Tuesday, June 25, 2019

பகவத் கீதை - 2.43 - கிரியைகளும் பலன்களும்

பகவத் கீதை - 2.43 - கிரியைகளும் பலன்களும் 


கோவிலுக்குப் போனால், கோவிலின் வெளியில் சில பிச்சைக் காரர்கள் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்கள். "அம்மா, தாயே, ஐயா சாமி தர்மம் பண்ணுங்கள் " என்று பிச்சை கேட்பார்கள்.

"இந்த பிச்சைகாரங்க தொல்லை தாங்க முடியல...நிம்மதியா இருக்கலாம்னு கோவிலுக்கு வந்தால், இங்க இவங்க தொல்லை " என்றது முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போவார்கள்.

உள்ளே போய் , "கடவுளே, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, என் பிள்ளைக்கு நல்ல காலேஜ் ல இடம் கிடைக்கணும், பொண்ணுக்கு நல்ல இடத்தில வரன் அமையனும், இந்த வருஷமாவது பதவி உயர்வு கிடைக்கணும்..." என்று இறைவனிடம் பிச்சை எடுப்பார்கள்.

சீ சீ...நான் எல்லாம் அப்படி கிடையாது. கடவுள் கிட்ட அது வேணும் இது வேணும் என்று கேட்க மாட்டேன். இந்தப் பிறவி போதும், உன்னிடம் வந்து சேர வேண்டும், வைகுந்தமோ,  கைலாயமோ உன் திருவடிக் கீழ் இருக்க வேண்டும் என்று தான் வேண்டுவேன் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

அது வேறு வகைப் பிச்சை.

பசிக்கு சோறு போடு என்றாலும் பிச்சைதான், சொகுசுக்கு bmw கார் வேண்டும் என்று கேட்டாலும் பிச்சைதான், வைகுண்டம், கைலாயம் கேட்டாலும் பிச்சைதான்.

எல்லாமே ஆசைதான். அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்பது.

திருமூலர் சொல்லுவார்,

ஆசை அறுமின், ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்று.

இறைவா நீ தான் வேண்டும் என்று கேட்டாலும், அதுவும் ஒரு ஆசை தான்.

சரி, ஆசையே இல்லாமல் இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும், அது ஒரு   வாழ்க்கையா? மண் புழு போன்ற ஒரு வாழ்க்கை தேவையா ?

வாழ்க்கை என்றால், ஆசை இருக்கும், சில நிறைவேறும், சில நிறைவேறாது.  அதற்காக  ஆசையே படாதே என்றால் என்ன அர்த்தம்.

ஆசையே படாதே என்றா கீதை சொல்கிறது?

மத்ததெல்லாம் விடுங்கள். ஆணுக்கு பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும்  ஆசை இல்லை என்றால், இந்த உலகம் அழிந்து விடாதா?

இல்லை. கீதை அப்படி சொல்லவில்லை.

மதம் என்பது, ஒரு ஆன்மீகப் பயணம். அந்த பயணத்தின் நோக்கம், நம்மை நாம் அறிவது.  அறியாமை  என்ற தூக்கத்தில் இருந்து விழிப்பது. எது உண்மை என்று அறிந்து கொள்வது.

காலையில் எழுந்தோம், காப்பி குடித்தோம், குளித்தோம், வேலைக்கு போனோம் அல்லது வீட்டு வேலை செய்தோம்,  மதியம் சாப்பாடு, இரவு தூக்கம் என்று  பொழுதை கழிப்பதா வாழ்க்கை?

ஏன் வந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், வாழ்வின் குறிக்கோள் என்ன,  நமக்கு ஏன் துன்பம் வருகிறது, ஏன் மனிதர்கள் எப்போதும் வருத்தத்தில் இருக்கிறார்கள் , நான் யார் என்றெல்லாம் சிந்தித்து விடை காண்பதுதான்  மதத்தின் நோக்கம்.

அதை விட்டு விட்டு, பூஜை, யாகம் போன்ற புற வழிபாடுகள் செய்து, அதன் மூலம்  எனக்கு அது வேண்டும், இது வேண்டும் கேட்டுக் கொண்டிருப்பது அல்ல  மதத்தின் நோக்கம் என்கிறது கீதை.

இப்போது, ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

பாடல்



कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम्।
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति॥४३॥

காமாத்மாந: ஸ்வர்க³பரா ஜந்மகர்மப²லப்ரதா³ம்|
க்ரியாவிஸே²ஷப³ஹுலாம் போ⁴கை³ஸ்²வர்யக³திம் ப்ரதி ||2-43||


காமாத்மாந: = ஆசையில் அகப்பட்டவர்கள், ஆசையில் மூழ்கியவர்கள்

ஸ்வர்க³பரா  = ஸ்வர்கம் வேண்டும் என்று மிக விரும்புவார்கள்

ஜந்ம = பிறப்புக்கும்

கர்ம = செய்கின்ற தொழிலுக்கும்

ப²லப்ரதா³ம் = பலனை பிரதானமாக எதிர்பார்ப்பவர்கள்

க்ரியா = கிரியைகள். யாகம், பூஜை போன்றவை

விஸே²ஷ = சிறப்பான, விசேஷமான

ப³ஹுலாம் = பல விதமான

போ⁴கை = போகம் (வீடு, வாசல், சொத்து, சுகம் போன்றவை)

³ஸ்²வர்யக³திம் = ஸ்வர்கத்தை அடைய வேண்டும் என்று

ப்ரதி  = நோக்கத்துடன்


போகம் வேண்டும், ஸ்வர்கம் வேண்டும், என்று பலவிதமான கிரியைகளை செய்பவர்களை கீதை கண்டிக்கிறது. 

திருமணம் ஆகவில்லையா - இந்தக் கோவிலில், இந்த சாமிக்கு இந்த கிழமையில் இன்ன பூஜை செய்தால், திருமணம் ஆகும்.

வேலை வேண்டுமா, கணவன் மனைவி உறவு சீர் பட வேண்டுமா? சொத்துத் தகராறு தீர வேண்டுமா,  பதவி உயர்வு வேண்டுமா ? வியாபாரத்தில் இலாபம் வேண்டுமா, அயல் நாட்டில் வேலை வேண்டுமா ...அததுக்கு ஒரு பூஜை, ஒரு கிரியை  என்று வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்....கீதை பிறந்த காலம் தொட்டு இது நடந்து கொண்டிருக்கிறது.

ஆன்மீகம் என்பது அது அல்ல. தன்னைத்தான் அறிவதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்.

கீதை அதற்குத்தான் வழி சொல்லுகிறது.

நீங்கள், என்னென்ன வேண்டும் என்று என்னென்ன பூஜை செய்து கொண்டிருக்கிறீர்கள்?

சிந்திப்போம்.

https://bhagavatgita.blogspot.com/2019/06/243.html

No comments:

Post a Comment