Tuesday, May 27, 2014

கீதை - 10.18 - அமிர்தம் போன்ற சொற்கள்

கீதை - 10.18 - அமிர்தம் போன்ற சொற்கள் 


विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन ।
भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेऽमृतम् ॥१०- १८॥

விஸ்தரேணாத்மநோ யோக³ம் விபூ⁴திம் ச ஜநார்த³ந |
பூ⁴ய: கத²ய த்ருப்திர்ஹி ஸ்²ருண்வதோ நாஸ்தி மேऽம்ருதம் || 10- 18||


விஸ்தரேணாத்மநோ =  விஸ்தரே +ஆ த்மநோ = விஸ்தாரமாக, விரிவாக ஆத்ம 

யோக³ம் = யோகத்தை

விபூ⁴திம் = பெருமைகளை

ச = மேலும்

ஜநார்த³ந  = ஜனார்த்தனா

பூ⁴ய:  = மீண்டும்

கத²ய = கதையை

த்ருப்தி = திருப்தி 

ஹி  = மேலும்

ஸ்²ருண்வதோ = சொற்களை

நாஸ்தி = இல்லை

மே = எனக்கு

அம்ருதம் = அமிர்தம் போன்ற || 10- 18||


ஜனார்த்தனா,  உன் யோகத்தையும் பெருமையையும் விரிவாக மீண்டும் ஒருமுறை சொல். அமிர்தம் போன்ற உன் சொற்கள் எனக்கு தெவிட்டுவதே இல்லை 


வேதங்கள், உபநிஷத்துகள், கீதை போன்ற உயர்ந்த தத்துவங்களை கூறும் நூல்களை  படித்தாலோ அல்லது மற்றவர்கள் சொல்லக் கேட்டாலோ கொஞ்ச நேரத்தில்  சலிப்பு ஏற்படுவது உண்டு.  இவை எல்லாம் நடை முறை சாத்தியங்கள்   இல்லாதவை என்று ஒதுக்கி தள்ளி விட்டு வேலையைப் பார்க்கப்  போய் விடுவோம்.

இங்கே, அர்ஜுனன் சொல்கிறான், "அமிர்தம் போன்ற உன் சொற்கள் எனக்கு தெவிட்டுவதே இல்லை " என்று. அந்த ஆர்வம் இல்லை இல்லை என்றால் இவற்றை  அறிந்து கொள்ள முடியாது.

  "இன்னும் விரிவாகச் சொல்" என்கிறான்.

கண்ணனும் பொறுமையாக மீண்டும் சொல்ல ஆரம்பிக்கிறான்.


Sunday, May 25, 2014

கீதை - 10.16 - அறிவின் மூலம் உண்மையை அறிந்து கொள்ள முடியுமா?

கீதை - 10.16 - அறிவின் மூலம் உண்மையை அறிந்து கொள்ள முடியுமா ?


वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतयः ।
याभिर्विभूतिभिर्लोकानिमांस्त्वं व्याप्य तिष्ठसि ॥१०- १६॥

வக்துமர்ஹஸ்யஸே²ஷேண தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
யாபி⁴ர்விபூ⁴திபி⁴ர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்ட²ஸி || 10- 16||


வக்தும் = சொல்ல 
அர்ஹஸ் = உன் பெருமைகளை
அஸேஷேண = முழுவதும்
திவ்யா = தெய்வீக
ஹி = நிச்சயமாக
ஆத்ம = உன்
விபூ⁴தய:  = மகிமைகளை 
யாபி = எதனால்
விபூ⁴திபி = மகிமைகள்
லோகான் = அனைத்து உலகங்களும் 
இமாம் = இந்த
ஸ்த்வம் = நீ
வ்யாப்ய = சூழுந்து
திஷ்ட²ஸி = இருக்கிறாயோ

இந்த மகிமையால் இந்த உலகனைத்தும் நீ சூழ்ந்து இருக்கிறாயோ, அந்த பெருமைகளை நீ எனக்கு மிச்சமின்றி சொல்ல வேண்டுகிறேன். 

நம்பிக்கைக்கும் அறிவுக்கும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

அறிவு அனைத்தையும் பகுத்துப் பார்க்க முயல்கிறது. எதையும் சரி பார்க்க விரும்புகிறது. எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறது.

நம்பிக்கை எதையும் ஆராய்வது  இல்லை.அது நம்புகிறது. அவ்வளவுதான். 

இருந்தும் அறிவு விடுவது இல்லை. கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது. 

கண்ணன் சொல்கிறான் அனைத்து உலகுக்கும் ஆதாரம் நான்  தான் என்று. மனம் நம்பினாலும் அறிவு ஏற்க  மறுக்கிறது.

கடவுளே நேரில் வந்து நான் தான் கடவுள் என்று சொன்னாலும் அறிவு ஏற்க மறுக்கிறது. 

மீண்டும் அர்ஜுனன் கேட்க்கிறான், உன் பெருமைகளை நீ எனக்கு மிச்சமின்றி சொல் என்று. 

நீ எனக்கு உணர்த்து என்கிறான். அப்படி என்றால் இதுவரை சொன்னதை அவன் புரிந்து  கொள்ளவில்லை. சந்தேகம் இருக்கிறது. இதில் ஏதோ இன்னும்  இருக்கும் போல  இருக்கே.ஏதோ  குறைகிறதே.மீதியையும் சொல் கண்ணா என்று அவனிடமே கேட்க்கிறான்.

எவ்வளவு மிச்சம் என்று எப்படித் தெரியும் ? இது அறிவின் செயல். எப்போதும் முழுமை  காணாது. ஒன்றைச் சொன்னால் அதில் இருந்து ஆயிரம் மேல் கேள்விகள்  கேட்க்கும். கேள்வி கேட்பதும், சந்தேகப் படுவதுமே  அதன் வேலை. 

அறிவு என்றுமே நிறைவு காணாது. அதனால் உண்மையை ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது. அது தேடிக் கொண்டே இருக்கும். 

இறைவனே நேரில் வந்து நான் தான் கடவுள் என்று சொன்னாலும்,  
நம்பாது.

அறிவின் மூலம் உண்மையை அறிந்து கொள்ள முடியுமா ? முடியாது என்றே தோன்றுகிறது. 





Saturday, May 24, 2014

கீதை - ஒரு இடை நிரவல் (interlude )

கீதை - ஒரு இடை நிரவல் (interlude )


இதுவரை கீதையில் பாதி வரை வந்து விட்டோம்.

கீதை என்ன தான் சொல்ல வருகிறது ? கீதையின் நோக்கம் என்ன ? அது எந்த மாதிரி நூல் ? - அற நூலா ? நீதி நூலா ? தத்துவ நூலா ? சமய நூலா ?

கீதைக்கு பல பேர் உரை எழுதி இருக்கிறார்கள். ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு மாதிரி  இருக்கிறது.ஒன்றுகொன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறது. இப்படி வேறு பட்ட உரைகள் எப்படி ஒரே சுலோகத்திற்கு இருக்க முடியும் ?

கீதையின் பல உரைகளைப் வாசித்த பின், கீதை பற்றி மற்றவர்கள் எழுதியதை வாசித்த பின் எனக்கு தோன்றும் சில விஷயங்களை இங்கே தருகிறேன்:

1. கீதை எழுதப்பட்ட காலம். இது மிக மிக சரியாகத் தெரியவில்லை. தோராயமாக கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுக்கு முன்னால் எழுதப்படிருக்கலாம் என்று கருதுகிறார்கள். இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தையது.

2. கீதை எழுதப்பட்ட காலத்தில் இந்து மதம் பல பிரிவுகளை கொண்டு இருந்திருகிறது.  பிரிவுகளுக்கு இடையே சண்டைகள், சச்சரவுகள், எது சரி எது தவறு என்ற விவாதங்கள் இருந்திருக்க வேண்டும்.

3. அப்படி என்னென்ன பிரிவுகள் இருந்தன ? அவற்றின் நோக்கங்கள் என்ன ?

