Sunday, June 21, 2015

கீதை - 13.10 - உண்மையை அறியும் முறை

கீதை - 13.10 - உண்மையை அறியும் முறை 


मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी ।
विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥१३- १०॥

மயி சாநந்யயோகே³ந ப⁴க்திரவ்யபி⁴சாரிணீ |
விவிக்ததே³ஸ²ஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி³ || 13- 10||

மயி = என்னில்

சா = மேலும்

அநந்ய யோகேந = வேறு எதிலும் செல்லாத யோகம்

 பக்தி = பக்தியுடன்

அவ்யபி⁴சாரிணீ = அ விபசாரிணி

விவிக்ததேஸ = விவிக்த + தேச = தனி இடங்களை

ஸேவித் = நாடி

அரதி = இன்பம் கொள்ளாமல்

ஜந ஸம்ஸதி = மக்கள் கூட்டங்களில்



பிரிவுபடாத யோகத்துடன், என்னிடம் தவறுதல் இல்லாமல் செலுத்தப்படும் பக்தி , தனியிடங்களை நாடுதல் , மக்கள் கூட்டத்தில் இன்பம் இன்மை.

உண்மையை அறிய வேண்டுமா ?

இதுதான் உண்மை என்று யாரும் மற்றவருக்கு சொல்லித் தந்துவிட முடியாது. ஒவ்வொருவரும், தாங்களே கண்டு பிடிக்க வேண்டும்.

எப்படி கண்டு பிடிப்பது ?

அதற்கு வழி சொல்கிறது கீதை.

முதலாவது,  பிரிவுபடாத யோகம்.  யோகம் என்றாலே ஒன்றாக சேர்ப்பது என்றுதான் பொருள்.  பிரிவுபடாத யோகம் என்றால் மனதை ஒன்றிலேயே நிறுத்துதல். மனமும், வாக்கும், செயலும் ஒன்றாக இருத்தல்.

இந்த மூன்றும் ஒன்று சேர்வது மிக மிக கடினம். நாம் நினைத்துக் கொண்டிருப்போம், "நான் நினைபதைத் தானே நான் சொல்கிறேன் , செய்கிறேன் " என்று.  ஆழ்ந்து கவனித்தால் நாம் எவ்வளவு பிரிந்து கிடக்கிறோம் என்று தெரியும்.

மனம் ஒன்றை நினைக்கும்.

நாக்கு ஒன்றைச் சொல்லும்.

உடல் மற்றொன்றைச் செய்யும்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார்  வள்ளலார்.

கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே!

என்பார் பட்டினத்தார்



இதையே

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

என்று பாடினாள் ஆண்டாள்.

மனிதனால் சிந்தித்து
வாயினால் பாடி
கையினால் மலர் தூவி

மனமும், வாக்கும், உடலும் ஒன்று சேர்ந்த யோகத்தில் என்கிறான் கண்ணன்.

சரி, மூன்றையும் ஒன்று சேர்த்து விடலாம். பிரியாத யோகம் கை கூடலாம். அந்த  யோகத்தை  என்ன செய்வது ? யார் மேல் செலுத்துவது ? எதை மனதினால் நினைப்பது ? வாயால் பாடுவது ? கையினால் அர்ச்சிப்பது ?

என் மேல் பிறழாத பக்தியுடன் என்கிறான்.

இங்கே மிக மிக வலிமையான ஒரு வார்த்தையை உபயோகப் படுத்துகிறான் கண்ணன்.

ஒரு விபச்சாரியைப் போல் இல்லாமல் என்று.

ஏன் ?

விபச்சாரி என்ன செய்கிறாள் ?

அவளின் மனமும் உடலும் ஒன்று சேர்வது இல்லை.  மனம் கிடைக்கப் போகும்  பணத்தில் இருக்கிறது. உடல் ஏதோ செய்து கொண்டு இருக்கிறது.

பக்தி அப்படி இருக்கக் கூடாது.

மேலும், ஒரு விபச்சாரி அற்ப பணத்திற்கு தன் விலை மதிக்க முடியாத தன்மானத்தை விற்கிறாள்.

நாம் அவளை விட எந்த விதத்தில் உயர்வு ?

பணத்திற்காக , நம் வாழ் நாள் பூராவும் ஏதோ ஒரு அலுவலகத்தில் , யாருக்கோ,  எதையோ செய்து  கொண்டிருக்கிறோம். செய்யும் வேலையில் எவ்வளவு தூரம்   மனம் ஒன்றிச் செய்கிறோம்.

மனமும் உடலும் ஒன்றாகச் சேராத எந்த வேலையும் ஒரு விபச்சாரியின் வேலைதான்.

"தனி இடத்தை நாடி" - கூட்டம் மனதை சிதற அடிக்கும். மனதை ஒரு நிலை படுத்த  உதவாது. எனவே, தனிமையை நாடி.

"மக்கள் கூட்டத்தில் இன்பம் கொள்ளாமல்" - ஜனக் கூட்டம் நம்மை ஒவ்வொரு பக்கம்  இழுக்கும். பிள்ளைகள் ஒரு பக்கம், மனைவி/கணவன் ஒரு பக்கம்,  நண்பர்கள் ஒரு பக்கம், உறவு ஒரு பக்கம் என்று நம்மை நாலா பக்கங்களிலும்  இழுத்து அலைகழிக்கும்.

உண்மையைத் தேட வேண்டும் என்றால் இந்த அலைவுகளில் இருந்து விடுபடவேண்டும்.

எனவே மக்கள் கூட்டத்தில் இன்பம் கொள்ளாமல்.

அதற்காக காட்டுப்  போ  என்று சொல்லவில்லை.

மக்களை கண்டு  ஓடி விடு என்று சொல்லவில்லை.

மக்களைத் தேடி நீ ஓடாதே. அவர்கள் வந்தால் மகிழாதே. வரவில்லை என்றால்  துக்கம் கொள்ளாதே.

