Friday, June 29, 2018

பகவத் கீதை - 1.35 - இவர்களை கொல்ல மாட்டேன்

பகவத் கீதை - 1.35 - இவர்களை கொல்ல மாட்டேன் 



एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन।
अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते॥३५॥

ஏதாந்ந ஹந்துமிச்சா²மி க்⁴நதோऽபி மது⁴ஸூத³ந|
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ : கிம் நு மஹீக்ருதே ||1-35||

ஏதாந் = அவர்கள்
ந = இல்லை
ஹந்தும் = கொல்ல

இச்சா²மி = இச்சை இல்லை, ஆசை இல்லை

க்நதோ =  கொல்வதற்கு தயாராக உள்ள

அபி = இப்போது

மதுஸூதந| = மதுசூதனா

அபி = அது அன்றியில்

த்ரைலோக்ய = மூன்று உலகும்

ராஜ்யஸ்ய = உள்ள அரசும்

ஹேதோ : = கிடைத்தாலும்

கிம் = ஏன்

நு = இருந்தும்

மஹீக்ருதே  = இந்த உலகை ஆள

மதுசூதனா, மூன்று உலகும் கிடைத்தாலும், இவர்களை கொல்ல மாட்டேன். கேவலம் இந்த மண் உலகை ஆளவா , இவர்களை கொல்லுவேன். (ஒரு போதும் மாட்டேன்). அவர்கள் என்னைக் கொன்றாலும் அவர்களை நான் கொல்ல மாட்டேன். 

அர்ஜுனனின் வாதம் எல்லாம் அவனைச் சார்ந்தாகவே இருக்கிறது.

அவர்கள் என் உறவினர். அவர்களை கொன்றால் எனக்கு துக்கம் வரும். அவர்களை கொன்று நான் என்ன அடையப் போகிறேன்.

அவர்களை கொல்வதால், இந்த மூன்று உலகும் எனக்குக் கிடைத்தாலும் எனக்கு வேண்டாம். அப்படி இருக்க இந்த மண் உலகை ஆளவா, இவர்களை கொல்லுவேன். ஒரு காலும் மாட்டேன்.

என்று சின்ன பிள்ளை பள்ளிக் கூடம் செல்ல அடம் பிடிப்பதைப் போல அடம் பிடிக்கிறான்.

என் துக்கம், என் இலாபம், என் நட்டம் என்று தன்னை முன்னிறுத்தியே அர்ஜுனன் குழம்புகிறான்.

சுயநலம் முன் நின்றால் அனைத்து குழப்பமும் வரத்தான் செய்யும்.

எனக்கு என்ன கிடைக்கும், எவ்வளவு கிடைக்கும், எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டே இருந்தால், அர்ஜுனன் போல, எவ்வளவு திறமை இருந்தாலும் குழப்பமும் மயக்கமுமே மிஞ்சும்.

நாம் மட்டும்தானா உலகம். நம் உறவுகள், நம் சொந்தங்கள், நம் இலாப நட்டம் மட்டும்தானா உலகம்? அதை மட்டும் நாம் பார்த்தால் போதுமா ? இதைத்தாண்டி வேறு எதுவும் இல்லையா ?

நமக்கு கஷ்டம் என்றால் ஒரு வேலையை விட்டு விடலாமா ? நமக்கு இலாபம் இல்லை என்றால் நம்மை நம்பி ஒப்படைத்த ஒரு வேலையை விட்டு விடலாமா ?

பின்னால், கர்ம யோகத்தில் , பார்க்கப் போகிறோம். கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே என்று. இது நாள் வரை அந்த மகா வாக்கியத்தின் பொருள் பற்றிய சர்ச்சை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இங்கே, அர்ஜுனனுக்கு அவனுடைய உறவுகளை கொல்வதால் ஒரு பயனும் இல்லை. அதனால், அவன் யுத்த களத்தை விட்டு போகிறேன் என்கிறான்.

போகட்டுமா ? பலன் இல்லாத காரியத்தை ஏன் செய்ய வேண்டும் ? இன்பம் தராத காரியத்தை ஏன் செய்ய வேண்டும் ?

அர்ஜுனன் பார்ப்பது இலாப நட்டக் கணக்கு. உறவினர்களை கொல்வது நட்டம். இராஜ்ஜியம் கிடைப்பது இலாபம். இப்போதைக்கு நட்டம் அதிகமாகத் தெரிகிறது. எனவே வேண்டாம் என்கிறான்.

வாழ்க்கை என்பது வேறு இலாப நட்ட கணக்கா ?

http://bhagavatgita.blogspot.com/2018/06/135.html

Thursday, June 28, 2018

பகவத் கீதை 1.34 - உறவும் பகையும்

பகவத் கீதை  1.34 - உறவும் பகையும் 



आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः।
मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा॥३४॥

ஆசார்யா : பிதர : புத்ராஸ்ததை²வ ச பிதாமஹா :|
மாதுலா : ஸ்²வஸு²ரா : பௌத்ரா : ஸ்²யாலா : ஸம்ப³ந்தி⁴நஸ்ததா² ||1-34||

ஆசார்யா : = குருமார்கள்

பிதர : = பெரிய தந்தை, சிறிய தந்தை

புத்ரா = பிள்ளைகள்

ததா = இவ்வாறு

எவ = நிச்சயமாக

ச  = மேலும்

பிதாமஹா = தாத்தாக்கள்

மாதுலா : = தாய்வழி மாமன்கள்

ஸ்²வஸு²ரா : = மாமனார்கள்

பௌத்ரா : = பேர பிள்ளைகள்

ஸ்²யாலா : = மச்சினன்கள்

ஸம்பந்திநஸ் = மற்ற உறவினர்கள்

ததா² = இவ்வாறு, இங்கே


குரு, தந்தை, தாத்தா, பிள்ளைகள், பேரன்கள், உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள். 

உறவெல்லாம் பகையாக நிற்கிறது.

அர்ஜுனன் தடுமாறுகிறான். கடமைக்கு முன்னால் உறவு வந்து நிற்கிறது.

அது அர்ஜுனனின் தடுமாற்றம் மட்டும் அல்ல. நாம் நாளும் காணும் தடுமாற்றம் தான்.

பிள்ளை ஆசையாக கேட்கிறான் அல்லது கேட்கிறான் என்று செல் போன் , வீடியோ கேம் என்று வாங்கித் தருகிறோம். அதுவே அவர்களுக்கு பாதகமாக முடிகிறது. வாங்கித் தரவில்லை என்றால் அவர்கள் வருந்துவார்கள். வாங்கித் தராமல் இருப்பதுதான் பெற்றோர் என்ற முறையில் நமது கடமை. கடமைக்கு முன்னால் உறவு வந்து நிற்கிறது. பாவம், பிள்ளை என்ற பாசம் வந்து நிற்கிறது.

பெற்றோர் செல்லம் கொடுத்து கெட்ட பிள்ளைகள் எத்தனை.

கணவன் ஆசைப் படுகிறான் என்று , அவனுக்கு சர்க்கரை வியாதி இருந்தாலும், இனிப்பை செய்து கொடுப்பது. இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், உப்பை அதிகமாக உள்ள பண்டங்களை தருவது.  கடமை என்பது தராமல் இருப்பது. உறவு , உந்தித் தள்ளுகிறது.

இப்படி, கடமைக்கு முன்னால் உறவு பல இடங்களில் குறுக்கே நிற்கிறது.

இப்படி பலப் பல உதாரணங்களை சொல்லலாம்.

பெரிய உத்யோகத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சில  சௌகரியங்களை செய்து தருவது , கடமையை மீறி உறவுக்கு முக்கியத்துவம் தருவதால்  வருவது.

அர்ஜுனனின் தடுமாற்றம் உறவா, கடமையா என்பது. இந்த ஸ்லோகத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது அதுதான். அவனுக்குள் வேறு ஏதாவது குழப்பமோ அல்லது போராட்டாமோ இருந்திருக்கலாம். நமக்குத் தெரியாது.

நம்மால் அர்ஜுனனை புரிந்து கொள்ள முடிகிறது. அவன் சொல்வது சரிதானே? அப்பா, பிள்ளை, தாத்தா, மாமன், மைத்துனன், என்று எல்லோரையும் எதிர்த்து  சண்டை போட்டு, அவர்களை கொன்று அடையப் போவதுதான் என்ன ?

அர்ஜுனன் புலம்பிக் கொண்டிருக்கிறான். கண்ணன் ஒன்றுமே சொல்லவில்லை. பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

என்னதான் சொல்கிறான் என்று பார்க்கலாம் என்று காத்திருக்கிறான்.

நாமும்தான்.

http://bhagavatgita.blogspot.com/2018/06/134.html


Wednesday, June 27, 2018

பகவத் கீதை - 1.33 - இதெல்லாம் யாருக்காக ?

பகவத் கீதை - 1.33 - இதெல்லாம் யாருக்காக ?



येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च।
त इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि च॥३३॥

யேஷாமர்தே² காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போ⁴கா³ : ஸுகா²நி ச|
த இமேऽவஸ்தி²தா யுத்³தே⁴ ப்ராணாம்ஸ்த்யக்த்வா த⁴நாநி ச ||1-33||

யேஷாம் = யாருக்காக

அர்தே = அவர்களுக்காக

காங்க்ஷிதம் = விரும்பினோமோ

நோ  = நம்

ராஜ்யம் = இராஜ்யம்

போகா : = ஆடம்பரங்கள்

ஸுகாநி = சுகங்கள்

ச = மேலும்

த = அவர்கள்

இமே = இவர்கள்

அவஸ்திதா = அணிவகுத்து

யுத்தே =  யுத்தம் செய்ய

ப்ராணாம்ஸ் =  உயிரை

த்யக்த்வா = தியாகம் செய்யவும்

தநாநி = செல்வங்களை செல்வங்களை

ச = மேலும்


யாருக்காக நாம்  இராஜ்யத்தையும்,செல்வங்களையும், இன்பங்களையும் அடைய விரும்புகிறோமோ, அவர்களே தங்கள் செல்வங்களையும், உயிரையும் தியாகம் செய்ய இந்த போர்க் களத்தில் வந்து நிற்கிறார்கள் 

அர்ஜுனன் .தொடர்கிறான்..