4. ஞான மார்க்கம் - உண்மையை அறிவது, உண்மையைத் தேடுவது, வேதங்கள் மற்றும்   நூல்களில் இருந்து  வாழ்கை,அதன் நோக்கம், இவற்றைப் பற்றி  அறிந்து கொள்வது. இது ஒரு மார்க்கம்.

4. கர்ம யோகம் - படிப்பறிவு என்பது எல்லோராலும் அடையக் கூடியது அல்ல. அதுவும்  அந்தக் காலத்தில் அறிவைப் பெறுவது மிக மிக கடினமான ஒன்று. ஞான மார்க்கம் ஒன்றுதான் வழி என்றால் , மிகப் பெரும்பான்மையோரால் அடைய முடியாத ஒன்று அது.  எனவே, கர்ம யோகம் என்று ஒரு பிரிவு ஏற்பட்டது. செய்யும் தொழிலை சிறப்பாக செய்வது, அதில் பற்று இல்லாமல் செய்வது, சுயநலம் இன்றி செய்வது என்று செய்யும் செயல்கள் மூலம் வாழ்வின் நோக்கை அடைவது.

5. ஞானத்தையும் பெற முடியாமல், வேலையும் அதிகம் செய்ய முடியாத ஒரு பிரிவு பக்தி என்று ஒன்றை அடிப்படியாகக் கொண்டு இருந்தது. இறைவனை வழிபடுவது, அவன் பெருமைகளை பேசுவது, அவனை போற்றுவது, அவனே எல்லாம் என்று எண்ணுவது என்ற ஒரு மார்க்கம்.

6. இந்த மூன்று வழிகளைத் தவிர்த்து சாங்கிய யோகம் என்று ஒன்று இருந்தது. சாங்கிய யோகம் ஆத்மா (spirit ) , உடல், மனதின் குணங்கள் என்று இவற்றைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. மூன்று விதமான குணங்கள் (சத்வ, தமோ, இராஜச), அவை எப்படி வருகின்றன, அவை எப்படி வெளிப் படுகின்றன என்பதை ஆராய்கிறது. கீதை இந்த சாங்கிய யோகத்தை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது.

7. இப்படி ஞானம், கர்மம், பக்தி, சாங்க்ய என்ற பிரிவுகளை ஒன்றாக்க கீதை முயல்கிறது. சிக்கல் என்ன என்றால் ஞானத்தைப் பற்றி பேசும்போது ஞானம்தான் உயர்ந்தது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. மற்றவற்றைப் பேசும்போதும்  அப்படியே. இதில் ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்று சொல்ல முடியாமல் கீதை எல்லாமே உயர்ந்ததுதான் என்று சொல்கிறது. ஒருங்கிணைக்கும் முயற்சியில் இது தவிர்க்க முடியாதது.

8. பக்தி யோகம் பிடித்தவர்கள், கீதை பக்தி யோகத்தைத்தான் சொல்கிறது என்று கொண்டாடும்போது, ஞான யோகம் பிடித்தவர்கள் , இது என்ன பக்தி யோகம் என்று எரிச்சல் அடைவது இயற்கை. பின்னால் வந்தவர்கள், பக்தி யோகமும் ஒரு விதத்தில் ஞான யோகம் தான் என்று சொல்லத் தலைபட்டார்கள். இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

9. பக்தி யோகம் வேர் பிடிக்க வேண்டும் என்றால் பக்தி செய்யப்படும் இறைவனைப் பற்றி உயர்வாகப் பேச வேண்டும். அவன் பெருமைகள், விஸ்வ ரூப தரிசனம் என்று கீதை மிக விரிவாகப் பேசுகிறது. இது என்ன விஸ்வரூபம், இது எல்லாம் முடியுமா, இது இயற்கைக்கு, அறிவியலுக்கு விரோதமாக இருக்கிறதே என்று தோன்றலாம். அது தவிர்க்க முடியாதது.

10. கீதையை படித்து முடிக்கும் போது, வாழ்வைப் பற்றி ஒரு புதிய பார்வை பிறக்கும் என்றே தோன்றுகிறது. நம் சிந்தனையின் போக்கை அது மாற்றும் என்றே நான் நினைக்கிறேன்.

11. கீதையில் இருந்து நமக்கு பிடித்தவற்றை, நம்மால் செயல் படுத்த முடிந்தவற்றை எடுத்துக் கொள்வோம். மூலிகை செடியின் ஒவ்வொரு பகுதியும் ஒரு நன்மையைத் தரும். நமக்கு வேண்டியதை நாம் எடுத்துக் கொள்வோம்.








Tuesday, May 20, 2014

கீதை - 10.15 - இந்த உலகின் இறைவன் நீங்கள்

கீதை - 10.15 - இந்த உலகின் இறைவன் நீங்கள் 


स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम ।
भूतभावन भूतेश देवदेव जगत्पते ॥१०- १५॥

ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த² த்வம் புருஷோத்தம |
பூ⁴தபா⁴வந பூ⁴தேஸ² தே³வதே³வ ஜக³த்பதே || 10- 15||

ஸ்வயம் = தானே
எவ = நிச்சயமாக
ஆத்மான = உன்னால்
ஆத்மாநாம் = உன்னை
வேத்த = அறிவாய்
த்வம் = நீ
புருஷோத்தம = புருஷோத்தமா
பூதபாவந = அனைத்து பூதங்களின்
 பூ⁴தேஸ = தலைவனே
தே³வதே³வ = தேவர்களின் தேவனே
ஜக³த்பதே = உலகின் தலைவனே

புருஷோத்தமா, உன்னை நீயே அறிவாய். நீயே பூதங்கள் அனைத்தும் ஆனாய். பூதங்களின் தலைவன் நீயே.  தேவ தேவ! இந்த உலகத்தின் இறைவன் நீ. 

உன்னை நீயே அறிவாய்.....உங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். உங்களுக்குள் இருக்கும் உங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். வேறு யாரும் உங்கள்ளுக்கு உங்களை  அறிமுகப் படுத்த முடியாது. நீங்கள் யார், உங்களை  மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்துவது எது, உங்கள் திறமை, பயம், கனவு, ஆசைகள், உங்களை பாதித்தது, பாதிகின்றவை எவை எவை ....இவற்றை எல்லாம்  நீங்கள் மட்டுமே அறிய முடியம். உங்களை உங்களுக்குள் தேடுங்கள்.

புருஷ் என்றால் அனைத்திலும் இருக்கும் ஒரு உயிர் பொறி. அதை உயிர் என்று சொல்லுங்கள், ஆத்மா என்று சொல்லுங்கள், சக்தி என்று சொல்லுங்கள்...அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த ஒன்றை சமஸ்க்ரிதத்தில் புருஷ்  என்று சொல்கிறார்கள்.

புருஷோத்தமன் என்றால் அனைத்து சக்திகளுக்கும் சக்தியாக இருப்பவன். அந்த  உயிரை செலுத்துபவன். எது அந்த உயிர் சக்தியை செலுத்துகிறது ? அது புருஷோத்தமன்.


நீயே பூதங்கள் அனைத்தும் ஆனாய்...எல்லாம் ஒன்றே. காண்பதும், காணப்படுவதும் ஒன்றே. நீ வேறு நான் வேறு அவர் வேறு என்ற வேற்றுமை இல்லாமல் எல்லாம் ஒன்றே. நீங்களும், நானும் அவனே. அவன் எல்லாமாக இருக்கிறான் என்றால் எல்லாம் அவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா ? எல்லா உயிர்களும் சமம். உயர்வு தாழ்வு கிடையாது. உள்ளவன், இல்லாதவன்;  படித்தவன், படிக்காதவன்; ஏழை பணக்காரன் என்று எல்லாம் ஒன்று தான்.  


பூதங்களின் தலைவன் நீயே....நாம் பொருள்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.  அவை நம்மை விட உயர்ந்ததாகப் போகிறது. சொத்துக்காக உயிரை விடுகிறார்கள். உயிரை எடுக்கிறார்கள். வாழ் நாள் எல்லாம் செலவழித்து அதை அடைய முயற்சி செய்கிறார்கள். நீங்கள், இந்த பொருள்களின் தலைவன்.  அவை உங்களுக்கு அடிமை.  நீங்கள் அவற்றிற்கு அடிமை இல்லை. பொருள் தொலைந்து போனால் வருந்துகிறார்கள். பொருள்களை, சொத்துகளை, செல்வத்தைத் தாண்டிப் போங்கள். அவை வேண்டாம் என்று கீதை சொல்லவில்லை. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றிற்கு அடிமை ஆகாதீர்கள்.  


