Tuesday, August 26, 2014

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப


अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥११- १६॥

அநேகபா³ஹூத³ரவக்த்ரநேத்ரம் பஸ்²யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் |
நாந்தம் ந மத்⁴யம் ந புநஸ்தவாதி³ம் பஸ்²யாமி விஸ்²வேஸ்²வர விஸ்²வரூப || 11- 16||

அநேக பாஹூ உதரா வக்த்ர நேத்ரம் = அனேக தோள்களும், வயிறும், வாய்களும் , கண்களும்.

பஸ்²யாமி = காண்கிறேன்

த்வாம் = உன்

ஸர்வதோ அநந்த ரூபம் = அனைத்து திசைகளிலும், பல முகங்களிலும் கொண்ட பல்வேறு உருவங்களை

நா = இல்லை

அந்தம் = முடிவு

 ந = இல்லை

மத்யம் = நடு

ந = இல்லை

புந ஸ்த ஆதி³ம் = ஆதியையும்

பஸ்யாமி = காணுதல்

விஸ்வேஸ்வர = விஸ்வ + ஈஸ்வரன் = அனைத்தையும், அனைத்திற்கும் ஈஸ்வரனே, தலைவனே  

விஸ்வரூப = விஸ்வ + ரூபம் =  அனைத்தையும் கொண்ட வடிவமாணவனே

பல தோள்களும், பல வாய்களும் , பல வயிறுகளும், பல விழிகளையும் கொண்ட உன் தோற்றத்திற்கு தொடக்கத்தையும், நடுவையும், முடிவையும் நான் காண்கிலேன். 


தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை, நடுவும் இல்லை. எங்கும் நிறைந்து இருக்கிறது.

நாம் முன்பே சிந்தித்தது போல அனைத்து உலகும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு உருவை, வடிவை கற்பனை செய்து பார்த்தால் அது தான் விஸ்வ ரூபம்.

என்ன அர்த்தம்.

எல்லா உலகும் என்று  சொல்லும் போது சில விஷயங்கள் நமக்கு புரிபடுகிறது.

முதலாவது, அனைத்தும்  ஒன்றுதான்.ஏற்றத் தாழ்வு இல்லை. அனைத்தும் இறை  வடிவம் தான்.

இரண்டாவது, ஒன்று மற்றொன்றாய் மாறும். ஆனால், இங்கே புதிதாக ஒன்று வருவது இல்லை, இருப்பது இல்லாமல் போவதும் இல்லை.

மூன்றாவது, அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது. எதுவும் தனித்து இல்லை. என்னது, உன்னது என்று பிரித்துப் பார்ப்பது அர்த்தம் அற்ற செயல்.

 நான்காவது,உலகம் அனைத்தும் இறை வடிவம் என்ற எண்ணம் வரும் போது எப்படி  தவறு செய்ய மனம் வரும் ? யாரையும் திட்டுவதோ, கோவித்து பேசுவதோ, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதோ, உயிர்களை வதைப்பதோ, கொலை, கொள்ளை , கற்பழிப்பு போன்ற செயல்கள் செய்வதோ முடியாத ஒன்று. இந்த எண்ணம் வரும்போது சர்வம் ஈஸ்வர மயம் என்று தோன்றும்.

விச்வேஸ்வரா - விஸ்வ ரூப ...

சிந்திப்போம்.




Monday, August 25, 2014

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில் காண்கிறேன்

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில்  காண்கிறேன் 


अर्जुन उवाच
पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसंघान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थ मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥११- १५॥

அர்ஜுந உவாச
பஸ்²யாமி தே³வாம்ஸ்தவ தே³வ தே³ஹே ஸர்வாம்ஸ்ததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் |
ப்³ரஹ்மாணமீஸ²ம் கமலாஸநஸ்த² ம்ருஷீம்ஸ்²ச ஸர்வாநுரகா³ம்ஸ்²ச தி³வ்யாந் || 11- 15||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

பஸ்²யாமி = நான் காண்கிறேன்

தேவாம்ஸ் = தேவர்களை 

தவ = உன்னுடைய

தேவ = தேவா !

தேஹே = தேகத்தில்

ஸர்வாம்ஸ் = அனைத்தும்

ததா = அந்த வகையில்

பூதவிஸே = அனைத்து உயிர்களின் 

ஷஸங்கா⁴ந் = கூட்டத்தை

ப்ரஹ்மா = பிரம்மா

ஈசம் = ஈசன்

கமலாஸநஸ்தம் = தாமரை மலரில் அமர்ந்து இருப்பவன்

ரிஷி = ரிஷிகள்

ச = மேலும்

ஸர்வ = அனைத்து

உரகன்  = பாம்புகள்

ச = மேலும்

தி³வ்யாந் = தெய்வீகமான


அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே ! உன் உடலில் அனைத்து தேவர்களையும், ,தாமரை மலாரில் இருக்கும் ஈசனான பிரமனையும், எல்லா ரிஷிகளையும், அனைத்து பூதங்களின் தொகுதிகளையும், தேவ சர்பங்களையும்  இங்கு காண்கிறேன் 

அது என்ன பிரம்மா, பூதங்களின் தொகுதி  சொல்லி விட்டு உடனே தேவ சர்ப்பங்கள் என்று  சொல்கிறார்.அதில் என்ன அர்த்தம் இருக்கும் ?

விசரூபம் என்பது அனைத்தையும் தன்னுள் அடக்கியது என்று பார்த்தோம்.

ஒரு கோடியில் பிரம்மா. இன்னொரு கோடியில் கீழான பாம்பு.

யானை முதல் எறும்பு ஈறாக என்று சொல்வது போல.

வானும் நிலமும் சாட்சியாக என்று சொல்வது போல.

இரண்டு எதிர் எதிர் துருவங்களை சொல்லிவிட்டால் இடையில் உள்ளதை அனைத்தும்  சொன்ன  மாதிரி.

உரகன் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு - மார்பில் நகர்வது என்று  பொருள்.உர்ஸ் என்றால்  மார்பு என்று பொருள். மார்பில் நகர்வது பாம்பு.

பிரமா முதல் பாம்பு வரை அனைத்து பூதங்களின் தொகுதிகளையும் நான் காண்கிறேன்  என்றான் அர்ஜுனன்.

பிரமாவும் , பாம்பும் ஏதோ ஒரு மாபெரும் சக்தியின் இரண்டு துருவங்கள். இடைப்பட்ட  அனைத்தும் அதில் அடக்கம்.

இதில் தாத்தா, மாமா, குரு , பங்காளிப் பிள்ளைகள் , அண்ணன் , தம்பி என்பதெல்லாம்  புறத்  தோற்றங்கள்.

பாசத்தைக் காட்டி, கடமையில் இருந்து விலகப் பார்த்தான் அர்ஜுனன்.