கண்ணா, யாருக்காக நான் யுத்தம் செய்ய விரும்பிகிறேனோ, அவர்களே இங்கு வந்து போரில் உயிரை விட தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இறந்த பின், இந்த அரசையும், செல்வத்தையும் வைத்து என்ன செய்வது ?

இதை நாம் வேறு விதமாக சிந்திப்போம்.

வாழ் நாள் எல்லாம் செல்வம் வேண்டும் , செல்வம் வேண்டும் என்று அலைகிறோம். யாருக்காக ? பிள்ளைகளுக்காக, முடிந்தால் பேர பிள்ளைகளுக்காகவும். பிள்ளைகளை பார்க்க நேரம் இல்லை. மனைவியை இரசிக்க நேரம் இல்லை. ஒரே ஓட்டம்.

ஓடி ஆடி பணம் சேர்த்த பின், பிள்ளைகள் எங்கே என்று பார்த்தால், அவர்கள் படிப்பு, வேலை என்று வீட்டை விட்டு போய் இருப்பார்கள். அந்த செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ? மனைவிக்கும் வயதாகி இருக்கும். இளமை இருவருக்கும் போய் இருக்கும்.

பணம் இருக்கும். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

அர்ஜுனன் யோசிக்கிறான். நான் போர் செய்து, இருபுறமும் உள்ள நட்பும் உறவும் போன பின், இந்த செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ?

பணம் வேண்டும் தான். ஆனால், அதை அடைய நாம் கொடுக்கும் விலை என்ன என்று பார்க்க வேண்டும்.

குடும்பத்தை மறந்து, உறவுகளை மறந்து, வேலை, தொழில் என்று அலைவது சரிதானா ?

நாம் யாருக்காக ஒன்றைச் செய்கிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அது அவர்களுக்கு பயன்படுமா என்று பார்க்க வேண்டும்.

குருஷேத்ரம் என்றோ எங்கோ நடந்தது அல்ல.

நாளும் நம் வாழ்வில் நடப்பது.

அர்ஜுனனாக நடுவில் நின்று நாம் தவிக்கிறோம்.

எது சரி, எது தவறு என்று புரியாமல் குழம்புகிறோம்.

வழிகாட்டி மரமாக நின்று, வழி காட்டிக் கொண்டிருக்கிறது கீதை.

http://bhagavatgita.blogspot.com/2018/06/133.html

Tuesday, June 26, 2018

பகவத் கீதை - 1.32 - வெற்றியும் வேண்டாம் , ஒண்ணும் வேண்டாம்

பகவத் கீதை - 1.32 - வெற்றியும் வேண்டாம் , ஒண்ணும் வேண்டாம் 



न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च।
किं नो राज्येन गोविन्द किम् भोगैर्जीवितेन वा॥३२॥

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகா²நி ச|
கிம் நோ ராஜ்யேந கோ³விந்த³ கிம் போ⁴கை³ர்ஜீவிதேந வா ||1-32||

ந = இல்லை

காங்க்ஷே= ஆசை

விஜயம் = வெற்றியில்

க்ருஷ்ண = கிருஷ்ணா

ந =இல்லை

ச = மேலும்

ராஜ்யம் = இராஜ்யத்தின் மேலும்

ஸுகா²நி = அது தரும் சுகத்திலும்

ச = மேலும்

கிம் = எதற்கு

நோ = நமக்கு

ராஜ்யேந = இராஜ்யம்

கோவிந்த = கோவிந்தா

 கிம் = எதற்கு

போகை³ = ஆடம்பரங்கள்

ஜீவிதேந = வாழ்க்கை

வா = அதுவும்

வெற்றியும், அது இராஜ்யமும், அதனால் வரும் சுக போகங்களும் எனக்கு வேண்டாம். ஏன், இந்த வாழ்க்கையே வேண்டாம். 


நமக்கும் வாழ்க்கையில் சில சமயம்  தோன்றும்.என்ன செஞ்சு என்ன  பயன். இவ்வளவு போராட்டமும் எதற்கு என்ற சலிப்பு தோன்றும்.  இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன , என்பது போன்ற விரக்த்தியான கேள்விகள் தோன்றும்.

அர்ஜுனன் அந்த மாதிரி ஒரு நிலையில் இருக்கிறான்.

வீரம் ஒரு புறம். சபதம் ஒரு புறம். போர்க்களத்துக்கு வந்தாகி விட்டது. அவனை நம்பி பலர் தங்கள் உயிரை பணயம் வைத்து போர் செய்ய வந்திருக்கிறார்கள். இப்போது சண்டை வேண்டாம் என்று பின் வாங்கினால் தீரா பழி வந்து சேரும்.

அதற்காக போர் செய்து எல்லோரையும் கொல்ல முடியுமா ? பழி வந்தாலும் பரவாயில்லை, கொல்லுவோம் என்று நினைக்கவும் முடியவில்லை.

யுத்தம் செய்தாலும் குற்றம், செய்யா விட்டாலும் குத்தம்.

வெற்றி வேண்டாம், அரசு வேண்டாம், சுக போகங்கள் வேண்டாம் என்று அனைத்தையும் விட்டு விடலாம் என்றாலும் , வாழ் நாள் பூராவும் பழி சுமந்து வாழ வேண்டுமே ? துரியோதனன் சிரிப்பானே . பாஞ்சாலி என்ன சொல்லுவாள்? இந்த உலகம் என் ஆண்மையை, வீரத்தை ஏளனமாக எடை போட்டு விடுமே.

இதை எல்லாம் நினைத்துப் பார்த்து, "இந்த வாழ்க்கையே வேண்டாம். செத்துப் போய் விடுகிறேன்" என்று சொல்கிறான். உயிரோடு இருந்தால் தானே இந்த பழி வரும். உயிரை விட்டு விட்டால் என்ன என்று புலம்புகிறான்.

கண்ணன் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

அர்ஜுனன் முற்றும் புலம்பி முடியட்டும் என்று காத்து இருக்கிறான். புலம்புவனை பாதியில் நிறுத்தினால், அவன் சொல்வதைக் கேட்க மாட்டான். அவன் துக்கத்தையே நினைத்துக் கொண்டிருப்பான்.

எனவே, கண்ணன் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்கிறான்.

அர்ஜுனன் புலம்பல் முடியவில்லை....

http://bhagavatgita.blogspot.com/2018/06/132.html

Monday, June 25, 2018

பகவத் கீதை - 1.31 - சுற்றங்களை கொன்று வரும் இன்பம்

பகவத் கீதை - 1.31 - சுற்றங்களை கொன்று வரும் இன்பம் 



निमित्तानि च पश्यामि विपरीतानि केशव।
न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे॥३१॥

நிமித்தாநி ச பஸ்²யாமி விபரீதாநி கேஸ²வ|
ந ச ஸ்²ரேயோऽநுபஸ்²யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே ||1-31||


நிமித்தாநி = நிமித்தங்கள், சகுனங்கள்

ச = மேலும்

பஸ்யாமி = நான் காண்பவை

விபரீதாநி = விபரீதமாக இருக்கிறது

கேஸவ = கேசவா

ந = இல்லை

ச = மேலும்

 ஸ்ரேயோ = உயர்ந்த, சிறந்த இன்பங்களை

அ நுபஸ்யாமி  = நான் காண்கிறேன்

ஹத்வா = கொன்ற பின்

ஸ்வ ஜநம் = சொந்த ஜனங்களை, உறவினர்களை

அஹவே  = போரில்


கேசவா, நான் பல விபரீத சகுனங்களை காண்கிறேன். இந்தப் போரிலே சுற்றத்தாரை கொன்று, அதன் மூலம் கிடைக்கும் இன்பத்தால் எனக்கு நன்மை விளையும் என்று தோன்றவில்லை.

நாம் நினைப்பது எல்லாம் அப்படியே நடந்து கொண்டே இருந்தால், மனிதன் தான் ஒரு பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்வான். எல்லாம் என் சாமர்த்தியம். என்னால் முடியாதது என்ன. நான் தான் இத்தனையும் செய்தேன் என்று நினைக்கத் தலைப்படுகிறான்.

ஒரு சிறு தடங்கல் வந்தால் கூட, "ஐயோ, என்ன செய்வேன், என்னால் முடியவில்லையே, எனக்கு ஏன் இவ்வளவு சோதனை, இவ்வளவு போராடி என்ன சுகதத்தைக் காணப் போகிறேன்..." என்று சோர்ந்து துவண்டு விடுகிறான்.

போரில் அனைவரையும் வென்று, அரசை கைப்பற்றி விடலாம் என்று எண்ணி வந்தான் அர்ஜுனன். இப்போது பார்த்தால், அது அவ்வளவு எளிய காரியமாகப் படவில்லை. பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், போன்ற பெரிய வீரர்கள் இருக்கிறார்கள்.  கௌரவ படையின் அளவோ பெரியது. அதை வெல்வது எளிதான காரியம் இல்லை. அர்ஜுனனின் சோர்வுக்கு அது ஒரு காரணம்.

அது மட்டும் அல்ல, சண்டை போடப் போவது உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு. அது ஒரு காரணம்.