தேவ தேவ! ... தேவர்களுக்கு தேவனே. நீங்கள் அனைத்துக்கும் மேலானவர்கள். 


இந்த உலகத்தின் இறைவன் நீ.... இந்த உலகை படைத்தவர்கள் நீங்கள். உங்களின் புலன்களும், அறிவும் சேராமல் இந்த உலகம் உருவாகாது. நீங்கள் காணும், உணரும் உலகம் நீங்கள் உருவாக்கியது. வெளியில் இருக்கும் உலகம்  எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பது இல்லை. ஒவ்வொருவரும் அதை அவர்களின் அறிவு, அனுபவம், ஞாபகங்கள் இவற்றை கொண்டு பார்க்கிறார்கள், அறிகிராரர்கள், உணர்கிறார்கள். நீங்கள் காணும் உலகின் இறைவன் நீங்கள்.  அப்படி சொல்லும் போது, ஒன்றை நாம் உணர வேண்டும். இந்த உலகை நாம்  மாற்ற முடியும். நம் எண்ணங்கள் மாறும்போது உலகம் மாறும்.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உன்னிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்  என்றார் நாவுக்கரசர்.

சூடும், குளிரும், இன்பமும், துன்பமும், நல்லதும் கெட்டதும் நாம் உருவாக்குவது.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சுலோகம்.





Wednesday, May 14, 2014

கீதை - 10.14 - பக்தியும் ஞானமும்

கீதை - 10.14 - பக்தியும் ஞானமும் 


सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव ।
न हि ते भगवन्व्यक्तिं विदुर्देवा न दानवाः ॥१०- १४॥

ஸர்வமேதத்³ருதம் மந்யே யந்மாம் வத³ஸி கேஸ²வ |
ந ஹி தே ப⁴க³வந்வ்யக்திம் விது³ர்தே³வா ந தா³நவா: || 10- 14||


ஸர்வம் = அனைத்தும்

எதத் = இந்த

ருதம் = உண்மை

மந்யே = நான் ஏற்றுக் கொள்கிறேன்

யந் = எதை

மாம் = எனக்கு

வத³ஸி = நீ சொன்னாயோ

கேஸ²வ  = கேசவா

ந = இல்லை

ஹி = உறுதியாக

தே = உன்

ப⁴க³வந்  =  இறை தன்மை

வ்யக்திம் = சொருபத்தை

விது³ர் = அறிதல்

தே³வா = தேவர்கள்

ந = இல்லை

தா³நவா: = அசுரர்கள்


கேசவா, உன்  பெருமைகளை உண்மை  என்று அறிந்தேன். தேவர்களும் அசுரர்களும் இந்த  உண்மையை அறிவார்களா ?

அர்ஜுனன் சொல்கிறான் தான் உண்மையை அறிந்து கொண்டதாக. அவனுக்குள்  ஒரு சந்தேகம், "இந்த உண்மையை தேவர்களும் அசுரர்களும் அறிவார்களா " என்று.

தேவர்கள் அறிய மாட்டார்கள் ஆனால் அர்ஜுனன் அறிந்து கொண்டான். எப்படி ?

அசுரர்கள் அறிய மாட்டார்கள் என்று சொல்லுவதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கலாம். ஆனால் தேவர்களும் அறிய மாட்டார்கள் என்று ஏன் சொல்ல வேண்டும் ?

தேவர்கள் அசுரர்கள் என்பதை ஏதோ ஆட்கள் என்று நினைக்க வேண்டாம்.

அசுரர்கள் எதையும் உணர்ச்சி பூர்வமாக அணுகுபவர்கள். தாங்கள் நினைத்ததை  அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள். சரியா தவறா என்பதெல்லாம்  தெரியாது.  மாற்றான் மனைவி அழகாக இருக்கிறாள் என்றால் தூக்கி  வந்து விட வேண்டியது.

தேவர்கள், படித்தவர்கள், நல்லது கெட்டது அறிந்தவர்கள்.

இப்படி அறிவாலும், உணர்ச்சியாலும் இந்த உண்மையை அறிந்து கொள்ள முடியாது.

ஞானமும் பக்தியும் உண்மையை அறிந்து கொள்ள முடியாது என்றால் பின் எதுதான்  உதவும் ?

இப்படி யோசிப்போம் ...

வெறும் அறிவு மட்டும் உதாவது.

வெறும்  உணர்ச்சி மட்டும் உதாவது.

இரண்டும் கலந்த ஒன்றால், முழுமையான மனிதனால் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

சிலர், ஞானம் மட்டுமே போதும் என்று அறிவின் பாதையில் போகிறார்கள்.

சிலர், பக்தி மட்டுமே போதும் என்று பதியின் பின்னால் போகிறார்கள்.

உண்மை என்பது முழுமையான ஒன்று. அதை முழுமையான மனிதனால்  மட்டுமே அறிந்து  கொள்ள முடியும்.

எனவே, அர்ஜுனன் வாயிலாக வியாசர் சொல்கிறார் "தேவர்களும் அசுரர்களும்  இதை அறிவார்களா" என்று.

பக்தி யோகத்தையும் ஞான யோகத்தையும் ஒரு புள்ளியில் நிறுத்தும் சுலோகம் இது.


Saturday, May 10, 2014

கீதை - 10.12 மேலும் 10.13 - உங்களுக்கு இறைவனைத் தெரியுமா ?

கீதை - 10.12 மேலும் 10.13 - உங்களுக்கு இறைவனைத் தெரியுமா ?


अर्जुन उवाच
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥१०- १२॥

அர்ஜுந உவாச
பரம் ப்³ரஹ்ம பரம் தா⁴ம பவித்ரம் பரமம் ப⁴வாந் |
புருஷம் ஸா²ஸ்²வதம் தி³வ்யமாதி³தே³வமஜம் விபு⁴ம் || 10- 12||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

பரம் ப்³ரஹ்ம = பர பிரமம்

பரம் தா⁴ம = பரம பதம்
பவித்ரம் = தூய்மை
பரமம் ப⁴வாந் = அனைத்திலும் உயர்ந்தவன் 
புருஷம் = புருஷம்
ஸா²ஸ்²வதம் = நிரந்தரமானவன்
திவ்யமாதி தே³வம் = திவ்யம் + ஆதி + தேவம் = திவ்யமான ஆதி தெய்வம்
 அஜம் = பிறக்காதவன் , தொடக்கம் இல்லாதவன்
 விபும் = உயர்ந்தவன்


அர்ஜுனன் சொல்லுகிறான்: 
நீயே பரப்பிரம்மம், 
நீயே பரம பதம் 
நீயே சிறந்த தூய்மை
உன்னையே ‘நித்திய புருஷ’னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், உயர்ந்தவன் என்றும் 


இந்த ஸ்லோகத்தை அடுத்த ஸ்லோகத்தோடு சேர்த்து படிக்க வேண்டும். இந்த சுலோகம்  தொடர்ச்சியாக அடுத்த ஸ்லோகத்தில் முடிகிறது.

எனவே அதையும் சேர்த்து பார்க்கலாம்.

आहुस्त्वामृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा ।
असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे ॥१०- १३॥

ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தே³வர்ஷிர்நாரத³ஸ்ததா² |
அஸிதோ தே³வலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்³ரவீஷி மே || 10- 13||

ஆஹு = சொல்கிறார்கள் 
த்வாம் = உன்னைப் பற்றி
ரிஷ்ய = ரிஷிகள்
ஸர்வே = அனைவரும்
தேவர்ஷிர் நாரத = தேவ ரிஷி நாரதர்
ததா = மேலும் 
அஸிதோ =அசிதா
தே³வலோ : = தேவலர்
வ்யாஸ= வியாசர்
ஸ்வயம் = நீயும்
ச  = மேலும்
எவ = நிச்சயமாக
ப்³ரவீஷி = விளக்கினாய்
மே = எனக்கு

அனைத்து முனிவர்களும் , தேவ ரிஷி நாரதரும், அசிதரும் தேவலரும் வியாசரும் எதைச் சொன்னார்களோ அதையே நீயும் எனக்கு இப்போது என்னெதிரில் சொல்கிறாய். 

