Tuesday, June 24, 2014

கீதை - 10.30 - இயக்குபவர்களில் நான் காலம்

கீதை - 10.30 - இயக்குபவர்களில் நான் காலம் 


प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥१०- ३०॥

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் = அசுரர்களில் நான் பிரகலாதனாக இருக்கிறேன் 

கால: கலயதாமஹம் | = இயங்குபவற்றில் நான் காலமாக இருக்கிறேன்

ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர = மிருகங்களில் நான் சிங்கமாக இருக்கிறேன்

அஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் = பறவைகளில் நான்  கருடனாக இருக்கிறேன்

அசுரர்களில் பிரகலாதனாகவும் , இயங்குபவற்றில் காலமாகவும், மிருகங்களில் சிங்கமாகவும், பறவைகளில் கருடனாகவும் இருக்கிறேன்.

கண்ணன் தொடர்கிறான்.

அசுரர்களில் நான் பிரகலாதன். பிறப்பால் பிரகலாதன் ஒரு அசுரன். ஆனால் அவனை வைணவ உலகம் பிரகலாத ஆழ்வார் என்றே கொண்டாடுகிறது. பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாகவோ  தாழ்ந்தவனாகவோ ஆவதில்லை. அவன் செயலே  அவனை தீர்மானிக்கிறது. அசுர குலத்தில் பிறந்தாலும் நல்ல ஒழுக்கத்தால் உயர்ந்த அவனை தனக்கு இணையாக கூறுகிறான் கண்ணன்.

இயக்குபவர்களில் நான்  காலம்.

காலம் எப்படி நம்மை இயக்குகிறது ?

காலம் பல தளங்களில் இயங்குகிறது.

ஒன்று நம் கடிகாரம் காட்டும் காலம் - காலையில் எழ வேண்டும்,வேலைக்குப் போக வேண்டும், மதியம் உணவு, இரவு உறக்கம் என்று கடிகாரம் நம்மை செலுத்துகிறது.

இன்னொன்று, நாட்காட்டி சொல்லும் நேற்று , இன்று நாளை என்ற காலக் கணக்கு. எதிர் காலம் பற்றிய நம் கனவுகள், பயங்கள் , மற்றும் அவற்றால் நாம் செய்யும் செயல்கள். வரும் காலத்திற்கு என்று நாம் சேர்த்து  வைப்பது போன்றவை.

 கடிகாரத்தையும், நாள் காட்டியும் தவிர்த்து நம் மன அளவில் செயல் படும் காலம்.  நாம் ஏதோ ஒருவராக  இருக்கிறோம். நாம் யாரோ ஒருவராக ஆக விரும்புகிறோம். இதற்கு இடையில் உள்ள கால இடைவெளி. பணக்காரனாக, அறிவாளியாக என்று ஏதேதோ ஆக விரும்புகிறோம். நமக்கும் நம் இலட்சியத்திற்கும் இடையில் இருப்பது காலம். நம்மை நம் இலட்சியங்களை நோக்கி செலுத்துவது காலம். ஆசைகள் இல்லை என்றால் காலம் நின்று போகும்.

எதிர் காலம் பற்றிய கனவில் பயத்தில் நாம் நிகழ் காலத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்.

காலம் நம்மை செலுத்துகிறது.

செலுத்து பவர்களில் நான் காலமாக இருக்கிறேன்.

நாளை என்று ஒன்று இல்லை என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் "இன்று" எப்படி மாறுகிறது என்று  தெரியும்.

சொல்லப் போனால் நாளை என்று ஒன்று கிடையவே கிடையாது. நாளை என்பது  ஒரு கற்பனை.

காலத்தைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையைப் புரிந்து  கொள்ளலாம்.






No comments:

Post a Comment