மூன்றாவது, மிக முக்கியமான காரணம், இந்த யுத்தம் ஏதோ தனக்காக செய்யப்படுவது போல  அர்ஜுனன் நினைத்துக் கொள்கிறான். இது அர்ஜுனன் என்ற தனிப்பட்ட மனிதன் விருப்பு வெறுப்புக்கான போர் அல்ல.

தர்மத்தை நிலை நாட்ட வந்த போர். இதில் இலாப நட்ட கணக்கு முக்கியம் அல்ல.

தர்மம் நிலைக்க வேண்டும். அவ்வளவுதான்.

அர்ஜுனன் அந்த யுத்தம் ஏதோ தான் விரும்பினால் செய்யலாம், இல்லை என்றால் வீட்டுக்குப் போய் விடலாம் என்று நினைத்துக் கொள்கிறான். அதனால் வந்த சிக்கல்.

யோசித்துப் பார்ப்போம். நாம் செய்யும் வேலை அனைத்தும் நமது சம்பளத்துக்காக செய்கிறோமா அல்லது அந்த வேலையினால், அதன் விளைவாக மற்றவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று செய்கிறோமா?

சம்பளத்துக்காக வேலை செய்கிறேன் என்று நினைப்பவனுக்கும், நான் ஒரு பிரச்னையை சரி செய்கிறேன் என்று நினைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

எப்போது, வேலை என்பது சுய இலாபத்துக்காக என்று ஆகி விட்டதோ, அப்போதே அதன்  தன்மை மாறிப் போய் விடுகிறது.

ஒருவன் சாலை போடும் வேலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தினக் கூலி நூறு ரூபாய் இருக்கலாம். அந்த கூலிக்காக வேலை செய்கிறேன் என்று அவன்  சொல்லலாம். அல்லது, நான் போடும் சாலையில் வண்டிகள் போகும், amabulance  விரைந்து போகும், பலரின் உயிர் காக்கப்படும், பிள்ளைகள் பள்ளி செல்வார்கள், வேலைக்குப் போகிறரவர்கள் பத்திரமாக வேகமாக  இந்தச் சாலையில் செல்வார்கள் என்று நினைத்தால், அவன் மனம் விரியும். கூலி ஒரு பொருட்டாகத் தெரியாது. வேலையே கூலியாகி விடும்.

அதற்காக கூலி வாங்காமல் போக வேண்டும் என்று சொல்ல வில்லை. கூலிக்கு வேலை  என்பதை விட வேலையின் வீர்யம் புரிந்து செய்தால், கூலியும் கிடைக்கும், மன நிறைவும் கிடைக்கும்.

அர்ஜுனன் கூலிக்கு வேலை செய்வதாக வந்து  நிற்கிறான். எனவே, இந்த இலாப நட்ட கனக்குப் பார்க்கிறான்.

இவ்வளவு  பேர் சாகப் போகிறார்கள். இவ்வளவு அரசு கிடைக்கும்,இந்தப் பதவி கிடைக்கும் என்று  என்று கனக்குப் போட்டதால் வந்த வினை.

மேலும் என்ன சொல்கிறான் என்று கவனிப்போம்.


http://bhagavatgita.blogspot.com/2018/06/131.html



Saturday, June 23, 2018

பகவத் கீதை - 1.30 - காண்டீபம் கை நழுவுகிறது

பகவத் கீதை - 1.30 - காண்டீபம் கை நழுவுகிறது 



गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः॥३०॥

கா³ண்டீ³வம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரித³ஹ்யதே|
ந ச ஸ²க்நோம்யவஸ்தா²தும் ப்⁴ரமதீவ ச மே மந : ||1-30||


காண்டீவம்  = காண்டீவம் (என்ற என் வில்)

ஸ்ரம்ஸதே = நழுவுகிறது

ஹஸ்தாத் = கையில் இருந்து

த்வக் = உடல் (தோல்)

ச  = மேலும்

எவ  = நிச்சயமாக

பரித³ஹ்யதே = எரிச்சல் அடைகிறது

ந = இல்லை

ச = மேலும்

ஸக்நோமி = முடிதல்

அவஸ்தாதும் = நிற்க

 ப்ரமதீவ = அலைதல்

 ச = மேலும்

 மே = என்

மந : = மனம்  ||1-30||

காண்டீவம் என் கையில் இருந்து நழுவுகிறது. உடம்பெங்கும் எரிச்சல் உண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழல்கிறது.


மிகப் பெரிய வீரனான அர்ஜுனனை மிகப் பெரிய கோழையாக காட்டுகிறது பாரதம்.  கை பலம் இழந்து கையில் இருந்த வில் நழுவி விழுகிறது. கால் குழைந்து தடுமாறுகிறது. உடல் எங்கும் எரிச்சல் உண்டாகிறது. மனம் தடுமாறுகிறது. 

ஏன் ? என்ன ஆயிற்று ?

உறவையும் நட்பையும் பார்த்ததால், இவர்களை எல்லாம் கொல்ல வேண்டுமே, அல்லது இவர்கள் எல்லோரும் அழிந்து போவார்களே என்ற உணர்ச்சி அவனை கோழை ஆக்குகிறது. 


அறிவு சண்டை செய்யச் சொல்லி போர் முனைக்கு இழுத்து வந்து விட்டது. 

உணர்ச்சி அவனை பலம் இழக்கச் செய்து போர் முனையை விட்டு ஓட வைக்கிறது. 

இதில் அறத்தை நிலை நாட்ட வேண்டிய கடமை, கர்மா அந்தரத்தில் தொங்குகிறது. 

அர்ஜுனன் மனதில் போர் என்பது கொல்வதற்காக என்று விழுந்து விட்டது. இவர்களை எப்படி கொல்வது என்று தடுமாறுகிறான்.

போர் என்பது கொலை செய்ய அல்ல, ஏதோ ஒரு நீதியை, ஒரு நியாயத்தை, ஒரு தர்மத்தை, ஒரு அறத்தை நிலை நிறுத்த செய்யப் படுவது. 

தர்மம் நிலை நிறுத்தப் பட வேண்டும். இதில் யாருக்கு பலன் கிடைக்கும், அல்லது கிடைக்காது என்பதல்ல கேள்வி. யாருக்குமே, ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் தர்மம் காக்கப் படவேண்டும். 

எனக்கு இதில் என்ன கிடைக்கும் என்று நினைத்துச் செய்வதல்ல கடமை. உயிரே போனாலும், அதைச் செய்ய வேண்டும். 

ஒரு வேளை , பலன் இல்லாத காரியத்தை செய்வது மதியீனம் என்ற ஒரு கோட்பாடு  வந்து விட்டால் என்ன ஆகும் ?

வாங்கும் நாலு காசு சம்பளத்துக்கு உயிரை விட முடியுமா, என்று ஒரு சிப்பாய் நாட்டை காட்டி கொடுத்து விடலாம். 

மாணவன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன, நான் வாங்கும் சம்பளத்துக்கு நான்  பள்ளிக் கூடம் வந்து, பாடங்களை வாசித்துவிட்டு போய் விடுவேன். 

என்று இப்படி ஒரு சமூகத்தில் ஆளாளுக்கு செய்யத் தலைப் பட்டால், மனித குலம் நசிந்து போகும். 

ஒரு பெற்றோராக, ஆசிரியனாக, மாணவனாக, கணவனாக, மனைவியாக, பிள்ளையாக , ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்தக் கடமையை செய்தே தீர வேண்டும். பலன் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும். மற்றவர்கள் தங்கள் கடமையை செய்கிறார்களோ இல்லையோ, நாம் நம் கடமையை செய்ய வேண்டும். இது தான் கீதையின் அடி நாதம். இதை புரிந்து கொண்டால், கீதை விளங்கும்.  

அர்ஜுனன் ஏன் சோர்ந்து போனான் ? எது அவனை சோர்ந்து போக வைத்தது ? அதற்கும் நாம் இப்போது சிந்தித்ததற்கும் என்ன சம்பந்தம் ?

அது பற்றி நாளை பார்க்க இருக்கிறோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/06/130.html




Friday, June 22, 2018

பகவத் கீதை - 1.29 - உடல் நடுங்குகிறது

பகவத் கீதை - 1.29 - உடல் நடுங்குகிறது


सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते॥२९॥

ஸீத³ந்தி மம கா³த்ராணி முக²ம் ச பரிஸு²ஷ்யதி|
வேபது²ஸ்²ச ஸ²ரீரே மே ரோமஹர்ஷஸ்²ச ஜாயதே ||1-29||


ஸீதந்தி = நடுங்குகிறது

மம = என்

அத்ராணி = கை கால்கள்

முகம் = வாய்

ச = மேலும்

பரிஸு²ஷ்யதி = உலர்கிறது

வேபது = துடிக்கிறது

ச = மேலும்

ஸரீரே  = உடல்

மே = என்

ரோமஹர்ஷஸ்²ச = மயிர் சிலிர்க்கிறது

ஜா = உடன்

ஜயதே = நிகழ்கிறது

அர்ஜுனன் சொல்கிறான், "என் கை கால்கள் நடுங்குகின்றன. உடல் துடிக்கிறது. வாய் உலர்ந்து போகிறது. மயிர் சிலிர்கிறது"

பயம் அல்ல. இத்தனை பேரை கொல்லப் போகிறோமே என்ற பச்சாதாபம். சுய இரக்கம். போர் செய்வது என்று வந்து விட்டான். உறவினர்களை கண்டவுடன் தயக்கம் வருகிறது.

அறிவு - யுத்தம் செய் என்று அவனை அழைத்து வந்து விட்டது. வந்தது மட்டும் அல்ல, இரண்டு படைகளுக்கு மத்தியில் தேரை நிறுத்து, என்னிடம் போரிட வந்தவர்கள் யார் யார் என்று பார்க்கிறேன் என்று    துணிவுடன் சொல்ல வைத்தது.

