Tuesday, March 27, 2018

கீதை - 1.17 - பாண்டவப் படைத் தளபதிகள் - தொடர்கிறது

கீதை - 1.17 - பாண்டவப் படைத் தளபதிகள் - தொடர்கிறது 


काश्यश्च परमेष्वासः शिखण्डी च महारथः।
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः॥१७॥

காஸ்²யஸ்²ச பரமேஷ்வாஸ: ஸி²க²ண்டீ³ ச மஹாரத²:|
த்⁴ருஷ்டத்³யும்நோ விராடஸ்²ச ஸாத்யகிஸ்²சாபராஜித: ||1-17||

காஸ்²யஸ்²ச பரமேஷ்வாஸ: = பெரிய வில்லாளியான காசி இராஜன்

ஸி²க²ண்டீ³ ச மஹாரத²: |  = மஹாரதனான சிகண்டியும்

த்⁴ருஷ்டத்³யும்நோ = திருஷ்டத்துய்மனனும்

விராடஸ்²ச = விராடனும்

ஸாத்யகிஸ்²சாபராஜித: = வெல்ல முடியாத சாத்யகியும் (அபராஜித = வெல்ல முடியாத) ||1-17||


கீதையின் நோக்கம் இந்தப் பட்டியலைத் தருவது அல்ல. இன்னும் இரண்டு ஸ்லோகங்களில் இந்த பட்டியல் முடிந்து விடும். பின், கீதையின் முக்கிய போதனை தொடங்கும்.

கீதையை மஹாபாரதத்தில் எங்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்த போது நிறைய நேரம் இருந்தது. அங்கு , அனைத்து பாண்டவர்களுக்கும் கண்ணன் கீதையை போதித்து இருக்கலாம்.

அங்கெல்லாம் விட்டு விட்டு, போர்க்களத்தை தேர்ந்து எடுக்கிறான்.

நல்ல விஷயங்களை சரியான முறையில் அறிந்து கொள்ள ஒரு மன நிலை வேண்டும்.

வனவாசத்தில், பாண்டவர்களுக்கு கவுரவர்கள் மேல் கோபமும், நாட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற ஆவலும் இருந்திருக்கும். கீதையை கேட்டாலும் புரிந்திருக்காது.

வனவாசத்தில் பல ரிஷிகள் , பாண்டவர்களுக்கு எவ்வளவோ கதைகள் தத்துவங்கள் இவற்றை எடுத்துச் சொன்னார்கள். நடந்தது என்ன ? போர்க் களத்தில்  வந்து நின்றார்கள்.


என்ன நடக்கப் போகிறது என்று கவனிப்போம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/117.html


Sunday, March 25, 2018

கீதை - 1.16 - பாண்டவர் படை சங்க நாதம் - தொடர்கிறது

 கீதை - 1.16 - பாண்டவர் படை சங்க நாதம் - தொடர்கிறது 



अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ॥१६॥

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர:|
நகுல: ஸஹதே³வஸ்²ச ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ ||1-16||


அநந்தவிஜயம் = அநந்த விஜயம் என்ற சங்கை

ராஜா = இராஜா

குந்தீபுத்ரோ = குந்தியின் மகனான

யுதி⁴ஷ்டி²ர = யுதிஷ்டிரன்

நகுல: ஸஹதே³வஸ்²ச  =நகுல சகாதேவர்கள்

 ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ = சுகோஷம் மற்றும் மணி புஷ்பம் என்ற சங்குகளை  ஊதினார்கள்  ||1-16||

யுதிஷ்டிரனும் , நகுல சகாதேவர்களும் தங்கள் சங்குகளை ஊதினார்கள்.

http://bhagavatgita.blogspot.com/2018/03/116.html


Saturday, March 24, 2018

கீதை - 1.15 - பாண்டவர் படை சங்க நாதம்

கீதை - 1.15 - பாண்டவர் படை சங்க நாதம் 





पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनञ्जयः।
पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः॥१५॥

பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ² தே³வத³த்தம் த⁴நஞ்ஜய:|
பௌண்ட்³ரம் த³த்⁴மௌ மஹாஸ²ங்க²ம் பீ⁴மகர்மா வ்ருகோத³ர: ||1-15||

பாஞ்சஜந்யம் = பாஞ்சஜன்யம்

ஹ்ருஷீகேஸோ² = ரிஷிகேசன் என்ற கண்ணன்

 தே³வத³த்தம் த⁴நஞ்ஜய:|  = அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை

பௌண்ட்³ரம் = பவுண்டரம்

 த³த்⁴மௌ = என்ற

மஹாஸ²ங்க²ம் = பெரிய சங்கை

 பீ⁴மகர்மா = பெரிய செயல்களை செய்யக் கூடிய பீமன்

வ்ருகோத³ர: = ஓநாய் போன்ற பெரிய வயிறு உடைய  ||1-15||


கண்ணன், அர்ஜுனன், பீமன் தத்தமது சங்குகளை ஊதினார்கள்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/115.html


Thursday, March 22, 2018

கீதை - 1.14 - மாதவனும் பார்த்தனும்

கீதை - 1.14 - மாதவனும் பார்த்தனும் 


ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ।
माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः॥१४॥

தத: ஸ்²வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்த³நே ஸ்தி²தௌ|
மாத⁴வ: பாண்ட³வஸ்²சைவ தி³வ்யௌ ஸ²ங்கௌ² ப்ரத³த்⁴மது: ||1-14||

தத: = பின்

ஸ்²வேதை ஹயைர் யுக்தே = வெள்ளை குதிரைகள் பூட்டிய

மஹதி ஸ்யந்த³நே =  பெரிய தேரில்

ஸ்தி²தௌ| = நின்ற

மாத⁴வ: = மாதவனும்

பாண்ட³வ = பாண்டவனான அர்ஜுனனும்

தி³வ்யௌ ஸ²ங்கௌ²=திவ்யமான சங்குகளை

ப்ரத³த்⁴மது: = ஊதினார்கள்  ||1-14||

பின்பு, அர்ஜுனனும், கண்ணனும் தங்கள் திவ்யமான சங்குகளை ஊதினார்கள்.

