கீதை - 10.7 - பெருமையும் யோகமும்
एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः ।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः ॥१०- ७॥
ஏதாம் விபூ⁴திம் யோக³ம் ச மம யோ வேத்தி தத்த்வத: |
ஸோऽவிகம்பேந யோகே³ந யுஜ்யதே நாத்ர ஸம்ஸ²ய: || 10- 7||
ஏதாம் = இத்தகைய
விபூதிம் = பெருமைகளை
யோக³ம் = யோகத்தையும்
ச = நிச்சயமாக
மம = என்னுடைய
யோ = எவன்
வேத்தி = அறிகிறானோ
தத்த்வத: = தத்துவத்தில்
ஸ = அவன்
அவிகம்பேந = அசையாத
யோகே³ந = யோகத்தில்
யுஜ்யதே = அமர்கிறான்
அத்ர ஸம்ஸ²ய: = இதில் சந்தேகம் இல்லை
இத்தகைய என் பெருமையையும் யோகத்தினையும் உள்ளபடி அறிபவன் அசைவில்லாத யோகத்தில் அமர்வான். இதில் சந்தேகம் இல்லை.
அது என்ன அசையாத யோகம் ?
நடுக்கம் இல்லாத யோகம். அலை பாயாத யோகம். குழப்பம் இல்லாத யோகம்.
யோகம் கை கூடும்போது நடுக்கம் இருக்காது. எது சரி, எது தவறு என்று குழப்பம் இருக்காது.
சரி, அந்த யோகம் எப்போது கை கூடும் ?
என்னுடைய இந்த பெருமைகளையும், யோகத்தையும் அறிபவன்.
என்ன பெருமை ?
முந்தைய ஸ்லோகத்தில் கூறப் பட்ட பெருமை.
இந்த உலகம் என்னால் உருவானது என்ற பெருமை.
நம் அறிவும், புலன்களும்,படைப்பாற்றலும் சேர்ந்து இந்த உலகை படைக்கின்றன.
ஆசையை விட்டால் துன்பம் இல்லை.
பற்றை விட்டால் துன்பம் இல்லை.
ஆனால் அதை எப்படி விடுவது ?
எதன் மேல் ஆசைப் படுகிறோமோ அது உங்களில் இருந்து வந்ததது என்ற ஞானம் பிறக்கும் போது நடுக்கம் அற்ற யோகம் பிறக்கிறது.
நீங்கள்தான் இந்த உலகைப் படைத்தவர்கள். இந்த உலகம் உங்களில் இருந்து வேறு அல்ல.
உங்கள் மேல் நீங்களே ஆசைப் படுவதா ?
நீங்கள் வேறு, உலகம் வேறு என்று நினைக்கும் போது உலகில் உள்ள பொருளகம் மேல் , உயிர்கள் மேல் ஆசை வருகிறது.
அனைத்தும் ஒன்றுதான் என்று நினைக்கும் போது ஆசை, பற்று எழவே வாய்ப்பு இல்லை.
அப்போது நடுக்கம் அற்ற யோகம் பிறக்கிறது.
நீங்கள் ஏன் உங்களை உங்கள் உடலுக்குள் சுருக்கிக் கொள்கிறீர்கள் ?
நீங்கள் பரந்து பட்டவர்கள்.
நான் ஆண் , பெண், இந்த நாட்டைச் சார்ந்தவன், இந்த சமயத்தைச் சார்ந்தவன், இந்த மொழியை சார்ந்தவன் என்று உங்களை ஆயிரம் வழிகளில் நீங்கள் சுருக்கிக் கொள்கிறீர்கள்.
உங்களைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்கிறீர்கள்.
இதனால் வேலிக்கு வெளியே இருப்பவை / இருப்பவர்கள் மேல் பயம், ஆசை, கோபம் எல்லாம் வருகிறது.
வேலிகளை உடைத்து எறியுங்கள். நீங்கள் இந்த பரந்த உலகின் படைப்பாளி.
நீங்கள் தான் இவற்றைப் படைத்தீர்கள் என்றால் அவற்றின் மேல் உள்ள ஆசை, அவற்றை மற்றவன் எடுத்துக் கொள்வானோ என்ற பயம், அவன் வேறு நீங்கள் வேறு என்ற பேதைமை எல்லாம் மறையும்.
இதில் சந்தேகமே இல்லை. அவ்வளவு உறுதியாக வியாசர் சொல்கிறார்.
பின் நடுக்கம் ஏது ?
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சுலோகம்.
I like this RS
ReplyDeleteநீங்கள் பரந்து பட்டவர்கள்.
நான் ஆண் , பெண், இந்த நாட்டைச் சார்ந்தவன், இந்த சமயத்தைச் சார்ந்தவன், இந்த மொழியை சார்ந்தவன் என்று உங்களை ஆயிரம் வழிகளில் நீங்கள் சுருக்கிக் கொள்கிறீர்கள்.
உங்களைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்கிறீர்கள்.
இதனால் வேலிக்கு வெளியே இருப்பவை / இருப்பவர்கள் மேல் பயம், ஆசை, கோபம் எல்லாம் வருகிறது.
வேலிகளை உடைத்து எறியுங்கள். நீங்கள் இந்த பரந்த உலகின் படைப்பாளி.