Monday, June 30, 2014

கீதை - 10.32 - முதலும், நடுவும்,முடிவும் நானே

கீதை - 10.32 -  முதலும், நடுவும்,முடிவும் நானே 


सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम् ॥१०- ३२॥

ஸர்கா³ணாமாதி³ரந்தஸ்²ச மத்⁴யம் சைவாஹமர்ஜுந |
அத்⁴யாத்மவித்³யா வித்³யாநாம் வாத³: ப்ரவத³தாமஹம் || 10- 32||

ஸர்கா³ணாம் = படைப்புகளில்

ஆதி ³ரந்தஸ்ச மத்யம் = ஆதி, அந்தம், மத்யம் 

சை வா அஹம் = நான் இருக்கிறேன்

அ ர்ஜுந  = அர்ஜுனா

அத்யாத்ம வித்யா வித்யாநாம் = வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தையாய் இருக்கிறேன்

 வாத: ப்ரவத³தாமஹம் = பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன்

படைப்பில் நான் ஆதி, அந்தம் நடுவாக இருக்கிறேன். 
வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தையாக இருக்கிறேன்.
பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன்.

காலம் என்பது அறிந்து கொள்ள முடியாததாகவே இருக்கிறது. என்று தொடங்கியது, எப்படி இயங்குகிறது, என்று  முடியும் என்று அறிய முடியாமல் இருக்கிறது. 

படைப்பு என்று தனியாக ஒன்று  இல்லை. படைக்கப்பட்ட கணம் முதல் படைக்கப்பட்டவை இறக்கத்  தொடங்குகின்றன.ஒன்று அழிந்து இன்னொன்று தொடங்குகிறது. படைப்பு முதலிலும் இருந்தது, நடுவிலும் இருக்கிறது, இறுதியிலும் இருக்கும். இறந்தது பிறக்கத்தான் வேண்டும். இல்லை என்றால் உலகம் முடிந்து  போய் விடாதா ? படைப்பின் அனைத்து கட்டங்களிலும் நான் இருக்கிறேன் என்கிறான் கண்ணன். 

வாழ்வில் ஏதேதோ படிக்கிறோம். எதை எதையோ அறிந்து கொள்ள  முயல்கிறோம். அறிய அறிய அறியாமை தான் வளர்கிரது. 

 பொருள்களும்,அதன் வடிவங்களும், தன்மைகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றம் அனைத்தையும் நம்மால் படித்து அறிந்து கொள்ள முடியுமா ? ஒரு ஆயுள் போதுமா அதற்கு ? எதை அறிந்து கொண்டால் பின்  வேறு எதையும் அறிந்து கொள்ள வேண்டாமோ அந்த வித்தை அத்யாத்ம வித்தை. எல்லா அறிவுக்கும் அடிப்படை அறிவு ஆத்ம அறிவு. அந்த அறிவாக நான் இருக்கிறேன் என்கிறான் கண்ணன்.

பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன். 


ப்ரவத³தா என்ற சொல்லுக்கு பேசுவோர் என்று துல்லியமாக சொல்ல முடியாது. வாதம் புரிபவர்களில், ,ஆராய்பவர்கள், என்று  கொள்ளலாம்.

வாக்கு வாதம் பல தளங்களில் நடக்கும்.

சண்டை போடுவது, எதிராளியை மடக்குவது, தவறான உதாரணங்களை காட்டுவது, பலத்தை உபயோகப் படுத்துவது என்று பல தளங்களில் இயங்குகிறது. இதில் முக்கியமான ஒன்று வாதம்  புரிவது. வாதம் என்பது நூல்களை  கற்றுத் தேர்ந்து, அதில் சொல்லப் பட்ட உண்மைகளை பேச்சின் மூலம் நிலை  நிறுத்துவது. இது உண்மையை கண்டறியப் பயன்படுவது. அந்த வாதமாக  இருக்கிறேன் என்கிறான் கண்ணன்.

வாதம் உண்மையை அறியும் கருவி.


Sunday, June 29, 2014

கீதை - 10.31 - ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை)

கீதை - 10.31 - ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை) 



पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।
झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥१०- ३१॥

பவந: பவதாமஸ்மி ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் |
ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ || 10- 31||


பவந: பவதாமஸ்மி = தூய்மை செய்பவற்றில் நான் காற்று

ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் = ஆயுதம் தான்கியவர்களில் நான் இராமன்

ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி = மீன்களில் நான் சுறா

ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ  = ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை )


தூய்மை செய்பவற்றில் நான் காற்று; ஆயுதம் தாங்கியவர்களில் நான் இராமன். மீன்களில் நான் சுறா. ஆறுகளில் நான் கங்கை.

இங்கே கங்கை என்பதற்கு பதில் ஜாஹ்ணவி என்ற பெயரை வியாசர்  பயன்படுத்துகிறார்.

ஏன் ?

முன்பொரு காலம் ஜ்ஹாணவி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் கங்கை ஆற்றை ஒரு சொட்டு இல்லாமல் குடித்து விட்டார். பின் , எல்லோரும் கேட்டு கொண்டதற்கு இணங்க  கங்கை ஆற்றை அவருடைய காதின் மூலம் வெளியில் விட்டார்.

இது என்ன ஆற்றை குடிப்பதாவது, பின் காதின் வழியே விடுவதாவது...அர்த்தமற்ற கதையாக இருக்கிறதே என்று நினைக்கலாம்.

இதன் அர்த்தம்.....


ஒரு விஷயத்தை நன்றாக படித்து முடித்தவர்களை "...அதை கரைத்து குடித்து விட்டான் " என்று சொல்லுவது வழக்கம். கங்கை என்பது அறிவின் குறியீடு. அந்த  அறிவை ஒரு சொட்டு இல்லாமல் குடித்து முடித்தார் என்று அர்த்தம்.

பின் காதின் வழியாக விட்டார் என்றால் அந்த அறிவை மற்றவர்களுக்குச் சொல்லித் தந்தார் என்று அர்த்தம்.

அவர் சொல்ல மற்றவர்கள் கேட்டார்கள். அவர்களின் காதின் வழியே அந்த அறிவு பரிமாறப் பட்டது.

அப்படி அறிவின் மூலமாக கருத்தப்பட்ட கங்கை போல நான் இருக்கிறேன் என்கிறான்  கண்ணண்.




Thursday, June 26, 2014

கீதை - 10.30 - பறவைகளில் நான் கருடன்

கீதை - 10.30 -  பறவைகளில் நான் கருடன் 


प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥१०- ३०॥

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் = அசுரர்களில் நான் பிரகலாதனாக இருக்கிறேன்

கால: கலயதாமஹம் | = இயங்குபவற்றில் நான் காலமாக இருக்கிறேன்

ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர = மிருகங்களில் நான் சிங்கமாக இருக்கிறேன்

அஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் = பறவைகளில் நான்  கருடனாக இருக்கிறேன்

அசுரர்களில் பிரகலாதனாகவும் , இயங்குபவற்றில் காலமாகவும், மிருகங்களில் சிங்கமாகவும், பறவைகளில் கருடனாகவும் இருக்கிறேன்.

