Friday, November 29, 2019

பகவத் கீதை - 2.51 - பிறவித் தளை நீங்கி

பகவத் கீதை - 2.51 - பிறவித் தளை நீங்கி 




कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्॥५१॥

கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||2-51||

கர்மஜம் = கர்மத்தில் இருந்த ஜனித்த, பிறந்த

பு³த்³தி⁴யுக்தா = புத்தியுடன் சேர்ந்த

ஹி  = அதனால்,

ப²லம்  = பலன்கள்

த்யக்த்வா = தியாகம் செய்து, துறந்து

மநீஷிண:| = அறிவுள்ளவர்கள்

ஜந்மப³ந்த⁴ = பிறவித் தொடர்பு

விநிர்முக்தா: = விடு படுகிறார்கள்

பத³ம் = ஒவ்வொரு அடி

க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

அநாமயம் = துன்பத்தை விட்டு



அறிவுள்ளவர்கள், செய்யும் செயல்களின் பலனை துறந்து, துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிறவி தளைகளில் இருந்தும் விடு படுகிறார்கள். 


 கீதையின் ஜீரணிக்கமுடியாத ஒரு தத்துவம் உண்டு என்றால் அது இதுதான். செய்யும் செயல்களின் பலனை துறந்து விடுதல். 

யாரால் முடியும்? பலன் இல்லை என்றால் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும்?  

யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத தத்துவம். நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றை ஏன் கீதை சொல்கிறது? 

இதை நாம் மூன்று  கோணத்தில் அணுகலாம்.

முதலாவது, எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், நம் புத்தி அதில் முழு முனைப்புடன் இருக்க வேண்டும். (concentration). அப்படி இல்லாமல் மனம் அங்கும் இங்கும் சிதறி ஓடிக் கொண்டிருந்தால், செய்யும் வேலை சரியாக நடக்காது. 

அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், அடுப்படியில் என்று எங்கு எடுத்துக் கொண்டாலும், செய்யும் வேலையில் கவனம் தேவை.  கவனக் குறைவாக வேலை செய்தால் அது ஆபத்தில் போய் முடியும். 


சில உதாரணங்கள்....

பேருந்து ஓட்டும் ஒருவர், சாலையில் கவனமாக இருக்க வேண்டும். ஓட்டுவது ஒன்றிலேயே  அவருக்கு கவனம் இருக்க வேண்டும். மாறாக, இப்படி ஓட்டினால் எனக்கு என்ன கிடைக்கும்?  இந்த வருடம் ஊக்கத் தொகை (bonus ) கிடைக்குமா,   கிடைத்தால் அதில் என்ன வாங்கலாம், எப்படி செலவழிக்கலாம் என்று  நினைத்துக் கொண்டே ஓட்டினால் என்ன ஆகும்? ஓட்டும் அந்த செயலின் பலன் மேல் மனம் போனால் அவரும்  , அவருடைய வண்டியில் உள்ள எல்லோரும்  வேறு எங்கோ போக வேண்டி இருக்கும். 

ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார். இதய அறுவை சிகிச்சை என்று  வைத்துக் கொள்வோம். அறுக்கும் போது , இந்த வருடம் பதவி உயர்வு வருமா,  வேறு மருத்துவமனைக்கு சென்றால் இதை விட அதிக சம்பளம் கிடைக்குமா என்று  செய்யும் காரியத்தின் பலன்களில் மனம் போனால், நோயாளி  போகும் இடம் வேறாக இருக்கும். 

ஒரு மாணவன், பரீட்சை எழுதும் இடத்தில் ஒழுங்காக பரீட்சை எழுத வேண்டும். வினாத்தாளை கையில் வைத்துக் கொண்டு , இதில் மட்டும் நூத்துக்கு நூறு  வாங்கி விட்டால், நல்ல வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும் என்று  யோசித்துக் கொண்டிருந்தால் விடை சரியாக எழுத முடியுமா?

எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், அந்த காரியத்தை எப்படி சிறப்பாக செய்வது என்று  மட்டும் யோசித்தால் அதை சிறப்பாக செய்ய முடியும். மாறாக, அதனால் என்ன பலன் வரும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தால், கவனம் சிதறும். பலன் வரும். நீ பாட்டுக்கு உன் வேலையைச் செய். 

இரண்டாவது,  பலன் மேல் மனம் போனால் என்ன ஆகும்? அந்த பலன் கிடைக்குமோ என்ற சந்தேகம் வரும்.கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம்  வரும். வேறு யாராவது கொண்டு சென்று விடுவார்களோ என்று பார்ப்பவன் மேல் எல்லாம் ஒரு போட்டி மனப்பான்மை வரும். நினைத்த அளவு பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது  என்று குழப்பம் வரும்....

வேலையும் சரியாகச் செய்யாமல், மன குழப்பமும் வந்து சேரும்.

தினம் ஒரு மணி நேரம் நடக்கிறோம் என்றால் அதன் பலன் தானே வரும். ஒரு நாள் நடந்து விட்டு,  அடடா எடை குறையவில்லையே, இது சரி இல்லை என்று நிறுத்தி விட்டால்  என்ன ஆகும்?

மூன்றாவது, மிக நுட்பமானது, நாம் ஒவ்வொரு காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கும் போது, அந்த காரியம் நம்மை மாற்றுகிறது. அந்த காரியத்தால் நாம்  பாதிக்கப் படுகிறோம். சிறப்பாக செய்தால் நம்முள் ஏதோ ஒன்று உயர்கிறது. சொதப்பினால், நம்முள் ஏதோ என்று தாழ்கிறது. சிந்தித்துப் பாருங்கள்,  வீடை நன்றாக ஒதுங்க வைத்து, சுத்தம் செய்து, வேண்டாத சாமான்களை தூக்கிப் போட்டு   வீட்டை சரி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மனதுக்குள் ஒரு சந்தோஷம் வருகிறது அல்லவா? வேலை முதுகு நிமிர்ந்து இருக்கும்.  இருந்தும் வேலை முடிவில், ஒரு சந்தோஷம் வரும். நாம் இதை நன்றாகச் செய்தோம் என்ற திருப்தி உணர்வு வரும். 

பெண்களுக்கு இது தெரியும். ஒரு நாள் நன்றாக சமையல் செய்தால், பிள்ளைகள் அதை இரசித்து சாப்பிட்டால், அம்மாவுக்கு ஒரு சந்தோஷம்.  ஒரு வேளை அவளுக்கு ஒன்றும்  மிச்சம் வைக்காமல் கூட பிள்ளைகள் சாப்பிட்டுவிட்டு போய் விடலாம் . இருந்தும் அவளுக்கு அதில் ஒரு சந்தோஷம்   இருக்கும். அவள் செய்ததின் பலன் வேறு யாருக்கோ கிடைத்தது. ஆனாலும், அவளுக்கு ஒரு சந்தோஷம் இருக்கிறதா இல்லையா.   

வீட்டுக்கு உழைப்பதில் நாம் பலன் கருதுவதில்லை. மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு என்று செய்யும் போது பலன் கருதுவதில்லை. அதையே கொஞ்சம் விரித்தால் சமுதாயத்துக்கு, நாட்டுக்கு என்று  வரும். 

யோசித்துப் பார்ப்போம் ...எல்லோரும் பலன் கருதாமல், என்னால் முடிந்ததை செய்கிறேன்...எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்போடு காரியம் செய்தால்   இந்த உலகம் எப்படி இருக்கும் என்று?  சுயநலம் இல்லாத ஒரு சமுதாயம் எப்படி இருக்கும்?

அது தான் கீதை. 


