பகவத் கீதை - 1.27 - உறவும் பகையும்
श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि।
तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान्॥२७॥
कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत् |
ஸ்²வஸு²ராந்ஸுஹ்ருத³ஸ்²சைவ ஸேநயோருப⁴யோரபி|
தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்ப³ந்தூ⁴நவஸ்தி²தாந் ||1-27||
க்ருபையா பராயவிஷ்டோ விஷிதன் இதம் அப்ராவித்
ஸ்²வஸு²ராந் = மாமன்களும்
ஸுஹ்ருத = நலன் விரும்புபவர்களும்
ச = மேலும்
எவ = அதாவது
ஸேநயோ = சேனையில்
அபி = மேலும்
தாந் = அவர்களை
ஸமீக்ஷ்ய = பார்த்து
ஸ = அவர்கள்
கௌந்தேய: = அர்ஜுனன்
ஸர்வாந் = அனைவரும்
பந்தூ⁴ = உறவினர்கள்
அவஸ்தி = உணர்ச்சி மேலிட்டு
²தாந்
பராய = மிகுந்த
அவிஷ்டோ = (உணர்ச்சிகளால்) நிறைந்து
விஷிதன் = ஆழந்த சோகத்துடன்
இதம் = இதை
அப்ராவித் = கூறினான்
மாமன்மார், உறவினர்கள், நலம் விரும்பிகள் எல்லோரையும் இரு பக்கமும் பார்த்த அர்ஜுனன், மிகவும் இரக்கம் உற்று, உணர்ச்சி மேலீட்டால் பின் வருமாறு கூறினான்
அர்ஜுனன் வில்லாளிகள், குதிரை வீரர்கள், யானை வீரர்களைப் பார்க்கவில்லை. அவன் பார்த்தது பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, ஆசிரியர், மாமன், உறவினர் மற்றும் நண்பர்களை.
இரு புறமும் உறவும் நட்பும் நிறைந்து கிடக்கிறது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகப் போகிறார்கள்.
அர்ஜுனன் மனதில் இரக்கம் பிறக்கிறது. உணர்ச்சி அவனை உந்துகிறது.
வீரம், போர், ஆற்றல், கொலை, வெற்றி என்று இருந்த அர்ஜுனன் மனதில் அன்பு,நட்பு, உறவு என்றெல்லாம் ஓடுகிறது.
பாரதத்தில், கீதையில் ஒரு திருப்புமுனை இடம் இது. Turning Point.
அறம் , தர்மம் ஒரு புறம்.
உறவும் நட்பும் மறு புறம்.
அறத்தை நிலை நாட்ட வேண்டும் என்றால் உறவையும் நட்பையும் கொல்ல வேண்டும். அதில் அன்புக்கு இடம் இல்லை.
உறவும் நட்பும் உயர்வு என்றால், அறம் பழுது பட்டுப் போகும்.
என்ன செய்வது?
இது அர்ஜுனனின் குழப்பம் அல்ல.
நமது குழப்பம்.
நல்லது செய்ய வேண்டுமா, மனதுக்குப் பிடித்ததை செய்ய வேண்டுமா ?
மனைவிக்கோ, (அல்லது கணவனுக்கோ), பிள்ளைகளுக்கோ நல்லது என்று நினைத்துச் செய்தால், அது அவர்களுக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது. நம் மேல் கோபமும் வெறுப்பும் கொள்கிறார்கள்.
சரி, அவர்கள் மனம் கோணாதபடி நடந்து கொள்ளலாம் என்றால், அது சரியான பாதையாக இல்லாமல் போகலாம்.
எதைச் செய்வது ?
பிள்ளை ஆசைப் பட்டு கேட்கிறது என்று அது கேட்கும் போதெல்லாம் சாக்கிலேட் வாங்கித் தந்தால், அது மகிழும் ஆனால் அது குழந்தையின் உடல் நலத்துக்கு கேடு.
சரி, வாங்கித் தராமல் இருப்போம் என்றால், குழந்தையின் மனம் புண் படும். அழும். நம்மை வெறுக்கும்.
எதைச் செய்யலாம் ?
இது குழந்தைக்கு மட்டும் அல்ல. ஆசிரியர் - மாணவன், கணவன் - மனைவி, நண்பர்கள், அதிகாரி - கீழே வேலை பார்ப்பவர் என்று அனைத்து இடத்திலும் இந்த சிக்கல் இருக்கிறது.
கணவனுக்கு வாய்க்கு உருசியாக சாப்பிட ஆசை. மருத்துவர் சொல்லி இருக்கிறார் எண்ணெய் , இனிப்பு கூடாது என்று. மனைவி என்ன செய்ய வேண்டும். கணவன் மகிழ நல்ல தின்பண்டங்கள் தர வேண்டுமா ? இல்லை அவன் கோபித்தாலும், வருந்தினாலும் பரவாயில்லை எது நல்லதோ அதைச் செய்வோம் என்று அவனை பட்டினி போட வேண்டுமா ?
யுகம் யுகமாய் மனித குலம் தவிக்கும் இந்த கேள்விக்கு விடை தருகிறது கீதை.
http://bhagavatgita.blogspot.com/2018/06/127.html
No comments:
Post a Comment