Sunday, November 23, 2014

கீதை - 11.22 - தொடரும் ஆச்சர்யம்

கீதை - 11.22 - தொடரும் ஆச்சர்யம் 


रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेऽश्विनौ मरुतश्चोष्मपाश्च ।
गन्धर्वयक्षासुरसिद्धसंघा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे ॥११- २२॥

ருத்³ராதி³த்யா வஸவோ யே ச ஸாத்⁴யா விஸ்²வேऽஸ்²விநௌ மருதஸ்²சோஷ்மபாஸ்²ச |
க³ந்த⁴ர்வயக்ஷாஸுரஸித்³த⁴ஸங்கா⁴ வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்²சைவ ஸர்வே || 11- 22||


ருத்ரா = ருத்திரர்களும்
ஆதித்யா = ஆதித்தன் வழி வந்தவர்களும்
வஸவோ = வசுக்களும்
யே = அவர்களும்
ச = மேலும்

ஸாத்யா =  சாத்யர்களும்

விஸ்²வே = அனைத்து கடவுள்களும்

அஸ்விநௌ = அஸ்வினி குமாரர்களும்

மருதஸ் = காற்றின் கடவுளும்

ச = மேலும்

உஷ்மபாஸ் = அக்னி கடவ்ளும்

ச = மேலும்

கந்தர்வ = கந்தர்வர்களும்

யக்ஷாஸுர = யக்ஷர்களும் அசுரர்களும்

ஸித்த = சித்தர்களும்

ஸங்கா = கூட்டம்

வீக்ஷந்தே = பார்க்கிறார்கள்


த்வாம் = உன்னை

விஸ்மித்தாஸ் = ஆச்சர்யத்துடன்

ச = மேலும்

இவ = நிச்சயமாக

ஸர்வே = அனைத்தையும்


ருத்திரர்களும், ஆதித்யன் வழி வந்தவர்களும் , வசுக்களும், சாத்யர், விசுக்களும் , அசுவினி தேவர்களும் , காற்று மற்றும் அக்னி தேவர்களும் , கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் என்று அனைத்து கூட்டத்தாரும் உன்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் 

எல்லோருக்குமே ஆச்சரியம்.

ஏன் ஆச்சரியம் ?

புரியாதது புரியும்போது அட, இது இப்படியா இருக்கிறது என்று ஆச்சரியம் விளையும்.

அறியும் வரைதானே ஆச்சரியம் இருக்க வேண்டும். மேலே கூறியவர்கள் விஸ்வரூபத்தை  அறியாதவர்களா ? பின் ஏன் ஆச்சர்யம் ?

ஆச்சர்யம் ஏன் என்றால், அவர்களால் அதை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை .

அறிய அறிய மேலும் மேலும் புதிதாக ஏதோ தோன்றிக் கொண்டே இருப்பதால் அவர்களின் ஆச்சர்யம் தீரவில்லை.

உயிர்ப்புள்ள எதுவும் மாறிக் கொண்டே இருக்கும். உயிரில்லாதது மாறாமல் அப்படியே இருக்கும்.

உண்மையான ரோஜா மாறிக் கொண்டே இருக்கும்.

காகிதப் பூ என்றும் அப்படியே இருக்கும்.

விஸ்வரூபம் என்பது உயிருள்ளதது. நாளும் விரிந்து கொண்டே போவது.

எனவே ஆச்சர்யம் தொடர்கிறது.



Saturday, November 22, 2014

கீதை - 11.21 - எல்லோரும் உன்னை அடைகின்றனர்

கீதை - 11.21 - எல்லோரும் உன்னை அடைகின்றனர் 


अमी हि त्वां सुरसंघा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृणन्ति ।
स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसंघाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः ॥११- २१॥

அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா⁴ விஸ²ந்தி கேசித்³பீ⁴தா: ப்ராஞ்ஜலயோ க்³ருணந்தி |

ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்³த⁴ஸங்கா⁴: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி⁴: புஷ்கலாபி

அமீ = அவர்கள்

ஹி = நிச்சயமாக

த்வாம் = உன்னை

ஸுர ஸங்கா = தேவர்களின் கூட்டம் (சுர - அசுர )

விஸ²ந்தி = அடைகிறார்கள் 

கேசித் = வேறு சிலரோ

பீ⁴தா: = பயத்தில்

ப்ராஞ்ஜலயோ = ப்ர + அஞ்சலி = கூப்பிய கைகளோடு - வணங்கிக் கொண்டு 

க்³ருணந்தி = போற்றி

ஸ்வஸ்தி = மங்களம் உண்டாகட்டும் என்று

இதி = இப்படி

யுக்த்வா  = கூறிக் கொண்டு (வாக் = வாக்கு , வார்த்தை )

மஹர்ஷி = மகரிஷிகள்

ஸித்த = சித்தர்கள்

ஸங்கா = கூட்டம்

ஸ்துவந்தி  = போற்றி

த்வாம் = உன்னை

ஸ்துதிபி: = துதி செய்து கொண்டு

புஷ்கலாபி = உரத்து சொல்லிக் கொண்டு


தேவர்களின் கூட்டம் உன்னுள்ளே புகுகின்றது. சிலர் பயம் கொண்டு உன்னை கை தொழுது உன்னை புகழ்கின்றனர். மகரிஷிகளும், சித்தர்களும் உன்னை உரத்த குரலில் தொழுது அடைகின்றனர். 