பாசம் என்பது பிரித்துப் பார்பதால்  வருகிறது.

பகையும் அப்படியே.

என் பிள்ளை, என்  மனைவி,என் நாடு, என்று பிரிக்கும் போது பாசமும் வருகிறது, பகையும் வருகிறது.

இதைப் போக்க கண்ணன் விஸ்வரூபத்தை  காட்டினான் அல்லது உணர்த்தினான்.

வெவ்வேறு நாடு, வெவ்வேறு சமயம், வெவ்வேறு உறவுகள் என்று பிரித்துப் பார்க்காமல்  அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் சக்தியை தந்தான் அர்ஜுனனுக்கு கண்ணன்.



Sunday, August 17, 2014

கீதை - 11.14 - மயிர் கூச்செறியும் காட்சி

கீதை - 11.14 - மயிர் கூச்செறியும் காட்சி 


ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनंजयः ।
प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत ॥११- १४॥

தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா த⁴நஞ்ஜய: |
ப்ரணம்ய ஸி²ரஸா தே³வம் க்ருதாஞ்ஜலிரபா⁴ஷத || 11- 14||


தத: = அப்புறம். அதன் பின்

ஸ = அவன்

விஸ்மயாவிஷ்டோ = ஆச்சரியப்பட்டு

ஹ்ருஷ்ட ரோமா = மயிர் கூச்செரிந்து 

த⁴நஞ்ஜய: | = தனஞ்சயன்

ப்ரணம்ய = வணங்கி

ஸி²ரஸா = தலையால்

தே³வம் = தேவனை

க்ருதாஞ்ஜலி = கைகளால் கும்பிட்டு

அ பா⁴ஷத = சொல்லத் தொடங்கினான்

அப்போது தனஞ்ஜயன் ஆச்சரியம் அடைந்து , மயிர் கூசெறிந்து , அந்த தேவனை தலையால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு, சொல்லத் தொடங்குகிறான்

நேரில் பார்த்தது அர்ஜுனன்.

எங்கோ அமர்ந்து இருக்கும் தனஞ்சயன், அந்தக் காட்சியை கண்டு மெய் சிலிர்க்கிறான்.

அவன் ரோமம் எல்லாம் குத்திட்டு நிற்கிறது.

கை கூப்பி, தலையால் வணங்குகிறான்.

வணங்கி மேலும் சொல்கிறான்...



Wednesday, August 13, 2014

கீதை - 11.13 - பல கூறுகளை கொண்ட உலகை கண்டான்

கீதை - 11.13 - பல கூறுகளை கொண்ட உலகை கண்டான் 


तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा ।
अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ॥११- १३॥

தத்ரைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் ப்ரவிப⁴க்தமநேகதா⁴ |
அபஸ்²யத்³தே³வதே³வஸ்ய ஸ²ரீரே பாண்ட³வஸ்ததா³ || 11- 13||

தத்ர = அங்கு

ஏக ஸ்தம் = ஒரே இடத்தில்

ஜகத் = உலகம்

க்ருத்ஸ்நம் = முழுவதும்

ப்ர வி பக்த = பல கூறுகளாய்

அ நேக தா = பல வடிவங்களில்

அபஸ்²யத் = அவன் கண்டான்

தேவ தேவஸ்ய = கடவுள்களின் கடவுள்

 ஸரீரே = உடலில்

பாண்டவ ஸ்ததா = பாண்டவன் கண்டான்



அங்கே, பல கூறுகளைக் கொண்ட, உலகம் முழுவதும், அந்த தேவ தேவனுடைய சரீரத்தில் ஒன்றாக இருப்பதை பாண்டவன் கண்டான்

இறைவன் இந்த உலகைப் படைத்தான், இறைவனால் எல்லாம் கூடும் என்றால் உலகில் ஏன் இவ்வளவு துன்பங்கள், வலிகள் , துரோகங்கள், நோய்கள், வறுமை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள்....

கடவுளால் இவற்றை போக்க முடியாதா ? பசியால் உயிர்கள் வருந்துகின்றன, போரில் மடிகின்றன...இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் கடவுள்  எப்படி கருணை உள்ளம் கொண்டவராக இருக்க முடியும் ?

இந்த கேள்வி காலம் காலமாக கேட்கப் பட்டு வருகிறது.

சரியான விடை வியாசர் தருகிறார்.

இறைவன் என்பவன் அல்லது என்பது ஒரு தனி மனிதன் என்று நாம் நினைப்பதால் வரும் குழப்பம் இது. தனி மனிதனுக்கு பொறுப்புகள் இருக்க  வேண்டும்.இறைவனை தனி மனிதனாக நினைத்து நாம் அவன் இப்படி பொறுப்பு இல்லாமல்  இருக்கிறானே என்று வருந்துகிறோம்.

இறைவன் என்பவன் தனி மனிதன் அல்ல. அனைத்தின் தொகுதிதான் இறை என்பது.

நல்லதும், கெட்டதும் , உயர்ந்ததும், தாழ்ந்ததும் அனைத்தும் சேர்ந்த கலவைதான் இறைவன்.

உலகின் அத்தனை கூறுகளையும் தன்னில் கொண்டதுதான இறைவன் என்ற தத்துவம்.

இதை விட தெளிவாக கூற முடியாது.

அதை பாண்டவன் கண்டான்.

பாண்டவன் அப்படி பார்த்ததை சஞ்சயன் கண்டான்.

உங்களுக்கும் அந்த காட்சி கிடைக்கட்டும்.


Tuesday, August 12, 2014

கீதை - 11.12 - ஆயிரம் சூரிய பிரகாசம்

கீதை - 11.12 - ஆயிரம் சூரிய பிரகாசம் 



दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः ॥११- १२॥

தி³வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப⁴வேத்³யுக³பது³த்தி²தா |
யதி³ பா⁴: ஸத்³ருஸீ² ஸா ஸ்யாத்³பா⁴ஸஸ்தஸ்ய மஹாத்மந: || 11- 12||

திவி = ஒளி பொருந்திய

ஸூர்ய ஸஹஸ்ர ஸ்ய = ஆயிரம் சூரியன்கள் சேர்ந்தாற்போல

பவேத் = அதுவானது

யுகபத் = ஒன்றாக, ஒரே சமயத்தில் 

உதுத்திதா = உதித்தால்

யதி = எப்படி இருக்குமோ

பா = அவ்வளவு பிரகாசத்துடன்

ஸத்ருஸீ =  அதைப் போல

ஸா = அது

ஸ்யாத்  = இருந்தது

பா⁴ஸஸ்தஸ்ய = அதன் ஒளியும்

மஹாத்மந: = மகா ஆத்மா

ஒரே சமயத்தில் ஆயிரம் சூரியன்கள் தோன்றினால் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ, அப்படி இருந்தது அந்த மகாத்மாவின் வடிவம் .