கூட்டத்தில் பெரிய இன்பம் இல்லை என்று சொல்கிறது கீதை.

அதில் இன்பம் என்று நினைத்தால் அதன் பின்னே மனம் போகும். பின் உண்மையை எங்கே  தேடுவது ?

எவ்வளவு ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் ?

என் சிற்றறிவுக்கு எட்டியது இவ்வளவுதான். இதை ஆழ்ந்து சிந்தித்தால் இன்னும் பலப் பல  அர்த்தங்கள் புரிபடலாம்.

முயன்று பாருங்கள்.

Monday, June 15, 2015

கீதை - 13.9 - அதீதப் பற்றை விடு

கீதை - 13.9 - அதீதப் பற்றை விடு

असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु ।
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥१३- ९॥

அஸக்திரநபி⁴ஷ்வங்க³: புத்ரதா³ரக்³ருஹாதி³ஷு |
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு || 13- 9||


அஸக்தி = பற்று இல்லாமல்


அநபி⁴ஷ்வங்க³ = தன்னுடைது என்று கருதாமல்

புத்ர = புதல்வர்களையும்

தா³ர = மனைவியையும்

க்ருஹாதி³ஷு  = வீட்டினையும்

நித்யம் = எப்போதும்

 ச = மேலும்
 ஸமசித்தத்ம் = சம சித்தத்துடன்

இஷ்டா = விரும்பியது

நிஷ்டோப = விரும்பாதது

பத்திஷு = அடையும்போது

பற்றுதல் இன்றி, 
மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடையது என்று கருதாமல் 
விரும்பியதோ, விரும்பாததோ எது வந்தாலும் சம சித்தத்துடன்.

இன்பம் வேண்டும் என்று அனைத்து உயிர்களும் விரும்புகின்றன.

ஆனாலும் துன்பம் கூடவே வருகிறது .

துன்பத்தை யார் கேட்டார்கள்?

யாரும் கேட்காமல் இருக்கும்போது துன்பம் ஏன் வருகிறது. எல்லோரும் கேட்கும்போதும்  இன்பம் ஏன் வர மறுக்கிறது. அப்படியே வந்தாலும் கொஞ்ச நாள் இருந்து விட்டு ஓடி விடுகிறதே ஏன் ?

துன்பத்திற்கு காரணம் என்ன ?

வெளியில் உள்ள பொருள்கள், மனிதர்கள் ...இவைகள் தானே துன்பத்திற்கு காரணம் ? நாமே நமக்கு துன்பம் செய்து கொள்ள மாட்டோம் அல்லவா ? துன்பம் வெளியில் இருந்து வருகிறது என்று அறிய முடிகிறது.

எதெது துன்பம் தரும் ?

ஒவ்வொருத்தருக்கு , ஒவ்வொன்று துன்பம் தரும்.

சற்று ஆழ்ந்து யோசித்தால் துன்பம் அந்த பொருள்களிலோ , மனிதர்களிலோ அல்ல, அவற்றோடு நமக்கு இருக்கும் தொடர்பால் துன்பம் வருகிறது என்று புரியும்.

எப்படி என்று பார்ப்போம்....

இனிப்பு துன்பமா ? லட்டு துன்பமா ? இல்லை. நாம் அதை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது , அது துன்பம் தருகிறது. அளவோடு இருந்தால் துன்பம் இல்லை.  எப்போது இனிப்பை உண்ணக் கூடாதோ, அப்போது அதை உண்டால் துன்பம் வருகிறது.

மனைவி, மக்கள், வீடு, வாசல் - இவற்றோடு அளவுக்கு அதிகமான பற்று இருந்தால் துன்பம் வருகிறது.

பற்றே வேண்டாம் என்று சொல்லவில்லை. 

அநபிஷ்வங்க என்றால் அளவுக்கு அதிகமான பற்று.

நமக்கு வெளியில் இருப்பவை அவைகளுக்கு என்று ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்பு, என்பவை கொண்டிருக்கும். நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவை நூற்றுக்கு நூறு நம்மோடு ஒத்து போகாது.

நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறார்களே
என்னை புரிந்து கொள்ளவில்லையே
எனக்கு மரியாதை இல்லையே

என்று வருந்துவதில் பலன் இல்லை.

அவர்கள் நம்மில் இருந்து தனிப்பட்டவர்கள். அவர்கள் அல்லது அவைகள் மேல் அளவுக்கு அதிகமான பற்று  வைப்பது துன்பம் தரும்.

இவற்றின் மேல் மிதமான பற்று ஒரு க்ஷேத்ரஞனுக்கு தேவை.

இவற்றின் மேல் அளவு கடந்த பற்று இருந்தால்  உண்மை (க்ஷேத்ரம்) எது என்று அறிய முடியாது .

ஒன்று, இதற்கே நேரம் சரியாகப் போய் விடும்.

இரண்டாவது, இந்த பற்று அறிவை மயக்கும்.

விட்டு விடுதலையாகி நிற்போம், அந்த சிட்டுக் குருவியைப் போல....

பற்று குறையும்போது அறிவில் தெளிவு பிறக்கும்.

சரி, அறிவு தெளிந்த பின் என்ன செய்வது ?

அடுத்து அதைப் பற்றி கண்ணன் சொல்கிறான்.






