Monday, February 11, 2019

பகவத் கீதை - 2.41 - நிச்சயமாக வெற்றி பெற

பகவத் கீதை - 2.41 - நிச்சயமாக வெற்றி பெற 


व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||



வ்யவஸாயாத்மிகா = உறுதியான

பு³த்³தி = புத்தி

ஏக  = ஒன்று

இஹ = இங்கே

குருநந்த³ந  = குரு குல தோன்றலே

ப³ஹுஸா²கா² = பல கிளைகளை

ஹி = அதனால்

அநந்த = அநேக

சா = மேலும்

பு³த்³த⁴யோ = புத்தி

அவ்யவஸாயிநாம் = மன உறுதி இல்லாதவர்கள்


குரு குல தோன்றலே, உறுதியான புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதவரின் புத்தி பல கிளைகளை கொண்டது 

கர்ம யோகம் பற்றி கூற ஆரம்பிக்கிறான் கண்ணன்.

முதல் பந்திலேயே சிக்ஸர் .

நாம் வெற்றி பெற்றவர்களை பார்க்கிறோம். தொழிலில், விளையாட்டில், படிப்பில், பாட்டில், வேலையில் என்று எதிலும் வெற்றி பெற்றவர்களை பார்க்கிறோம். அவர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம். அவர்கள் உள்ள துறையில் நாமும் இறங்குகிறோம்.

நம்மால் அந்த அளவு வெற்றி பெற முடிவதில்லை. ஏன் ?

மன உறுதி கிடையாது.

படிக்க உட்காரும் போதே, இதை படிக்கவா, அதை படிக்கவா, இப்போது படிக்கவா, அப்புறம் படிக்கவா, இதை படித்து என்ன ஆகப் போகிறது, போன வருடம் இதில் கேள்வி கேட்டு விட்டார்கள், இந்த வருடம் இதில் வராது என்று ஆயிரம் சிந்தனை. இதற்கிடையில் , வாட்ஸாப்பில் பத்து செய்தி வரும். அவற்றிற்கு பதில் போட வேண்டும். நடுவில் கிரிக்கெட் ஸ்கோர் தெரிய வேண்டும். வீடியோ கேம் பாதியில் நிற்கும்....இப்படி மனம் ஆயிரம் வழிகளில் செல்லும். எப்படி படிப்பு மண்டையில் ஏறும்.

படிப்பு ஒரு உதாரணம்.

வேலையில் இப்படித்தான். ஒரு வேலையை எடுத்தால், நடுவில் நாலு போன் கால், பத்து மெயில், ஒரு வேலை பார்க்கும் போதே இன்னொன்றைப் பற்றிய எண்ணம்.

ஒரு வேலையை எடுத்தால், அதை முடிக்கும் வரை வேறு எதையும் பற்றி சிந்திக்கக் கூடாது. அதை முடித்து விட்டு அடுத்த காரியம் பார்க்க போக வேண்டும்.

பத்து வேலையை ஒன்றாக செய்ய நினைக்கும் போது ஒரு பதட்டம் வரும். மனம் சிதறும். உடம்பு பதறும். செய்யும் வேலை கெட்டுப் போகும்.

நிறுத்தி நிதானமாக, எடுத்த வேலையை சரியாக செய்து முடித்தால்...மனதுக்கு ஒரு திருப்தி இருக்கும். நாம் செய்து முடித்தோம் என்ற சந்தோஷம் இருக்கும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வரும். அந்த தன்னம்பிக்கை மேலும் செயல் படத் தூண்டும். மேலும் வெற்றிகளை கொண்டு தரும்.

வெற்றியின் முதல் படி, மன உறுதி.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியராகப் பெறின்

என்பார் வள்ளுவ பேராசான்.

திண்ணியர் என்றால் திண்மை உள்ளவர். மனதில் உறுதி உள்ளவர்.

"மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் "  என்பான் பாரதி.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

என்பதும் வள்ளுவம்.

உலைவின்றி, மன சோர்வின்றி...மன உறுதியுடன் செயல்பட்டால் விதியையும் மாற்றலாம்  என்கிறார் வள்ளுவர்.

கோவிலுக்குப் போனால் வீட்டு ஞாபகம். வீட்டில் இருந்தால் அலுவலக ஞாபகம். அலுவலகத்தில் வீட்டு ஞாபகம். மனம் எதிலும் இலயிக்காமல் சிதறிக் கொண்டே இருக்கிறது.

ஓடும் மீன் ஓட , உறு மீன் வரும் அளவும் வாடி நிற்குமாம் கொக்கு

என்பது போல செய்யும் வேலையில் , கர்மத்தில் மன உறுதி வேண்டும்.

சிந்தித்து முடிவு எடுங்கள்.

முடிவு எடுத்த பின், உறுதியாக நடை போடுங்கள். ஒன்றை முடித்த பின் அடுத்ததை எடுங்கள்.

வெற்றி நிச்சயம்.

இது கீதை காட்டும் வழி.

https://bhagavatgita.blogspot.com/2019/02/241.html