பெரிதாக ஒன்றும் இல்லை இந்த ஸ்லோகத்தில்.

யுத்தம் உறுதியாகிவிட்டது. கௌரவர்களின் அறைகூவலை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

http://bhagavatgita.blogspot.com/2018/03/114.html





Monday, March 19, 2018

கீதை - 1.13 - பேராசை

கீதை - 1.13 - பேராசை 



ततः शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः।
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत्॥१३॥


தத: ஸ²ங்கா²ஸ்²ச பே⁴ர்யஸ்²ச பணவாநககோ³முகா²:|
ஸஹஸைவாப்⁴யஹந்யந்த ஸ ஸ²ப்³த³ஸ்துமுலோऽப⁴வத் ||1-13|| =

தத: =அதன் பின்

ஸ²ங்கா²ஸ்² = சங்குகள்

ச = மேலும்

பே⁴ர்யஸ்² = பேரிகைகள்

ச= மேலும்

பணவாநக = முரசுகள்

அவொ ³முகா²:| = துந்துபிகள்

ஸஹஸ  = திடீரென்று

எவ  = அதுவும்

அப்⁴யஹந்யந்த  = பிளிறின

ஸ =  மேலும்

ஸ²ப்³த = சப்தம்

துமுலோ = திமிலோகப் பட்டது

ப⁴வத்  = அங்கு, அப்போது

பீஷ்மர் சங்க நாதம் செய்த பின்னால் , மற்றவர்களும் தங்கள் சங்குகளை ஊதி போர் ஆரம்பித்து விட்டதை அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து, பேரிகைகள், முரசுகள், துந்துபிகள் என்று அனைத்தும் முழங்கி ஓர் பேரொலி கேட்டது. 

யுத்தம் தொடங்கி விட்டது. எங்கும் ஒரே சப்தம். முரசுகள், பறைகள் , துந்துபி என்று பேரொலி புறப்பட்டது.

போரை ஆரம்பித்து வைத்தது கௌரவர்கள்.

இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் சப்தம்.

சத்தம் பயத்தை போக்குகிறது. Roller Coaster ல் போகும் போது கவனித்தால் தெரியும், அதில் செல்பவர்கள் ஆ ஊ என்று சத்தம் போடுவார்கள். ஏன்? சத்தம் போட்டால் என்ன ஆகும்? அந்த ஊர்தியின் வேகம் குறையுமா? இல்லை, சத்தம் உண்டாக்கினால் பயம் குறையும். வலி குறையும்.

நோயாளிகளை பார்த்தால் தெரியும், "ஹா, அம்மா, அப்பா, ஐயோ " என்று அனத்திக் கொண்டே இருப்பார்கள். ஏன்?

ஒலி எழுப்பும் போது , வலி குறையும்.

ஒலி எழுப்பும் போது , பயம் குறையும்.

யுத்தப் பறை, யுத்தத்தின் பயத்தைப் போக்கி, ஒரு வெறியை கூட்டும்.

ஒலி, மனித மனத்தை பல விதங்களில் பாதிக்கும்.

அரட்டை அடிப்பது ஒரு விதத்தில் ஒலி உண்டாக்குவதுதான். அர்த்தம் அற்ற பேச்சு. ஏதோ ஒரு பயம் உள்ளுக்குள் இருக்கிறது. அதை மறைக்க இந்த அரட்டை. தனியே இருக்கப் பயம். நம்மை கண்டு நாமே பயப்படுகிறோம். நம்மோடு  நாம் இனிமையாக இருக்க முடியவில்லை. நம்மை விட்டு நாமே விலகிப் போக நினைக்கிறோம். நம்மை நாமே சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி சகிப்பார்கள்?

அரட்டை அடிக்கப் போகுமுன், யோசியுங்கள். என்ன பயம். எதை கண்டு இந்த ஓட்டம்.

வாழ்க்கை வெறுமையாக இருக்கும். அர்த்தம் இல்லாமல் போய் கொண்டிருக்கும். அந்த வெறுமையை கண்டு பயம், வெறுப்பு. அதை மறைக்க  அரட்டை.

அரட்டை என்றால் நேரில் சென்றுதான் பேச வேண்டும் என்று இல்லை. Whatsapp போன்ற மென் பொருள்கள் (software ) மூலம் அரட்டை தொடரலாம். மனம் பேசிக்கொண்டே இருக்கும் , மற்றவர்கள் எதிரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு.

நம்மை விட்டு விலகிப் போய் கொண்டே இருக்கிறோம். திரும்பி வர வேண்டும். தைரியமாக நம்மை நாமே எதிர் கொள்ள வேண்டும்.

பாட்டு, டிவி யில் ஏதோ ஒன்று ஓடிக் கொண்டே இருக்கும், இவை எல்லாம் நம்மை நாமே மறுதலிக்கும் முறைகள்.

சிந்திப்போம்.

சங்கநாதம் செய்தால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்லப் போகிறார்கள்.

ஒலி செய்யும் வினோதம்.

அதே ஒலி நம்மை அமைதிப் படுத்தவும் உதவும்.

குயிலும், கோழியும், குருகும் , சங்கு சப்தமும் உள்ளே உறங்கிக் கிடக்கும் நம்மை எழுப்பும் என்கிறார் மணிவாசகர்.


கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

ஆனைச்சாத்தன் என்ற பறவை எழுப்பும் ஒலி , ஆய்ச்சிகள் தயிர் கடையும் ஓசை, கேசவனை பாடும் ஓசை கேட்கவில்லையா என்று எழுப்புகிறாள் ஆண்டாள்.

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

திருப்பாவை படித்துப் பாருங்கள், நெடுக ஒலிக் குறிப்புகள் தான் இருக்கும்.

வெள்ளரவம் ஒலி , நாராயணனே நமக்கே பறை தருவான், என்று ஒலிக் குறிப்பு இருக்கும்.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பார் வள்ளுவர்.

ஓம் என்ற ஒலிக் குறிப்பை பற்றி நமது ஆன்மீக புத்தகங்கள் மிகப் பெரிதாக பேசுகின்றன.

சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/113.html

Sunday, March 18, 2018

கீதை - 1.12 - பீஷ்மரின் சங்கநாதம்

கீதை - 1.12 - பீஷ்மரின் சங்கநாதம் 



तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्धः पितामहः।
सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान्॥१२॥

தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்³த⁴: பிதாமஹ:|
ஸிம்ஹநாத³ம் விநத்³யோச்சை: ஸ²ங்க²ம் த³த்⁴மௌ ப்ரதாபவாந் ||1-12||

தஸ்ய = அவன்

ஸஞ்ஜநயந் = நிகழும்

ஹர்ஷம் = மகிழ்ச்சி

குருவ்ருத்³த⁴:  = வயதான குரு வம்சத்தவன்

பிதாமஹ:| = தாத்தா

ஸிம்ஹநாத³ம்  = சிம்ஹ நாதம் = சிம்ம நாதம்

விநத்ய = சப்தம் உண்டாக்கி

உச்சை: = மிக சப்தமாக

ஸ²ங்க²ம் = சங்கு

த³த்⁴மௌ  = முழங்கினான்

ப்ரதாபவாந் = பெருமை மிக்கவன்  ||1-12||

அப்போது, துரியோதனனுக்கு மகிழ்ச்சி உண்டாகுமாறு குரு வம்சத்தின் பெரிய தாத்தாவான பீஷ்மர் தன்னுடைய சங்கை எடுத்து சிங்க நாதம் செய்தார்.

வயாதான காலத்திலும் பெரியவர்கள் , இளையவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

முதன் முதலாக சங்கை ஊதியதின் மூலம், போரை பீஷமர் தொடங்கி விடுகிறார். போரை தொடங்கியது கௌரவர்கள் என்று ஆகிறது.

Guarvars fired the first bullet.

யுத்தம் தொடங்கியதில் துரியோதனனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

யுத்தம் அழிவைத் தரும் என்று அவனுக்குத் தெரியவில்லை. யார் அழிந்தாலும் பரவாயில்லை தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

மூடத்தனத்தின் உச்சம்.

எத்தனை உயிர்கள் அழியும் , எத்தனை குடும்பங்கள் சிதையும் என்று அவன் நினைக்கவில்லை. சண்டை தொடங்கிவிட்டது என்று மகிழ்கிறான்.

இன்றும் பல தலைவர்கள், மக்களை பிரித்து அவர்களை சண்டையில் புகுத்தி  அதில் சந்தோஷம் காண்கிறார்கள்.

பிரிவினையை, சண்டையை, யுத்தத்தை, அழிவை விரும்பும் அரசியல் தலைவர்கள் துரியோதனைப் போல மூடர்கள்.

பீஷ்மர் சங்க நாதம் செய்தவுடன், "ஐயோ யுத்தம் தொடங்கி விட்டதே, எவ்வளவு  அழிவு வருமோ " என்று வருந்தி இருந்தால் அவன் நல்ல அரசன்.

அரசியல் தலைவர்களை கவனியுங்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள்.

துரியோதனன்கள் இன்றும் இருக்கிறார்கள் - வேறு வேறு பெயரில்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/112.html


Saturday, March 17, 2018

கீதை - 1.11 - பீஷ்மனை காத்து நில்லுங்கள்

கீதை - 1.11 - பீஷ்மனை காத்து நில்லுங்கள் 




अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि॥११॥

அயநேஷு ச ஸர்வேஷு யதா²பா⁴க³மவஸ்தி²தா:|
பீ⁴ஷ்மமேவாபி⁴ரக்ஷந்து ப⁴வந்த: ஸர்வ ஏவ ஹி ||1-11||

அயநேஷு  = அனைத்து முக்கியமான இடங்களிலும்

ச  = மேலும்

ஸர்வேஷு  = அனைத்து

யதா²பா⁴கம்   = உங்களுடைய இடங்களில் இருந்து


அவஸ்தி²தா: = நிலையில்
|
பீ⁴ஷ்மம் = பீஷ்மரை

யேவ =மட்டும்

அபி⁴ரக்ஷந்து =காத்து நில்லுங்கள்

ப⁴வந்த: = நீங்கள்

ஸர்வ =அனைத்து

ஏவ ஹி = அதையும் செய்யுங்கள் ||1-11||

நீங்கள் எல்லோரும் உங்களுடைய இடங்களில் இருந்து கொண்டு, பீஷ்மரை காவல் காத்து இருங்கள். 