Sunday, June 14, 2015

கீதை - 13.8 - அறிபவனின் தன்மை - தொடர்ச்சி

கீதை - 13.8 - அறிபவனின் தன்மை - தொடர்ச்சி 



इन्द्रियार्थेषु वैराग्यमनहंकार एव च ।
जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥१३- ८॥

இந்த்³ரியார்தே²ஷு வைராக்³யமநஹங்கார ஏவ ச |
ஜந்மம்ருத்யுஜராவ்யாதி⁴து³:க²தோ³ஷாநுத³ர்ஸ²நம் || 13- 8||

இந்த்ரியார்தேஷு = புலன் இன்பங்களில்

வைராக்யம் = விருப்பம் இன்மை

அநஹங்கார  = அஹங்காரம் இன்றி

ஏவ ச = மேலும் உறுதியாக

ஜந்ம = பிறப்பு 

ம்ருத்யு = இறப்பு

ஜராவ்யாதி⁴ = நரை, மூப்பு

துக தோ ஷா = துக்கம் தோஷம்

நுதர்ஸநம் = இவற்றைப் பற்றிய தெளிந்த பார்வை , அல்லது இணைந்த பார்வை

புலன் இன்பங்களில் விருப்பம் இல்லாமை ,  ஆணவம் இல்லாமல், , பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றைப் பற்றிய இணைந்த பார்வை 

வைராக்கியம் (புலன் இன்பங்களில் விருப்பம் இன்மை)....புலன் தரும் இன்பங்களில் விருப்பம் இல்லாவிட்டால் வாழ்வு சுவைக்குமா ? இன்பமில்லாத  வாழ்வில் என்ன சுகம் இருக்கும். கல்லும், மரக் கட்டையும் போல வாழ வேண்டுமா ? இது தான் கீதை காட்டும் வாழ்வா ?

இல்லை.

புலன் தரும் இன்பங்களை அனுபவிக்க  வேண்டாம் என்று சொல்லவில்லை கீதை. அதை சார்ந்து இருக்காதே என்கிறது. அது இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்று  சோர்ந்து போய் விடாதே. அது தான் வேண்டும் என்று தவிக்காதே.  அது வேண்டும் என்று அதை துரத்திக் கொண்டு போகாதே. அதே எண்ணமாக இருக்காதே என்று சொல்கிறது.

இரண்டாவது, அஹங்காரம் இன்றி. நான் / எனது என்ற எண்ணம் எப்படி வருகிறது ? நமக்கு மற்றவற்றின் தொடர்பால் இந்த எண்ணம் வருகிறது. என் வீடு, என் மனைவி, என் சொத்து, நான் கட்டியே வீடு, நான் உருவாக்கிய நிறுவனம் என்று மற்றவற்றின் தொடர்பால் நான் / எனது என்ற எண்ணம் உருவாகிறது.

புலன் தரும் இன்பங்களை விடும் போது , அந்த இன்பங்களைத் தரும் பொருள் மற்றும் மனிதர்கள் மேல் உள்ள பற்றும் விடும்.

இருக்கும் போது , கிடைக்கும் போது இன்பம். இல்லை என்றால் துக்கம் இல்லை. ஐயோ, அது இல்லையே, என் கையை விட்டு போய் விட்டதே என்ற கவலை இல்லை.

பிறப்பு, இறப்பு, நரை, மூப்பு இதைப் பற்றிய இணைந்த எண்ணம். பிறப்பும், இறப்பும், மூப்பும்,  நரையும்,துன்பம் தருவன.  நாம் இவை துன்பம் என்றே அறிவது இல்லை. நரை வந்தால் அதை சாயம் போட்டு மறைத்து விடுகிறோம். அப்படி செய்தால் ஏதோ வயது குறைந்து விட்டதைப் போல ஒரு எண்ணம். மூப்பை தள்ளி  வைத்து விட்டதை போன்ற எண்ணம்.

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

மரணம் உண்டு என்று அறிந்தாலும், அது இப்போது நிகழாது என்று எல்லோரும் எண்ணுகிறார்கள். மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்று நினைத்தால் இத்தனை சண்டை, சச்சரவு, கோபம், தாபம், ஆணவம் இவை  வருமா ? ஒவ்வொரு நாளும் மிக மிக இனிமையாகக் கழியும். இருக்கும் கொஞ்ச நாளை சந்தோஷமாக கழிக்க வேண்டுமா , துக்கத்திலும் பயத்திலும் கழிக்க வேண்டுமா ?

பிறப்பு, மூப்பு, மரணம் இவற்றைப் பற்றிய ஆரோக்கியமான சிந்தனை நம்மிடம் கிடையாது.

மூப்பை வெறுக்கிறோம்.

மரணம் பற்றி சிந்திப்பதை தவிர்க்கிறோம்.

இவை ஒரு நல்ல கண்ணோட்டம் இல்லை.

இவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள்.

மரணம் இல்லை என்றால் வாழ்கையும் இல்லை.

இது முடியக் கூடியது என்று நினைத்தால் வாழ்க்கையின் மேல் தீராக் காதல் பிறக்கும். நாளை நாளை என்று வாழ்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே போக மாட்டோம்.

இன்றிலிருந்து வாழத் தொடங்குவோம்.

அறிபவனுக்கு இந்த   சிந்தனைத் தெளிவு வண்டும்.

சிந்தியுங்கள். உங்கள் வாழ்வும் இனிமையாக மாறும்.

கீதை படிப்பதில் உள்ள நனமைகளில் இதுவும் ஒன்று.





Wednesday, June 10, 2015

கீதை - 13.7 - அறிபவனின் குணங்கள்

கீதை - 13.7 - அறிபவனின் குணங்கள் 


अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् ।
आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः ॥१३- ७॥

அமாநித்வமத³ம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் |
ஆசார்யோபாஸநம் ஸௌ²சம் ஸ்தை²ர்யமாத்மவிநிக்³ரஹ: || 13- 7||

அமாநித்வம் = கர்வமின்மை  

அதம்பித்வம்  = தற்பெருமை இன்மை 

அஹிம்ஸா = துன்பம் செய்யாமை 

க்ஷாந்தி = பொறுமை

அரார்ஜவம் = எளிமை, நேர்மை  
ஆசார்யோபாஸநம் = ஆசாரியனை வழிபடுதல் 

ஸௌசம் = தூய்மை 

ஸ்தைர்யம் = உறுதி 

ஆத்மவிநிக்³ரஹ = சுய கட்டுப்பாடு 

கர்வமின்மை, தற்பெருமை இன்மை , பிறருக்கு துன்பம் செய்யாமை , பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, சுய கட்டுப்பாடு 

துன்பம் எதனால் வருகிறது ? வந்த துன்பத்தை எப்படி போக்கிக் கொள்வது ?

