Tuesday, June 17, 2014

கீதை - 10.26 - மறு பதிப்பு

கீதை - 10.26 -  மறு பதிப்பு 


अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥१०- २६॥

அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³: |
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: || 10- 26||


அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் = மரங்களில் நான் அரச மரம்

தே³வர்ஷீணாம் ச நாரத³:  = தேவ ரிஷிகளில் நான் நாரதன்

க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: = கந்தவர்களில் நான் சித்ரதரன்

 ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: = சித்தர்களில் நான் கபில முனி


மரங்களில் நான் அரச மரம் ,  தேவ ரிஷிகளில் நான் நாரதன், கந்தவர்களில் நான் சித்ரதரன் , சித்தர்களில் நான் கபில முனி. 

ஒவ்வொன்றிலும் சிறந்தவற்றை கூறிக் கொண்டே வந்த கண்ணன், மரங்களிலும், ரிஷிகளிலும், கந்தர்வர்களிலும், சித்தர்களிலும் தான் யார் என்று கூறுகிறான்.

சித்தர்களில் நான் கபில முனி என்கிறான்.

இந்த கபில முனி யார் ? இவர் என்ன செய்தார் ?

கபில முனி சாம்க்ய, (அல்லது சாங்க்ய ) யோகம் என்ற ஒன்றை வகுத்துத் தந்தார்.

கீதை சாங்கிய யோகத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப் பட்டது.

கீதையில் பல இடங்களில் சாங்க்ய யோகத்தைப் பற்றிய குறிப்புகளை காணலாம்.

கீதையின் இரண்டாவது அத்யாயம் "சாங்க்ய யோகம் "  என்பதாகும்.

சரி, இந்த சாங்க்ய யோகம் என்றால் என்ன ?


 இந்து மதத்தின்  தத்துவங்களை இரண்டு கூறாகப் பிரிக்கலாம்

ஒன்று வேதாந்தம் இன்னொன்று சாங்கியம்.

வேதாந்தம் என்பது தத்துவம் சார்ந்தது.

சாங்கியம் என்பது உலகியலை அடிப்படையாகக் கொண்டது.

இனி, கீழே வருபவை சாங்கிய யோகத்தின் கூறுகள். ஒவ்வொரு முறையும், "சாங்கிய யோகத்தின் படி " என்று கூறாமல், மொத்தமாக முதலிலேயே சொல்லி விடுகிறேன்.


இந்த உலகம் இரண்டு விஷயங்களால் ஆனது

ஒன்று - உயிர் அற்றது (பொருள் அல்லது matter ). இது பிரக்ரிதி எனப்படும்.

இரண்டாவது - உயிர் அல்லது spirit என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது  புருஷம் அல்லது புருஷா என்று சொல்லப் படுகிறது.

பிரக்ரிதி தனித்து இயங்க முடியாது. பிரகிர்த்தி என்பது புருஷத்தால்  இயக்கப் இயக்கப் படுகிறது.

இந்த பிரக்ரிதிக்கு மூன்று குணங்கள் உண்டு - ராஜசம், தாமசம் மற்றும் சாத்வீகம் என்று.

இந்த சாங்க்ய யோகம் மேலும் மிக மிக ஆழமாகப் போகிறது. குணங்கள், அறிவு, தத்துவம், இவை எப்படி உருவாகின்றன என்று சொல்லுகிறது.

இதில் மிக மிக முக்கியமான ஒன்று எது என்றால்

சாங்க்ய யோகம் கடவுள் என்று ஒன்று இருப்பதை ஒத்துக் கொள்ளவில்லை.

அதற்கு சாங்க்ய யோகம் கூறும் காரணம் மிக மிக ஆச்சர்யமான ஒன்று.

கடவுள் எப்போதும் நிரந்தரமாக மாறாமல் இருப்பவர் என்றால், இந்த உலகில் நடக்கும்  காரியங்களுக்கு அவர் காரணமாக இருக்க முடியாது.

ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால் அதற்கான காரணம் மாறும் தன்மை உடையாதாக இருக்க வேண்டும்.

மாறாத ஒன்று மாறும் பலப் பல காரியங்களை உண்டாக்க முடியாது.

இந்த சாங்கிய தத்துவத்தை தொகுத்து அளித்தவர் கபில முனி.

முனிவர்களில் நான் சாங்க்ய முனியாக இருக்கிறேன் என்கிறான்  கண்ணன்.

 கடவுள் இல்லை என்ற தத்துவத்தை சொன்ன சாங்க்ய முனியாக நான் இருக்கிறேன் என்று கண்ணன் சொல்லுவதின் அர்த்தத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

நான் என் எண்ணங்களைச்  சொன்னால், வலிந்து பொருள் கூறுவதாக  ஆகும்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அப்படியே ஆகட்டும்.





1 comment:

  1. Thanks for sharing info on கபில முனி Need more info on அரச மரம் ,
    ரிஷி நாரதன் ( Very Little known ) , சித்ரதரன்

    ReplyDelete