கண்ணன் தொடர்கிறான்.

பறவைகளுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.

பறவைகள்,  தான் செல்லும் வழியில் தங்கள் காலடித் தடத்தை  விட்டுச் செல்வது இல்லை

அவை போன பாதையை நாம் பின் பற்ற  முடியாது.

அவை வந்த பாதை கண்ணுக்குத்  தெரியாது.

 அங்கிருந்தது.இப்போது இங்கு  இருக்கிறது. எந்த வழியாக வந்தது என்பதற்கு பாதை இல்லை.

உண்மையும் அப்படித்தான்.  

அதை கண்டு அடைய  வழி இல்லை. யாரும் சொல்லித்தந்து அறிந்து விட முடியாது.

நாமே முயன்று அறிய  வேண்டும்.

கண்ணன் சொல்கிறான் நான் பறவைகளில் கருடனாக இருக்கிறேன் என்று.

கண்ணன் சென்ற பாதையில் நாம் செல்ல முடியாது என்பது அர்த்தம்.

உங்கள் உண்மையை  நீங்கள் தான் தேடிக் கண்டடைய வேண்டும்.

புத்தகங்கள்,  மந்திரங்கள்,தந்திரங்கள், என்ற வழி முறையும்  உதாவது.

அவை உதவும் என்றால் எல்லோரும் அவற்றின் உதவியோடு இந்நேரம் கண்டு  பிடித்து இருப்பார்கள்.

உண்மையை கண்டறிய பாதை இல்லை.

பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்.


Tuesday, June 24, 2014

கீதை - 10.30 - இயக்குபவர்களில் நான் காலம்

கீதை - 10.30 - இயக்குபவர்களில் நான் காலம் 


प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥१०- ३०॥

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் = அசுரர்களில் நான் பிரகலாதனாக இருக்கிறேன் 

கால: கலயதாமஹம் | = இயங்குபவற்றில் நான் காலமாக இருக்கிறேன்

ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர = மிருகங்களில் நான் சிங்கமாக இருக்கிறேன்

அஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் = பறவைகளில் நான்  கருடனாக இருக்கிறேன்

அசுரர்களில் பிரகலாதனாகவும் , இயங்குபவற்றில் காலமாகவும், மிருகங்களில் சிங்கமாகவும், பறவைகளில் கருடனாகவும் இருக்கிறேன்.

கண்ணன் தொடர்கிறான்.

அசுரர்களில் நான் பிரகலாதன். பிறப்பால் பிரகலாதன் ஒரு அசுரன். ஆனால் அவனை வைணவ உலகம் பிரகலாத ஆழ்வார் என்றே கொண்டாடுகிறது. பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாகவோ  தாழ்ந்தவனாகவோ ஆவதில்லை. அவன் செயலே  அவனை தீர்மானிக்கிறது. அசுர குலத்தில் பிறந்தாலும் நல்ல ஒழுக்கத்தால் உயர்ந்த அவனை தனக்கு இணையாக கூறுகிறான் கண்ணன்.

இயக்குபவர்களில் நான்  காலம்.

காலம் எப்படி நம்மை இயக்குகிறது ?

காலம் பல தளங்களில் இயங்குகிறது.

ஒன்று நம் கடிகாரம் காட்டும் காலம் - காலையில் எழ வேண்டும்,வேலைக்குப் போக வேண்டும், மதியம் உணவு, இரவு உறக்கம் என்று கடிகாரம் நம்மை செலுத்துகிறது.

இன்னொன்று, நாட்காட்டி சொல்லும் நேற்று , இன்று நாளை என்ற காலக் கணக்கு. எதிர் காலம் பற்றிய நம் கனவுகள், பயங்கள் , மற்றும் அவற்றால் நாம் செய்யும் செயல்கள். வரும் காலத்திற்கு என்று நாம் சேர்த்து  வைப்பது போன்றவை.

 கடிகாரத்தையும், நாள் காட்டியும் தவிர்த்து நம் மன அளவில் செயல் படும் காலம்.  நாம் ஏதோ ஒருவராக  இருக்கிறோம். நாம் யாரோ ஒருவராக ஆக விரும்புகிறோம். இதற்கு இடையில் உள்ள கால இடைவெளி. பணக்காரனாக, அறிவாளியாக என்று ஏதேதோ ஆக விரும்புகிறோம். நமக்கும் நம் இலட்சியத்திற்கும் இடையில் இருப்பது காலம். நம்மை நம் இலட்சியங்களை நோக்கி செலுத்துவது காலம். ஆசைகள் இல்லை என்றால் காலம் நின்று போகும்.

எதிர் காலம் பற்றிய கனவில் பயத்தில் நாம் நிகழ் காலத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்.

காலம் நம்மை செலுத்துகிறது.

செலுத்து பவர்களில் நான் காலமாக இருக்கிறேன்.

நாளை என்று ஒன்று இல்லை என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் "இன்று" எப்படி மாறுகிறது என்று  தெரியும்.

சொல்லப் போனால் நாளை என்று ஒன்று கிடையவே கிடையாது. நாளை என்பது  ஒரு கற்பனை.

காலத்தைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையைப் புரிந்து  கொள்ளலாம்.






Monday, June 23, 2014

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன் - பாகம் 2

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன்  - பாகம் 2


अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥१०- २९॥

அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||


அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் = நாகர்களில் நான் அநந்தன்
வருணோ யாத³ஸாமஹம்  = நீர் வாழ்வோரில் நான் வருணன்
பித்ரூணாமர்யமா = பித்ருகளில் நான் அரியமான்
சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் = யமனாக இருக்கிறேன் அடக்கி ஆள்பவர்களில்

நாகர்களில் நான் அனந்தனாகவும், நீர் வாழ்வோரில் வருணனாகவும், பித்ருகளில்  அரியமானாகவும், அடக்கி ஆள்வோரில் யமனாகவும் இருக்கிறேன். 

ஆள்வோரில் நான் யமனாக  இருக்கிறேன்.

எமன் உயிரை  எடுப்பவன் என்றுதான் அறிந்து இருக்கிறோம். அவன் எப்படி  ஆள்பவனாக  முடியும். அதிலும், காக்கும் கடவுளான கண்ணன் (திருமால் ) எப்படி நான்  எமனாக இருக்கிறேன் என்று சொல்ல முடியும் ?

இறப்பு என்பது என்ன ? அழித்தல் என்பது என்ன ? அழிதல் என்றால் என்ன ?

மலர் பார்க்க அழகாக இருக்கிறது ? அந்த அழகு எப்படி வந்தது ? விதை அழிந்ததால்  வந்த செடியில் இருந்து மலர் வந்தது. விதை அழியாமல் இருந்திருந்தால்  மலர் வந்தே இருக்காது.

