கீதை - 11.7 - எதை பார்க்க வேண்டும் என்றாலும் இங்கே பார்
इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम् ।
मम देहे गुडाकेश यच्चान्यद् द्रष्टुमिच्छसि ॥११- ७॥
இஹைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் பஸ்²யாத்³ய ஸசராசரம் |
மம தே³ஹே கு³டா³கேஸ² யச்சாந்யத்³ த்³ரஷ்டுமிச்ச²ஸி || 11- 7||
இஹை = இங்கே
எகஸ்தம் = ஓரிடத்தில் (ஏக = ஒன்று; ஸ்த = ஸ்தானம், இடம் )
ஜக³த் = உலகம்
க்ருத்ஸ்நம் = முழுவதும்
பஸ்யா = நீ பார்
த்ய = இன்றே, இப்போதே
ஸசராசரம் = ச + சர + அசர = அனைத்து அசையும் மற்றும் அசையாதனவற்றின்
மம = என்
தேஹே = உடலில்
குடாகேஸ = கேசம் என்றால் முடி. குடா கேச என்றால் அடர்ந்த முடி உள்ளவன். அர்ஜுனன்
யச் = அது , எதுவோ
ச = மேலும்
அந்யத் = மற்றவை
த்ரஷ்டு = நீ பார்
இச்சஸி = நீ விரும்பியபடி
அனைத்து உலகங்களும் ஒன்றாக என் உடலில் இருப்பதைப் பார். அது மட்டும் அல்ல, நீ வேறு எதையெல்லாம் காண விரும்புகிறாயோ, அவை அனைத்தையும் நீ காணலாம்.
மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே வியாசர் சொல்கிறார்.
இறைவன் என்பது என்ன ?
இறைவன் என்பது அனைத்தின் தொகுதி.
இறைவன் என்பது ஒரு தனி மனிதன் அல்ல. இந்த பிரபஞ்சம் அனைத்தின் மொத்த தொகுதிதான் இறை என்பது.
The Existence is Godliness.
மனித மனம் எதையும் பிரித்துப் பார்த்துதான் புரிந்து கொள்ள முயல்கிறது.
சேர்த்துப் பார்க்க பழகவில்லை.
பூவில் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாகப் பிய்த்து பார்த்தால் அழகு எங்கும் இருக்காது. அழகு என்பது அனைத்தும் சேர்ந்த ஒன்றில் இருக்கிறது.
ஒரு தனி மனிதன் இருக்கிறான். அது ஒன்றும் அவ்வளவு சுவாரசியமான ஒன்று அல்ல.
அவன் திருமணம் செய்து கொள்கிறான். ஒரு பெண் அவன் வாழ்வில் வருகிறாள். வாழ்வில் சுவை கூடுகிறது.
பின் குழந்தைகள் வருகின்றன. வாழ்வு மேலும் அர்த்தப் படுகிறது.
பின் குழந்தைகள் திருமணம் செய்து கொள்கின்றன. மருமகனோ, மருமகளோ வருகிறார்கள். குடும்பம் பெரிதாகிறது. மேலும் அர்த்தப் படுகிறது.
குடும்பங்கள் சேர்ந்து சமுதாயம் உண்டாகிறது. சமுதாயங்கள் சேர்ந்து ஊர் உண்டாகிறது. ஊர் கூடி நாடு உண்டாகிறது. நாடுகள் கூடி உலகம் உண்டாகிறது. இப்படி பெரிதாக பெரிதாக அர்த்தம் விரிந்து கொண்டே போகிறது.
எல்லாவற்றின் மிகப் பெரிய தொகுதிதான் இறைவன்.
அவ்வளவு பெரிய ஒன்றை நம்மால் எளிதாக அறிந்து கொள்ள முடியாது.
எனவே, சின்ன ஒன்றில் இருந்து ஆரம்பித்து பெரிதான ஒன்றுக்கு போகிறோம்.
பிள்ளையார் சதுர்த்தியின் போது களிமண் பிள்ளையாரை வணங்குகிறோம்.பின் அதை கொண்டு போய் கடலில் போட்டு விடுகிறோம் . ஏன் கடலில் போட வேண்டும் ? அது கடவுளை அவமரியாதை செய்வது போல் இல்லையா ?
இல்லை.
அதன் தத்துவம் என்ன என்றால், ஒரு களிமண் உருவத்தில் அடைபட்டு இருந்த இறை தன்மை இப்போது பிரமாண்டமான கடலில் கலந்து விட்டது.
கடலைப் பார்க்கும் போது அந்த களிமண் பிள்ளையார் மனதில் வருவார்.
நாளடைவில் அந்த பிள்ளையார் சிலை மறந்து போகும் கடல் மட்டும் நிற்கும்.
அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒன்றை காண்பதுதான் விஸ்வரூபம்.
கண்ணனின் அந்த உருவத்தில் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் அர்ஜுனன் தனக்கு வேண்டியதை மட்டும் தேடுகிறான். எனவே கண்ணன் சொல்கிறான் "நீ எதை காண விரும்புகிறாயோ அதைக் காணலாம் " என்கிறான்.
இறைவன் என்பவன் அனைத்தின் தொகுதி. ஆனால், நாம் அதை பிரித்து நமக்கு வேண்டியதை மட்டும் பார்க்கிறோம். அது தான் உண்மை, இறைவன் என்று சாதிக்கிறோம்.மற்றதும் இருக்கிறது. எங்கே பார்க்கிறோம்.
நான் கண்டது மட்டும் தான் உண்மை என்று அடம் பிடிக்கிறோம்....குருடர்கள் கண்ட யானை போல.
உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள். உங்கள் கலர் கண்ணாடிகளை தூக்கி எறியுங்கள்.
ஒன்றுபட்ட உலகம் தெரியும்.
மதங்களை கடந்து, ஜாதிகளை கடந்து, நாடு, இனம் , மொழி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்ட காட்சி தெரியும்.
அதுவே விஸ்வரூபம்.
No comments:
Post a Comment