Saturday, August 2, 2014

கீதை - 11.4 - நான் காண முடியும் என்றால், எனக்கு காண்பி

கீதை - 11.4 - நான் காண முடியும் என்றால், எனக்கு காண்பி  


मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो ।
योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥११- ४॥

மந்யஸே யதி³ தச்ச²க்யம் மயா த்³ரஷ்டுமிதி ப்ரபோ⁴ |
யோகே³ஸ்²வர ததோ மே த்வம் த³ர்ஸ²யாத்மாநமவ்யயம் || 11- 4||


மந்யஸே = மன் என்றால் மனம், சிந்தனை. நீ நினைத்தால்

யதி =  என்றால் (if )

தத் = அதை 

சக்யம் = முடியும் என்றால்

மயா = என்னால்

த்ரஷ்டும் = காண (திருஷ் = காணுதல் )

இதி = இதனால் (thus )

ப்ரபோ = பிரபோ

யோகே³ஸ்²வர = யோகங்களின் ஈஸ்வரனே. 

ததோ = பின், அதனால்,

 மே = எனக்கு

த்வம்  = நீ

த³ர்ஸ²ய = காண்பி

ஆத்மாநம் = சுயம், தனதான,

அவ்யயம் = மாறாத

பிரபுவே, யோகேஸ்வரா, நான் காண்பது சாத்தியம் என்று நீ கருதினால், எனக்கு அழிவற்ற ஆத்மாவை காண்பி. 

பிரபுவே = ப்ர என்றால் உயர்வு. பு என்றால் இருத்தல். உயர்ந்தவனாக இருத்தல். நாம் சாப்பிட்டால் அது சாதம். இறைவனுக்கு படித்தால் அது ப்ர - சாதம். உயர்வான சாதம்

யோகேஸ்வரா = யோகம் என்பது யுஜ் என்ற வேர் சொல்லில் இருந்து  வந்தது.
யுஜ் என்றால் நுகந் தடி. மாட்டை வண்டியில் பூட்டும் அந்த தடிக்குப் பெயர் நுகந் தடி.






யோகம் என்றால் இணைப்பது. integrate. எதையும் எதையும் இணைப்பது ?

பிரிந்து கிடப்பவற்றை இணைப்பது யோகம். மனமும் செயலும், உள்ளும் புறமும் இப்படி எல்லாம் சிதைந்து பிரிந்து கிடக்கிறது. இவற்றை ஒன்று சேர்ப்பது யோகம்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார் வள்ளாலார். உள்ளும் புறமும் பிரிந்து போய் கிடக்கிறது.

நாம் எல்லாவற்றையும் வேறு வேறாகப் பார்க்கிறோம். பிரித்துப் பார்க்கிறோம்.  ஆண் ,பெண் , உயர்ந்தவன், தாழ்தவன், படித்தவன், படிக்காதவன், பணக்காரன், ஏழை, இப்படி எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்துப் பார்க்கிறோம். அதனால் இவ்வளவு சிக்கல்.  குழப்பம்.யோகம் இவற்றை  ஒன்றிணைக்கிறது.

(From Old English ġeoc,
from Proto-Germanic *juką,
from Proto-Indo-European *yugóm.
Cognate with West Frisian jok,
From Dutch juk,
From German Joch,
Danish åg,
Swedish ok,
Gothic 𐌾𐌿𐌺 (juk),
Latin iugum (English jugular),
Greek ζυγός (zugós, “yoke”),
  Sanskrit युग (yugá, “yoke, team”),
Old Church Slavonic иго (igo)
(Russian иго (igo)),
Persian یوغ (yuğ).

http://en.wiktionary.org/wiki/yoke )

அவ்யயம் என்றால் மாறாத. வ்யயம் என்றால் வியாபித்து இருத்தல், பரந்து இருத்தல், மாறிக்கொண்டே இருத்தல். அ-வ்யயம் என்றால் மாறாமல் இருத்தல். எப்போதும் ஒரே மாதிரி இருப்பது.


மாறுகின்ற வடிவங்கள், தோற்றங்கள் இவற்றின் பின்னால் மாறாத ஏதோ ஒன்று  இருக்க வேண்டும். அதை எனக்கு நீ காண்பிப்பாயா என்று கண்ணனை வேண்டுகிறான்  அர்ஜுனன்.

அதுவும், என்னால் காண முடியும் என்று நீ நினைத்தால் எனக்கு காண்பி என்கிறான்.

எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்லிவிட முடியாது. குழந்தை அம்மாவிடம் கேட்க்கும்..."அம்மா நீ அப்பாவுடன் சந்தோஷமாய் இருக்கிறேன் என்று சொல்கிறாயே  ...அது என்ன சந்தோசம், எனக்குச் சொல் " என்றால் எப்படி சொல்லுவது ?

முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ஙனனே.

உயர்ந்த உண்மைகளை பெற்றுக் கொள்ளவும் தகுதி வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாவற்றையும் சொல்ல முடியாது.

உயர்ந்த விஷயங்களை தாழ்ந்தவனுக்கு சொன்னால் அவன் அதை கீழ்மைப் படுத்துவான்.

தனக்கு அந்தப் பக்குவம் இருக்கிறதா என்று அர்ஜுனனுக்குத் தெரியவில்லை. எனவே, கண்ணனிடம் கேட்கிறான்.   என்னால் காண முடியும் என்றால் காண்பி  என்று.


No comments:

Post a Comment