடியாத அல்லது நிறைவேற கூடாத ஆசைகள் - ஆசை படுவது தவறல்ல. ஆசைகளின் எல்லைகளை அறிய வேண்டும். எல்லை தாண்டும் போது ஆசை பேராசையாகி, தவறான ஆசையாக மாறி விடுகிறது.

ரம்பை, மேனகை, திலோத்தமை என்ற தேவர் உலக பெண்கள் எல்லாம் இராவணனின் காலடியில் கிடந்தார்கள். அவர்களை விட்டு விட்டு சீதையை விரும்பினான் இராவணன். அது தவறான ஆசை. அது அரக்க குணம்.

படோபடம் , டாம்பீகம் - என்னிடம் எல்லாம் இருக்கிறது என்ற தற்பெருமை. அடக்கம் இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொண்டு செல்வது.

கர்வம் = என்னை விட்டால் யார், நான் தான் உயர்ந்தவன் , என்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, என்னால் முடியாது எதுவும் இல்லை என்ற கர்வம்.

மயக்கம் = எது சரி , எது தவறு என்று அறியாமல் குழம்புவது. நல்லது / கெட்டது , சரி/தவறு என்று தெரியாமல் காரியங்களை செய்வது.

மற்றவர்கள் சொன்னாலும் மண்டையில் ஏறாது.

உண்மை இல்லாதவற்றை உண்மை என்று நினைத்து பின் பற்றுவார்கள். சத்தியத்தை விட்டு விட்டு அசத்தியத்தின் பின்னால் போவார்கள். தவறான வழியில் போவார்கள். சூது, களவு, முயற்சி இன்மை, சோம்பல் போன்ற வழிகளில் செல்வார்கள்.

இவை அரக்கர்களின் குணம்.

நம்மிடமும் கொஞ்சம் இவை எல்லாம் இருக்கலாம்.

இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால், அவற்றை மாற்ற முயற்சி செய்யுங்கள். அரக்க குணம் தேய தேய தெய்வீக குணங்கள் நிறையும்.

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.

என்பார் மணிவாசகர்.

நெறியல்லாத நெறியில் செல்லக் கூடாது.


தமிழ் கிழவி இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போனாள்

வழியே ஏகுக

என்று.

கெட்ட குணங்களை விடுத்து, நல்ல குணங்களை கொண்டு, நல்ல வழியில் செல்வோம். 

Monday, June 12, 2017

கீதை - 3.18 - காரியமும் பலனும்

கீதை - 3.18 - காரியமும் பலனும் 


नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन।
न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः॥१८॥

நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந|
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய: ||3-18||


ந = இல்லை

ஏவ = நிச்சயமாக

தஸ்ய = அவனுடைய

க்ரெத்ன = செயல்களில்

அர்த்த = பலன், செல்வம், நோக்கம்

ந = இல்லை

அ க்ரெத்ன = செயலில்லாமல் இருப்பதிலும்

இஹ = இங்கே

கஸ்சந = எதிலும்

ந = இல்லை

அஸ்ய  = அவன்

ஸர்வபூதேஷு  = அனைத்திலும்

கஸ் சித் = எதிலும்

அர்தவ்யபாஸ்ரய: = பலன்களில் தஞ்சம் புகுவது இல்லை



அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை;
செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; 
எவ்விதப் பயனையுங் கருதி அவன் எதையும் சார்ந்து நிற்பதில்லை.


கீதையில் மிகவும் குழுப்பவது இந்த பலனின்றி செயலை செய்வது என்ற இந்த சித்தாந்தம் தான். புரிகிற மாதிரி இருக்கும். புரியாத மாதிரி இருக்கும். புரிந்தாலும், இதெல்லாம் நடை முறைக்கு சரி வருமா என்ற சந்தேகம் வரும்.


அந்த சந்தேகங்களும், குழப்பங்களும் ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும்.

முதற் காரணம் , துணை காரணம் என்ற இரண்டு காரணங்கள்.

அது என்ன முதற் காரணம், துணை காரணம் ?

பள்ளியில் சென்று படிக்கிறோம்.

இதில் எது முதல் காரணம் ? துணை காரணம் ?

படித்து பரிட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று தேற   வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது துணை காரணம். நிறைய சம்பாதிக்க வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது முதல் காரணம் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா , படிப்பதன் முதல் காரணம் இறைவனை தொழுவது என்கிறார். பரீட்சை, மதிப்பெண், வேலை, சம்பளம் எல்லாம் துணைக் காரணங்கள்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

படிப்பதன் பயன் இறைவனை தொழுவது என்கிறார்.

 அதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதல்ல விஷயம் இங்கு.  வள்ளுவர் போன்ற பேராசானின் கருத்து பெருவாரியான மக்களின் கருத்தில் இருந்து வேறுபட்டு நிற்கிறது.

நாம் ஏன் வேலை செய்கிறோம் ? ஊதியம் வேண்டும், அதன் மூலம் வாழ்வில் இன்பமாக இருக்க வேண்டும் என்று  நினைக்கிறோம்.

ஊதியம் என்பது பொருளாக இருக்க வேண்டும் என்று இல்லை. புகழ், பதவி,அதிகாரம், செல்வாக்கு, நட்பு,  என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு பலனை எதிர்பார்த்து செய்கிறோம்.

பலன் வேண்டும் என்றால், அதை யாராவது தர வேண்டும். அது தானாகவே வந்து விடுவது அல்ல.

அப்படி யாரோ ஒருவர் நமக்குத் தர வேண்டும் என்றால், அவர் நம்மை விட உயர்ந்த இடத்தில்  இருக்க வேண்டும். அவர் தயவு நமக்கு வேண்டும். அவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர் கோப படும்படி நடக்கக் கூடாது. அவரிடம் ஒரு பயம் வேண்டும்.

அவர் அந்த பலனை தராவிட்டால்  அவர் மீது கோபம் வரும்.

வேறு யாராவது அந்த பலனை தட்டிப் பறித்துக் கொள்வார்களோ என்று பயம் வரும்.  

இப்படி நம் சுதந்திரத்தை இழந்து, பயந்து, தயங்கி, மற்றவர்களுக்கு கை கட்டி, பல்லைக் காட்டி வாழும் வாழ்வில் என்ன இன்பம் இருக்க முடியும் ?

மாறாக, என் வேலை இது. இதை நான் செம்மையாகச் செய்வேன். என்னை விட இதை வேறு யாரும் சிறப்பாகச் செய்ய முடியாது.  இந்த வேலையை செய்வதே ஒரு இன்பம். அதுவே அதன் பலன் என்று நினைத்து ஒரு காரியத்தை செய்தால், யாரையும் நாடி நிற்க வேண்டியது இல்லை.

அப்படி செய்யப்பட்ட வேலைக்கு பலன் தானே வரும்.

ஒரு மாணவன் நிதமும் ஒழுங்காக படிக்கிறான், கொடுத்த பயிற்சி எல்லாம் செய்கிறான் என்றால் கட்டாயம் அவனுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

பலனுக்காக ஒரு வேலையை செய்யவே முடியாது. நன்றாக வேலை செய்தால் பலன் கிடைக்கும்.

ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எனக்கு கோப்பை வேண்டும், கோப்பை வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் கோப்பை கிடைக்காது. மாறாக, அதை மறந்து  விட்டு,தினமும் ஒழுங்காக பயிற்சி செய்தால் அவருடைய திறமை கூடி, மெருகேறி கோப்பை கிடைக்கலாம்.

எனவே,  வேலை செய்வதன் முதற் காரணம் அந்த வேலையை செம்மையாகச் செய்வது. துணைக் காரணம் அதன் பலன்.

இப்போது ஸ்லோகத்தை கவனிப்போம்.


அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை;
செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை;
எவ்விதப் பயனையுங் கருதி அவன் எதையும் சார்ந்து நிற்பதில்லை.

அவன் செய்கை செய்வது பலனை நோக்கி அல்ல. பலன் வரும் என்பது அவனுக்குத் தெரியும். சரி, பலன் நோக்கி அல்ல என்றால் அதற்கு ஒன்றும் செய்யாமலேயே இருந்து விடலாம் அல்லவா ? அப்படி இருந்தாலும் அவனுக்கு ஒன்றும் பயன் இல்லை. அவன் , தன் வேலையை , எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்கிறான். 

பலனில் மனம் போகாவிட்டால், காரியத்தில் போகும். காரியம் சிறக்கும். சிறந்த காரியம் அதற்குரிய பலனை கட்டாயம் கொண்டு வந்து சேர்க்கும். எனவே, பலனை பற்றி கவலைப் படுவதை விடுங்கள். நல்லதை, நன்றாகச் செய்யுங்கள். 

நல்லதே நடக்கும்.