மூன்று வகையான விஸ்வரூப தரிசனங்களை எங்கே கீதை சொல்கிறது.

முதலாவது......

கடவுளை நாம் எப்போது நினைக்கிறோம் ?

துன்பம் வரும்போது, பயம் வரும்போது கடவுளை நினைக்கிறோம்.

நம்மால் முடியாது என்ற நிலை வரும் போது கடவுளை நினைக்கிறோம்.

மனித சக்தியை மீறிய ஒன்று இருக்கிறது என்ற நினைவு வரும்போது கடவுள் நினைவு வருகிறது.

அதை கடவுள் என்று சொல்லாவிட்டாலும் விதி, இயற்கை , மனிதனை மீறிய சக்தி என்று  பல பெயர்களில் கூறுகிறோம்.

இது ஒரு வகையில், இந்த உலகம் என்பது என்னைத் தாண்டி விரிந்து பட்டது என்று அறிய  உதவுகிறது. இந்த மிகப் பெரிய பிரபஞ்சத்தில் நான் ஒரு சின்ன துகள். இந்த பிரமாண்டத்தின் முன் நான் ஒன்றும் இல்லை என்ற நினைப்பு வர உதவுகிறது.

இது ஒரு வகை விஸ்வரூப தரிசனம். இதைத்தான் 

நான், என் திறமை, என் சாமர்த்தியம் , என் சமர்த்து என்ற நிலை கடந்து என்னால் ஆவது  ஒன்றும் இல்லை அறிவது.

இதைத்தான் "சிலர் உன் மீது பயம் கொண்டு உன்னை கைதொழுது அடைகிறார்கள்" என்கிறது கீதை.

அறியாமையினால் பயம் வருகிறது.


இன்னொரு வகையான விஸ்வரூப தரிசனம் எது வென்றால் , படித்து அறிந்து,  தெளிந்து அதை உணர்வது.

இந்த உலகம் தோன்றியது எப்படி, அதன் பிரமாண்டம், அதன் விரிந்துபட்ட வடிவம் , இதில் நம் நிலை என்று அறிந்து அந்த பிரமாண்டத்தை அறிவது இன்னொரு வகையான  விஸ்வரூப தரிசனம். இது அறிவின் பாற்பட்டது. அறிவு சலனம் கொண்டது. சந்தேகம் கொண்டது. ஒரு நாள் தெளியும், மறு நாள் சந்தேகம் கொள்ளும். தெளிவுக்கும், சந்தேகத்திற்கும் இடையே தர்க்கம் பண்ணிக்  கொண்டே இருக்கும். இந்த தர்க்கம் தான் இரைச்சல், கேள்வி, பதில், வாதம், பிரதி வாதம் என்று நீண்டு கொண்டே போகிறது.

இதைத்தான் கீதை "ரிஷிகளும், சித்தர்களும் உரத்த குரலில் கூறிக் கொண்டே உன்னை அடைகிறார்கள் " என்கிறது.

பூஜை, பஜனை, பாடல், ஆடல், திருவிழா, சடங்குகள், சம்ப்ரதாயங்கள், மந்திர உச்சாடனங்கள்  என்ற ஆரவாரம் கொண்டது.

இது இன்னொரு வகை.

மூன்றாவது வகை, இந்த விசவரூபத்தை அறிந்து, தெளிந்து, சந்தேகம் இல்லாமல், சப்த்தம் இல்லாமல் இது தான் உண்மை என்று அறிந்து அதில் இரண்டற கலப்பது. இன்னும் சொல்லப் போனால் அது வேறு தான் வேறு என்ற வித்யாசம் மறைந்து ஒன்றாகி விடுவது.  இதைத்தான் "தேவர்களின் கூட்டம் உன்னுள்ளே புகுகிறது" என்கிறது கீதை.

அவர்கள் இரண்டற கலக்கிறார்கள்.  புகுந்து விடுகிறார்கள். அந்த விஸ்வரோபத்தில் அவர்களும்  ஒரு பகுதியாகி விடுகிறார்கள்.

பயத்தினால் , அறியாமையினால் தன்னை காக்க வேண்டி அந்த உணர்வு பெறுவது ஒரு வகை.

அறிவின் துணை கொண்டு, இது இப்படித்தான் இருக்குமோ என்று உணரத் தலைப் படுவது இன்னொரு வகை.

பரிபூர்ணமாக உணர்ந்து, அதில் இரண்டற கலப்பது என்பது மூன்றாவது வகை.

பயம், அறியாமை, அறிவு, தெளிவு என்று இந்த பிரமாண்டத்தை அறியும் படிகள்  இவை.

மேலும் அறிவோம்....