உணர்ச்சி - இது தேவையா உனக்கு ? இத்தனை பேரை கொன்று நீ என்ன சுகத்தை அடையப் போகிறாய்  என்று பின்னுக்கு இழுக்கிறது.

இதில் இதன் பக்கம் போவது? அறிவு சொல்வதை கேட்பதா ? உணர்ச்சியின் பின்னால் போவதா ? எது சரியான வழி ?

ஞான மார்க்கமா ? பக்தி மார்க்கமா ? அல்லது இரண்டுக்கும் நடுவில் உள்ள கர்ம மார்க்கமா ?

சிக்கலின் நுனி இங்கே ஆரம்பிக்கிறது.

வாழ்க்கை என்ற யுத்தத்தில் தனி ஆளாக வந்தாகி விட்டது. அறிவு ஒன்றைச் சொல்கிறது. உணர்ச்சி மற்றொன்றைச் சொல்கிறது. இந்த தீராத பட்டி மன்றத்துக்கு யார் தீர்ப்புச் சொல்வது ?

வழி முக்கியமா ? போய் சேரும் இடம் முக்கியமா ? எந்த வழியில் போனால் என்ன? போய் சேர வேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்தால் போதாதா ?

விடை  சொல்ல முடியாத சிக்கலை விடுவிக்க வந்தது கீதை.

கேட்போம்.

கீதை என்பது பாடம் அல்ல. பாடல். கீதம். கீதை. பாடலில் இலயிக்க வேண்டும். அது நமக்குள் இறங்க வேண்டும். நம்மோடு கலக்க வேண்டும். நமக்குள் அது ஏதோ செய்யும்.

அந்த கீதம் உங்கள் காதுகளில் விழ , வழி விட்டு நில்லுங்கள். சற்று நேரம் கண் மூடி  அது உங்கள் மனதை வருட விடுங்கள்.

என்னதான் ஆகிறது என்று பார்ப்போம் .

http://bhagavatgita.blogspot.com/2018/06/1.html

Thursday, June 21, 2018

பகவத் கீதை - 1.28 - சுற்றத்தாரை கண்டு .....

பகவத் கீதை - 1.28 - சுற்றத்தாரை கண்டு .....



अर्जुन उवाच
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम्॥२८॥


அர்ஜுன உவாச
த்³ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி²தம் ||1-28||

அர்ஜுன உவாச = அர்ஜுனன் கூறுகிறான்

த்ருஷ்ட்வ = (இவர்களை ) காணும் போது

ஏமம் = இவர்களை

ஸ்வஜநம் = நெருங்கியவர்களை

க்ருஷ்ண = கிருஷ்ணா

யுயுத்ஸும் = போர் செய்ய ஆவலாக இருக்கும்

ஸமுபஸ்தி²தம் = இங்கு


கண்ணா, இங்கே போர் செய்ய ஆவலாக இருக்கும் என் நெருங்கிய சுற்றத்தாரைக் கண்டால் .....

ஒரு மிகப் பெரிய வீரனை, உணர்ச்சிகளின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்துகிறது கீதை.

போர் செய்ய வேண்டும் என்று வந்து விட்டான். என் தேரை , இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்து என்று தெனா வெட்டாக கூறியவன், இந்தப் போரில் சண்டை போட்டு சாவதற்கு வந்திருப்பவர் யார் என்று நான் பார்க்க வேண்டும் என்று கூறிய அர்ஜுனன், "அர்ஜுனா கௌரவர்களை பார்" என்று கண்ணன் ஒரு வார்த்தை சொன்னவுடன், அவர்களை கண்டு தடுமாறத் தொடங்குகிறான்.

கீதையை வாசிக்கும் போது ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அது நடந்த காலம், அந்த சூழ்நிலை, கீதை சொல்லப் பட்ட இடம், கீதையை கேட்ட அர்ஜுனன், அவன் நிலை இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி என்றால், கீதை நமக்கு உதவாதா ? என்றோ ஒரு காலத்தில், அர்ஜுனன் போன்ற ஒரு அரசனுக்கு, வீரனுக்குச் சொல்லப்பட்டது தான் கீதை என்றால், இன்றைக்கு ஒரு அலுவலத்தில் வேலை பார்க்கும் நமக்கும் கீதைக்கும் ஒரு சம்மந்தமும் இல்லையா ? கீதை இன்றைய சூழ்நிலைக்கு உதவுமா ? உதவும் என்றால் எப்படி?

இங்குதான் நாம் நம் அறிவை செலவிட வேண்டும்.

இன்று கீதையை விமர்சினம் செய்பவர்கள், அதில் உள்ள ஒரு சில வரிகளை எடுத்துக் கொண்டு, "கீதை அப்படி சொன்னதே, கீதை இப்படி சொன்னதே , அது சரியா" என்று வாதம் செய்கிறார்கள்.

கீதையை அப்படியே கொண்டு வந்து நம் வாழ்க்கையில் பொறுத்த முடியாது. பொறுத்தவும் கூடாது.

"நிற்க அதற்குத் தக"

என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

கீதையின் சாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நம் கால சூழ்நிலைக்கு ஏற்ப நாம் அனுசரித்து கொண்டு போக வேண்டுமே அல்லாமல் வரிக்கு வரி அப்படியே கடை பிடிக்க நினைக்கக் கூடாது.

ஒரு ஊரில் இருந்து  இன்னொரு ஊருக்குப் போகும் போது ஒரு வரை படத்தை  வைத்துக் கொண்டு போகிறோம். இப்போது google map இருக்கிறது. போகிற வழியில் ஒரு பள்ளம் இருந்தால், ஒரு விபத்து நடந்து ஒரு வண்டி சாலையின் குறுக்கே கிடந்தால், கொஞ்சம் விலகித்தான் போக வேண்டும். வரை படத்தில் அப்படி போடவில்லையே என்று நேரே போய் முட்டிக் கொள்ளக் கூடாது.

சரி, கீதையை நம் சூழ்நிலைக்கு மாற்றுவது என்றால், எதை மாற்றுவது, எப்படி மாற்றுவது, என்ற கேள்வி வரும். நாம் மாற்றுவது சரி தானா என்ற சந்தேகம் வரும். நாமே குழம்பிப் போய் தான் கீதையின் உதவியை நாடுகிறோம். அதை அப்படியே கடை பிடிக்க முடியாது என்றால் என்ன செய்வது ?

அதற்குத்தான், சமய அறிவு உள்ளவர்கள், மொழி அறிந்தவர்கள், மக்கள் நலனின் நாட்டம் உள்ளவர்கள், விருப்பு வெறுப்பு அற்ற பெரியவர்கள் கீதையை  எப்படி நம் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றித் தருகிறார்களோ, அப்படியே அதை கடை பிடிக்க வேண்டும்.

மேலும், நாமும் முழுச் சோம்பேறியாக இருக்கக் கூடாது. கீதையில் என்ன சொல்லி இருக்கிறதோ அதன் படி நடப்பேன். என் அறிவை நாம் பயன்படுத்தவே மாட்டேன் என்று முட்டாள்தனமாக இருக்கக் கூடாது.

கீதையில், முழுக்க முழுக்க அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். அர்ஜுனன் பெரிய அறிவாளி. கண்ணன், முற்றும் அறிந்தவன். அப்படிப்பட்ட கண்ணன் சொன்னது, அர்ஜுனனுக்குப் புரியவில்லை. சந்தேகம் கேட்கிறான்.

நாமெல்லாம் எம்மாத்திரம் ? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இன்று ஒரு காகிதத்தில் கீதையை படித்து நாமே புரிந்து கொள்ள முடியுமா ?

கேள்விகள் எழும். சந்தேகம் வரும். குழப்பம் வரும்.

வரட்டும். வர விடுங்கள்.

சந்தேகம் வந்தால், கேளுங்கள். கேள்விகளை வர விடுங்கள்.

உங்களோடு சேர்ந்து நானும் தேடுகிறேன். ஒன்றாக நாம் விடை கண்டு பிடிப்போம்.

புரிந்தால், தெளிந்தால் கீதையை கடை பிடிப்போம்.

இல்லை என்றால் அது கிடைக்கும் வரை தேடுவோம்.

என்ன சரிதானே ?

வாருங்கள், அர்ஜுனன் என்ன சொல்லப் போகிறான் என்று பார்ப்போம். கீதை என்ற கடலுக்குள் நாம் நுழையப் போகிறோம். எத்தனை முத்துக்கள் கிடைக்கின்றன என்று பார்ப்போம்.


`http://bhagavatgita.blogspot.com/2018/06/128.html

Wednesday, June 20, 2018

பகவத் கீதை - 1.27 - உறவும் பகையும்

பகவத் கீதை - 1.27 - உறவும் பகையும் 



श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि।
तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान्॥२७॥
कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत् |

ஸ்²வஸு²ராந்ஸுஹ்ருத³ஸ்²சைவ ஸேநயோருப⁴யோரபி|
தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய​: ஸர்வாந்ப³ந்தூ⁴நவஸ்தி²தாந் ||1-27||
க்ருபையா பராயவிஷ்டோ விஷிதன் இதம் அப்ராவித்




ஸ்²வஸு²ராந் = மாமன்களும்

ஸுஹ்ருத = நலன் விரும்புபவர்களும்

ச = மேலும்

எவ  = அதாவது

ஸேநயோ = சேனையில்

அபி = மேலும்

தாந் = அவர்களை

ஸமீக்ஷ்ய = பார்த்து

ஸ = அவர்கள்

கௌந்தேய​: = அர்ஜுனன்

ஸர்வாந் = அனைவரும்

பந்தூ⁴ = உறவினர்கள்

அவஸ்தி = உணர்ச்சி மேலிட்டு

²தாந்

க்ருபையா = அன்பு மேலிட

பராய = மிகுந்த

அவிஷ்டோ = (உணர்ச்சிகளால்) நிறைந்து

விஷிதன் = ஆழந்த சோகத்துடன்

 இதம் = இதை

அப்ராவித் = கூறினான்

மாமன்மார், உறவினர்கள், நலம் விரும்பிகள் எல்லோரையும் இரு பக்கமும் பார்த்த அர்ஜுனன், மிகவும் இரக்கம் உற்று, உணர்ச்சி மேலீட்டால் பின் வருமாறு கூறினான் 

அர்ஜுனன் வில்லாளிகள், குதிரை வீரர்கள், யானை வீரர்களைப் பார்க்கவில்லை. அவன் பார்த்தது பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, ஆசிரியர், மாமன், உறவினர் மற்றும் நண்பர்களை.