உலகில் ஒளியும் இருக்கிறது. இருளும் இருக்கிறது.

இரண்டும் தனித்தனியே இருக்க முடியுமா ?

ஒளி இல்லாதது இருளா ? அல்லது

இருள் இல்லாதது ஒளியா ?

ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும்.

Is the absence of light is darkness or absence of darkness is light ?

This is the core of Existentialism. Which one exists ? Darkness or Light ?

வாழ்வில் இன்பமும் துன்பமும் இருக்கிறது ?

இன்பம் இல்லாதது துன்பமா ?

துன்பம் இல்லாதது இன்பமா ?

ஒரு துன்பமும் இல்லை என்றால் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லுவீர்களா ?

ஒரு இன்பமும் இல்லை இன்றால் துன்பப் படுகிறேன் என்று சொல்லுவீர்களா ?

Is the absence of happiness is sadness or absence of sadness is happiness ? Which exists ? Happiness or Sadness ?

விஸ்வரூபம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது என்றால் இருளும் இருந்திருக்க  வேண்டும்.

ஏன் ஆயிரம் சூர்ய பிரகாசம் என்று சொல்ல வேண்டும் ? ஆயிரம் அம்மாவாசை  இருள் என்று ஏன் சொல்ல வில்லை. ?

ஏன் என்றால் இருள் என்று ஒன்று கிடையாது. ஒளி  மட்டும்தான்   உண்டு. ஒளி இல்லாததை  நாம் இருள் என்கிறோம். என்று தனியாக ஒன்று கிடையாது.

இருக்கும் அனைத்தின் தொகுதி என்றதால், இருப்பது ஒளி மட்டும்தான்.  அத்தனை  ஒளியையும் சேர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த  உருவம்.

உலகில் ஒளி மட்டும்தான் உண்டு. இருள் கிடையாது. ஒரு விளக்கைக் கொண்டு வந்து  இருளைத் தேடித் பாருங்கள். கிடைக்கவே கிடைக்காது.

அது போல

வாழ்வில் இன்பம் மட்டும்தான் உண்டு.  துன்பம் என்பது கற்பனை. இல்லாத ஒன்று. இருப்பதாய் நாம் நினைத்துக் கொண்டு வருந்துகிறோம்.

இன்பத்தை விட்டு நாம் விலகினால் துன்பத்தில் இருப்பது போல  தெரியும். விலகியது  நம் குற்றம்.

உருகி, பெருகி, புவனம் அனைத்தும் நிறைத்து தத்தி கரை புரளும் பரமானந்த சாகரத்தே என்பார் அருணகிரிநாதர்


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


களி நின்ற வெள்ளம் கரை கண்டது இல்லை என்பார் அபிராமி பட்டர்

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

நினைக்கும் போதெல்லாம், காணும்போது எல்லாம், பேசும்போது எல்லாம் எப்போதும் ஆனந்தத் தேன் சொரியும் என்பார் மணிவாசகர்

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

உலகில் இன்பம், ஆனந்தம் கொட்டிக் கிடக்கிறது. அள்ள அள்ள குறையாத ஆனந்தம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை என்பார் நாவுக்கரசர்

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே


விஸ்வரூப தரிசனம் காட்டுவது எல்லாம் வாழ்வில் நல்லவையே நிறைந்து கிடக்கிறது  என்ற உண்மையத்தான்.

- சிறந்த நறுமணம்,
- ஆயிரம் சூரிய ஒளி

என்று இப்படி பட்டியல் போகிறது. எல்லாமே உயர்ந்தவை, சிறந்தவை இவற்றின்  தொகுதிதான் இந்த உலகம். அதுதான் இறைவன்.

இந்த விஸ்வரூப் தரிசனம் உங்களுக்கும் கிடைக்கட்டும்


Monday, August 11, 2014

கீதை - 11.11 - அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு

கீதை - 11.11 - அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு 


दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥११- ११॥

தி³வ்யமால்யாம்ப³ரத⁴ரம் தி³வ்யக³ந்தா⁴நுலேபநம் |
ஸர்வாஸ்²சர்யமயம் தே³வமநந்தம் விஸ்²வதோமுக²ம் || 11- 11||

திவ்யமால்யாம்பரதரம் = திவ்ய + மாலா + அம்பற + தர = திவ்யமான மாலைகளை மற்றும் உடைகளை

திவ்யகந்தாநுலேபநம் = திவ்ய + கந்த + அனுலுபேன = திவ்யமான மணம் வீசும் பொருள்களை பூசிக் கொண்டு
 
ஸர்வாஸ்சர்யமயம் = சர்வ + ஆச்சர்ய +   மயம் =  அனைத்து   ஆச்சரியங்களையும் கொண்ட

தேவமநந்தம் = தேவம் + அநந்தம் = முடிவில்லா தேவ வடிவம் 

விஸ்²வதோமுக²ம் = அனைத்து திக்குகளிலும் பார்க்கும் முகங்கள்

திவ்ய மாலையும், ஆடையும் அணிந்து கொண்டு, வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு, மிக மிக ஆர்ச்சரியப்  படத்  வகையில் அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு இருந்தது அந்த வடிவம். 

அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவை எப்படி வர்ணிப்பது. நம்மால் நினைத்து பார்க்க முடியும்.  அதை எழுத்தில் வடிப்பது என்றால் எவ்வளவு சிக்கல்.

உலகனைத்தையும் ஒன்றடக்கிய உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த உருவம் , வியாசர் காட்டும் விஸ்வ ரூபத்தோடு மிகச் சரியாக  பொருந்தும்.

அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு. உலகில்  உள்ள அனைத்து ஜீவராசிகளும்  சேர்ந்த ஒரு உருவம் என்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு  பக்கம் பார்த்துக் கொண்டு  இருக்கும் தானே ? அதனால், "அனைத்து  திசைகளிலும் பார்த்துக் கொண்டு"  என்றார்.

இப்படி ஒரு வடிவை இது வரை நாம் கற்பனை செய்து கூட பார்த்து இருக்க மாட்டோம்.

அப்படி  நினைத்துப் பார்க்கும் போது "அட, ஆமா, சரியாத்தான் இருக்கு " என்ற ஆச்சரியம்   மேலிடும்.அதைத்தான் சொல்கிறார் "மிகவும் ஆச்சரியப் படத் தக்க வகையில் " என்று.

 இறைவன் என்பது ஒரு தனி மனிதன் அல்ல.

எல்லாம் சேர்ந்த ஒன்றைத்தான்  இறைவன் என்று நாம் சொல்கிறோம்.

அதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. உயர்வும் உண்டு, தாழ்வும் உண்டு.

அப்படிப் பட்ட விஸ்வரூபத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்.


Saturday, August 9, 2014

கீதை - 11.10 - விஸ்வரூப வடிவம்

கீதை - 11.10 - விஸ்வரூப வடிவம் 


अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥११- १०॥

அநேகவக்த்ரநயநமநேகாத்³பு⁴தத³ர்ஸ²நம் |
அநேகதி³வ்யாப⁴ரணம் தி³வ்யாநேகோத்³யதாயுத⁴ம் || 11- 10||

அநேக வக்த்ர நயநம் = பல வாய்களையும் பல விழிகளையும் கொண்டது. ஏகம் என்றால் ஒன்று. அந் - ஏகம் என்றால் ஒன்று அல்ல. அப்படி என்றால் பல. வக் என்றால் பேசுவது. வக்த்ர என்றால் பேசும் புலன், அதாவது வாய்  

அநேக அத்புத தர்ஸநம் = பல வித அற்புதமான தரிசனம்

அநேக திவ்யாபரணம் = பல வித திவ்ய ஆபரணங்கள்

 திவ்ய அநேக உத்யாத ஆயுதம் = பல வித உயர்ந்த ஆயுதங்கள்

அந்த வடிவம் பல வாய்களையும், விழிகளையும், திவ்ய படைகளையும் கொண்டது. பல அற்புத வடிவங்களை கொண்டது.

விவரூபத்தை விளக்க வேண்டும். இது வரை யாரும் கண்டிராத ஒன்று. காணாத ஒன்றை எப்படி விளக்குவது ?

தெரிந்த ஒன்றில் இருந்துதான் தெரியாத ஒன்றை விளக்க முடியும்.

புலி எப்படி இருக்கும் என்று தெரியாது.

அது பூனை போல இருக்கும், கொஞ்சம் பெரிதாக இருக்கும் என்று சொன்னால் புரியும்.

அது போல, வியாசர் ஆரம்பிக்கிறார். 

அந்த உருவத்திற்கு பல வாய்கள் இருக்கின்றன, பல விழிகள் இருக்கின்றன , பலவிதமான ஆபரணங்களை அணிந்து இருக்கிறது என்று.

என்ன அர்த்தம்.

அது ஒரு தொகுதி. பல உயிர்களின் தொகுதி...எனவே அதற்கு பல வாய்கள், பல விழிகள். 

இறை என்பது அனைத்தின் தொகுதி. இந்த உலகம் அனைத்தையும் சேர்த்து ஒன்றாகப் பாருங்கள்...ஒன்றான அந்த உருவத்திற்கு எத்தனை வாய்கள் இருக்கும் , எத்தனை விழிகள் இருக்கும் ?

அதைத்தான் சொல்கிறார். 

பிரித்தது போதும். சேர்த்துப் பாருங்கள். 

காக்கை குருவி எங்கள் ஜாதி, காடு மலை எங்கள் கூட்டம் என்று பாரதி கூறியது போல...எல்லாம் ஒன்று சேர்ந்த தொகுதி தான் இறைவன். 

மணிகளின் நடுவே ஊடாடும் நூல் போல, அனைத்து உயிர்களையும் ஒன்று சேர்த்து வைத்து இருப்பது இந்த இறை சக்தி.

நீங்களும், நானும், அவரும், இவரும் , அதுவும் , இதுவும் எல்லாம் ஏதோ ஒன்றின் கூறுகள் என்று பறை சாற்றுவதுதான் இறை சக்தி. 

இதை விளக்குவத்தான் விஸ்வரூபம். 


Thursday, August 7, 2014

கீதை - 11.9 - விஸ்வரூபம்

கீதை - 11.9 - விஸ்வரூபம் 


संजय उवाच
एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरिः ।
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् ॥११- ९॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகே³ஸ்²வரோ ஹரி: |
த³ர்ஸ²யாமாஸ பார்தா²ய பரமம் ரூபமைஸ்²வரம் || 11- 9||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
ஏவ = அப்படி
உக்த்வா = அப்படி சொல்லிய பின் (உனக்கு ஞானக் கண்களைத் தருகிறேன் என்று சொல்லிய பின் )

ததோ = அதன் பின்
ராஜ = இராஜனே

மஹாயோகே³ஸ்²வரோ = மகா யோகேஸ்வரனான

ஹரி: = ஹரி

த³ர்ஸ²யாமாஸ = காண்பதற்கு அருளினான், காட்டினான் 

பார்தாய = பார்த்தனுக்கு 

பரமம் ரூபமைஸ்²வரம் = தன்னுடைய பரம ஐஸ்வர்ய வடிவை

சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, அவ்வாறு சொன்ன பின் , பெரிய யோகத் தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உன்னதமான தன் கடவுள் வடிவைக் காட்டினான்.


போர்க்களத்தில் நடப்பதை கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் சொல்லி வந்தான்.

இப்போது, கீதை போர்களத்தை விட்டு, அஸ்தினாபுரம் அரண்மனைக்கு போகிறது.

சஞ்சயன் சொல்கிறான் , "அவ்வாறு சொன்னபின் கண்ணன் தன் தெய்வீக வடிவை  அர்ஜுனனுக்கு காட்டினான் " என்று.

அர்ஜுனனுக்குத் தெரிந்தது. சஞ்சயனுக்கு தெரிந்தது. வேறு யாருக்கும் தெரியவில்லை.

அறிவுள்ளவர்களுக்கு உண்மை புலப்படும்.

திருதராஷ்ரனிடம் தான் கண்ட விஸ்வரூபத்தை சஞ்சயன் சொல்கிறான்.

 அவனுக்கு புரியவில்லை.

பக்குவப்  படவில்லை.அவன் அறிவுக்கு அது எட்டவில்லை.

புரிந்திருந்தால், ஒரு வேலை மாபாரதப் போர் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

சஞ்சயன் என்ன கண்டான் ?


Wednesday, August 6, 2014

கீதை - 11.8 - உனக்கு ஞானக் கண்களைத் தருகிறேன்

கீதை - 11.8 - உனக்கு ஞானக் கண்களைத்  தருகிறேன் 


न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा ।
दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम् ॥११- ८॥

ந து மாம் ஸ²க்யஸே த்³ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா |
தி³வ்யம் த³தா³மி தே சக்ஷு: பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் || 11- 8||


ந = இல்லை

து = அதனால்

மாம் = நான்

ஸக்யஸே = உன்னால் முடியும்

த்ரஷ்டும் = பார்க்க

அநேந = இதனால்

எவ = நிச்சயமாக

ஸ்வசக்ஷுஷா = இயற்கையான  கண்களால் (ஸ்வ = இயற்கையான)

திவ்யம் = தெய்வீக

ததாமி = தருகிறேன்

தே = உனக்கு

சக்ஷு:= காண்பதற்கு

பஸ்²ய =  நீ பார்க்க வேண்டும்

மே = என்

யோகம்  = யோகம் 

ஐஸ்வரம் = ஐஸ்வர்யம், மகிமை , பெருமை

உன்னுடைய இந்த இயற்கையான கண்களால் என்னை காண முடியாது.  உனக்கு நான் ஞானக் கண்களை  கொடுக்கிறேன். என்னுடைய மகிமையைப்  பார்.


