Monday, June 30, 2014

கீதை - 10.32 - முதலும், நடுவும்,முடிவும் நானே

கீதை - 10.32 -  முதலும், நடுவும்,முடிவும் நானே 


सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम् ॥१०- ३२॥

ஸர்கா³ணாமாதி³ரந்தஸ்²ச மத்⁴யம் சைவாஹமர்ஜுந |
அத்⁴யாத்மவித்³யா வித்³யாநாம் வாத³: ப்ரவத³தாமஹம் || 10- 32||

ஸர்கா³ணாம் = படைப்புகளில்

ஆதி ³ரந்தஸ்ச மத்யம் = ஆதி, அந்தம், மத்யம் 

சை வா அஹம் = நான் இருக்கிறேன்

அ ர்ஜுந  = அர்ஜுனா

அத்யாத்ம வித்யா வித்யாநாம் = வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தையாய் இருக்கிறேன்

 வாத: ப்ரவத³தாமஹம் = பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன்

படைப்பில் நான் ஆதி, அந்தம் நடுவாக இருக்கிறேன். 
வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தையாக இருக்கிறேன்.
பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன்.

காலம் என்பது அறிந்து கொள்ள முடியாததாகவே இருக்கிறது. என்று தொடங்கியது, எப்படி இயங்குகிறது, என்று  முடியும் என்று அறிய முடியாமல் இருக்கிறது. 

படைப்பு என்று தனியாக ஒன்று  இல்லை. படைக்கப்பட்ட கணம் முதல் படைக்கப்பட்டவை இறக்கத்  தொடங்குகின்றன.ஒன்று அழிந்து இன்னொன்று தொடங்குகிறது. படைப்பு முதலிலும் இருந்தது, நடுவிலும் இருக்கிறது, இறுதியிலும் இருக்கும். இறந்தது பிறக்கத்தான் வேண்டும். இல்லை என்றால் உலகம் முடிந்து  போய் விடாதா ? படைப்பின் அனைத்து கட்டங்களிலும் நான் இருக்கிறேன் என்கிறான் கண்ணன். 

வாழ்வில் ஏதேதோ படிக்கிறோம். எதை எதையோ அறிந்து கொள்ள  முயல்கிறோம். அறிய அறிய அறியாமை தான் வளர்கிரது. 

 பொருள்களும்,அதன் வடிவங்களும், தன்மைகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றம் அனைத்தையும் நம்மால் படித்து அறிந்து கொள்ள முடியுமா ? ஒரு ஆயுள் போதுமா அதற்கு ? எதை அறிந்து கொண்டால் பின்  வேறு எதையும் அறிந்து கொள்ள வேண்டாமோ அந்த வித்தை அத்யாத்ம வித்தை. எல்லா அறிவுக்கும் அடிப்படை அறிவு ஆத்ம அறிவு. அந்த அறிவாக நான் இருக்கிறேன் என்கிறான் கண்ணன்.

பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன். 


ப்ரவத³தா என்ற சொல்லுக்கு பேசுவோர் என்று துல்லியமாக சொல்ல முடியாது. வாதம் புரிபவர்களில், ,ஆராய்பவர்கள், என்று  கொள்ளலாம்.

வாக்கு வாதம் பல தளங்களில் நடக்கும்.

சண்டை போடுவது, எதிராளியை மடக்குவது, தவறான உதாரணங்களை காட்டுவது, பலத்தை உபயோகப் படுத்துவது என்று பல தளங்களில் இயங்குகிறது. இதில் முக்கியமான ஒன்று வாதம்  புரிவது. வாதம் என்பது நூல்களை  கற்றுத் தேர்ந்து, அதில் சொல்லப் பட்ட உண்மைகளை பேச்சின் மூலம் நிலை  நிறுத்துவது. இது உண்மையை கண்டறியப் பயன்படுவது. அந்த வாதமாக  இருக்கிறேன் என்கிறான் கண்ணன்.

வாதம் உண்மையை அறியும் கருவி.


2 comments:

  1. I like this

    வாதம் உண்மையை அறியும் கருவி.

    ReplyDelete
  2. In sloga 10.20 Krishna says I'm in the starting , in the middle and in the end meaning he is all pervading . why there is repetition ......GOK ......Nr

    ReplyDelete