மழை அழகு. மேகம் அழிந்தால் தான் மழை வரும்.

பட்டாம் பூச்சி அழகு. கூட்டுப் புழு அழிந்தால் தான் பட்டாம் பூச்சி வரும்.

கூட்டுப் புழுவுக்கு வருத்தம் இருக்கும், விதைக்கு வருத்தம் இருக்கும், மேகத்திற்கு வருத்தம் இருக்கும்   நாம் அழிகிறோமே என்று.

ஆனால் அந்த அழிவில் தான் அதை விட சிறந்த ஒன்று பிறக்கப் போகிறது என்று  அவைகளுக்குத்  தெரியாது. நமக்குத் தெரியும்.

ஒவ்வொரு ஆக்கத்தின் , தோற்றத்தின் பின்னால் ஒரு அழிவு இருக்கிறது. சொல்லப் போனால்   அழிவும் ஆக்கமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு  கொண்டவை.

இன்னும் சொல்லப் போனால் அவை இரண்டுமே ஒன்றுதான்.

அழிவும் ஆக்கமும் ஒரு தொடர்ச்சியான செயல்.

நாம் அழிவை மட்டும் பார்த்து விட்டு வருந்துகிறோம். விதையைப் போல, மேகத்தைப் போல.

அழிவு என்பது ஆக்கத்தின் ஒரு கூறு.

ஆக்கம் என்பது அழிவின் ஒரு கூறு.

அப்படி என்றால் இந்த இரண்டுக்கும் இடையே சில காலம் இருக்கிறதே அதைத்தான்  நாம் காத்தல்  என்கிறோம்.

ஆனது எல்லாம் அழிவை நோக்கி நடந்து கொண்டே இருக்கிறது.

அழிவு என்பது ஆக்கம் என்பதை தன் கருவில் வைத்து இருக்கிறது.

 அழிவு ஆக்குகிறது.

இதை இரண்டையும் செய்பவன் எல்லாவற்றையும்  ஆள்பவன் தானே ?

எனவே நான் ஆள்வோரில் யமனாக இருக்கிறேன் என்றான்.

 சிந்திப்போம்.


Friday, June 20, 2014

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன்

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன் 


अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥१०- २९॥

அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||


அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் = நாகர்களில் நான் அநந்தன்
வருணோ யாத³ஸாமஹம்  = நீர் வாழ்வோரில் நான் வருணன்
பித்ரூணாமர்யமா = பித்ருகளில் நான் அரியமான்
சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் = யமனாக இருக்கிறேன் அடக்கி ஆள்பவர்களில்

நாகர்களில் நான் அனந்தனாகவும், நீர் வாழ்வோரில் வருணனாகவும், பித்ருகளில்  அரியமானாகவும், அடக்கி ஆள்வோரில் யமனாகவும் இருக்கிறேன். 

நாகம் என்பது பல தலைகளை உடையது. பல தலை நாகம் உண்டா என்றால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு தலையும் ஒரு குணத்தை குறிப்பது. ஆசை, கோபம், காமம், வெறுப்பு, பொறாமை, என்று நமக்கு ஆயிரம் தலைகள். எல்லாம் தலையில் இருந்துதானே வருகிறது. ஒரு நாள் அன்பு, மறு நாள் கோபம், இன்னொரு நாள் பொறாமை, மற்றும் ஒரு நாள் காமம் என்று நமக்குத்தான் எத்தனை தலைகள்.

இவற்றை எல்லாம் அடக்கி ஆள்பவன் இறை தன்மை அடைகிறான்.

காளிங்க நர்த்தனம்.

ஆதிசேஷ சயனம்....எல்லாம்  புலன் வழி பிறக்கும் குணங்களை அடக்கி ஆண்டதின்  குறியீடு.

ஆயிரம் தலை உள்ள ஆதிசேஷனை  படுக்கையாக போட்டு, அதன் மேல்   நிம்மதியாக உறங்குவது என்றால் நடக்குமா ?

காமம் தலைக்கு ஏறினால் தூக்கம் வருமா ? பொறாமை நெஞ்சில் குடி கொண்டால் தூக்கம்   வருமா ?

அத்தனையையும் அடக்கி படுக்கையாக போட்டு ஒருவன் நிம்மதியாக தூங்குகிறான்  என்றால் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்.

அவன் நாகமாகவும் இருக்கிறான், நாகத்தை அடக்கியவனாகவும் இருக்கிறான்.

ஆசையும் இருக்க வேண்டும். அது கட்டுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தொடரும்

Thursday, June 19, 2014

கீதை - 10.28 - நான் மன்மதன்

கீதை - 10.28 - நான் மன்மதன் 



आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् ।
प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥१०- २८॥

ஆயுதா⁴நாமஹம் வஜ்ரம் தே⁴நூநாமஸ்மி காமது⁴க் |
ப்ரஜநஸ்²சாஸ்மி கந்த³ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: || 10- 28||

ஆயுதா⁴நாம் = ஆயுதங்களில்

அஹம் வஜ்ரம் = நான் வஜ்ராயுதம்

தேநூநாம் = பசுக்களில் 

காமது⁴க் அஸ்மி = நான் காமதேனு

ப்ரஜந: கந்த³ர்ப: அஸ்மி = பிறப்பிபவர்களில் நான் மன்மதன்

ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி = மேலும், பாம்புகளில் நான் வாசுகி


ஆயுதங்களில் வஜ்ராமாகவும், பசுக்களில் காமதேனுவாகவும், பிறப்பிபவர்களில் மன்மதனாகவும், பாம்புகளில் வாசுகியாகவும் இருக்கிறேன். 


மதம் , மனிதனின் காம ஆசைகளுக்கு எதிரானதா ? காமம் கூடாது என்று சொல்கிறதா ?

கீதை அப்படி சொல்லவில்லை.

இந்த உலகம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால் பிறப்பு நிகழ வேண்டும். பிறப்பு  நிகழ வேண்டும் என்றால் ஆசை வேண்டும். ஈர்ப்பு வேண்டும்.

கண்ணன் சொல்கிறான், இந்த பிறப்புகளுக்கு பல விஷயங்கள் வேண்டும்....அவற்றில் நான் மன்மதனாக  இருக்கிறேன்  என்கிறான்.ஆசையைத்  தருவதே அவன் என்று சொல்லும் போது அந்த ஆசை  எப்படி தவறாக  முடியும்.

இந்து மதம் இல்லறத்தை போற்றுகிறது.


பாம்புகளில் நான் வாசுகியாக இருக்கிறேன்.

வாசுகி என்ற பாம்பு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய கயிறாக இருந்து  உதவியது.

வாழ்கை என்ற பாற்கடலை கடைந்து உண்மை என்ற அமிர்தத்தை அடைய நான்  உறுதுணையாக இருப்பேன் என்கிறான் கண்ணன்.

வாசுகி மிகப் பெரிய பாம்பு. மேரு மலையை சில சுற்றுகள் கயிறு போல சுற்றி அதை வைத்து கடைந்தார்கள்.