அறிவு துன்பத்தில் இருந்து நம்மை காக்கும். வரும் துன்பத்தை தடுத்து நிறுத்தும். வந்த துன்பத்தை போக்க  வழி காணும். 

அந்த அறிவை அடைய ஒருவன் என்ன செய்ய வேண்டும் ? அறிபவன் (க்ஷேத்ரஞன்) எப்படி இருக்க வேண்டும் என்று  கண்ணன் பட்டியல் தருகிறான். 

கர்வமின்மை - ஆணவம் அறிவை மயக்கும். நான் பெரியவன், என்னால் எல்லாம் முடியும், நான் தவறு செய்ய மாட்டேன், நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் என்ற ஆணவம் அறிவை மயக்கும். தவறான வழியில் இட்டுச் செல்லும். ஆணவத்தால் அழிந்தவர்களின் கதைகள் ஏராளம். இராவணன், துரியோதனன், சூரபத்மன், என்ற பட்டியல் மிக நீளமானது. என்னைப் போல திறமையானார்கள் யாரும் இல்லை என்று நினைக்கும் போது , பதவி உயர்வு வரவில்லை என்றால்  வருத்தம் வருகிறது. ஆணவம் துன்பத்திற்குக் காரணம். ஒன்றைப் பற்றி தெளிவாக  அறிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் ஆணவத்தை நீக்க வேண்டும். இது, அறிபவனின் முதல் குணம். 

தற்பெருமை இன்மை - இது ஆணவத்தின் இன்னொரு வெளிப்பாடு. தன் பெருமையை தானே சொல்லிக் கொள்வது. இது அறிவின் தெளிவை கெடுக்கும். தன்னைச் சார்ந்தே அனைத்தையும் பார்க்கச்  சொல்லும். உலகம் தன்னைச் சுற்றியே இயங்க வேண்டும் என்று நினைக்கும். தற்பெருமை போனால்  அறிவின் தெளிவு பிறக்கும். தெளிந்த அறிவு உண்மையை விளக்கும். 

துன்பம் செய்யாமை - பிறருக்கு துன்பம் செய்வதில் இன்பம் இருப்பதால் அதைச் செய்கிறோம். தான் இன்பமாக இருக்க பிறருக்கு துன்பம் செய்யக் கூடாது. பிறருக்கு துன்பம் செய்யும் போது , கூடவே பயம் பிறக்கும். ஒரு நாள் மற்றவன் நமக்குத் துன்பம் செய்வானோ என்ற  பயம் வரும். அது அறிவை மயக்கும். 

பொறுமை - அறிவுள்ளவன் அவசரப் படமாட்டான். பதட்டம் தவறான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். உலகை சரி வர புரிந்து கொள்ள உதவாது. பொறுமையும் அமைதியும் முக்கியம். அறிபவனின் குணங்களில் இதுவும் ஒன்று. 

எளிமை, நேர்மை - மனம், வாக்கு, காயம் இவை ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றையே செய்ய வேண்டும். மனம் ஒன்றை நினைக்க , நா ஒன்றைச் சொல்ல, உடல் வேறு ஒன்றை செய்து கொண்டிருந்தால்  மனமும் அறிவும் உடலும் பிரிந்து , சிதைந்து போய் விடும். இப்படி கூறு பட்ட ஒன்றால் உண்மையை அறிய முடியாது. எல்லாம் சேர்ந்து இருப்பதே நேர்மை எனப்படுவது. நமக்கு ஒரு ஞாயம், பிறருக்கு ஒரு ஞாயம் என்று வைத்து இருக்கிறோம். மனம் ஒன்றைச் சொல்கிறது. அறிவு இன்னொன்றைச் சொல்கிறது. உடல் மூன்றாவது ஒன்றைச் செய்கிறது. இது அறிவைப் பெரும் வழியா ?

ஆசிரியனை வழிபடுதல் - சொல்லித் தரும் குருவை நம்பவேண்டும். வழிபாடு நம்பிக்கையின் உச்சம். ஆசிரியனை சந்தேகித்தால் அவன் சொல்லித் தருவதிலும் சந்தேகம் வரும். இவன் நமக்கு நல்லதைத்தான் சொல்கிறானா என்ற சந்தேகக் கண் கொண்டு பார்த்தால் அவன் சொல்லித் தருவதும் சரியா தவறா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். 

தூய்மை - உடையிலும், உணவிலும், சுற்றுப் புறத்திலும் குறிப்பாக மனத்திலும் தூய்மை வேண்டும். குப்பைக்கு மத்தியில் அறிவைப் பெற முடியாது. குப்பை என்று சொன்னால் கழிவுப் பொருள்கள் மட்டும் அல்ல, வேண்டாத அனைத்தையும் விலக்கி வைக்க வேண்டும். டிவி பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே படிப்பது என்பதெல்லாம் அறிவை பெறும் வழிகள் அல்ல. தூய்மை வேண்டும். 

உறுதி - அறிந்துகொள்வதில் உறுதி. புரியவில்லை என்றால் உடனே விட்டு விடக் கூடாது. விடா முயற்சி வேண்டும். ஒரு தடவைக்கு பத்து தடவை முயல வேண்டும். 

சுய கட்டுப்பாடு - புலனடக்கம் இல்லை என்றால் எதையும் அறிந்து கொள்ள முடியாது. 

இவையும் இன்னும் சிலவும் (மொத்தம் 24 குணங்களை ) அறிபவனின் குணங்கள் என்கிறான் கண்ணன். 

அதற்குப் பின், இந்த குணங்களை வைத்துக் கொண்டு எதை அறிவது என்பது பற்றியும் கூறுகிறான். 

மேலும் சிந்திப்போம். 

  



Tuesday, June 9, 2015

கீதை - 13.6 - எதெல்லாம் அறியப்படுவது ?

