Monday, August 4, 2014

கீதை - 11.6 - விஸ்வரூப தரிசனம்

கீதை - 11.6 - விஸ்வரூப தரிசனம் 


पश्यादित्यान्वसून्रुद्रानश्विनौ मरुतस्तथा ।
बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत ॥११- ६॥

பஸ்²யாதி³த்யாந்வஸூந்ருத்³ராநஸ்²விநௌ மருதஸ்ததா² |
ப³ஹூந்யத்³ருஷ்டபூர்வாணி பஸ்²யாஸ்²சர்யாணி பா⁴ரத || 11- 6||

பஸ்²ய = நீ பார்

ஆதித்யாந் = ஆதித்யர்களை

வஸூந் = வசுக்களை

ருத்³ராந = ருதிரர்களை

அஸ்²விநௌ = அஸ்வினி குமாரர்களை

மருதஸ் = காற்றின் கடவுளை 

ததா = அப்படி அப்படியே

ப³ஹூந்ய = பல்வேறுவிதமான

த்ருஷ்ட = பார்

பூர்வாணி = பழமையான

அஸ்²யாஸ்²சர்யாணி = ஆச்சரியப் படும்படி

பா⁴ரத  = பாரதனே

விஸ்வரூபம் என்றால் என்ன ?

பார்த்தா, என்னில் ஆதித்யர்களைப் பார், வசுக்களைப் பார், அஸ்வினி குமார்களைப் பார், காற்றின் கடவுளைப் பார். அனைத்தையும் என்னில் நன்றாகப் பார். 


எப்படி எல்லாம் ஒரு உருவத்தில் வந்து நிற்க முடியும் ? இது இயற்கைக்கு விரோதமாக இருக்கிறதே ? ஏதோ மாயாஜாலக் கதை போல இருக்கிறதே. அறிவுக்கு ஒத்து வரதா  விஷயம் போல இருக்கிறதே என்று நமக்குத் தோன்றும்.

வேற்றுமையில் ஒற்றுமை.

இதுதான் விஸ்வரூபம்.

அனைத்திற்கும் அடிப்படை ஒன்றுதான் என்று சொல்ல வரும் தத்துவம் தான் விஸ்வரூபம்.

விஸ்வரூபம் என்றால்  மிகப் பெரிய உருவம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

விஸ்வ என்றால் உலகளாவிய என்று அர்த்தம்.

உலகம் ஒன்றுபட்டது என்பதை கீதை இரண்டு விதங்களில் சொல்கிறது.

அனைத்துக்குள்ளும் இருப்பது ஒன்றுதான். அது தான் ஆத்மா (Self ) என்று ஒரு விதத்தில் சொல்கிறது.

இன்னொரு பக்கம் எல்லாம் ஒன்றினுள் அடங்கி இருக்கிறது என்று  சொல்லுவது.

அனைத்தும் அடங்கிய ஒன்றுதான் விஸ்வரூபம்.

அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்பார் மணிவாசகர்

அனைத்துக்குள்ளும் இருப்பது, அனைத்தையும் தன்னுள் வைத்து இருப்பது.

இது வரை சொன்னது ஆத்ம தத்துவம்.

சிலருக்கு ஆத்மா என்றால் என்ன, அது எப்படி இருக்கும், அதுக்கு எடை உண்டா, நிறம் உண்டா என்று கேள்வி கேட்பார்கள்.

காணும் அனைத்தும் ஏதோ ஒன்றின் கூறு, அல்லது பகுதி என்றால் எளிதாக சிந்திக்க முடியும்.

பூ என்பது கிளையின் கூறு.

கிளை என்பது மரத்தின் கூறு.

மரம் என்பது தோட்டத்தின் ஒரு பகுதி.

தோட்டம் என்பது ஊரின் ஒரு பகுதி.

ஊர் என்பது  நாட்டின்,நாடு என்பது இந்த  உலகின், உலகம் என்பது இந்த பரந்த பால் வெளியில் ஒரு பகுதி என்று நம்மால்  அறிய,உணர முடிகிறது.

பூ என்பது பால் வெளியின் ஒரு பகுதி என்று சட்டென்று நினைக்க முடியாது. ஆனால் சிந்திக்க சிந்திக்க அது புலப்படும்.

அதைத்தான் இந்த விஸ்வரூபம் காட்டுகிறது.

இந்த உலகில் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒன்றாக இருக்கிறது.

நாம் தான் அதை பிரித்துப்  போடுகிறோம் - நாடு என்றும், மொழி என்றும், மதம் என்றும், ஆண் பெண் என்றும், பல விதங்களில் பிரித்து பிரித்து பின்னால் அந்த பிரிவினையால் துன்பப்படுகிறோம்.

சேர்த்துப் பாருங்கள் - குழப்பம் விலகும்.

இதுதான் விஸ்வரூபம். இதைப் புரிந்து கொண்டால் பின்னால் வரும் ஸ்லோகங்கள் எளிதாக இருக்கும்.

இல்லை என்றால் என்னடா இது கண்ணன், என்னில் அதைப் பார், இதைப் பார் என்று பெரிய பட்டியலே போடுகிறான். சரி அது எல்லாம் கண்ணனில் இருந்து விட்டு போகட்டும். அதனால் எனக்கு என்ன என்ற கேள்வி நிற்கும்.

உங்களுக்கு என்று இருப்பது - ஒன்றாகக் காணும் காட்சி.

இந்த உலகில் உள்ள அனைத்தும் ஏதோ ஒன்றின் கூறு என்று  அறியுங்கள்.

என் இடது கண்ணும் வலது கண்ணும் என் உடலின் கூறுகள். இதில் எது உயர்ந்தது ? எது தாழ்ந்தது ?

வேற்றுமை மறையும் போது சமநிலை  பிறக்கும்.

சம நிலை பிறக்கும் போது சாந்தி பிறக்கும். மனதில் அமைதி  நிலவும்.

இதுதான் விஸ்வரூப தரிசனம்.


2 comments:

  1. I'm not sure about this

    அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்பார் மணிவாசகர்

    ReplyDelete