இறைவன் இருக்கிறானா இல்லையா ? இருக்கிறான் என்றால் எப்படி இருப்பான் ? இறைவனைப் பற்றி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறோம். அவன் நேரில் வந்தால்  அதே மாதிரி இருப்பானா ? அப்படி இல்லாவிட்டால் என்ன  செய்வது ? அந்த குணாதிசயங்கள் இல்லாதா ஒரு ஆளை இறைவன் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா ?

இறைவனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா  என்று யாரைக் கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர்கள் மிக மிகக் குறைவே. எல்லோருக்கும் இறைவனைப் பற்றி ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. இறைவனைப் பற்றி தெரியும் என்றால் பின் எதற்கு இந்த தேடல் ?

நான்கு கை, சங்கு , சக்கரம், திரிசூலம், நான்கு தலை, பட்டு பீதாம்பரம், கையில் கதை, மண்டை ஓட்டு  மாலை என்று பல அடையாளங்கள் நமக்குத் தெரியும். இவை எல்லாம் இல்லாத ஒரு ஆளை இறைவன் என்று எப்படி ஏற்றுக் கொள்வது ?

சரி, இந்த மாதிரி அடையாளங்களோடு ஒருவர் வந்தால் அவரை ஏற்றுக் கொள்வோமா ?

ஒரு வேளை மந்திரவாதியாக இருப்பானோ ? ஒரு வேளை எவனோ வேஷம் போட்டு நம்மை  எமாற்றுகிரானோ என்ற சந்தேகம் வரும் அல்லவா ?

அவன் என்னதான் மாயா ஜாலாங்கள் செய்து காட்டினாலும் சந்தேகம் போகாது.

அடையாளங்கள் பொருந்தினாலும் சந்தேகம், பொருந்தாவிட்டாலும் சந்தேகம்.

இறைவனே நேரில் வந்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. சந்தேகம் விடாது.

என்ன செய்வது ?

அர்ஜுனனின் நிலையில் உங்களை வைத்துப்  பாருங்கள்.

கண்ணன் தன்னைப் பற்றி நிறைய கூறுகிறான்.

அர்ஜுனன் அதை வியாசரும், நாரதரும் மற்றவர்களும் கூறியதோடு ஒப்பிட்டுப்  பார்க்கிறான்.

இரண்டும் ஒத்துப் போகிறது.

மனித மனம் - சந்தேகத்தின் உறைவிடம்.

இரண்டும் ஒத்து போனாலும் அர்ஜுனனின் சந்தேகம் தீரவில்லை.


அர்ஜுனனின் சந்தேகம் ஒரு புறம் இருக்கட்டும்.

வியாசர் என்ன சொல்ல  வருகிறார் ?

நீங்கள் இறைவனை மற்றவர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு அறிய முடியாது.

நீங்களே கண்டு உணர வேண்டும். நாரதரும், அஸ்வினி தேவர்களும், வியாசரும்  சொன்னாலும், அந்த இறைவனே நேரில் வந்தாலும் நீங்களே முயன்று  அறிந்தால் அன்றி இறைவனை அறிய முடியாது.

புத்தக அறிவு, மற்றவர்கள் சொல்லக் கேட்ட அறிவு இவை பயன்படாது.

யார் சொன்னாலும் உங்கள் சந்தேகம் மட்டும் போகப் போவது இல்லை. பின் எதற்கு அனாவசியமாக மற்றவர்கள் சொல்வதை கேட்டும் படித்தும் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ?

வியாசரும், நாரதரும் சொன்ன பிறகும், கண்ணனே நேரில் வந்த பிறகும், அவனே அவற்றை மீண்டும் சொன்ன பிறகும் அர்ஜுனனுக்கு சந்தேகம் போக வில்லை.

உங்களை நினைத்துப் பாருங்கள் ?


நீங்கள் இது வரை அறிந்தது, கேட்டது, எல்லா வற்றையும் மூட்டை கட்டி ஒரு மூலையில்  வையுங்கள்.

இறைவன் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியாது. அதுதான் உண்மை. அந்த உண்மையில்  இருந்து தொடங்குகள்.

உண்மை உங்களை வழி நடத்திச் செல்லும்.

பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி

Friday, May 9, 2014

கீதை - 10.11 - அறியாமை விலகி அறிவு தோன்றும்

கீதை - 10.11 - அறியாமை விலகி அறிவு தோன்றும்

तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः ।
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ॥१०- ११॥

தேஷாமேவாநுகம்பார்த²மஹமஜ்ஞாநஜம் தம: |
நாஸ²யாம்யாத்மபா⁴வஸ்தோ² ஜ்ஞாநதீ³பேந பா⁴ஸ்வதா || 10- 11||

தேஷாம் = அவர்களுக்கு
எவ = நிச்சயமாக
அநுகம்பார்த = சிறப்புடன் இரக்கப்பட்டு
அஹம் = நான்
அஜ்ஞாநஜம்= அறியாமை
தம: = இருள் 
நாஸயாமி = விலக்குகிறேன்
ஆத்ம பாவ = அவர்கள் மனதில்  
ஸ்தோ = இருந்து
ஞாந = ஞானம்
தீபேந = என்ற விளக்கை
பாஸ்வதா = ஒளி விளங்கச் செய்கிறேன்

அவர்களுக்கு இரங்கி, நான்,  நான் அவர்களின் மனதின் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றுவேன்.


வேலை முடிந்து வீட்டுக்கு வருகிறோம். இரவு ஒரு எட்டு மணி இருக்கும். கதவை திறந்து சுவிட்சை ஆன் செய்கிறோம். வீட்டில் மின்சாரம் இல்லை. பொருள்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன என்று தெரியவில்லை. தட்டு தடுமாறி முட்டி மோதிக் கொள்கிறோம்.

ஒரு வழியாக இடம் கண்டுபிடித்து அமர்கிறோம். சிறிது நேரத்தில் மின்சாரம் வருகிறது. விளக்குகள் எரியத் தொடங்குகின்றன. அனைத்து பொருள்களும் தெளிவாகத் தெரிகின்றன.

இருள் நாம் பொருள்களை அறிந்து கொள்வதை தடுக்கிறது.

வெளிச்சம் நாம் பொருள்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

வெளிச்சம் பொருள்களை உருவாக்குவது இல்லை. அது இருக்கின்ற பொருள்களை சரியாக  புரிந்து கொள்ள உதவுகிறது.

அறியாமை என்ற இருள் நம் அறிவை சூழ்ந்து இருக்கும் வரை நம்மால் உலகை சரியாக அறிந்து கொள்ள முடியாது.

அறிவு வரும் போது , அதன் ஞான தீபத்தில் நம்மால் உலகை சரியாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஞானம் வரும் வரை நாம் உலகை சரியாக புரிந்து கொள்ள முடியாது..இருட்டில் பொருள்களை அறிந்து கொள்வது மாதிரி இருக்கும்.

மின்சாரம் வந்தவுடன் விளக்கு எரிகிறது. விளக்கு எரியும் போது எல்லாம் தெளிவாகத் தெரிகிறது.

அன்பு ஞானத்தைத் தரும்.

ஞானம் அறியாமையை போக்கி அறிவைத் தரும்.