கீதை - 13.6 - எதெல்லாம் அறியப்படுவது ?


इच्छा द्वेषः सुखं दुःखं संघातश्चेतना धृतिः ।
एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ॥१३- ६॥

இச்சா² த்³வேஷ: ஸுக²ம் து³:க²ம் ஸங்கா⁴தஸ்²சேதநா த்⁴ருதி: |
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதா³ஹ்ருதம் || 13- 6||

இச்சா = ஆசை, வேட்கை

த்வேஷ: = பகைமை

ஸுகம்  = சுகம்

து:கம் = துக்கம்

ஸங்காத = உடல்

ஸ்சேதநா = நினைவு (Consciousness )

 த்⁴ருதி: = மன உறுதி

ஏதத் = இவை

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

ஸமாஸேந = சுருக்கமாக

ஸ விகார = மாற்றம் அடையக் கூடிய 

உதா ஹ்ருதம் = கூறினேன்

ஆசை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு,  உள்ளத்துறுதி, மற்றும் இவற்றின் வேறுபாடுகள் அனைத்தும் சேர்த்ததுதான் க்ஷேத்ரம் என்பதை உனக்கு சுருக்கமாக கூறினேன். 

முந்தைய ஸ்லோகத்தில் புலன்கள், மனம், அவைகளின் செயல் இவை க்ஷேத்ரம் என்று  பார்த்தோம்.

அவை மட்டும் அல்ல, மேலே சொல்லப் பட்ட ஆசை, பகை, இன்பம், துன்பம், உடல், உள்ளத்து உறுதி, இவையும் க்ஷேத்ரம் ஆகும்.

அது எப்படி நம் மனதுக்குள் இருக்கும்  ஆசை, பகை, இன்பம், துன்பம் எல்லாம்  க்ஷேத்ரம் ஆகும் ? க்ஷேத்ரம் என்றால் அறியப் படும் பொருள் என்று தானே பார்த்தோம்.

அறியப் படுவது (க்ஷேத்ரம்), அறிபவன் (க்ஷேத்ரஞன்) என்று தானே பார்த்தோம். அப்படி என்றால் ஆசை,பகை, இன்பம் , துன்பம் எல்லாம் அறிபவனில் அல்லவா  சேர வேண்டும். அது எப்படி அறியப் படுவதில் சேர்க்கலாம் ?

இங்க நாம் சற்று நிதானமாக ஆழமாக யோசிக்க வேண்டும்.

இந்த உலகை இரண்டாகப் பிரிப்போம்.

அறியப்படுவது, அறிவது என்ற இரண்டு கூறுகளாகப் பிரிப்போம்.

அறியப்படுவதில் (objects ) வெளியில் உள்ள பொருள்கள், மனிதர்கள், விலங்குகள், தட்பவெப்ப நிலை போன்றவை எளிதாய் அடங்கும்.

சிக்கல் எங்கு வருகிறது என்றால் நம்மில் இருக்கும் சில விஷயங்கள் அறியப்படுவதா ? அறிவதா என்று அறிந்து கொள்வதில் தான்.

நம் ஆசை, பகை, இன்பம், துன்பம் இவற்றை நம்மால் அறிய முடியுமா ? முடியும்தானே ? எதன் மேல் ஆசை, எது நமக்கு துன்பம் தருகிறது, எது நமக்கு இன்பம் தருகிறது,  யார் நமக்கு பகை, எது நமக்கு பகை என்று நம்மால் சொல்ல முடியும்தானே ?

அப்படி என்றால் அவை நம்மால் அறியப்படும் பொருள் தானே ?

இவை நான் அல்ல. இவை என்னால் அறியப்படும் பொருள்தான்.

நாம் ஆசைப் படும் பொருளும், நம் ஆசையும் இரண்டுமே நான் அல்ல. இவை இரண்டுமே எனக்கு  வெளியே உள்ள அறியப்படும் பொருள்கள்தான் (க்ஷேத்ரம்)

ஒரு பெண்ணின் மேல் ஆசை என்றால், அந்த பெண் வேறு, அவள் மேல் கொண்ட காதல் வேறு   என்று நாம் நினைக்கிறோம்.

அப்படி அல்ல என்கிறது கீதை.

அந்தப் பெண்ணும், அவள் மேல் கொண்ட காதலும் எனக்கு வெளியில் உள்ள இரண்டு  பொருள்கள். Two Objects .

நான் இரண்டையும் ஆராய முடியும்.

யார் அந்தப் பெண்,   அவளின் உயரம், நிறம், குரல் இனிமை, குணம் இவற்றை நான்  அறிந்து கொள்ள முடியும்.

அதே போல், ஏன் நான் அவள் மேல் ஆசை கொள்கிறேன், என் ஆசைக்கு காரணம்  என்ன என்றும் நான் ஆராய முடியும்.

சிக்கல் என்ன என்றால் நாம் இரண்டாவதைப் பற்றி  சிந்திப்பதே இல்லை.

நான் கொண்ட ஆசை நான் அல்ல. அது எனக்கு உள்ளே உள்ளதல்ல. அதையும் ஒரு  வெளியே உள்ள பொருள் போல என்னால் ஆராய முடியும். ஆராய வேண்டும்.

அப்படிப் பார்த்தால்  ஆசை, கோபம், காமம், பயம், வெட்கம் என்று நான் சார்ந்த அனைத்தயும்  வெளியே கொண்டுவந்து போட்டு ஆராய்ச்சி செய்யலாம்.

இவற்றை எல்லாம்  எடுத்து வெளியில் போட்டுவிட்டால் பின் அறியும் நான் யார் ? க்ஷேத்ரஞன் என்றால் யார் பின் ? அவனுடைய குணாதிசயம் என்ன ?

கண்ணன் அதை அடுத்து வரும் சுலோகங்களில் சொல்கிறான்.

சிந்திப்போம்.


Monday, June 8, 2015

கீதை - 13.5 - இந்த உலகம் எவ்வாறு உருவானது ?

