Wednesday, May 7, 2014

கீதை - 10.10 - அன்பு ஞானத்தைத் தரும்

கீதை - 10.10 - அன்பு ஞானத்தைத் தரும் 


तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् ।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥१०- १०॥

தேஷாம் ஸததயுக்தாநாம் ப⁴ஜதாம் ப்ரீதிபூர்வகம் |
த³தா³மி பு³த்³தி⁴யோக³ம் தம் யேந மாமுபயாந்தி தே || 10- 10||

தேஷாம் = அவர்களுக்கு
ஸததயுக்தாநாம் = எப்போதும் செயல்பட்டுக் கொண்டு
ப⁴ஜதாம் = பஜனை
ப்ரீதிபூர்வகம் = அன்புடன் என்னை வழிபட்டு 
த³தா³மி = நான் தருகிறேன்
பு³த்³தி⁴யோக³ம் = ஞான யோகம்
தம்= அது
யேந = அதனால்
மாம் = என்னிடம்
உபயந்தி = வருபவர்கள்
தே = அவர்கள்


எப்போதும் அன்புடன் என்னை வழிபடுவோருக்கு நான் ஞான யோகத்தை அளிக்கிறேன். அதனால் அவர்கள் என்னை அடைவார்கள்

ஞானம் எப்படி கிடைக்கும் ?

நிறைய புத்தகங்களை படிப்பதின் மூலமா ? படித்தவர்கள் சொல்வதை கேட்பதன் மூலமா ? நிறைய சிந்திப்பதன் மூலமா ? அல்லது இவை அனைத்தின் மூலமா ?

உண்மையான ஞானம் மிகப் பரந்துபட்டது. அதை ஒரு வாழ்நாளில் படித்து , கேட்டு  அறிந்து கொள்ள முடியுமா ?

அதற்கு முன்னால் நம்மால் ஏதாவது ஒன்றைப் பற்றி முழுவதுமாக எப்போதாவது  அறிந்து கொள்ள முடியுமா ?

ஒரு உப்புக் கல்லை பற்றி நம்மால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. அதைப் பற்றி ஆராய  முற்பட்டால் அது போய் கொண்டே இருக்கும்.

முடிவே இல்லை.

இப்படி ஒரு சின்ன உப்புக் கல்லை நம்மால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது என்றால்  மீதி உள்ளவற்றை என்று அறிந்து கொள்வது.

கண்ணன் கூறுகிறான் - நான் ஞான யோகத்தைத் தருகிறேன் என்று.

எப்போது ?

 எப்போதும் என்னை அன்புடன் வழிபடுபவர்களுக்கு

"என்னை" என்று சொல்வது முன்பே கூறியது போல கண்ணன் என்ற ஒரு மனித உருவை  அல்ல. இதை கண்ணனே கூறியிருக்கிறான் "மானிடர்கள் என் மனித  வடிவில் மயங்கி என் பெருமை உணரமாட்டார்கள் " என்று.

"என்னை " என்பதை ஒரு உருவத்தில் அடைக்காதீர்கள்.

என்னை என்பதை உங்களுக்குள் இருக்கும் அந்த உண்மையை, உயிரை, ஆத்மாவை, நான் என்ற அந்த ஒன்றை.....ஆங்கிலத்தில் சொல்வது என்றால் "Self ".

 பஜனை என்ற சொல்லுக்கு வழி பாடு என்பதை விட "உள்ளே இருப்பதை வெளியே கொண்டு  வருவது" என்ற அர்த்தம் சரியாக இருக்கும்.

அதை கடமையே என்று செய்யாமல் அன்புடன் செய்யும்போது ஞானம் பிறக்கும்.

ஞானம் என்பது அன்பில் பிறப்பது.

அன்பு என்பது எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்ப்பது.

அன்பைத் தாண்டி ஞானம் இல்லை.

மனதில் அன்பு பெருக்கெடுக்கும் போது உண்மை  விளங்கும்.

அன்பு அறியமுடியாதவற்றை அறிய வைக்கும்.

 உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

கற்றது போதும், உன் திருவடிகளில் கசிந்து உருக வேண்டுகிறேன் என்று உருகுகிறார்  மணிவாசகர்.

அன்பு வரும்போது நான் என்ற அகந்தை மறையும்.

வேற்றுமைகள் மறையும்.

இடைவெளி குறையும்.

உண்மை வெளிப்படும்.




No comments:

Post a Comment