Wednesday, May 7, 2014

கீதை - 10.10 - அன்பு ஞானத்தைத் தரும்

கீதை - 10.10 - அன்பு ஞானத்தைத் தரும் 


तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् ।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥१०- १०॥

தேஷாம் ஸததயுக்தாநாம் ப⁴ஜதாம் ப்ரீதிபூர்வகம் |
த³தா³மி பு³த்³தி⁴யோக³ம் தம் யேந மாமுபயாந்தி தே || 10- 10||

தேஷாம் = அவர்களுக்கு
ஸததயுக்தாநாம் = எப்போதும் செயல்பட்டுக் கொண்டு
ப⁴ஜதாம் = பஜனை
ப்ரீதிபூர்வகம் = அன்புடன் என்னை வழிபட்டு 
த³தா³மி = நான் தருகிறேன்
பு³த்³தி⁴யோக³ம் = ஞான யோகம்
தம்= அது
யேந = அதனால்
மாம் = என்னிடம்
உபயந்தி = வருபவர்கள்
தே = அவர்கள்


எப்போதும் அன்புடன் என்னை வழிபடுவோருக்கு நான் ஞான யோகத்தை அளிக்கிறேன். அதனால் அவர்கள் என்னை அடைவார்கள்

ஞானம் எப்படி கிடைக்கும் ?

நிறைய புத்தகங்களை படிப்பதின் மூலமா ? படித்தவர்கள் சொல்வதை கேட்பதன் மூலமா ? நிறைய சிந்திப்பதன் மூலமா ? அல்லது இவை அனைத்தின் மூலமா ?

உண்மையான ஞானம் மிகப் பரந்துபட்டது. அதை ஒரு வாழ்நாளில் படித்து , கேட்டு  அறிந்து கொள்ள முடியுமா ?

அதற்கு முன்னால் நம்மால் ஏதாவது ஒன்றைப் பற்றி முழுவதுமாக எப்போதாவது  அறிந்து கொள்ள முடியுமா ?

ஒரு உப்புக் கல்லை பற்றி நம்மால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. அதைப் பற்றி ஆராய  முற்பட்டால் அது போய் கொண்டே இருக்கும்.

முடிவே இல்லை.

இப்படி ஒரு சின்ன உப்புக் கல்லை நம்மால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது என்றால்  மீதி உள்ளவற்றை என்று அறிந்து கொள்வது.

கண்ணன் கூறுகிறான் - நான் ஞான யோகத்தைத் தருகிறேன் என்று.

எப்போது ?

 எப்போதும் என்னை அன்புடன் வழிபடுபவர்களுக்கு

"என்னை" என்று சொல்வது முன்பே கூறியது போல கண்ணன் என்ற ஒரு மனித உருவை  அல்ல. இதை கண்ணனே கூறியிருக்கிறான் "மானிடர்கள் என் மனித  வடிவில் மயங்கி என் பெருமை உணரமாட்டார்கள் " என்று.

"என்னை " என்பதை ஒரு உருவத்தில் அடைக்காதீர்கள்.

என்னை என்பதை உங்களுக்குள் இருக்கும் அந்த உண்மையை, உயிரை, ஆத்மாவை, நான் என்ற அந்த ஒன்றை.....ஆங்கிலத்தில் சொல்வது என்றால் "Self ".

 பஜனை என்ற சொல்லுக்கு வழி பாடு என்பதை விட "உள்ளே இருப்பதை வெளியே கொண்டு  வருவது" என்ற அர்த்தம் சரியாக இருக்கும்.

அதை கடமையே என்று செய்யாமல் அன்புடன் செய்யும்போது ஞானம் பிறக்கும்.

ஞானம் என்பது அன்பில் பிறப்பது.

அன்பு என்பது எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்ப்பது.

அன்பைத் தாண்டி ஞானம் இல்லை.

மனதில் அன்பு பெருக்கெடுக்கும் போது உண்மை  விளங்கும்.

அன்பு அறியமுடியாதவற்றை அறிய வைக்கும்.

 உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

கற்றது போதும், உன் திருவடிகளில் கசிந்து உருக வேண்டுகிறேன் என்று உருகுகிறார்  மணிவாசகர்.

அன்பு வரும்போது நான் என்ற அகந்தை மறையும்.

வேற்றுமைகள் மறையும்.

இடைவெளி குறையும்.

உண்மை வெளிப்படும்.




Tuesday, May 6, 2014

கீதை - 10.9 - மகிழ்ச்சிக்கும் இன்பத்திற்கும் வழி

கீதை - 10.9 - மகிழ்ச்சிக்கும் இன்பத்திற்கும் வழி 


मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥१०- ९॥

மச்சித்தா மத்³க³தப்ராணா போ³த⁴யந்த: பரஸ்பரம் |
கத²யந்தஸ்²ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச || 10- 9||

மச் சித்தா = சித்தத்தை என்பால் நிறுத்தி

மத் கதப்ராணா = பிராணனை என்னில் நிறுத்தி
போ³த⁴யந்த: = போதனைகளை புரிந்து 
 பரஸ்பரம்  = ஒருவருக்கொருவர்
கத²யந்த = பேசிக் கொண்டு
ச = மேலும்
மாம் = என்னைப் பற்றி
நித்யம் = எப்போதும்
துஷ்யந்தி = இன்புற்று இருக்கிறார்களோ
ச = மேலும்
ரமந்தி = மகிழ்கிறார்கள்
ச = மேலும்


எப்போதும் சித்தத்தையும் , பிராணனையும் என்பால் வைத்து, சொன்னவற்றை அறிந்து, ஒருவர்க்கொருவர் பேசிக்கொண்டு,  இருப்பவர்கள் மகிழ்ச்சியும் இன்பமும் அடைகிறார்கள் 

நமக்கு நல்லது கெட்டது தெரியாமல் இல்லை. சமயத்தில் மறந்து விடுவோம். அதுதான் பிரச்சனை. இனிப்பு சாப்பிட்டால் கெடுதல் என்று தெரியும். இருந்தும் நம் முன் தட்டில் ஒரு லட்டை கொண்டு வந்து வைத்தால் அது மறந்து போகிறது.

கோபமும், காமமும், உணர்ச்சிகளும் அறிவை மயங்க  வைக்கின்றன.

கீதை வாசிக்கும் போது சில விஷயங்கள் மனதில் படுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்தில்  எல்லாம் மறந்து விட்டு வேறு பலவற்றை செய்யத் தொடங்குகிறோம்.

 எனவே,"எப்போதும் சித்தத்தையும் பிராணனையும் என் பால் வைத்து".

பிராணன் என்பதற்கு உயிர் மூச்சு அல்லது உயிர் என்று பொருள் கொள்வதை விட வாழ்க்கை, சிந்தனை, அறிவு, மனம் என்று கொள்வது சரியாக  இருக்கும்.

சிந்தையையும் மனதையும் எப்போதும் என் பால் வைத்து என்று சொல்லும் போது பொருள் சற்று விளங்கும்.

காரியங்கள் என்ன செய்தாலும், சிந்தனை எல்லாம் ஒரு இடத்தில் இருக்க வேண்டும்.

"போதனைகளை புரிந்து கொண்டு" .... புரியாமல் சும்மா மீண்டும் மீண்டும் மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பதில் பலன் இல்லை.

"ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டு" ... நமக்கு தெரிந்த அறிந்த உண்மைகளை நம்மோடு  வைத்துக் கொள்ள கூடாது. மற்றவர்களுக்கும் சொல்லி அவர்களையும் நல் வழி படுத்த முயல வேண்டும். அது மட்டும் அல்ல, மற்றவர்களோடு பேசும் போது , நாம் அறிந்து வைத்து இருப்பது சரிதானா  என்றும் அறிந்து கொள்ளலாம். இத்தனை ஆயிரம் உரைகள் கீதைக்கு ஏன் எழுதப் பட்டது ?  தெரிந்ததை,அறிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கீதை என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு என்று எழதப் பட்டது என்ற குற்றச் சாட்டு இந்த ஸ்லோகத்தில் அடிபட்டுப்  போகும்.

கீதை , உண்மைகள் எல்லோரையும் போய் சேர வேண்டும் என்று  எண்ணுகிறது. 

அப்படி செய்வதால் என்ன கிடைக்கும் ?

மகிழ்ச்சியும் இன்பமும் கிடைக்கும்.

முதலில் மனம் ஒன்று பட வேண்டும்.

