Saturday, May 24, 2014

கீதை - ஒரு இடை நிரவல் (interlude )

கீதை - ஒரு இடை நிரவல் (interlude )


இதுவரை கீதையில் பாதி வரை வந்து விட்டோம்.

கீதை என்ன தான் சொல்ல வருகிறது ? கீதையின் நோக்கம் என்ன ? அது எந்த மாதிரி நூல் ? - அற நூலா ? நீதி நூலா ? தத்துவ நூலா ? சமய நூலா ?

கீதைக்கு பல பேர் உரை எழுதி இருக்கிறார்கள். ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு மாதிரி  இருக்கிறது.ஒன்றுகொன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறது. இப்படி வேறு பட்ட உரைகள் எப்படி ஒரே சுலோகத்திற்கு இருக்க முடியும் ?

கீதையின் பல உரைகளைப் வாசித்த பின், கீதை பற்றி மற்றவர்கள் எழுதியதை வாசித்த பின் எனக்கு தோன்றும் சில விஷயங்களை இங்கே தருகிறேன்:

1. கீதை எழுதப்பட்ட காலம். இது மிக மிக சரியாகத் தெரியவில்லை. தோராயமாக கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுக்கு முன்னால் எழுதப்படிருக்கலாம் என்று கருதுகிறார்கள். இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தையது.

2. கீதை எழுதப்பட்ட காலத்தில் இந்து மதம் பல பிரிவுகளை கொண்டு இருந்திருகிறது.  பிரிவுகளுக்கு இடையே சண்டைகள், சச்சரவுகள், எது சரி எது தவறு என்ற விவாதங்கள் இருந்திருக்க வேண்டும்.

3. அப்படி என்னென்ன பிரிவுகள் இருந்தன ? அவற்றின் நோக்கங்கள் என்ன ?

4. ஞான மார்க்கம் - உண்மையை அறிவது, உண்மையைத் தேடுவது, வேதங்கள் மற்றும்   நூல்களில் இருந்து  வாழ்கை,அதன் நோக்கம், இவற்றைப் பற்றி  அறிந்து கொள்வது. இது ஒரு மார்க்கம்.

4. கர்ம யோகம் - படிப்பறிவு என்பது எல்லோராலும் அடையக் கூடியது அல்ல. அதுவும்  அந்தக் காலத்தில் அறிவைப் பெறுவது மிக மிக கடினமான ஒன்று. ஞான மார்க்கம் ஒன்றுதான் வழி என்றால் , மிகப் பெரும்பான்மையோரால் அடைய முடியாத ஒன்று அது.  எனவே, கர்ம யோகம் என்று ஒரு பிரிவு ஏற்பட்டது. செய்யும் தொழிலை சிறப்பாக செய்வது, அதில் பற்று இல்லாமல் செய்வது, சுயநலம் இன்றி செய்வது என்று செய்யும் செயல்கள் மூலம் வாழ்வின் நோக்கை அடைவது.

5. ஞானத்தையும் பெற முடியாமல், வேலையும் அதிகம் செய்ய முடியாத ஒரு பிரிவு பக்தி என்று ஒன்றை அடிப்படியாகக் கொண்டு இருந்தது. இறைவனை வழிபடுவது, அவன் பெருமைகளை பேசுவது, அவனை போற்றுவது, அவனே எல்லாம் என்று எண்ணுவது என்ற ஒரு மார்க்கம்.

6. இந்த மூன்று வழிகளைத் தவிர்த்து சாங்கிய யோகம் என்று ஒன்று இருந்தது. சாங்கிய யோகம் ஆத்மா (spirit ) , உடல், மனதின் குணங்கள் என்று இவற்றைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. மூன்று விதமான குணங்கள் (சத்வ, தமோ, இராஜச), அவை எப்படி வருகின்றன, அவை எப்படி வெளிப் படுகின்றன என்பதை ஆராய்கிறது. கீதை இந்த சாங்கிய யோகத்தை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது.

7. இப்படி ஞானம், கர்மம், பக்தி, சாங்க்ய என்ற பிரிவுகளை ஒன்றாக்க கீதை முயல்கிறது. சிக்கல் என்ன என்றால் ஞானத்தைப் பற்றி பேசும்போது ஞானம்தான் உயர்ந்தது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. மற்றவற்றைப் பேசும்போதும்  அப்படியே. இதில் ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்று சொல்ல முடியாமல் கீதை எல்லாமே உயர்ந்ததுதான் என்று சொல்கிறது. ஒருங்கிணைக்கும் முயற்சியில் இது தவிர்க்க முடியாதது.

8. பக்தி யோகம் பிடித்தவர்கள், கீதை பக்தி யோகத்தைத்தான் சொல்கிறது என்று கொண்டாடும்போது, ஞான யோகம் பிடித்தவர்கள் , இது என்ன பக்தி யோகம் என்று எரிச்சல் அடைவது இயற்கை. பின்னால் வந்தவர்கள், பக்தி யோகமும் ஒரு விதத்தில் ஞான யோகம் தான் என்று சொல்லத் தலைபட்டார்கள். இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

9. பக்தி யோகம் வேர் பிடிக்க வேண்டும் என்றால் பக்தி செய்யப்படும் இறைவனைப் பற்றி உயர்வாகப் பேச வேண்டும். அவன் பெருமைகள், விஸ்வ ரூப தரிசனம் என்று கீதை மிக விரிவாகப் பேசுகிறது. இது என்ன விஸ்வரூபம், இது எல்லாம் முடியுமா, இது இயற்கைக்கு, அறிவியலுக்கு விரோதமாக இருக்கிறதே என்று தோன்றலாம். அது தவிர்க்க முடியாதது.

10. கீதையை படித்து முடிக்கும் போது, வாழ்வைப் பற்றி ஒரு புதிய பார்வை பிறக்கும் என்றே தோன்றுகிறது. நம் சிந்தனையின் போக்கை அது மாற்றும் என்றே நான் நினைக்கிறேன்.

11. கீதையில் இருந்து நமக்கு பிடித்தவற்றை, நம்மால் செயல் படுத்த முடிந்தவற்றை எடுத்துக் கொள்வோம். மூலிகை செடியின் ஒவ்வொரு பகுதியும் ஒரு நன்மையைத் தரும். நமக்கு வேண்டியதை நாம் எடுத்துக் கொள்வோம்.








No comments:

Post a Comment