கீதை - 13.5 - இந்த உலகம் எவ்வாறு உருவானது ? 


महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च ।
इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः ॥१३- ५॥

மஹாபூ⁴தாந்யஹங்காரோ பு³த்³தி⁴ரவ்யக்தமேவ ச |
இந்த்³ரியாணி த³ஸை²கம் ச பஞ்ச சேந்த்³ரியகோ³சரா: || 13- 5||

மஹா =  பெரிய அல்லது அடிப்படையான

பூதாந் = பூதங்கள் (elements )

அஹங்காரோ = "கர்" என்றால் சமஸ்க்ரிதத்தில் செய். கரோ செய்தல், செய்பவன். அஹங்காரோ செய்யும் நான். அல்லது, நான் என்ற எண்ணம். 

புத்தி = அறிவு 

அவ்யக்தம் = தெரியாத, புலனாகத, வெளிப்படாத 

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

இந்த்ரியாணி = புலன்கள்

தஸ = பத்து

ஏகம் = ஒன்று

ச = மேலும்

பஞ்ச = ஐந்து

சே= மேலும்

இந்த்³ரியகோ³சரா: = இந்திரியங்கள் செயல் படும் இடம். கர் என்றால் செய்தல். கோகர செய்யும் இடம்.

மகா பூதங்கள், அகங்காரம், புத்தி, அனுபவம் அல்லது வாசனை (அவ்யக்தம்), பதினோரு புலன்கள் , புலன்கள் வெளிப்படும் இடங்கள் ஐந்து. 

 நான்  என்பது என்ன ? நான் யார் ? நான் எவ்வாறு உருவாகிறேன் ? என்பது பற்றி மிக விரிவாக கண்ணன் சொல்ல ஆரம்பிக்கிறான்.

அறியப்படும் பொருள், அறியும் நான், அறியும் அறிவு இந்த மூன்றின் தன்மை பற்றி சொல்லத் தொடங்குகிறான்.

முதலில் க்ஷேத்ரம் அல்லது அறியப்படும் புற உலகம் எவ்வாறு உருவானது என்று விளக்குகிறான்.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், உலகம் நமக்கு வெளியே தனியே இயங்குகிறது என்று. நாம் இல்லாவிட்டாலும் இந்த உலகம் இருக்கும் என்று. எனக்கு முன்னால் இந்த உலகம் இருந்தது. எனக்குப் பிறகும் இந்த உலகம் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

அப்படி அல்ல. இந்த உலகமே நம்மை வைத்துத்தான் என்று என்கிறான் கண்ணன். அறியும் நான் இல்லை என்றால் இந்த உலகம் இல்லை.

இந்த உலகம் என்பது வெளியில் உள்ள பொருள்களும், மனிதர்களும் நம் அனுபவமும் சேர்ந்த ஒரு கலவைதான் இந்த உலகம்.

எப்படி என்று பார்ப்போம்.

க்ஷேத்ரம் அல்லது புற உலகம் எதனால் ஆனது ?

மகா பூதங்கள் = நீர், நெருப்பு, ஆகாயம், பூமி, வெளி (அல்லது ஆகாயம்) என்ற இந்த ஐந்து அடிப்படையான பொருள்களால் ஆனது. இவையும், இவற்றின் கலவையுமே இந்த உலகம். அது மட்டும் அல்ல

அஹங்காரம் = நான். இந்த உலகம் உருவாக "நான்" என்ற நானும் ஒரு காரணி.

புத்தி = எனது அறிவு

அவ்யகதம் = வெளிப்படாத, புலனாகாத ஒன்று. எது வெளிப்படாத, புலனாகாத ஒன்று ? நம் அனுபவம். இதை வாசனை என்று சொல்லுகிறார்கள். நமது சேர்த்து வைக்கப்பட்ட அனுவமும் இந்த உலகை உருவாக்க காரணமாக இருக்கிறது.

அழாகான மலைச் சாரல். பச்சை பசேல் என்று எங்கும் பசுமை. தூரத்தில் மேகம் கீழிறங்கி மலையை முத்தமிட்டுச் செல்வதை காண முடிகிறது. குளிர் எலும்பு வரை எட்டிப் பார்க்கிறது. சிலிர்கிறோம். அந்த மேகம் நம் அடி வயிற்றில் மிதப்பதைப் போல உணர்கிறோம். ஆனால், அந்த ஊரிலேயே இருக்கும் ஒருவன், அதைப் பற்றி ஒன்றும் கவலைப் படாமல் தன் வேலை, பிரச்சனை என்று ஓடிக் கொண்டிருக்கிறான். ஒரே வானம், ஒரே மலை, ஒரே மேகம் நமக்கு சிலிர்கிறது அவனுக்கு ஒன்றுமே செய்வது இல்லை. ஏன் ? அனுபவம். நாமே அந்த ஊரில் சில வருடங்கள் தங்கி இருந்தால் நமக்கும் சலிப்பு ஏற்படத்தான் செய்யும்.

இரதி போல இருந்த இராட்சசி போன்ற மனைவியாகத் தெரியக் காரணம் அனுபவம். எது உண்மை ? இரதியா ? இராட்சசியா ? இரண்டும்தான். உலகம் நம் அனுபவத்தால் மாறுபடுகிறது.