இரண்டாவது போதனைகளை புரிந்து கொள்ள வேண்டும்

மூன்றாவது புரிந்து கொண்டதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்


கீதை - 10.8 - அன்பும் புனிதமும்

கீதை - 10.8 - அன்பும் புனிதமும் 


अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥१०- ८॥

அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே |
இதி மத்வா ப⁴ஜந்தே மாம் பு³தா⁴ பா⁴வஸமந்விதா: || 10- 8||


அஹம் = நான்
ஸர்வஸ்ய = அனைத்தின்
ப்ரப⁴வோ = தொடக்கம்
மத்த: = என்னிடம் இருந்து
ஸர்வம் = அனைத்தும்
ப்ரவர்ததே = உருவாகின 
இதி = இதை
மத்வா = அறிந்து
ப⁴ஜந்தே = பக்தியுடன்
மாம் = என்னை
பு³தா = புத்திமான்கள்
பா⁴வ ஸமந்விதா: = அன்புடன் 


நான் அனைத்தின் தொடக்கம். என்னிடம் இருந்தே எல்லாம் உருவாகின்றன . இதனை அறிந்தவர் அன்புடன்  என்னை வணங்குவார்கள். 

பஞ்சு இருக்கிறது.  அதில் இருந்து நூல் வருகிறது. நூலில் இருந்து துணி வருகிறது. துணியில் இருந்து வெவ்வேறு விதமான ஆடைகள் வருகின்றன.

ஆடைகள் பல விதம். துணியும் பலவிதம். நூல் கூட பலவிதமாக இருக்கலாம். ஆனால், பஞ்சு ஒன்றுதான்.

அனைத்து ஆடைகளும் பஞ்சில் இருந்து தொடங்குகின்றன.

அனைத்து ஆடைகளும் பஞ்சினால் உருவாகின்றன.

ஒவ்வொரு ஆடையும் நினைக்கும் என்னில் இருக்கும் நூல்  வேறு, மற்ற ஆடைகளில் இருக்கும் நூல் வேறு என்று. ஆடைகளுக்குத் தெரியாது அவை எல்லாம் பஞ்சினால் ஆனவை என்று. அறியாமை தடுக்கிறது.

நான் என்பது பஞ்சு என்று நினைத்தால் எல்லாம் ஒன்று தான் என்று தோன்றும்.

நான் என்பது ஆடை, துணி, நூல் என்று நினைத்தால் வேறுபாடு தோன்றும்.

எல்லாம் பஞ்சுதான் என்ற எண்ணம் எல்லா ஆடைகளுக்கும் வந்து விட்டால் ஒன்றின் மேல் மற்றதற்கு அன்பு பிறக்கும். வேற்றுமை இருந்தால் தானே வெறுப்பும்  பகையும் தோன்றும்.

அனைத்திற்கும் அடிப்படை ஒன்று என்று என்ற எண்ணம் வந்து விட்டால் வாழ்க்கை புனிதம் அடையும். மனதில் அன்பு பிறக்கும்.

அந்த ஒன்றின் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் -  ஆத்மா,உயிர், ஈஸ்வரன்,  கண்ணன்,பரமாத்மா, ஜீவாத்மா என்று எதுவாக வேண்டுமானாலும்  இருக்கட்டும்.

ஏதோ ஒன்று என்று உங்களால் உணர முடிந்தால் நீங்கள் புனிதம் அடைவீர்கள்.




Monday, May 5, 2014

கீதை - 10.7 - பெருமையும் யோகமும்

கீதை - 10.7 - பெருமையும் யோகமும் 


एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः ।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः ॥१०- ७॥

ஏதாம் விபூ⁴திம் யோக³ம் ச மம யோ வேத்தி தத்த்வத: |
ஸோऽவிகம்பேந யோகே³ந யுஜ்யதே நாத்ர ஸம்ஸ²ய: || 10- 7||

ஏதாம் = இத்தகைய
விபூதிம் = பெருமைகளை
யோக³ம் = யோகத்தையும்
ச = நிச்சயமாக
மம = என்னுடைய

 யோ = எவன்
வேத்தி = அறிகிறானோ 
தத்த்வத: = தத்துவத்தில் 

ஸ = அவன்
அவிகம்பேந = அசையாத
 யோகே³ந = யோகத்தில்
யுஜ்யதே = அமர்கிறான்
அத்ர ஸம்ஸ²ய: = இதில் சந்தேகம் இல்லை


இத்தகைய என் பெருமையையும் யோகத்தினையும் உள்ளபடி  அறிபவன் அசைவில்லாத யோகத்தில் அமர்வான். இதில் சந்தேகம் இல்லை.

அது என்ன அசையாத யோகம் ?

நடுக்கம் இல்லாத யோகம். அலை பாயாத யோகம். குழப்பம் இல்லாத யோகம்.

யோகம் கை கூடும்போது நடுக்கம் இருக்காது. எது சரி, எது தவறு என்று குழப்பம் இருக்காது.

சரி, அந்த யோகம் எப்போது கை கூடும் ?

என்னுடைய இந்த பெருமைகளையும், யோகத்தையும் அறிபவன்.

என்ன பெருமை ?

முந்தைய ஸ்லோகத்தில் கூறப் பட்ட பெருமை.

இந்த உலகம் என்னால் உருவானது என்ற பெருமை.

நம் அறிவும், புலன்களும்,படைப்பாற்றலும் சேர்ந்து இந்த உலகை படைக்கின்றன.

ஆசையை விட்டால் துன்பம் இல்லை.

பற்றை விட்டால் துன்பம் இல்லை.

ஆனால் அதை எப்படி விடுவது ?

எதன் மேல் ஆசைப் படுகிறோமோ அது உங்களில் இருந்து வந்ததது என்ற ஞானம்  பிறக்கும் போது நடுக்கம் அற்ற யோகம் பிறக்கிறது.

நீங்கள்தான் இந்த உலகைப் படைத்தவர்கள். இந்த உலகம் உங்களில் இருந்து வேறு அல்ல.

உங்கள் மேல் நீங்களே ஆசைப் படுவதா  ?

நீங்கள் வேறு, உலகம் வேறு என்று நினைக்கும் போது உலகில் உள்ள பொருளகம் மேல் , உயிர்கள் மேல் ஆசை வருகிறது.

அனைத்தும் ஒன்றுதான் என்று நினைக்கும் போது ஆசை, பற்று எழவே வாய்ப்பு இல்லை.

அப்போது நடுக்கம் அற்ற யோகம் பிறக்கிறது.

நீங்கள் ஏன் உங்களை உங்கள் உடலுக்குள் சுருக்கிக் கொள்கிறீர்கள் ?

நீங்கள் பரந்து பட்டவர்கள்.

நான் ஆண் , பெண், இந்த நாட்டைச் சார்ந்தவன், இந்த சமயத்தைச் சார்ந்தவன்,  இந்த மொழியை  சார்ந்தவன் என்று உங்களை ஆயிரம் வழிகளில் நீங்கள் சுருக்கிக் கொள்கிறீர்கள்.

உங்களைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்கிறீர்கள்.

இதனால் வேலிக்கு வெளியே இருப்பவை / இருப்பவர்கள் மேல் பயம், ஆசை, கோபம் எல்லாம் வருகிறது.

வேலிகளை உடைத்து எறியுங்கள். நீங்கள் இந்த பரந்த உலகின் படைப்பாளி.

நீங்கள் தான் இவற்றைப் படைத்தீர்கள் என்றால் அவற்றின் மேல் உள்ள ஆசை, அவற்றை மற்றவன் எடுத்துக் கொள்வானோ என்ற பயம், அவன் வேறு நீங்கள்  வேறு என்ற பேதைமை எல்லாம் மறையும்.

இதில் சந்தேகமே இல்லை. அவ்வளவு உறுதியாக வியாசர்  சொல்கிறார்.

பின் நடுக்கம் ஏது ?

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சுலோகம்.