தன் படையின் பட்டியலை தந்த பின், துரியோதனன் படைத் தளபதிகளைப் பார்த்து சொல்லுகிறான் "நீங்கள் பீஷ்மரை காத்து நில்லுங்கள்" என்று.

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் - Play to win, play not to lose என்று.

அதாவது வெற்றிக்காக போராடுவது என்பது வேறு. தோற்று விடக் கூடாது என்று போராடுவது என்பது வேறு.

துரியோதனன் மனதில் வெற்றி கொள்வோம் என்ற நம்பிக்கை இல்லை.

படையைப் பார்த்து , "பாண்டவ சேனையை முறியடியுங்கள்" என்று சொல்ல வில்லை. பீஷ்மரை காத்து நில்லுங்கள் என்று சொல்லுகிறான்.

அதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்.

கௌரவர்களும் பாண்டவர்களும் , வெவ்வேறு சிற்றரசர்களை சேர்த்து கொண்டு தங்கள் படையை தயார் செய்து வைத்திருக்கின்றனர்.

இந்தப் போர், இரண்டு குடும்பத்துக்குள் நடக்கும் போர். பங்காளி சண்டை.

இதில், மற்ற அரசர்களுக்கு ஒன்றும் இல்லை. அவர்கள் போர் செய்ய ஒரு காரணமும் இல்லை.

பாண்டவர்களை முறியடியுங்கள் என்று சொன்னால், "ஏன்" என்ற கேள்வி வரும்.  கௌரவர் பக்கம் இருக்கும் பல சிற்றரசர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு பகையும்  இல்லை. மேலும், அவர்கள் பாண்டவர் பக்கம் நீதி இருப்பதாகக் கூட நினைக்கலாம். அப்படி இருக்கும் போது, அந்த அரசர்களை பாண்டவர்களை எதிர்த்து போரிடச் சொன்னால் , அது அவ்வளவு  நன்றாக இருக்காது என்று நினைத்து, பீஷ்மரை காத்து நில்லுங்கள் என்று சொல்லி இருக்கலாம்.


அடுத்து என்ன நிகழ்ந்தது ?

http://bhagavatgita.blogspot.in/2018/03/111.html



Friday, March 16, 2018

கீதை - 1.10 - ஒப்பிடுவதால் வரும் துன்பம்

கீதை - 1.10 - ஒப்பிடுவதால் வரும் துன்பம் 



अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम्।
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्॥१०॥

அபர்யாப்தம் தத³ஸ்மாகம் ப³லம் பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம்|
பர்யாப்தம் த்வித³மேதேஷாம் ப³லம் பீ⁴மாபி⁴ரக்ஷிதம்||10||

அபர்யாப்தம் = பெரிய, அளவில்லாத

தத = அது, அந்த

அஸ்மாகம்  = நமது

ப³லம் = பலம்

பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம் = பீஷ்மரால் ரட்சிக்கப்பட்ட , காவல் செய்யப்பட்ட

பர்யாப்தம் = குறைந்த

து = ஆனால்

இதம் = இந்த

எதேஷம் = அவர்களின்

பலம் = பலம்

பீ⁴மாபி⁴ரக்ஷிதம் = பீமனால் ரக்ஷிக்கப்பட்ட ||10||



பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட நமது படை அளவற்றிருக்கிறது. பீமனால் பாதுகாக்கப்பட்ட அவர்களின் படையோ நம்மை விட குறைந்தது. 

இந்த சுலோகத்துக்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

பாடலில் உள்ள சொற்களை அங்கும் இங்கும் மாற்றிப் போட்டால், பீஷ்மரால்  பாதுகாக்கப்பட்ட  நமது படையை விட பீமனால் பாதுகாக்கப்பட்ட அவர்கள் படை  சிறந்து விளங்குகிறது என்று பொருள் வரும்.

ஸ்லோகத்தை எப்படி பதம் பிரிக்கிறோம் என்பதைப் பொறுத்து அர்த்தம் அமையும்.

எப்படி இருந்தாலும், துரியோதனின் சிக்கல் என்ன என்றால், தன்னை மற்றவர்களோடு  ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது.

அவன் பெரியவனா, நான் பெரியவனா?

அவன் சிறந்தவனா ? நான் சிறந்தவனா ?

என்ற போட்டி குணம் அவனிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

தான் மற்றவர்களை விட எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என்பது அவன்  குறிக்கோள். தான் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ இல்லையோ, மற்றவர்கள் தன்னை விட  மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பது அவன் எண்ணம்.

அப்படி இருந்த துரியோதனன் இறுதி வரை மகிழ்ச்சியாக இல்லை.

அவன் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்.

மற்றவர்களோடு நாம் நம்மை ஒப்பீடு செய்தால், ஒரு காலும் இன்பம் இருக்காது.

நாம் இங்கே யாருடனும் போட்டி போட வரவில்லை.

வாழக்கை பந்தய மைதானமோ, குஸ்தி களமோ அல்ல.

எந்நேரமும் யாரோடாவது போட்டி போட்டுக் கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு  வாழ்வை வீணடித்து விடக் கூடாது.

