Wednesday, June 27, 2018

பகவத் கீதை - 1.33 - இதெல்லாம் யாருக்காக ?

பகவத் கீதை - 1.33 - இதெல்லாம் யாருக்காக ?



येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च।
त इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि च॥३३॥

யேஷாமர்தே² காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போ⁴கா³ : ஸுகா²நி ச|
த இமேऽவஸ்தி²தா யுத்³தே⁴ ப்ராணாம்ஸ்த்யக்த்வா த⁴நாநி ச ||1-33||

யேஷாம் = யாருக்காக

அர்தே = அவர்களுக்காக

காங்க்ஷிதம் = விரும்பினோமோ

நோ  = நம்

ராஜ்யம் = இராஜ்யம்

போகா : = ஆடம்பரங்கள்

ஸுகாநி = சுகங்கள்

ச = மேலும்

த = அவர்கள்

இமே = இவர்கள்

அவஸ்திதா = அணிவகுத்து

யுத்தே =  யுத்தம் செய்ய

ப்ராணாம்ஸ் =  உயிரை

த்யக்த்வா = தியாகம் செய்யவும்

தநாநி = செல்வங்களை செல்வங்களை

ச = மேலும்


யாருக்காக நாம்  இராஜ்யத்தையும்,செல்வங்களையும், இன்பங்களையும் அடைய விரும்புகிறோமோ, அவர்களே தங்கள் செல்வங்களையும், உயிரையும் தியாகம் செய்ய இந்த போர்க் களத்தில் வந்து நிற்கிறார்கள் 

அர்ஜுனன் .தொடர்கிறான்..

கண்ணா, யாருக்காக நான் யுத்தம் செய்ய விரும்பிகிறேனோ, அவர்களே இங்கு வந்து போரில் உயிரை விட தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இறந்த பின், இந்த அரசையும், செல்வத்தையும் வைத்து என்ன செய்வது ?

இதை நாம் வேறு விதமாக சிந்திப்போம்.

வாழ் நாள் எல்லாம் செல்வம் வேண்டும் , செல்வம் வேண்டும் என்று அலைகிறோம். யாருக்காக ? பிள்ளைகளுக்காக, முடிந்தால் பேர பிள்ளைகளுக்காகவும். பிள்ளைகளை பார்க்க நேரம் இல்லை. மனைவியை இரசிக்க நேரம் இல்லை. ஒரே ஓட்டம்.

ஓடி ஆடி பணம் சேர்த்த பின், பிள்ளைகள் எங்கே என்று பார்த்தால், அவர்கள் படிப்பு, வேலை என்று வீட்டை விட்டு போய் இருப்பார்கள். அந்த செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ? மனைவிக்கும் வயதாகி இருக்கும். இளமை இருவருக்கும் போய் இருக்கும்.

பணம் இருக்கும். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

அர்ஜுனன் யோசிக்கிறான். நான் போர் செய்து, இருபுறமும் உள்ள நட்பும் உறவும் போன பின், இந்த செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ?

பணம் வேண்டும் தான். ஆனால், அதை அடைய நாம் கொடுக்கும் விலை என்ன என்று பார்க்க வேண்டும்.

குடும்பத்தை மறந்து, உறவுகளை மறந்து, வேலை, தொழில் என்று அலைவது சரிதானா ?

நாம் யாருக்காக ஒன்றைச் செய்கிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அது அவர்களுக்கு பயன்படுமா என்று பார்க்க வேண்டும்.

குருஷேத்ரம் என்றோ எங்கோ நடந்தது அல்ல.

நாளும் நம் வாழ்வில் நடப்பது.

அர்ஜுனனாக நடுவில் நின்று நாம் தவிக்கிறோம்.

எது சரி, எது தவறு என்று புரியாமல் குழம்புகிறோம்.

வழிகாட்டி மரமாக நின்று, வழி காட்டிக் கொண்டிருக்கிறது கீதை.

http://bhagavatgita.blogspot.com/2018/06/133.html

No comments:

Post a Comment