கீதை - 10.22 - உயிர்களில் உணர்வு நான்
वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः ।
इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना ॥१०- २२॥
வேதா³நாம் ஸாமவேதோ³ऽஸ்மி தே³வாநாமஸ்மி வாஸவ: |
இந்த்³ரியாணாம் மநஸ்²சாஸ்மி பூ⁴தாநாமஸ்மி சேதநா || 10- 22||
வேதா³நாம் ஸாமவேத³: அஸ்மி = வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன்
தே³வாநாம் வாஸவ: அஸ்மி = தேவர்களில் நான் இந்திரனாக இருக்கிறேன்
இந்த்³ரியாணாம் மந அஸ்மி = புலன்களில் நான் மனமாக இருக்கிறேன்
ச பூ⁴தாநாம் சேதநா அஸ்மி = மேலும் அனைத்து உயிர்களிலும் நான் உணர்வாக இருக்கிறேன்
வேதங்களில் நான் சாம வேதமாகவும்,தேவர்களில் நான் இந்திரனாகவும், புலங்களில் மனமாகவும், உயிர்களில் உணர்வாகவும் நான் இருக்கிறேன்.
மெய், வாய், விழி, செவி, நாசி என்று ஐந்து புலன்கள் தான் நமக்குத் தெரியும். மனம் ஆறாவது புலன் என்பதை எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னவர்கள் அறிந்து இருக்கிறார்கள். மனதின் மூலமும் நான் உலகை அறிய முடியும். புலன்கள் மட்டும் அல்ல, மனமும் உலகை அறிய உதவும் ஒரு கருவி. இப்படி மொத்தம் ஆறு புலன்கள். இந்த ஆறு புலன்களில் நான் மனமாக இருக்கிறேன் என்கிறான் கண்ணன்.
இந்த ஐந்து புலன்கள் கொண்டு வந்து தரும் உணர்வுகளை தொகுத்து நாம் இந்த உலகை அறிந்து கொள்ள உதவுவது மனம் அல்லது அறிவு. அறிவு வேலை செய்யவில்லை என்றால் புலன்கள் சரியாக இருந்து பயன் இல்லை.
புலன்களை கட்டுப் படுத்தி அவைகளை நல்ல வழியில் செலுத்துவது நம் மனம் அல்லது அறிவு.
நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும் மனம் தான் கண்ணன். கண்ணன் என்பவன் வெளியே இல்லை. உள்ளே தேடுங்கள்.
அனைத்து உயிர்களிலும் நான் உணர்வாக இருக்கிறேன்.
அறிவும், உணர்வும் சேர்ந்த ஒன்று தான் நாம்.
அறிவு ஒரு கணிப்பொறியில் இருக்கலாம். அதற்கு உணர்வு கிடையாது.
விலங்குகளுக்கு உணர்வு உண்டு. அறிவு இல்லை. ,எது சரி, எது தவறு என்று சிந்திக்கும் அறிவு இல்லை.
அறிவும் , உணர்வும் சேரும் அந்த புள்ளிதான் நாம் - அது தான் இறை.
இவை இரண்டும் சரியாக சேராவிட்டால் மனிதன் தடுமாறிப் போகிறான்.
வெறும் உணர்ச்சி மட்டும் இருந்தால் அவன் ஒரு மிருகம்.
வெறும் அறிவு மட்டும் இருந்தால் அவன் ஒரு ஜடம்.
இரண்டும் ஒன்றாகக் கலக்க வேண்டும். ஒன்றை ஒன்று வழி நடத்த வேண்டும்.
சிந்தித்துப் பாருங்கள் ....உங்களின் கலவை விகிதம் என்ன என்று
Hmmm what is your proportion between emotion and intelligence ? excellent questions
ReplyDelete