நம் வாழ்வை, நாம் சந்தோஷமாக வாழ்வோம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/110.html


Thursday, March 15, 2018

கீதை - 1.09 - எனக்காக

கீதை - 1.09 - எனக்காக 



अन्ये च बहवः शूरा: मदर्थे त्यक्तजीविताः।
नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः॥९॥

அந்யே ச ப³ஹவ: ஸூ²ரா: மத³ர்தே² த்யக்தஜீவிதா:|
நாநாஸ²ஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்³த⁴விஸா²ரதா³: ||1-9||


அந்யே = இது அன்றி

ச  = மேலும்

ப³ஹவ: = பல

ஸூ²ரா: = சூரர்கள்

மத³ர்தே² = எனக்காக

த்யக்தஜீவிதா: = தங்கள் வாழ்வை தியாகம் செய்ய

நாநா ஸ²ஸ்த்ர ப்ரஹரணா: = நாலாவிதமான யுத்த சாத்திரங்களை அறிந்தவர்கள்

ஸர்வே = அனைவரும்

யுத்³த⁴ = போர்

விஸா²ரதா³: = திறமையானவர்கள்  ||1-9||


மேலே சொன்ன வீரர்கள் அன்றி, மேலும் பல சூரர்கள், போர் கலையில் சிறந்தவர்கள் என் பொருட்டு தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் (என்றான் துரியோதனன் துரோணாச்சாரியாரைப் பார்த்து ).

பதவிக்கு தரும் மரியாதையை தனக்குத் தரும் மரியாதை என்றே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் முதல் அமைச்சராக ஆகி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு கார் கதவை திறந்து விட ஒரு ஆள், பாதுகாப்புக்கு பத்து பேர் என்று பல மரியாதைகள் கிடைக்கும். அந்த மரியாதைகள் , அவருக்குத் தந்தது அல்ல. அந்தப் பதவிக்கு கொடுக்கும் மரியாதை. ஆனால், பல பேர், ஏதோ அது தனக்குத் தரப்பட்ட மரியாதை என்று எடுத்துக் கொள்கிறார்கள். பதவி போன மறு நிமிடம் மரியாதையும் போய் விடும். அப்போது, மரியாதை செய்யாதவர்கள் தனக்கு எதிரிகள் என்று நினைக்கத் தலைப்படுகிறார்கள். பதவி வேறு, தான் வேறு என்று அறிய வேண்டும். 

துரியோதனன் நினைக்கிறான், பெரிய பெரிய வீரர்கள் எல்லாம் அவன் பொருட்டு உயிரை விட சித்தமாக இருப்பதாக. அது தவறு . அவர்களின் தியாகம் நாட்டுக்காகவே அன்றி துரியோதனன் என்ற தனி மனிதனுக்காக அல்ல. 

அது இந்தப் பதவியாக இருந்தாலும், மதிப்பு மரியாதை எல்லாம் அந்தப் பதவிக்குத்தானே  அன்றி தனி மனிதனுக்கு அல்ல.

இதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பார்க்கலாம். 

பதவி எப்படி மனிதனின் மண்டைக்குள் போய் , தான் வேறு பதவி வேறு அல்ல என்று  நினைக்கத் தொடங்குகிறானோ, அது போல வேறு பல விஷயங்களும் நிகழ்கிறது. 


நான் பணக்காரன், செல்வந்தன், படித்தவன், அறிவாளி, உயர் குலத்தில் பிறந்தவன்,  உயர்ந்த மதத்தில் பிறந்தவன் , "நான் இந்து, நான் கிருத்துவன், " என்று  அனைத்தையும் "தான்" ஆகப் பார்க்கத் தலைப் படுகிறான் மனிதன். 


நான் இந்து மத கோட்பாட்டை பின் பற்றுகிறேன் என்று சொல்லுவது இல்லை. நான் இந்து என்கிறான். 

நான் இந்திய நாட்டில் வாழ்கிறேன் என்று சொல்லுவது இல்லை. நான் இந்தியன் என்று சொல்லுகிறான். 

நான் முதல் அமைச்சர் வேலை செய்கிறேன் என்று அல்ல. தானே முதல்வன் என்று நினைக்கிறான். 

நான் தமிழன், நான் இந்தியன், நான் ஆண் , நான் அது , நான் இது என்று மனிதன்  தன்னை கூறு போட்டுக் கொள்கிறான். 

பின் அவற்றிற்காக போராடுகிறான், சண்டை போடுகிறான், கொல்கிறான் , கொல்லக் கொடுக்கிறான்.  துரியோதனன் செய்த தவறு தெரிகிறது. நாம் செய்யும் தவறு தெரிவதில்லை. 


இராமனிடம் சக்கரவர்த்தி பதவி கொடுத்த போதும் அவன் மகிழவில்லை, அது  கை விட்டு போனபோதும் வருந்தவில்லை. 

தான் ஒரு சக்கரவர்த்தி என்று நினைத்திருந்தால், ஐயோ நான் சக்கரவர்த்தி இல்லையா என்று நினைத்து வருந்தி இருப்பான். 

இந்த பதவிகளைத் தாண்டி நாம் யார் ? இந்த லேபிள் களைத் தாண்டி நாம் யார் ? 

சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/19.html




கீதை - 1.08 - கெளரவ படைப் பட்டியல் தொடர்கிறது

 கீதை - 1.08 - கெளரவ படைப் பட்டியல் தொடர்கிறது 



भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः।
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च॥८॥

ப⁴வாந்பீ⁴ஷ்மஸ்²ச கர்ணஸ்²ச க்ருபஸ்²ச ஸமிதிஞ்ஜய:|
அஸ்²வத்தா²மா விகர்ணஸ்²ச ஸௌமத³த்திஸ்ததை²வ ச ||1-8||

ப⁴வாந் = நீ

பீ ⁴ஷ்ம = பீஷ்மர்

ச = மேலும்

கர்ணஸ்²ச = கர்ணன்

க்ருபஸ்²ச = கிருபன்

ஸமிதிஞ்ஜய: = போரில் வெற்றி கொள்ளும்

அஸ்²வத்தா²மா  =  அஸ்வத்தாமன்

விகர்ணஸ் = விகர்ணன் மேலும்

ச =மேலும்

ஸௌமத³த்திஸ்ததை = சோமதத்தன் மகன்

எவ = அது அன்றி

ச = மேலும்  ||1-8||


இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று துரோணருக்குத் தெரியாதா ?  "நீ மட்டும் இல்லை, இவர்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறார்கள்" என்று சொல்லாமல் சொல்கிறான்.

ஆச்சாரியனிடம் கூட பணிவு கிடையாது.

துரியோதனன், தர்மன் என்பதெல்லாம் ஒரு உருவகம். கெட்டவன் எப்படி இருப்பான், நல்லவன் எப்படி இருப்பான் என்று சொல்வதற்கு கிடைத்த பாத்திரங்கள். அவ்வளவுதான்.

துரியோதனின் குணம் நம்மிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அடக்கம் இல்லாதது ஒரு அரக்க குணம்.

அது நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

மேலும் சிந்திப்போம்.



http://bhagavatgita.blogspot.com/2018/03/18.html



Tuesday, March 13, 2018

கீதை - 1.7 - இரு பிறப்பு - புத்துயிர்ப்பு

கீதை - 1.7 - இரு பிறப்பு - புத்துயிர்ப்பு  



अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम।
नायका मम सैन्यस्य सञ्ज्ञार्थं तान्ब्रवीमि ते॥७॥

அஸ்மாகம் து விஸி²ஷ்டா யே தாந்நிபோ³த⁴ த்³விஜோத்தம|
நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்த²ம் தாந்ப்³ரவீமி தே ||1-7||


அஸ்மாகம் = நமது

து = ஆனால்

விஸி²ஷ்டா =விசேஷமான

யே = யார்

தாந் = அவர்கள்

நிபோத = சொல்லப்பட்டது

⁴ த்³விஜோத்தம = துவிஜ + உத்தம = இருமுறை உயர்ந்தவர்

நாயகா = நாயகனே , படை தளபதியே

மம = நமது

ஸைந்யஸ்ய = படைகள்

ஸஞ்ஜ்ஞார்த²ம் = நிலை

தாந் = அவர்கள்

ப் ³ரவீமி = சொல்கிறேன்

 தே = உனக்கு

படைத் தளபதியே, இரு பிறப்பில் உயர்ந்தவரே , குறித்துக் கொள்வதற்காக நமது படையில் உள்ள சிறந்தவர்களை உனக்குச் சொன்னேன் 


இந்த ஸ்லோகத்தில் குறிப்பாக கவனிக்க வேண்டியது "இரு பிறப்பில் உயர்ந்தவரே"

இரு பிறப்பு என்றால் என்ன.

பெரும்பாலானோர்  பிறக்கிறார்கள், வளர்க்கிறார்கள், வாழ்கிறார்கள், இறக்கிறார்கள்.

பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை ஒரே நேர் கோடு போல இருக்கிறது.

பிறப்பு - படிப்பு - வேலை - திருமணம் - பிள்ளைகள் - வயோதிகம் - மரணம்.

அப்படிப்பட்ட வாழ்க்கைக்கும், ஒரு விலங்கின் வாழ்க்கைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?

விலங்குகளும் பிறக்கின்றன, வேட்டையாட, புல் மேய, நீர் இருக்கும் இடம் கண்டுபிடிக்க படிக்கின்றன , இணையோடு சேர்ந்து குட்டிகளை பெறுகின்றன, வயதாகி இறக்கின்றன.

பிறந்தோம், இறந்தோம் என்று ஒரு வாழ்க்கை.

ஒரு இயந்திர கதியில் வாழ்க்கை வாழ்ந்து முடிந்து விடுகிறது.

ஏன் செய்தோம், எதற்காக செய்தோம், வாழ்வின் நோக்கம் என்ன, எதை நோக்கி வாழ்க்கை நகர்கிறது என்றெல்லாம் யோசிப்பது கூட கிடையாது.

வெகு சிலரே, தங்களைத் தான் அறிகிறார்கள்.

அப்படி அறிந்தவர்கள் ஒரு புது வாழ்க்கை பெறுகிறார்கள்.

தாயின் மூலம் பிறப்பது ஒரு பிறவி.

தன்னைத் தான் அறிவது, ஒரு புது பிறவி.

மான் குட்டிகளால் வளர்க்கப்பட்ட சிங்கக் குட்டி, தானும் ஒரு மான் என்றே நினைத்துக் கொள்ளுமாம்.

என்றேனும், இன்னொரு சிங்கத்தை பார்த்தாலோ, அல்லது வேட்டையாட வேண்டிய நிர்பந்தம் வந்தாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு நிகழ்வு மூலமோ, அந்த சிங்கக் குட்டி, தான் மான் அல்ல ,தான் ஒரு சிங்கம் என்று உணரலாம்.