புலன்கள் = புலன்கள் உலகை மாற்றுகின்றன. பஞ்சு மெத்தை போன்ற ஆசனம் , மூல வியாதி நெருப்பாகத் தெரிகிறது. நம் புலன்கள் உலகை நமக்குத் தெரிவிகின்றன. புலன்களைத் தாண்டி நம்மால் உலகை புரிந்து கொள்ள முடியாது. கண் இல்லாதவனுக்கு நிறம் என்ற ஒன்றே இல்லை. அவன் உலகில் நிறம் இல்லை. நமக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. இவற்றைத் தாண்டி நமக்கு ஒன்றும் தெரியாது. குருடனுக்கு நான்கு புலன்கள் தான் இருக்கின்றன. ஆறாவது புலன் என்று ஒன்று இருந்தால் இந்த உலகம் நமக்கு வேறு மாதிரி இருக்கும். ஒரு வேளை வேற்று கிரகத்தில்  இருந்து ஒரு ஜீவராசி பத்து புலன்களோடு வந்தால், அந்த ஜீவராசி நம் உலகை வேறு மாதிரி அறியும். அது எப்படி அறிகிறது என்று நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. நாம் எப்படி  நிறங்களை அறிந்து கொள்கிறோம் என்று குருடனால் புரிந்து கொள்ள முடியாதோ அது போல.  எனவே, புலன்களைத் தாண்டி உலகம் இல்லை.

பத்து - அது என்ன பத்து - புலன்கள் ஐந்து, அவை அறியும் அறிவு பத்து.
கண்
காது
மூக்கு
நாக்கு
தோல்

என்ற ஐந்து புலன்கள்.

அவை அறியும்

வடிவம்
ஒலி
மணம்
சுவை
தொடு உணர்ச்சி

என்ற ஐந்தும் சேர்ந்து பத்து.

அது அல்லாமல்

கண், காது , மூக்கு, நாக்கு, தோல், கால், கை, சப்தம்  பிறப்புறுப்பு, ஆசன உறுப்பு என்று பத்து கணக்கு சொல்லுவார்கள்.

ஏகம் = ஒன்று. ஒன்று என்பது மனம். புலன்கள் செய்திகளை அனுப்பினாலும் அவற்றை அறிவு அறிந்து சொன்னாலும் அவற்றை அனுபவிப்பது மனம்தான்.

இவை அனைத்தும் சேர்ந்ததுதான் க்ஷேத்ரம் என்ற இந்த உலகம்.

இது மட்டும் அல்ல

மேலும் கண்ணன் சொல்கிறான்....

Saturday, June 6, 2015

கீதை - 13.4 - ரிஷிகளால் கூறப்பட்ட க்ஷேத்ரம்

கீதை - 13.4 - ரிஷிகளால் கூறப்பட்ட க்ஷேத்ரம்



ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ।
ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः ॥१३- ४॥

ருஷிபி⁴ர்ப³ஹுதா⁴ கீ³தம் ச²ந்தோ³பி⁴ர்விவிதை⁴: ப்ருத²க் |
ப்³ரஹ்மஸூத்ரபதை³ஸ்²சைவ ஹேதுமத்³பி⁴ர்விநிஸ்²சிதை: || 13- 4||

ருஷிபிர் = ரிஷிகளால் 

பஹுதா = பலவிதமாக

கீதம் = பாடப்பட்டது

சந்தோபிர் = வேதத்தில்

விவிதை = பலவேறாக

ப்ருத²க் = தனித் தனியாக

ப்ரஹ்ம ஸூத்ர பதை = ப்ரம்ம சூத்ரத்தில் விவரித்தபடி 

ஸ = மேலும்

எவ =நிச்சயமாக

ஹேதுமத்பிர் = காரண காரியங்களை ஆராய்ந்து சொன்னவர்களால்

விநிஸ்²சிதை = நிச்சயமாக்கப் பட்டது

இந்த க்ஷேத்ரமானது ரிஷிகளால் பலவிதமாக கூறப்பட்டுள்ளது. ப்ரம்ம சூத்ரத்தில் விவரிக்கப்பட்டது. வேதத்தில் கூறப்பட்டுள்ளது. காரண காரியங்களை ஆராய்ந்து தர்க சாஸ்த்திரத்தின் மூலம் நிச்சயமாக நிரூபிக்கப் பட்டது. 

நான் கடவுள். தான் திருமாலின் அவதாரம். எனவே, நான் சொல்வதை நீ கேள் என்று  கண்ணன் சொல்லவில்லை.

இன்னும் சொல்லப் போனால் கண்ணன் புதிதாக ஒன்றும்  சொல்லவில்லை.

வேதத்தில் கூறப் பட்டதை நான் சொல்கிறேன் என்கிறான்.

மேலும், இது ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள கோட்பாடு அல்ல.

ஆராய்ச்சி செய்து தர்க சாஸ்திரத்தின் மூலம் நிரூபிக்கப் பட்டது (logic ) என்கிறான் கண்ணன்.

இனி வரும் சுலோகங்களில் ஒரு ஆய்வு கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் மாணவனைப் போல  இவற்றை பிரித்து, விளக்குகிறான் கண்ணன்.

அதைப் பற்றி மேலும் சிந்திப்போம்.

  

Tuesday, June 2, 2015

கீதை - 13.3 - அறிவியலின் தொடக்கம்

கீதை - 13.3 - அறிவியலின் தொடக்கம் 


तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥१३- ३॥

தத்க்ஷேத்ரம் யச்ச யாத்³ருக்ச யத்³விகாரி யதஸ்²ச யத் |
ஸ ச யோ யத்ப்ரபா⁴வஸ்²ச தத்ஸமாஸேந மே ஸ்²ருணு || 13- 3||

தத் = அந்த

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

யச்ச =  எது?

யாத்³ருக்ச = எந்த வகைப்பட்டது

யத்விகாரி = எவ்வித மாற்றங்களைக் கொண்டது

யதஸ்²ச யத்  = எங்கிருந்து வந்தது

ஸ ச யோ = அவன் யார்

யத் ப்ரபாவஸ்ச = அவன் பிரபாவம் என்ன (பெருமை என்ன)

தத் = அவற்றை

ஸமாஸேந = சுருக்கமாக

மே = நான்

ஸ்ருணு = சொல்லக் கேள்


அந்த க்ஷேத்திரம் என்பது என்ன ? அது எந்த வகையானது ?  என்ன மாற்றங்களை உடையது ? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் என்பவன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லக் கேள். 


