கீதை - 11.8 - உனக்கு ஞானக் கண்களைத் தருகிறேன்
न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा ।
दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम् ॥११- ८॥
ந து மாம் ஸ²க்யஸே த்³ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா |
தி³வ்யம் த³தா³மி தே சக்ஷு: பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் || 11- 8||
ந = இல்லை
து = அதனால்
மாம் = நான்
ஸக்யஸே = உன்னால் முடியும்
த்ரஷ்டும் = பார்க்க
அநேந = இதனால்
எவ = நிச்சயமாக
ஸ்வசக்ஷுஷா = இயற்கையான கண்களால் (ஸ்வ = இயற்கையான)
திவ்யம் = தெய்வீக
ததாமி = தருகிறேன்
தே = உனக்கு
சக்ஷு:= காண்பதற்கு
பஸ்²ய = நீ பார்க்க வேண்டும்
மே = என்
யோகம் = யோகம்
ஐஸ்வரம் = ஐஸ்வர்யம், மகிமை , பெருமை
உன்னுடைய இந்த இயற்கையான கண்களால் என்னை காண முடியாது. உனக்கு நான் ஞானக் கண்களை கொடுக்கிறேன். என்னுடைய மகிமையைப் பார்.
நம்பிக்கையும், ஞானமும்.
ஆத்மா அழிவற்றது, அது நீரால் நனையாது, நெருப்பால் வேகாது என்றெல்லாம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள நம்பிக்கை வேண்டும். கண்ணால் காண முடியாத ஒன்றை ஏற்றுக் கொள்ள நம்பிக்கை வேண்டும்.
நம்பிக்கை என்பது எல்லோராலும் முடியாது.
அதுவம் அறிவியல் வளர்ந்து வரும் இந்த நேரத்தில், இளைய தலைமுறை எல்லாவற்றையும் கேள்வி கேட்க்கும். எனக்கு காட்டு, நான் பார்க்க வேண்டும். காண முடியாத ஒன்றை நம்ப முடியாது என்று சொல்லும்.
எல்லாவற்றிற்குள்ளும் ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள நம்பிக்கை வேண்டும்.
எல்லாம் ஒன்றினில் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள அறிவு போதும். கண்ணால் காண முடியும். ஒன்றினுக்குள் ஒன்று இருப்பதை அறிவால் அறிந்து கொள்ள முடியும்.
அனைத்திலும் ஆத்மா இருக்கிறது என்பது நம்பிக்கை.
அனைத்தும் என்னில் இருக்கிறது என்பது அறிவு.
நீங்கள் நம்பிக்கையை கொண்டு சென்றாலும் சரி, அறிவை கைபிடித்து சென்றாலும் சரி நீங்கள் அடையும் இடம் ஒன்றுதான்.
அர்ஜுனன் ஆத்மாவை நம்பிய மாதிரி தெரியவில்லை.
நீ சொன்னது எல்லாம் சரி, இருந்தாலும் எனக்கு அதை காட்டு என்று அறிவின் பால் செல்கிறான்.
சரி, உனக்கும் புரிய வைக்க வேண்டும் என்று கண்ணன் தன் விஸ்வரூபத்தை அவனுக்கு காட்டினான்.
உனக்கு ஞான கண்களை தருகிறேன் என்று சொன்னான். உடனே ஏதோ இன்னொரு கண்ணை தந்தான் என்று அர்த்தம் இல்லை.
நாம் இந்த உலகை புலன்கள் மூலம் அறிகிறோம். கண்டு, கேட்டு,தொட்டு, சுவைத்து அறிகிறோம்.
இந்த புலன்களை பொறிகள் என்று சொல்லுவார்கள்.
ஐந்து புலன்களும் ஐந்து ஞானேந்திரியங்கள்.
ஐந்து புலன்கள் மூலம் மட்டும் அறிவு பெறுவது என்பது ஐந்து அறிவு உள்ள உயிர்களின் இயல்பு.
மனிதன் மட்டும் ஆறறிவு உள்ளவன் என்கிறோம். ஏன் ?
எது ஆறாவது அறிவு ?
மனம், ஞானம், சிந்திக்கும் திறன் - அது ஆறாவது அறிவு. அது ஆறாவது ஞானேந்திரியம். அதன் மூலம் அறிவது ஞானக் கண் கொண்டு காண்பது.
நாம் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும் போது அதை நம் மனக் கண்ணில் காண்கிறோம். அதுதான் ஞானக் கண்.
அந்த கண்ணின் மூலம் இதை காண முடியும் என்கிறான் கண்ணன்.
இந்த உலகம் அனைத்தும் ஒரு தொகுதி என்று அறிய ஞானம் வேண்டும்.
அந்த ஞானத்தை, அறிவை அர்ஜுனனுக்கு கண்ணன் கொடுத்தான்.
சரி, அர்ஜுனனுக்கு கண்ணன் கொடுத்தான். அர்ஜுனன் அதனால் பலன் அடைந்தான். அதனால் நமக்கு என்ன ?
நமக்கு என்ன என்று மேலும் பார்ப்போம்.
No comments:
Post a Comment