இரு புறமும் உறவும் நட்பும் நிறைந்து கிடக்கிறது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகப் போகிறார்கள்.

அர்ஜுனன் மனதில் இரக்கம் பிறக்கிறது. உணர்ச்சி அவனை உந்துகிறது.

வீரம், போர், ஆற்றல், கொலை, வெற்றி என்று இருந்த அர்ஜுனன் மனதில் அன்பு,நட்பு, உறவு என்றெல்லாம் ஓடுகிறது.

பாரதத்தில், கீதையில்  ஒரு திருப்புமுனை இடம் இது. Turning Point.

அறம் , தர்மம் ஒரு புறம்.

உறவும் நட்பும் மறு புறம்.

அறத்தை நிலை நாட்ட வேண்டும் என்றால் உறவையும் நட்பையும் கொல்ல வேண்டும்.  அதில் அன்புக்கு இடம் இல்லை.

உறவும் நட்பும் உயர்வு என்றால், அறம் பழுது பட்டுப் போகும்.

என்ன செய்வது?

இது அர்ஜுனனின் குழப்பம் அல்ல.

நமது குழப்பம்.

நல்லது செய்ய வேண்டுமா, மனதுக்குப் பிடித்ததை செய்ய வேண்டுமா ?

மனைவிக்கோ, (அல்லது கணவனுக்கோ), பிள்ளைகளுக்கோ நல்லது என்று நினைத்துச் செய்தால், அது அவர்களுக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது. நம் மேல் கோபமும் வெறுப்பும் கொள்கிறார்கள்.

சரி, அவர்கள் மனம் கோணாதபடி நடந்து கொள்ளலாம் என்றால், அது சரியான பாதையாக இல்லாமல் போகலாம்.

எதைச் செய்வது ?

பிள்ளை ஆசைப் பட்டு கேட்கிறது என்று அது கேட்கும் போதெல்லாம் சாக்கிலேட் வாங்கித் தந்தால், அது மகிழும் ஆனால் அது குழந்தையின் உடல் நலத்துக்கு கேடு.

சரி, வாங்கித் தராமல் இருப்போம் என்றால், குழந்தையின் மனம் புண் படும். அழும்.  நம்மை வெறுக்கும்.

எதைச் செய்யலாம் ?

இது குழந்தைக்கு மட்டும் அல்ல. ஆசிரியர் - மாணவன், கணவன் - மனைவி, நண்பர்கள், அதிகாரி - கீழே வேலை பார்ப்பவர் என்று அனைத்து இடத்திலும் இந்த சிக்கல் இருக்கிறது.

கணவனுக்கு வாய்க்கு உருசியாக சாப்பிட ஆசை. மருத்துவர் சொல்லி இருக்கிறார் எண்ணெய் , இனிப்பு கூடாது என்று. மனைவி என்ன செய்ய வேண்டும். கணவன் மகிழ நல்ல தின்பண்டங்கள் தர வேண்டுமா ? இல்லை அவன் கோபித்தாலும், வருந்தினாலும் பரவாயில்லை எது நல்லதோ அதைச் செய்வோம் என்று அவனை பட்டினி போட வேண்டுமா ?

யுகம் யுகமாய் மனித குலம் தவிக்கும் இந்த கேள்விக்கு விடை தருகிறது கீதை.


http://bhagavatgita.blogspot.com/2018/06/127.html

Monday, June 18, 2018

பகவத் கீதை - 1.26 - அர்ஜுனன் கண்டது

பகவத் கீதை - 1.26 - அர்ஜுனன் கண்டது 


तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान्।
आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा॥२६॥

தத்ராபஸ்²யத்ஸ்தி²தாந்பார்த²​: பித்ரூநத² பிதாமஹாந்|
ஆசார்யாந்மாதுலாந்ப்⁴ராத்ரூந்புத்ராந்பௌத்ராந்ஸகீ²ம்ஸ்ததா² ||1-26||

தத்ர = அங்கே

அபஸ்யத்ஸ்த் = பார்த்தான்

ஸ்திதாந் = இருந்த

பார்த = அர்ஜுனன்

பித்ரூநத = சித்தப்பா, பெரியப்பா போன்றோரையும்

பிதாமஹாந் = தாத்தாக்களையும்

ஆசார்யாந்  = ஆசிரியர்களையும்

மாதுலாந் = தாய்வழி சொந்தங்களையும்

ப்⁴ராத்ரூந் = சகோதரர்களையும்

புத்ராந் = பிள்ளைகளையும்

பௌத்ராந் = பேரப் பிள்ளைகளையும்

ஸகீந்  = நண்பர்களையும்

ததா = மேலும்


அங்கே தந்தைமார்களையும், தாத்தாக்களையும், பிள்ளைகளையும், பேர ப்  பிள்ளைகளையும், ஆசிரியர்களையும், நண்பர்களையும், தாய் வழிச் சொந்தங்களையும் அர்ஜுனன் பார்த்தான். 

இந்த ஸ்லோகமும் பாதியில் நிற்கிறது. இதன் தொடர்ச்சி அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது. அதையும் பார்த்த பின், நாம் விரிவாக சிந்திக்க இருக்கிறோம்.

நாளை வரை பொறுமை.

http://bhagavatgita.blogspot.com/2018/06/126.html





Sunday, June 17, 2018

பகவத் கீதை - 1.25 - கூடி இருக்கும் கௌரவர்களைப் பார்

பகவத் கீதை - 1.25 - கூடி இருக்கும் கௌரவர்களைப் பார் 



भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति॥२५॥

பீ⁴ஷ்மத்³ரோணப்ரமுக²த​: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்|
உவாச பார்த² பஸ்²யைதாந்ஸமவேதாந்குரூநிதி ||1-25||


பீஷ்ம = பீஷ்மர்

த்ரோண = துரோணர்

ப்ரமுகத​: = முன், அருகில்

ஸர்வேஷாம்  = அனைவரும்

ச = மேலும்

மஹீக்ஷிதாம் = ஏனைய அரசர்கள்

உவாச = கூறினான்

பார்த = பார்த்தா (அர்ஜுனா)

பஸ்யை = பார்

எதன் = இவர்களை

ஸமவேதாந் = கூடி இருக்கும்

குரூ = குரு வம்சத்தில் உதித்தவனே

இதி = இதை


பீஷ்மர், துரோணர் மற்றும் உள்ள அனைத்து அரசர்களுக்கும் நடுவில் தேரை நிறுத்திவிட்டு, கண்ணன் சொல்கிறான் "இங்கே கூடி இருக்கும் கௌரவர்களை பார்"


இந்த ஒரு வரி தான் கண்ணன் இந்த அத்தியாயத்தில் பேசியது.

அவர்களை பார்க்க வேண்டும் என்று தான் அர்ஜுனன் தேரை நடுவில் இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்தச் சொன்னான். பின் என்ன "கௌரவர்களைப் பார் " என்று கண்ணன் சொல்வது?

வார்த்தைகள் என்னமோ சாதாரணமானதுதான். சொல்வது யார், யாரிடம் சொன்னார்கள், சொல்லப் பட்ட நேரம் இவற்றைப் பொறுத்து அதன் அர்த்தம் மாறுகிறது.

சில உதாரணங்களை பார்க்கலாம்.

நமது இலக்கியங்களில் திரும்ப திரும்ப சொல்லப் பட்டதுதான். குரு தான் வழிகாட்டி. எப்போது மாணவன் தயாராக இருக்கிறானோ, அப்போது ஆசிரியர் அவன் முன் தோன்றுவான்  என்று.

அருணகிரிநாதர், வாழ்க்கையில் எங்கெங்கோ எப்படி எப்படியோ சென்று வாழ்ந்தார். பெரிய நோய் வந்து விட்டது. இனி மேல் வாழக் கூடாது என்று அண்ணாமலை கோவில் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விட்டார். உயிரை விடுவதற்காக. பாதியில் அவரை கையில் ஏந்தி , முருகன் உபதேசம் செய்தான். உபதேசம் என்றால் என்ன ஒரு ஒரு மணி நேரம் சொல்லி இருப்பானா ? இல்லை , ஒரே ஒரு நொடி. இரண்டே இரண்டு வார்த்தை "சும்மா இரு" . அவ்வளவுதான்.

பட்டினத்தார், பெரிய பணக்காரர். அரசனுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு செல்வம் இருந்தது. இறைவன் அருளால் கிடைத்த பிள்ளை, ஒரு நாள் ஒரே ஒரு  வரி எழுதி வைத்து விட்டு மறைந்து விட்டான். அந்த ஒரு வரியை படித்து விட்டு இருந்த செல்வம் அனைத்தையும் உதறி விட்டு கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டு கிளம்பி விட்டார் ...அந்த ஒரு வரி "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்பது.