நம்பிக்கையும், ஞானமும்.

ஆத்மா அழிவற்றது, அது நீரால் நனையாது, நெருப்பால் வேகாது என்றெல்லாம் சொன்னால்  அதை ஏற்றுக் கொள்ள நம்பிக்கை வேண்டும். கண்ணால் காண  முடியாத ஒன்றை ஏற்றுக் கொள்ள நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கை என்பது எல்லோராலும் முடியாது.

அதுவம் அறிவியல் வளர்ந்து வரும் இந்த நேரத்தில், இளைய தலைமுறை எல்லாவற்றையும்  கேள்வி கேட்க்கும். எனக்கு காட்டு, நான் பார்க்க வேண்டும். காண முடியாத ஒன்றை நம்ப முடியாது என்று சொல்லும்.

எல்லாவற்றிற்குள்ளும் ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள நம்பிக்கை வேண்டும்.

எல்லாம் ஒன்றினில் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள அறிவு போதும். கண்ணால் காண  முடியும். ஒன்றினுக்குள் ஒன்று இருப்பதை அறிவால் அறிந்து கொள்ள முடியும்.

அனைத்திலும் ஆத்மா இருக்கிறது என்பது நம்பிக்கை.

அனைத்தும் என்னில் இருக்கிறது என்பது அறிவு.

நீங்கள் நம்பிக்கையை கொண்டு சென்றாலும் சரி, அறிவை கைபிடித்து சென்றாலும்  சரி நீங்கள் அடையும் இடம் ஒன்றுதான்.

அர்ஜுனன் ஆத்மாவை நம்பிய மாதிரி தெரியவில்லை.

நீ சொன்னது எல்லாம் சரி, இருந்தாலும் எனக்கு அதை காட்டு என்று அறிவின் பால் செல்கிறான்.

சரி, உனக்கும் புரிய வைக்க வேண்டும் என்று கண்ணன் தன் விஸ்வரூபத்தை அவனுக்கு காட்டினான்.

உனக்கு ஞான கண்களை தருகிறேன் என்று சொன்னான். உடனே ஏதோ இன்னொரு  கண்ணை தந்தான் என்று அர்த்தம் இல்லை.

நாம் இந்த உலகை புலன்கள் மூலம்  அறிகிறோம். கண்டு,  கேட்டு,தொட்டு, சுவைத்து  அறிகிறோம்.

இந்த புலன்களை பொறிகள் என்று  சொல்லுவார்கள்.

ஐந்து புலன்களும் ஐந்து ஞானேந்திரியங்கள்.

ஐந்து புலன்கள் மூலம் மட்டும் அறிவு பெறுவது என்பது ஐந்து அறிவு உள்ள உயிர்களின் இயல்பு.

மனிதன் மட்டும் ஆறறிவு உள்ளவன் என்கிறோம். ஏன் ?

எது ஆறாவது அறிவு ?

மனம், ஞானம், சிந்திக்கும் திறன் - அது ஆறாவது அறிவு.  அது ஆறாவது ஞானேந்திரியம்.  அதன் மூலம் அறிவது ஞானக் கண் கொண்டு  காண்பது.

நாம் ஒரு   விஷயத்தைப் பற்றி சிந்திக்கும் போது அதை நம் மனக் கண்ணில் காண்கிறோம்.  அதுதான் ஞானக் கண்.

அந்த கண்ணின் மூலம் இதை காண முடியும் என்கிறான் கண்ணன்.

இந்த உலகம் அனைத்தும் ஒரு தொகுதி என்று அறிய ஞானம் வேண்டும்.

அந்த ஞானத்தை, அறிவை அர்ஜுனனுக்கு கண்ணன் கொடுத்தான்.

சரி, அர்ஜுனனுக்கு கண்ணன் கொடுத்தான். அர்ஜுனன் அதனால் பலன் அடைந்தான். அதனால் நமக்கு என்ன ?

நமக்கு என்ன என்று மேலும் பார்ப்போம்.


Tuesday, August 5, 2014

கீதை - 11.7 - எதை பார்க்க வேண்டும் என்றாலும் இங்கே பார்

கீதை - 11.7 - எதை பார்க்க வேண்டும் என்றாலும் இங்கே பார் 



इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम् ।
मम देहे गुडाकेश यच्चान्यद् द्रष्टुमिच्छसि ॥११- ७॥

இஹைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் பஸ்²யாத்³ய ஸசராசரம் |
மம தே³ஹே கு³டா³கேஸ² யச்சாந்யத்³ த்³ரஷ்டுமிச்ச²ஸி || 11- 7||

இஹை = இங்கே

எகஸ்தம் = ஓரிடத்தில் (ஏக = ஒன்று; ஸ்த = ஸ்தானம், இடம் )

ஜக³த் = உலகம்

க்ருத்ஸ்நம் = முழுவதும்

பஸ்யா = நீ பார்

த்ய = இன்றே, இப்போதே

ஸசராசரம்  = ச + சர + அசர = அனைத்து அசையும் மற்றும் அசையாதனவற்றின்
 
மம = என்

தேஹே = உடலில்

குடாகேஸ = கேசம் என்றால் முடி. குடா கேச என்றால் அடர்ந்த முடி உள்ளவன். அர்ஜுனன் 

யச் = அது , எதுவோ

ச = மேலும்

அந்யத் = மற்றவை

த்ரஷ்டு = நீ பார்

இச்சஸி = நீ விரும்பியபடி


அனைத்து உலகங்களும் ஒன்றாக என் உடலில் இருப்பதைப் பார். அது மட்டும் அல்ல, நீ வேறு எதையெல்லாம் காண விரும்புகிறாயோ, அவை அனைத்தையும் நீ காணலாம்.

மிக மிக  முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே வியாசர் சொல்கிறார்.

இறைவன் என்பது என்ன ?

இறைவன் என்பது அனைத்தின் தொகுதி.

இறைவன் என்பது ஒரு தனி மனிதன் அல்ல. இந்த பிரபஞ்சம் அனைத்தின் மொத்த  தொகுதிதான் இறை என்பது.

The Existence is Godliness.

மனித மனம் எதையும் பிரித்துப் பார்த்துதான் புரிந்து கொள்ள  முயல்கிறது.

சேர்த்துப் பார்க்க பழகவில்லை.

பூவில் அழகு எங்கே இருக்கிறது  என்று ஒவ்வொரு இதழாகப் பிய்த்து பார்த்தால்  அழகு எங்கும் இருக்காது. அழகு என்பது அனைத்தும் சேர்ந்த ஒன்றில் இருக்கிறது.

ஒரு தனி மனிதன்  இருக்கிறான். அது ஒன்றும் அவ்வளவு சுவாரசியமான ஒன்று அல்ல.

அவன் திருமணம் செய்து  கொள்கிறான். ஒரு பெண் அவன் வாழ்வில் வருகிறாள். வாழ்வில் சுவை கூடுகிறது.

பின் குழந்தைகள்  வருகின்றன. வாழ்வு மேலும் அர்த்தப் படுகிறது.

பின் குழந்தைகள் திருமணம் செய்து கொள்கின்றன. மருமகனோ, மருமகளோ வருகிறார்கள். குடும்பம்  பெரிதாகிறது. மேலும் அர்த்தப் படுகிறது.

குடும்பங்கள் சேர்ந்து  சமுதாயம் உண்டாகிறது. சமுதாயங்கள் சேர்ந்து ஊர் உண்டாகிறது. ஊர் கூடி நாடு உண்டாகிறது. நாடுகள் கூடி உலகம் உண்டாகிறது. இப்படி பெரிதாக பெரிதாக அர்த்தம் விரிந்து கொண்டே போகிறது.

எல்லாவற்றின் மிகப் பெரிய தொகுதிதான் இறைவன்.

அவ்வளவு பெரிய ஒன்றை நம்மால் எளிதாக அறிந்து கொள்ள முடியாது.

எனவே, சின்ன ஒன்றில் இருந்து ஆரம்பித்து பெரிதான ஒன்றுக்கு போகிறோம்.

பிள்ளையார் சதுர்த்தியின் போது களிமண் பிள்ளையாரை  வணங்குகிறோம்.பின் அதை கொண்டு   போய் கடலில் போட்டு விடுகிறோம் . ஏன் கடலில் போட வேண்டும் ? அது கடவுளை அவமரியாதை செய்வது போல் இல்லையா ?

இல்லை.

அதன் தத்துவம் என்ன என்றால், ஒரு களிமண் உருவத்தில் அடைபட்டு இருந்த  இறை தன்மை இப்போது பிரமாண்டமான கடலில் கலந்து விட்டது.

கடலைப் பார்க்கும் போது அந்த களிமண் பிள்ளையார் மனதில் வருவார்.

நாளடைவில் அந்த பிள்ளையார் சிலை மறந்து போகும் கடல் மட்டும் நிற்கும்.

அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒன்றை காண்பதுதான் விஸ்வரூபம்.

கண்ணனின் அந்த உருவத்தில் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் அர்ஜுனன் தனக்கு  வேண்டியதை மட்டும் தேடுகிறான். எனவே கண்ணன் சொல்கிறான் "நீ எதை  காண விரும்புகிறாயோ அதைக் காணலாம் " என்கிறான்.

இறைவன் என்பவன் அனைத்தின் தொகுதி. ஆனால், நாம் அதை பிரித்து நமக்கு  வேண்டியதை மட்டும் பார்க்கிறோம். அது தான் உண்மை, இறைவன் என்று   சாதிக்கிறோம்.மற்றதும் இருக்கிறது.  எங்கே பார்க்கிறோம்.

நான் கண்டது மட்டும் தான் உண்மை என்று அடம் பிடிக்கிறோம்....குருடர்கள் கண்ட  யானை போல.

உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள்.  உங்கள் கலர் கண்ணாடிகளை தூக்கி எறியுங்கள்.

ஒன்றுபட்ட உலகம் தெரியும். 

மதங்களை கடந்து,  ஜாதிகளை கடந்து, நாடு, இனம் , மொழி வேறுபாடுகளை கடந்து  ஒன்றுபட்ட காட்சி தெரியும்.

அதுவே விஸ்வரூபம்.


Monday, August 4, 2014

கீதை - 11.6 - விஸ்வரூப தரிசனம்

கீதை - 11.6 - விஸ்வரூப தரிசனம் 


पश्यादित्यान्वसून्रुद्रानश्विनौ मरुतस्तथा ।
बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत ॥११- ६॥

பஸ்²யாதி³த்யாந்வஸூந்ருத்³ராநஸ்²விநௌ மருதஸ்ததா² |
ப³ஹூந்யத்³ருஷ்டபூர்வாணி பஸ்²யாஸ்²சர்யாணி பா⁴ரத || 11- 6||

பஸ்²ய = நீ பார்

ஆதித்யாந் = ஆதித்யர்களை

வஸூந் = வசுக்களை

ருத்³ராந = ருதிரர்களை

அஸ்²விநௌ = அஸ்வினி குமாரர்களை

மருதஸ் = காற்றின் கடவுளை 

ததா = அப்படி அப்படியே

ப³ஹூந்ய = பல்வேறுவிதமான

த்ருஷ்ட = பார்

பூர்வாணி = பழமையான

அஸ்²யாஸ்²சர்யாணி = ஆச்சரியப் படும்படி

பா⁴ரத  = பாரதனே

விஸ்வரூபம் என்றால் என்ன ?

பார்த்தா, என்னில் ஆதித்யர்களைப் பார், வசுக்களைப் பார், அஸ்வினி குமார்களைப் பார், காற்றின் கடவுளைப் பார். அனைத்தையும் என்னில் நன்றாகப் பார். 


எப்படி எல்லாம் ஒரு உருவத்தில் வந்து நிற்க முடியும் ? இது இயற்கைக்கு விரோதமாக இருக்கிறதே ? ஏதோ மாயாஜாலக் கதை போல இருக்கிறதே. அறிவுக்கு ஒத்து வரதா  விஷயம் போல இருக்கிறதே என்று நமக்குத் தோன்றும்.

வேற்றுமையில் ஒற்றுமை.

இதுதான் விஸ்வரூபம்.

அனைத்திற்கும் அடிப்படை ஒன்றுதான் என்று சொல்ல வரும் தத்துவம் தான் விஸ்வரூபம்.

விஸ்வரூபம் என்றால்  மிகப் பெரிய உருவம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

விஸ்வ என்றால் உலகளாவிய என்று அர்த்தம்.

உலகம் ஒன்றுபட்டது என்பதை கீதை இரண்டு விதங்களில் சொல்கிறது.

அனைத்துக்குள்ளும் இருப்பது ஒன்றுதான். அது தான் ஆத்மா (Self ) என்று ஒரு விதத்தில் சொல்கிறது.

இன்னொரு பக்கம் எல்லாம் ஒன்றினுள் அடங்கி இருக்கிறது என்று  சொல்லுவது.

அனைத்தும் அடங்கிய ஒன்றுதான் விஸ்வரூபம்.

அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்பார் மணிவாசகர்

அனைத்துக்குள்ளும் இருப்பது, அனைத்தையும் தன்னுள் வைத்து இருப்பது.

இது வரை சொன்னது ஆத்ம தத்துவம்.

சிலருக்கு ஆத்மா என்றால் என்ன, அது எப்படி இருக்கும், அதுக்கு எடை உண்டா, நிறம் உண்டா என்று கேள்வி கேட்பார்கள்.

காணும் அனைத்தும் ஏதோ ஒன்றின் கூறு, அல்லது பகுதி என்றால் எளிதாக சிந்திக்க முடியும்.

பூ என்பது கிளையின் கூறு.

கிளை என்பது மரத்தின் கூறு.

மரம் என்பது தோட்டத்தின் ஒரு பகுதி.

தோட்டம் என்பது ஊரின் ஒரு பகுதி.

ஊர் என்பது  நாட்டின்,நாடு என்பது இந்த  உலகின், உலகம் என்பது இந்த பரந்த பால் வெளியில் ஒரு பகுதி என்று நம்மால்  அறிய,உணர முடிகிறது.

பூ என்பது பால் வெளியின் ஒரு பகுதி என்று சட்டென்று நினைக்க முடியாது. ஆனால் சிந்திக்க சிந்திக்க அது புலப்படும்.

அதைத்தான் இந்த விஸ்வரூபம் காட்டுகிறது.

இந்த உலகில் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒன்றாக இருக்கிறது.

நாம் தான் அதை பிரித்துப்  போடுகிறோம் - நாடு என்றும், மொழி என்றும், மதம் என்றும், ஆண் பெண் என்றும், பல விதங்களில் பிரித்து பிரித்து பின்னால் அந்த பிரிவினையால் துன்பப்படுகிறோம்.

சேர்த்துப் பாருங்கள் - குழப்பம் விலகும்.

இதுதான் விஸ்வரூபம். இதைப் புரிந்து கொண்டால் பின்னால் வரும் ஸ்லோகங்கள் எளிதாக இருக்கும்.

இல்லை என்றால் என்னடா இது கண்ணன், என்னில் அதைப் பார், இதைப் பார் என்று பெரிய பட்டியலே போடுகிறான். சரி அது எல்லாம் கண்ணனில் இருந்து விட்டு போகட்டும். அதனால் எனக்கு என்ன என்ற கேள்வி நிற்கும்.

உங்களுக்கு என்று இருப்பது - ஒன்றாகக் காணும் காட்சி.

இந்த உலகில் உள்ள அனைத்தும் ஏதோ ஒன்றின் கூறு என்று  அறியுங்கள்.

என் இடது கண்ணும் வலது கண்ணும் என் உடலின் கூறுகள். இதில் எது உயர்ந்தது ? எது தாழ்ந்தது ?

வேற்றுமை மறையும் போது சமநிலை  பிறக்கும்.

சம நிலை பிறக்கும் போது சாந்தி பிறக்கும். மனதில் அமைதி  நிலவும்.

இதுதான் விஸ்வரூப தரிசனம்.


Sunday, August 3, 2014

கீதை - 11.5 - என்னைப் பார்

கீதை - 11.5 - என்னைப் பார் 


श्रीभगवानुवाच
पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः ।
नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥११- ५॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பஸ்²ய மே பார்த² ரூபாணி ஸ²தஸோ²ऽத² ஸஹஸ்ரஸ²: |
நாநாவிதா⁴நி தி³வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச || 11- 5||


ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்

பஸ்²ய மே = நீ பார்

பார்த = பார்த்தா

ரூபாணி = ரூபங்களை

ஸ²தஸோ = நூற்றுக்கணக்கான

அத = மேலும் , நிச்சயமாக

ஸஹஸ்ரஸ = ஆயிரக்கணக்கான
|
நாநாவிதாநி = பல்வேறு விதமான

திவ்யாநி = திவ்யமான

நாநாவர்ணாக்ருதி = பலவிதமான வர்ணங்களிலும், வடிவங்களிலும்

ச  = மேலும்


ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் , பார்த்தா என்னைப் பார்...நூற்றுக்  கணக்கில்,ஆயிரக் கணக்கில் பலவித வடிவங்களிலும், நிறங்களிலும், உள்ள என் தெய்வீக வடிவைப் பார் 

உவாச = வாச என்றால் வாசித்தல், சொல்லுதல். உ-வாச அவன் சொன்னான். கண்ணன் சொன்னான். பகவான் சொன்னான்.

பச்ய = நீ கட்டாயம் அல்லது உறுதியாகப் பார். உண்மை கண்ணுக்கு முன் கிடந்தாலும் நாம்  .பார்ப்பது இல்லை. ஆப்பிள் எல்லோர் தலையிலும் தான் விழுந்தது. நியூட்டன் மட்டும் அதை சரியாகப்  பார்த்தார். அவர்க்கு புவி ஈர்ப்பு உண்மை புலப் பட்டது. நாம் பார்ப்பது இல்லை. கண் ஒரு  பக்கம்,மனம் ஒரு பக்கம்...

முதலில் நூற்றுக்கணக்கான உருவங்களைப் பார்  என்றான்.

பின் ஆயிரக்கணக்கான உருவங்களைப் பார் என்றான். பார்க்க பார்க்க விரிந்து கொண்டே போகும்.

நுண்ணோக்கி (microscope ) முன்னால் ஒரு சொட்டு இரத்தத்தை வைக்கிறோம். அதை சரியாக  அமைக்க வில்லை என்றால் ஒரு துளி இரத்தம் தெரியும். அதை இன்னும் கொஞ்சம் சரியாக அமைத்தால் (focus செய்தால் ) அந்த இரத்தத்தில் உள்ள நுண்ணுயிர்கள் தெரியும். அதை இன்னும், மேலும் சரியாக focus செய்தால் மிகத் தெளிவாக ஆயிரக்கணக்கான கோடிகணக்கான நுண்ணுயிர்கள் தெரியும். அது போல கண்ணன்  சொல்கிறான், என்னை நன்றாகப் பார் என்று.

நானா-விதாணி = த என்றால்  பகுத்தல்.விதா என்றால் பகுதி. நானா விதாணி என்றால் பல்வேறு பகுதிகள்.

பல வித  வர்ணங்கள் = இதை பல நிறங்கள் என்றும் சொல்லலாம், அல்லது பலவித மனித கூறுகள் என்றும் சொல்லலாம். (பிராமணன், சத்ரியன், வைசியன்,   சூத்திரன் என்ற வர்ணங்களாகவும் கொள்ளலாம்). எல்லாம் அவனின் பகுதிகள் தான்.

