Sunday, August 3, 2014

கீதை - 11.5 - என்னைப் பார்

கீதை - 11.5 - என்னைப் பார் 


श्रीभगवानुवाच
पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः ।
नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥११- ५॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பஸ்²ய மே பார்த² ரூபாணி ஸ²தஸோ²ऽத² ஸஹஸ்ரஸ²: |
நாநாவிதா⁴நி தி³வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச || 11- 5||


ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்

பஸ்²ய மே = நீ பார்

பார்த = பார்த்தா

ரூபாணி = ரூபங்களை

ஸ²தஸோ = நூற்றுக்கணக்கான

அத = மேலும் , நிச்சயமாக

ஸஹஸ்ரஸ = ஆயிரக்கணக்கான
|
நாநாவிதாநி = பல்வேறு விதமான

திவ்யாநி = திவ்யமான

நாநாவர்ணாக்ருதி = பலவிதமான வர்ணங்களிலும், வடிவங்களிலும்

ச  = மேலும்


ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் , பார்த்தா என்னைப் பார்...நூற்றுக்  கணக்கில்,ஆயிரக் கணக்கில் பலவித வடிவங்களிலும், நிறங்களிலும், உள்ள என் தெய்வீக வடிவைப் பார் 

உவாச = வாச என்றால் வாசித்தல், சொல்லுதல். உ-வாச அவன் சொன்னான். கண்ணன் சொன்னான். பகவான் சொன்னான்.

பச்ய = நீ கட்டாயம் அல்லது உறுதியாகப் பார். உண்மை கண்ணுக்கு முன் கிடந்தாலும் நாம்  .பார்ப்பது இல்லை. ஆப்பிள் எல்லோர் தலையிலும் தான் விழுந்தது. நியூட்டன் மட்டும் அதை சரியாகப்  பார்த்தார். அவர்க்கு புவி ஈர்ப்பு உண்மை புலப் பட்டது. நாம் பார்ப்பது இல்லை. கண் ஒரு  பக்கம்,மனம் ஒரு பக்கம்...

முதலில் நூற்றுக்கணக்கான உருவங்களைப் பார்  என்றான்.

பின் ஆயிரக்கணக்கான உருவங்களைப் பார் என்றான். பார்க்க பார்க்க விரிந்து கொண்டே போகும்.

நுண்ணோக்கி (microscope ) முன்னால் ஒரு சொட்டு இரத்தத்தை வைக்கிறோம். அதை சரியாக  அமைக்க வில்லை என்றால் ஒரு துளி இரத்தம் தெரியும். அதை இன்னும் கொஞ்சம் சரியாக அமைத்தால் (focus செய்தால் ) அந்த இரத்தத்தில் உள்ள நுண்ணுயிர்கள் தெரியும். அதை இன்னும், மேலும் சரியாக focus செய்தால் மிகத் தெளிவாக ஆயிரக்கணக்கான கோடிகணக்கான நுண்ணுயிர்கள் தெரியும். அது போல கண்ணன்  சொல்கிறான், என்னை நன்றாகப் பார் என்று.

நானா-விதாணி = த என்றால்  பகுத்தல்.விதா என்றால் பகுதி. நானா விதாணி என்றால் பல்வேறு பகுதிகள்.

பல வித  வர்ணங்கள் = இதை பல நிறங்கள் என்றும் சொல்லலாம், அல்லது பலவித மனித கூறுகள் என்றும் சொல்லலாம். (பிராமணன், சத்ரியன், வைசியன்,   சூத்திரன் என்ற வர்ணங்களாகவும் கொள்ளலாம்). எல்லாம் அவனின் பகுதிகள் தான்.

திவ்ய ரூபம் என்றால் ஒளி வீசும், மங்களகரமான வடிவம் என்று பொருள்.

அனைத்து உயிர்களும் ஒன்றுதான், அதில் வேறு பாடு கிடையாது என்றெல்லாம் சொல்லி  வந்தான். எப்படி நம்புவது ? எல்லாம் ஒன்றென்று எப்படி நாம் நம்ப முடியும் ? சுற்றி பார்த்தால் எத்தனையோ வேறு பாடுகள் தெரிகிறது.

கம்மல் ஒரு மாதிரி  இருக்கிறது,வளையல் வேறு மாதிரி இருக்கிறது. சங்கிலி இன்னொரு மாதிரி இருக்கிறது.  இவை எல்லாம் தங்கத்தின் பல்வேறு வடிவங்கள் என்று அறிய அறிவு  வேண்டும்.

பானை ஒரு மாதிரி இருக்கிறது, சட்டி வேறு மாதிரி இருக்கிறது..இவை எல்லாம் வேறு வேறு அல்ல, எல்லாம் களிமண் தான் என்று அறிய அறிவு வேண்டும்.

சொன்னால் புரியவில்லை என்றால் கண்ணால் காணும்படி செய்ய வேண்டும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு  காண்பிக்கிறான்.




No comments:

Post a Comment