பாரதியார் தனக்கு ஏற்பட்ட குரு தரிசனம் பற்றி கூறுகிறார். பாரதியாரின் குரு , குள்ளச் சாமி என்ற ஒருவர் பாரதியாருக்கு உபதேசம் செய்தார். ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மூன்றே மூன்று பொருள்களை காட்டினார். அவ்வளவுதான்.  அவை, அருகில் இருந்த கூட்டிச் சுவர், சூரியன், கிணற்றில் உள்ள சூரியனின் பிம்பம். அவ்வளவு தான். உபதேசம் முடிந்து விட்டது. சிலிர்த்துப் போனார் பாரதியார். "வேதாந்த மரத்தின் ஒரு வேரை பிடித்தேன் " என்று எழுதினார். ஏதாவது புரிகிறதா நமக்கு ? குட்டிச் சுவர், சூரியன், பாழடைந்த கிணறு. அவ்வளவுதான்.  (இது பற்றி நான் விரிவாக எழுதி இருக்கிறேன். அதைப் படிக்க விருப்பம் இருந்தால், தெரிவிக்கவும். அனுப்பி வைக்கிறேன்).

மாணிக்க வாசகர்...சிவன் நேரில் வந்து உபதேசம் செய்தார். மாணிக்க வாசகர் புரிந்து கொள்ளவில்லை. குதிரை வாங்கப் போகணும், மன்னன் திட்டுவான் என்று  கிளம்பி விட்டார். பின்னாளில் தன் தவற்றை உணர்கிறார்.  அடடா , வந்த சிவனை விட்டு விட்டோமே என்று. அவர் வாழ் நாள் எல்லாம் அதை நினைத்து புலம்பினார். அந்த புலம்பல் தான் திருவாசகம்.

நாமும் தான் எவ்வளவோ படிக்கிறோம். ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா. ஒன்றும் இல்லை. ஒரு வரியில், உண்மை உணர்ந்து கொண்டோர் ஆயிரம். பக்குவம் வேண்டும். உறுதி வேண்டும்.

"கௌரவர்களைப் பார்"

என்று கண்ணன் சொன்னான்.

அர்ஜுனனுக்குள் பூகம்பம் நிகழ்ந்தது. நொறுங்கிப் போனான். கை நெகிழ்கிறது. வீரம் போய் விட்டது. போர் களத்தை விட்டே போய் விடுகிறேன் என்கிறான். சாமியாராகப் போகிறேன் என்கிறான்.

அந்த மாதிரி ஆன்மீக அதிர்ச்சி ஏற்படும் போது, அருகில் ஒரு குரு வேண்டும். இல்லை என்றால்  அதைத் தாங்க முடியாது.

அருணகிரிக்கு ஒரு முருகன், பாரதிக்கு ஒரு குள்ளச் சாமி, அர்ஜுனனுக்கு ஒரு கண்ணன்.

பற்றை விடச் சொன்ன வள்ளுவர் கூட, பற்றுக என்று சொன்னது பற்றற்ற ஒரு யோகியின் பற்றைத்தான்.எல்லாவற்றையும் விட்டு விடு, ஆனால் ஆசிரியனை விடாதே என்கிறார். அந்த ஒரு பற்றை மட்டும் வைத்துக் கொள் என்கிறார்.

தயாராகுங்கள். உங்கள் ஆசிரியர் உங்கள் முன் தோன்றுவார். தோன்றட்டும்.

http://bhagavatgita.blogspot.com/2018/06/125.html

Saturday, June 16, 2018

பகவத் கீதை - 1.24 - இரு படைகளுக்கும் நடுவில்

பகவத் கீதை - 1.24 - இரு படைகளுக்கும் நடுவில் 



सञ्जय उवाच
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत।
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्॥२४॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ² கு³டா³கேஸே²ந பா⁴ரத|
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ஸ்தா²பயித்வா ரதோ²த்தமம் ||1-24||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான் (திருதராஷ்டிரனிடம்)

ஏவம் = அவ்வாறு

உக்தோ = கூறிய பின்  (அர்ஜுனன் கண்ணனிடம் தேரை இரு படைகளுக்கும் நடுவில் நிறுத்து என்று கூறிய பின்)

ஹ்ருஷீகேஸோ = ஸ்ரீ கிருஷ்ணன்

அ-குடாகேஸேந = குடாகேசன் என்று சொல்லப்பட்ட அர்ஜுனன்

பாரத = பாரத வம்சத்தில் தோன்றியவனே (திருதராஷ்டிரனே )

ஸேநயோ = படைகளின்

உருபயோ = இரண்டின்

மத்யே = மத்தியில்

ஸ்தாபயித்வா = நிறுத்தி

ரதோத்தமம் = உயர்ந்த தேரை (இரத + உத்தமம்) ||1-24||



இரண்டு படைகளுக்கும் நடுவில் என் தேரை நிறுத்து என்று கண்ணனிடம் அர்ஜுனன் கூறிய பின், கண்ணன் தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்தி ....

இந்த ஸ்லோகம் பாதியில் நிற்கிறது. மறு பாதி அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது. அதைப் பார்க்க  இருக்கிறோம்.

இந்த ஸ்லோகத்தில் மூன்று பேரை வியாசர் குறிப்பிடுகிறார்.

ஹ்ருஷீகேஸோ, அ-குடாகேஸேந, பாரத


ஹ்ருஷீகேஸோ - புலன்களை வென்றவன். ஸ்ரீ கிருஷ்ணன். hṛṣīka என்றால் புலன்கள்.  அவற்றை தன் வயப்படுத்தியவன்.


அ-குடாகேஸேந = குடாகேசன் என்றால் சோம்பேறி. தூங்கு மூஞ்சி. அ-குடாகேஸேந என்றால் தூக்கத்தை வென்றவன். அர்ஜுனனால் எந்த நேரத்திலும் தூங்க முடியும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விழித்து இருக்க முடியும். தூக்கம் அவன் கட்டுக்குள் இருந்தது. யோசித்துப் பார்ப்போம். தூக்கம் நம் வயப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் எவ்வளவு தூரம் தூக்கத்துக்கு அடிமையாக இருக்கிறோம்? தூக்கத்தினால் எவ்வளவு வாழ்வின் நலன்களை இழந்து இருக்கிறோம்? அர்ஜுனன், தூக்கம் என்ற சுகத்துக்கு அடிமை ஆகாமல் இருக்கிறான். தூக்கம் அவனுக்கு கட்டுப்பட்டு இருந்தது.

பாரத - பாரத வம்சத்தில் பிறந்த திருதராஷ்டிரனே. "நீ உன் பிள்ளைகளுக்கு தகப்பன் மட்டும்  அல்ல. பாரத வம்சத்தின் வழித் தோன்றல். அந்த வம்சத்தின் பாரம்பரியங்களை நிலை நிறுத்த வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த பெரிய குருஷேத்ர போரால், இந்த வம்சமே அழிந்து விடவும்  வாய்ப்பு இருக்கிறது..." என்று அதை உணர்த்துவதற்காக அந்த சொல்லை பயன் படுத்துகிறார் வியாசர்.

அனைத்து புலன்களையும் வென்றவன் ஸ்ரீ கிருஷ்ணன்.

தூக்கம் என்ற ஒரு உடல் சுகத்தை வென்றவன் அர்ஜுனன்.

பேராசை, பொறாமை, சுயநலம், என்று உழல்பவன் திருதராஷ்டிரன்.

மூவரையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறது கீதை.

அடுத்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் பேசப் போகிறான். இந்த முதல் அத்தியாயத்தில் கிருஷ்ணன்  பேசிய ஒரே ஒரு வாக்கியம் அது.

அது என்ன வாக்கியம்?

http://bhagavatgita.blogspot.com/2018/06/124.html







Thursday, June 14, 2018

பகவத் கீதை - 1.23 - போர் செய்யப் போகிறவர்களை நான் காண வேண்டும்

பகவத் கீதை - 1.23 - போர் செய்யப் போகிறவர்களை நான் காண வேண்டும் 



योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः।
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः॥२३॥

யோத்ஸ்யமாநாநவேக்ஷேऽஹம் ய ஏதே’த்ர ஸமாக³தா :|
தா⁴ர்தராஷ்ட்ரஸ்ய து³ர்பு³த்³தே⁴ர்யுத்³தே⁴ ப்ரியசிகீர்ஷவ : ||1-23||

யோத்ஸ்யமாநாந் = போர் செய்ய வந்து இருப்பவர்கள்

அவேக்ஷே அஹம் = நான் காண விரும்புகிறேன்

ய = யார் எல்லாம்

ஏதே = அவர்கள்

அத்ர = இங்கே

ஸமாக³தா = கூடி இருக்கிறார்களோ

 திர்தராஷ்ட்ரஸ்ய = திருதராஷ்டிரனின்

துர்புத்தேர் = துர் புத்தி, கெட்ட எண்ணத்தோடு

யுத்தே = போர் செய்ய

ப்ரியசிகீர்ஷவ  = ஆர்வம் கொண்டு, அல்லது அவனை மகிழ்ச்சி படுத்த

தீய எண்ணம் கொண்ட திருதராஷ்டிரினன் பிள்ளைகளை மகிழ்ச்சிப் படுத்த இங்கே போர் செய்ய வந்திருப்போரை நான் காண வேண்டும். 


துரியோதனனும் அவன் தம்பிகளும் தீயவர்கள். அவர்களை சந்தோஷப் படுத்த வந்திருக்கும் மற்றவர்கள் யார் யார் என்று காண வேண்டும் என்று நினைக்கிறான்.

தீமைக்கு துணை போகிறர்வர்களும் தீயவர்கள்தான். அவர்களும் அழிக்கப் பட வேண்டியவர்களே என்பது அர்ஜுனனின் எண்ணம்.

