Sunday, September 25, 2016

கீதை - 16.6 - இரண்டு வகையான மனிதர்கள்

கீதை - 16.6 - இரண்டு வகையான மனிதர்கள் 



द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।
दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु ॥१६- ६॥

த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச | 
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ரு ணு || 16- 6||

த்வௌ = இரண்டு 

பூத ஸர்கௌ = உயிர் கூட்டங்களில்  

லோகே =இந்த உலகில் 

அஸ்மிந் = இந்த 

தைவ = தெய்வீக 

ஆஸுர = அசுர 

ஏவ = நிச்சயமாக 

ச = மேலும் 

தைவோ = தெய்வீக 

விஸ்தரஸ: = விரிவாக 

ப்ரோக்த = சொன்னேன் 

ஆஸுரம் = அசுரர்களை 

பார்த = பார்த்தனே 

மே = என்னிடம் இருந்து 

ஸ்ருணு = கேட்பாயாக 

ஆஸுரம் மே ஸ்²ருணு = அசுர இயல் பற்றி என்னிடம் கேள்


இந்த உலகத்தில் உயிரினங்கள் இரண்டு வகைப்படும். அவை, தேவ மற்றும் அசுர குணங்களை கொண்டவை. இதுவரை தேவ குணங்களை பற்றி கூறினேன். இனி , அசுர குணங்களை பற்றி கூறுகிறேன், கேட்பாயாக பார்த்தா. 


நல்லதை மட்டும் சொல்லிக் கொடுத்தால், தீமை வரும் போது அது தீமை என்று தெரியாமல் நாம் அதில் மாட்டிக் கொள்ள நேரும்.

அதில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அது என்ன என்று நமக்குத் தெரிய வேண்டும்.

அது மட்டும் அல்ல, நமது குணங்களே சில சமயம் தடுமாறலாம். மாறும்  குணங்கள் நல்லதா கெட்டதா என்று அறிந்து கொள்ள நாம்  தீய  குணங்களையும் அறிந்திருக்க வேண்டும்.  தீய குணங்கள் என்றால்  அசுரர் குணங்கள்.

அசுர குணங்கள் எவை, அவை எப்படி இருக்கும் என்று நீண்ட பட்டியலைத் தருகிறது கீதை.

நம்மிடம் உள்ள சில குணங்கள் தேவ குணங்களா அல்லது அசுர குணங்களா என்று கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.

மேலும், நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த குணங்கள் இருக்கலாம். அவற்றை கண்டு, அவர்களுக்கு எடுத்துச் சொல்லி  அவர்களை நல்ல வழியில் செலுத்த முயலலாம் அல்லது முடிந்த வரை அவர்களை விட்டு விலகி இருக்கலாம்.


எனவே, அவை என்ன என்று கீதை எடுத்துச் சொல்கிறது.

அறிந்து கொள்வோமா ?

http://bhagavatgita.blogspot.in/2016/09/166.html

Thursday, September 15, 2016

கீதை - 16.5 - தெய்வ சம்பந்தம்

கீதை - 16.5 - தெய்வ சம்பந்தம் 


दैवी संपद्विमोक्षाय निबन्धायासुरी मता ।
मा शुचः संपदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥१६- ५॥

தை³வீ ஸம்பத்³விமோக்ஷாய நிப³ந்தா⁴யாஸுரீ மதா |
மா ஸு²ச: ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதோऽஸி பாண்ட³வ || 16- 5||

தை³வீ = தெய்வீக

ஸம்பத் = சம்பந்தத்தால்

விமோக்ஷாய = விடுதலை கிட்டும்

நிபந்தாயாய  = கட்டுண்டு

அஸுரீ  = அசுர சம்பந்தத்தால்

மதா  = ஏற்றுக் கொள்ளப் பட்டது

மா = இல்லை

ஸு²ச: = துக்கம்

ஸம்பத³ம் = சம்பந்தம்

தை³வீ = தெய்வீக

அபிஜாத் = பிறந்ததால்

அஸி = நீ

பாண்டவ = பாண்டவனே

தெய்வீக சம்பந்தத்தால் விடுதலை கிட்டும்.

அசுர சம்பத்தால் பந்தம் ஏற்படும்

துயரப்தே படாதே பாண்டவனே, நீ இறை அம்சத்துடன் பிறந்திருக்கிறாய்.


மனிதன் இயற்கையில் நல்லவனா ? கெட்டவனா ?

இந்த கேள்விக்கு இது வரை விடை இல்லை. மனிதன் அடிப்படையில் கெட்டவன்.  சமுதாய கோட்பாடுகளும், சட்ட  திட்டங்களும்  இருப்பதால்தான் அவன் ஒழுங்காக இருக்கிறான் என்று  சொல்பவர்களும் உண்டு.

இல்லை, மனிதன் இயற்கையில் நல்லவன் தான். கெட்டவைகளை அவன்  இந்த சமுதாயத்திடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறான் என்று  சொல்பவர்களும் உண்டு.


சில மதங்கள் கூட, மனிதனை பாவிகளே என்று தான் அழைக்கின்றன.

எது சரி ?


கீதை சொல்லகிறது.  

மனிதன் இயற்கையில் இறை சம்பந்தம் உள்ளவன் , நல்லவன் என்று. 

இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவன் படைப்பு என்றால் மனிதனும்  இறைவனின் படைப்புதான். அவன் மட்டும் எப்படி கெட்டவனாக இருக்க முடியும். 

எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று சொன்னால், மனிதன் எப்படி  கெட்டவனாக இருக்க முடியும் ?

அவனுடைய ஒரு சில செய்கைகள் நமக்கோ, இந்த சமூகத்துக்கோ பிடிக்காமல்  இருக்கலாம். அதனால், அவன் கெட்டவன் இல்லை. 

எல்லா மனிதர்களும் நல்லவர்களே என்று ஆரம்பிக்கிறது கீதை. 

நாம் தவறு செய்தவர்கள், செய்பவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை  வேண்டாம்.   பாவ மன்னிப்பும், புனித நீர்களில் நீராடுவதும் வேண்டாம். 


தைரியமாக இருங்கள். 

நீங்கள் இறை சம்பந்தம் கொண்டவர்கள்.  உலக பந்தங்களில் இருந்து  உங்களுக்கு விடுதலை கிட்டும், துயரப்  படாதீர்கள்  என்று அடித்துச் சொல்கிறது  கீதை. 

தெய்வ சம்பந்தத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள். 

பெரியார்களோடு சேர்ந்து இருங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.  அவர்கள் எழுதியதைப் படியுங்கள். 

அந்த சம்பந்தம், உங்களை இந்த துன்பங்களில் இருந்து விடுதலை அடையச் செய்யும். 

எதைப் படிக்க வேண்டும், யாரோடு பழக வேண்டும், யார் சொல்வதைக்  கேட்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா ?