கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன் - பாகம் 2
अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥१०- २९॥
அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||
அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் = நாகர்களில் நான் அநந்தன்
வருணோ யாத³ஸாமஹம் = நீர் வாழ்வோரில் நான் வருணன்
பித்ரூணாமர்யமா = பித்ருகளில் நான் அரியமான்
சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் = யமனாக இருக்கிறேன் அடக்கி ஆள்பவர்களில்
நாகர்களில் நான் அனந்தனாகவும், நீர் வாழ்வோரில் வருணனாகவும், பித்ருகளில் அரியமானாகவும், அடக்கி ஆள்வோரில் யமனாகவும் இருக்கிறேன்.
ஆள்வோரில் நான் யமனாக இருக்கிறேன்.
எமன் உயிரை எடுப்பவன் என்றுதான் அறிந்து இருக்கிறோம். அவன் எப்படி ஆள்பவனாக முடியும். அதிலும், காக்கும் கடவுளான கண்ணன் (திருமால் ) எப்படி நான் எமனாக இருக்கிறேன் என்று சொல்ல முடியும் ?
இறப்பு என்பது என்ன ? அழித்தல் என்பது என்ன ? அழிதல் என்றால் என்ன ?
மலர் பார்க்க அழகாக இருக்கிறது ? அந்த அழகு எப்படி வந்தது ? விதை அழிந்ததால் வந்த செடியில் இருந்து மலர் வந்தது. விதை அழியாமல் இருந்திருந்தால் மலர் வந்தே இருக்காது.
மழை அழகு. மேகம் அழிந்தால் தான் மழை வரும்.
பட்டாம் பூச்சி அழகு. கூட்டுப் புழு அழிந்தால் தான் பட்டாம் பூச்சி வரும்.
கூட்டுப் புழுவுக்கு வருத்தம் இருக்கும், விதைக்கு வருத்தம் இருக்கும், மேகத்திற்கு வருத்தம் இருக்கும் நாம் அழிகிறோமே என்று.
ஆனால் அந்த அழிவில் தான் அதை விட சிறந்த ஒன்று பிறக்கப் போகிறது என்று அவைகளுக்குத் தெரியாது. நமக்குத் தெரியும்.
ஒவ்வொரு ஆக்கத்தின் , தோற்றத்தின் பின்னால் ஒரு அழிவு இருக்கிறது. சொல்லப் போனால் அழிவும் ஆக்கமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை.
இன்னும் சொல்லப் போனால் அவை இரண்டுமே ஒன்றுதான்.
அழிவும் ஆக்கமும் ஒரு தொடர்ச்சியான செயல்.
நாம் அழிவை மட்டும் பார்த்து விட்டு வருந்துகிறோம். விதையைப் போல, மேகத்தைப் போல.
அழிவு என்பது ஆக்கத்தின் ஒரு கூறு.
ஆக்கம் என்பது அழிவின் ஒரு கூறு.
அப்படி என்றால் இந்த இரண்டுக்கும் இடையே சில காலம் இருக்கிறதே அதைத்தான் நாம் காத்தல் என்கிறோம்.
ஆனது எல்லாம் அழிவை நோக்கி நடந்து கொண்டே இருக்கிறது.
அழிவு என்பது ஆக்கம் என்பதை தன் கருவில் வைத்து இருக்கிறது.
அழிவு ஆக்குகிறது.
இதை இரண்டையும் செய்பவன் எல்லாவற்றையும் ஆள்பவன் தானே ?
எனவே நான் ஆள்வோரில் யமனாக இருக்கிறேன் என்றான்.
சிந்திப்போம்.
Too good RS firing on all cylinders .........Nr
ReplyDelete