Sunday, May 4, 2014

கீதை - 10.6 - உலகம் பிறந்த விதம்

கீதை - 10.6 - உலகம் பிறந்த விதம் 


महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥१०- ६॥

மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா² |
மத்³பா⁴வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: || 10- 6||


மஹர்ஷய: = மக ரிஷிகள்
ஸப்த = எழுவரும்
பூர்வே  = முன்னாள்
சத்வாரோ = நான்கு
மநவ = மனுக்களும்
ததா = மேலும்
மத்³பா⁴வா = என்னில் தோன்றினார்கள், என் இயல்பு அடைந்தார்கள்
மாநஸா = மனதில் இருந்து
ஜாதா = பிறந்தார்கள்
யேஷாம் = அவர்கள்
லோக = இந்த உலகில்
 இமா: = இந்த
ப்ரஜா: = பிரஜைகள் எல்லாம்


ஏழு மகரிஷிகளும், நான்கு மனுக்களும் மனதால் என்னில் இருந்து தோன்றினார்கள். இந்த மக்கள் எல்லாம் அவர்கள் மரபில் வந்தவர்களே.

7 மகரிஷிகளும், 4 மனுக்களும் என் மனதில் இருந்து தோன்றினார்கள். அவர்களிடம்  இருந்து மற்ற மக்கள் எல்லாம் தோன்றினார்கள் என்பது மேலோட்டமான  அர்த்தம்.

இந்த உயிர்கள் எல்லாம் என்னில் இருந்து தோன்றின என்று நேரடியாகச் சொல்லி விட்டுப்  போகலாமே. எதற்கு சுற்றி வளைக்க வேண்டும் ?

அப்படி சொல்லாததற்கு காரணம் அர்த்தம் அதுவல்ல.

7 மகரிஷிகள் என்பது ஒரு குறியீடு. அது ஏழு ரிஷிகளை, அவர்களின் உடலை குறிப்பது அல்ல.

நிரந்தரமான உண்மைகள் அல்லது அறிவு (Cosmic Consiousness ) , நம்முடைய சொந்த  அறிவு, ஐந்து புலன்கள் இந்த ஏழையும் தான் ஏழு ரிஷிகள் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த உலகம் எப்படி தோன்றுகிறது ?

நம் புலன்கள் நம் அறிவுக்கு உணர்த்துவதால் நாம் இந்த உலகை அறிகிறோம்.

புலன்கள் அனுபவங்களை நம் அறிவுக்கு செலுத்திக் கொண்டே இருக்கின்றன.

அறிவு அவற்றை பெற்று, அவற்றை சேர்த்து வைக்கிறது, ஆராய்கிறது. நல்லது கெட்டது  என்று தீர்மானிக்கிறது.

அந்த அறிவை இயக்குவது எது ? அது, அறிவு இந்த புலன்கள் இவை அனைத்தும்  சேர்ந்து இந்த உலகை உருவாக்குகின்றன.

சரி, இவை ஏழு ரிஷிகள் என்று வைத்துக் கொள்வோம்.

யார் இந்த நான்கு மனுக்கள்?

இந்த உலகை படைக்க நினைத்த பிரமா நான்கு புதல்வர்களை  உருவாக்கினார்.

அவர்கள் தான் இந்த நான்கு மனுக்கள்

அவர்கள்

சனத்குமாரர்
சனக
சனாதன
சனந்தன

எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்முள் எழுகிறது.  அந்த எண்ணம்  செயல் வடிவம் பெறுகிறது. உடலும், உள்ளமும், அறிவும் மனமும் ஒன்று  சேர்ந்து அவற்றை உருவாக்கின்றன.

இதில் இருந்து பிறந்ததுதான் உலகம் மற்றும் இந்த உயிர்கள்.

பிரமா என்பது, மனுக்கள் என்பதும், மகரிஷிகள் என்பதும் வேறு யாரும் அல்ல. நீங்கள் தான்.

உங்களுக்குள் இருக்கும் படைக்கும் ஆற்றல் தான் பிரமா. அதன் வேறு வேறு கூறுகள்தான்  மனுக்கள். அந்த படைப்பாற்றலை செயலாக்குவது உங்கள் அறிவும்,  உங்கள் புலன்களும் தான்.

இப்படியும் சிந்திக்கலாமே ...




Saturday, May 3, 2014

கீதை - 10.4 மேலும் 10.5 - இன்பமும் துன்பமும் நமக்குள்ளே

கீதை - 10.4 மேலும் 10.5 - இன்பமும் துன்பமும் நமக்குள்ளே 


बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः ।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च ॥१०- ४॥

பு³த்³தி⁴ர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் த³ம: ஸ²ம: |
ஸுக²ம் து³:க²ம் ப⁴வோऽபா⁴வோ ப⁴யம் சாப⁴யமேவ ச || 10- 4||


புத்தி = புத்தி
ஜ்ஞாநம் = ஞானம்
அஸம்மோஹ = மயக்கம் இன்மை
க்ஷமா = பொறுமை
ஸத்யம் = சத்யம்
தம: = அடக்கம்
ஸம: | =  அமைதி
ஸுகம் = சுகம்
துகம் = துக்கம்
பவ = உண்மை
அபோவ = இன்மை
பயம் = பயம்
ச = மேலும்
அபயம்  = பயமின்மை
யமேவ ச = மேலும்


புத்தியும், ஞானமும், மயக்கம் இன்மையும் , பொறுமையும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், பயமும், பயமின்மையும்.


இந்த சுலோகம் தொடர்கிறது. இந்த பட்டியல் முடியவில்லை. அடுத்த ஸ்லோகத்தில் தொடர்கிறது.

இரண்டையும் சேர்த்து பார்த்து விடலாம்.

अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः ।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः ॥१०- ५॥

அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தா³நம் யஸோ²ऽயஸ²: |
ப⁴வந்தி பா⁴வா பூ⁴தாநாம் மத்த ஏவ ப்ருத²க்³விதா⁴: || 10- 5||


அஹிம்ஸா = துன்புறுத்தாமை
ஸமதா = நடு நிலைமை
துஷ்டி = மகிழ்ச்சி
தபோ = தவம்
தாநம் = தானம்
யஸ = புகழ்
அயஸ = இகழ்
ப⁴வந்தி = உண்டாகின்றன
பா⁴வா = மனப் பாங்குகள்
பூ⁴தாநாம் = உயிரினங்களுக்கு
மத்த = என்னிடம் இருந்து
ஏவ= உறுதியாக
ப்ருத²க்³விதா⁴ = வெவ்வேறான


துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலமிடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள்.

பெரிய பட்டியல்.

இவ்வளவு சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?

எல்லாம் என்னில் இருந்து பிறக்கின்றன என்று சொல்லிவிட்டுப் போகலாமே ?

எல்லாம் என்னில் இருந்து தோன்றின என்றால், பொதுவாக நமக்கு என்ன தோன்றும் - இந்த உலகம், மனிதர்கள், மலையும் , மரமும், கல்லும், மண்ணும் என்னால் தோற்றுவிக்கப் பட்டன என்று தோன்றும்.

இங்கே  அவற்றை அல்ல....

இங்கே சொல்லப்படுவது மனம் மற்றும் அறிவு சார்ந்த விசயங்கள் ...


பொறுமை, அடக்கம், அமைதி, புகழ், இகழ், அகிம்சை, நடு நிலைமை ....

இவை எல்லாம் நமக்குள் தோன்றுபவை. இவை வெளியில் இல்லை. பொறுமையும், அகிம்சையும், அமைதியும், நமக்குள் தோன்றும் இயல்புகள்.

இவை எல்லாம் என்னில் இருந்து தோன்றுகின்றன என்று சொல்லும்போது கண்ணன் "என்னில்" என்பதை எதைக் குறிக்கிறான் என்று நமக்கு விளங்கும்.

கண்ணன் என்னில், எனக்கு, என்னை, நான் என்று சொல்லுவது எல்லாம் கண்ணன் என்ற உருவத்தை அல்ல, கரிய, மயிற் பீலி அணிந்த ஒரு உருவத்தை அல்ல....

அவன் குறிப்பிடுவது அனைத்து உயிர்களிலும் இருக்கும் அந்த ஓர் உணர்வை.

அதுவே அனைத்து இயற்கைக்கும் காரணம் - புகழ், இகழ், ஹிம்சை, அகிம்சை, அமைதி, நடு நிலை எல்லாம் அதில் இருந்து  வருவது.

இவை   எல்லாம் வெளியில் இருந்து வருவது இல்லை.

மனிதன் இவற்றை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறான்.

அமைதியை, புகழை, சுகத்தை, பெருமையை மனிதன் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறான்.