அதே வாசுகி என்ற பாம்பு சிவனின் கை விரல் மோதிரம் என்றும் கூறுகிறார்கள்.

எப்படி முடியும் ?

உண்மை எல்லாவற்றையும் விட பெரியது.

உண்மை எல்லாவற்றையும் விட நுணுக்கமானது.

அந்த உண்மை வாழ்வில் சாகா நிலை அடைய அமிர்தத்தை அடைய உதவும்.

உறவு கோல் நாட்டு உணர்வு கயிற்றினால் முருக வாங்கிக் கடைய முன் நிற்குமே என்றார் அப்பர்.


 இறை அருளால் அமிர்தத்தை கடைந்து எடுங்கள்.

அந்த பாலில் இருந்து வந்த வெண்ணை உண்ட கண்ணன், பாற்கடல் கடைந்த அமிர்தத்தை  அடைய அருள்  புரியட்டும்.

   

Wednesday, June 18, 2014

கீதை - 10.27 - குதிரை,யானை, மனிதர்

கீதை - 10.27 -  குதிரை,யானை, மனிதர் 


उच्चैःश्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम् ।
ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम् ॥१०- २७॥

உச்சை:ஸ்²ரவஸமஸ்²வாநாம் வித்³தி⁴ மாமம்ருதோத்³ப⁴வம் |
ஐராவதம் க³ஜேந்த்³ராணாம் நராணாம் ச நராதி⁴பம் || 10- 27||


உச்சை:ஸ்²ரவஸம் = உச்சை சிரவம் 

அஸ்²வாநாம் = குதிரைகளில்

வித்தி = உணர் , அறிந்து கொள்

மாம் = நான்

அம்ருதோத்³ப⁴வம் = அமிர்தத்தில் தோன்றிய
|
ஐராவதம் = ஐராவதம்

க³ஜேந்த்³ராணாம் = யானைகளில்

நராணாம் = மனிதர்களில்

ச நராதி⁴பம் = நான் அரசன்

குதிரைகளில் நான் அமிர்தத்தில் இருந்து தோன்றிய உச்சை  சிரவம் என்ற குதிரை . யானைகளில் நான் ஐராவதம். மனிதர்களில் நான் அரசன்.

பாற்கடலை  கடைந்த போது பதிமூன்று பொருட்கள் வந்தன. அதில் உச்சை சிரவம் என்ற  பறக்கும் குதிரையும், ஐராவதம் என்ற வெள்ளை யானையும் உண்டு.  இந்த இரண்டையும் இந்திரனுக்கு தந்து விட்டார்கள்.

அது என்ன பாற்கடலை கடைவது ?

வாழ்க்கைதான் பாற்கடல்.  அமிர்தம் வேண்டி கடைகிறோம் . வேறு என்னனமோ  வருகிறது. வந்ததை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்து விடலாம். வந்தது எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் - பறக்கும் குதிரை, வெள்ளை யானை   என்று - குறிக்கோளை அடையும் வரை நிறுத்தக் கூடாது. நடுவில் கிடைத்ததை இந்திரனிடம் கொடுத்து விட்டு அமிர்தம் கடையத் தொடங்கினார்கள். 

நாம் அமிர்தம் வேண்டி கடைவோம், ஆனால் கிடைப்பதோ ஆலகால விஷம். எவ்வளவு  பெரிய  நன்மை வேண்டுகிறோமோ , அதன் பக்க விளைவுகளும் அதே அளவு இருக்கும்.

இன்பம் தேடித்தான் போகிறோம். துன்பம் எதிரில் வந்து நிற்கிறது.

பெரிய இன்பம் வேண்டினால், பெரிய துன்பமும் வரத்தான் செய்யும்.

வாழ்வின் குறிக்கோளை நோக்கிப் பயணப் பட வேண்டும். நடுவில் சில சில்லறை  விஷயங்கள் வரும் - நல்லதும் வரும், கெட்டதும் வரும். தயங்கி நின்று விடக் கூடாது.

ஒரு அரசன் எப்படி நாட்டை ஆள்வானோ, அது போல புலன்களை அடக்கி ஆள வேண்டும். ஆசை என்ற எதிரிகள் மனம் என்ற கோட்டைக்குள் நுழைந்து விடாமல்  காக்க வேண்டும்.

யானை, குதிரை, அரசன்  என்பதெல்லாம் ஒரு குறியீடுகள்.

அவை என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

சிந்திக்க சிந்திக்க பொருள் தருவது கீதை.


Tuesday, June 17, 2014

கீதை - 10.26 - மறு பதிப்பு

கீதை - 10.26 -  மறு பதிப்பு 


अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥१०- २६॥

அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³: |
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: || 10- 26||


அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் = மரங்களில் நான் அரச மரம்

தே³வர்ஷீணாம் ச நாரத³:  = தேவ ரிஷிகளில் நான் நாரதன்

க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: = கந்தவர்களில் நான் சித்ரதரன்

 ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: = சித்தர்களில் நான் கபில முனி


மரங்களில் நான் அரச மரம் ,  தேவ ரிஷிகளில் நான் நாரதன், கந்தவர்களில் நான் சித்ரதரன் , சித்தர்களில் நான் கபில முனி. 

ஒவ்வொன்றிலும் சிறந்தவற்றை கூறிக் கொண்டே வந்த கண்ணன், மரங்களிலும், ரிஷிகளிலும், கந்தர்வர்களிலும், சித்தர்களிலும் தான் யார் என்று கூறுகிறான்.

சித்தர்களில் நான் கபில முனி என்கிறான்.

இந்த கபில முனி யார் ? இவர் என்ன செய்தார் ?

கபில முனி சாம்க்ய, (அல்லது சாங்க்ய ) யோகம் என்ற ஒன்றை வகுத்துத் தந்தார்.

கீதை சாங்கிய யோகத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப் பட்டது.

கீதையில் பல இடங்களில் சாங்க்ய யோகத்தைப் பற்றிய குறிப்புகளை காணலாம்.

கீதையின் இரண்டாவது அத்யாயம் "சாங்க்ய யோகம் "  என்பதாகும்.

சரி, இந்த சாங்க்ய யோகம் என்றால் என்ன ?


 இந்து மதத்தின்  தத்துவங்களை இரண்டு கூறாகப் பிரிக்கலாம்

ஒன்று வேதாந்தம் இன்னொன்று சாங்கியம்.

வேதாந்தம் என்பது தத்துவம் சார்ந்தது.

சாங்கியம் என்பது உலகியலை அடிப்படையாகக் கொண்டது.

இனி, கீழே வருபவை சாங்கிய யோகத்தின் கூறுகள். ஒவ்வொரு முறையும், "சாங்கிய யோகத்தின் படி " என்று கூறாமல், மொத்தமாக முதலிலேயே சொல்லி விடுகிறேன்.