அன்று, அந்த சிங்கத்தின் வாயில் இருந்து ஒரு பெரிய கர்ஜனை பிறக்கும்.

மான் , சிங்கமானதை அறிவிக்கும் கர்ஜனை அது.

அது போல, நீங்கள் யார் என்று அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

பன்றி கூட்டத்தில் உள்ள மான் போல, மான் கூட்டத்தில் உள்ள சிங்கம் போல.

உங்களை நீங்கள் அறியும் போது, மீண்டும் ஒரு புது பிறவி எடுத்தது போல உணர்வீர்கள்.

இயேசு பிரான், சிலுவையில் மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லுவது ஒரு உருவகம். இறந்த உடல் மீண்டும் உயிர் பெறுவது இல்லை.

இயேசு தன்னை அறிந்தார். அது ஒரு புத்துயிர்ப்பு.

சித்தார்த்தன், புத்தன் ஆனான். அது இரண்டாவது பிறப்பு.

நரேந்திரன் , விவேகானந்தனானான்.

கூட்டுப் புழு , பட்டாம் பூச்சி ஆகும் இரசவாதம்.

பிறந்தோம் - வாழ்ந்தோம் - இறந்தோம் என்று இல்லாமல், நீங்கள் யார் என்று கண்டடையுங்கள்.

ஒரு தாய் குழந்தையை பெற்றெடுப்பது, அந்த பிரசவ வேதனை  சொல்லி மாளாது.

நீங்களே உங்களை மீண்டும் பிரசவிப்பதும் அவ்வளவு வேதனையான விஷயம்தான்.

அதனால் தான் யாரும் அதை செய்வது இல்லை. நமக்கு எதுக்கு அந்த வலி என்று இருந்து விடுகிறார்கள்.

வெகு சிலரே, சிலுவை சுமந்து, காடு மேடெல்லாம் அலைந்து, சாப்பாடு தண்ணி இல்லாமல்  தங்களை தாங்களே தேடி அடைகிறார்கள்.

சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்.

சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்க்கையை ஒரு முறை பின்னோக்கி பாருங்கள். என்ன நடந்தது இதுவரை என்று.

புரியலாம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/17.html




Monday, March 12, 2018

கீதை - 1.06 - கௌரவர் படைப் பட்டியல் தொடர்கிறது

கீதை - 1.06 - கௌரவர் படைப் பட்டியல் தொடர்கிறது 



युधामन्युश्च विक्रान्त: उत्तमौजाश्च वीर्यवान्।
सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः॥६॥

யுதா⁴மந்யுஸ்²ச விக்ராந்த: உத்தமௌஜாஸ்²ச வீர்யவாந்|
ஸௌப⁴த்³ரோ த்³ரௌபதே³யாஸ்²ச ஸர்வ ஏவ மஹாரதா²: ||1-6||


யுதா⁴மந்யுஸ்²ச = யூதாமன்யு

விக்ராந்த: = வலிமையுள்ள

உத்தமௌஜாஸ்²ச =உத்தமௌஜா

வீர்யவாந் = வீரியமுள்ள

ஸௌப⁴த்³ரோ  = சுபத்ரையின் மகன்

த்³ரௌபதே³யா  ஸ்²ச =  திரௌபதி மக்கள்

ஸர்வ ஏவ  = எல்லோரும்

மஹாரதா²: = மஹாரதர்கள்

தனது படையில்  உள்ள வீரர்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டு போகிறான் துரியோதனன் .

இதில் சிந்திக்க ஒன்றும் இல்லாததால், மேலே தொடர்வோம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/16.html


கீதை - 1.05 - கௌரவப் படை பட்டியல் தொடர்கிறது

கீதை - 1.05 - கௌரவப் படை பட்டியல் தொடர்கிறது 



धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान्।
पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः॥५॥

த்⁴ருஷ்டகேதுஸ்²சேகிதாந: காஸி²ராஜஸ்²ச வீர்யவாந்|
புருஜித்குந்திபோ⁴ஜஸ்²ச ஸை²ப்³யஸ்²ச நரபுங்க³வ: ||1-5||

த்⁴ருஷ்டகேது = திருஷ்டகேது

ஸ்²சேகிதாந: = சேகிநாதன்

காஸி²ராஜஸ்²ச = காசி ராஜன்

வீர்யவாந் = வீரியமான

 புருஜித் = புருஜித்

குந்திபோ⁴ஜஸ்²ச = குந்தி போஜன்

ஸை²ப்³யஸ்²ச = சைப்பியன்

நரபுங்க³வ: = மனித ஏறு போன்ற

துரியோதனன் தனது படையில் உள்ள படைத் தலைவர்களின் பட்டியலைத் தருகிறான்.