கோபம், வெறுப்பு, வீரம் இவற்றோடு வருகிறான் அர்ஜுனன். கடந்த கால வெறுப்பு தரும் நிகழ்வுகள் அவன் கண் முன் வந்து போகிறது. யாரையெல்லாம் அழிக்கப் பட போகிறார்கள் என்று பார்க்க விரும்புகிறான்.

மனதில் உள்ள வெறுப்பும், பகையும், கோபமும் ஒரு பக்கம்.

நேரில் பீஷ்மரையும், துரோணரையும் பார்க்கும் போது அவன் மனம்  மாறுகிறது.

உண்மைக்கும், நம் மனதில் உள்ள எண்ணங்களுக்கும் இடையில் நடக்கும் போர் தான் குருஷேத்ரம்.


உணர்வுகளுக்கும் உண்மைக்கும் நடுவில் நடந்த யுத்தம் தான் குருஷேத்ர போர்.

தேர் நகர்கிறது...நாமும் தான்



http://bhagavatgita.blogspot.com/2018/06/123.html

Wednesday, June 13, 2018

பகவத் கீதை - 1.22 - என்னோடு போர் செய்யப் போவது யார் ?

பகவத் கீதை - 1.22 - என்னோடு போர் செய்யப் போவது யார் ?



यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।
कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे॥२२॥

யாவதே³தாந்நிரீக்ஷேऽஹம் யோத்³து⁴காமாநவஸ்தி²தாந்|
கைர்மயா ஸஹ யோத்³த⁴வ்யமஸ்மிந்ரணஸமுத்³யமே ||1-22||

யாவதே = அனைவரும்

ஏதன் = இந்த

நிரீக்ஷே= பார்க்க

அஹம் = நான்

யோத்துகாமாந் = யுத்தம் செய்ய

அவஸ்தி²தாந்|= அணிவகுத்து நிற்கும்

கைய்யா = அவர்களுடன்

மயா = என்னுடன்

ஸஹ = கூடவே

யோத்தவ்யம் = உறுதியாக யுத்தம் செய்ய

அஸ்மிந் = இந்த

ரணஸமுத்யமே = இரண களத்தில்

போரில் என்னோடு போர் புரிய உறுதியாக நிற்பவர்களை நான் பார்க்க வேண்டும், என்று அர்ஜுனன் கண்ணனிடம் கூறினான்.

போருக்கு என்று வந்தாகி விட்டது. போர் செய்ய வேண்டியது தானே. அதற்குள் என்ன , "நடுவில் தேரை நிறுத்து, என்னோடு போர் செய்பவர்களை நான் பார்க்க வேண்டும் " என்று ஒரு இடைச் செருகல் ?

இது ஒரு முக்கியமான கட்டம். அப்படி அவன் பார்க்காமல் இருந்திருந்தால், யுத்தம் நடந்திருக்கும். நமக்கு கீதை கிடைத்திருக்காது.

இரண்டு சேனைக்கும் நடுவில் நின்றதால், அவனுக்கு அந்த யுத்தத்த்தின் முழு தாக்கமும் புரிந்தது. யாரெல்லாம் அழியப் போகிறார்கள் என்று தெரிந்தது. இவ்வளவு அழிவும் தேவையா என்ற கேள்வி எழுந்தது. யுத்தத்தினால் வரும் இலாப நட்ட கணக்கு புரிந்தது. யுத்தம் தேவையா என்ற கேள்வி எழுந்தது. அதனால் கீதை வந்தது.

ஒரு பிரச்சனையை கையாளும் முன், அதை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள இலாப நட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று களத்தில் இறங்கக் கூடாது.

எல்லோரும் சண்டைக்கு தயாராக இருந்த நேரத்தில், அர்ஜுனன் மட்டும் இரண்டு அணிகளுக்கும் நடுவில் நின்று பார்வை இடுகிறான். நட்பு, உறவு, குலம் எல்லாம் பிரிந்து கிடக்கிறது. ஒன்றோடு ஒன்று அடித்துக் கொண்டு அழியப் போவது அவன் கண்களுக்குத் தெரிகிறது.

பிரச்சனைகளை நாம் தீர்த்து விடலாம். தீர்வே பிரச்னை ஆகி விட்டால் ?

எது தீர்வு என்று அறிந்து கொள்ள வேண்டும்.

பல சமயங்களில் நாம், நமது நெருங்கிய உறவுகளோடு வாதம் செய்து வெற்றி பெற்று விடுவோம். ஆனால், அந்த வாதத்தில் மற்றவர்கள் மனம் வாடிப் போகலாம். அடி பட்டுப் போகலாம். வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருந்தால், உறவுகளை இழக்க வேண்டி வரலாம்.

அர்ஜுனன் முன் நின்றது அந்த சிக்கல். வெற்றியா, உறவா என்ற சிக்கல்.

பகையா, அன்பா என்ற சிக்கல்.

நம் வாழ்க்கைதான் குருஷேத்ரம். நாம் தான் அர்ஜுனன். நம் வாழ்க்கை என்ற குருஷேத்ரத்தில் நாம் பகைவர்களோடு மட்டும் அல்ல உறவுகளோடும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதில் வெற்றி என்பதுதான் என்ன என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.


வாழ்வின் இந்த மிகப் பெரிய சிக்கலை விடுவிக்க வந்ததுதான் கீதை.

காலங்களைத் தாண்டி, அசரீரியாக இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அந்த கீதை.

சற்றே செவி மடுப்போம்.


http://bhagavatgita.blogspot.com/2018/06/122.html

Tuesday, June 12, 2018

பகவத் கீதை - 1.21 - படைகள் நடுவே என் தேரை நிறுத்து

பகவத் கீதை - 1.21 - படைகள் நடுவே என் தேரை நிறுத்து 



अर्जुन उवाच
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत॥२१॥



அர்ஜுன உவாச
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ரத²ம் ஸ்தா²பய மேऽச்யுத ||1-21||

அர்ஜுன உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

ஸேந = சேனைகளின்

உபயோஹ் = இரண்டின்

மத்திய = மத்தியில், நடுவில்

ரதம் = இரதத்தை

ஸ்தாபய = நிறுத்து

மே = என்

அச்யுத = அச்சுதனே, குற்றம் இல்லாதவனே


அர்ஜுனன் சொல்கிறான், "ஸ்ரீ கிருஷ்ணா, இரண்டு படைகளுக்கும் நடுவில் என்  தேரை நிறுத்து" என்று. 


மிகப் பெரிய வீரன். தனக்கு சமானம் யாரும் இல்லை என்ற அளவுக்கு ஆற்றல் படைத்தவன்.  பயம் என்பது கொஞ்சம் கூட இல்லை.

"இரண்டு படைகளுக்கும் நடுவில் என் தேரை நிறுத்து " என்று வீரத்தோடு சொல்கிறான்.

நாம் நினைக்கிறோம், வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் நாம் சமாளித்து விடலாம் என்று. " என்னால் முடியாததா...நான் யார் " என்று நினைக்கிறோம்.

"நான் எவ்வளவு பெரிய ஆள். நான் என்னென்ன காரியங்கள் சாதித்து இருக்கிறேன். என் படிப்பு என்ன. என்பராக்கிரமம் என்ன. என் சொத்து எவ்வளவு...என்னால் முடியாதா " என்று நினைக்கிறோம்.

செய்யும் வலிமையையும் இருக்கலாம். இருந்தும் வாழ்க்கை புரட்டிப் போடுகிறது.

எவ்வளவு பெரிய வீரனையும் ஒரு நொடியில் வாழ்க்கை புரட்டிப் போட்டு விடுகிறது.


அர்ஜுனனை விடவா நாம் பலசாலி? அவனை விடவா நாம் அறிவாளி ? அவனை விடவா நம்மிடம் சொந்தம் பந்தம் இருக்கிறது ? அவனை விடவா நம்மிடம் செல்வம் இருக்கிறது?

அப்பேற்பட்ட அர்ஜுனனை வாழ்க்கை புரட்டிப் போட்டது. அதை இனி வரும்  ஸ்லோகங்களில் காண இருக்கிறோம்.

அந்த மாதிரி சமயங்கள் நமக்கும் வரும்.

வந்தால் என்ன செய்ய வேண்டும்?

அர்ஜுனனுக்கு ஒரு கண்ணன் இருந்தான்.

நாம் எங்கே போவது கண்ணனைத் தேடி?

கண்ணன் சொன்ன கீதை இருக்கிறது. அர்ஜுனனுக்கு சொன்னதுதான் நமக்கும்.

வாழ்வில் குழப்பம் வரும்போது, செய்வது அறியாது திகைக்கும் போது, நம் பலம் அத்தனையும் செயல் இழக்கும் போது, வாழ்க்கை என்ற களத்தில் நிராயுத பாணியாக நிற்கும் போது, கை கொடுப்பது கீதை.

