Thursday, May 1, 2014

கீதை - 10.2 - அனைத்திற்கும் ஆதி நானே

கீதை - 10.2 - அனைத்திற்கும் ஆதி நானே 


न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥१०- २॥

ந மே விது³: ஸுரக³ணா: ப்ரப⁴வம் ந மஹர்ஷய: |
அஹமாதி³ர்ஹி தே³வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ²: || 10- 2||

ந = இல்லை
மே = என்
விது³ = அறிவது
ஸுரக³ணா: = கணங்கள்
ப்ரப⁴வம் = மகிமை
ந = இல்லை
மஹர்ஷய:  = மகரிஷிகளும்
அஹம் = என்
ஆதி = தொடக்கம்
ஹி = நிச்சயமாக
தேவாநாம் = தேவர்களும்
மஹர்ஷீணாம் = மகரிஷிகளும்
ச = மேலும்
ஸர்வஸ = அனைத்தும்

தேவர்களும், ரிஷிகளும் என் பெருமையை முழுவதும் அறிய மாட்டார்கள். அவர்களுக்கும் ஆதி நானே 

பார்பதற்கு மிகச் சாதரணமான சுலோகம் போலத் தோன்றினாலும், ஆழ்ந்த அர்த்தங்கள்  கொண்டது.

ஒரு பொருளை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும் ?

ஒன்று நாமே முயன்று அறியலாம். அல்லது அதைப் பற்றி அறிந்தவர்களை அணுகி,  அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இங்கே கண்ணன் சொல்கிறான் தேவர்களும், மகரிஷிகளும் என்னை அறியமாட்டார்கள், அவர்களுக்கு ஆதி நான் என்று.

 தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் தெரியாது என்றால் வேறு யாருக்குத் தெரியும் ?

எனவே, அறிந்தவர்கள் மூலம் இறைவனை அறிவது என்பது முடியாத காரியம் என்று தெரிகிறது.

பின், ஒரே வழி, நீங்களே நேரடியாக அறிவது ஒன்றுதான்.

இத்தனை புத்தகங்களும், அறிஞர்களும், ஞானிகளும், முனிவர்களும் உங்களுக்கு இறைவனை  காட்ட முடியாது.

நீங்களே நேரடியாக முயன்று அறிந்தால்தான் உண்டு.

இரண்டாவது,  அவர்களுக்கே தெரியாது என்றால் நமக்கு மட்டும் எப்படி தெரியும் ? அவர்களும் முயன்றவர்கள்தானே ? அவர்களுக்கே தெரியாது என்றால்  நமக்கு மட்டும் எப்படி தெரியும் ? அறியாத முடியாத ஒன்றை அறிய முயல்வது  ஒரு அறிவான செயலா ?

ஏன் அறிய முடியாது என்றால் - அறிந்து கொள்ள நினைப்பதும், அறியப்படுவதும்  வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்று தான். The observer and the observed are one and the same.

ஒரு பூதக் கண்ணாடி உலகில் உள்ள அனைத்து பொருளையும் தெளிவாக அறிந்து கொள்ள  உதவும். ஆனால், அந்த கண்ணாடி தன்னை தானே பெரிதாக  காட்ட முடியாது. அதற்கு இன்னொரு பூதக் கண்ணாடி வேண்டும்.

அது போல, நீங்கள் அறிய நினைப்பது உங்களில் இருந்து வேறு அல்ல.  நீகள் வெளியே  தேடினால் அது கிடைக்காது.

அடுத்த வரியில் சொல்கிறான், "நான் அவர்களுக்கு ஆதி"

அதாவது , என்னில் இருந்து தோன்றியவர்கள் அவர்கள். நான் தான் அவர்கள். அவர்கள் முன்னோக்கித் தேடி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று பின்னோக்கிப் பார்த்தால் , அவர்களின் தொடக்கத்தை அறிந்தால், அவர்களின் தேடல்  நிற்கும்.

தேடுவதும், தேடப்படுவதும் ஒன்று என்று அறிவார்கள்.



   

No comments:

Post a Comment