Thursday, November 28, 2019

பகவத் கீதை - 2.50 - யோகம், செயல்களின் திறமை

பகவத் கீதை - 2.50 - யோகம், செயல்களின் திறமை 




बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते।
तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम्॥५०॥

பு³த்³தி⁴யுக்தோ ஜஹாதீஹ உபே⁴ ஸுக்ருதது³ஷ்க்ருதே|
தஸ்மாத்³யோகா³ய யுஜ்யஸ்வ யோக³: கர்மஸு கௌஸ²லம் ||2-50||


பு³த்³தி⁴ = புத்தி

யுக்தோ = இணைந்து, சேர்ந்து

ஜஹாதி = விட்டு விட்டு , விலகி

இஹ = இங்கு

உபே =  இரண்டும்

ஸுக்ருத = நல்லதும்

துஷ்க்ருதே= தீயதும்

தஸ்மாத் = எனவே

யோகா³ய = யோகத்தின் மூலம்

யுஜ்யஸ்வ = சேர்ந்து, இணைந்து

யோக³: = யோகம்

கர்மஸு = கர்ம வினைகளின்

கௌஸ²லம் = சிறப்பானது, உயர்ந்தது ||2-50||


புத்தி உள்ளவன் இந்த நல்ல மற்றும் தீய செயல்களில் இருந்து விலகி நிற்கிறான், அல்லது துறந்து விடுகிறான். எனவே, நீ யோக நிலையில் நில். யோகம் என்பது செயல்களின் திறமையான வெளிப்பாடு. 


நாம் ஏன் எந்த ஒரு காரியத்தையும் செய்கிறோம்?

ஒன்று பயம். செய்யாவிட்டால் அதன் விளைவு எப்படி இருக்குமோ என்ற பயம். கணவன்/மனைவி/பெற்றோர்/ஆசிரியர்/உயர் அதிகாரி/அரசாங்கம்/காவல் துறை/ சமுதாயம் என்று ஆயிரம் பேர் நம்மை சுற்றி நின்று கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே பயத்தினால் செய்கிறோம்.

அல்லது

இரண்டாவது, ஆசை.  ஒன்றைச் செய்தால் அதன் மூலம் கிடைக்கும் பலன் மேல் ஆசை.  பாராட்டு, பதவி உயர்வு, சம்பளம், என்று எதோ ஒன்றின் மேல் ஆசைப்பட்டு செய்கிறோம்.

இன்னும் கூட வேறு காரணங்கள் இருக்கலாம்...கோபம், பொறாமை, என்று.

காரணம் எதுவாக இருந்தாலும், நம் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களுக்குக்  காரணம் நம்முடைய முந்தைய அனுபவங்கள்.

முன்னால் இப்படி செய்த்ததால், இது விளந்தைது. நல்லது என்றால் அதை மீண்டும் செய்வோம், அல்லது என்றால் அதை விட்டு விடுவோம்.

இதைத்தான் "வாசனை" என்கிறார்கள்.

ஒரு பூவை கையில் கொஞ்ச நேரம் வைத்து இருந்துவிட்டு, பின் கீழே வைத்த பின்னும், அந்த வாசனை தொடர்ந்து கொண்டே இருக்கும் அல்லவா. இப்போது கையில்  பூ இல்லை. இருந்தும் வாசனை இருக்கிறது.

நல்லது, கெட்டது , உயர்ந்தது, தாழ்ந்தது, போன்ற எண்ணங்கள் எல்லாம் முன் அனுபவத்தால் வருகிறது.

பயம், ஆசை, கோபம், பொறாமை, நடுக்கம், பாசம் எல்லாம் முன் அனுபவ வாசனை.

கீதை சொல்கிறது, "இந்த உணர்ச்சிகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, அறிவு பூர்வமாக, புத்தியை செலவழித்து காரியம் செய்" என்கிறது.

கொஞ்சம் உதாரணம் பார்ப்போம் .

ஒரு வீடு வாங்க, கார் வாங்க, சம்பந்தம் பேச என்று வந்தால், நாம் அதிகம் உணர்ச்சி வசப் படுவோம்.

எப்படியாவது அந்த வீட்டை வாங்கி விட வேண்டும்.

நல்ல சம்பந்தம், இதை விட்டு விடக் கூடாது.