இந்த உலகம் இரண்டு விஷயங்களால் ஆனது

ஒன்று - உயிர் அற்றது (பொருள் அல்லது matter ). இது பிரக்ரிதி எனப்படும்.

இரண்டாவது - உயிர் அல்லது spirit என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது  புருஷம் அல்லது புருஷா என்று சொல்லப் படுகிறது.

பிரக்ரிதி தனித்து இயங்க முடியாது. பிரகிர்த்தி என்பது புருஷத்தால்  இயக்கப் இயக்கப் படுகிறது.

இந்த பிரக்ரிதிக்கு மூன்று குணங்கள் உண்டு - ராஜசம், தாமசம் மற்றும் சாத்வீகம் என்று.

இந்த சாங்க்ய யோகம் மேலும் மிக மிக ஆழமாகப் போகிறது. குணங்கள், அறிவு, தத்துவம், இவை எப்படி உருவாகின்றன என்று சொல்லுகிறது.

இதில் மிக மிக முக்கியமான ஒன்று எது என்றால்

சாங்க்ய யோகம் கடவுள் என்று ஒன்று இருப்பதை ஒத்துக் கொள்ளவில்லை.

அதற்கு சாங்க்ய யோகம் கூறும் காரணம் மிக மிக ஆச்சர்யமான ஒன்று.

கடவுள் எப்போதும் நிரந்தரமாக மாறாமல் இருப்பவர் என்றால், இந்த உலகில் நடக்கும்  காரியங்களுக்கு அவர் காரணமாக இருக்க முடியாது.

ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால் அதற்கான காரணம் மாறும் தன்மை உடையாதாக இருக்க வேண்டும்.

மாறாத ஒன்று மாறும் பலப் பல காரியங்களை உண்டாக்க முடியாது.

இந்த சாங்கிய தத்துவத்தை தொகுத்து அளித்தவர் கபில முனி.

முனிவர்களில் நான் சாங்க்ய முனியாக இருக்கிறேன் என்கிறான்  கண்ணன்.

 கடவுள் இல்லை என்ற தத்துவத்தை சொன்ன சாங்க்ய முனியாக நான் இருக்கிறேன் என்று கண்ணன் சொல்லுவதின் அர்த்தத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

நான் என் எண்ணங்களைச்  சொன்னால், வலிந்து பொருள் கூறுவதாக  ஆகும்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அப்படியே ஆகட்டும்.





Monday, June 16, 2014

கீதை - 10.26 - அரச மரம், நாரதன், சித்ரதரன், கபில முனி

கீதை - 10.26 - அரச மரம், நாரதன், சித்ரதரன், கபில முனி 


अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥१०- २६॥

அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³: |
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: || 10- 26||


அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் = மரங்களில் நான் அரச மரம் 

தே³வர்ஷீணாம் ச நாரத³:  = தேவ ரிஷிகளில் நான் நாரதன்

க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: = கந்தவர்களில் நான் சித்ரதரன்

 ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: = சித்தர்களில் நான் கபில முனி


மரங்களில் நான் அரச மரம் ,  தேவ ரிஷிகளில் நான் நாரதன், கந்தவர்களில் நான் சித்ரதரன் , சித்தர்களில் நான் கபில முனி. 

ஒவ்வொன்றிலும் சிறந்தவற்றை கூறிக் கொண்டே வந்த கண்ணன், மரங்களிலும், ரிஷிகளிலும், கந்தர்வர்களிலும், சித்தர்களிலும் தான் யார் என்று கூறுகிறான்.


Friday, June 13, 2014

கீதை - 10.25 - வாக்கியங்களில் ஓம்

கீதை - 10.25 - வாக்கியங்களில் ஓம் - பகுதி 1


महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम् ।
यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॥१०- २५॥

மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ரஹம் கி³ராமஸ்ம்யேகமக்ஷரம் |
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தா²வராணாம் ஹிமாலய: || 10- 25||

மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ அஹம் = மகரிஷிகளில் நான் பிருகுவாக இருக்கிறேன்
கி³ராம் ஏகம் அக்ஷரம் அஸ்மி = வாக்குகளில் நான் ஓரெழுத்தாக இருக்கிறேன்
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி = யக்ஞங்களில் நான் ஜபயக்ஞமாக இருக்கிறேன்
ஸ்தா²வராணாம் ஹிமாலய: = மலைகளில் நான் இமாலயமாக இருக்கிறேன்

மகரிஷிகளில் நான் பிருகுவாகவும் ; 
வாக்குகளில் நான் ‘ஓரெழுத்தாகவும்;
யக்ஞங்களில் நான் ஜபயக்ஞமாகவும் 
ஸ்தாவரங்களில் நான் இமாலயமாகவும் இருக்கிறேன் 

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் வைத்து இருக்கிறோம்.

ஒவ்வொரு செயலுக்கும், வினைக்கும், ஒரு பெயர் வைத்து இருக்கிறோம்.

ஒரு பொருளின் எடை, நிறம்,   அதன் செயல்பாடுகள் என்று எத்தனையோ இருக்கிறது. அத்தனையும் அந்த பொருளின் பெயரில் அடங்கி விடுகிறது.

உதாரணமாக டிவி என்று சொன்னால் அதன் வடிவம், அதன் பயன், அதன் எடை, விலை, யார் யாரெல்லாம் அதை உற்பத்தி செய்கிறார்கள், அது எப்படி வேலை  செய்கிறது என்று எல்லாம் நமக்கு விளங்கி விடுகிறது.

இறைவன், படைப்பு, காத்தல், பிறப்பு, வீடு பேறு என்று பலவற்றை உள்ளடக்கியது ஒரு சொல். அந்த ஒரு சொல் எது என்று இந்த சுலோகம் சொல்லவில்லை. அந்த ஒரு சொல் "ஓம்" என்று சொல்கிறார்கள், உரை எழுதுபவர்கள்.

எல்லா வாக்கியங்களிலும் மிகச் சிறப்பனாது "ஓம்" என்ற அந்த ஒற்றைச் சொல். அது அனைத்தையும் விளக்குகிறது.

எப்படி டிவி என்ற சொல் டிவி பற்றிய அனைத்தையும் விளக்குகிறதோ அது போல் ஓம் என்ற சொல் அனைத்தையும் விளக்கும்.

எத்தனையோ வழிகளில் அதை விளக்கினாலும், மிக சிறப்பான விளக்கம் ஓம் என்ற அந்த ஒற்றைச் சொல்.

ஓம் என்ற அந்த ஒற்றை சொல்லின் அர்த்தம் என்ன, அது எதைக் குறிக்கிறது, எதை விளக்குகிறது ?