திசை தெரியாமல் தவிக்கும் கப்பலுக்கு, ஒரு கலங்கரை விளக்கு போல,  காலங்கள் தாண்டி  சுடர் விட்டு வழி காட்டிக் கொண்டிருப்பது கீதை.


http://bhagavatgita.blogspot.com/2018/06/121.html




Monday, June 11, 2018

பகவத் கீதை - 1.20 - அர்ஜுனன் வருகை

பகவத் கீதை - 1.20 - அர்ஜுனன் வருகை 


अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः।
प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः॥२०॥

हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते।

அத² வ்யவஸ்தி²தாந்த்³ருஷ்ட்வா தா⁴ர்தராஷ்ட்ராந்கபித்⁴வஜ :|
ப்ரவ்ருத்தே ஸ²ஸ்த்ரஸம்பாதே த⁴நுருத்³யம்ய பாண்ட³வ : ||1-20||

ஹ்ருஷீகேஸ²ம் ததா³ வாக்யமித³மாஹ மஹீபதே|


அத = அதன் பின்

வ்யவஸ்திதாந் = அணிவகுத்து நின்ற

த்ருஷ்ட்வா = பார்த்து

த்ர்தராஷ்ட்ராந் = திருதராஷ்ட்ர (சேனைகளை )

கபித்⁴வஜ = குரங்கு கொடியுடைய

ப்ரவ்ருத்தே = ஆரம்பிக்கப் போகின்ற

ஸஸ்த்ர = போர் கருவிகளை

ஸம்பாதே = உபயோகப் படுத்தப் போகின்ற

தநு = வில்லை

உத்³யம்ய = எடுத்துக் கொண்டு

பாண்டவ : = பாண்டவனாகிய அர்ஜுனன்  ||1-20||


ஹ்ருஷீகேஸ²ம் = ஸ்ரீ கிருஷ்ணா

ததா³ = அப்போது

வாக்யம் = வாக்கியம்

இதம் = இந்த

அஹ  = சொன்னான்

மஹீபதே = அரசன்


இரு புறமும் சங்க நாதம் செய்து போருக்கு தயார் என்று அறை கூவல் விடுத்த பின் , அனுமக் கொடி உடைய அர்ஜுனன், கையில் வில்லை ஏந்திக் கொண்டு , பின்வருமாறு ஸ்ரீ கிருஷ்ணனிடம் அர்ஜுனன் கூறினான் 

போருக்கு அர்ஜுனனும் தயாராகத்தான் இருக்கிறான். இது மிக மிக முக்கியமான ஒன்று. உற்றார் உறவினர்களை பார்த்து , "ஐயோ, இவர்களை எல்லாம் நான்  கொல்ல வேண்டுமா ? அப்படி இவர்களை கொன்று , அதனால் கிடைக்கும் அரசால்   என்ன இலாபம் " என்று பின்னால் மனம் பேதலிக்கிறான். ஆனால், அவர்களை கொல்வது என்ற முடிவோடுதான் வந்திருக்கிறான்.


போருக்கு யார் யாரெல்லாம் வந்திருப்பார்கள் என்று அர்ஜுனனுக்குத் தெரியாதா ? தெரியும். தெரிந்தே தான் போருக்கு வந்திருந்தான். ஆனாலும், அவர்களை நேரில் பார்த்த பின் மனம் மாறுகிறான்.

கடமைக்கும், பாசத்துக்கும் நடுவில் நடக்கும் போர் அது.

யோசித்துப் பாருங்கள். அர்ஜுனன் மிகப் பெரிய வீரன். இரண்டு பக்கமும் படைகள்  ஆரவாரமாக நிற்கின்றன. மிகப் பெரிய போர் நிகழ இருக்கிறது. அர்ஜுனன் போன்ற வீரனுக்கு தங்கள் வீரத்தை காட்ட அரிய  சந்தர்ப்பம்.

உச்சக்கட்டம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

அடுத்து என்ன நிகழப் போகிறது என்று நம்மை நாற்காலியின் நுனிக்கு கொண்டு வரும்  இடம்.


http://bhagavatgita.blogspot.com/2018/06/120.html





Sunday, June 10, 2018

பகவத் கீதை - 1.19 - கௌரவர்களின் நெஞ்சைப் பிளந்தது

பகவத் கீதை - 1.19 - கௌரவர்களின் நெஞ்சைப் பிளந்தது 


स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत्।
नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्॥१९॥

ஸ கோ⁴ஷோ தா⁴ர்தராஷ்ட்ராணாம் ஹ்ருத³யாநி வ்யதா³ரயத்|
நப⁴ஸ்²ச ப்ருதி²வீம் சைவ துமுலோ வ்யநுநாத³யந் ||1-19||


ஸ = அந்த

கோஷோ = கோஷம், போர் ஆராவாரம்

த்ர்தராஷ்ட்ராணாம் = திருதராஷ்டிர கூட்டத்தினரின்

ஹ்ருத³யாநி = இதயங்களை

வ்யதா³ரயத் =  பிளந்தது

நபஸ்ச = விண்ணையும்

ப்ருதிவீம்ச = மண்ணையும்

சைவ  = அது நிச்சயமாக

துமுலோ = பேரொலி

அவ்யநுநாத³யந்  = இடி போன்ற

பாண்டவ கூட்டத்தார் எழுப்பிய அந்த பேரொலி, மண்ணையும் விண்ணையும் அதிரச் செய்தது. அந்த ஒலி , கௌரவர்களின் இதயங்களைப் பிளந்தது. 

கௌரவர்களின் சேனை பெரியதுதான். கௌரவர்களின் பக்கம் பீஷ்மர், துரோணர் போன்ற பெரிய வீரர்கள் இருக்கிறார்கள். இருந்தும், பாண்டவ அணியினரின் போர் ஆராவாரம் , கௌரவர்களின் நெஞ்சைப் பிளந்தது.

ஆயுதங்களும், வீரர்களும் வெற்றியைத் தருவது இல்லை. அறம் மட்டுமே வெற்றியைத் தரும். கௌரவர்களின் பக்கம் நியாயம் இல்லை என்பதால் அவர்கள் மனதில் பயம் எழுந்தது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது தீராத  வாதம்.

கௌரவர்கள் பயந்தார்கள் என்று திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் கூறுகிறான்.

"திருதராஷ்ட்ரா, இப்போதும் ஒண்ணும் குடி முழுகி போய் விடவில்லை.  நீ நினைத்தால்  இப்பவும் இந்த கௌரவர்களை காப்பாற்றலாம். அவர்கள் பயந்து இருக்கிறார்கள்.  வெற்றி நிச்சயம் அல்ல. அழிவு நிச்சயம்" என்று கூறாமல் கூறுகிறான்.

தருமன் கேட்டது ஐந்து வீடு. சரியோ தவறோ, பங்காளிதானே. கொடுத்திருக்கலாம்.

ஐந்து வீடு தராத கஞ்சத்தனம், 99 தம்பியாரையும், குல குருவையும், பிதாமகரான பீஷ்மரையும் பலி கொண்டது.

வன்மம்.

ஈகை குணம் இல்லாத வறண்ட மனம்.

பயமும் அழிவும் வராமல் என்ன செய்யும்?


http://bhagavatgita.blogspot.com/2018/06/119.html

Saturday, June 9, 2018

பகவத் கீதை - 1.18 - சங்க நாதம்

பகவத் கீதை - 1.18 - சங்க நாதம் 



द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते।
सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक्॥१८॥

த்³ருபதோ³ த்³ரௌபதே³யாஸ்²ச ஸர்வஸ²​: ப்ருதி²வீபதே|
ஸௌப⁴த்³ரஸ்²ச மஹாபா³ஹு​: ஸ²ங்கா²ந்த³த்⁴மு​: ப்ருத²க்ப்ருத²க் ||1-18||

த்ருபதோ = துருபதன்

த்ரௌபதே யாஸ்ச = திரௌபதியின் பிள்ளைகளும்

ஸர்வஸ = அனைவரும்

ப்ருதிவீபதே = உலகத்தின் தலைவனே (திருதராஷ்டிரனே , சஞ்சயன் சொல்வது)

ஸௌபத்ரஸ்ச = சுபத்திரையின் பிள்ளையும்

மஹாபா³ஹு​  = அகண்ட தோள்களை உடையவனும்

 ஸங்காந்தத்மு​: = சங்க நாதம் செய்தனர்

ப்ருதக் ப்ருதக்  = தனித் தனியாக

இந்த உலகத்தின் தலைவனான திருதராஷ்டிரனே! துருபதனும், திரௌபதையின் மற்றும் சுபத்திரையின் பிள்ளைகளும், மற்றவர்களும் தனித் தனியே  சங்க நாதம் செய்தனர். 


இரண்டு பக்கத்திலும் உள்ள பெரிய வீரர்களின் பட்டியலை திருதராஷ்டிரனுக்குத் தருகிறான். எல்லோரும் போர் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

பேரழிவு உறுதி என்பது கண் கூடாகத் தெரிகிறது.

திருதராஷ்டிரன் நினைத்தால் அந்த அழிவை தடுத்து நிறுத்தலாம். இன்னும் கூட  சமயம் இருக்கிறது. கடைசி நொடியில் கூட போரை தவிர்க்க முடியும்.

எனவே தான், சஞ்சயன் சொல்கிறான் "இந்த பூ உலகுக்கு அரசனே" என்று திருதராஷ்டிரனைப் பார்த்து.

இந்த போரின் பொறுப்பு உன்னுடையது என்று எடுத்துச் சொல்கிறான்.

அரசன் என்ற முறையில், உயிர்களை காக்க வேண்டியது உன் கடமை. நீதியை நிலை நாட்ட வேண்டியது உன் கடமை என்று திருதராஷ்டிரனுக்கு அறிவுறுத்துகிறான்.

திருதராஷ்டிரன் கேட்டான் இல்லை. போர் நடக்கவே செய்தது. பேரழிவு நிகழ்ந்தது என்று வராலாறு சொல்கிறது.

அந்த அழிவுக்கு முழு பொறுப்பும்  திரதராஷ்ட்டினையே சாரும்.

இரு தரப்பு பட்டியலும் முடிந்தது.

சண்டை தொடங்கி விட்டதா? இந்த குருஷேத்ர யுத்தத்தின் கதாநாயகன் அர்ஜுனன். அவன் எங்கே ? கதாநாயகன் களத்தில் இல்லாமல் போரா ?

அர்ஜுனன் என்ன செய்து கொண்டிருக்கிறான் ?

http://bhagavatgita.blogspot.com/2018/06/118.html