அறிவது எது ? அறியப்படுவது எது? அறியப்படும் பொருள் எப்படியெல்லாம் மாறும்? அறிபவன் யார் ? அவனுடைய குணங்கள் என்ன ? 

இவற்றைப் பற்றி நான் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கிறான் கண்ணன். 

அறிவதும் , அறியப்படுவதும் இரண்டும்  சேரும்போதுதான் அறிவு பிறக்கிறது. 

இவற்றைப் பற்றி கீதை விளக்குகிறது. 

என்ன என்று பார்ப்போம். 



Monday, June 1, 2015

கீதை - 13.2 - எது உண்மையான ஞானம் ?

கீதை - 13.2 - எது உண்மையான ஞானம் ?


क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥१३- २॥

க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்³தி⁴ ஸர்வக்ஷேத்ரேஷு பா⁴ரத |
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம || 13- 2||

க்ஷேத்ரஜ்ஞம் = க்ஷேத்ரம் பற்றிய ஞானம்

சா = மேலும்

அபி = அது அன்றியும்

மாம் = நான்

வித்தி = அறிவாய்

ஸர்வ க்ஷேத்ரேஷு = அனைத்து க்ஷேத்ரங்களிலும்

பாரத = பரத வம்சத்தவனே

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ  ஓர் = க்ஷேத்ரம் மற்றும் அதை அறிபவனும் 

ஜ்ஞாநம் = ஞானம்

யத் = அந்த

தஜ் = அது

ஜ்ஞாநம் = ஞானம்

மதம் = கொள்ளப்பட்டது

மம  = என்னால்

பாரதா, எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்று அறிவாய். . க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை  என்று அறியும் ஞானமே ஞானம் என்று நான் கொள்கிறேன் 

மேலை நாடுகளின் அறிவியல் பொருளும், அவற்றின் குணங்களையும் மட்டுமே  ஆராய்கிறது. பொருளை பிரித்து பிரித்து, அணு, அதையும் தாண்டி அதற்குள் இருக்கும்  அடிப்படை துகள்கள் (Fundamental Particles ) என்று போய்க் கொண்டே இருக்கிறது.

ஆன்மிகம் , பொருளை  அவ்வளாவாக கவலைப் படுவது இல்லை.   பொருளுக்கும், பொருளை அனுபவிக்கும் மனிதனுக்கும், அந்த அனுபவத்தையும்  ஒன்றாக அறிய முற்படுகிறது ஆன்மிகம்.

அறிவியலில் நாம் முன்னேறாமல் இருந்திருக்கலாம்.

நாம் அறிய முற்பட்டது மனிதனை, அவனின் அறிவை, அவனின் அனுபவத்தை...

இங்கே, வியாசர் கூறுகிறார்

எல்லா க்ஷேத்ரங்களிலும் உள்ள க்ஷேத்ரன்ஞன் நானே.

அனைத்து உயிர்களிலும் உள்ள அறியும் குணம் அல்லது அறிவு நானே என்கிறான்.

எனக்குள்ளே ஒரு அறிவு இருக்கிறது. நான் எப்படி எந்த உலகை பார்க்கிறேன், அறிகிறேன்,  உணர்கிறேன், புரிந்து கொள்கிறேன் என்பது என் அறிவு சார்ந்த விஷயம்.

அது போல உங்களுக்குள்ளும் அந்த அறிவு இருக்கிறது.

எனக்கும் உங்களுக்கும் மட்டும் அல்ல அனைத்து உயிர்களுக்குள்ளும் இந்த  அறிவு  இருக்கிறது.

அந்த அறிவு நானே என்கிறான்  கண்ணன்.

கண்ணன் என்ற  தனி மனிதனை விட்டு விடுவோம்.

எல்லா அறிவும் ஒன்றுதான் - அது கண்ணனாக இருக்கட்டும், அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

உங்களுக்குள்ளும், எனக்குள்ளும், அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும் ஞானம் ஒன்றுதான்  என்றால்  ஏன் ஒவ்வொருவரும் உலகை வேறு வேறு விதாமகப் பார்க்கிறோம் ?

மின்சாரம் ஒன்றுதான். அது எந்த விளக்கினுள் செல்கிறதோ அந்த விளக்கின் தன்மையைப் பொறுத்து  அதன் ஒளி மாறுகிறது. ஒரு விளக்கில் அது வெண்மையாக ஒளிர்கிறது. இன்னொன்றில் மஞ்சளாக ஜொலிக்கிறது.

அதே போல, மின்சாரம் ஒரு மோட்டாரில் செல்லும் போது அதை சுழல வைக்கிறது.  இன்னொரு இடத்தில் நீரை சூடு பண்ணுகிறது. இன்னொரு இடத்தில் நீரை  குளிரப் பண்ணுகிறது.

மின்சாரம் என்னவோ ஒன்றுதான். அது எதில் செல்லுகிறதோ, அதைப் பொறுத்து  அதன் வெளிப்பாடு மாறுகிறது.

வெளிப்பாடை மட்டும்  வைத்துக் கொண்டு பார்த்தால் இவை அனைத்திலும் இருப்பது  ஒரே சக்திதான் என்று நம்மால் அறிய முடியாது ?

சூட வைப்பதும், குளிர வைப்பதும், உயரே தூக்குவதும், தரைக்கு உள்ளே செல்வதும்,  ஒலி  தருவதும்,ஒளி தருவதும் எப்படி ஒன்றாக இருக்க   முடியும் என்றுதான்  நமக்குத் தோன்றும்.

மின்சாரத்தைப் பற்றி அறிந்தவன் நிச்சயமாக சொல்லுவான் இவை எல்லாமே  மின்சாரம் என்ற ஒரு சக்தியின் வெளிப்பாடு தான் என்று.

எல்லா உயிர்களிலும் இயங்குவது ஒரு சக்திதான்.

அந்த சக்தி எது, அது எப்படி  வெளிப்படுகிறது,என்பதை அறிவதுதான் உண்மையான அறிவு.

மேலும் சிந்திப்போம்.