Thursday, June 12, 2014

கீதை - 10.24 - பிரகஸ்பதி, கந்தன், கடல் - பகுதி 1

கீதை - 10.24 - பிரகஸ்பதி, கந்தன், கடல்  - பகுதி 1


पुरोधसां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिम् ।
सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः ॥१०- २४॥

புரோத⁴ஸாம் ச முக்²யம் மாம் வித்³தி⁴ பார்த² ப்³ருஹஸ்பதிம் |
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த³: ஸரஸாமஸ்மி ஸாக³ர: || 10- 24||


புரோதஸாம் ப்ருஹஸ்பதிம் = புரோகிதர்களில் முக்கியமானவன் அல்லது தலைவன் பிரகஸ்பதி

மாம் = நான்

வித்³தி⁴ = அறிந்து கொள்

பார்த² = பார்த்தா

ஸேநாநீநாம் = சேனைத் தலைவர்களில் 

அஹம் = நான்

ஸ்கந்த: = கந்தன்

ஸரஸாம் = நீர் நிலைகளில்

ஸாக³ர: = கடல்

அஸ்மி =  நானாக இருக்கிறேன்


ப்ரோகிதர்களில்  பிரகஸ்பதியாகவும், சேனைத் தலைவர்களில் கந்தனாகவும், நீர் நிலைகளில் கடலாகவும் இருக்கிறேன். 


கடல்.

அனைத்து நீரும் சேரும் இடம். ஒவ்வொரு நீர் ஒவ்வொரு மாதிரி இருந்தாலும், இறுதியில் கடலில் சேர்ந்த பின் ஒரே மாதிரி ஆகி விடுகிறது. அது பல  உயிர்கள் வெவ்வேறாக இருந்தாலும் , வெவ்வேறு வழியில் சென்றாலும்  இறுதியில் சேர்வது ஒன்றில் தான்.  சேர்ந்த பின் தன் குணம் மாறி ஒரே குணத்தை அடைகின்றன.

அது மட்டும் அல்ல.

அனைத்து நீர்நிலைகளும் கடலில் இருந்தே தோன்றுகின்றன. ஒரே இடத்தில் இருந்து தோன்றினாலும் அவை வேறு வேறாகத் தோன்றுகின்றன.

ஒன்றில் இருந்து தோன்றி , அதே ஒன்றில் எல்லாம் மீண்டும் ஒடுங்குகின்றன.

நீர் நிலைகளில் நான் கடல்.

குளம் சிறியது. ஏரி பெரியது. ஆறு நகர்வது...இப்படி ஆயிரம் வேறு பாடுகள் இருந்தாலும், அடிப்படையில் இவை எல்லாம் கடலின் வேறுபாடுகள் தான்.

குளத்தை  பார்க்கும் போது கடல் நினைவு வர  வேண்டும்.

எந்த உயிரைப் பார்த்தாலும் அதன் அடிப்படை நினைவு வர வேண்டும்.

அப்படி வரும் போது வேறு பாடுகள் மறையும். எல்லாம்  ஒன்று தான் என்ற எண்ணம்  மேலோங்கும்.

வேறு பாடுகள் மறையும் போது சிக்கல்கள் மறையும், போட்டி மறையும்,  அமைதி  மலரும்.

வியாசர் எத்தனையோ (75) உதாரணங்கள்  தருகிறார் இந்த அத்யாயத்தில்.

அதில் நான் இதாக இருக்கிறேன், இதில் நான் அதாக இருக்கிறேன் என்று கண்ணன் அடுக்கிக் கொண்டே போகிறான்.

சரி, இதில் என்ன இருக்கிறது என்று சலித்துக் கொள்வதை விட ...

ஒன்று நமக்கு உதவினால் கூடப் போதும்.

ஒன்றை நாம் முழுமையாக அறிந்து கொண்டால் கூடப் போதும்.



  

Saturday, June 7, 2014

கீதை - 10.23 - செல்வமும் அழிவும் நான்

கீதை - 10.23 - செல்வமும் அழிவும் நான்


रुद्राणां शंकरश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम् ।
वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम् ॥१०- २३॥

ருத்³ராணாம் ஸ²ங்கரஸ்²சாஸ்மி வித்தேஸோ² யக்ஷரக்ஷஸாம் |
வஸூநாம் பாவகஸ்²சாஸ்மி மேரு: ஸி²க²ரிணாமஹம் || 10- 23||


ருத்ராணாம் ஸங்கர = ருத்ரர்களில் சங்கரனாக 

சா அஸ்மி = நான் இருக்கிறேன்

வித்தேஸோ = குபேரனாக இருக்கிறேன்

யக்ஷரக்ஷஸாம்  = யக்ஷ இராட்சசர்களில்

வஸூநாம் = வசுக்களில்

பாவகஸ்²சாஸ்மி = நான் அக்கினியாக இருக்கிறேன்

 மேரு: ஸி²க²ரிணாமஹம்  = மலைகளில் நான் மேருவாக இருக்கிறேன்


ருத்திரர்களில் நான் சங்கரனாகவும்; அரக்கர்களில் நான் குபேரனாகவும், வசுக்களில் நான் அக்நியாகவும்,  மலைகளில் மேருவாகவும் இருக்கிறேன். 

சங்கரன் - அழிவின் கடவுள்.

இறப்பு, அழிவு என்றாலே ஏதோ துக்ககரமான ஒன்று  நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

அழியாமல் பிறக்காது. ஒவ்வொன்றுக்கும் ஒரு  கால நிர்ணயம இருக்கிறது. பிறப்பதும் இறப்பதும் இயற்கை.

ஆவதும் அழிவதும் இயற்கை.

இதில் துக்கப்பட என்ன இருக்கிறது ?

அது மட்டும் அல்ல...

இறப்பு, அழிவு என்பது உடலுக்கும், பொருளுக்கும் மட்டும் அல்ல...நாம் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு, நாம் அறிந்த பழைய கோட்பாடுகளுக்கு, நம்பிக்கைகளுக்கும் சேர்த்துதான்.

சில பேர் பிறந்தது முதல் கடைசி வரை சில விஷயங்களை நம்பிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக எத்தனை புதிய கருத்துகள், கோட்பாடுகள் வந்தாலும்  நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று பழமைகளிலேயே  தொங்கிக் கொண்டு இருப்பார்கள். புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள் மனதில் உதிக்க வேண்டும் என்றால் பழையனவற்றை விட்டு விடும்  தைரியம் வேண்டும். பழையனவற்றை காலி செய்தால்தான் புதியன நுழைய முடியும்


ருத்திரர்களில் நான் சங்கரன் !

பழையனவற்றை அழிப்பதில் நான் சங்கரனாக இருக்கிறேன்.

யக்ஷ ராட்சதர்களில் நான் குபேரன்.

குபேரன் செல்வத்தின்  அதிபதி. உலகில் உள்ள அனைத்து செல்வத்திற்கும் அதிபதியான  குபேரன் எப்படி இருக்க வேண்டும் ? மிக அழகாக, வசீகரமாக   இருக்க  வேண்டும் அல்லவா ? அது தான் இல்லை...மிக மிக அருவருக்கத் தக்க  விதத்தில் குள்ளமாய், கருப்பாய், குண்டாய் , கோரை பற்கள் நீண்டு இருக்கும்  ஒரு உருவத்தை தந்து இருக்கிறார்கள் நம் முன்னவர்கள். செல்வம் செல்வம்  என்று அலைபவன் குரூரமாக இருப்பான் என்று சொல்லாமல் சொன்னார்கள்.

