Tuesday, August 12, 2014

கீதை - 11.12 - ஆயிரம் சூரிய பிரகாசம்

கீதை - 11.12 - ஆயிரம் சூரிய பிரகாசம் 



दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः ॥११- १२॥

தி³வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப⁴வேத்³யுக³பது³த்தி²தா |
யதி³ பா⁴: ஸத்³ருஸீ² ஸா ஸ்யாத்³பா⁴ஸஸ்தஸ்ய மஹாத்மந: || 11- 12||

திவி = ஒளி பொருந்திய

ஸூர்ய ஸஹஸ்ர ஸ்ய = ஆயிரம் சூரியன்கள் சேர்ந்தாற்போல

பவேத் = அதுவானது

யுகபத் = ஒன்றாக, ஒரே சமயத்தில் 

உதுத்திதா = உதித்தால்

யதி = எப்படி இருக்குமோ

பா = அவ்வளவு பிரகாசத்துடன்

ஸத்ருஸீ =  அதைப் போல

ஸா = அது

ஸ்யாத்  = இருந்தது

பா⁴ஸஸ்தஸ்ய = அதன் ஒளியும்

மஹாத்மந: = மகா ஆத்மா

ஒரே சமயத்தில் ஆயிரம் சூரியன்கள் தோன்றினால் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ, அப்படி இருந்தது அந்த மகாத்மாவின் வடிவம் .

உலகில் ஒளியும் இருக்கிறது. இருளும் இருக்கிறது.

இரண்டும் தனித்தனியே இருக்க முடியுமா ?

ஒளி இல்லாதது இருளா ? அல்லது

இருள் இல்லாதது ஒளியா ?

ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும்.

Is the absence of light is darkness or absence of darkness is light ?

This is the core of Existentialism. Which one exists ? Darkness or Light ?

வாழ்வில் இன்பமும் துன்பமும் இருக்கிறது ?

இன்பம் இல்லாதது துன்பமா ?

துன்பம் இல்லாதது இன்பமா ?

ஒரு துன்பமும் இல்லை என்றால் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லுவீர்களா ?

ஒரு இன்பமும் இல்லை இன்றால் துன்பப் படுகிறேன் என்று சொல்லுவீர்களா ?

Is the absence of happiness is sadness or absence of sadness is happiness ? Which exists ? Happiness or Sadness ?

விஸ்வரூபம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது என்றால் இருளும் இருந்திருக்க  வேண்டும்.

ஏன் ஆயிரம் சூர்ய பிரகாசம் என்று சொல்ல வேண்டும் ? ஆயிரம் அம்மாவாசை  இருள் என்று ஏன் சொல்ல வில்லை. ?

ஏன் என்றால் இருள் என்று ஒன்று கிடையாது. ஒளி  மட்டும்தான்   உண்டு. ஒளி இல்லாததை  நாம் இருள் என்கிறோம். என்று தனியாக ஒன்று கிடையாது.

இருக்கும் அனைத்தின் தொகுதி என்றதால், இருப்பது ஒளி மட்டும்தான்.  அத்தனை  ஒளியையும் சேர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த  உருவம்.

உலகில் ஒளி மட்டும்தான் உண்டு. இருள் கிடையாது. ஒரு விளக்கைக் கொண்டு வந்து  இருளைத் தேடித் பாருங்கள். கிடைக்கவே கிடைக்காது.

அது போல

வாழ்வில் இன்பம் மட்டும்தான் உண்டு.  துன்பம் என்பது கற்பனை. இல்லாத ஒன்று. இருப்பதாய் நாம் நினைத்துக் கொண்டு வருந்துகிறோம்.

இன்பத்தை விட்டு நாம் விலகினால் துன்பத்தில் இருப்பது போல  தெரியும். விலகியது  நம் குற்றம்.

உருகி, பெருகி, புவனம் அனைத்தும் நிறைத்து தத்தி கரை புரளும் பரமானந்த சாகரத்தே என்பார் அருணகிரிநாதர்


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


களி நின்ற வெள்ளம் கரை கண்டது இல்லை என்பார் அபிராமி பட்டர்

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

நினைக்கும் போதெல்லாம், காணும்போது எல்லாம், பேசும்போது எல்லாம் எப்போதும் ஆனந்தத் தேன் சொரியும் என்பார் மணிவாசகர்

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

உலகில் இன்பம், ஆனந்தம் கொட்டிக் கிடக்கிறது. அள்ள அள்ள குறையாத ஆனந்தம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை என்பார் நாவுக்கரசர்

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே


விஸ்வரூப தரிசனம் காட்டுவது எல்லாம் வாழ்வில் நல்லவையே நிறைந்து கிடக்கிறது  என்ற உண்மையத்தான்.

- சிறந்த நறுமணம்,
- ஆயிரம் சூரிய ஒளி

என்று இப்படி பட்டியல் போகிறது. எல்லாமே உயர்ந்தவை, சிறந்தவை இவற்றின்  தொகுதிதான் இந்த உலகம். அதுதான் இறைவன்.

இந்த விஸ்வரூப் தரிசனம் உங்களுக்கும் கிடைக்கட்டும்


1 comment: