பகவத் கீதை - 1.30 - காண்டீபம் கை நழுவுகிறது
गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः॥३०॥
கா³ண்டீ³வம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரித³ஹ்யதே|
ந ச ஸ²க்நோம்யவஸ்தா²தும் ப்⁴ரமதீவ ச மே மந : ||1-30||
காண்டீவம் = காண்டீவம் (என்ற என் வில்)
ஸ்ரம்ஸதே = நழுவுகிறது
ஹஸ்தாத் = கையில் இருந்து
த்வக் = உடல் (தோல்)
ச = மேலும்
எவ = நிச்சயமாக
பரித³ஹ்யதே = எரிச்சல் அடைகிறது
ந = இல்லை
ச = மேலும்
ஸக்நோமி = முடிதல்
அவஸ்தாதும் = நிற்க
ப்ரமதீவ = அலைதல்
ச = மேலும்
மே = என்
மந : = மனம் ||1-30||
காண்டீவம் என் கையில் இருந்து நழுவுகிறது. உடம்பெங்கும் எரிச்சல் உண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழல்கிறது.
மிகப் பெரிய வீரனான அர்ஜுனனை மிகப் பெரிய கோழையாக காட்டுகிறது பாரதம். கை பலம் இழந்து கையில் இருந்த வில் நழுவி விழுகிறது. கால் குழைந்து தடுமாறுகிறது. உடல் எங்கும் எரிச்சல் உண்டாகிறது. மனம் தடுமாறுகிறது.
ஏன் ? என்ன ஆயிற்று ?
உறவையும் நட்பையும் பார்த்ததால், இவர்களை எல்லாம் கொல்ல வேண்டுமே, அல்லது இவர்கள் எல்லோரும் அழிந்து போவார்களே என்ற உணர்ச்சி அவனை கோழை ஆக்குகிறது.
அறிவு சண்டை செய்யச் சொல்லி போர் முனைக்கு இழுத்து வந்து விட்டது.
உணர்ச்சி அவனை பலம் இழக்கச் செய்து போர் முனையை விட்டு ஓட வைக்கிறது.
இதில் அறத்தை நிலை நாட்ட வேண்டிய கடமை, கர்மா அந்தரத்தில் தொங்குகிறது.
அர்ஜுனன் மனதில் போர் என்பது கொல்வதற்காக என்று விழுந்து விட்டது. இவர்களை எப்படி கொல்வது என்று தடுமாறுகிறான்.
போர் என்பது கொலை செய்ய அல்ல, ஏதோ ஒரு நீதியை, ஒரு நியாயத்தை, ஒரு தர்மத்தை, ஒரு அறத்தை நிலை நிறுத்த செய்யப் படுவது.
தர்மம் நிலை நிறுத்தப் பட வேண்டும். இதில் யாருக்கு பலன் கிடைக்கும், அல்லது கிடைக்காது என்பதல்ல கேள்வி. யாருக்குமே, ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் தர்மம் காக்கப் படவேண்டும்.
எனக்கு இதில் என்ன கிடைக்கும் என்று நினைத்துச் செய்வதல்ல கடமை. உயிரே போனாலும், அதைச் செய்ய வேண்டும்.
ஒரு வேளை , பலன் இல்லாத காரியத்தை செய்வது மதியீனம் என்ற ஒரு கோட்பாடு வந்து விட்டால் என்ன ஆகும் ?
வாங்கும் நாலு காசு சம்பளத்துக்கு உயிரை விட முடியுமா, என்று ஒரு சிப்பாய் நாட்டை காட்டி கொடுத்து விடலாம்.
மாணவன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன, நான் வாங்கும் சம்பளத்துக்கு நான் பள்ளிக் கூடம் வந்து, பாடங்களை வாசித்துவிட்டு போய் விடுவேன்.
என்று இப்படி ஒரு சமூகத்தில் ஆளாளுக்கு செய்யத் தலைப் பட்டால், மனித குலம் நசிந்து போகும்.
ஒரு பெற்றோராக, ஆசிரியனாக, மாணவனாக, கணவனாக, மனைவியாக, பிள்ளையாக , ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்தக் கடமையை செய்தே தீர வேண்டும். பலன் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும். மற்றவர்கள் தங்கள் கடமையை செய்கிறார்களோ இல்லையோ, நாம் நம் கடமையை செய்ய வேண்டும். இது தான் கீதையின் அடி நாதம். இதை புரிந்து கொண்டால், கீதை விளங்கும்.
அர்ஜுனன் ஏன் சோர்ந்து போனான் ? எது அவனை சோர்ந்து போக வைத்தது ? அதற்கும் நாம் இப்போது சிந்தித்ததற்கும் என்ன சம்பந்தம் ?
No comments:
Post a Comment