திவ்ய ரூபம் என்றால் ஒளி வீசும், மங்களகரமான வடிவம் என்று பொருள்.

அனைத்து உயிர்களும் ஒன்றுதான், அதில் வேறு பாடு கிடையாது என்றெல்லாம் சொல்லி  வந்தான். எப்படி நம்புவது ? எல்லாம் ஒன்றென்று எப்படி நாம் நம்ப முடியும் ? சுற்றி பார்த்தால் எத்தனையோ வேறு பாடுகள் தெரிகிறது.

கம்மல் ஒரு மாதிரி  இருக்கிறது,வளையல் வேறு மாதிரி இருக்கிறது. சங்கிலி இன்னொரு மாதிரி இருக்கிறது.  இவை எல்லாம் தங்கத்தின் பல்வேறு வடிவங்கள் என்று அறிய அறிவு  வேண்டும்.

பானை ஒரு மாதிரி இருக்கிறது, சட்டி வேறு மாதிரி இருக்கிறது..இவை எல்லாம் வேறு வேறு அல்ல, எல்லாம் களிமண் தான் என்று அறிய அறிவு வேண்டும்.

சொன்னால் புரியவில்லை என்றால் கண்ணால் காணும்படி செய்ய வேண்டும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு  காண்பிக்கிறான்.




Saturday, August 2, 2014

கீதை - 11.4 - நான் காண முடியும் என்றால், எனக்கு காண்பி

கீதை - 11.4 - நான் காண முடியும் என்றால், எனக்கு காண்பி  


मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो ।
योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥११- ४॥

மந்யஸே யதி³ தச்ச²க்யம் மயா த்³ரஷ்டுமிதி ப்ரபோ⁴ |
யோகே³ஸ்²வர ததோ மே த்வம் த³ர்ஸ²யாத்மாநமவ்யயம் || 11- 4||


மந்யஸே = மன் என்றால் மனம், சிந்தனை. நீ நினைத்தால்

யதி =  என்றால் (if )

தத் = அதை 

சக்யம் = முடியும் என்றால்

மயா = என்னால்

த்ரஷ்டும் = காண (திருஷ் = காணுதல் )

இதி = இதனால் (thus )

ப்ரபோ = பிரபோ

யோகே³ஸ்²வர = யோகங்களின் ஈஸ்வரனே. 

ததோ = பின், அதனால்,

 மே = எனக்கு

த்வம்  = நீ

த³ர்ஸ²ய = காண்பி

ஆத்மாநம் = சுயம், தனதான,

அவ்யயம் = மாறாத

பிரபுவே, யோகேஸ்வரா, நான் காண்பது சாத்தியம் என்று நீ கருதினால், எனக்கு அழிவற்ற ஆத்மாவை காண்பி. 

பிரபுவே = ப்ர என்றால் உயர்வு. பு என்றால் இருத்தல். உயர்ந்தவனாக இருத்தல். நாம் சாப்பிட்டால் அது சாதம். இறைவனுக்கு படித்தால் அது ப்ர - சாதம். உயர்வான சாதம்

யோகேஸ்வரா = யோகம் என்பது யுஜ் என்ற வேர் சொல்லில் இருந்து  வந்தது.
யுஜ் என்றால் நுகந் தடி. மாட்டை வண்டியில் பூட்டும் அந்த தடிக்குப் பெயர் நுகந் தடி.






யோகம் என்றால் இணைப்பது. integrate. எதையும் எதையும் இணைப்பது ?

பிரிந்து கிடப்பவற்றை இணைப்பது யோகம். மனமும் செயலும், உள்ளும் புறமும் இப்படி எல்லாம் சிதைந்து பிரிந்து கிடக்கிறது. இவற்றை ஒன்று சேர்ப்பது யோகம்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார் வள்ளாலார். உள்ளும் புறமும் பிரிந்து போய் கிடக்கிறது.

நாம் எல்லாவற்றையும் வேறு வேறாகப் பார்க்கிறோம். பிரித்துப் பார்க்கிறோம்.  ஆண் ,பெண் , உயர்ந்தவன், தாழ்தவன், படித்தவன், படிக்காதவன், பணக்காரன், ஏழை, இப்படி எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்துப் பார்க்கிறோம். அதனால் இவ்வளவு சிக்கல்.  குழப்பம்.யோகம் இவற்றை  ஒன்றிணைக்கிறது.

(From Old English ġeoc,
from Proto-Germanic *juką,
from Proto-Indo-European *yugóm.
Cognate with West Frisian jok,
From Dutch juk,
From German Joch,
Danish åg,
Swedish ok,
Gothic 𐌾𐌿𐌺 (juk),
Latin iugum (English jugular),
Greek ζυγός (zugós, “yoke”),
  Sanskrit युग (yugá, “yoke, team”),
Old Church Slavonic иго (igo)
(Russian иго (igo)),
Persian یوغ (yuğ).

http://en.wiktionary.org/wiki/yoke )

அவ்யயம் என்றால் மாறாத. வ்யயம் என்றால் வியாபித்து இருத்தல், பரந்து இருத்தல், மாறிக்கொண்டே இருத்தல். அ-வ்யயம் என்றால் மாறாமல் இருத்தல். எப்போதும் ஒரே மாதிரி இருப்பது.


மாறுகின்ற வடிவங்கள், தோற்றங்கள் இவற்றின் பின்னால் மாறாத ஏதோ ஒன்று  இருக்க வேண்டும். அதை எனக்கு நீ காண்பிப்பாயா என்று கண்ணனை வேண்டுகிறான்  அர்ஜுனன்.

அதுவும், என்னால் காண முடியும் என்று நீ நினைத்தால் எனக்கு காண்பி என்கிறான்.

எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்லிவிட முடியாது. குழந்தை அம்மாவிடம் கேட்க்கும்..."அம்மா நீ அப்பாவுடன் சந்தோஷமாய் இருக்கிறேன் என்று சொல்கிறாயே  ...அது என்ன சந்தோசம், எனக்குச் சொல் " என்றால் எப்படி சொல்லுவது ?

முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ஙனனே.

உயர்ந்த உண்மைகளை பெற்றுக் கொள்ளவும் தகுதி வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாவற்றையும் சொல்ல முடியாது.

உயர்ந்த விஷயங்களை தாழ்ந்தவனுக்கு சொன்னால் அவன் அதை கீழ்மைப் படுத்துவான்.

தனக்கு அந்தப் பக்குவம் இருக்கிறதா என்று அர்ஜுனனுக்குத் தெரியவில்லை. எனவே, கண்ணனிடம் கேட்கிறான்.   என்னால் காண முடியும் என்றால் காண்பி  என்று.