உலகிலேயே மிக அழகானவன் யார் - மன்மதன். அன்பு நிறைந்த இடத்தில் அழகு  நிறைந்து இருக்கும்.

ஒரு பக்கம் அழிவு, ஒரு பக்கம் செல்வம். இரண்டிலும் உச்சபட்சம் நான் என்கிறான் கண்ணன்.



Wednesday, June 4, 2014

கீதை - 10.22 - உயிர்களில் உணர்வு நான்

கீதை - 10.22 - உயிர்களில் உணர்வு நான் 


वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः ।
इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना ॥१०- २२॥

வேதா³நாம் ஸாமவேதோ³ऽஸ்மி தே³வாநாமஸ்மி வாஸவ: |
இந்த்³ரியாணாம் மநஸ்²சாஸ்மி பூ⁴தாநாமஸ்மி சேதநா || 10- 22||

வேதா³நாம் ஸாமவேத³: அஸ்மி = வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன்
தே³வாநாம் வாஸவ: அஸ்மி = தேவர்களில் நான்  இந்திரனாக இருக்கிறேன்
இந்த்³ரியாணாம் மந அஸ்மி = புலன்களில் நான் மனமாக இருக்கிறேன்
ச பூ⁴தாநாம் சேதநா அஸ்மி = மேலும் அனைத்து உயிர்களிலும் நான்  உணர்வாக இருக்கிறேன்

வேதங்களில் நான் சாம  வேதமாகவும்,தேவர்களில் நான் இந்திரனாகவும், புலங்களில் மனமாகவும், உயிர்களில் உணர்வாகவும் நான் இருக்கிறேன். 

மெய், வாய், விழி, செவி, நாசி என்று ஐந்து புலன்கள் தான் நமக்குத் தெரியும். மனம் ஆறாவது புலன் என்பதை எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னவர்கள் அறிந்து இருக்கிறார்கள். மனதின் மூலமும் நான் உலகை அறிய முடியும். புலன்கள் மட்டும் அல்ல, மனமும் உலகை அறிய உதவும் ஒரு கருவி. இப்படி மொத்தம் ஆறு புலன்கள். இந்த ஆறு புலன்களில் நான் மனமாக இருக்கிறேன்  என்கிறான் கண்ணன்.

இந்த ஐந்து புலன்கள் கொண்டு வந்து தரும் உணர்வுகளை தொகுத்து நாம் இந்த உலகை  அறிந்து கொள்ள உதவுவது மனம் அல்லது அறிவு. அறிவு வேலை  செய்யவில்லை என்றால் புலன்கள் சரியாக இருந்து பயன் இல்லை.

புலன்களை கட்டுப் படுத்தி அவைகளை நல்ல வழியில் செலுத்துவது நம் மனம் அல்லது  அறிவு.

நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும் மனம் தான் கண்ணன். கண்ணன் என்பவன்  வெளியே இல்லை. உள்ளே தேடுங்கள்.

 அனைத்து உயிர்களிலும் நான் உணர்வாக இருக்கிறேன்.

அறிவும், உணர்வும் சேர்ந்த ஒன்று தான் நாம்.

அறிவு ஒரு கணிப்பொறியில் இருக்கலாம். அதற்கு உணர்வு கிடையாது.

விலங்குகளுக்கு உணர்வு உண்டு. அறிவு இல்லை.  ,எது சரி, எது தவறு என்று சிந்திக்கும்  அறிவு இல்லை.

அறிவும் , உணர்வும் சேரும் அந்த புள்ளிதான் நாம் - அது தான் இறை.

இவை இரண்டும் சரியாக சேராவிட்டால் மனிதன் தடுமாறிப் போகிறான்.

வெறும் உணர்ச்சி மட்டும் இருந்தால் அவன் ஒரு மிருகம்.

வெறும் அறிவு மட்டும் இருந்தால் அவன் ஒரு ஜடம்.

இரண்டும் ஒன்றாகக் கலக்க வேண்டும். ஒன்றை ஒன்று வழி நடத்த வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள் ....உங்களின் கலவை விகிதம் என்ன என்று


Tuesday, June 3, 2014

கீதை - 10.21 - நான் விஷ்ணு, சூரியன்,மரீசி, சந்திரன்

கீதை - 10.21 - நான் விஷ்ணு,  சூரியன்,மரீசி, சந்திரன் 


आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् ।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥१०- २१॥

ஆதி³த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸு²மாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸ²ஸீ² || 10- 21||

ஆதி³த்யாநாம் விஷ்ணு = ஆதித்யர்களில் நான் விஷ்ணுவாக இருக்கிறேன்

ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி: = ஒளிகளில் நான் கதிர் வீசும் சூரியனாக இருக்கிறேன்

மருதாம் மரீசி: = வாயுவில் நான் மரீசி

நக்ஷத்ராணாம் அஹம் ஸ²ஸீ² அஹம் அஸ்மி = நட்சத்திரங்களில் நான்  சந்திரனாக இருக்கிறேன்

ஆதித்யர்களில் விஷ்ணுவாகவும், ஒளிகளில் சூரியனாகவும் ; காற்றுகளில் மரீசியாகவும் ; நக்ஷத்திரங்களில் சந்திரனாகவும் இருக்கிறேன்.

ஒன்றை நாம் எப்படி அறிந்து கொள்கிறோம் ?

ஆறு பொறிகளால் அறிந்து கொள்கிறோம்.

 அது என்ன ஆறு ? ஐந்து தானே இருக்கிறது ?

ஐந்து புலன்கள். ஆறாவது  மனது.

புலன்களால் அறிய முடியாததை மனதால் சிந்தித்து  அறிகிறோம்.

எப்படி ?

குழந்தை புலியைப் பார்த்தது  இல்லை.புலி என்றால் என்ன ?  அது எப்படி     எப்படி  இருக்கும் என்று கேட்க்கிறது.

"புலி , பூனை மாதிரி இருக்கும். ஆனா கொஞ்சம் பெரிசா இருக்கும் " என்று  அறிந்ததில்  இருந்து அறியாததைப் புரிய  வைக்கிறோம்.

குழந்தை இன்னும் புலியை நேராக  பார்க்கவில்லை.ஆனாலும் புரிந்து கொள்கிறது.

இது புலன்கள் மூலம் இல்லை, அறிவின் மூலம் அறிந்து கொள்வது.

அது போல இறை என்பதை எப்படி அறிந்து கொள்வது ?

தெரிந்ததை வைத்து தெரியாத ஒன்றை சொல்லித் தருகிறார்  வியாசர்.

அடுத்து வரும் 22 சுலோகங்களில் 75 உதாரணங்கள் தருகிறார்.

ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பானது நான் என்கிறான்  கண்ணன்.

இறை நிலை என்பது எதிலும் ஒரு உயர்ந்த நிலை என்ற வகையில் அவற்றை எடுத்துக்  கொள்ளலாம்.

இறை என்பது எதிலும் உன்னதமான நிலை.

இறைவனை அடைவது என்றால் நீங்கள் எடுத்துக் கொண்ட செயலில் மிகச் சிறப்பான  நிலையை அடைவது. இதற்கு மேல் இல்லை என்ற நிலையை அடைவது.

அது படிப்பாக  இருக்கட்டும்,அலுவலக வேலையாக இருக்கட்டும், வீட்டு வேலையாக  இருக்கட்டும், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

தவம் செய்வது என்றால் ஏதோ காட்டுக்குள் போய் கரையான் புற்று மேலே வர  உண்ணாமல் உறங்காமல் மந்திரம் ஜெபிப்பது அல்ல.

எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக மிக சிறப்பாக செய்வது தவம்.

அப்படி (தவம்) செய்பவர்கள் இறை நிலையை  அடைவார்கள்.

Monday, June 2, 2014

கீதை - 10.20 - உயிர்களின் தொடக்கம், நடு மற்றும் இறுதி நானே

கீதை - 10.20 - உயிர்களின் தொடக்கம், நடு மற்றும் இறுதி நானே 


अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः ।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ॥१०- २०॥

அஹமாத்மா கு³டா³கேஸ² ஸர்வபூ⁴தாஸ²யஸ்தி²த: |
அஹமாதி³ஸ்²ச மத்⁴யம் ச பூ⁴தாநாமந்த ஏவ ச || 10- 20||

அஹமாத்மா = அஹம் + ஆத்மா = அனைத்தின் உள்ளும்

கு³டா³கேஸ = குடா கேசா (அர்ஜுனா)

ஸர்வ = அனைத்து

பூ⁴தாஸ²= பூதங்களின்

யஸ்தி²த: = அனைத்தின் உள்ளே

அஹமாதி = அஹம் + ஆதி = அவற்றின் தொடக்கம்

ஸ்ச மத்⁴யம் = அவற்றின் மத்தி (நடு )

ச = மேலும்

பூ⁴தாநாமந்த = பூதாநாம் + அந்தம் = அவற்றின் இறுதி

ஏவ ச = நானே

அர்ஜுனா, உயிர்களின் உள்ளே இருப்பவன்  நான்.அவற்றின் தொடக்கம், நடு மற்றும் இறுதியும்  நானே. 

மேலோட்டமாக பார்த்தால் கண்ணன் அனைத்து உயிர்களின் தொடக்கம், நடு மற்றும்  இறுதி என்று சொல்லிவிட்டு மேலே போய் விடலாம்.

ஆத்மா என்ற சொல்லுக்கு நம் எண்ணங்கள் என்று வைத்து பொருள் சொல்லிப்  பார்ப்போம்.

நம் எண்ணங்கள் நம்மில் எழுகின்றன, நம்மில் நிலைக்கின்றன, பின் சிறிது காலம்  சென்ற பின் மறைந்து வேறு ஒரு எண்ணம்  தோன்றுகிறது.

இந்த எண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன ?

நமக்குள்ளே இருந்து தோன்றுகிறது. அவற்றின் தொடக்கம், நடு மற்றும் இறுதி  நமக்குள்ளே  இருக்கிறது.நம்மில் இருந்து  தோன்றி,நம்மில்  நிலைத்து,பின் நமக்குள்  மறைந்து போகின்றன.

எண்ணங்கள் எப்படி எழுகின்றன, ஏன் எழுகின்றன ? பின் எப்படி வளர்கின்றன,  பின் எப்படி மறைகின்றன ?

மனிதன் எண்ணங்களால், உந்தப் பட்டு வாழ்கிறான்.

ஒரு சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல.

எண்ணங்கள் அவனை வழி நடத்துகின்றன.

வீடு வாங்கினால் நல்லா இருக்கும் என்ற எண்ணம் எழுந்தவுடன் அது பற்றிய  செயல்  பிறக்கிறது.

காதலிப்பது, திருமணம் செய்து  கொள்வது,வேலை, பிரயாணம், பொழுது போக்கு, நட்பு, பகை எல்லாம் எண்ணங்களில் இருந்து எழுவன.

எண்ணங்களை புரிந்து கொண்டால் வாழ்கையை புரிந்து கொள்ளலாம்.

எண்ணங்களை மாற்றினால் வாழ்கையை மாற்றலாம்.

 வெற்றியும்,தோல்வியும்,  இன்பமும்,துன்பமும் நம் மனதைப் பொறுத்த  விஷயங்கள்.

கண்ணன் எண்ணங்களின் அதிபதியாக இருக்கிறான்.

நாம் எண்ணங்களின் அடிமைகளாக இருக்கிறோம்.

நீங்களும் உங்கள் எண்ணங்களின் அதிபதியாக மாறுங்கள். எண்ணங்களை மாற்றுங்கள். வாழ்க்கை மாறும்.

நீங்கள் விரும்பும் வாழ்கை உங்கள் கையில்.


Sunday, June 1, 2014

கீதை - 10.19 - முடிவில்லாத பெருமை

கீதை - 10.19 - முடிவில்லாத பெருமை 


श्रीभगवानुवाच
हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः ।
प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥१०- १९॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
ஹந்த தே கத²யிஷ்யாமி தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
ப்ராதா⁴ந்யத: குருஸ்²ரேஷ்ட² நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே || 10- 19||


ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

ஹந்த = இப்போது

தே = உனக்கு

கத²யிஷ்யாமி = சொல்லுகிறேன்

தி³வ்யா = பூரணமான

ஹ்யாத்மவிபூ⁴தய: | = ஹத் + ஆத்ம + விபூதாய = என் பெருமைகளை

ப்ராதா⁴ந்யத: = பிரதானமானவைகளை

குருஸ்²ரேஷ்ட = குருகுலத்தில் சிறந்தவனே

நாஸ்த்யந்தோ = நாஸ்தி + அந்தோ = அந்தம் இல்லாத

விஸ்தரஸ்ய மே = மிக விரிவான

குருகுலத்தில் சிறந்தவனே, என் அளவற்ற பெருமைகளில் பிரதானமானவற்றை  உனக்குச் சொல்லுகிறேன். 

அளவற்ற ஒன்றை அளவான ஒன்றால் எப்படி அளப்பது ? இயற்கை, இறைவன், அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். மனிதனின் அறிவுக்குள் அடங்காதது அது.

அறிவுக்கு, மனித ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. வரம்பற்ற ஒன்றை எப்படி மனித மனம்  அறிய முடியும் ?

கண்ணன் ஆரம்பிக்கும் போதே அதை சொல்லி வைக்கிறான்.

கண்ணன் என்ன சொல்கிறான் என்று மேலும் பார்ப்போம்.