இதில் சிந்திக்க ஏதும் இல்லை என்பதால், இதை கடந்து மேலே செல்வோம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/15.html


கீதை - 1.04 - கௌரவப் படை

கீதை - 1.04 - கௌரவப் படை 



अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि।
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः॥४॥

அத்ர ஸூ²ரா மஹேஷ்வாஸா பீ⁴மார்ஜுநஸமா யுதி⁴|
யுயுதா⁴நோ விராடஸ்²ச த்³ருபத³ஸ்²ச மஹாரத²: ||1-4||

அத்ர = இங்கே , நமது படையில்

ஸூ²ரா  =  சூரர்கள்

மஹேஷ்வாஸா  = பெரிய வில்லாளிகள்

பீ⁴மார்ஜுநஸமா  = பீமா + அர்ஜுன  சமா = பீமனுக்கும்யு அர்ஜுனனுக்கும்தி சமமான


யுயுதா = யுயுதானன்

விராடஸ்²ச = விராடன்

த்ருபத³ஸ்²ச = துருபதன்

மஹாரத = போன்ற மஹாரதர்கள்


இங்கே நமது படையிலும் யுதானன் , விராடன், துருபதன் போன்ற அர்ஜுனன் மற்றும் பீமனுக்கு சமமான சூரர்களும் வில்லாளிகளும் இருக்கிறார்கள் (என்று துரியோதனன் , துரோணாசாரியரிடம் கூறினான் )

தனது படையில் உள்ள பெரிய படைத் தலைவர்களை பற்றி துரியோதனன் கூறுகிறான். பெயர் பட்டியல் அன்றி வேறில்லை இந்த ஸ்லோகத்தில். எனவே, இதை கடந்து மேலே போவோம்.


http://bhagavatgita.blogspot.in/2018/03/14.html




Sunday, March 11, 2018

கீதை - 1.3 - பாண்டவர்களின் படையைப் பார்

கீதை - 1.03 - பாண்டவர்களின் படையைப் பார் 




पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता॥३॥

பஸ்²யைதாம் பாண்டு³புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்|
வ்யூடா⁴ம் த்³ருபத³புத்ரேண தவ ஸி²ஷ்யேண தீ⁴மதா ||1-3||


பஸ்ய = பார்
ஏதம் = இந்த
பாண்டு = பாண்டவர்களின்
புத்ராணாம் = புத்திரர்களின்
ஆச்சார்ய = ஆச்சாரியரே
மஹதம் = பெரிய, வலிமை மிக்க
சமூம் = படை
வியூடாம் = வியூகம், அணிவகுத்து நிற்கும்
 த்³ருபத³புத்ரேண = துருபதனின் புத்திரனான (த்ரிஷ்டத்துய்மனன்)
தவ = உங்களுடைய
ஸி²ஷ்யேண = சீடனான
தீ⁴மதா = நன்றாக, புத்திசாலித்தனமாக


ஆச்சாரியாரே , உம்முடைய சீடனும், துருபத குமாரனுமான த்ரிஷ்டத்துய்மனன் திறமையாக அணி வகுத்திருக்கும் இந்த பாண்டவ படைகளைப்  பாரும்.

கோபம். பதற்றம். சந்தேகம். நிதானம் இன்மை. தன்னம்பிக்கை இன்மை. துரியோதனின் குணங்கள்.

த்ரோணச்சாரியாரை நம்பி, அவர் திறமையானவர் என்று அறிந்து படை நடத்தும் பொறுப்பை அவரிடம் கொடுத்தாயிற்று. அவருக்குத் தெரியாதா , துருபதன் மகன் வகுத்துள்ள வியூகம்.

துரியோதனின் பதற்றம். எங்கே ஆச்சாரியார் கவனிக்காமல் இருந்து விடுவாரோ என்ற சந்தேகம். தான் அதை கவனித்து விட்டதாக அவரிடம் காட்டிக் கொள்ள வேண்டும். தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்ட வேண்டும்.

அது மட்டும் அல்ல, துருபதன் தவம் செய்து , துரோணரை கொல்ல வேண்டும் என்று ஒரு மகனும், துரோணரை கொல்லும் ஒருவனை மருமகனாக அடைய ஒரு மகளையும் பெற்றான். அது த்ரோணருக்கும் தெரியும்.

அதை , இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி சொல்வதன் மூலம்  துரோணரை கொஞ்சம் மனதளவில் வலுவிழக்கச் செய்கிறான் துரியோதனன்.

"உம்மைக் கொல்ல தவத்தின் மூலம் வந்திருக்கும் அவன் வகுத்த படையைப் பார் "

என்று சொல்லுகிறான்.

பேராசை, மற்றவன் நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் மனிதனின் நிம்மதியை குலைக்கிறது.

தர்மன் கேட்டது ஐந்து வீடு.  சரியோ தவறோ, நீதியோ அநீதியோ, தர்மமோ அதர்மமோ, ஐந்து வீடு கொடுத்தால் துரியோதனன் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை.

உலகளந்த பெருமாள், பரவாசுதேவன் , ஐந்து வீடு கேட்டான்.

ஊசி முனை நிலம் கூட கொடுக்க மாட்டேன் என்றான் துரியோதனன்.

அந்த கஞ்சத்தனம், உலோப குணம், அவன் குலத்தையே வேரறுத்தது.

கொஞ்சம் விட்டு கொடுத்திருக்கலாம். "அவனுக்கு எதற்கு கொடுக்க வேண்டும்" என்ற முரட்டு பிடிவாதம் துரியோதனனை அழித்தது.

கெட்டவர்களிடம் இருந்தும்  பாடம் படிக்கலாம்.

ஞாயம், சரி, தவறு என்று வாதம் பண்ணிக் கொண்டிருக்காமல், உறவுகளுக்குள் சற்று விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் , வாழ்க்கை சிறக்கும்.

கீதை முழுவதுமே வாழ்க்கைக்கு உண்டான பாடங்கள்தான்.

படிப்போமே.

http://bhagavatgita.blogspot.in/2018/03/13.html