கீதை - 10.6 - உலகம் பிறந்த விதம்
महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥१०- ६॥
மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா² |
மத்³பா⁴வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: || 10- 6||
மஹர்ஷய: = மக ரிஷிகள்
ஸப்த = எழுவரும்
பூர்வே = முன்னாள்
சத்வாரோ = நான்கு
மநவ = மனுக்களும்
ததா = மேலும்
மத்³பா⁴வா = என்னில் தோன்றினார்கள், என் இயல்பு அடைந்தார்கள்
மாநஸா = மனதில் இருந்து
ஜாதா = பிறந்தார்கள்
யேஷாம் = அவர்கள்
லோக = இந்த உலகில்
இமா: = இந்த
ப்ரஜா: = பிரஜைகள் எல்லாம்
ஏழு மகரிஷிகளும், நான்கு மனுக்களும் மனதால் என்னில் இருந்து தோன்றினார்கள். இந்த மக்கள் எல்லாம் அவர்கள் மரபில் வந்தவர்களே.
7 மகரிஷிகளும், 4 மனுக்களும் என் மனதில் இருந்து தோன்றினார்கள். அவர்களிடம் இருந்து மற்ற மக்கள் எல்லாம் தோன்றினார்கள் என்பது மேலோட்டமான அர்த்தம்.
இந்த உயிர்கள் எல்லாம் என்னில் இருந்து தோன்றின என்று நேரடியாகச் சொல்லி விட்டுப் போகலாமே. எதற்கு சுற்றி வளைக்க வேண்டும் ?
அப்படி சொல்லாததற்கு காரணம் அர்த்தம் அதுவல்ல.
7 மகரிஷிகள் என்பது ஒரு குறியீடு. அது ஏழு ரிஷிகளை, அவர்களின் உடலை குறிப்பது அல்ல.
நிரந்தரமான உண்மைகள் அல்லது அறிவு (Cosmic Consiousness ) , நம்முடைய சொந்த அறிவு, ஐந்து புலன்கள் இந்த ஏழையும் தான் ஏழு ரிஷிகள் என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த உலகம் எப்படி தோன்றுகிறது ?
நம் புலன்கள் நம் அறிவுக்கு உணர்த்துவதால் நாம் இந்த உலகை அறிகிறோம்.
புலன்கள் அனுபவங்களை நம் அறிவுக்கு செலுத்திக் கொண்டே இருக்கின்றன.
அறிவு அவற்றை பெற்று, அவற்றை சேர்த்து வைக்கிறது, ஆராய்கிறது. நல்லது கெட்டது என்று தீர்மானிக்கிறது.
அந்த அறிவை இயக்குவது எது ? அது, அறிவு இந்த புலன்கள் இவை அனைத்தும் சேர்ந்து இந்த உலகை உருவாக்குகின்றன.
சரி, இவை ஏழு ரிஷிகள் என்று வைத்துக் கொள்வோம்.
யார் இந்த நான்கு மனுக்கள்?
இந்த உலகை படைக்க நினைத்த பிரமா நான்கு புதல்வர்களை உருவாக்கினார்.
அவர்கள் தான் இந்த நான்கு மனுக்கள்
அவர்கள்
சனத்குமாரர்
சனக
சனாதன
சனந்தன
எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்முள் எழுகிறது. அந்த எண்ணம் செயல் வடிவம் பெறுகிறது. உடலும், உள்ளமும், அறிவும் மனமும் ஒன்று சேர்ந்து அவற்றை உருவாக்கின்றன.
இதில் இருந்து பிறந்ததுதான் உலகம் மற்றும் இந்த உயிர்கள்.
பிரமா என்பது, மனுக்கள் என்பதும், மகரிஷிகள் என்பதும் வேறு யாரும் அல்ல. நீங்கள் தான்.
உங்களுக்குள் இருக்கும் படைக்கும் ஆற்றல் தான் பிரமா. அதன் வேறு வேறு கூறுகள்தான் மனுக்கள். அந்த படைப்பாற்றலை செயலாக்குவது உங்கள் அறிவும், உங்கள் புலன்களும் தான்.
இப்படியும் சிந்திக்கலாமே ...
No comments:
Post a Comment