Thursday, June 12, 2014

கீதை - 10.24 - பிரகஸ்பதி, கந்தன், கடல் - பகுதி 1

கீதை - 10.24 - பிரகஸ்பதி, கந்தன், கடல்  - பகுதி 1


पुरोधसां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिम् ।
सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः ॥१०- २४॥

புரோத⁴ஸாம் ச முக்²யம் மாம் வித்³தி⁴ பார்த² ப்³ருஹஸ்பதிம் |
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த³: ஸரஸாமஸ்மி ஸாக³ர: || 10- 24||


புரோதஸாம் ப்ருஹஸ்பதிம் = புரோகிதர்களில் முக்கியமானவன் அல்லது தலைவன் பிரகஸ்பதி

மாம் = நான்

வித்³தி⁴ = அறிந்து கொள்

பார்த² = பார்த்தா

ஸேநாநீநாம் = சேனைத் தலைவர்களில் 

அஹம் = நான்

ஸ்கந்த: = கந்தன்

ஸரஸாம் = நீர் நிலைகளில்

ஸாக³ர: = கடல்

அஸ்மி =  நானாக இருக்கிறேன்


ப்ரோகிதர்களில்  பிரகஸ்பதியாகவும், சேனைத் தலைவர்களில் கந்தனாகவும், நீர் நிலைகளில் கடலாகவும் இருக்கிறேன். 


கடல்.

அனைத்து நீரும் சேரும் இடம். ஒவ்வொரு நீர் ஒவ்வொரு மாதிரி இருந்தாலும், இறுதியில் கடலில் சேர்ந்த பின் ஒரே மாதிரி ஆகி விடுகிறது. அது பல  உயிர்கள் வெவ்வேறாக இருந்தாலும் , வெவ்வேறு வழியில் சென்றாலும்  இறுதியில் சேர்வது ஒன்றில் தான்.  சேர்ந்த பின் தன் குணம் மாறி ஒரே குணத்தை அடைகின்றன.

அது மட்டும் அல்ல.

அனைத்து நீர்நிலைகளும் கடலில் இருந்தே தோன்றுகின்றன. ஒரே இடத்தில் இருந்து தோன்றினாலும் அவை வேறு வேறாகத் தோன்றுகின்றன.

ஒன்றில் இருந்து தோன்றி , அதே ஒன்றில் எல்லாம் மீண்டும் ஒடுங்குகின்றன.

நீர் நிலைகளில் நான் கடல்.

குளம் சிறியது. ஏரி பெரியது. ஆறு நகர்வது...இப்படி ஆயிரம் வேறு பாடுகள் இருந்தாலும், அடிப்படையில் இவை எல்லாம் கடலின் வேறுபாடுகள் தான்.

குளத்தை  பார்க்கும் போது கடல் நினைவு வர  வேண்டும்.

எந்த உயிரைப் பார்த்தாலும் அதன் அடிப்படை நினைவு வர வேண்டும்.

அப்படி வரும் போது வேறு பாடுகள் மறையும். எல்லாம்  ஒன்று தான் என்ற எண்ணம்  மேலோங்கும்.

வேறு பாடுகள் மறையும் போது சிக்கல்கள் மறையும், போட்டி மறையும்,  அமைதி  மலரும்.

வியாசர் எத்தனையோ (75) உதாரணங்கள்  தருகிறார் இந்த அத்யாயத்தில்.

அதில் நான் இதாக இருக்கிறேன், இதில் நான் அதாக இருக்கிறேன் என்று கண்ணன் அடுக்கிக் கொண்டே போகிறான்.

சரி, இதில் என்ன இருக்கிறது என்று சலித்துக் கொள்வதை விட ...

ஒன்று நமக்கு உதவினால் கூடப் போதும்.

ஒன்றை நாம் முழுமையாக அறிந்து கொண்டால் கூடப் போதும்.



  

No comments:

Post a Comment