செல்வத்தில், அதிகாரத்தில், சொத்தில், உறவுகளில், பொருள்களில் இவற்றை தேடி அலைகிறான்.

இவை நமக்குள் இருக்கின்றன என்று அறிய வேண்டும்.

நல்லவை மட்டும் அல்ல - இகழும், துன்பமும், ஹிம்சையும், பயமும் நமக்குள் இருந்தே தோன்றுகின்றன.

பொருள்களும், இந்த உயிர்களும் எப்படி வந்தன என்பது முக்கியம் அல்ல.

இன்பமும், துன்பமும் நமக்குள் இருந்து வருகின்றன என்பதை உணரவேண்டும்.



















Friday, May 2, 2014

கீதை 10.3 - நானே உலகின் பெருந்தலைவன்

கீதை 10.3 - நானே உலகின் பெருந்தலைவன் 



यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
असंमूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥१०- ३॥

யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || 10- 3||

யோ = யாரேனும்

மாம் = என்னை

அஜம் = பிறப்பு இல்லாதவன்

அனாதிம் = தொடக்கம் இல்லாதவன்

ச = மேலும்

வேத்தி = அறிதல்

லோக = உலகில் 

மஹேஸ்²வரம்  = பெருந்தலைவன்

அஸம்மூட = மயக்கம் அற்ற

ஸ = அவன்

மர்த்யேஷு = இறக்கும் மனிதற்குள்ளே

ஸர்வபாபை: = பாவங்களில் இருந்து

ப்ரமுச்யதே  = விடுபடுகிறான்

என்னை பிறப்பு இல்லாதவன், தொடக்கம் இல்லாதாவன், உலகின் பெரும் தலைவன் என்று உணர்பவன் மாநிடற்குள்ளே மயக்கம் தீர்ந்தவன், பாவம் அனைத்திலும் இருந்து விடுபட்டவன்.

தெருவில் சென்று கொண்டு இருக்கிறோம். முன்னிரவு நேரம். சாலை ஓரம் ஏதோ நெளிந்து  கிடக்கிறது. பாம்பாக இருக்குமோ என்று நினைக்கிறோம். சற்று நெருங்கி பார்த்தால் தெரிகிறது அது  பாம்பு அல்ல கயறு என்று.

பாம்பு தோன்றியது, பின் மறைந்தது.

தோற்றங்கள் , தோன்றும் பின் மறையும்.

உண்மை அல்லாதது நிரந்தரம் அல்லாதது.

உண்மை என்பது எப்போது நிலைத்து நிற்கும். அது தோன்றியதும் இல்லை, மறைவதும் இல்லை. அது ஆதியில் இருந்தே இருப்பது. அந்த உண்மையை அறிந்தவன் பாவங்களில் இருந்து விடுபடுவான்.


" நான் இந்த உலகின் பெருந்தலைவன்"

"லோக" என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு உலகம் என்று பொருள் சொல்கிறார்கள். அதை விட சிறந்த பொருள் "அனுபவம்" என்பது.

(Sanskrit; Pāli, world). The world or universe, in both a cosmological and psychological sense. In the former it is the habitat of gods and human beings, and in the latter all that can be known or experienced through the senses. 

Read more: http://www.answers.com/topic/loka#ixzz30ZwryzFw


நான் இந்த அனுபவங்களின் பெருந்தலைவன் என்று சொல்லும்போது, வியாசர் குறிப்பிடுவது அனுபவங்களை பெற்று, அவற்றை அனுபவிக்கும் "நான்" என்ற என்னை.

நமக்குள் இருக்கும் அந்த "நான்" தான் இந்த உலகங்களின் பெருந்தலைவன்.

நாம் இந்த புற மற்றும் அக உலகங்களை அறிவது நம் அறிவு,  ஞானம்,மனம் என்று  சொல்லப்படும் அதனால்.

இதை அறிபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.

பாவம் பயத்தில் இருந்து, அறியாமையில் இருந்து, ஆசையில் இருந்து  பிறக்கிறது.

உண்மை அறியப் படும்போது பயம் விலகுகிறது, ஆசை விலகுகிறது, அறியாமை விலகுகிறது...எனவே பாவமும் விலகும்.

சிந்திப்போம்





Thursday, May 1, 2014

கீதை - 10.2 - அனைத்திற்கும் ஆதி நானே

கீதை - 10.2 - அனைத்திற்கும் ஆதி நானே 


न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥१०- २॥

ந மே விது³: ஸுரக³ணா: ப்ரப⁴வம் ந மஹர்ஷய: |
அஹமாதி³ர்ஹி தே³வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ²: || 10- 2||

ந = இல்லை
மே = என்
விது³ = அறிவது
ஸுரக³ணா: = கணங்கள்
ப்ரப⁴வம் = மகிமை
ந = இல்லை
மஹர்ஷய:  = மகரிஷிகளும்
அஹம் = என்
ஆதி = தொடக்கம்
ஹி = நிச்சயமாக
தேவாநாம் = தேவர்களும்
மஹர்ஷீணாம் = மகரிஷிகளும்
ச = மேலும்
ஸர்வஸ = அனைத்தும்

தேவர்களும், ரிஷிகளும் என் பெருமையை முழுவதும் அறிய மாட்டார்கள். அவர்களுக்கும் ஆதி நானே 

பார்பதற்கு மிகச் சாதரணமான சுலோகம் போலத் தோன்றினாலும், ஆழ்ந்த அர்த்தங்கள்  கொண்டது.

ஒரு பொருளை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும் ?

ஒன்று நாமே முயன்று அறியலாம். அல்லது அதைப் பற்றி அறிந்தவர்களை அணுகி,  அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இங்கே கண்ணன் சொல்கிறான் தேவர்களும், மகரிஷிகளும் என்னை அறியமாட்டார்கள், அவர்களுக்கு ஆதி நான் என்று.

 தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் தெரியாது என்றால் வேறு யாருக்குத் தெரியும் ?

எனவே, அறிந்தவர்கள் மூலம் இறைவனை அறிவது என்பது முடியாத காரியம் என்று தெரிகிறது.

பின், ஒரே வழி, நீங்களே நேரடியாக அறிவது ஒன்றுதான்.

இத்தனை புத்தகங்களும், அறிஞர்களும், ஞானிகளும், முனிவர்களும் உங்களுக்கு இறைவனை  காட்ட முடியாது.

நீங்களே நேரடியாக முயன்று அறிந்தால்தான் உண்டு.

இரண்டாவது,  அவர்களுக்கே தெரியாது என்றால் நமக்கு மட்டும் எப்படி தெரியும் ? அவர்களும் முயன்றவர்கள்தானே ? அவர்களுக்கே தெரியாது என்றால்  நமக்கு மட்டும் எப்படி தெரியும் ? அறியாத முடியாத ஒன்றை அறிய முயல்வது  ஒரு அறிவான செயலா ?

ஏன் அறிய முடியாது என்றால் - அறிந்து கொள்ள நினைப்பதும், அறியப்படுவதும்  வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்று தான். The observer and the observed are one and the same.

ஒரு பூதக் கண்ணாடி உலகில் உள்ள அனைத்து பொருளையும் தெளிவாக அறிந்து கொள்ள  உதவும். ஆனால், அந்த கண்ணாடி தன்னை தானே பெரிதாக  காட்ட முடியாது. அதற்கு இன்னொரு பூதக் கண்ணாடி வேண்டும்.

அது போல, நீங்கள் அறிய நினைப்பது உங்களில் இருந்து வேறு அல்ல.  நீகள் வெளியே  தேடினால் அது கிடைக்காது.

அடுத்த வரியில் சொல்கிறான், "நான் அவர்களுக்கு ஆதி"

அதாவது , என்னில் இருந்து தோன்றியவர்கள் அவர்கள். நான் தான் அவர்கள். அவர்கள் முன்னோக்கித் தேடி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று பின்னோக்கிப் பார்த்தால் , அவர்களின் தொடக்கத்தை அறிந்தால், அவர்களின் தேடல்  நிற்கும்.

தேடுவதும், தேடப்படுவதும் ஒன்று என்று அறிவார்கள்.