ஐயோ, இப்ப வாங்கவிட்டால் பின்னால் விலை ஏறி விட்டால் (பயம்) என்ன செய்வது.

உணர்ச்சிகள் அதிகமாகும் போது, ஒரு படபடப்பு உண்டாகிறது. தவிப்பு உண்டாகிறது.

உணர்ச்சி மேலீட்டால், முடிவு தவறாகும். முடிவு தவறானால், காரியம் தவறாகும்.

"நன்மை தீமையை விட்டு விட்டு" என்று கீதை சொல்வது உணர்வு பூர்வமாக எதையும் அணுகாமல் அறிவு பூர்வமாக செயல்படு என்கிறது.

புத்தியை உபயோகித்து செய்யும் செயலே உன்னத செயலாகும் என்கிறது.


களத்துக்கு வருவோம்.

அர்ஜுனனின் எதிரில் மாமா, தாத்தா, குரு, பங்காளிகள் என்று எல்லோரும் நிற்கிறார்கள். இவர்களை கொல்வதா என்று "உணர்ச்சி" வசப்படுகிறான்.  எது சரி, தவறு என்பதை விட்டு விட்டு, உணர்வுகளுக்கு அடிமையாகி கடமையை செய்யாமல்  ஓட நினைக்கிறான்.

உறவினர்களை கொல்வது மட்டும் அல்ல,  எதையும் உணர்வு பூர்வமாக அணுகினால்  அது தவறாகத்தான் இருக்கும்.

எனவே, புத்தியை பயன்படுத்து என்கிறான் கண்ணன்.

புத்தியையும் செயலையும் இணைப்பது யோகம். அதுவே செயல்களில் சிறந்தது என்கிறது கீதை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


https://bhagavatgita.blogspot.com/2019/11/250.html

Sunday, November 10, 2019

பகவத் கீதை - 2.49 - புத்தியை சரண்டை

பகவத் கீதை - 2.49 -  புத்தியை சரண்டை 


दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय।
बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः॥४९॥

தூ³ரேண ஹ்யவரம் கர்ம பு³த்³தி⁴யோகா³த்³த⁴நஞ்ஜய|
பு³த்³தௌ⁴ ஸ²ரணமந்விச்ச² க்ருபணா: ப²லஹேதவ: ||2-49||

தூ³ரேண = ரொம்ப தூரத்தில்

ஹை = நிச்சயமாக

அவரம் = தாழ்ந்தது

கர்ம = கர்மம், வினை, தொழில்

புத்தி யோகாத் = புத்தி யோகத்தில் இலயித்து

தநஞ்ஜய = தனஞ்சய

புத்தௌ = புத்தியை

ஸரணம் = சரணம்

அந்விச்ச = அடை

க்ருபணா: = லோபிகள்

பல = பலனை

ஹேதவ: = எதிர்பார்ப்பவர்கள்

அர்ஜுனா, புத்தி யோகத்தை விட பலனை எதிர்பார்த்து செய்யும் காரியங்கள் பல மடங்கு தாழ்ந்தவை. புத்தியை சரணடை. பயன் கருதி காரியம் செய்பவர்கள் கீழானவர்கள். 



பெரும்பாலானோருக்கு இது ஒண்ணுதான் இந்த கீதையில் பிடிக்காத விஷயம். பலனை எதிர்பார்க்காதே என்று சொன்னால், "அதெல்லாம் நடை முறைக்கு சாத்தியம் இல்லை" என்று கீதையை மூட்டை கட்டி வைத்து விடுவார்கள்.

நான் ஒரு பெரிய நிறுவனத்தில், நிதி சார்ந்த வேலைகளுக்கு (finance department ) பொறுப்பளானாக இருந்தேன்.

நான் ஏன் அந்த வேலையை செய்தேன்?

எனக்கு சம்பளம் வரும், ஊக்கத் தொகை வரும், பதவி உயர்வு வரும் என்று நினைத்துச் செய்யவில்லை.

இப்படி இந்த நிறுவனத்தை மேலும் முன்னேற்றலாம், இந்த நிறுவனத்தின் இலாபத்தை எப்படி  இன்னும் அதிகரிக்கலாம், இன்னும் நிறைய பேருக்கு எப்படி   இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெருக்கலாம் என்று தான் நாளும்  சிந்திப்பேன்.

எனக்கு என்ன கிடைக்கும், எவ்வளவு சம்பளம், போனஸ், பதவி உயர்வு என்று  எண்ணி  வேலை செய்வது ஒரு வழி.

நாம் வேலை செய்யும் நிறுவனத்தை எப்படி மேலும் உயர்த்தலாம், அதனால் நாட்டுக்கும்  மக்களுக்கும் எப்படி மேலும் நல்லது செய்யலாம் என்று நினைப்பது இன்னொரு வழி.

கீதை இரண்டாவது வழியை சொல்கிறது.

பலனுக்காக (சம்பளம், போனஸ்) என்று வேலை செய்யாதே என்று சொல்லவில்லை. அப்படி செய்வது முதலாவது வழியை விட மிக தாழ்ந்தது என்று சொல்கிறது.

சுய இலாபம் என்று வந்து விட்டதால், என்ன நடக்கிறது?

இலஞ்சம், ஏமாற்றுதல், கலப்படம், பொய் சொல்வது, என்று அனைத்து விதமான  தவறான வழிகளும் வந்து விடுகின்றன.

ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக வேலை செய்யும் போது , பணம் வருவது மட்டும் அல்ல , அது நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

ஒரு மருத்துவர், தனக்கு எவ்வளவு பணம் வரும் என்று வைத்தியம் செய்ய ஆரம்பித்ததன் விளைவுகளை நாம் காண்கிறோம். தேவை இல்லாத அறுவை சிகிச்சைகள், சோதனைகள், மருந்து மாத்திரைகள் என்று நோயாளியை மருத்துவரே கொல்லும் நிலைக்கு வந்து விட்டது.

ஒரு ஆசிரியர் சொந்த இலாபம் கருதி தொழில் செய்யத் தொடங்கினால் என்ன ஆகிறது?  tuition, வினாத் தாளை பணத்துக்கு விற்பது,  பணம் வாங்கிக்  கொண்டு   மார்க் போடுவது என்று ஆகி விடுகிறது. அப்படி பட்ட ஆசிரியரிடம் படித்த மாணவன்   சமுதாயத்துக்குள் வந்து எப்படி வேலை செய்வான்?

தலைமுறைகளே சீரழிந்து விடும்.

எந்த தொழிலிலும் இரண்டு சாத்திய கூறுகள் உண்டு.

ஒன்று சுய இலாபம்.

இரண்டாவது, உயர்ந்த நோக்கம், குறிக்கோள்.


அர்ஜுனனின் சிக்கல் என்ன? குரு , மாமன், மச்சான், உறவினர்களை கொல்லும் போர் வேண்டாம் என்று நினைக்கிறான்.

போர் என்றால், மனிதர்களை கொல்வது என்று  அவன் நினைக்கிறான். அதனால் வரும்  துக்கத்தை தவிர்க்க நினைக்கிறான்.

அது முதலாவது வழி.

போர் என்றால் நீதி, நியாயம், தர்மம், இவற்றை நிலை நிறுத்துவது.  அதற்காக   எவ்வளவு இன்னல் வந்தாலும் ஏற்றுக் கொள்வது என்று நினைப்பது இரண்டாவது வழி.  கீதை காட்டும் வழி.

சுய இலாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தால் உலகம் இருண்டு விடும். இருண்டு கொண்டு இருக்கிறது.

அந்தப் பேரழிவில் இருந்து உலகையும், மக்களையும் காக்க வேண்டும் என்றால், கீதை காட்டும் வழியில் போவதைத் தவிர வேறு வழி இல்லை.

https://bhagavatgita.blogspot.com/2019/11/249.html